பதின்ம பருவத்திலிருக்கும் ராகுலுக்கு அப்பா இல்லை. ஒத்த பிள்ளையைப் பெற்ற, அநேக அன்னையரைப் போல், அவன் பத்து வயது வரை அவன் கால்கள் தரையில் படாத வண்ணம் பார்த்துக்கொண்டாள் அவள் அன்னை. இப்போது குடும்ப பொருளாதாரம் கருதி, இரவு பகலாய் வேலை பார்க்கலானாள் அவ்வன்னை. ஒரு நாள் பின்னிரவு, தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பிய அன்னை, தன் மகன் எதோ ஒரு பதட்ட நிலையிலேயே இருப்பதை பார்த்தாள்…
“ராகுல் கண்ணா.. என்னாச்சுப்பா..” ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“என்னை மன்னிச்சுக்கோங்கம்மா..”
“என்னடா இது! எதுக்கு இப்ப மன்னிப்பு கேக்கற?”
“நீங்க மொதல்ல மன்னிச்சுட்டேனு சொல்லுங்க… அப்பறம் நான் எதுக்குனு சொல்றேன்”
“நீ இதுவரைக்கும் இந்த மாதிரி மன்னிப்பெல்லாம் கேட்டது இல்லையே! எந்த தப்புத்தண்டாவுக்கும் போகாத பையன் நீ! இப்ப எதுக்கு இந்த திடீர் மன்னிப்பு! அப்படி என்ன பண்ணின?”
“நான் என்னானு சொல்வேன்.. ஆனா நீங்க.. கோவப்படக்கூடாது.. திட்டக்கூடாது”
“இந்தப் பீடிகையே பயங்கரமா இருக்கே… இதெல்லாம் கேட்கும் போது தான் கோவம் வர்ற மாதிரி இருக்கு.. சரி நான் கோவப்படல.. நீ சொல்லு”
“நம்ம கிராமத்துல ஒரு மந்திரவாதி வீடு இருக்குல்ல!”
“ஆமா.. பயங்கரமான சூனியக்கார மந்திரவாதி”
“அந்த வீட்டுப்பக்கம் தலை வச்சுக்கூட யாருமே படுக்க மாட்டாங்கனு சொல்லியிருக்கீங்க”
“ஆமா.. அவருக்கு திடீர் திடீர்னு கோபம் வரும்.. எதுக்கு என்னானே தெரியாது.. அப்ப அவர் சாபம் விடற மாதிரி என்ன வேணா சொல்லுவார்.. அது அப்படியே நடக்கும். அப்படி ஒன்னு நடந்து தான் நம்ம வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு..”
“ஆமாம்.. சொல்லிருக்கீங்க.. அவரோட வீட்டுக்கு..”
“அவரோட வீட்டுக்கு..!?”
“சாயந்தரமா நான் போயிருந்தேன்”
“டே… என்னடா சொல்ற? ஏன்டா அங்கெல்லாம் போன?”
“நானா போகலம்மா.. என் ப்ரண்டு மகேஷ் தான் கூப்பிட்டான்.. அவர்கிட்ட அப்படியெல்லாம் எந்த சக்தியும் இல்லடா… அவர் ஒரு பரமசாது.. வாவேன்.. ரெண்டு பேரும் போயி அவர் வீட்டப் பார்த்துட்டு வரலாம்னு கூட்டிட்டுப் போயிட்டான்மா”
“ஓ.. சரி.. போன.. வந்த.. இப்ப ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க?”
“அங்க நான் பார்த்த சம்பவங்கள் அப்படீம்மா?
“சம்பவங்களா!”
“ஆமாம்.. நாங்க ரெண்டு பேரும் சுவறேறி குதிச்சு.. அவரோட வீட்டுக்குள்ள நுழைஞ்சு.. ஜன்னல் வழியா அவர் என்ன பண்றாருனு பார்த்தோம். அப்ப அவர் யாருகிட்டையோ பேசிக்கிட்டு இருந்தார்”
“ஆனா அவர் முன்னாடி யாருமே இல்ல.. நல்லா காதாலே உத்துக்கேட்டா.. அவர் ராகுல், சுமித்ரா, ராஜசேகர்னு.. என்னோட பேரு, உன்னோட பேரு.. அப்பறம் அப்பாவோட பேரு இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தார்”
“அப்ப அங்க இருந்த ஒரு குரலுக்கும், அவரோட குரலுக்கும் இப்படி ஒரு சம்பாஷனை நடந்துச்சு..”
“என்னை ஒரு நாள் மட்டும் என்னோட வீட்டுக்குப் போகவிடேன்.. என் மனைவி சுமித்ரா.. என் பையன் ராகுலையெல்லாம் எனக்குப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. பல வருஷத்துக்கு முன்னால உன் தப்பையெல்லாம் படம் பிடிச்சு.. போலீஸ்கிட்ட சொல்லப்போறேனு நான் சொல்ல, எனக்கு சாபம் விட்டு என்னைக் கொன்னுட்ட.. அப்ப இருந்து என்னை பிடிச்சு வச்சிருக்கற.. நான் உனக்கு விசுவாசமாத்தானே இருக்கேன்”
“அதெல்லாம் முடியாது ராஜசேகர். நீ எனக்கு அடிமை.. குழந்தை குடும்பம் பந்த பாசமெல்லாம் உனக்கு கிடையாது. நான் சொல்றதை செய்றது மட்டும் தான் உன் வேலை ..”
“நான் மட்டும் இல்லேனா சொன்னேன்… இது வரைக்கும் அது மாதிரி தானே நடந்துக்கறேன்.. நான் விட்டு வந்ததுல இருந்து, என் மனைவி சுமித்ரா.. எவ்ளோ கஷ்டப்படறா தெரியுமா? என் பையன் ராகுல் தனக்கு ஒரு அப்பா இல்லையேனு எவ்ளோ வருத்தப்பட்டிருப்பான் தெரியுமா?”
“நான் என்ன அடிக்கடியா இப்படி கேக்கறேன்? எப்பவாவது என்னை விட்டீனா.. சர்ருனு போயிட்டு சட்டுனு பார்த்துட்டு வந்துடுவேன்..”
“அப்படீனு அந்தக்குரல் கெஞ்சிக் கெஞ்சி கேட்க…”
அந்த மந்திரவாதியும் மனம் இறங்கிட்டான்.
“சரி சரி.. இன்னைக்கு ராத்திரி சரியா ஒன்றரை மணிக்கு உன்னை விடுவிக்கிறேன்… நீ போய் பார்த்திட்டு உடனே வந்திடனும்.. அப்படி நீ வரல.. அப்பறம் அந்த ரெண்டு பேருக்கும் ஆபத்துனு சொன்னான்”
“அதக் கேட்டுட்டு வந்ததுல இருந்து.. எனக்கு ஒரே நடுக்கமா இருந்துச்சு… தூங்க நினைச்சு படுத்தாலும் தூக்கம் வரல.. அப்பப்ப கடிகாரத்தப் பார்த்துட்டும்.. நீ வருவ வருவனு வாசலப் பார்துட்டும் இருந்தேன்..”
கடிகாரத்துல ஒரு மணி அடிச்சவுடனே… இன்னும் படபடப்பு அதிகமாயிடுச்சு… தூக்கம் சுத்தமா ஓடிப்போச்சு… கரெக்ட்டா ஒன்றரை மணி ஆகுது நீ வர்ற..”, என்று அதே படபடப்புடன் கூறி முடித்தான் ராகுல்..
அதே நேரம் வழியில் பஞ்சரான தனது வண்டியை தள்ளியபடி வந்து.. வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு.. மூடியிருந்த வீட்டின் கதவை பட் பட்டென தட்டத் தொடங்கினாள் ராகுலின் அம்மா சுசித்ரா..
– கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் கோகுலம் தமிழ் வானொலியின் “கதை சொல்லப் போறேன்” நிகழ்ச்சியில் சொன்ன கதை, செப்டம்பர் 2020
மிக்க நன்றிங்க சார்..
அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்ற புத்தகங்களில் சிறுவர் கதை படித்த நிறைவைத் தந்தது.
ஆசிரியர் வேளாங்கண்ணிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ஜூனியர் தேஜ்
சூப்பர் சார்