மர்ம உருவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 13,594 
 
 

காரில்தான் வழமையாக நான் வேலைக்கு போய் வருவது வழக்கம்… கடந்த ஒன்றரை வருடமாக ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன்.

வழமையாக அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்கு கிளம்பிவிடுவது வழக்கம். அன்றும்
அப்படித்தான் காரில் போய்க்கொண்டிருந்தேன்…

அது ஒரு அமெரிக்கத் தெரு என்பதனால் சந்திச் சமிக்ஞை விளக்குகள் தானாக ஒளிர்ந்து மூடும்… பராமரிப்பாளர்களோ காவலர்களோ யாரும் இருப்பதில்லை.

அதிகாலையில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தமையால் நான் வழமைக்கு மாறாக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன். வழமையாக நான் போய்வரும் பாதை என்பதால் எனக்கு மேடு – பள்ளம் எங்கிருக்கும் என்பதெல்லாம் அத்துப்படி… இருப்பினும் பனிக்கால எச்சரிக்கையாக கொஞ்சம் மெதுவாகவே நான் காரைச் செலுத்தினேன். குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் நான் பார்த்த அந்தச் சம்பவம் என்னை நிலைகுலைய வைத்தது.

இது நடந்து ஒரு வருடம் கடந்து விட்டாலும் இன்னும் என் மனக்கண் முன் அது நிழலாடுகின்றது…

இந்த இரண்டரை வருட அமெரிக்க வாழ்வில் நான் பல நிகழ்வுகளைச் சந்தித்திருந்தாலும் என்னை ஒருகணம் உறைய வைத்த வினோத நிகழ்வு அது…

ஒருகணம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை… என் கண்கள் இருட்டத் தொடங்கின. காரின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிப் போகும் நிலைக்கு வந்துவிட்டது… கை கால்கள் பதறத் தொடங்கின…

சிறு வயதில் நான் பல கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். எனது அம்மா முதல் அம்மம்மா வரை பலர் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள் அம்மம்மா பல முனிக் கதைகள்… பேய்க் கதைகள் சொல்லுவதில் கெட்டிக்காரி…

ஒருதடவை தான் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வீடு திரும்பி வரும் பொழுது சாமம் தாண்டி விட்டதாகவும் தனக்கு யாரும் துணையில்லையே என கவலையுடன் நடந்து சென்ற போது தனக்கு முன்னால் ஒரு வயதானவர் ஊன்று தடியுடன் ஒரு விளக்கு ஒன்றை கையில் ஏந்தியபடி சென்றாராம்… தான் அவரின் பின்னே நடந்து சென்றபோது வீட்டுக்கு அருகில் வந்ததும் திடீரென அந்த உருவம் மறைந்து விட்டதாகவும் அது கடவுள் செயல் எனவும் ஒருதடவை சொன்னதாக ஞாபகம் இருக்கிறது.

தேவகணத்தில் பிறந்தவர்களின் கண்ணுக்கு பேய்கள்… பூதங்கள்… தேவதைகளின் நடமாட்டம் தெரியும் எனவும் கிராமத்தில் பலர் கதைக்கக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் எனக்கு இவை பற்றிய நம்பிக்கை துளிகூட இல்லை. எதையும் நம்பாத நான் இன்றுவரை அந்தச் சம்பவத்தை மறக்க முடியாமல் தவிப்பது எதனால் என்பதுதான் புரியவில்லை….

நான் கிராமத்தில் இருந்தபோது பலதடவை ஆடு மேய்த்திருக்கிறேன்… எனக்கு பிடித்தமான விடையங்களில் அதுவும் ஒன்று. ஆட்டுக் குட்டியை தூக்கித் தோழில் போட்டுக்கொண்டு காடுகாடாகத் திரிந்திருக்கிறேன்.

நான் நல்ல “கவண்” வைத்திருந்தேன் நரிகளைக் கவண் கொண்டு விரட்டியிருக்கிறேன். குட்டியீன்ற ஆட்டுக்கு கஞ்சி காய்ச்சி பருகக் கொடுத்திருக்கிறேன்…

கடும்பு பால் காய்ச்சி உண்டிருக்கிறேன்…ஆட்டுக்குட்டி முதல் தடவையாக கண்விழித்து உலகை பிரமிப்புடன் பார்ப்பதை ரசித்திருக்கிறேன்…

வயலும் காடும் எனது தாய்நிலம்… அனேகமாக காட்டில் உள்ள மிருகங்கள் எப்படிப்பட்டவை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்.

கரடியிடம் ஒருதடவை யானையிடம் இன்னொரு தடவை என மாட்டுப்பட்டு ஓடித்தப்பியவன் நான்… கட்டெறும்பு முதல் காட்டெருமை வரை எனக்கு தெரியாத மிருகங்கள் இருப்பது கடினம்.

கீரியும் பாம்பும் போட்ட சண்டையை கண்ணெதிரே கண்டவன் நான்… இவை எல்லாம் என் ஊரில் நடந்தவை… ஆனால் இந்த நிகழ்வு இப்போது நினைத்தாலும் கண்முன் படமாக விரிகிறது.

அதனைப் பேய் என்றும் சொல்ல முடியவில்லை…. பிசாசு…. தேவதை… அப்படி எதுவும் இருப்பதாகவும் நான் நம்பவில்லையே.

அப்படியாயின் அது என்னவாக இருக்கும் கிட்டத்தட்ட ஒரு மனிதன் போலவும்… ஆடுபோலவும்…கரடிபோலவும் சிலசமயம் மூன்றும் கலந்த உருவம் போலவும் அது…

கண்களில் அவ்வளவு ஒரு பிரகாசம் காரின் வெளிச்சத்துக்கு அது தன் முகத்தைத் திருப்பியபோது நான் அதிர்ந்து போனேன்…

அதன் கண்களில் இருந்து எதோ ஒன்று என்னுள் தாக்கியது. ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதைக்கூட என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு மின்னல் பொழுதுதான்… அடுத்த கணமே அது வீதியைத் தாண்டி மறுகரைக்குச் சென்று மறைந்துவிட்டது.

என்னை இயல்பு நிலைக்குத் திருப்பி ஒரு சீருக்குக் கொண்டுவந்த நான்…அன்றையநாள் வேலைக்கு போய்விட்டேன்… அன்றிலிருந்து இன்றுவரை அதே பாதையால் தான் வேலைக்கு போய்வருகிறேன்…

மீண்டும் ஒரு முறையாவது நான் அதனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில்
அதைத் தினமும் தேடுகிறேன்….

குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் அதைத் தேடியலைவதை என்னால் உணர முடிகின்றது…

ஒரு வருடமாகியும் பார்க்க முடியாத ஒன்றை மீண்டும் என் வாழ்நாளில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை….

  • ஏப்ரல் 2013
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *