சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 123,574 
 

போன மாதம் தான் எனக்கு லக்னோ ரீஜனல் ஆபீசில் மாற்றலானது.

போன வாரம் ஆடிட்டுக்காக லக்னோ தாண்டி பஸ்தி என்னும் ஊருக்குப் போயிருந்தேன். மூணு பிராஞ்ச் ஆடிட். நாலு நாள் ட்யூட்டி.

சின்ன ஊர், தங்கும் வசதி குறைவானதால் மெயின் பிராஞ்ச் மேனேஜர் சுபாஷ் குப்தா குடியிருந்த வீட்டிலேயே தங்க வசதி செய்து தந்தார். நாலு நாள்தானே என்று நானும் சரியென்று தங்கி விட்டேன்.

கீழ் தளத்தில் சுபாஷும் மேல் தளத்தில் வீட்டு ஓனரும் என்று இரண்டு மாடி வீடு அது. கீழே ஹால் தவிர மொத்தம் மூன்று அறைகள். இரண்டு அறைகள் தொட்டுத் தொட்டும் ஒன்று எதிர்புறமும் என்று அமைந்திருந்தது. நடுவே சூரிய வெளிச்சத்துக்காக விடப்பட்ட வெட்டைவெளி. எனக்கு அந்தத் தனி அறையை ஒழித்துத் தந்தார்கள்.

குப்தாவும் அவர் மனைவியும் ஒரு அறையிலும் அவர் மகன் ஒரு அறையிலுமாக இருந்தார்கள்.

முதல் நாள் ஆடிட் முடிய வெகு நேரமாகி விட்டது. இரவு அவருடனேயே வீடு திரும்பி அவர் வீட்டிலேயே டின்னரும் சாப்பிட்டேன். சப்பாத்தி, சுடச்சுட துவரம் பருப்பு தால். அப்புறம் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு என் அறைக்குப் படுக்கச் சென்றேன். இரவு உடை அணிந்து கொண்டு கம்பளியை (அது குளிர் காலம்) இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிப்போனேன்.

ஏன் எதற்கு என்று தெரியாமல் திடீரென்று முழிப்பு வந்தது. மொபைலை ஆன் செய்து பார்த்தால் மணி காலை நாலு. எழுந்திருக்க மனமில்லாமல் கம்பளிச் சுகம் அனுபவித்துக் கொண்டிருந்த என் காதுகளில் ஒரு மெல்லிய மூச்சு விடும் சப்தம் கேட்டது.

யாராய் இருக்கும்? சாத்தியுள்ள அறைக்குள் யாரு வந்திருப்பார்கள்? பயம் ஜிவ்வென்று உடம்பின் எல்லா செல்களிலும் பரவியது. சரி விளக்குப் போட்டுப் பார்ப்போம் என்று எழுந்தேன். அந்த சப்தம் நின்றது. இருந்தாலும் விளக்குப் போட்டுப் பார்த்தேன்.

அறையில் யாரும் இல்லை. சரி கனவாக இருக்கும் என்று நினைத்து விளக்கை அணைக்கப் போகையில் தான் அந்த சுவடுகளைப் பார்த்தேன். பெரியதும் சிறியதுமாய் இரண்டு வெவ்வேறு காலடிச் சுவடுகள். ஒன்று ஆணுடையது போன்றும் மற்றது பெண்ணுடையது போன்றும் தோன்றியது. நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்து போனது.

எனக்குத் தூக்கம் சுத்தமாக விட்டுப் போனது. விளக்கைப் போட்டு வைத்தபடியே பெட்டில் சும்மாப் படுத்திருந்தேன். மணி ஆறானதும் எழுந்து வெளியே வந்தேன்.

அதற்குள் சுபாஷும் அவர் மனைவியும் எழுந்திருந்தார்கள். சுடச்சுட டீ தந்தார் மிஸஸ் குப்தா. காலையில் கண்டதை அவர்களிடம் சொல்லலாமா என்று யோசித்தேன் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

பின்னர் அன்றைய பொழுதும் பிஸியாகவே போனது. அருகே இருந்த இரண்டு பிராஞ்சுகளுக்கும் சென்று வந்தேன். குப்தாவின் காரில் தான்.

அன்றிரவு சீக்கிரமே படுக்கச் சென்றேன். கிடந்து அடித்துக் கொண்டிருந்த மனது அமைதியாகி எப்போது தூங்கிப்போனேன் என்று தெரியாது. ஆனால் முதல் நாள் போலவே மூச்சுச் சப்தம் கேட்டு விழித்தபோது மணி நாலு!

விளக்கை போட்டதும் சப்தம் நின்றது. என் கண்கள் தன்னிச்சையாக என் பெட் அருகே சென்றன.

எல்லாம் நேற்று மாதிரியே தான். சுவடுகள்! என்ன ஒரு ஜோடி சுவடு அதிகமாகக் காணப்பட்டது. அதுவும் அளவில் பெரியது. ஆணுடையது. வலது காலில் நடு விரல் இல்லை.

நேற்று பார்த்த ஆண் சுவடு இன்று கலர் மாறி ரத்தத்தில் தோய்ந்த மாதிரித் தெரிந்தது. எனக்கு நிஜமாகவே பயமாகி விட்டது. ஐயோ என்று பெரிதாக அலறி விட்டேன். என் அலறல் கேட்டு ஒரு ஐந்து நிமிடத்தில் சுபாஷ் கதவைத் தட்டினார். கதவைத் திறக்கப் போனபோது கவனித்தேன் அந்தச் சுவடுகள் மறைந்து போயிருந்தன.

“என்ன ஆச்சு மிஸ்டர் வெங்கட்? எதுக்கு இப்படிக் கத்தினீங்க? ஏதும் கெட்டக் கனாவா? முகம் அலம்பிக்கிட்டு வாங்க. மிஸஸ் குப்தா டீ போட்டுக் கொண்டு வருவாங்க. சாப்பிடலாம்” என்றார் குப்தா.

சரியென்று சொல்லி முகம் அலம்பிக் கொண்டு அவர்கள் கிச்சனுக்குச் சென்றேன். அங்கே சிறிய டீப்பாய் எதிரில் சேரில் குப்தாவும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கையிலும் டீ கப். எனக்காக ஒரு கப் வெய்டிங்.

“என்ன ஆச்சு சாப் ஜி?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்ல நிமிர்ந்த என் கண்ணில் எதிர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு photo தென்பட்டது. குப்தா, அவர் மனைவி, மகன் மற்றும் ஒரு இளம் பெண்.

“சுபாஷ் ஜி, யார் அந்தப் பெண்?”

“ என் பெண் தான் ஜி. இந்தச் சின்ன ஊரில் வசதி இல்லை என்று நான் தான் அவளை லக்னோ அனுப்பி விட்டேன். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். அது போகட்டும். என்ன ஆச்சுன்னு சொல்ல முடியுமா? எதையும் பாத்து பயந்துட்டீங்களா?” என்று கேட்டபடியே தன் வலது காலைத் தூக்கி இடது கால் மேல் போட்டார்.

உயரம் குறைந்த டீப்பாய். அதனால் அவர் கால் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவரது வலது காலில் நடு விரல் இல்லை. ஒரு விதமான இருட்டு என்னைக் கவ்வ நான் அமர்ந்திருந்த சேரிலிருந்து கீழே விழுந்தேன். என் தலை தரையில் ‘ணங்’ என்று மோதியது தான் நான் கடைசியாக உணர்ந்தது.

முழிப்பு வந்தபோது ஒரு ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்தேன். அருகில் என் மனைவி சுஜா!

“என்னங்க என்ன ஆச்சு ஒங்களுக்கு? நேத்து திடீர்னு காலைல மயங்கி விழுந்துட்டீங்களாமாம். உங்க மேனேஜர் சுபாஷ் ஜி தான் தன் காரில் உங்கள இங்க கூட்டி வந்தார். நேத்து காலைலேர்ந்து மயக்கமா இருக்கீங்க. 24 மணி நேரத்துக்கும் அதிகமா! எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? வீட்டுக்குப் போனதும் நம்ம யூனிவர்சிட்டி பக்கத்துல இருக்கற ஹனுமார் கோவில்ல நூத்தியெட்டு ரூபாய் போட்டுறணும். ” என்று படபடத்தாள்.

நான் மெலிதாகப் புன்னகைத்தேன். எதுவும் சொல்லவில்லை.

அப்புறம் மறுநாள் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். வீடு திரும்பினேன். இரவு சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு உறங்கிப்போனேன்.

சரியாக காலை நாலு மணிக்கு முழிப்பு வந்தது. நெஞ்சம் பயத்தில் உறைந்திருக்க எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தால் என் சைட் பெட்டின் அருகில் ஒரு ரத்தத்தில் தோய்ந்த ஆண் காலடிச் சுவடு. பார்க்கப் பார்க்க மறைந்து போனது.

– மே 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *