அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன் கையை இறுகப்பற்றிய அவள், ஏதோ சொல்ல வாய் திறந்தாள்..
“எது வேணா சொல்லு… ஆனா நீ இப்போ சொல்லப்போறத மட்டும் சொல்லாத”
“இல்ல.. அதெல்லாம் முடியாது.. நான் என்ன நெனச்சேனோ அத சொல்லியே ஆகனும்”
“இப்படியெல்லாம் அடம்பிடிக்க யார் உனக்கு கத்துக்கொடுத்தா?”
“இதெல்லாம் யாராவது கத்துக்கொடுப்பாங்களா! நானே கத்துக்கிட்டேன்”
“ம்.. நல்ல விஷயங்களை கத்துக்கிட்டா பாராட்டலாம்.. ஆனா நீ இதப்போயி கத்துக்கிட்டிருக்கியே!”
“ஏன்.. எனக்கு இது நல்ல விஷயமா இருக்கக்கூடாதா?”
“சரி.. சரி.. அடம்பிடிக்கறது உனக்கு நல்ல விஷயமாவே இருக்கட்டும்.. ஆனா நீ இப்போ சொல்லப்போற விஷயத்தை மட்டும் சொல்லிடாத”
“என்ன நீ.. ரொம்ப பெரிய வீரன் சூரன்னு நெனச்சேன்.. இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியா இருக்கியே!”
“ஏய்… ஏய்.. என்னை பயந்தாங்கொள்ளினெல்லாம் சொல்லாத..”
“அப்ப.. நான் சொல்ல வந்தத சொல்லவிடு”
“வேணாம்.. சொல்லாத.. நல்ல மூட்ல பிப்ரவரி 14 கொண்டாட இங்க வந்திருக்கோம்.. இப்ப அதச் சொல்லி என் சந்தோசத்த கெடுத்திடாத”
“என்னடா சொல்ற? நான் சொல்லப்போற விஷயம்.. உன்னை பயமுறுத்தற விஷயமா?
“ஆமா… அப்பறம் இல்லையா பின்ன!?”
“ம்.. நீயெல்லாம் ஒரு இன்டலிஜென்ட்டுனு நெனச்சு உன்கிட்ட வந்து பழகினேன் பாரு…”
“எதுக்கு இப்ப சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்க?”
“சம்பந்தமா பேச வந்தா தான்.. பேச விட மாட்டேங்கறியே!?”
“ம்.. என் சம்பந்தமா என்ன வேணா பேசு.. ஆனா அத மட்டும் பேசாத.. அட்லீஸ்ட் இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு அந்த டாபிக் வேணாமே!”
“இப்படி சொன்னா எப்படி? இப்ப நான் சொல்லியே தீரணும்.. இல்லேனா என் தலை வெடிச்சிடும்..”
“அப்ப என்னை ப்ரியா இருக்க விட மாட்ட!?”
“எப்பவும் போல நீ ப்ரியாவே இருக்கலான்டா.. அதுக்கு நான் கியாரண்டி”
“இப்ப இப்படி சொல்லுவ.. அப்பறம் உன் ரூபத்த காட்டினீனா?”
“என்ன பெரிய ரூபம்..? விஸ்வரூபம்..!”
“சரி.. இன்னும் பத்து நிமிஷத்துக்கு அப்பறம் உனக்கு பர்மிஷன் தரேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்கியா…?!?
“டே.. ஒரு லவ்வர் கிட்ட பேசற பேச்சா இது!?”
வேறு எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் அவன்..
மேற்கே மறைந்திருந்த சூரியன்.. இப்போது தெற்கு திசையிலிருந்து உதித்துக் கொண்டிருந்தது.
வடக்கே சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என நான்கு நிலாக்கள் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தன.
ஏதோ ஒரு ஆங்கிலப்பாட்டை முணுமுணுக்க ஆரம்பித்தான் அவன்..
“ஹலோ.. நான் சொல்ல வந்தத.. இப்பவாவது சொல்லவிடு… நாம ரிப்போர்ட் பண்ற நேரம் ஆச்சு”
“சரி.. சரி.. சொல்லித்தொலை”
“தேங்க்யூ.. டியர்.. ஐ லைக் யூ வெரிமச்.. வில் யூ மேரி மீ?
“அப்கோர்ஸ்… வித் பிளசர். ஐ டூ லைக் யூ வெரிமச்”
அவன் அப்படி சொன்னதுமே “ரிப்போர்ட் பேக்”, என்ற மெசெஜ் இருவரது தலைக்குள்ளும் ஒலிக்க…
சட்டென அவர்களது ஏரோ வீக்கிலில் இரண்டு பேரும் அவளது இருப்பிடம் கிளம்பினர்.
“வில் யூ மேரி மீ”, என ஒரு பெண் கேட்டு.. அதை ஆண் “ஓகே” என ஒத்துக்கொண்டால் பிறகு அவன் அவளது இருப்பிடத்தில் தான் தங்கவேண்டும் என்பது ரூல்.
அப்படி அவள் கேட்கப்போகிறாள் என்பது ஒரு வாரம் முன்பாகவே அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
‘சரி.. பிப்ரவரி 14 அன்று சொல்லட்டும் என அவனும் அனுமதி கொடுத்திருந்தான். இருந்தாலும் கொஞ்சம் விளையாடிப் பார்த்தான்.
அவன் திரு தி ரோபோட் ஸ்பீட் 10 டு தி பவர் 25 டெராஹெர்ட்ஸ்.. மெமரி 10 டு தி பவர் 100 ஜிகாபைட்
அவள் ரோஸ் தி ரோபோட் ஸ்பீடு 10 டு தி பவர் 50 டெராஹெர்ட்ஸ்.. மெமரி 10 டு தி பவர் 1000 ஜிகாபைட்
அது ரோபோக்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த பூமி..
ஆண்டு 2777.
அடுத்த நாள் காலை.. ஒரே சத்தம்..
“ஏன் என்னை சார்ஜ்ல வைக்கல..? அதுதான் ஹஸ்பென்டா வந்துட்டியே.. இது கூட செய்ய மாட்டியா?”
“இதுக்குத்தான் நான் நேத்தே சொன்னேன்.. சொல்லாத சொல்லாத..னு… இப்படி சிக்க வச்சிட்டியே!”, என சிரித்தவாரே.. ரோஸை சார்ஜ்ஜில் வைத்துவிட்டு.. பாய் சொல்லியவாறு சிரித்தபடி கிளம்பினான் திரு தி ரோபோட்..