கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து நான் சத்தமாக விசில் அடித்தேன். எதிர்காலத்தில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டு போனில் பேசுவதில் உள்ள சிக்கலை நான் தீர்த்துவிட்டேன். என் தியரி சரியானது தான்!
என் தியரியை டெஸ்ட் செய்ய வேண்டும். இரண்டு வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் இருக்கும் என் நண்பன் சுரேஷை அழைத்தேன். இந்த இரண்டு வருடங்களில் அவன் போன் நம்பர் மாறியிருக்காது என்று நினைக்கிறன்.
“ஹலோ!” என்று எதிர் காலத்திலிருந்து குரல் வந்தது. சுரேஷின் கட்டையான குரல்!
“சுரேஷ், நான் தாண்டா உன் நண்பன் மூர்த்தி,” என்றேன்.
“இது என்ன ஜோக்கா? யார் பேசுவது?” சுரேஷின் குரல் கடுமையானது.
“நான் மூர்த்தி தாண்டா பேசுகிறேன். என் குரலை மறந்து விட்டாயா என்ன? நான்… ”
சுரேஷ் கோபத்துடன் குறுக்கிட்டான். “இது வேடிக்கையான விஷயம் அல்ல. கடந்த வாரம் தான் என் நண்பன் மூர்த்தியை புற்றுநோயில் இழந்தேன். நான் உன்னை போலீசுக்கு ரிப்போர்ட் செய்யப் போகிறேன்.”
அப்போது தான் என் தியரியை என்னால் வெளியிட முடியாது என்பதை உணர்ந்தேன்.