நான் அந்த இமெயிலை படித்து விட்டு அதிர்ந்து போனேன். நாசாவின் திட்ட மேலாளர் பீட்டரிடமிருந்து வந்த இமெயில், எங்கள் ADS ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகக் குண்டைத் தூக்கிப் போட்டது. வயிற்றில் கத்தி பாய்ந்தது போல் ஒரு வலி. பெருமூச்சு விட்டபடி அந்த இமெயிலை எங்கள் CEO பார்க்கருக்கு அனுப்பினேன்.
ஒரு வருடத்திற்குள் பூமியைத் தாக்கவிருந்த 96 மைல் அகலமுள்ள PN-307 என்ற சிறுகோளை நாசா கண்டறிந்தபோது, சிறுகோளை திசை திருப்பவும் வெகுவாரியான மனித அழிவைத் தடுக்கவும் அவர்களுக்கு ஒரு வழி முறை தேவைப்பட்டது. அதற்கான நேரமோ அல்லது வேண்டிய நிபுணத்துவமோ நாசாவிடம் இல்லை, எனவே அவர்கள் ADS – Asteroid Deflection System – ஐ உருவாக்க எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தப்படி ஏழு மாதங்களுக்குள் எங்கள் நிறுவனம் ADS ஐ அனுப்பி சிறுகோளை திசை திருப்பியாக வேண்டும். காலக்கெடுவுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லும் இந்த இமெயில் வருகிறது!
என் அலுவலகத்தின் கதவு படாரென்று திறக்க, பார்க்கர் உள்ளே நுழைந்தார். அவர் கண்களில் கோபம் தெரிந்தது.
உட்காருவதற்கு முன்னரே “இப்போது தான் நான் நாசாவின் பீட்டரிடம் பேசினேன்.” என்றார் பார்க்கர்.
“சரி…?”
“நாசா இன்னும் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. சிறுகோள் அதன் பாதையில் இருந்து சிறிது விலகி விட்டதாம். அது பூமியைத் தொடப் போவதில்லை . அவர்களுக்கு இனி மேல் நம்முடைய ADS தேவையில்லை.”
“ஆனால் நாம் ஏற்கனவே ADS ஐ உருவாக்க மில்லியன் கணக்கில் செலவு செய்துள்ளோம். அதை இப்போது என்ன செய்வது?”
“அது தான் இப்போது பிரச்னை. ADS ஐ இன்னொருவருக்கு விற்க அது கத்திரிக்காயா என்ன?” என்றார் பார்க்கர் விரக்தியுடன்.
“நாம் செலவழித்த மில்லியன்களை திரும்பப் பெறுவதற்கு சட்டப்பூர்வமக வழி ஏதேனும் உள்ளதா?”
“இல்லை. ஒப்பந்தம் நாசாவுக்கு சாதகமாக எழுதப்பட்டுள்ளது, நமக்கு அல்ல.”
“அப்படியானால், நாம் இப்போது என்ன செய்வது? எல்லா வேலைகளையும் நிறுத்தவா? மூன்று வாரங்களில் ADS ஐ உலகிற்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இரண்டு வாரங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளோம்.”
பார்க்கர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார், பின்னர் உறுதியான குரலில், “எந்த வேலையையும் நிறுத்த வேண்டாம். நாம் திட்டமிட்டபடி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவோம்.” என்றார்.
நான் குழப்பத்துடன் அவரைப் பார்த்து, “சிறுகோள் அதன் பாதையிலிருந்து விலகி விட்ட பின்னும் ADS ஐ நாம் ஏன் அனுப்புகிறோம்? என்ற கேள்வி பத்திரிகையாளர் சந்திப்பில் வரும்.” என்றேன்.
“வரட்டும். சிறுகோளை அதன் பாதையில் இருந்து திசை திருப்ப நாங்கள் ADS ஐ அனுப்பப் போவதில்லை என்று நான் கூறுவேன்.”
“பிறகு?”
“சிறுகோளை மீண்டும் அதன் பாதையில் வைப்பதற்காக.”