கருப்புத் தொப்பிக்காரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 2,457 
 

கைய் நிறைய சம்பளம், போனஸ், ஒரு மாதம் லீவு என்று அள்ளிக் கொடுத்த வேலையை ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் விட்டு விட்டேன்.

என்ன வேலை அது? கால யந்திரம் மூலம் பல வருடங்கள் பின் சென்று, இந்த உலகிற்கு தேவையில்லாத, உபயோகப் படாத மக்களை அகற்றுவது. அதாவது கொல்வது. யார் இந்த மக்கள்? நீங்கள் தினமும் சந்திக்கும், ஆனால் கவனம் செலுத்தாத, முகம் இல்லாத சராசரி பிரஜைகள். பேப்பர் போடுகிறவர், அலுவலகத்தை கூட்டுவர், தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவர் என்று பலர். சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் அற்பமானது, அது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் வரலாற்றின் போக்கை மாற்றப் போவதில்லை. அவர்களால் புற்றுநோய் மருந்து கண்டுபிடிக்கவோ, பருவநிலை நெருக்கடியை தீர்க்கவோ, பறக்கும் கார்களை வடிவமைக்கவோ முடியாது. அவர்கள் இருப்பதும் ஒன்று தான். இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்.

எனக்கு ஒரு கூட்டாளி இருந்தான். ஒவ்வொரு நாளும், நங்கள் அகற்ற வேண்டிய நபர்களின் பட்டியலைக் கணினியிடமிருந்து பெறுவோம். பொதுவாக, இந்த நபர்கள் அறுபது அல்லது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்பவர்கள். நானும் என் கூட்டாளியும் அலுவலகம் கொடுத்த கால யந்திரத்தில் பயணித்து இறந்த காலத்திற்குச் செல்வோம். அலுவலகம் கொடுத்திருந்த சீருடை அணிந்திருப்போம் – கருப்புத் தொப்பி, வெள்ளை சட்டை, வெள்ளை பாண்ட். பாதிக்கப்பட்டவர்கள் தனியாக இருக்கும்போது அவர்களை அணுகுவோம். சட்டப்படி எங்கள் வருகையைப் பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது பொறுப்பு. CA45 துப்பாக்கி (அலுவலகம் கொடுத்தது) மூலம் அவர்கள் கதையை முடிப்பது என் கூட்டாளியின் பொறுப்பு.

அன்று நாங்கள் அகற்ற வேண்டியது தென்னிந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கும் பதின்மூன்று வயது சிறுவனை. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு காபி கடையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தான். நான் என்ன சொல்கிறேன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் என் கூட்டாளி கைத்துப்பாக்கியை உருவுவதைப் பார்த்ததும், அவன் ஓட்டம் பிடித்தான். நாங்கள் இருவரும் அவனைத் துரத்திச் சென்று பிடிக்க முப்பது நிமிடம் ஆனது. நான் சிறுவனைப் பிடித்துக் கொள்ள, என் கூட்டாளி துப்பாக்கி விசையை

அமுக்க… அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்த போது, அவனுடைய பயம் கலந்த கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன.

அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தக் கண்கள் என்னை ஆட்டிப்படைத்தன. நான்காவது நாள் நான் வேலையை விட்டு விட்டேன். உள்ளூர் மளிகைக் கடையில் அலமாரியில் பொருட்கள் அடுக்கி வைக்கும் வேலையை எடுத்துக் கொண்டேன். ஊதியம் கணிசமாக குறைவாக இருந்தது, ஆனால் இரவில் நிம்மதியாக தூங்க முடிந்தது.

. . .

ஒரு நாள் காலை 7 மணி. மளிகைக் கடை வேலைக்குச் செல்ல நான் தயாராகிக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் மணி அடித்தது. இந்த அதிகாலையில் யார் என்னைப் பார்க்க வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.

வாசலில் இருவர். நேர்த்தியான வெள்ளை சட்டை, வெள்ளை பாண்ட் அணிந்திருந்தார்கள். தலையில் கருப்புத் தொப்பி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *