பிரம்மனிதம்!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 38,154 
 
 

ர்ர்ட்ர்ர்ர்ர்ர்ர்..

“ராகீ, App updated”

“ராகீ, App updated”

அலறிய மொபைல் சத்தம் கேட்டு எழுந்தாள் ராகவி. தன்னுடைய கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். இரவு 12.25. கண்ணைத் துடைத்துக் கொண்டு விழுந்தடித்து ஓடியவள், மொபைலை சைலண்டில் போட்டுவிட்டு, Appஐத் திறந்தாள். பர்ப்பிள் நிற பேக்ரவுண்டில், கோல்டன் ஃபான்ட்டில் App அப்டேட் ஆன செய்தி மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம்போல் இருந்தது அவளுக்கு!! இருக்காதா? தன்னுடைய இருபதாம் வயதில் ஆரம்பித்து இன்று நிறைவேறிய மூன்றரை வருடத் தேடல். பார்த்துக்கொண்டே டிவியை ஆன் செய்ய, அந்த வருடம் வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” படப் பாடல் ஓடிக் கொண்டு இருந்தத.

மிகுந்த சந்தோஷத்தோடு, ஐரோப்பாவில் பணிபுரியும் தன் தந்தைக்கு போன் செய்தாள். அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டவுடன், சட்டென்று “அப்பா, நான் சொல்லிட்டே இருந்தேன்ல, பாத்தியா? இப்போ அந்த வேலை முடிஞ்சுது. பாதி ஜெயிச்சாச்சுப்பா” என்றவளுக்கு “சரி ராகவி, மீட்டிங்ல இருக்கேன், அப்புறம் கூப்பிடறேன்” என்ற ஹஸ்க்கி குரலில் வந்த அவளது தந்தையின் பதில் ஏமாற்றத்தையே தந்தது. இப்போதே இதை பரிசோதித்தஅதிரசடலாமா? இல்லை பொறுத்திருக்கலாமா என்ற குழப்பம்வேறு. சரி, ஆனது ஆகட்டும் என்று, தன்னுடைய பங்களாவின் கார்ஷெட்டிற்கு சென்றாள். உள்ளே, அவளது படைப்பான “ரோட்டோ டைம்” டிவைஸ், அவளது வருகையை அறிந்து, “வெல்க்கம் பப்பு” என்றது.

தன்னுடைய தந்தை தன்னைச் செல்லமாக பப்பு என்று கூப்பிடுவது போலிருந்தது அவளுக்கு!!

உள்ளே சென்றவள், தனது மொபைலை நோண்ட , சார்ஜ் 20% என்றதும், சட்டென்று நினைவு வந்தவளாய் ரோட்டோவில் இருந்த சார்ஜிங் பேலட்டை (pallet) எடுத்து அதன் மேல் மொபைலை வைக்க, நொடிப்பொழுதில் 100% ஆனது. கடவுளை வேண்டிக்கொண்டு, Appஐ ஓப்பன் செய்தாள்..

Loading..loading.. Installing driver.. √..அவளது கட்டைவிரலைக் கொண்டு ஸ்கேன் செய்து, தன்னுடைய விபரங்கள் அனைத்தையும் உள் செலுத்தினாள். மணி 1:05. விருட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய், மொபைலை அங்கேயே வைத்துவிட்டு தன் வீட்டை நோக்கி அவசர அவசரமாக ஓடினாள். ஆராய்ச்சியின்போது தூங்கிப்போனதால், தனது வளர்ப்பு மீனுக்கு இரை போடவில்லை.

“டேய், அக்கா இப்போ வெளியே போறேன், எப்போ வருவேன்னு தெரியலை. சமத்தா இரு. ஒழுங்கா சாப்பிடு. காலைல அம்மா வந்துடுவாங்க. நானும் நாளைக்குள்ள வந்துடுவேன். இதோ அம்மாக்குதான் sticky notes’ல எழுதிட்டுருக்கேன். தேடினாங்கன்னா நீயே சொல்லிடு சரியா? ” என்று சிரித்தபடி கூறிவிட்டு, தன்னுடைய பணியைத் தொடரத் தயாரானாள்.

ரோட்டோவுடன் மொபைலை கனெகட் செய்தாயிற்று, “டிவைஸ் ரெடி, எத்தனை வருடங்கள் கடக்க வேண்டும்” என்ற செய்தியைக் கேட்டவளுக்கு பக்கென்றது. அவள் அப்படி வடிவமைத்திருக்கவில்லை. எந்த வருடத்திற்கு செல்ல வேண்டும் என்பதையே இன்புட் மோடாக(input mode) வைத்திருந்தாள். எப்படி மாறியது? ஷாக்!!

வருடம் என்கிற இடத்தில் 5ஐ அமுக்கினாள். “Wrong entry!! Minimum 7 digits” என்றது ரோட்டோ. 7 digits ஆ.. ஐயோ, அப்படியென்றால் குறைந்தபட்சம் பத்து லட்சம் ஆண்டுகளாகத்தான் கடக்க முடியுமா? கண்டிப்பாக இதில் ஏதோ கோளாறு. என்னவென்று பார்த்து விட்டு, பிறகு செல்லலாம் என்ற எண்ணமிருந்தாலும், சைன்டிஸ்டுகளுக்கே (scientist) உரிய க்யூரியாசிட்டி அவளைப் பாடாய்ப் படுத்தியது. நான்கைந்து வருடங்கள் என்றால் பரவாயில்லை, பத்து லட்சம் வருடம். ஐயையோ!!

ஆனது ஆகட்டும், போய்தான் பாரேன். என்றது, அவளுடைய மைண்ட் வாய்ஸ். முடிவு செய்தாள். இதை பரிசோதித்துப் பிறகு போவதிலென்ன கிக். என்னதான் நடக்கும், நடக்கட்டுமே..!!
வருடம் என்ட்ரியில் 0000001 என்று என்டர் செய்தாள். “Wrong entry, minimum 1 million” என்ற பதிலால் சற்று அதிர்ந்தே போனாள். என்னவோ, விஞ்ஞானத்தின் மீது பாரத்தைப் போட்டு (-)1234567 என்ற எண்களைத் தட்டினாள். அவளுடைய கட்டை விரலை வைத்துவிட்டால் போதும், அவ்வளவுதான்.. காலம் கடந்துவிடுவாள். தன்னுடைய தந்தை, தாய், மற்றும் அவளது சைன்ஸ் ஆசானான சித்தார்த் இவர்களை மனதில் வைத்து. கட்டை விரலை வைத்தாள். வைத்த கணம் யோசித்தாள் “அடக்கடவுளே!! க்ரெடிட் கார்டை மறந்துட்டேனே” !!!!
ப்ராம்ம்ம்ம்ம்ம்..ஃப்ளாஷ்..zzzzzom

கண்ணை மூடித்திறந்தவள், ஒரு இருட்டு அறையில் தான் இருப்பதைக்கண்டு ஒருகணம் திடுக்கிட்டாள். “பத்து லட்சம் வருடம் முன்னால வந்துருக்கடி நீ, க்ரெடிட் கார்டு எதுக்கு பக்கி உனக்கு, எல்லாமே காட்டுவாசிகளா சுத்திட்டு இருக்கப்போறாங்க. அவங்கள்ட்ட பேசி எப்படி புரியவைப்ப?” லேசான உதறல் அவளுக்கு.. ஆனால் வந்திறங்கிய இடமோ படு குளிர்ச்சியாக இருந்ததால், என்னவாக இருக்கும் என்று பார்க்கத் துணிந்தாள். பயணித்ததே தெரியாதபோதும், பயணக்களைப்பு அப்படியே சொக்கித் தள்ளியது. கண்ணை அயர்த்தியது..

“சித், இதல்லாம் சரிவருமா? இந்த வருஷமாவது இது நடக்குமா?”

“லூசா நீ?”

“ராகீ!! என்னடி இது.. இந்த முறையும் ஒலிம்பியாட்ல இல்லியா நீ?” அம்மா முறைக்க,

சட்டென்று பயந்தவளாய் கண்விழித்தாள். ஒரு நிமிடம் எங்கே இருக்கிறாள் என்பதையே மறந்துவிட்டிருந்தாள். அதே இருட்டறை.. அதே ரோட்டோவின் மேல் தானிருப்பதைக் கண்டு, இன்னுமா இங்கே விடியவில்லை? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள், சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அறையைத் தாண்டி வெளியே போனாள்!

ட்ர்ர்ர்ர்ர்ர் 5AM மொபைல் அலாரம் அலற, அதை அவள் அணைப்பதற்குள், கதவை உடைத்துக்கொண்டு நான்கைந்து பேர் லேசர் ஒளிக்கூரிட்ட துப்பாக்கியுடன் உள்வர, டமால்!!
“பொறுமையா எழுந்திரு, தலைய சாய்ச்சாப்லயே வச்சுக்கோ, இல்லைன்னா தலை சுத்தும். பொறுமையா.. லேசா.. லேசா அப்படித்தான்.. வா வா!!

கண்ணைத்திறந்தவளுக்கு, மங்கலான ஒளியில் தன் முன்னே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வருகிறது. பதறினாள்.. பயந்தாள்.

” ஹே!! ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. இன்னும் மயக்கமா இருக்காம்மா? என்ற அவரது வார்த்தைகள் சற்றே அவளை ஆசுவாசப் படுத்தி இருந்தது. “நீங்க யாரு? நான் எங்கே இருக்கேன்? இது என்ன இடம்? எந்த வருஷம்.” அடுக்கடுக்காய் அடுக்கிக் கொண்டே போனாள்.

“என் பேரு கொங்கா” கிளுக்கென்று சிரிப்பு வந்தாலும், அடக்கிக்கொண்டாள். “கொங்கா? ஐயம் ராகவி” அவர் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். “என்னது ராகவியா, என்ன பேரு இது, ஹாஹாஹா”

கோபத்தை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை ராகவி.

” இங்கே பாரு ராதவி.. ”

“நான் ராகவி” அழுத்தமாக..

“சாரி, ராகவி!! நீ எந்த தட்டினைச் சேர்ந்த பொண்ணு?”

“தட்டா? அதென்ன?”

முறைத்தார்.. “தட்டு தெரியாதா? நீ நிக்கற இந்த இடம் தட்டுலதான் இருக்கு. நீ எந்த தட்டுன்னு கேக்கறேன்ல”

“சத்தியமா தெரியாது சார் நான் வந்து..” எல்லாவற்றையும் கூறி முடித்தாள்..

“எல்லாம் சரி, ஆண்டுன்னா என்ன?”

“ஆண்டுன்னா ஒரு வருஷம்”

“ஒரு வருஷம்னா?”

(போச்சுடா)” அதாவது, இந்த பூமிப்பந்து உலகத்தை சுத்தி வர எடுத்துக்கற காலம்தான் ஆண்டு”

“ஓ.. குழுமி”

(தன்னைத்தானே நொந்தபடி) “ஆமா சார் குடுமிதான்.. சாரி குழுமிதான்”

— எல்லாவற்றையும் கேட்டறிந்தார் —

எங்க கசக்ல (கசக் – மொழி)
பூமி – மா
சூரியன் – பா
நிலவு – திலாக்
மலர் – சிரி..
ஒரு மணி நேரம் – அல்ஸ்

கையைக் கூப்பியபடி “போதும் சார் என்னை விடுங்க, நான் எங்க வருஷத்துக்கே, சாரி கசக்குக்கே போறேன்”

“பொறுங்க ராலவி”..(அப்படியே கூப்பிட்டுத்தொலைங்க என்று நினைத்துக்கொண்டாள்) என்று கூறிவிட்டு ஜன்னலைத் திறந்தார்.. வெளியே பார்த்தவள் “ஆ” என்று பிளந்த வாயை மூடவில்லை!!

வெளியே மனிதர்கள் நிஜமாகவே இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தனர்.. ஒவ்வொருவருக்கும் தனிவிமானம் போல இறக்கைகள் வடிவமைக்கப் பட்டிருந்தது. கட்டிடங்கள், விண்ணை முட்டி நின்றது. சொல்லப்போனால் பிரம்மாண்டம் என்பதன் முழு அர்த்தம் உறைத்தது!! அப்பொழுதுதான் சிந்தித்தாள், “ஆண்டுகள் பின்னோக்கி பயணிப்பதற்குப் பதிலாக, முன்னோக்கி அமுக்கிட்டேன் போல, அடச்சை நானெல்லாம் சயின்டிஸ்டு வேற” ..

கொங்கா அவளை அழைத்துச் சென்று, ஒரு காலி ப்ளாட்டில் நிப்பாட்டி, கையில் உள்ள ரிமோட்டில் ஒரு பட்டனைத் தட்டினார். சட்டென்று, சகல சவுகர்யங்களுடன், ஒரு மாளிகை போன்ற வீடு அவளைச்சுற்றி எழும்பியது. அவளுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய அம்சங்களும், அதற்குள் இருந்தது. மாளிகை ஓரத்தில் அவளது ரோட்டோ நிறுத்த தனி மேடு.
“ராரவி.. நீங்க இங்கே ஓய்வெடுங்க உங்களுக்கு எதும் தேவைன்னா, என்னைக் கூப்பிடுங்க.”

“உங்களை எப்படி சார் கான்ட்டாக்ட் பண்றது?”

“என் பேர் சொல்லி கூப்பிடுங்க, உடனே வருவேன். குழுமி கடத்த (டைம்பாஸ்) உங்களுக்குப் பிடித்தமான சிரியை நீங்க தேர்ந்தெடுத்துக்கங்க, சிரித்தோட்டம் உருவாகும். நீங்க உலவிக்கலாம்.”

“பசிக்குது கொங்கா”

“இதோ, என்ன வேணுமோ சாப்பிடுங்க” என்று சொல்லி, பியானோ போன்றதொரு அமைப்பைக் காண்பித்தார்..

“சீரகசம்பா”

“குதிரவாலி”

இதல்லாம் என்னான்னு கூடத்தெரியாது கொங்கா..

அப்படியா, இருங்க.. இப்போ லேட்டஸ்ட் மெனு சொன்னா உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.. பட்டனைத்தட்ட

+ பீட்சா
+ பர்கர்
+ கபாப் வந்து நின்றது..

நீங்களே ஒரு நல்ல மெனுவா போட்டுக்.. ஆஆஆஆஆஆஆஆஆ.!! அலறியபடி பின்னோக்கி ஓடினாள்….

கொங்கா பதட்டமாகத் திரும்ப, பின்னால் ஒரு “டீரெக்ஸ்” (T-rex – Jurassic park படத்தில் காரைத் துரத்துமே அந்த டைனோசர்) அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தது!!
சிரித்த கொங்கா தொண்டயைச் சரிசெய்தபடி.. “இதுக்கா பயந்திங்க?” இது என் வளர்ப்புப் லைசர். பேரு ‘பிங்’. என்னைக் கூட்டி வரச்சொல்லி என் ‘தாச்சி’ அனுப்பிருப்பாள். அதானேடா பிங்?” சிரித்தார்.. அவர் பேசுவதை வைத்து “தாச்சி – மனைவி” “லைசர் – டைனொசர்” இதெல்லாம் புரிந்தது அவளுக்கு

(யோவ் லூசாய்யா நீ, டைனோசர செல்லப்ராணிங்கற).. “கொங்கா, இங்கே வேறு பயமில்லையே, தனியா இருக்கலாம்ல? ”

“தாராளமா இருக்கலாம் தாரவி. ஒரே பிரச்சனை இப்போதிருக்கும் ‘மங்சி’கள் மட்டுந்தான்.. அவைகளைக் கண்டால் மட்டும் தப்பித்துவிடு”

“மங்சின்னா? ”

“இரு..!!” கொங்கா தன்னுடைய வாட்சைத் தட்ட, பெரிய திரையில் மங்சி.. அடச்சை “எலி” .. அதான் மங்சியா என்று நினைத்துக்கொண்டாள் ராதவி.. ச்சை ராகவி!! ”

“மங்சி ஒரு நோய்பரப்பி. அதான் அதனிடம் ஜாக்கிரதையாக இருக்கனும்னு சொல்றேன்.. தாச்சி தேடுவாள். நீ இங்கேயே கிடக்கலாம். நான் கிளம்பறேன். பிங்!! முலுக்கிக்கு பல்காட்டு.. ” ஈ!! என்றது லைசர் (டைனோசர்).. (முலுக்கின்னா அக்காவா!! நல்லா வச்சிங்கய்யா பேரு)

(விட்டா ஷேக்ஹான்ட் கொடுக்கச் சொல்லுவாரு போலயே) .. சிரித்துவிட்டு வழியனுப்பி வைத்து கதவை சாத்தினாள் ராகவி.. சிந்திக்க ஆரம்பித்தாள்..

டைனோசர் இனமே பல லட்சம் வருடங்கள் முன்னே அழிந்து விட்டதாக சொன்னார்கள். அப்போ, நான் பின்னோக்கிதான் பயணித்திருக்கிறேன். ஆனால் பரிணாம வளர்ச்சியில், என் காலத்தைக் காட்டிலும் இவர்கள் மேலோங்கி நிற்கிறார்களே!! மனிதனையும் டைனோசர்களையும் பிரிக்கவே கடவுள் அந்த மீட்டியாரை ( meteor) அனுப்பியதாக கூறியே வளர்த்தார்கள். எல்லாம் பொய்யா? மனிதனும் டைனோசரும் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்களா? அவை ப்ரீடேட்டர்கள் என்றல்லவா நினைத்தேன். எப்படி மனிதனுக்கு அடிபணிந்தது. தாவர உண்ணிகளலெல்லாம் எங்கே? எலிக்கு ஏன் பயம்? அதுபோக அவர்களின் சாப்பாட்டு வகையே வித்தியாசமாக உள்ளது!! பீட்சா பர்கர் எல்லாத்தையுமே புது மெனுன்னு சொல்றார்.. அப்போ இந்த இனம் குதிரவாலியைத் தின்னுதான் வாழுதா? இவங்க தொழில்? கேள்விப்படாத வரலாற்றுப் பகுதியினால், மிகையான குழப்பத்தில் மண்டையைப் பியத்துக்கொண்டாள்.
அப்படியே எட்டிப் பார்த்தாள். அங்கே சிலநூறு சிறிய டைனோசர்களை வைத்து வயற்பரப்பில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள்..

“என்னடா இது” டைனோசர்கள வச்சு விவசாயமா? அப்போ மாடு? மற்ற விலங்குகள்? நாளைக்கு கொங்காவை வெளியே கூட்டிப்போகச் சொல்லனும்.

உறக்கம்!!

“என்ன நல்லா புர்சினிங்களா?”

“ஓ தூக்கம்னு அர்த்தமா? புர்சினேன் புர்சினேன்.. கொங்கா என்னை வெளியே கூப்பிட்டுப் போங்களேன்.. ஆசையா இருக்கு பாக்கனும்னு. ”

“கிளம்பி இருங்க.. காலரைக்கால் அல்ஸ்ல வரேன்.. பை தி பை,இவங்கதான் சிரிலி நான் சொன்ன அந்த முலுக்கி.. பேரு ராகவி”

“ராகவி, இவங்கதான் என் பிலி. பேரு சிரிலி.”

ராகவிக்கு வெளியே செல்வதிலேயே நாட்டம் அதிகமாய் இருந்தது. இந்நேரத்திற்கு அவரது மகளுடன் இந்ந இன்ட்ரோ, அவளுக்கு ஒட்டவில்லை. அதை கொங்காவும் கண்டு கொண்டிருந்தார். “சிரிலி, வா, முலுக்கிக்கு நம்ம கோர்னாவை சுத்திக் காமிக்கலாம்”

கோர்னா எனப்படுகிற ஊரைச் சுற்றிக்காண்பிக்க, ராகவிக்கான இறக்கை நொடிப்பொழுதில் உருவாக்கப்பட்டது. ராகவிக்கு பயம், தான் பறக்கப்போவதை நினைத்து.

“ஜெட் லேகு பில்ஸ் இருக்கா கொங்கா”

“அப்படின்னா?”

(ம்க்கும் இதை இவருக்குப் புரியவைக்கவே தலை சுத்தும், அதுக்கு பறக்கறதே பெட்டர்) “எதுவுமில்லை கொங்கா, நான் ரெடி”

தனது இறக்கையுடன், தனது பிலி(மகள்)யின் இறக்கையும், ராகவியின் இறக்கையும் சிங்க் லாக் செய்துகொண்டு பறக்கலானார்.

“வீட்டைப் பூட்ட வேண்டாமா?”

“ஏன்?”

“திருட்டு பயமில்லையா?”

“அப்படின்னா?”

“நம்ம பொருட்களை யாரும் கொண்டு போய்விட்டால்?”

“பிறகு அவர்கள் பொருட்களை எங்கே வைப்பார்கள்?”

வாயைமூடிக்கொண்டாள். எல்லார்க்கும் எல்லாமே சரிசமமாக கொடுக்கப்பட்டிருந்த ஒரு காலம் என்று புரிந்துகொண்டாள்.

“கீழே பாரு ராலவி, இதுதான் எங்க கோர்னா” பார்த்தவள் ஆச்சரியப்பட்டுப் போனாள். சொர்க்கம் போல் இருந்தது அவர்களின் ஊர். கோபுரங்களான கட்டிடங்கள். பச்சைப்பசேலென விவசாய நிலங்கள், ஊருக்கு நடுவேயும் வெளியேவும் ஆறுகள், கடல், மலைகள் என, இதுவரை கண்டிராத காம்போவைக் காண முடிந்தது ராகவிக்கு. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கட்டிடக்கலையை எப்படிக் கண்டறிந்தார்கள்? இவர்கள் பிறப்பிலேயே சயின்டிஸ்டுகளாகவும், விவசாயிகளாகவும் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கள் வாழும் ஊர்போல இருக்கிறது. ஆயிரம் கேள்வி பதில்கள் ராகவியினுள்.

ஒரு மலைப்பாதையில் தரையிறங்கியபோது, சட்டென்று நினைவு வந்தவளாய், “ஆமா கேக்கனும்னு நினைச்சேன். மற்ற விலங்குகள்லாம் எங்கே”? (விலங்குக்கு என்ன பேரு வச்சுருக்காங்களோ தெரியலையே)

புரிந்துகொண்டவராய் பதிலளித்தார் கொங்கா ” செம்மி, அன்னை”(ஆடு, மாடு) இதையல்லாம் கேக்கறிங்களா? அவைகள் தனியாக வளர்க்கப்படுகிறது. லைசருக்கு உணவு வேண்டுமே. அதற்காக வளர்க்கிறோம். அங்கே பாரு ராகவி..”!!

அவர் கை நீட்டிய இடத்தில் ஆட்டு மந்தை. அப்போதுதான் புரிந்தது ராகவிக்கு. இவர்களுக்கு டைனோசரே பிரதானம், ராட்சத eco friendly இயந்திரங்கள் கொண்டு டைனோசர்களை வைத்து எல்லாவற்றையும் செய்து கொள்கிறார்கள். நல்லவேளை, நம்மூரில் இப்படி இல்லை. மாட்டைத் தொட்டாலே ஏகப்பட்ட பிரச்சனை.

“கொங்கா, டைம்பாசுக்கு.. சாரி..!! அல்ஸ் கடத்த என்ன செய்வீர்கள்”?

” உழைப்போம்!!குழந்தைகள் விளையாடுவார்கள். ஆயிரம் குழுமி கழிக்கும் அளவிற்கு குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள், சிரிகள் உள்ளது.”

எதிர்பார்க்கவில்லை ராகவி. எவ்வளவு அழகான வாழ்க்கை முறை? ச்ச.. இங்கே இப்படி வாழ்ந்திருக்க வேண்டும். டிவி, மூவி, மால், ஃபாஸ்ட் ஃபுட் , டேட்டிங், பொல்யூசன் என்று நம்முடைய வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறோம். ச்ச..

சிரிலி மற்றும் கொங்காவுடன் பேசிக்கொண்டே அன்றைய நாள் கழிந்தது. ராகவிக்கு அங்கேயே தங்கிவிடவேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் அவள் காலத்துக்கு செல்ல வேண்டுமே. அம்மா அப்பாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தபோதும், இங்கேயே தங்கிவிடக்கூடாதா என்ற ஒரு தவிப்பு கண்கூடாகத் தெரிந்தது.

இரவு தூங்கிப்போனாள். நள்ளிரவு வேளையில், ” முலுக்கி, முலுக்கி.. எழுந்திரிங்க ப்ளீஸ்” என்ற சத்தம்கேட்டு விழித்தாள். அழுதபடி சிரிலி நின்று கொண்டிருந்தாள். பதட்டமானவள்,
“ஹே சிரிலி என்னாச்சு”

“முலுக்கி, உடனடியாக உங்களை என் பித்ரன் (அப்பா) கிளம்பச்சொன்னார். நாங்கள் அழியப்போகிறோம். இன்னும் கால் அல்ஸில் எங்கள் கோர்னாவை மண்மூடும். உடனே கிளம்புங்கள்.” என்றாள் அழுதபடி.

“என்னடி ஆச்சு, ஏன் இப்படிப்பேசற?”

“இல்லை முலுக்கி, சரியாக 2000 குழுமிகளில் இந்த மா ( பூமி) அழியுமென கணிக்கப்பட்டிருந்தது. சில அத்துமீறல்களால் இப்பொழுதே அழிவு வந்துவிட்டது”

“என்ன அத்துமீறல்? அழுதபடி ராகவி!!

” அதெல்லாம் தெரியாது முலுக்கி, ப்ளீஸ் போயிடுங்க”

ராகவிக்கு புரிந்திருந்தது. இது ஏதோ வடிவமைக்கப்பட்ட ஒரு செட்டப். சிரிலியை தன்னுடன் வந்துவிடும்படி கெஞ்சினாள்

“இல்ல முலுக்கி, நான் அழியனும்னு என் பித்ரன் சொல்லிட்டாரு, நீங்க கோடி குழுமி நல்லா இருங்க” என்று கூறிவிட்டு மறைந்தாள்.

ஒருநாள் பழக்கமே ஆனாலும், ராகவிக்கு அவள் அழுகையை அடக்கமுடியவில்லை. இவ்வளவு ஒழுக்கமான, சிறப்பான, அரிதான மனிதர்கள் அழியப்போகின்றனர். ஐயோ எனக் கதறியபடி, தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு, “ரோட்டோ” வை நோக்கி ஓடினாள்.

ஏறி அமர்ந்து வருடங்களை அமுக்கினாள் + 1234567

ப்ராம்ம்ம்ம்ம்ம்..ஃப்ளாஷ்..zzzzzom

மரங்களினூடே ரோட்டோ உறுமியபடி நின்று கொண்டிருந்தது. எழுந்து பொறுமையாக நடந்தாள் ராகவி, என்ன இடம்? என் வீடு இல்லையே.. வருடத்தை சரிபார்த்தாள். +1236567 என்றிருந்த காலகடிகாரத்தைக்கண்டு பகீரென்றது.

ஐயோ!! “என் காலம் தாண்டி 2000 வருடம் கழித்து வந்துவிட்டேன். ஆனால் நான் சரியாகத்தானே என்டர் செய்தேன். எப்படி மாறியது? ”

பயம், இருள், காடு.. கால் முட்டி வரை பனி. நாசியெல்லாம் ஒரு வகையான நாற்றம். மூக்கைப்பொத்திக் கொண்டாள். என்ன இடம் இது. சற்றே மயங்கிப்போனாள். பயணக்களைப்பு. பகலில், குயில்கூட்டத்தின் சப்தங்கள் கேட்டு விழித்தவளுக்கு, அருகே நீரோடை சலசலப்பு ரம்யமாக இருந்தாலும், புது இடம் என்பதால் பயம். மனதின் ஒரு ஓரம் கொங்கா, சிரிலி, டைனோசர்கள் அழிந்த வருத்தம். என்னதான் நடக்கிறது? அவளின் ஆராய்ச்சி எங்கே கொண்டு செல்கிறது அவளை. துணிந்நாள் தெரிந்துகொள்ள. பொறுமையாக , ஆனால் எச்சரிக்கையாக , நாற்றம் வந்த திசை நோக்கி நகர்ந்தாள்.

நீரோடை அருகே இருந்த மரத்தின் ஓரம் நின்று கொண்டு எட்டிப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அங்கே நூற்றுக்கணக்கான ஆதிமனித இனப்பெண்கள் (குரங்கு வடிவமைப்பு கொண்ட முகத்தோடு) கரையோரத்தில், குழந்தைகளைப் பெற்று, அறுபடாத தொப்புள் கொடியுடன் கிடந்தனர். ஆங்காங்கே சில ஓநாய் குட்டிகளும் பிறந்து கிடந்தன .அவற்றை ஒவ்வொன்றாக பிய்த்து தின்றவண்ணம் கொரில்லாக்கள் உலவிக்கொண்டிருந்தது. ராகவிக்கோ அதிர்ச்சி கலந்த குழப்பம். “காலத்தில் பின்னோக்கிப் போனால் விஞ்ஞான உலகம், முன்னோக்கி வந்தால், ஆதிமனித இனம். இது எனது கண்டுபிடிப்பின் குழப்பமா? இல்லை…..”

திடீரென்று அத்தனை கொரில்லாக்களும் ஓடத்துவங்கின. பெண்கள் அலறியபடி ஓநாய் போல ஓலமிடத் தொடங்கினர். என்னதான் நடக்கிறதெனப் பார்த்துக்கொண்டே நின்ற ராகவிக்கு அதிர்ச்சி. பெரும் சப்தம் எழுப்பிக்கொண்டு, ஒரு பனிமனிதன், இன்னும் பத்து பெண்களை அங்கே கொண்டு வந்து போட்டான். அனைவரும் கர்ப்பம்.

ராகவிக்கு குலையே நடுங்கிப்போனது. அந்த மைனஸ் டிகிரி குளிரிலும், வியர்த்துக் கொட்டியது. இப்படி ஒரு ராட்சத உருவம், கதைகளில் கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை. செய்வதறியாது சப்தநாடியும் ஒடுங்கி நின்றாள். திடீரென கும்பலாய் ஓநாய்ப்படை நாலா பக்கத்திலிருந்தும் அங்கு வந்து அந்த பெண்களுக்கு காவலாய் நின்றது.

“பெண்ணுக்கு ஓநாய் காவலா? ஆண் இனமே இல்லாமல் எப்படி பெண் கருத்தரித்திருப்பாள்? ஓ.. ஓநாய்தான் பெண்களோடு இனப்பெருக்கம் செய்கிறதா? “மனிதர்கள் ஓநாய் வழி வந்தவர்களா? அந்த மனித இனப்பெண்கள் எப்படி வந்தனர்? ஓநாய்களின் க்ரோமோசோம்கள் வேறாயிற்றே!! எப்படிச் சாத்தியம்? ”

“மனித இனத்தோன்றல் பற்றி டார்வின் எழுதியதும், நான் இத்தனை காலம் கேட்டு வந்த கதைகளும் பொய்யா? இதிகாசங்கள், புராணங்கள் அனைத்தும் கற்பனையா? ராகவிக்கு தலை வெடித்துவிடும்போல் இருந்தது. ”

அவள் சட்டென்று எதிர்பாராத நேரத்தில், அந்த பனிமனிதன், மோப்பம் பிடித்தபடியே ராகவியை நோக்கி விரைந்தான். ராகவி மூச்சை இழுத்துப்பிடித்தபடி அங்கேயே நின்றாள். அசைவே இல்லாமல். ராகவியின் அருகே கிட்டத்தட்ட “கிங்காங்” போல வந்து நின்ற பனிமனிதனைக் கண்டு மிரண்டுபோய் மயங்கிச் சரிந்தாள். அவளை அடிப்பதற்கென பனிமனிதன் கையை ஓங்க, அவன் மீது ஓநாய்கள் பாய, ராகவி இமைகள் மயக்கத்தில் மூட, சரிந்தாள். பாக்கெட்டில் ஏதோ உடைந்த சத்தம்.

ராகவிக்கு மயக்கம் தெளிந்தபோது, கும்மிருட்டு.சுற்றி ஆள் அரவமில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த நீரோடை பக்கம் சென்று பார்த்தாள். அங்கே யாருமில்லை. இனி இங்கே இருந்தால் ஆபத்து என்று எண்ணியவள், தனது பாக்கெட்டில் கைவிட்டு மொபைலை எடுத்துப்பார்த்தாள். Switch off. வேகமாக தனது ரோட்டோவில் ஏறி, மொபைலை சார்ஜ் செய்து ஆன் செய்து பார்த்தாள். நல்லவேளை, ஒன்றும் ஆகவில்லை. கண்ணாடி மட்டுமே உடைந்திருந்தது. ஒரு நிமிடம் சந்தோஷப்படுவதற்குள், Finger print scan செய்தால் மட்டுமே ரோட்டோவை இயக்க முடியும் என்கிற நினைப்பு வர. முயன்று பார்த்தாள், கண்ணாடி உடைந்தபடியால் ஸ்கேன் செய்ய முடியவில்லை.

“போச்சு. எல்லாமே போச்சு. அவ்வளவுதான். நான் காலி. இனி இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதான். செத்தேன். அம்மா.. அப்பா” என்று அழுதுகொண்டே புலம்பியபடி, எதற்கும் ஒரு முறை மேனுவலாக இயக்கிப் பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்ற. ரோட்டோவை இயக்கினாள். பெரும் சத்தத்துடன் ஆரம்பமானது. அளவிலா மகிழ்ச்சி ராகவிக்கு. அந்த மகிழ்ச்சி நிலைப்பதற்குள், தூரத்தில் கனமான காலடிச்சத்தம். கண்டிப்பாக பனிமனிதனேதான். இதென்னடா சோதனை என்று அழுதபடியே, அவசரவசரமாக தன் ரோட்டரில் ஏறி, கைக்கு வந்த ஆண்டு பட்டனை அமுக்கினாள்.

ப்ராம்ம்ம்ம்ம்ம்..ஃப்ளாஷ்..zoom

எங்கேயோ இருந்தாள். என்ன வருடம் இது? என்று நாலாபக்கமும் பார்க்க, பார்த்த இடம்போலத் தெரிந்தது.

அவளது கார்ஷெட்!!!!!!!!. வாவ்!!! வந்துட்டேனா? இது என்ன வருஷம்? கார் ரேடியோவை ஆன் செய்தாள்.

“நெருப்புடா நெருங்குடா பாப்போம், நெருங்கினா பொசுக்குற கூட்டம்”

என்ன பாட்டு இது? புரியவில்லை. அவசரம் அவசரமாக வெளியே ஓடினாள். அவள் பங்களா தெரிய, அதை நோக்கி ஓடியவளைக் கடந்து ஒரு பெண்ணுருவம் சிரித்துக்கொண்டே கடக்க,

“ஏ, யாருடீ நீ?” ராகவி கேட்டதற்கு

“நீ” என்று பதிலளித்து மறைந்தாள் அவள்

“அம்மா.. அம்மா.. அம்மா” அலறினாள். நடந்த அனைத்தையும் சொன்னால் அம்மா பிதுக்கிவிடுவாள் என்ற பயத்துடன், மெதுவாக அம்மாவிடம் சென்று “அம்மா நெருப்புடான்னு வர பாட்டு என்ன படம்மா”

“ஏன்டி? நக்கலா? போயி படு. சித்கூட நாளைக்கு எங்கேஜ்மென்ட். இன்னைக்கு இப்படி பப்பரப்பான்னு வந்து நிக்குது பாரு. பக்கி. போடி.”

“ஏது சித் கூட எங்கேஜ்மென்ட்டா” என்னடா குழப்பம் இது. அப்போ நான் இங்கே இல்லாதப்ப, நான் இங்கே இருந்துருக்கேன். அதாவது எனக்கு டூப் ஒருத்தி இருந்துருக்கா? என்ன கேம் இது? என்ன நடக்குது? காலப்பயணம் இப்படியெல்லாமா நடக்கும்.?”

கூகுளிட்டவளுக்கு அது 2016 என்று விளங்கியது. ஆக 2010லிருந்து 2016 வரை அவள் அங்கு இல்லை. காலம் காலமாக சுற்றியிருக்கிறாள். இது என்ன மாதிரி டிசைன்? ஆயிரம் கேள்விகளூடே தன் செல்ல மீனைப் பார்த்தாள். அது இரண்டு மடங்கு வளர்ந்து நின்றிருந்தது.

“இனி காலமெல்லாம் தாண்ட வேண்டாம்பா. என் காலமே எனக்குப்போதும்டா சாமி!!” மைண்டுக்குள் மணியடித்தது ராகவிக்கு. எனினும், இதைப்பற்றி எப்படியாவது உலகுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று யோசித்தபடி படுக்கையறைக்குச் சென்றாள்.

——————

Somewhere in the Galaxy!! கேலக்சியில் ..

“அப்பா, இந்த ப்ராஜக்ட் இன்டரஸ்டிங்கா போகுதுப்பா.”

“என்னடா ப்ராஜக்டு”

“இல்லப்பா, உலகத்துல இனத்தோன்றலையும், அதோட அழிவையும், இந்தமுறை செங்கோண முக்கோணம் (right angled triangle) மாதிரி வடிவமைச்சுப்பாத்தேன்ப்பா”
அதாவது கர்ணம் ( hypotenuse) மாதிரி வடிவமைக்கப்பட்ட காலவரையத்துக்கு ஏத்தமாதிரி அமைக்கப்பட்ட கண்டத்தட்டுக்கள்தான் இப்போ நடந்துட்டு இருக்கு .மீண்டும் மனித இனம் பக்குவப்பட ஆரம்பிச்சுட்டாங்க. பாதிலையே அழிச்சுடுவேன்னு நினைக்கறேன்.

இதோட அப்போகலிப்சுக்கு அப்புறம் , மீண்டும் வரப்போற உலகத்தை ஏற்கனவே ப்ரோக்ராம் செய்துட்டதால, அந்த உலகத்தோட கால அளவைச் சுருக்கிட்டேன். போர் அடிச்சா அதையும் சீக்கிரமே அழிச்சுடுவேன்.!!இந்த முறை முடிஞ்சதும் மீண்டும் முக்கோணமா வேண்டாம்னு நினைக்கறேன்ப்பா..”

“அதுக்கு? வேற என்ன பண்ணப்போற?”

அடுத்து சர்க்குலர் பேட்டர்ன் ட்ரை பண்ணனும்பா.

“அதென்னடா சர்க்குலர் பேட்டர்ன்”.

” அதாவதுப்பா, கொஞ்சகாலம் முன்னே டார்வினை வச்சு முயற்சி பண்ணேனே!! குரங்குல இருந்து மனுஷன் வந்தான்னு அவரை வச்சு நம்பவைச்சோம்லப்பா, அதுபோல ஓநாய் வழில இருந்து மனிதன் வந்தான்னு இந்தப்பொண்ணுக்குக் காமிச்சு கொடுத்திருக்கேன்ல. இதை வச்சு ஒரு தீசிஸ் பண்ணும் அது டார்வினை தப்புன்னு நிருபிக்கும்”

“ஆனா, டார்வின் சொன்னது உண்மைதானேடா?”

அது நமக்கு மட்டும்தானேப்பா தெரியும்? இந்தப்பொண்ணு என்னோட பேட்டர்ன்களை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கும். அது பெரிய அளவு சக்சஸ் ஆகும். டார்வினோட தியரி தோற்கும். அதனால இந்த இனம் தன்னோட ஆதியை (origin) மறுபடியும் தேடிப்போகும்.

” ஓ.. ஆதாம் ஏவாள்னு நடுவுல செய்த மாதிரி புதுசா ஒரு குழப்பத்தை செய்து விட்டுருக்க!! நடத்து நடத்து”

சிரித்தபடி, “ஆமாப்பா!! Raghavi’s theory of evolution”ஐ உலகம் நம்ப ஆரம்பிக்கும். அந்தப்பொண்ணோட புகழ்காலத்துக்குப் பிறகு, அகைன் டார்வின பிறக்க வைக்கப்போறேன்பா, அவன் மறுபடியும் அந்த டார்வின் தியரிய ஃபார்ம் பண்ணுவான். இதையே மாத்தி மாத்தி சில மில்லியன் வருஷத்த ஓட்டுவோம்”.

” பாப்போம்டா, இதுவாவது போரடிக்காம ஒர்க்அவுட் ஆகுதான்னு. உலகவாசிகளுக்கு ஒவ்வொரு முறையும், சமமாக பிரிச்சுக் கொடுத்தாச்சு, உயர்வு தாழ்வு வச்சுப்பாத்தாச்சு, பஞ்சம் , பசி, பட்டினி, வியாதி, பணம், பொழுதுபோக்கு, புணர்ச்சி ,அரசியல், விஞ்ஞானம், மெய்ஞானம், அறிவியல் இப்படி ஏகபட்டத அறிமுகப்படுத்தி நமக்கு போரடிக்குதுடா. கொஞ்சகாலம் இப்படியே போகட்டும். எதுவும் சரிப்படலைன்னா, சனி கிரகத்துல பண்ணினாப்ல , இந்த எர்த்லையும் மனுஷனே இல்லாம மாத்திடுவோம்

“ஆமாப்பா”

நாம இயக்கறதுதானே நம்ம கேலக்சியே.. ஹாஹாஹாஹா.. அண்டம் அதிரச் சிரித்தான் அவன்!! அவர்கள் பேசி முடிக்கும்போது (பத்து நிமிடங்கள் பேசியிருப்பார்கள் மொத்தமே, நமது கால அளவில்) பூமியில்

“Raghavi’s rediscovered evolution theory( edition year: 2065) “பற்றி, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துக்கொண்டிருந்தார், அந்த அரசுப் பள்ளி ஆசிரியர்..!!

ப்ராம்ம்ம்ம்ம்ம்..ஃப்ளாஷ்..zoom..!!!!!!!!!!!!!

– – – – – – – – – – – – – – – –

(உரையாடலின் விளக்கம் புரியாதவர்கள் பின்வரும் படத்தைக் காண்க!)

*கேலக்சியில் 10 நிமிடங்கள் பேசுவதற்குள் இங்கே 50 வருடங்கள் கழிகிறது (approx).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *