காலப்பேழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 1,884 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னர், இந்திரா காந்தி காலத்தில் புதைக்கப்பட்ட காலப்பேழை கோப்புகளைப் பற்றி இன்றைக்கு 2012 இல் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் வழியாக யாரோ ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் என்ற செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, பக்கத்து வீட்டு இத்தாலியத் தாத்தா வழமைப் போல மாலை நேர நடைக்குக் கூப்பிட்டார். ரோம் நகரத்து ஒதுக்குப் புறமான குடியிருப்பில் இருந்து வயல் வரப்புகளைக் கடந்து, சிறிய மலைத் தொடர் வரை நடந்துப் போவோம். ஒவ்வொரு மாலையும் உடன் நடக்கையில் அவர் சொல்வது, “இன்றைக்காவது செய்தி வர வேண்டும்” .. சிறிய குன்றின் உச்சிக்குச் சென்று, மேற்கு திசையை நோக்கி கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பார்ப்போடு எதோ முணுமுணுப்பார். சில நிமிடங்கள் கழித்து இன்றைக்கும் செய்தி வரவில்லை என்று வருத்தம் தோய்ந்த முகத்தோடு வீடு திரும்புவார்.

அவருக்குக் கிடைக்கப்போகும் செய்தி எனக்கும் முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்கள், உனக்கு செய்தி ஒன்று வைத்திருக்கின்றேன் எனச் சொல்லுவது முதன் முறையல்ல. சிறு வயதில் சொந்த ஊருக்குப் போகும்பொழுது எல்லாம் அடுத்தத் தெரு சூனியக்கார கிழவி இதுபோல சொல்லித்தான் காட்டுப்பகுதிக்கு கூட்டிக்கொண்டுப் போகும். ஒரு நாள் அம்மா அப்பா அந்தக் கிழவியை ஏசிய பிறகு என்னைக் கூப்பிடுவதில்லை, ஒரு நாள் அந்தக் கிழவி செத்துப் போன உடன், அது என்னிடம் தரச் சொல்லியதாக அதன் உறவினர்கள் கொடுத்தப் பெட்டியை, ஏதாவது மந்திரம் சூனியம் இருக்குமென என் பெற்றோர்கள் அதனை எரித்துவிட்டனர்.

மொழிகளுக்கான எழுத்து வடிவங்கள் பற்றியப் படிப்பை பின்லாந்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது, இதேப்போல ஒரு தாத்தா நட்புப் பாராட்டி உனக்கு ஒரு நாள் நல்ல செய்தி சொல்லுவேன் என்பார், நல்ல செய்தி சொல்லும் முன்னர், ஒரு நாள் சாலை விபத்தில் இறந்துப் போய்விட்டார்.

இன்றைக்கு இந்த காலப்பேழைப் பற்றிய செய்தி ஏதோ ஓர் ஈர்ப்பைக் கொடுத்ததால் “நான் வரவில்லை, நீங்கள் மட்டும் சென்று நீங்கள் விரும்பிய செய்தியுடன் திரும்பி வாருங்கள்” என்று அவரை அனுப்பி வைத்தேன்.

எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்கும் நோக்கில் சமகால நிகழ்வுகளை பாழடையாத கோப்புகளாக பூமியில் புதைத்துவைத்து விடுவது காலப்பேழைகளில் ஒரு வகை. பழைய சோவியத் ரஷியாவில், ரஷியாவின் அருமைப் பெருமைகள் அடங்கிய விபரங்களை பல இடங்களில் புதைத்து வைத்திருக்கின்றனராம்.

நாசா மையம், மின்னனு கோப்புகளாக தற்கால நிகழ்வுகளை ஆளில்லா விண்கலங்களில் வைத்து அண்டவெளிக்கு அவ்வப்பொழுது அனுப்புவதும் உண்டு. அவற்றில் சில விண்கலங்கள் பல நூறு ஆண்டுகள் கழித்து பூமிக்குத் திரும்பும் வகையில் கூட அனுப்பப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் ஏதேனும் அகழ்வாராய்ச்சியில் அவை வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும் பொழுது பூசி மெழுகப்பட்ட வரலாறு கிடைத்தாலும், ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு தகவல்களைக் கடத்துவதுதான் காலப்பேழைகளின் முக்கிய நோக்கம்.

என்னுடையகாலப்பேழைகள் எல்லாம் நான் படித்த பள்ளிகளின் கல்லூரிகளின் மரப்பெஞ்சுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.

பாரிஸ் ஈஃபில் கோபுரத்தில் கூட என் பெயரையும் அம்முவின் பெயரையும் சேர்த்து எழுதி வைத்திருக்கின்றேன்.

இப்பொழுது கூட என்னைப் பற்றி அருமைப் பெருமைகளையோ, என் சார்பு அரசியலையோ, நிராகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ, ஏதாவது கூகிள் சம்பந்தப்பட்ட பொதுத் தளங்களில் எழுதி வைத்துவிட்டு பேசாமல் அமைதியாக இருப்பதும் உண்டு. சுழிய உலகில் தகவல்களைப் போட்டு வைத்துக் கொள்வது கூட ஒரு வகையான காலப்பேழைதான்.

வெவ்வேறு நாகரீகங்களின் எழுத்துரு வடிவங்கள் அதன் மாற்றங்கள், பின்புல அரசியல்கள் ஆகியனவற்றைப் பற்றிய தலையணை அளவுப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்ததில் அடுத்த இரண்டு நாட்கள் கரைந்துப் போயின. நடைப்பயணம் போன தாத்தா தடுமாறி விழுந்ததில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவருடைய அழகான பேத்தி சொல்ல, மருத்துவமனைக்குப் போய் அவரைப் பார்த்தேன்.

“இனிமேல் செய்தி சேகரிக்க மலைக்கு எல்லாம் போகவேண்டியதில்லை, வர வேண்டிய செய்தி வந்து விட்டது” என்றார்.

எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு வேளை நான் இவருடன் நடைக்கு சென்றிருந்தால், இவர் காயம்பட்டு இருக்க மாட்டாரே என.

“நாளைக்கு நாம் வழக்கமாகப் போகும் குன்றின் உச்சிக்குப் போ, நாம் அமரும் இடத்தின் கீழ் ஒரு பெட்டி இருக்கும், அதில் உனக்கான செய்தி இருக்கின்றது ” எனத் தொடர்ந்தார்.

அவரை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு மறுநாள் உச்சிக்கு சென்றேன். அங்கிருந்த பசுமையான செடிகள் எல்லாம் கருகி இருந்தன. சிரமப்பட்டு நாங்கள் உட்காரும் இடத்தைக் கண்டுபிடித்தேன். அந்த கல் இருக்கைக்குப் பக்கத்தில் பழையகாலத்து வடிவமைப்புடன் ஒரு பெட்டி இருந்தது. பெட்டியின் மேல் வலது கை வரையப்பட்டிருந்தது. எனது வலதுகையை அதன் மேல் வைக்க, பெட்டித் திறந்தது.

உள்ளே சில அடுக்குகளாக காகிதங்கள் போல ஆனால் எடையற்ற ஒளி ஊடுவக்கூடிய ஏதோ ஒன்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலாக இருந்த ஒன்றைத் தொட, அந்த காகிதம் போன்ற ஒன்று, பளிச்சென முகத்தில் ஓர் ஒளிக்கற்றையை அடித்து விட்டு, முகத்துக்கு நேர படிப்பதற்கு ஏதுவாக வந்து நின்றது.

அட, அதில் சிந்து சமவெளி நாகரீகக் கால எழுத்துருக்கள் இருந்தன. ஒரு நிமிடம் பொறுங்கள், என்னால் அதை வாசிக்க முடிகிறது. இருங்கள் இருங்கள்… அவை கடுமையான செய்யுள் தமிழில் இருக்கின்றன. மூளை வேகமாக ஆதித் தமிழில் இருந்து அன்றாடத் தமிழுக்கு மொழிப்பெயர்த்தது.

ஆயிரக்கணக்கான கதிரவ வருடங்கள் கழித்துப் படிக்கப்போகும் எங்கள் நண்பர்களுக்கு, நாங்கள் எதிர்காலத்துக்கு அனுப்பி இருக்கும் தற்கால விபரங்கள் அடங்கிய பெட்டிகளின் மூன்றாவது பெட்டி இது.

தொடர்ந்து நான் வாசித்துக் கொண்டிருக்க, வானத்தில் இருந்து, சிறிய பேருந்தைப் போன்ற ஒரு வாகனம் நான் இருந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் வந்து விழுந்தது.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *