சனியன் என்னைக் காதலிக்கிறதா…?

7
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 37,019 
 
 

அந்த சிறிய அறையில் அமைதி நிலவியிருக்க, தலைக்குமேல் சுற்றிய மின் விசிறியின் சத்தம் தெளிவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி வேர்த்துக்கொண்டிருந்தான்அவன். அவனுக்குப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண்ணை கூப்பிட்டு விட்டிருந்த நொடிகளில் நாம் உள் நுழைந்துவிட்டோம். அதுதான் இந்த அமைதி.. கொலுசும் வளையலும் ஒன்றாய் ஆர்ப்பரிக்க பெண் கையில் காபித்தட்டுடன் வந்தாள். அந்த வளையல்களின் சினுங்கல்களிலேயே நித்யாவின் இதயம் படபடத்தது.

தொடரும் முன் நான் யார்? என் பின்புலம் என்ன? என் பிரச்சினை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

என் பெயர் நித்யா என்கிற நித்தியானந்தன். கோவில்களுக்குப் பெயர் போன நகரம் என் ஊர்… பெற்றோர் இல்லை. ஒரு சித்தப்பா மட்டுமே. அவருக்கு நான் மட்டுமே.. ஆம் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை… ஏன் என்று நான் கேட்டதுமில்லை… நான் ஒரு எழுத்தாளன். பெரும்பாலும் நான் கொண்டிருந்த தனிமையும், தேடலும் என்னை எழுத வைத்தன. சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாவலை எழுதி பிரபலமாகி இருந்தேன்.

எனக்கு தொழில் சார்ந்த மேற்படிப்பு அவசியம் இல்லை என்று பலரும் சொல்லியிருக்க, நானும் அதையே நினைத்தேன். சித்தப்பா என் முடிவுகளுக்கு என்றும் தடை சொன்னதில்லை. ஆனால் அவரிடம் எதையும் மறைத்ததில்லை. அதனால் அவரும் என் போக்கிலேயே என்னை விட்டுவிட்டார்.

அடுத்த நாவலுக்கான கருவைத்தேட துவங்கினேன். பல யோசனைகள். பயணங்கள். செலவுகள் என்று ஓடிக்கொண்டே இருந்தேன். பலரிடம் பேசினேன். கடைசியில் காதலை ஆழமாகச் சொல்லும் ஒரு கதை எழுதுவது என்று என்று முடிவானது.. ஆனால் அதற்குள் இரண்டு வருடங்களுக்குமேல் ஓடியிருந்தது. கையில் காசும் இல்லை. இத்தனை நாளும் செலவு செய்த சித்தப்பாவிடம் மேலும் கேட்க மனமில்லை. இந்த நாவலை ஒரே மூச்சில் எழுதி முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். ஒரு தனிமையான இடம் தேவைப்பட்டது. குழப்பமாய் சென்னையில் சுற்றிக்கொண்டிருந்தபோது நிலாவை பேருந்து ஒன்றில் சந்தித்தேன். என் கல்லூரித்தோழி நிலா. எனக்கிருந்த ஒரே பெண் தோழி. என் நாவலின் மூலம் எனக்கு கிடைத்த தோழி. என்னை பார்த்து அவ்வளவு சந்தோஷப்பட்டாள். நலம் விசாரித்தாள். அடுத்த நாவல் தயாரா? என்றாள்.

எழுத தனிமையில் ஒரு இடம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். புருவங்களை சுருக்கி யோசித்தாள்.

அப்படியே வீட்டுக்கு அழைத்துப் போனாள். அடுக்குமாடி குடியிருப்பில், எட்டாவது மாடியில் அவள் பிளாட் இருந்தது. அவள் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினாள். சில பல விஷயங்கள் பேசினோம். உள்ளே சென்ற நிலா கையில் ஒரு சாவிக்கொத்தைக் கொண்டு வந்தாள். கேளம்பாக்கம் தாண்டி அவர்களுக்கு ஒரு சிறய இடமும், பழைய அமைதியான வீடு ஒன்றும் இருப்பதாக சொன்னாள். அம்மாவிற்கு மருத்துவ சிகிச்சை நடந்துகொண்டு இருப்பதால், அந்தப் பிளாட்டை வாங்கி குடி வந்ததாகச் சொன்னாள்.

அவள் அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பி அவள் சொன்ன அந்த வீட்டுக்கு வந்தோம். அப்படி ஒரு ரம்மியமான வீடு. வீட்டிற்குப்பின்னால் சில தென்னை மரங்கள். பழைய வீடுபோல் தெரியவில்லை.. பெரிய ஜன்னல்கள்.. காற்று தாராளமாய் உள் நுழைந்து வெளியேறும்படியான வீடு.. ஜன்னலைத் திறந்த ஒரு கணம் நிலா பளிரென்று மின்னினாள். அவளின் பின்னப்படாத கூந்தல் காற்றில் பின்னோக்கி பறக்க.. நிலா இவ்வளவு அழகா? என்று மிரண்டுபோனேன். என் அதிர்ச்சியை அவள் கவனித்திருக்க வேண்டும். ஒரு நொடி வெட்கப்பட்டு அந்தப் பக்கமாய் திரும்பினாள். வீட்டை முழுவதும் சுற்றிக்காட்டி பக்கத்து தோட்டத்தில் காவல்காரனாய் இருந்த மணி என்பவனை அறிமுகப்படுத்தினாள். எப்போதும் உதவிக்கு அவனை அழைக்கலாம்.. என்னையும் அழைக்கலாம் என்றாள்..

அவள் விடை பெறும்போது அவள் கண்களில் வெட்கம் மிச்சமிருந்ததைக் கவனித்தேன். அவள் சுதாரித்து கன்னம் சிவந்து திரும்பி போய்விட்டாள்..

காதல் நாவல் துவங்க இதைவிட சிறந்த ஒரு துவக்கம் வேண்டுமா என்ன?

இரவில் நான் எதிர்பார்த்ததைவிட அற்புதமாக இருந்தது அந்த வீடு. இரவு உணவிற்குப் பிறகு மணி கூட தொந்திரவு செய்யவில்லை.. மூன்று நாட்களாய் அப்படி ஒரு வேகம்.. நாவல் சுவாரசியமாக காதலோடு என்னைப் புரட்டத் தொடங்கியிருந்தது. ஒரு வார்த்தை கூட அடித்து எழுதவில்லை. இதற்கு முக்கிய காரணம் நிச்சயம் நிலாதான்.. அவளின் அந்த ஒரு நொடி பார்வைதான்..

மூன்றாவது நாள்..

சுவாரசியமாய் எழுதிக்கொண்டிருந்தேன். கரண்ட் போய் விளக்குகள் அணைந்தன. அமைதியை மிஞ்சிய நிசப்தம்..

நிலவின் நீல நிற ஒளி ஜன்னல் வழியே வந்து வேறு விளக்கு எதற்கு என்பதுபோல் தோன்றியது. மேற்கொண்டு எழுத மனமில்லை. நிலா அடிக்கடி வெட்கப்பட்டாள் என் நினைவுகளில். நிலாவைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. எழுந்து சென்று டேபிளின் ட்ராயரைத் திறந்து டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் நடந்தேன்.

மாடியில் நிலா வெளிச்சம் முழுவதுமாய் சிந்திக் கிடந்தது. லேசான பனி வேறு. வானை அண்ணார்ந்து பார்த்தேன். முழுநிலா… உடல் ஒருகணம் சிலிர்த்தது.. அவளைப் பார்ப்பது போன்றே ஒரு உணர்வு.

மெதுவாய் குளிர் சுட்டது. கைகளைக் கட்டிக்கொண்டு மெதுவாய் மாடியில் நடந்தேன். விளிம்பில் வந்து சுற்றிலும் நோட்டம் விட்டேன். பார்வைவைச் சுழலவிட்ட ஒரு நொடி பகீரென்றது. அந்த ஒற்றை உதய மரத்தின் அடியில் யாரோ ஒரு பெண் உருவம். மங்கிய நிலவொளியில் தெளிவாய்த் தெரியவில்லை. ஆனால் பெண் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்தது. சட்டென்று டார்ச்சை எடுத்து அடிக்க.. அது வேலை செய்யவில்லை. இரண்டு முறை தட்டி விட்டு மீண்டும் டார்ச்சை அடித்தேன் விட்டு விட்டு ஒளி வந்தது. மீண்டும் தட்ட முழுதும் உயிர்பெற்று பளீரென்று ஒளி வீசியது. ஆனால் இப்போது அந்தபெண்ணை அங்கு காணவில்லை. எனக்கு குழப்பமாய் இருந்தது.. இந்நேரத்தில் யாரது என்று.

சில நொடிக்கெல்லாம் நிலவை ஒரு ராட்சஷ மேகம் ஒன்று சூழ, ஒரு மந்தமான மன நிலையைக் கொடுத்தது. சரி கீழே போய்விடலாம் என்று திரும்ப எனக்கு சற்று தூரத்தில் அதே பெண் உருவம். “யாரம்மா அது?” என்று டார்ச்சை அடித்தேன் அவள் முகத்தில். ஒரு குரூரப் பார்வையோடு பயங்கர முகத்தில் கோரமான சிரிப்போடு அது என்னைப்பார்த்தது… பதறிப்போய் படபடவென இறங்கிக் கீழே வந்துவிட்டேன்.

வெளியே சென்று மணி இருக்கிறானா என்று பார்த்தேன். காணவில்லை. கரண்ட் வந்தது.

இதற்குமேல் எப்படி எழுத முடியும் ? சென்று படுத்துக்கொண்டேன். சில மணிக்குப் பிறகு, மீண்டும் கரண்ட கட் ஆனது.. இந்த முறை எழுந்திருக்கவில்லை..

ஆனால் பக்கத்து அறையில் யாரோ காகிதங்களைப் புரட்டும் சத்தம் கேட்டது.. எழுந்திருக்க சற்றும் தோணவில்லை.. நடப்பது நிஜமென்றால் தூங்கிவிட வேண்டும். கனவென்றால் எழுந்துகொள்ள வேண்டும்… இது மட்டுமே நினைவெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. காகிதங்களின் சத்தம் நின்றது… பெரும் நிசப்தம்.. என் வாழ்நாள் தனிமைகளை எல்லாம் அந்த ஒரு நிமிடம் வெறுக்க செய்த கொடூர அமைதி.

சற்று நேரத்திற்கெல்லாம் என் அறையில் யாரோ பலமாய் மூச்சு விடுவதை உணர முடிந்தது. விழித்திருந்தேன் ஆனால் போர்வையை விளக்கவில்லை. எப்போது தூங்கிப்போனேன் என்று தெரியவில்லை.

அடுத்த நாள் காலை மணி வந்து எழுப்பினான். கடையில் இருந்து காபி வாங்கி வந்திருந்தான், சமையலறைக்குப் போய் ஒரு கப்பை எடுத்து காப்பியை நிரப்பிக்கொண்டு வந்தான்.. எழுந்து காப்பியை வாங்கிக்கொண்டேன். அவன் ஜன்னல் திரைகளை நீக்கிவிட்டு, கட்டிலில் போர்வையை எடுத்து மடித்தான்..

இவனிடம் சொல்லலாமா? வேண்டாமா?

என் யோசனையை அவன் கவனித்திருக்க வேண்டும்.

“என்ன சார் ? “

சொன்னேன்.

எந்த சலனமும் இல்லாமல் முழுவதுமாய்க் கேட்டவன்.

“அப்படி எல்லாம் ஏதும் இல்ல சார்… ஏழு வருஷமா இங்கதான் இருக்கேன். நிலாம்மாவ ஸ்கூல் படிக்கும்போதே தெரியும். அவங்க இங்கேருந்து போயி ரெண்டு வருஷம் ஆச்சு டெய்லி நான் பக்கத்து தோட்டத்துக்கு பாத்திகட்டிட்டு இங்கேயே தான் சார் தூங்குவேன். நெறைய தடவ மொட்ட மாடில தான் தூங்கிருக்கேன்.. நீங்க சொல்றமாதிரி எதுமில்ல சார்”

அவன் பேச்சில் பொய் இல்லை.

“சார் உனக்கு தெரியாததது ஒண்ணுமில்ல.. நீ பாட்டுக்கு தூங்காம எழுதினு இருக்க.. பகல்லயும் வெளிய கெளம்பி போயிற.. சரியான தூக்கம் இல்ல சார்.. அதான் ப்ராப்ளம்… மொதல்ல நல்லா தூங்கு சார்.. நான் வேணா அப்புறமா சாப்பாடு வாங்கிட்டு வந்து எழுப்பறேன்..”

சொல்வது நியாயமாகவே தெரிந்த்தது.

“இல்ல பரவால்ல மணி..”

எழுந்து குளித்துவிட்டு, கடை இட்லியை சாப்பிட்டுவிட்டு, பக்கத்து அறையில் சிதறிக்கிடந்த காகிதங்களை(??????) எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு கிளம்பினேன். நிலாவைப்பார்க்க..

அவளின் அடுக்குமாடி லிப்டில் ஏறினேன்.. ஏற்கனவே சிலர் நின்றுகொண்டிருக்க.. உள்ளே சென்றேன்.. பின்னால் உடற்பயிற்சி உடையில் இருந்தவரின் தொப்பை என் முதுகுத் தண்டில் இடித்து சூடான பெருமூச்சு விட்டது.

மூன்றாவது மாடியில் சிலர் இறங்கிக்கொள்ள, அந்தத் தொப்பை மாமா மட்டும் இறங்கவில்லை..

அடுத்த மாடியில் அவரும் இறங்க, நான் மேலே சென்றேன். ஏழாவது, எட்டாவ்….. கரண்ட கட்.. அடச்சே..

என்று சலித்து திரும்பிய[போது….. அன்று மாடியில் பார்த்த அதே உருவம்.. அதே கோர சிரிப்புடன் என்னைப் பார்த்துகொண்டிருந்தது.. பகீரென்ற அந்த நொடி லிப்டின் கதவுகள் திறந்தன… எட்டாவது மாடி…

வியர்த்திருந்தேன். கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றிக்கொண்டு நிலா பிளாட் முன் போனபோது, அது பூட்டியிருந்தது.. சலிப்புடன் திரும்பி நடந்தேன். லிப்டில் சென்று பட்டனை அழுத்…

இல்லை இந்த முறை படிக்கட்டில் இறங்கினேன்.

வீட்டிற்கு வந்தபோது அயர்வாய் இருந்தது.. அப்போதுதான் கவனித்தேன் வீடு திறந்தே இருந்தது.. மணியிடம் கூட சாவி இல்லையே…தூக்கிவாரிப்போட்டது..

தயங்கியபடி உள்ளே நடந்தேன்.. யாருமில்லை.. பகல் வெளிச்சம் உள்ளே முழுவதும் பரவிக்கிடந்தது எனக்கு ஒரு அசட்டு தைரியத்தைத் தந்தது.. மெதுவாய் நிதானமானேன். அப்போதுதான் நான் எழுதும் அறையில் காகிதங்கள் புரட்டும் சத்தம் கேட்டது.. இதயத்துடிப்பு கூடியது.. ஆனால் முன்பு வந்த அதே அசட்டு தைரியம் மிச்சமிருந்ததால், அறைக்குள் நுழைந்தேன். அங்கு காகிதங்ககளைப் புரட்டிக்கொண்டு நிலா!!!!

என்னைக்கண்டதும் அதிர்ச்சியானவளை பயம் தொற்றிக்கொண்டது போல் பேசினாள்..

“நித்யா அது வந்து… சாரி..” தடுமாற

நான் சிரித்தேன்..

“அப்படா.. எங்க நீ கோவப்பட்டு கத்திருவியோன்னு பயந்துட்டேன்..” சின்ன இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.. “ நீ எழுதி முடிக்கவரைக்கும் ஆர்வம் தாங்கலையா, அதான் நீ இல்லாதப்போ உனக்குத் தெரியாம…. சாரி” என்று கெஞ்சினாள்.

“அட பரவால்ல நிலா..கேட்டா நானே கொண்டு வந்து காட்டப்போறேன்.. உனக்கு இல்லாத உரிமையா.. “

சிவந்தாள்.. மணி உள்ளே வந்தான். பேசிக்கொண்டிருந்தோம்.. ஒன்றாக சாப்பிட்டோம்…

மாலை அவள் கிளம்பினாள்… மனம் நிம்மதியாக இருந்தது.. வந்து எழுத்தைத் தொடந்தேன்..

நிறைய எழுதினேன்.. கொஞ்சம் அயர்வுற்று தூங்கியபோது மணி வந்து எழுப்பினான்…

“சார் போதும் போய் தூங்குங்க.. இப்படி தூக்கத்தக் கெடுத்துகிட்டு அப்புறம், குள்ளமா ஒருபொண்ணு வந்துச்சு. என்னபார்த்து சிரிச்சுசுன்னு இன்னொரு கதை சொல்வீங்க..” என்றான்

அடப்பாவி.. அதை ஏண்டா ஞாபகப் படுத்தின? என்றிருந்தது எனக்கு..

படுத்து உறங்கிப்போனேன்.. விடியற்காலை மூன்று மணி இருக்கும்.. சம்மந்த்தமில்லாமல் விழித்துக்கொண்டேன்.. தலைமாட்டில் செம்பில் இருந்த தண்ணீரைக் குடித்தேன். செம்பை வைத்துவிட்டு கீழ் நோக்கி பார்த்தபோது..

என் கால்மாட்டில் குத்துக்காளிட்டுக் கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு என்னையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது அதே உருவம்… அவ்வளவு கோரம்.. தொண்டை வறண்டது.. சட்டென்று எழுந்து லைட்டைப் போட்டேன்.. யாருமில்லை..

லைட்டை அணைக்காமலே தூங்கினேன். அடுத்து வந்த சில நாட்களிலும் நள்ளிரவுகளில் இதே சம்பவம் நடந்ததது… இதை மணியிடம் சொன்னாள் மனநோய் என்பான்..

என்ன செய்வது.. சரி இது நிஜம்தானா என்று பார்க்க வேண்டும்..

அன்று மணியிடம் “ மணி எனக்கு மைன்ட் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது.. வேலைய முடிச்சுட்டு வந்து என்கூட பீச்சுத்துனைக்கு தங்கிக்கறியா?” என்றேன்..

அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான்.. என் முகம் மாறுவதைக் கண்டு “ சரி சார் அதனால என்ன? வர்றேன் சார் “ என்றான்.

அன்று நள்ளிரவில் மணி அலறியடித்து எழுந்தான். தன் கால்மாட்டில் யாரோ உட்கார்ந்துகொண்டு தன்னையே பார்த்து சிரிப்பதாகச் சொன்னான்.

கால்மாட்டுபக்கம் திரும்பவே பயந்தான்..

“சரி இப்போ பாரு உட்கார்ந்திருக்கான்னு, “

“வாணாம் சார் “ அலறினான்..

“அட நான் இருக்கேன் பாரு..”

எச்சிலை விழுங்கிக்கொண்டு மெதுவாக பார்த்தான்.. முகம் மாறி, சற்று பெருமூச்சு வாங்கி “ இல்ல சார்….. ஆனா ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சு சார்” என்றான் படுத்துக் கொண்டான்..

இப்போது நான் பார்த்தேன்.. என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது அது!!!!!!!!

அதன் பின்வந்த நாட்களில் அது சாதாரணமாய் என்னைப் பின் தொடர்ந்தது.. என்னருகில் காலியாய் ஒரு நாற்காலியோ, காலி இடமோ இருந்தால் அது அங்கே உட்கார்ந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.. எனக்கு பயமிருந்தாலும்.. பயம் பழகிப்போனது.. எழுதுவதை நிறுத்தி ஒரு வாரம் ஆகி இருந்தது.. எதற்கு இப்படி ஒரு சோதனை..?

சரி மீண்டும் எழுதுவது நடக்காத காரியம்.. அது நம்மை எங்கு போனாலும் விடாது என்பது புரிந்தது.. ஆனால் ஏன் என்பது புரியவில்லை… எழுதிய காகிதங்களை எடுத்துக்கொண்டு புறப்பட முடிவு செய்தேன்.. அப்போது தான் என் காகிதங்களுக்கு நடுவில் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த காகிதத்தை பார்த்தேன்.. எனக்கு எப்போதும் நாவல் எழுதும்போது, காகிதங்களை மடிக்கும் பழக்கம் இல்லை.. எடுத்துப் பிரித்தேன்..

என் நாவலின் ரசிகை எனக்கு ரசிகையாகி, மனைவியாக விண்ணப்பம் போட்டிருந்தாள்..

ஆம் நிலா காதலை சொல்லியிருந்தாள்.. அந்தநொடி சிலிர்த்து பறந்தேன்.. என்னுடைய பதில் அவளுக்குத் தெரிந்தே இருந்தாலும், என் எழுத்துக்கள் மூலம் அவளிடம் பேச வேண்டுமாம்.. என்று சொல்லியிருந்தால்.. என் எழுத்துக்கள் தானே அவள் காதலுக்கு பிள்ளையார் சுழி…

உலகின் சிறந்த காதல் கடிதத்தை ரசித்து எழுதத் தொடங்கி இருந்தேன்..

வார்த்தைகள் சரியாய் அமையவில்லை.. பல காகிதங்களைக் கசக்கினேன்.. என் மூளையையும்தான்.. ஒரு வழியாய் எழுதி முடித்தேன்..

அன்று இரவு யாரோ விசும்பி விசும்பி அழும் சத்தம் கேட்டது.. சுற்றிலும் பார்த்தேன்.. யாருமில்லை.. எழுந்து வீடு முழுக்க தேடினேன்.. யாருமில்லை.. அனால் எனக்குப் புரிந்தது.. இது ‘அது’ தான்..

எழுதும் அறைக்கு சென்றேன்.. நான் காதலை நிலாவிற்கு எழுதியிருந்த காகிதம் பிரிந்து கிடந்தது…

‘அது’ எக்காலத்திலும் என்னை விட்டுப் போகாதுபோல… இதில் நிலாவை வேறு உள்ளிழுத்து அவள் சந்தோஷத்தைக் குலைக்க வேண்டுமா?”

அந்தக்காகித்தை கிழித்து எறிந்தேன். ‘முடியாது, நீ எனக்கு நல்ல தோழி மட்டுமே என்று சொல்லிவிடலாம்”

வந்து படுத்தேன்..

ஆச்சர்யம் இப்போது விசும்பலும் அழுகையும் முழுவதும் நின்றிருந்தது..

அடக்கருமமே.. இந்த சனியன் என்னைக் காதலிக்கிறதா?

அன்றிரவு விழித்துப் பார்த்தேன்.. கால் மாட்டில் அது இல்லை.. அப்பாடா என்பதுபோல் திரும்ப..

அது என் பக்கத்தில் என்னையே பார்த்து அதே கோர சிரிப்போடு படுத்துக்கொண்டிருந்தது..

—-

நிலாவிடம் வேண்டாமென்று சொல்லி கடிதம் போட்டுவிட்டேன்.

அடுத்தநாள் காலை மணி காணாமல் போயிருந்தான்.. ‘அது’ பகலிலேயே எனக்கு நன்றாக தென்பட ஆரம்பித்திருந்தது..

என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போனேன்..

கடைக்குப் போய் ஒரு நல்ல காபி குடிக்க வேண்டும் என்று சத்தமாய் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்..

சித்தப்பாவிற்கு ட்ரன்க் கால்…

எல்லாவற்றையும் சொன்னேன்.. முழுவதுமாய்.. கொஞ்சம் அமைதி காத்தவர்.. ஒரு வழி இருக்கு இரு நேர்ல வர்றேன்.. என்று போனை வைத்தார்.

அடுத்தநாள் ஒரு பெண்ணின் ஜாதகம் கொண்டுவந்திருந்தார்..

“என்ன சித்தப்பா, அந்தப்பொண்ணோட வாழ்க்கைய யோசிச்சீங்களா?, இத நெனச்சுதான் நிலாவ வேண்டாம்னு சொன்னேன்” என்றேன்

“நித்யா அதுக்கு ஒருவேள நீ நிலாவ கல்யாணம் பண்றதுதான் பிடிக்கலையோ என்னவோ.. இத வேணா முயற்சி பண்ணி பார்ப்போமே.. அதுமில்லாம.. கல்யாணம்ங்கறது கடவுள் சம்மந்தப்படாது.. அங்க இதுங்களோட ஆட்டம் எடுபடாது.. “ என்றார் சித்தப்பா..

அவர் சொன்னது போலவே “அது” திரும்ப என் கண்ணில் படவே இல்லை.. வழக்கமாய் அது இருக்கும் எல்லா இடங்களிலும் கவனித்தேன்.. இரவில் விழித்து கால்மாட்டில், என் பக்கத்தில் ம்ம்ஹும்… எங்குமே காணவில்லை.. உறுதியாக போய்விட்டது..

இப்போது பெண் பார்க்க வந்திருக்கிறோம்.. ஆனால் இன்னமும் எனக்கு பயம் இருக்கவே செய்கிறது.. என்னால் அந்தப்பெண்ணுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று…. எப்படியும் அவளிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட வேண்டும்..

பெண் காபி கொண்டு வந்தாள்..

அவனுருகே பெண்ணின் கைகள் நீண்டன.. காபியைப் பார்த்து எடுத்துக்கொண்டே நிமிர்ந்தவனின் முகம் மாறியது. அந்தப் பெண்ணின் முகத்தில் அதே குரூரப்பார்வையும், கோர சிரிப்பும்…

Print Friendly, PDF & Email

7 thoughts on “சனியன் என்னைக் காதலிக்கிறதா…?

  1. ஸ்டோரி செம்ம ஆனா கிளைமாக்ஸ் கொஞ்சம் நல்லா ட்ரை பண்ணிருக்கலா…

  2. நல்ல கற்பனை, அழகாக எழுதியிருக்கிறீர்கள். கடைசியில் மனதில் பல கேள்விகள் (விடைகள் உண்டோ?) எழுந்தாலும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    பாராட்டுகள் நண்பரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *