இன்று கரெண்டு கொடுக்க என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களாம். தவறு. தவறு. தூய தமிழில் மட்டுமே நான் பேசவேண்டும். இன்று மின்சார அதிர்ச்சி தர என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார்களாம். இன்று எனக்கான பொறுப்பில் இருக்கும் அந்தக் குட்டிப்பெண தாதி இல்லை இல்லை செவிலி வரவில்லையாம். என் கனவின் திரைகளை கிழித்து எட்டிப்பார்த்திருப்பாளோ? எண்ணங்களின் புதைபடிவுகள் அங்கே பாளம் பாளமாக உறைந்திருப்பதைக் கண்டு பயந்து போயிருப்பாளோ? தாள முடியாத வலியின் கீறல் என் உடலின் வழி என் இருப்பின் வழி கோணல்மாணலான கோடாக ஓடுவதைக் கண்டு துடித்துப் போயிருப்பாளோ? அவளின் கள்ளமற்ற விழிப்படலங்களில் நான் சொல்வதைக் கேட்டு கண்ணீர் அடர்ந்ததே அப்போது என் நரம்புகள் கூழ்கூழாக நொறுங்கிய சப்தம் அவலின் சின்னஞ்சிறிய இருதயத்தைத் தகர்த்திருக்குமோ? இளம் செவிலி எண் 1731 (இ.எ.செ1731) என்றழைக்கப்படும் அருட்பெரும்ஜோதியாகிய அந்தப் பெண் நான் ஒரு தத்துவப் பேராசிரியர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டாளோ?
எல்லாம் அந்த ஒரு துண்டு வானம் செய்த வேலை. என் அறையின் உச்சியில் இருக்கும் அந்த சிறிய ஜன்னலின் வழி தெரியும் ஒரு துண்டு நீல வானம் செய்த வேலை. நேற்றைக்கு முந்திய நாள் மாலை ரோஜா நிற மேகம் ஒன்று துள்ளித் துள்ளி ஓடுவதைப் பார்த்து பரவசம் அடைந்த நான் நேற்று அங்கே தெரிந்த பெண் பூவரச மரத்தின் இளம் பச்சைத் துளிர் இலைகளைக் கண்டு நெக்குருகி அ.பெ.ஜோ 1731-இடம் என் நிலை மறந்து எல்லாவற்றையும் உளறிக்கொட்டிவிட்டேன். உண்மையைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை ஐயா வேறெதுவும் சொல்லவில்லை. சத்தியமாக.
அந்தத் துளிர் இலைகளைக் கண்டவுடன் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு 1994 அல்லது 1996இல் திருநெல்வேலியில் காணாமல் போன சிட்டுக்குருவிகள் என் மனவெளியில் உயிர்பெற்றுத் தங்கள் சிறிய அலகுகளைத் திறந்து அறியா இன்பப்பாடலை கிறீச்சிட்டு இசைப்பதாகச் சொன்னேன். என்னுடைய வலியின் கீறலின் வழி தங்கள் அலகுகளை வெளியுலகுக்குக் காட்டிய அவை மர இலைகளுக்குத் தாவத் துடிப்பதாக அவளிடம் சொன்னேன். கைகளில் முகத்தைப் புதைத்து விரல்களூடே கள்ள இடைவெளி விட்டு அதன் வழி அவள் முகத்தைப் பார்த்தவாறே, அந்த அலகுகள் எவ்வளவுதான் கோபமாகத் தங்களின் சிவந்த உட்புறங்களைக் காட்டினாலும் அவைகளுக்கும் மர இலைகளுக்கும் இடையிலுள்ள தூரம் எப்படி குறைவு படாமல் இருக்கிறதோ அது போலவே, எனக்கும் அவளுக்கும் இடையிலுள்ள தூரம் கனத்துக்கிடப்பதாகச் சொன்னேன். அவளை ஜோதி என்றழைக்கலாமா என்று கேட்டேன். எண்களால் அன்றி வார்த்தைகளாலும் ஆட்களைப் பெயரிடலாம் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை 1997இல் பிறந்திருப்பாளோ? வயது பத்தொன்பதுதான் இருக்குமோ?
1997இல்தான் பிறப்பு பதிவு எண்ணையேதான் பெயராகவும், வாக்காளர் எண்ணாகவும், சமூக பாதுகாப்பு எண்ணாகவும் கருத வேண்டுமென்று ஒருங்கிணைந்த குடியரசுகளின் சட்டம் சொன்னது. ஐநூறுக்கும் மேற்பட்ட பெயர்களுடனும் அடையாளங்களுடனும் வாழ்ந்த என்னை ஒரே இலக்கத்தால் அழைக்க முடிந்தபோதுதான் அமுக்கிப் பிடித்தார்கள் அபாயகரமான சிந்தனையாளன் என்று. இருபது வருட சிறைவாசத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மின்சார அதிர்ச்சி, மனநல மருந்துகள், நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் அபாயகரமான நோயாளி என்று அழைக்குமளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார்கள். மடையர்கள்! முட்டாள் இலக்கங்கள்! அந்த ஒரு துண்டு வானம் என் கண்களின் வீச்சுக்குள் இருக்கும் வரை நான் நானாகத்தான் இருப்பேனென்பது அவர்கள் அறியாதது.
இ.செ.எண் 1731 என் கைவிரல்களைப் பற்றியிழுத்து, என் மோவாயைத் தன் கைகளில் தாங்கி, என் தாடியை நீவிவிட்டாள். இரக்கமற்ற அந்த கண்களீல் கனிவு என்பது நான் என்றுமே அறியாத ஒன்று. காதலா? சேச்சே தப்புப்பண்ணாதே அதியமான் தப்புப்பண்ணாதே. கடந்த நூற்றாண்டிலேயே காதல் என்ற கருத்தும், செயலும், வார்த்தையும் வழக்கொழிந்துவிட்டன. திருமண பங்குச் சந்தையில் இ.செ.எண் 1731 தன்னை என்ன விலைக்கு, எத்தனை காலத்திற்குத் தருகிறாள் என்று விசாரிக்கவேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக என்னுடைய நன்னடத்தையின் காரணமாக இந்தத் தனியார் சிறைச்சாலையின் பங்குகள் சந்தையில் நல்ல விலைக்கு விற்பதாகக் கேள்வி. காவலதிகாரி தனக்கு ஊக்கத்தொகை கிடைத்தபோது சொன்னான். என்ன நன்னடத்தையோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தனியார் சிறைச்சாலைக்கும் நான் தத்துவம் போதித்த கல்லூரிக்குமிடையில் எந்த வித்தியாசமுமில்லை. கல்லூரியில் சிந்தித்தால் குற்றவாளி என்கிறார்கள் சிறைச்சாலையில் சிந்தித்தால் நன்னடத்தை என்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் என்னால்தானே இவர்களுடைய பங்குகளுக்கு விலை கூடியிருக்கிறது? எனவே அதில் ஒரு சிறிய விகிதாச்சாரத்தை எனக்குத் தரவேண்டும் என்று உயர் காவலதிகாரியிடம் வாதிட்டுப்பார்க்கலாம். கொஞ்சம் செலவாணிப்புள்ளிகள் என் கடனட்டையில் ஏறினாலும் போதும் உடனடியாக இ.செ.எண் 1731ஐ ஒரு சில நாட்களுக்காவது மணப்பெண்ணாய் வாங்கிவிடுவேன். செலவாணிப்புள்ளிகள் தர மாட்டேன் என்று சொல்ல முயற்சித்தால் கூட போதும் திரும்ப புதிதாய் சிந்திக்கப்போகிறேன் என்று சொன்னால் பயந்துவிடமாட்டார்களா, என்ன? என் சிந்தனையின் ஒரு இழை கூட இவர்களுடைய சிறைச்சாலைகளை தவிடுபொடியாக்கிவிடும் என்பது அவர்கள் அறியாததா?
“உங்களைப் பார்த்தால் மிகவும் மென்மையானவராகவும் நல்லவராகவும் இருக்கிறீர்கள் அப்படி இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும்படி அப்படி என்னதான் அபாயகரமாக சிந்தித்தீர்கள்?” அவளின் கள்ளமற்ற மாசு மருவற்ற முகம், படபடத்த இமைகள், வியப்பின் விகசிப்பில் ஒளி ஏறியிருந்த கண்கள், இளமைச் செழிப்பில் விம்மியிருந்த மார்பகங்கள் அவளின் கேள்வி என்னிடத்தில் இனம் புரியாத நெகிழ்ச்சியை உண்டாக்கியது. மென்மையாகத் தோளில் கை போட்டு நெகிழ்ச்சியின் இதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசையாக இருந்தது. மெல்லிய குரலில் “உனக்கு எப்படிச் சொன்னால் புரியும்?” என்றேன். அவள் அலட்சியமாக “ஓரு வாக்கியத்தில் சொல்லுங்களேன்” என்றாள்.
“இவ்வுலகும் உயிரும் அழகியல் நிகழ்வாக அன்றி வேறு எதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை”
“இவ்வளவுதானா?”
“இவ்வளவேதான்” சபாஷ்டா அதியமான்.
“இதிலென்ன அபாயம் இருக்கிறது?”
“அதை நீ உன் அமைப்பிடம்தான் கேடக் வேண்டும்”
அமைப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அவள் ஈண்டும் இ.செ.எண்1731 ஆனாள். தப்பு. உரையாடலை சரியானபடி கொண்டு செல்வதில் எனக்குப் பரிச்சயம் விட்டுப் போயிற்று. என்ன செய்ய? அவள் போய்விட்டாள்.
அரசாங்க கணிணிகளிடம் 1731 கேட்பாளோ? ரகசிய கோப்புகளை அவளுக்குக் காட்டுவார்களா? அந்தக் கோப்புகள் ‘தத்துவமும் அரசியல் கைதிகளும்’ என்று தலைப்பிடப்பட்டிருந்ததாக நினைவு. இளம் செவிலியை பக்கத்திலேயே விட மாட்டார்கள். இவள் நான் சொன்ன வாக்கியத்தை யாரிடமாவது உளறித் தொலைகாமல் இருக்கவேண்டும். சாதாரண குற்றவாளிகளை மிருகத்தனமாக அடிப்பததைப் பார்த்திருக்கிறேன். என்னை மின் அதிர்ச்சி தவிர உடல் ரீதியாக அடித்து இதுவரை துன்புறுத்தவில்லை. சாக்கைக் காலில் கட்டி முக்கிய எலும்பு நொறுங்கும்படி கடப்பாரையால் ‘ணங்’ என்று ஒரு போடு போடுவார்களோ. போன நூற்றாண்டு தமிழ்ப்படங்களில் இந்த மாதிரி காட்சிகள் சகஜமாய் வந்து போகும். இப்போதெல்லாம் லேசர் துப்பாக்கிகளும் நிர்வாணகாட்சிகளும்தானாம். எனக்கு பேனா, காகிதம், இசை, புத்தகம், சினிமா எதுவுமே கிடையாது, என் கிருத்துருவமான மூளை சிந்திப்பதை நிறுத்தினால்தான் அதெல்லாம் தருவார்களாம். கடப்பாரையை நினைத்து முதுகுத்தண்டு சில்லிடுகிறது. நகங்களைக் கடிக்க ஆரம்பிக்கிறேன், நகக்கண் சதையில் ரத்தம் வரும் வரையில் கடித்துவிடுவேன். ரில்கேதானே எழுதினான் ஆமாம் ரில்கேதான் ‘நான் கதறி அழுதால் தேவதைகளில் யார் கேட்பார்கள்?’ நான் நகம் கடிப்பதையும் கண் கலங்குவதையும் பார்த்து யாரும் சிந்திக்கிறேன் என்று நினைத்துவிடுவார்களோ? யாரது என் சிந்தனையை வேவு பார்ப்பது? யாரது என் நிழல் சிடுக்குகளில் என் மூளையைத் தேடுவது? யாரங்கே?
சிலுவைப்பாதையில் ஏசு கிறிஸ்துவை இழுத்துச் சென்றபோது, வலியும் துக்கமும் தாள முடியாமல், ஒரு பலகீன தருணத்தில் அந்த மகான் “தேவனே, தேவனே, தந்தையே தந்தையே என்னை ஏன் கைவிட்டீர் ?” என்று கதறினாரே, அந்தக் கணம் ஒவ்வொரு மனித இருதயத்துக்குமான கட்டாய கல்வி. தேவகுமாரனுக்கே இந்த கதியென்றால் என்னைபோனற சாதாரண மனிதர்களின் கதி என்ன? இவ்வளவு வலியும் துக்கமும் பயங்கரமும் நிறைந்த இவ்வுலகு இருப்பதற்கான நியாயம் என்ன இருக்கிறது? ஏன் இவ்வுலகு இருக்கிறது என்ர கேள்விக்கு தத்துவத்தில் பதில் இல்லை. இளம் செவிலுக்குச் சொன்ன அதே வாக்கியத்தை இப்போது சொல்கிறேன் இவ்வளவு அழுக்குகளோடும் அசிங்கங்களோடும் வலிகளோடும் துக்கங்களோடும் இவ்வுலகு அழகியல் நிகழ்வாகவே ஜீவித நியாயம் பெறுகிறது. We, human beings need to create the sublime for the conquest of this horrible world. மனிதன் கலைஞனாகவே உயர்மனிதனாகிறான். ஐயோ ஐயோ இடையில் வேற்று மொழி வந்துவிட்டதே நான் என்ன செய்வேன்! ஒருங்கிணைந்த குடியரசுகளின் தற்போதைய சட்டத்தின்படி தாய்மொழி தவிர்த்த அந்நிய மொழியில் சிந்திப்பது பேசுவது எல்லாமே குற்றமாயிற்றே! தேசபக்தர்கள் யாரேனும் வேவு பார்த்திருப்பார்களோ?
இந்த மாதிரியான நிலைமைகளெல்லாம் ஏற்படும் என்று தெரிந்துதான் 1996 ஆம் ஆண்டே இந்தியப்பொருளாதாரம் உலகமயமாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தேன். என்னுடைய அப்போதைய விமர்சகர்கள் உலகமயமாக்கல் பணக்காரர்களை மேலும் அதிக பணக்காரர்களாகவும் ஏழைகளை இன்னும் அதிக ஏழைகளாகவும் உருவாக்கும் என்றும் அதனால் வர்க்கப்போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடிக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்றும் வாதிட்டார்கள். என்னுடைய எதிர்ப்போ முழுமையாக அழகியல் சிந்தனையிலிருந்து உருவானது. எல்லாமே- வாழ்வு முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை வாழுமிடம் என்பன மட்டுமில்லாமல் நமது உணர்ச்சிகள், அழகுகள், ஏன் புணர்ச்சி உட்பட அனைத்துமே தரப்படுத்துதலுக்கு ஒற்றைத் தரப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆகையால் பலவகை வாழ்க்கை முறைகள், உணர்ச்சிகள், அழகுகள் அழிக்கப்படுகின்றன. இது உலகின் ஜீவித நியாயத்திற்கே எதிரானதாகும் என்று வாதிட்டேன். ஜோஸப் கார்னீலியஸ் குமரப்பா என்ற பெரை நாம் மறந்துவிட்டோம் என்று கூச்சலிட்டேன். என்ன செய்தார்கள்? மேற்கத்திய தரப்படுத்துதல் ஆதிக்க வாழ்வு முறை ஆனதென்றால் தூய தமிழை பயன்படுத்துதல் மொழித்தரப்படுத்துதல் ஆயிற்று. அவர்கள் தமிழ் வாழ்வு முறையினை இப்படிக்காப்பாற்றி விட்டார்களாம். நான் தரப்படுத்துதலுக்கான எல்லா முயற்சிகளையும் எதிர்த்தேன். அதிலொரு உத்திதான் கட்டுரை போல கதை எழுதுவதும் கதை போல தத்துவக் கட்டுரை எழுதுவதும். ராட்சசத்தனமான இயக்கத்தோடு சந்தைபொருளாதாரம் நகர ஆரம்பித்தபோது என்னுடையது மாதிரியான சிறு எதிர்ப்புகள் பலகீனமானவையே. ஆனால் அவற்றைக்கூட அடக்குமுறை எந்திரங்கள் விட்டுவைக்கத் தயாராக இல்லை. தரப்படுத்தப்பட்ட ஒற்றை சிந்தனை இல்லாதவன் என்பதினாலேயே தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டேன். நானோ சளைக்கவில்லை. இதர எதிர்ப்புகளில் கவனம் செலுத்தலானேன். உழைப்புக்கேற்ற கூலி என்பது முதலில் நமது சினிமா நடிகர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவேண்டுமென்று துண்டுப்பிரசுரம் எழுதி விநியோகித்தேன். ஒற்றை விரலால் சொடக்கு போடுவதையும் துண்டைத்தூக்கி தோளில் போடுவதையும் நடிப்பு என்று அழைத்து அதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை (போன நூற்றாண்டின் காகித செலவாணிப்புள்ளி) அள்ளிக்கொடுப்பது அயோக்கியத்தனம் என்று கூப்பாடு போட்டேன். இதையெல்லாம் விட பெரிய கொடுமை இந்த நடிகர்கள் நம் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது என்று எடுத்துச் சொன்னேன். எனது பலகீனமான கீச்சுக்குரல் யாரையும் எட்டவில்லை. என்ன நடந்தது? பணக்காரர்கள் அதி பணக்காரர்கள் ஆனார்கள் ஏழைகள் அதி ஏழைகள் ஆனார்கள். வர்க்கப்பிளவு அதிகரித்து புரட்சி தோன்றுவதற்கு பதிலாக குற்றங்கள் அதிகரித்தன. என்ன மாதிரியான குற்றங்கள்? ஏழைகளின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பிறப்பு, காதுகுத்து, சடங்கு, திருமணம், சீமந்தம், வளைகாப்பு, சாவு ஆகியவற்றில் அடங்கியுள்ள பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்துமே குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன என்றாலும் சிறைகளின் லாபங்களை அதிகரிக்க மேலும் மேலும் சிறைவாசிகள் வேண்டும் என்று அரசாங்கம் காவல்துறையை வற்புறுத்தியது. சிறைவாசிகளோ உணவு, உடை, உறைவிடம் மட்டுமே தரப்பட்ட விவசாய் இன்னபிற கூலிகளாக மாற்றப்பட்டனர். சிறைச்சாலை ஒரு வியாபாரமாக அதன் பங்குகள் சந்தையில் கூவிக்கூவி விற்கப்பட்டன. போன நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் செய்த வேலையை இப்போது சிறைச்சாலைகள் செய்து வருகின்றன. என்னைப் போன்றவர்களை பலவீனமாக்கி செயலிழக்கச் செய்வதை தங்களுடைய மிகப்பெரிய பலமாக இந்த சிறைச்சாலை விளம்பரப்படுத்தியிருக்கிறது. ‘அதியமானை நோயாளியாக்கினோம்’ என்று விளம்பரப்படுத்துவார்களோ என்னவோ யார் கண்டது. விளம்பரப்பொருள் என்பதால் எனக்கு உடலுழைப்பு நிர்ப்பந்தம் கிடையாது.
மேற்சொன்னவர்றின் நீட்சியாகவே அபாயகரமான சிந்தனையாளன் என்ற பட்டம் எனக்குக் கிடைத்திருக்க வேண்டுமென்றாலும் அந்த கௌரவம் இரண்டு காரியங்களினாலேயே என்னைத் தேடி வந்தடைந்தது. ஒன்று நமது நாட்டிற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று வாதாடியது. அதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்போது ஒருங்கிணைந்த குடியரசுகளின் சட்டமே அணு ஆயுதங்கள் தேவையில்லை என்பதுதான். இரண்டாவது ‘உணர்வுப் பிரவாகமும் நிரந்தர உச்சகட்ட பரவசமும்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டது. யாரோ வருவது போல இருக்கிறது. யோசிக்காதே. கருவிகளை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள். மற. மனமே வெற்றிடமாகு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு….
“இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே!”
“அப்படி உங்களுக்குத் தெரிகிறதா ஐயா”
“இன்று மின் அதிர்ச்சி தரப்படவில்லையென்று சொன்னார்கள்”
“தராதது எனக்கும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது”
ஏன் தரவில்லை என்று தெரியுமா?”
“கருத்து ஏதுமில்லை”
“இளம் செவிலி 1731 இன்று ஏன் வரவில்லை என்ற காரணம் உங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதானே”
“மறதி அதிகமாகிக்கொண்டிருக்கிறது.”
“இளம் செவிலி ஏன் வரவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது”
“உங்களிடம் பரிவு காட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வேலை நாட்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்”
“என்னிடம் என்ன பரிவு காட்டினார்?”
“உங்கள் மோவாயை கைகளில் தாங்கியது. தாடியை நீவி விட்டது. உங்கள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தது”
“————-”
“என்ன பதிலையே காணோம்?”
“பாவம் குழந்தை”
“குழந்தையா அவள்! திருமணச் சந்தையில் ஒரு வருட ஒப்பந்தத்திற்கு ஒரு லட்சம் செலவாணிப்புள்ளி கேட்டிருக்கிறாள்”
“ என்னால் இந்த நிறுவனத்திற்கு ஏதேனும் விளம்பரம் சேர்க்க முடியுமென்றால் அதைச் செய்து கொடுத்து அதனால் கிடைக்கும் செலவாணிப்புள்ளிகளைக் கொண்டு இளம் செவிலியை எட்டுமணி நேரமாவது ஒப்பந்தம் செய்து கொள்ள ஆசை”
“அடடே நல்ல திட்டமாக இருக்கிறதே. ஆனால் இந்தக் கிழட்டு வயதில் உமக்கு இப்படி ஒரு ஆசையா?”
“இந்த வயதிலும் என்னால் ஒரு இளம் பெண்ணிடம் பேரானந்த உணர்வுப் பிரவாகத்தையும் நிரந்தர உச்சகட்ட பரவசத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்”
“சற்றே பொறுங்கள் ஐயா சற்றே பொறுங்கள். இது உங்களுடைய தடை செய்யப்பட்ட புத்தகத்தின் தலைப்பு அல்லவா?”
“என்னுடைய இந்தக் கண வார்த்தை கோர்ப்பு இறந்த காலத்திலும் இயங்கியிருக்கிறதா? ஆச்சரியம் ஆச்சரியம்”
“பொய் சொல்லாதீர்கள். இளம் செவிலியிடம் தடை செய்யப்பட்ட புத்தகத்தின் சாரம்சத்தைத் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்”
“என்னவாகும் அது?”
“எது?”
“சாராம்சம்”
“இவ்வுலகு அழகியல் நிகழ்வாக அன்றி வேறெதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை”
“காவலதிகாரி அவர்களே, அப்படியென்றால் தடை செய்யப்பட்ட புத்தகத்தை வாசித்த குற்றத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்”
“தடை செய்யப்பட்ட புத்த்கங்கள்தானே அதிகம் வாசிக்கப்படுகின்றன. உலகக் கணிணி வலையமைப்பில் உங்கள் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன”
“அப்புறம் எதற்காக என்னை இன்னும் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?”
“ஒருவேளை உங்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு இருக்கலாம்”
“ நிஜமாகவா?”
“ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. முதலில் இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பிறகும் உங்கள் மூளை பழையபடியே செயல்படும் விந்தை எப்படி என்று விரிவாக விளக்க வேண்டும். அதைத் தெரிந்தபின்னரே இந்தச் சிறைச்சாலையில் மீண்டும் அந்த தப்பு நடக்காதவாறு துல்லியமாக கண்காணிப்பையும், மனதைச் சிதைக்கும் முறைகளையும் உருவாக்க முடியும்.”
“அவ்வளவுதானா?”
“முதலில் நகத்தைக் கடிப்பதை நிறுத்துங்கள். உடல் முழுக்க உள்ள நடுக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். அலைபாயும் கண்களைக் குவித்து என்னை என் கண்களை நேராகப் பாருங்கள்”
“சரி”
“இன்னும் ஏன் உடல் பதறிப் பதறி நடுங்குகிறது?”
“அது என் கட்டுப்பாட்டில் இல்லை”
“அப்படியென்றால் எங்கள் சிறைச்சாலை அப்படியொன்றும் மோசமில்லைதான்”
“மோசமில்லைதான்”
“இருந்தாலும் பாருங்கள். பங்குச் சந்தையில் எங்கள் சிறையின் விலை விழுந்துகொண்டே போகிறது. நீங்கள் சொன்ன இளம் செவிலித் திட்டம் எனக்கு மிகவும் உவப்பானதாயிருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டுமென்பதே இரண்டாம் நிபந்தனை”
“கரும்பு தின்னக் கூலியா என்பது போன நூற்றாண்டின் நல்ல பழமொழிகளுள் ஒன்று”
“இளம் செவிலியோடு எட்டுமணி நேரம் ஒப்பந்தம் செய்துகொள்ள உளவுத்துறை மூலமாக அரசாங்கத்திடமிருந்து உத்தரவு பெறவேண்டியது என் பொறுப்பு. இதை நாம் உத்தேசமாக ‘பரிசோதனை’ என்றழைப்போம். நீங்களிருவரும் அறியாதபடி உங்கள் தனிமையை முழுமையாய் பதிவு செய்வோம். நீங்கள் பரிசோதனையின் முடிவில் உளற வேண்டும். அதாவது உங்களது சிந்தனைகள் எல்லாம் தோற்றுட்டதாக உளறவேண்டும்”
“இதனால் உங்களுக்கு என்ன லாபம்?”
“தேவையில்லாத கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். தத்துவம் மற்றும் அரசியல் கைதிகளை வலுவிழக்கச் செய்வதில் வல்லவர்கள் என்று நாங்கள் இதன் மூலம் நிரூபித்துவிட்டால் அரசாங்க மூலதனம் ஏராளமாய் எங்கள் நிறுவனத்திற்குக் கிடைக்கும். கிடைத்தால் இப்போதைய பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டுவிடுவோம்”
“பொதுவாக இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என்னுடைய சிந்த்னையையே பல போலிகளை விட்டு உளறச் செய்தால் என்னை வலுவிழக்கச் செய்துவிடலாமே!”
“பொதுவான வழக்கம் அதுதான். ஆனால் உங்கள் சிந்தனைகளை போலிகளை விட்டு உளறச் செய்தால் கூட ஆபத்து”
“அழகியல் அவ்வளவு ஆபத்தானதா?”
“பன்மையை, தரப்படுத்துதலின்னமையை, உணர்வுகளின் புதுவித சேர்க்கையை, பயங்கரங்களை அடித்து நொறுக்கும் துன்பியல் உன்னதத்தை, உணர்வுப் பிரவாகத்தைக் கொண்டாடும் அழகியல் ஆபத்தானதுதான்”
“ஒரு புனிதமான தொனியில் நீங்கள் பேசுகிறீர்கள்”
“பரிசோதனைக்கு ஒப்புக்கொள்கிறீர்களா?”
“பங்கேற்பாளர் இளம் செவிலி 1731 எனும் பட்சத்தில் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்”
“இல்லையென்றால் மாட்டீர்கள்?”
“மாட்டேன்”
“இளம் செவிலி 1731 மேல் காதலா?”
“வழக்கொழிந்த சொல்லை பயன்படுத்துகிறீர்கள்”
“உங்களோடு மோத வேண்டிய அதிகாரியாயிற்றே நான்”
“காதலில்லை, நெக்குருகும் மென்மை”
“இளம் செவிலி 1731ஐ பரிசோதனைக்கு பலிகடா ஆக்குவது பற்றி உங்களுக்கு வருத்தமாக இல்லையா”
“சமூக வழக்கப்படிதானே செய்கிறேன்”
“சமூக வழக்கங்களை ஏற்றுக்கொள்ளாததுதானே உங்கள் சிந்தனைப் பாங்கு!”
“என்னை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதுதானே உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள்”
“நன்று. பரிசோதனை நாளை ஆரம்பிக்கும்”
“ ஒரு விஷயம். செவிலி 1731 மேல் உங்களுக்கு என்ன கோபம்?”
“அவள்பால் எனக்கு ஏற்பட்ட நெக்குருகும் மென்மையை காண்பிக்க வருடத்திற்கு ஒரு லட்சம் செலாவணிப்புள்ளி கேட்கிறாளே என்பதுதான்”
“ஒருவேளை அந்தப் புள்ளிகளை நான் உங்களுக்குத் தர முடியுமென்றால் நீங்கள் அவளோடு ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா?”
“நீங்கள் அவளை உண்மையிலேயே காதலிக்கிறீர்கள். அவள் உங்களோடு ஒப்பந்தம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”
“இந்தப் பரிசோதனைப் பணத்தை இந்த நிமிடமே உங்களுக்குத் தர சம்மதிக்கிறேன்”
“ நன்றி. ஆனால் வேண்டாம்.”
“ஏன்?”
“ஒருவகையில் நான் அவளை தண்டிக்க நினைக்கலாம்”
“ அவளை நிர்ப்பந்தம் செய்வீர்கள் இல்லையா?
“செய்யலாம். செய்யாமலேயே சம்மதிக்கவும் வைக்கலாம்”
“தேசப்பற்று என்ற பெயரிலா?”
“உங்களுடைய கவலைகள் அனாவசியமானவை”
“அவளை தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்”
“ஹாஹா.. நமது பேட்டி முடிந்தது. ஒருங்கிணைந்த குடியரசுகள் வாழ்க”
“——–”
“நீங்கள் ஒழிக என்று சொல்லலாம்”
“போடா மயிரே”
———————————-
அடி பின்னி எடுத்துவிட்டார்கள். உடலெல்லாம் பிரம்படி போடாதில் ரத்தம் கன்றி கன்றி நிற்கிறது. ஐயோ இதைக் கேட்பதற்கு யாருமே இல்லையா? நான் என்ன தவறு செய்தேன்? இந்தக் கிழட்டு உடலைப் போட்டு இப்படி வதைக்கிறார்களே இன்னும் என்னிடமிருந்து என்ன எதிர்பார்கிறார்கள்? ஜன்னலை எட்டிப்பார்க்க முயற்சி செய்து தோற்கிறேன். பூவரச தளிர்கள் வாடியிருக்கின்றன. வெகு தொலைவில் வானத்தில் பறவைகள் பறப்பதான தோற்றம் இருக்கிறது. என்னது அது என்று தெரியவில்லை வலியில் என்னுடல் இழை இழையாகப் பிரிந்து கழன்று பறக்கிறது. அதிகாலையில் காணும் மென் சிறகுகள் எல்லாம் பறக்கும் தேள்களாக மாறி உள் அவயங்களைக் கொட்டுவதான பிரேமை. சமூகத்தின் மொத்த தவறுகளுக்காகவும் என்னை தண்டிப்பது என்ன நியாயம்? என்னைக் கேவலப்படுத்தி இவர்கள் எப்படி வாழந்துவிடமுடியும்? நான் அலறமாட்டேன். சிரிப்பேன். வாய்விட்டு, வெறி கொண்டு சிரிப்பேன். என் சிரிப்பின் அலையில் என் உயிரின் இச்சை கலந்து மிதமான சீதோஷ்ணம் போல பரவும். அணு, அணுவாய், துகள்த் துகளாய் கரைந்து இப்பிரபஞ்சம் முழுமையும் நிறைப்பேன். என் வெறிகொண்ட சிரிப்பின் ஆர்ப்பரிக்கும் விகசிப்பில் என் உணர்வுப் பிரவாகத்தினால் என்னை வாழவிடாத இப்பிரபஞ்ச ஒருமையை முற்றிலுமாக சிதைப்பேன். அதன் முதல் கட்டமேயென என்னுடல் இழை இழையாய் பிரிந்து துகள்த் துகளாய் சிதறி உருகி உருகி கரைகிறது…Hyper Sensual Being உருவாகும் கட்டம் வந்துவிட்டது….
“யாரது இந்நேரத்தில்?”
“இளம் செவிலி எண் 1731”
“ என் கண்கள் என்னை ஏமாற்றுகின்றனவா? கனவா? பிரம்மையா?”
“நிஜம்தான். பரிசோதனை தொடங்கிவிட்டது. இப்போதிலிருந்து இன்னும் எட்டு மணி நேரத்திற்கு நீங்களும் நானும் தம்பதிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறோம். அரசாங்கம் இதற்காக மிகப் பெரிய விலை கொடுத்திருக்கிறது”
“இப்போதா? என்னுடைய இந்த நிலைமையிலா? என்னையோ சக்கையாக அடித்து துவைத்துப் போட்டிருக்கிறார்கள்.”
“நீங்கள் தோற்று உளற வேண்டும் என்பதுதானே நிபந்தனை”
“உளறச் சம்மதித்த பின்னும் அடித்துப் போட்டிருப்பது நியாயமில்லை”
“உங்கள் Theory of hyper sensuous தாந்தரீக சித்தினை இப்போது செயல்படுத்துங்கள் பார்க்கலாமென்பதே சவால்”
“நீ ஏன் இந்தப் பரிசோத்னைக்கு சம்மதித்தாய்? பனத்திற்காகவா?”
“இல்லை”
“என் மேல் பரிவா? காதலா? நட்பா?”
“முதலில் உங்களால் என்ன செய்யமுடியும் என்ற தைரியத்தில் சம்மதித்தேன். ஆனால் அரசாங்கம் வழங்கிய தண்டனையால் சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது நான் உங்கள் சக பயணி. சிறைக்கு வெளியே இருந்து சிந்திக்க இருப்பவள்”
“சபாஷ். ஆனால் இந்தப் பரிசோதனையில் நான் தோற்று உளற உத்தேசமில்லை”
“நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பமும்”
“நான் ஜெயித்தால் உன்னையும் சேர்த்து தண்டிப்பார்கள்”
“தப்பும் வழி எனக்குத் தெரியும். உங்களைப் போல நான் முட்டாளில்லை”
“பிரமாதம். அப்படியென்றால் ஆரம்பிக்கலாமா? குரலும் வார்த்தைகளுமே என் உடலாகவும் ஆகட்டும்”
“இதோ இருளில் இயங்கும் அல்ட்றா வயலட் காமிராக்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன. நமது நடவடிக்கைகள் உடனடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன என்ற நினைவிருக்கட்டும்”
“நன்று. சிறு தீபம் ஒன்று ஏற்றி விடு. உனது கூந்தலை அவிழ்த்துவிடு. ஆடைகளைக் களைந்துவிடு. நான் இருளில் நிர்வாணமாகவே இருக்கிறேன்”
“இதோ”
“கடவுளே கடவுளே இந்தப் பேரழகு எனக்கா? எனக்கே எனக்கேவா? இந்த நிலைமையிலா? யாரிடம் போய்ச்சொல்வேன் இந்த வசீகரத்தை? இந்த சௌந்தர்யத்தை ஜோதி என்றழைக்கவா நான்? ஒளியின் கதிர்கள் சர்வ திசைகளிலும் தாபத்துடன் வியாபிப்பது போல வா என்னிடத்தில். நீலம் பாரித்துக் கிடக்கும் இந்த கிழட்டு உடல் உன்னிடத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? உயிரின் இச்சையால் பிறக்கும் வேட்கை அசிங்கங்களோ அச்சங்களோ அறியாதது. உன் மென்மையான கால் கட்டை விரலால் என் முதுகுத் தண்டின் கீழ் நுனியை மிதி. மூலாதாரத்தின் ஜீவ சக்தி ஊற்றுக்கண் திறக்கட்டும். படைப்பியக்கம் அசிங்கங்களை அறியாதது என்பதை நினைவில் கொள். நான் உன் முதுகுத்தண்டின் கீழ் நுனியையும் உன் உந்திச் சுழியின் கீழ் விரியும் பூனை ரோமங்களையும் என் விரல் நகங்களால் மென்மையாக வருட, உன் பிருஷ்டங்கள் ஆனந்தத்தில் சிலிர்த்து அதிர்கின்றன. அடேயப்பா இளமையின் கசிவிற்குத்தான் என்ன வேகம்! பொறு. பொறு. காமவேட்கையில் கண்கள் அதற்குள்ளாக சிவந்துவிட்டனவே! நானோ பெரிய அன்னப்பறவையின் மூர்க்க வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கசிந்து துவண்ட லீடா போல கண்களின் வெள்ளைப்படலம் வெளியே தெரிய உதவியற்றுக் குழைகிறேன். மரப்பட்டை உரித்த பச்சை மரத்தின் ஈரப்பதமும் மென்மையும் நறுமணமும் நம்மைச் சுற்றிக் கமழ்கின்றன. அவசரப்படாதே. பெருமூச்செறியாதே. நானும் தயாராகிக்கொண்டிருக்கிறேன். உன் நீண்ட இமைகளினால் என் அதரங்களை வருடுகிறாய். நான் என் தாடி நுனியினால் உன் கட்கங்களை வருடுகிறேன். உன் முலைக்காம்புகளால் என் வலி நிரம்பிய பகுதிகளுக்கு ஒத்தடம் தருகிறாய். நான் இதற்கு எப்படி கைமாறு செய்வேன்? எப்படி என்னை உனக்காக தகுதிப்படுத்திக்கொள்வேன்? தெய்வமே தெய்வமே இந்த கணத்திற்கான நன்றியறிதல் பிரார்த்தனை ஏதும் உளதா? உந்தன் கூந்தலின் மென்மையான சாமர வீச்சில் என் பலவீனங்கள் அனைத்தையும் மீறி ஆவேசமாகிறேன். ஹேய் ஹேய் ஹேய் அதெல்லாம் வேண்டாம். கள்ளமற்ற உன் முகத்தில் குறும்பும் தீர்மானமும் ஏற என்னை பரிகசிக்கிறாய். உன் திண்மையான தசைநார்கள் இறுக்கமாகி வெப்பம் தகிக்கின்றன. நான் முழந்தாளிட்டு உன்னை கைகூப்பி வணங்க நீயோ உன் வலது காலைத் தூக்கி என் தோள் மேல் போடுகிறாய். உன் பின்னந்தொடையின் சூடு என் தோளில் பரவ என் மனமோ முடிவற்று மலரும் மலர்களில் லயிக்கிறது. ஓ இதுதான் இதுதான் இந்த மனோநிலைதான் நமக்கு நினைத்த மாத்திரத்தில் எந்த சமயத்திலும் கைவரப்பெற வேண்டும். நமது இருவருடைய உடல்களும் மற்றவற்றிற்காகத் தாளவொணா தாபத்துடன், காத்து நிற்கும் இம்மனோநிலை, காய்ந்த சருகாலோ, புழுதியாலோ, மலத்தாலோ, மூத்திரத்தலோ, செடியாலோ, கொடியாலோ, காற்றாலோ, கடலாலோ, வானத்தாலோ, நிலாவாலோ, நடசத்திரத்திலாலோ, இதுவாலோ, அதுவாலோ, எதுவாலோ சதா சர்வ காலமும் நமக்கு வாய்க்கப்பெறவேண்டும். Hyper sensuousness. உயிர்ச்சத்து இப்பிரபஞ்சத்திற்கு உணர்ச்சிகரமான ஒருமையை அளிக்கிறது என உணரும்போது, அதில் சதா பங்கேற்கும்போது மனிதன் சுதந்திரவானாகிறான். அவனை யாராலும் தண்டிக்க முடியாது. எதுவாலும் அடக்க முடியாது. ஜோதி! இப்போது ஜீவ சக்தி உன் நாடி நரம்புகளிலெல்லாம் குமிழியிட்டுப் பொங்குகிறது. நான் மல்லாக்க படுத்துக்கொள்கிறேன். என்னை நடுவில் கிடத்தி இருபுறங்களிலும் உன் கால்களை வைத்து நின்று கொள். மெதுவாக முதுகுப்புறமாக பின்னோக்கி வளைந்து உன் கைகளை என் தோள்களில் ஊன்றிகொள். இந்நிலையில் உன்னால் என் பின் சுவரிலுள்ள ஜன்னலையும் அதில் தெரியும் வானத்தையும் பார்க்க முடியும். இரவின் கும்மிருட்டில் ஒளிரும் அந்த ஒற்றை நட்சத்திரத்தின் மேல் கவனத்தைக் குவி. நான் உன்னை நோக்கி மேலே வேகமாய் வரும்போதெல்லாம் நீ நட்சத்திர ஒளியோடு உன்னை அடையாளம் கண்டுகொள். இதோ இந்த நிமிடத்தில் நீயும் நானும் மேகங்களைக் கடந்து அண்டசராசரத்தில் எல்லையின்மை நோக்கி அநாதியாய் ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே ஜோதியாய்…”
—————-
பரிசோதனை முடிந்த மறுநாள் இளம் செவிலி 1731இன் அறிக்கைபடி என் ஜன்னலை அடைத்துவிட்டார்கள். நான் என் ஒரு துண்டு வானத்தையும் இழந்துவிட்டேன். ஆனால் கண்களை மூடும்போதெல்லாம் ஜோதியின் மேனி முழு ஆகாயமாய் முடிவற்று விரிகிறது.
குறிப்பு: ஸில்வியா என்ற புனைபெயரில் நான் எழுதிய இந்த Futuristic கதை 1995இல் ‘புதிய பார்வை’ இதழில் வெளியானது. இந்தக் கதையைத் தேடிப்பிடித்து எனக்கு அனுப்பித் தந்த ‘குங்குமம்’ இதழ் பொறுப்பாசிரியர் நண்பர் என்.கதிர்வேலனுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.