மணி அடித்தது. அந்தோணி தன் கதையை சொல்ல தொடங்கினான். உமையாழ், அதை சிறுகதையாக்கி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
என் பேர் அந்தோணி. தான் ஒரு எழுத்தாளன். பேஸ்புக்கில்தான் மொதல எழுத ஆரம்பித்தது. நான் எழுதியதை வாசித்து பார்த்தேன். நல்லா இருந்திச்சு. மூடி வைத்துவிட்டு தூங்க போய்ற்றன். பொழுது விடியும் போது நான் எழுத்தாளன் ஆகியிருந்தேன். எழுத நிறைய இருப்பதாக தோண்றியது.
ஓ.. மன்னித்து விடுங்கள். இலக்கிய தமிழும், கொஞ்சம் பேச்சுத்தமிழும் கலந்து வருது. இப்புடிதான் இப்ப கொஞ்ச நாளா, எல்லாம் கொளம்பி போயிரிக்கு. இங்கே சூழ்நிலைகள் அப்படி. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இனி இலக்கிய தமிழில் பேச முயற்ச்சிக்கிறேன்.
எங்க விட்ட?
….. ஆஆ நிறைய எழுத இருப்பதாக தோண்றியது.
பிரன்ச் இலக்கியம் படித்த எனக்கு ‘ஸ்டோரி ஒப் த ஐ’ பற்றி எழுத இருந்தது. ஸிமோன் ( Simone ஆங்கிலத்தில் இந்த பெயரை சொல்லவதுதான் எவ்வளவு சுகம் ), அங்கிருந்த பால் கோப்பையில் தன்னுடைய cunt யை (இதை தமிழில் எழுத பயமாக இருக்கிறது. எழுத்தில் beeb கூட போட முடியாதே! ) நனைத்து தன்னுடைய பூனையை நக்க விட்டாள். அவன் கேட்டான் ” milk is for pussy, isn’t it?”. இந்த புத்தகத்தை பற்றி நான் எவ்வாறு தமிழில் எழுதுவது? நீங்களே சொல்லுங்கள். கலாச்சாரம் காக்கும் தமிழ் சமூகத்தில் இதை எல்லாம் எழுதினால் காணாமல் போய்விடுவோம் என்று தோண்றவே, மொக்கயாய் இருப்பதை உணர்வு பூர்வமாய் எழுதி பேர் வாங்குவது என முடிவெடுத்துவிட்டேன். உணர்வு பூர்வமாய் இருக்கிற மொக்கை என்ன இருக்கிறது? …..
ஆ… ‘பெண்ணியம்’ என்று பட்சி சொல்லியது.
அய்யோ, இந்த பெண்ணியம் பற்றி பேசுகிற போதே எனக்கு கடுப்பாகிவிடுகிறது. ஏன்தான் இதை பற்றி அடிக்கடி சிந்திக்கிறேனோ தெரியவில்லை.
‘பெண்ணியம்’ என்று சொல்கிற போது அருந்ததி ராயைத்தான் ஞாபகம் வருகிறது. அருந்ததி ராய் ஒரு பேரழகிதான், பண்டைய எகிப்தின் Nefertiti யை ஞாபக படுத்துகிறது உடல்வாகு. ஆனாலும், ஒரே ஒரு புத்தகம் எழுதிவிட்டு எப்படி இவர்களால் உலக இலக்கியவாதி ஆகிவிட முடிகிறது?
‘ The God of Small Things’ க்கு 1997யில் ‘ Man booker Prize’ கிடைத்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த ஆங்கில வார்த்தைகள் என்ன என்பதை தெரியாதவர்கள் Google பன்னி பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு அதை இப்போது விளங்கப்படுத்திக்கொண்டு இருக்க முடியது. நான் சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சிறுகதை என்றதும் ஞாபகம் வருகிறது. பேஸ்புக் நண்பர் குபீஸுடன் சட்டில் கதைத்துக்கொண்டிருந்தேன்.
குபீஸ் ஒரு பின்-நவீன படைப்பாளி என்று தன்னை சொல்லிக்கொள்கிறவர். இதன் உண்மைத்தன்மை பற்றி யாருமே FB யில் அறிந்து இருக்கவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. FB யில் இருந்த பலருக்கும் சமூக விஞ்ஞான கோட்பாடுகளை பற்றிய தெளிவிருக்கவில்லை. யாராவது புதிதாய் ஏதாவது ஒன்றை சொல்லி, புத்தகங்களின் பேர்களையும், சில மேற்கத்திய படைப்பாளிகளின் பேரையும் அடுக்கினால், அவனை ஆஆ… என வாயை பிளந்து பார்த்துகொண்டிருப்பினம். அவர்களும் என்ன செய்வார்கள் பாவம். ஆனால். நான் அறிமுகபடுத்துகிற கதையின் நாயகன், உமையாழ், குபீஸை கேள்வி கேட்பான். குபீஸின் வார்த்தை ஜாலங்களை தன் கேள்விகளாளேயே புட்டு புட்டு வைத்து விடுவான். இதனால் குபீஸ், என்னுடைய கதையின் நாயகன் உமையாழை தன்னுடய பதிவுகளிலும் பின்னூட்டல்களிலும் தவிர்த்து வருவதாக நண்பன் குழா என்னிடம் சொன்னதை நான் உமையாழிற்கு தெரியபடுத்தியும் விட்டேன். ஆனாலும் உமையாழ் விடுவதாய் இல்லை. குபீஸின் இன்றைய ஒரு குப்பை பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டு அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். குபீஸ், உமையாழின் பின்னூட்டத்தை தவிர்த்து மற்ற எல்லோருக்கும் லைக் போட்டுக்கொண்டு இருந்த போதுதான், உமையாழிற்கு உண்மை உறைத்தது.
உமையாழ் ஒரு முரடன், தற்பெருமி. முன்கோபி. நீங்களே பாருங்களேன், என்னுடைய கதையின் நாயகன், என் கதையையே கேட்கவில்லை. அதனால்தான் அவனை வைத்து இந்த சிறுகதை நான் இன்னும் தொடங்கவே இல்லை.
சரி, நான் சொல்ல வந்த விடயம் இதுதான். குபீஸுடன் சட்டில் கதைத்துக்கொண்டிருந்த போது சிறுகதைகள் பற்றிய பேச்சு வந்தது. Leo Tolstoy தான் உலகின் சிறந்த கதை சொல்லி என நான் என் கதையின் நாயகன், உமையாழிற்கு சொன்னதை குபீஸும் ஏற்றுக்கொண்டார். Tolstoyயின் கதையின் மையக்கருக்களான கருணை, காதல், காருண்யம், கரிசனை என எல்லாவற்றையும் திருக்குறளில் இருந்துதான் தான் எடுத்து கொள்வதாக ஒரு முறை மாகாத்மா காந்திக்கு கடிதத்தில் Tolstoy தெரிவித்து இருந்தார்.
Tolstoy சொல்லுவார்; பெண்ணை முத்தமிடுகையில் அவளின் வலதுபக்க கீழ் உதட்டில்தான் ருசி அதிகமாம். என்ன ஒரு அவதானிப்பு. மெய் சிலிர்க்கிறது.
உமையாழ் இன்னும் கன்னி பையன் என்பதால் அவனுக்கு இது தெரிந்து இருக்காது. ஆனால் குபீஸ்? ம்… இருக்கும். அவருக்கு பாரசீக பெண்களுடன் நிறைய தொடர்புண்டு.
நான் இந்த முத்த சமாச்சாரத்தை குபீஸூடன் பகிர்ந்து கொண்டேன். ‘சோதித்து பார்த்தால் போயிற்று’ என்றார். உமையாழ் கண்களை சிமிட்டிக்கொண்டான்.
கதை இப்போதுதான் ஆரம்பிக்கிறது,
வாசகர்கள் குழம்பி இருப்பீர்கள்; இவ்வளவு நேரம் நீங்கள் வாசித்தது என்ன என உங்களுக்கு தோண்றலாம். நியாயம்தான். ஆனால் நீங்கள் Georges Bataille யை வாசித்து இருந்தால் இவ்வாறு உங்களுக்கு தோன்றாது. ஏன் என்றால் உங்களுக்கு Transgressive Fiction என்றால் என்ன என்று ஓரளவுக்கு தெரிந்து இருந்திருக்கும்.
*****
கதை நாயகன் உமையாழ், FB யில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன். எல்லாம் கொஞ்ச நாட்களாய்த்தான். என்ன ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். உங்களுக்கும் அவனை தெரிந்து இருக்கும்.
ஒரு நாளைக்கு நான்கு பதிவு வீதம் எழுதியதில் உமையாழின் சரக்கு இந்த பதினைந்து நாட்களுக்குள்ளாகவே தீர்ந்துவிட்டது. உமையாழிற்கு ஏதாவது எழுதியே ஆக வேண்டிய நிர்பந்தம். தன்னுடைய வாசகர்கள் தன்னை மொக்கை என சொல்லிவிடுவார்களோ என்கிற பயம் வேறு. சரி ஒரு சிறுகதை எழுதுவோம் என முடிவாகிறது. பின்-நவீனத்தில் தான் எழுதுவேன் என ஒற்றை காலில் நிற்கிறான் உமையாழ். என்னை கேட்டால், அது எல்லாம் சரிபட்டு வராது என்னு சொல்லி இருப்பேன். எல்லாம் சரி, என்னதான் தலைகீழாய் நின்று எழுதினாலும், 50 பேருக்கு மேல் பறந்தாலும் லைக் விழாதே. ஆயிரங்களாக லைக் வேணுமாக இருந்தால் அதற்க்கு நீ பெண்ணாய் இருந்திருக்க வேண்டுமே. ஆனால் நான் உன்னை பெண்பெயரில் ஆணாய்தானே படைத்தேன். பின்ன என்ன? வெறும் 50 லைக்ஸ்; இதற்கு போய் இவ்வளவு கஷ்டபட தேவையில்லை என்பது என் முடிவு. கிறுக்கன் உமையாழிற்கு அது விளங்கவில்லை. கதைக்குள் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கி கொஞ்சம் செக்ஸியாய் பேர்வைத்தால் எல்லோரும் வாசிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் கதையை எழுத தொடங்குகிறான்.
” Cleopatra வும் மார்புக்கச்சையும்” – By Mark Antony