ஒன்பதாவது ஆள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 43,500 
 
 

ஞாயிற்றுக்கிழமை காலை.

நரேன் தன் மனைவி காயத்ரி, மகள் ஹரிணியை சென்னை சென்ட்ரலுக்கு கூட்டிச் சென்று பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ஏஸி ரயிலில் ஏற்றிவிட்டான்.

சரியாக ஏழரை மணிக்கு ரயில் கிளம்பியதும் ‘என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா; அடுத்த நாலு நாளைக்கு எனக்கு முற்றிலும் சுதந்திரம். தினமும் விதவிதமா ஒருத்தி’ என மனசுக்குள் நரேன் குதூகலித்தான்.

பார்க்கிங் வந்து காரைத் திறந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தபோது, பின்புற இடது கதவு தானாகத் திறந்து மூடிக்கொண்டது. நரேன் காருக்குள் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான். ஆனால் பின்புறம் எவரும் இல்லை. காலியாகத்தான் இருந்தது.

தனக்கு அடிக்கடி ஏன் இப்படி மனப்பிரமை தோன்றுகிறது என்று எண்ணிக்கொண்டே காரைக் கிளப்பினான்.

பாலவாக்கத்தில் வீடு. வீட்டிற்கு செல்வதற்குமுன் காரை நிழலோரம் நிறுத்தி, மொபைலில், “ஹாய் மாயா இன்னிக்கு ஈவ்னிங்கே வீட்டுக்கு வந்துரு; ஸ்காட்ச் வச்சிருக்கேன். லெட்ஸ் என்ஜாய்…” என்றான்.

பிறகு உற்சாகத்துடன் காரைக் கிளப்பி பாலவாக்கம் நோக்கிச் செலுத்தினான். அப்போது காரின் பின்பக்கமிருந்து, “மாயா இன்னிக்கி வேண்டாம் நரேன்… உனக்கு இன்னிக்கி நான் இருக்கேன்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது,

நரேன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். பின் இருக்கை காலியாகத்தான் இருந்தது. நடுங்கிப் போனான். பயத்தில், “ஏய் யாரது?” என்று அதட்டினான். .

“நான்தான் ராஜலக்ஷ்மி. இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டேன். இப்போது அரூபமாக அலைகிறேன். ஸ்டேஷன் பார்க்கிங்கில் நீ கார் ஏறும்போது நானும் பின் பக்கம் ஏறிக்கொண்டேன்…”

“ஓ காட். சரி உனக்கு இப்ப என்ன வேண்டும்?”

“மாயாவுக்கு போன் பண்ணி இன்று வரவேண்டாம் என்று சொல்லிவிடு. அவளுக்கு பதிலாக என்னுடன் ஜாலியாக இரு…”

பயந்துபோய் காரை ஓரங்கட்டி நிறுத்தினான். அவள் உடனே பின் பக்கக் கதவைத் திறந்து மின்னலென முன்பக்கம் ஏறி நரேன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“என்னிடம் பயப்படாதே. உன்னால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் நீ என்னைத் தொட்டு உணரலாம்..”

நரேன் இடது கையை நீட்டி பயத்துடன் அவளைத் தடவினான். இளமையான உடம்புதான் என்று நினைத்துக் கொண்டான்.

“நரேன், என்னிடம் நீ பயப்படாதே. நான் இப்போது ஒரு அரூபமான பேய். விபத்திலோ, கொலையுண்டோ, தற்கொலையாலோ ஒருவர் இறந்துவிட்டால், இறந்த பதிமூன்றாவது நாளில் ஆவியாகப் பிறந்து இயற்கையான மரணத்தேதி வரை ஆவியாக அலைவார்கள். அவர்கள் பெண்ணாக இருந்தால் பேய்; ஆணாக இருந்தால் பிசாசு.”

“அப்படியா?” ஈனமாகக் கேட்டான்.

“ஆமாம், நாய்கள் மட்டுமே ஆவிகளை அடையாளங் கண்டுகொண்டு எங்களைப் பார்த்துக் குரைக்கும். பயப்படாதே உனக்கு இன்று என்மூலம் வித்தியாசமான இன்ப அனுபவம் கிடைக்கும். இதற்குமுன் நீ அரூபமான பெண்ணை அனுபவித்திருக்கிறாயா? கண்டிப்பாக மாட்டாய்…”

பாலவாக்கம் அபார்ட்மெண்டை அடைந்தபோது செக்யூரிட்டி நரேனைப் பார்த்து சல்யூட் அடித்தான். உடன்வந்த அரூபம் அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

இருவரும் லிப்டில் ஏறி நான்காவது தளத்திலுள்ள நரேன் வீட்டையடைந்தார்கள்.

இரண்டு பெட்ரூம்களுடன் வீடு விஸ்தாரமாக இருந்தது. அரூபம் உடனே மெயின் டோரைச் சாத்திவிட்டு எல்லா ஜன்னல்களையும் அடித்துச் சாத்தியது. .

பிறகு உரிமையுடன் ப்ரிட்ஜைத் திறந்து பால் எடுத்து இருவருக்கும் காபி கலந்தது. அதன்பின், “நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்..” என்று பாத்ரூமில் நுழைந்து கொண்டது. அது ஷவரில் குளித்துக் கொண்டிருந்தபோது நரேன் சாவித்துவாரத்தின் வழியாக ஆர்வத்துடன் உள்ளே பார்த்தான்.

பக்கவாட்டில் அது ஷவரில் நின்றபோது, அதன்மீது தெளித்துக் கொண்டிருந்த நீர்த்திவலைகள் மூலமாக எலும்புக்கூடு, சதைகள் இல்லாத வெறும் உடலமைப்பின் வடிவம் மட்டும் தெரிந்தது. மார்பகமும், ப்ருஷ்டங்களும் நல்ல வடிவமைப்பில் வளப்பமாக இருந்தது.

இன்று தனக்கு வித்தியாசமான வேட்டைதான் என்று நரேன் எண்ணிக்கொண்டான்.

குளித்துவிட்டு வாசனையுடன் வெளியே வந்தது. தோசை மாவு எடுத்து தோசை வார்த்து,. சாம்பாரைச் சுட வைத்து இருவரும் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டார்கள்.

நரேன் மறக்காமல் மாயாவுக்கு போன் செய்து அவளை வரவேண்டாம் என்றான்.

பிரேக்பாஸ்ட்டின் போது அருகில் சென்று அரூபத்தை அணைக்க நரேன் முற்பட்டான். அரூபம் அவனைத் தடுத்து “எனக்கு கொலைப்பசி… அப்புறம்தான் எல்லாம்…” என்றது.

“பசித்தால் எப்படி உனக்கு உணவு கிடைக்கும்?”

“எல்லா ஹோட்டல்களுமே என்னோடதுதான்… கூட்டம் இல்லாத நேரங்களில், யார் மேலும் இடிக்காமல் ரகசியமாக உள்ளே சென்று வேண்டியவற்றை எடுத்துச் சாப்பிடுவேன். நான் ப்யூர் வெஜிடேரியன்…”

“உனக்கு நான் எத்தனையாவது ஆள்?”

“என் கணவனையும் சேர்த்து நீ எனக்கு ஒன்பதாவது ஆள்…”

நரேன் சிரித்துக்கொண்டே “நான் கணக்கே வைத்துக் கொள்வதில்லை….கிட்டத்தட்ட நூறைத் தாண்டியிருப்பேன்…” என்றான்.

‘தெரியும்டா நாயே, அதனாலதானே இன்னிக்கி இங்க வந்திருக்கேன்.’ அரூபத்தினுள் தூங்கிக் கொண்டிருந்த கருநாகம் சீறியது.

பெட்ரூமில் மாட்டியிருந்த ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து, “இது எதுக்கு இங்கே?” என்றது.

“நான் தீவிர ரசிகன்…”

“போதும், போதும். தமிழர்களுக்காக உயிரையே கொடுப்பேன் என்று டயலாக் பேசிவிட்டு, இப்ப பெண்டாட்டி சேலைக்கு பின்னே போய் ஒளிந்துகொண்ட கோழை அவர்… அதனால் தமிழகத்தில் மீண்டும் சாக்கடை ஆட்சிதான்…பாவம் தமிழக மக்கள்.”

ரஜினி படத்தை அகற்றி குப்பைத்தொட்டியில் கடாசியது. நரேன் தடுக்கவில்லை.

பீரோவைத் திறந்து ஸ்காட்ச் விஸ்கியை எடுத்தான்.

“நீ குடிப்பியா?”

“நோ… நோ…”

அரூபம் உரிமையுடன் ப்ரிட்ஜைத் திறந்து இரண்டு கோக்கோ ஜெல்; ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டது. சமையலறைக்குப் போய் கத்தி ஒன்றை எடுத்துகொண்டு வந்து நரேன் முன் அமர்ந்தது.

“கோக்கோஜெல் வெறும் தேங்காய்த் தண்ணீர்தான்…”

“தெரியும்.”

நரேன் நிறையக் குடித்துவிட்டு கிளர்ச்சியுடன் அரூபத்தை அணைக்க நெருங்கி வந்தான்.

“இப்ப வேண்டாம். உன் கண்கள் ஜிவுஜிவுத்து பார்க்கவே பயமா இருக்கு…உன்னால இப்ப சரியா இயங்கவோ, முயங்கவோ முடியாது. முதலில் நன்றாகத் தூங்கு. மப்பு தெளிந்ததும் வச்சுக்கலாம்… நானும் போய் பக்கத்து பெட்ரூமில் தூங்குகிறேன்…”

அடுத்த நொடி பெட்ரூம் கதவு அடித்துச் சாத்தப்படும் சத்தம் கேட்டது. நரேன் தன்னை சற்று நிதானித்துக்கொண்டு எழுந்து சென்று பெட்ரூம் கதவை உட்புறம் தாளிட்டுவிட்டு உடைகளைக் களைந்து, மெலிதாக ஏஸியை இயங்கச் செய்தான்.

மனைவி காயத்ரியிடம் இருந்து செளக்கியமாகப் போய்ச் சேர்ந்ததாக மொபைல் வந்தது.

நரேன் உடம்பைப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

மப்பில் நன்றாகக் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, போர்வையை விலக்கிவிட்டு அவன் தொடையிடுக்கில் யாரோ கை வைப்பது போல் இருந்ததால் திடீரென முழித்துக்கொண்டு, “யாரது?” என்று அதட்டினான்.

“நான்தான் ராஜலக்ஷ்மி…”

“நீ அப்பவே கதவைச் சாத்திவிட்டு இங்கிருந்து வெளியே போனாயே?”

“நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளேதான் இருந்தேன்…”

அரூபத்தினுள் காத்துக்கொண்டிருந்த கருநாகம் சீறிப்பாய்ந்து தன் கொடிய விஷத்தைக் கக்கியது.

ஞாயிறு மாலை…

அரூபம் நிதானமாகச் சமைத்துச் சாப்பிட்டது. பிறகு பக்கத்து பெட்ரூமில் போய் நிம்மதியாகத் தூங்கியது.

மறுநாள் திங்கட்கிழமையன்று, ப்ரெட், முட்டைகள், திரட்டுப்பால்; பழங்கள் என ப்ரிட்ஜில் இருந்த அனைத்தையும் காலி செய்து பசியைத் தீர்த்துக்கொண்டது. சற்றுநேரம் டிவி பார்த்தது.

செவ்வாய்க்கிழமை வுமன்ஸ் ஹார்லிக்ஸ் மட்டும் கரைத்துக் குடித்தது.

புதன்கிழமை காலை அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகில் குடியிருந்தவர்கள் கதவைத் தட்டி “நரேன், நரேன்…” என்று கூப்பிட்டார்கள். பதிலில்லை. அலுவலகம் போன் செய்தால், மூன்று நாட்களாக நரேன் வரவில்லை, இன்பர்மேஷனும் இல்லை” என்றார்கள்.

போலீஸை வரவழைத்து உடனே கதவை உடைத்தனர். அரூபம் உள்ளேயே ஒளிந்துகொண்டு போலீசை வேடிக்கை பார்த்தது.

பெட்ரூமில் நரேன் தொடையிடுக்கில் கத்தியால் குத்தப்பட்டு, ஏராளமான ரத்தம் வெளியேறி கோரமாக இறந்து கிடந்தான்… கத்தி பிறப்புறுப்பில் சொருகப் பட்டிருந்தது.

கர்சீப்பால் மூக்கை பொத்திக்கொண்ட இன்ஸ்பெக்டர் எஸ்பியிடம், “சார் இது சேம் மோடஸ் ஆபராண்டி (modus operandi)… கடந்த இரண்டு வருடங்களில் இவன் ஒன்பதாவது ஆள்.. இதுக்கு முன்னால நங்கநல்லூர், சோளிங்கநல்லூர், டிநகர், மயிலாப்பூர், தாம்பரம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எக்மோர் இப்ப கடைசியா பாலவாக்கம்… நங்கநல்லூரில் ராஜலக்ஷ்மி என்று ஒரு பெண்மணி அதே அறையில் தற்கொலை செய்துகொண்டதாகக்கூட நினைவு” என்றார்.

“எதாவது காமன் க்ளூ இருக்கா?”

“இருக்கு சார். இறந்த அனைவருமே மனைவியைத் தவிர வேறுபல பெண்களிடம் தொடுப்பு வைத்திருந்தவர்கள்… “

“ஓ காட்… அப்படீன்னா இது ஏதோவொரு ஒழுக்கமான பெண்மணியோட பழி வாங்கற தொடர் கொலைகள்…”

இதைக்கேட்ட அரூபத்தின் மார்பு பெருமையில் விம்மிப்புடைத்தது.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *