பறக்கும் தட்டு பறந்து வந்து பாங்காட்டுக்குள் இறங்கியது. பாங்காடு என்று சொல்லக்கூடிய வனத்துக்குள் வாழும் மிருகங்கள் சிதறி ஓடின.
அந்த வட்டமான இயந்திரத்துக்குள்ளிருந்து குள்ளமான இரண்டு மனிதர்களைப்போன்ற உருவம் கொண்டவர்கள் கீழே இறங்கினர்!
அவர்கள் சிறிய உருவத்தில் உலோகத்தால் உருவாக்கியவர்களைப்போல் கண்களெல்லாம் உள்ளே போய், வயிறென்பதே தெரியாதது போல் வெண்மையான நிறத்தில் திரைப்படத்தில் காட்டப்படும் ஆவி வடிவத்தில் பார்ப்பவர்களுக்கு பயம் வரும் நிலையில் தெரிந்தனர்!
இயந்திரத்தில் பொறுத்தியிருந்த கேமரா முன் நின்று ‘வெற்றி வெற்றி’ என தமிழ் மொழியில் கிரீச்சென உரக்கச்சத்தமிட்டு கைகளை நாம்பி பெரு விரலை உயர்த்திக்காட்டினர். பின்னர் கையில் வைத்திருந்த எண்ணை போலிருந்த திரவத்தைக்குடித்தனர்!
திடீரென சுற்றும் முற்றும் பார்த்தவர்கள் அருகே வீடு போலிருந்த காட்டு வாசிகளின் ஒரு குடிசையில் நுழைந்ததால் குடிசைக்குள்ளிருந்த ஆணும், பெண்ணும் பயத்தில் “பேய், பேய்” என கூச்சலிட்டு அலறினர். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் குறைந்து சிரிப்பு சத்தம் வெளிப்பட்டது!
“எங்களோட பூர்வீகம் இந்த பூமி தான். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்த பூமியில் அடிக்கடி பிரளயம் வந்ததால் மனித உயிர்களை அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்று எங்களுடைய முன்னோர்கள் இங்கிருந்து பூமியைப்போலவே இருக்கின்ற முனி என்கின்ற கிரகத்துக்கு ஆண், பெண் இரண்டு பேரை அனுப்பி வைத்துள்ளார்கள். அங்கே சென்றவர்கள் அங்கேயே தங்கி, குழந்தைகளை பெற்று குடும்பம் நடத்தினார்கள். இன்றைக்கு ஒரு கோடிக்கு மேல் மனிதர்கள் அங்கே தமிழ் மக்களாக வாழுகின்றோம்” என சுத்தமான தமிழில் பேச, பேய் என நினைத்தவர்கள் மனிதர்கள் எனத்தெரிந்தவுடன் பயம் நீங்கி அவர்களுக்கு ஓய்வெடுக்க, தங்க இடம் கொடுத்தனர் ஆதிவாசிகள்!
“எங்களுடைய கிரகத்தில் இங்கிருந்து கொண்டு போன தானிய விதையான எள் பயிரிட்டு நெய்யாக்கி அதைக்குடித்து உயிர் வாழ்கின்றோம். அதை எள்நெய் என்கின்றோம். அங்கே ஒரு மனிதன் ஆயிரம் வருடங்கள் வரைக்கும் உயிர் வாழ முடியும்” எனக்கூறிய போது ஆதி வாசிகளான ஓரியும் அவனது மனைவி வேரியும் ஆச்சர்யப்பட்டதோடு, தங்களையும் அங்கே கூட்டிப்போகச்சொன்னார்கள்!
“முனி கிரகத்தில் சிறிது காலமாக யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. எனவே மனித இனம் அழிந்து போகக்கூடாது என்று பயப்பட்டதின் காரணமாக பத்து வருடங்கள் கடினமாக உழைத்த சித்தர்களான நாங்கள் இரண்டு பேரும் பூமிக்கு வருவதற்கு முயற்சி எடுத்து இந்த பறக்கும் தட்டை உருவாக்கி, தாய் மண்ணான நம் பூமிக்கு வந்திருக்கின்றோம். நீங்கள் எங்களைப்பார்த்து விஞ்ஞானிகளா? எனக்கேட்டீர்கள். அது புதிய வார்த்தையாக உள்ளது.
அங்கே சித்தர்கள் என்றுதான் கூறுவார்கள். இதற்கு முன்பு பல முறை பல சித்தர்களான தம்பதிகள் இங்கே வர முயற்சி எடுத்தும் வர முடியவில்லை. இங்கே சகோதர மனிதர்களான உங்களைப்பார்த்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பிரளயத்தால் பூமியில் மனிதர்கள் முற்றிலுமாக அழிந்து விட்டார்கள் என எங்களது பாட புத்தகத்தில் போட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே மக்கள் சந்திரனுக்கும், சூரியனுக்கும் இயந்திரத்தை அனுப்புகிறார்கள் என்பதைக்கேட்டு மகிழ்ச்சியடைகின்றோம். அங்கே மனிதர்களைத்தவிர மற்ற உயிரினங்கள் இல்லை. எள் செடிகளில் மகரந்தச்சேர்க்கை இயற்க்கையாகவே நடந்து விடும். இங்கே நடக்கின்ற அத்தனை காட்சிகளும் எங்களுடைய உடலில் பொருத்தியிருக்கின்ற கேமரா மூலமாக எங்களுடைய கிரகத்தில் இருக்கின்ற சித்தர்கள் பார்த்து மகிழ்ச்சிப்படுகின்றனர். குடிப்பதற்க்கு எங்களுக்கு எள் நெய் வாங்கிக்கொடுங்கள். இங்கே எள் செடி இருக்குமென்று அங்கிருந்து எள் நெய் அதிகமாக கொண்டு வரவில்லை. உடனே திரும்பிப்போனால் உயிர் வாழும் அளவுக்கு எடுத்து வந்துள்ளோம். நீண்ட நாட்கள் நாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றால் நீங்கள் எள் நெய் தர வேண்டும்” எனக்கூறியவுன் தங்கள் வீட்டிலிருந்த நல்லெண்ணை எனப்படும் சுத்தமான, கலப்படமில்லாத எள் எண்ணையை ஓடிச்சென்று தேடி எடுத்து வேற்று கிரக வாசிகளிடம் கொடுத்தாள் ஆதிவாசிப்பெண் வேரி.
“இந்த பூமியில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசுவார்கள் என்று நினைக்கின்றோம். அதில் எங்களுடைய தாய் மொழியான தமிழ்மொழி பேசுகின்ற இடத்தில் வந்து இறங்கியது மிகவும் மகிழ்ச்சி. பூமிக்கு வர வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால் மொழி புரிகின்ற மனிதர்களை சந்திப்போம் என்று கனவில் கூட நினைக்கவில்லை. என்னோட பேரு முருகு, இவ என்னோட மனைவி முருகி. நம்ம முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் முருகக்கடவுள்னு இருந்ததுனால இந்த பெயரை வைத்துக்கொண்டோம். இந்த பூமியில் நாங்கள் தங்கி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய இயந்திரத்தை இந்த பூமியில் இருக்கின்ற கருவிகளால் கண்டு பிடிக்க முடியாது. பக்கத்தில் வந்து பார்த்தாலும் நாங்கள் அனுமதித்தால் தான் தெரியும். நாங்கள் இங்கே வந்து இறங்கியதை நீங்கள் பார்க்க முடியவில்லை. நாங்கள் நினைத்தால் மட்டுமே எங்களையும் , எங்களுடைய இயந்திரத்தையும் நீங்கள் பார்க்க முடியும். இந்த பூமியில் உள்ள எந்த நகரத்துக்கு வேண்டுமென்றாலும் மற்றவர்கள் பார்க்க முடியாமல் சென்று வர முடியும். இப்போதைக்கு நீங்கள் இரண்டு பேர் மட்டும் எங்களைப்பார்க்க முடியும். ஆனால் நாங்கள் சொல்லுகின்ற வரைக்கும், நாங்கள் இந்த பூமிக்கு வந்ததை உங்கள் குழந்தைகளிடம் கூட சொல்லக்கூடாது. அதற்கான நேரம் வரும் போது நாங்களே உங்களுடைய பிரதம மந்திரி முன்பு நின்று பூமிக்கு வந்த காரணத்தைச்சொல்லி விடுகின்றோம்” எனக்கூறியதை ஏற்றுக்கொண்டனர் ஆதி வாசிகள்!
காலையில் எழுந்த வேற்று கிரக வாசிகள் சூரியனை நோக்கி அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனர். உடலை தண்ணீரால் துடைத்து சுத்தம் செய்தனர். சிறிதளவு எண்ணையை வாங்கி குடித்து விட்டு நகருக்குள் யாரும் பார்க்க முடியாதபடி உடலை மறைத்து சென்ற போது ஆதிவாசிகளாலும் அவர்கள் எந்த வழியாக செல்கின்றனர்? என பார்க்க முடியவில்லை. இயந்திரத்தின் மூலம் செல்லாமல் நடந்தும், மிதந்தும் செல்வதாக கூறிச்சென்றது வியப்பாக இருந்தது!
முதலில் அரண்மனை போலிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். கணவன் மனைவி இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். மனைவியின் தந்தை வீட்டிலிருந்து சொத்து வாங்கி வரச்சொல்லியவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவன் திடீரென தட்டைத்தூக்கி மனைவி மீது வீச , அது அருகிலிருந்த கண்ணாடியை உடைத்து கீழே விழுந்தது.
உடனே கோபத்துடன் தனது தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பிய மனைவியை கணவன் தடுக்கவில்லை. இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த மகளும், மகனும் எதையும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே உண்டு முடித்து வெளியில் கிளம்பினர். வீட்டு வேலைக்காரப்பெண் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். உடனே தனது அறைக்குள் சென்ற அந்த பேராசைக்கார, கோபக்கார மனிதர் படுக்கை மீது போட்டுகிடந்த கோடிக்கணக்கான பணக்கட்டுக்களையும், சொத்துப்பத்திரங்களையும் பீரோவில் அடுக்கி பூட்டி விட்டு, அங்கே வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப்பெட்டியிலிருந்த மதுவை குடித்து விட்டு படுத்துக்கொண்டார்.
அந்த ஊரின் சிறந்த ரியல் எஸ்டேட் அதிபர் விருது வாங்கியபோது சிரித்தபடி எடுத்து வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்த போட்டோவிற்கும், தற்போது வீட்டில் நடந்த நிகழ்விற்கும் சம்மந்தமே இல்லையென முருகு தனது மனைவியிடம் சொல்லிக்கொண்டே அந்த வீட்டை விட்டு வெளியேறினர்.
‘பூமியில் மக்கள் பேராசையால் மகிழ்ச்சியுடன், ஒற்றுமையுடன் வாழ்வதில்லை’ என்பதை இந்த வீட்டிலேயே புரிந்து கொண்டு ஊருக்குள் இருந்த ஒரு அரசாங்க கட்டிடத்திற்குள் சென்றனர்.
ஒரே பரபரப்பாக காணப்பட்டது. பலர் வரவும் போகவும் இருந்தனர். அரசாங்க வேலைக்காக வாங்கிய பணத்தை அலுவலக பெட்டிக்குள்ளும், அதற்கு மேலும் கட்டாயப்படுத்தி வாங்கிய பணத்தை தனது பாக்கெட்டிலும் அலுவலர்கள் வைத்துக்கொண்டிருந்தனர். கூடுதலாக வாங்குவதை கொடுத்தவர்கள் ‘லஞ்சம்’ என்றனர். அடாவடித்தனமாவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் அப்போதே வேலை முடிக்கப்பட்டதும், அப்பாவிகளும், ஏழைகளும் அலைக்கழிக்கப்படுவதும் வேற்று கிரக வாசிகளுக்கு வேதனைகளை உண்டு பண்ணியது!
அப்படியே உணவுப்பொருட்கள் விற்கும் இடத்துக்கு சென்றனர். அங்கே கடைக்கு பின் பக்க அறையில் ஒரு விதமான எண்ணைக்குள் இன்னொரு விதமான எண்ணையை கலக்கிக்கொண்டிருந்தனர். காலாவதியான தேதியின் மீதே அடுத்து வரும் தேதியை ஒட்டுவதைக்கண்டு, ‘நல்ல வேளை நாம் இங்கு உணவு எதுவும் சாப்பிடப்போவதில்லை. இருந்தாலும் குடிக்கும் எள் நெய்யாவது கலப்படமில்லாமல் வேண்டும். ஆதிவாசிகள் பார்த்துக்கொள்வார்கள்’ என நினைத்தபடி வெளியேறினர்.
‘பாதைகளில் செல்லும் போது குண்டும் குழியுமான பாதைகளில் பலர் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் சிலர் இறந்து போனதும், சிலர் அரசியலுக்காக போராட்டங்களை நடத்தியதும், அரசியல் வாதிகளைப்பார்த்து நிறைய பொய்களை மேடையில் பேசுவதாக பொது மக்கள் திட்டுவதும், பொறுமையில்லாமல், மகிழ்ச்சியாக முகங்களை வைத்துக்கொள்ளாமல் பலர் போவதும், வருவதும், பள்ளிகளில் புரியாத பாடங்களை படிக்கச்சொல்லி குழந்தைகளுக்கு துன்பத்தைத்தருவதும், சொத்துக்களை முழுவதுமாக பிடுங்கிக்கொண்டு வயதான பெற்றோரை வாரிசுகள் கண்டு கொள்ளாமல் விடுவதும், உழைப்பவர்கள் வறுமையில் வாடுவதும், ஏய்ப்பவர்கள் செல்வச்செழிப்பில் மிதப்பதும், மனிதாபிமானம் சிறிதுமின்றி ஏமாற்றி பணம் பிடுங்குவதும், திருட்டு, கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதும், அதிகம் படித்தவர்கள் திருமணம் செய்யாமலேயே வாழ்வதும், போதையில் ஆடை குறைத்து நடனம் ஆடுவதும் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத, இழிவான வாழ்க்கையை வாழும் இந்த மனிதர்களோடு தங்களுக்கு இங்கு குழந்தை பிறந்து தங்கள் கிரகத்தின் மனித இனத்தை காப்பாற்றவே வேண்டாம்’ என முடிவு செய்த படி மேலும் கேவலமான செயல்களை பார்க்க விரும்பாமல் ஆதிவாசிகளின் இருப்பிடம் நோக்கிச்சென்றனர் வேற்று கிரகவாசிகள்.
‘தற்போது தங்களது கிரகத்தில் வாழ்பவர்களோடு உயிருள்ள காலம் வரை நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும்.
அங்கே மிருகங்கள் இல்லை. விசக்கிருமிகள் இல்லை.மிருகம் போன்ற எண்ணம் கொண்டவர்கள் இல்லை. உயிரைக்குடிக்கும் வாகனங்கள் இல்லை. பேராசைகள் இல்லை. கலப்படம் இல்லை. பணம் இல்லை. பதவி இல்லை. எதற்கும் விலை என்பதே இல்லை. அனைத்தும் பொதுவானதாகவே உள்ளதால் போட்டி இல்லை. பொறாமை இல்லை. புனிதமான கணவன் மனைவி குழந்தைகள் என குடும்ப முறைகள் மட்டுமே உள்ளன. நகர வாழ்வெனக்கூறி நரக வாழ்க்கையை வாழும் மனிதர்கள் நிறைந்த இந்த பூமியில் நமது சந்ததிகள் பிறந்து சிரமப்படக்கூடாது’ என நினைத்து, உறுதியான முடிவுடன் ஆதிவாசிகளிடம் கூறாமலேயே தங்களது கிரகத்தை நோக்கி பறக்கும் தட்டைப்பறக்க விட்டனர் வேற்று கிரக வாசிகளான முருகுவும், முருகியும்!