பூமி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்திருக்கும் போலும்! எங்கு பார்த்தாலும் புதுமை… வானை முட்டும் கட்டடங்கள் நீளமான தார்சாலையில் நடமாட்டமே காணோம்! தரையில் செல்லும் வாகனங்கள் முதல் விஞ்ச்சுகள் வரை ஒரே பிஸி!
ஜாகர் கட்டடத்தில் 13ஆவது மாடியில் இருந்த ஒரு அபார்ட்மெண்ட்டில் அவள் சுவரோரமாய்ச் சாய்ந்து நின்றிருந்தாள்.
“அம்மா!… 2 பிளஸ் 2 எத்தனை அம்மா?”
“தொந்திரவு பண்ணாதே, கம்ப்யூட்டரை கேள்!”- யந்திரத்தனமாய் பதில் வந்தது.
“அம்மா. சொல்லும்மா!” மீண்டும் குழந்தை சிணுங்கியது.
‘இரண்டும், இரண்டும் எத்தனை என்பதற்குக் கூட கம்ப்யூட்டரை கேட்கும் காலமாயிட்டதே!’ அவளுக்குக் கவலையாக இருந்தது.
பக்கத்து அபார்ட்மெண்டில் குழந்தையும், தாயும் இன்னும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.
“ஸிரா, அலுவலகம் போகவேண்டும், உள்ளே வா!” – ரொபார்ட் அதிகாரமாய் அழைத்தது.
ஸிரா- ஆம்! அதுதான் அவள் பெயர். அவள் மெதுவாய் உள்ளே நுழைந்தாள்.
டெலிவிஷனில் தலைவர் பேச ஆரம்பித்தார்:
“ஜனத்தொகை மிகவும் அதிகரித்துவிட்டது. பூமியில் இடம் போதாததால் பலரை சந்திரமண்டலத்திற்கு அனுப்பியிருக்கிறோம். அப்படியும் இடம் போதவில்லை. அதனால் ஐம்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொல்லப்படுவர்…”
ஆ… அவள் நாடியிலிருந்து அச்சக்குரல் எழும்பியது. இதென்ன கொடுமை! அதற்கு மேல் பார்க்கப் பிடிக்காமல் டெலிவிஷனை அணைக்க முற்படுகையில், ரொபாட் தடுத்தது.
“நோ, தலைவரின் பேச்சை முழுமையாகக் கேட்க வேண்டும். தேசபக்தி இல்லாத செயல்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும்.”
“இது கொடுமையில்லையா?” ஸிரா கண்களில் நீர் வழியக் கேட்டாள்.
“நோ! ஜனத் தொகையைக் குறைப்பது தலைவரது கடமை!” – பலமாக மறுத்தது.
யந்திரத்திடம் போய் மனுஷத் தன்மையை எதிர்பார்ப்பதாவது! அவள் எரிச்சலுடன் நகர்ந்தாள்.
“குட்மார்னிங் செகரட்டரி!”- அலுவலக கம்ப்யூட்டர் சிரித்தது.
“மார்னிங்!” அவளும் யந்திரத்தனமாகப் பதில் சொன்னாள்.
“முக்கியமான பைல்கள் இருந்தால் அதை எடு!” ஆணையிட்டது. அவள் நகருகையில் டெலிபோன் மணி ஒலித்தது.
மேலதிகாரி அழைத்தார். “ரோட்டில் ஒரு விபத்து; டாக்ஸி டிரைவரின் கால்கள் துண்டிக்கப்பட்டன. ஆபத்தான நிலைமையில் இருக்கிறான்…” கம்ப்யூட்டரின் ஆலோசனையைக் கேட்டார்.
ஸிராவிற்குச் சிரிப்பாக இருந்தது. இந்தச் சின்ன விஷயத்திற்குக் கூட கம்ப்யூட்டரா? இவர்கள் சிந்திக்கவே மாட்டார்களா…?
கம்ப்யூட்டரிடம் விஷயத்தைச் சொன்னதும், “டிரைவரை அப்புறப்படுத்திவிட்டு டிராபிக்கை ஒழுங்கு படுத்தச் சொல்” என்றது.
“டிரைவரை என்ன செய்வது?”
“லீவ் கிம், தானாகவே இறந்து போவான்!”
“அப்படியானால் மருத்துவ உதவி?”
“தேவையில்லை”
அவள் மேலதிகாரியைத் துணைக்கு அழைத்தாள்.
“ஏன் சார், மருத்துவ உதவி செய்தால் பிழைச்சாலும் பிழைச்சுக்குவான், இல்லே?” – கேட்டாள்.
“சொன்னதைச் செய், அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம்!”
அவளுக்கு அழுகையாக இருந்தது. அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
கம்ப்யூட்டர் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தது.
“ஹலோ ஸிரா… என்ன வாட்டமுற்றிருக்கிறாய்?”
“இங்கே மிஷின்களின் அடக்குமுறை அதிகமாகி விட்டது. எங்காவது ஓடிவிடலாம் போலிருக்கிறது…” – சலித்தாள் ஸிரா.
அவன் மெல்லச் சிரித்தவாறே, “நீ எங்கே ஓடி என்ன பயன்? ஆண், பெண் மாதிரி வடிவமைப்போடு எல்லா அலுவலகங்களிலும் வீடுகளிலும் நம்மை அடக்குமுறை செய்வதே கம்ப்யூட்டர்கள் தானே?”
“முடியாவிட்டால் போகிறது. தற்கொலை செய்து கொள்வேன்!” – வெறியுடன் கத்தினாள் ஸிரா.
“ஸில்லி! முட்டாள்தனமாகப் பேசாதே. மாலை ஆறு மணிக்கு ரோலஸ்ஹெவன் பார்க்கில் சந்திப்போம். குட்பை!”
ஆறுமணிக்கு ஸிரா கிளம்பியபோது ரொபாட் தடுத்தது.
“உன்னை எங்கும் வெளியில் விடக்கூடாதுன்னு உன் அலுவலகத்திலிருந்து அவசரச்செய்தி வந்திருக்கு.”
அவள் அதை லட்சியம் செய்யாது படியிறங்கினாள். முதல் முறையாக அங்கு ஓர் எதிர்ப்பு உருவாவதைத் தலைமை அலுவலகத்திற்கு அவசரமாக அது தந்தி அடித்துக் கொண்டிருந்தது.
அடிமைத்தனத்தை அறுத்தெறிந்த ஆனந்தத்தில் சுதந்திரமாக அவள் நடந்தாள்.
– 13-04-1986