(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35
அத்தியாயம்-26
இந்தப் பீதியூட்டும் விபரீத நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் பின்னப்பட்டிருப்பதன் விந்தையை உணர்ந்தேன். என் தந்தையின் பீரோவில் ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் கோணல்மாணலான படங்களும் – அதன் நடுவில் பலவித எழுத்துக்களால் குறிக்கப் பட்ட விசித்திரமான சக்கரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
மந்திர சாஸ்திரங்களில் என் தந்தைக்கும் பரிச்சயம் ஏற்பட்டது, அவரது கடைசிக் காலத்தில்தான். ஒருவேளை என் தந்தையும் என்னைப் போலவே பலவித அனுபவங்களுக்கு உட்பட்டுத் தவித்தவர்தானோ?
அவரையும் ஒரு சக்தி துரத்தி அவர் வாழ்வையும் ஒரு புயலில் சிக்க வைத்ததோ!
ஒன்றும் புரியாமல் தத்தளித்தேன். அப்போது பால் வடியும் சீதாவின் முகம்தான், எனக்கு, கரை தெரியாத ஒரு மாலுமிக்குக் கலங்கரை விளக்கம் உதவுவது போல உதவியது. நான் மட்டும் சீதாவை அன்றிரவே அடைந்துவிட்டால் அப்புறம் எனக்குக் கவலையே இல்லையல்லவா? தூய பெண்ணின் காதலின் சக்தி மற்ற துர்சக்திகளையெல்லாம் அழித்துவிடுமல்லவா? ஆனந்தியே அதைத்தானே சொல்லிவிட்டுச் சென்றாள்?
புராணக் கதையில் ராமன் ராவணனிடமிருந்து சீதாவை மீட்டான்.
இன்று ஒரு சீதா இந்தத் திலீப னைக் காப்பாற்ற முடியும்.
சாப்பிட்டு முடிந்ததும் கை கழுவ பாத்ரூமுக்குச் சென்றுவிட்டு வாசல்புறம் வந்தேன்.
அங்கு ஒரு தட்டில் அழகான பீடாக்கள் வைத்துக்கொண்டு சீதா காத்திருந்தாள். சிரித்தபடியே அவளிடமிருந்து பீடாவை வாங்கிப் போட்டுக்கொண்டு தெருப்பக்கம் வந்தேன்.
அப்போது தெருவிலே ஓர் உருவம் எங்கள் வீட்டை அடுத்த காம்பவுண்டுக்குள் எதையோ எறிந்து விட்டுச் செல்வதை உணர்ந்தேன்
சீதா வரவில்லையென்றால் சீதாவின் புடவையோடு கட்டிலில் படுத்திருந்தது யார்?
என் பார்வை என்னையும் அறியாமல் அந்த உருவத்தையே பின் தொடர்ந்தது. அந்த உருவம் தெருக் கோடியில் உள்ள எலக்ட்ரிக் தெரு விளக்கைத் தாண்டும்போது, அந்த உருவத்தின் முதுகுப்புறம் மேஜர் மாயநாதன் போல் தெரிந்தது.
ஓடிப்போய் உற்றுக் கவனித்தேன். அந்த உருவம் தெருக்கோடியின் திருப்பத்தில் மறைந்துவிட்டது. உடனடியாக, காம்பவுண்ட் சுவரை அடுத்த புல் தரையில் என்ன பொருளை வீசி எறிந்திருக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தேன். ஒரு பொருளும் தென்படவில்லை.
அதற்குள் சீதா, ”என்ன அத் தான் தேடுகிறீர்கள்? ஏன் அப்படி அவசர அவசரமாகத் தெருவுக்கு ஓடினீர்கள்!” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை சீதா தெருவில் யாரோ தெரிந்த உருவம் போல் இருந்தது. அதனால்தான் ஓடிப்போய்ப் பார்த்தேன்,” என்று சொல்லிவிட்டுச் சீதாவை நோக்கி ஒரு பாசாங்குப் புன்னகை செய்தேன்.
”அத்தான், உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நிமிஷத்துக்கு நிமிஷம் நீங்கள் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறீர்கள்!”
”சீதா, உனக்கு என் விசித்திர சுபாவம் கவலை தருகிறது அல்லவா?”
“இல்லை. உங்கள் விசித்திர சுபாவம்தான் எனக்குக் கவர்ச்சி தருகிறது. புரியும்படியான சாதாரண மனிதராக நீங்கள் இருந்துவிட்டால், ஒருவேளை எனக்கு உங்கள் மீது ஆசை ஏற்பட்டிருக்காது. படித்து முடிக்காத நாவல், அடைய முடியாத அடிவானம், போய்ப் பார்க்காத ஊர், இவைகள் மீதுதானே நமக்குக் கவர்ச்சி ஏற்படுகிறது?” என்றாள்.
“அடைய முடியாத அடிவானமல்ல இன்னும் படித்து முடிக்காத புத்தகம். நான் ஒப்புக் கொள்கிறேன். எப்போது வேண்டுமானாலும் நீ திலீபன் என்ற இந்தப் புத்தகத்தில் எந்த அத்தியாயத்தைப் படிக்க விரும்புகிறாயோ அதைப் படிக்கலாம் சீதா, இன்றே படிக்கலாம்.”
சீதா வெட்கத்தோடு என்னைச் சுட்டிக் காட்டி, “இந்தப் புத்தகத்தை முறையாக முன்னுரையிலிருந்து படிக்க விரும்புகிறேன். அவசரப்பட்டு நடுநடுவே படிப்பது புத்தகம் படிக்கும் வழியா? புத்தகத்தின் சுவை குன்றிவிடாதா?” என்று ஜாடையாக என் விருப்பத்துக்கு மறுப்புத் தெரிவித்தாள்.
அவளுடைய பதில் எனக்கு ஆத்திரத்தை விளைவித்தது. “சீதா, இன்று பத்தரை மணிக்கு அறைக்கு வரவேண்டும். இது என் கட்டளை,” என்றேன்.
“தாலி கட்டு முன்பே கட்டளையிட ஆரம்பித்துவிட்டீர்களோ?”
“இல்லை சீதா. நான் சொல் தைக் கேள். நான் ஒரு பெரிய நெருக்கடியில் இருக்கிறேன். இன்று நீ என் அறைக்கு வந்து என் விருப்பத்தை நிறைவேற்றுவதால் முறையை மீறலாம். பண்பை நழுவவிடலாம். ஆனால் என்னைக் காப்பாற்றுவாய். நம் இருவர் வாழ்க்கையையும் காப்பாற்றுவாய்!”
“ஏன் அப்படி அவசரப்படுகிறீர்கள்! கிணற்று வெள்ளத்தை ஆற்றுவெள்ளம் அடித்துச் செல்ல முடியுமா?”
“கிணற்று வெள்ளத்தையும் ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லக் கூடிய ஒரு விபரீதச் சந்தர்ப்பம் வந்து விட்டது சீதா. இப்போது நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஒருநாள் எல்லாம் விளக்கமாகச் சொல்கிறேன்.”
நான் என் அறையில் போய்ப் படுக்கையில் படுத்தபடி காத்திருந்தேன்.
மணி 9 ஆகியது. பிறகு 9.30 ஆகி, பிறகு 10 மணி அடித்தது. சீதா இன்னும் வரவில்லை. வீட்டில் எல்லோரும் படுத்துவிட்டனர். நான் மட்டும் சீதாவுக்காகக் காத்திருந்தேன்.
அறைக்கு வெளியே வந்து பார்த்தேன். முழு நிலவு நிர்மலமான ஆகாயத்தில் ஆனந்தமாகச் சென்று கொண்டிருந்தது.
இன்று பௌர்ணமி என்று நினைத்ததும், சித்ரா பௌர்ணமியின் நினைப்பும் தொடர்ந்து எழுந்தது. என்னுடைய அறைக்கு வீதியிலிருந்து வரலாம். வீட்டினுள் இருப்பவர்கள் கொல்லைப் புறத்திலிருந்து தெருவுக்குச் செல்லும் ஒரு சந்து வழியாகவும் வரலாம்.
வீட்டின் வாயிற்புறக் கதவு இரவு பூட்டியிருக்குமாகையால் சீதா வருவதாயிருந்தால் கொல்லைப்புற வழியாகத்தான் வரவேண்டும். கொல்லைப்புறம் பார்த்துப் பார்த்து என் கண் பூத்துவிட்டது.
கடியாரத்தில் மணி 12 அடித்தது. 9 மணியிலிருந்து 12 மணிவரையில் காத்திருந்த எனக்குச் சீதா வருவாள் என்ற நம்பிக்கை போய்விட் டது. ஆத்திரம் தீர நடந்துவிட்டு வருவோம் என்று கால் கொண்டு சென்ற படி நடந்தேன்.
தால், பீடுடைய, காடுடைய, ஏடு டைய என் வரும்.
சுமார் இரண்டு பர்லாங்கு நடந்ததும் ராஜகுமாரி தியேட்டர் வெளிப்புறம் வரை வந்துவிட்டேன்.
கடைசிக் காட்சி முடிந்து மக் கள் வந்து கொண்டிருந்தனர். நான் வீடு திரும்ப நினைக்கும்போது எதிரே ஒரு டாக்ஸியிலிருந்து மேஜர் மாயநாதன் இறங்கினார்.
அவர் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார். எனக்கு அவரைப் பார்க்கவும் நடுக்கமாக இருந்தது.
அவர் இறங்கிவந்த டாக்ஸியில் ஒருவேளை ஆனந்தி உட்கார்ந்திருப்பாளோ என்று நினைத்தேன்.
நாம் நினைப்பதையெல்லாம் உடனே புரிந்து கொள்ளும் சக்தி இந்த மேஜருக்கு எப்படித்தான் ஏற்பட்டதோ தெரியவில்லை. “ஆனந்தி என்னோடு வரவில்லை. நான் மட்டும்தான் படம் பார்க்க வந்தேன். என்ன மிஸ்டர் திலீபன், ஊட்டியிலி ருந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லா மல் கொள்ளாமல் திடீரென்று வந்து விட்டீர்கள்?” என்று சொல்லிவிட்டு என் தோளை ஒருமுறை தட்டினார். ஏதோ பதில் சொல்லி மழுப்பினேன்.
“என்ன இப்படிக் கால் நடையாக ராத்திரி வேளையில் சுற்றுகிறீர்கள்? டாக்ஸியிலே ஏறிக் கொள்ளுங்கள் மிஸ்டர் திலீபன். நான் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன்,” என்றார்.
“ரொம்பத் தாங்க்ஸ். இல்லை, வேண்டாம்… நடந்தே போகிறேன்.” என்று சொல்லிவிட்டு வேகமாக வீடு நோக்கி நடந்தேன்.
சீதா மட்டும் சொன்னபடி வந்திருந்தால் எவ்வளவு இன்பமாகப் பொழுது போயிருக்கும் என்று சீதாவின் அழகைக் கற்பனை செய்து மகிழ்ந்தேன்.
இன்னும் ஆசை அதிகமாயிற்று. ஆசையோடு ஒரு முட்டாள்தனமான எண்ணமும் எழுந்தது. நேராகச் சீதா படுத்திருக்கும் அறைக்குச் சென்று அவளையே எழுப்பினால் என்ன?
சீதாவும் என் தாயும் ஒரே அறையில் படுத்திருப்பார்கள் என்பதை நினைத்ததும் என் துணிவு பறந்து விட்டது. சத்தம் செய்யாமல் தெருவிலிருந்து என் அறைக்குச் சென்றேன்.
கதவு தள்ளிக்கொண்டு உள்ளே சென்றது. இருண்ட அறையில் நுழைந்தேன். இருளில் என் படுக்கையில் சீதா படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
உடனே எனக்கு அவள் மீதிருந்த கோபமெல்லாம் மாறியது.
நான் வெளியே சென்றபோது வந்து படுத்திருக்கிறாள். என்ன செய்வாள், பாவம்! என் தாய் தூங்கிய பின்தானே அவள் வர முடியும்?
“சீதா” என்றேன்.
உடனே சீதா, “விளக்கைப் போடாதீர்கள். எனக்கு எனக்கு வெட்கமாயிருக்கிறது,” என்று ரகசியமான கம்மிய குரலில் சொன்னாள்.
விடிந்து எழுந்ததும் வெற்றி உணர்ச்சி என் மனத்தில் இருந்தது. கண்ணாடியில் என் பிம்பத்தைப் பார்த்து, “திலீப்! இனிமேல் நீ ஆனந்தியைப் பற்றிப் பயப்பட வேண்டாம். சீதா உன்னுள்ளம் பூராவும் நிரம்பிவிட்டாள்,” என்று சொன்னேன்.
அதே சமயத்தில் என் உள்ளத்தில் ஆனந்தியைப் பற்றிய நினைப்பும், அவளைப் பார்க்கவேண்டும், என்ற ஆசையும் அதிகமாயிற்று.
முன்னைவிட இன்று அதிகமாயிருந்தது. சீதாவை அடைந்துவிட்ட பின்பும் இந்த நிலை. நேற்றாவது நான் ஆனந்தியை நினைக்கும்போதெல்லாம் வெறுப்போடு நினைத்தேன். பயத்தோடு நினைத்தேன் இன்று எனக்கும் அவள் குற்றமற்றவளாக, பச்சாதாபப்பட வேண்டிய அபலையாகத் தோன்றினாள். ஆனந்தி மீது ஒரு பரிவே ஏற்பட்டது.
இந்தத் திடீர் மனமாற்றத்துக்குக் காரணமே புரியவில்லை. குழப்பத்தோடு திரும்பிய நான் என் அறைக்குள் சீதா ஒரு பிளேட்டில் காப்பியுடன் நுழைவதைப் பார்த்தேன். எனக்குச் சீதாவைப் பார்த்ததும் அவளுடைய குறைபாடுகள் தான் தெரிந்தன.
இன்னும் பல்கூடத் தேய்க்க வில்லை. அதற்குள் காப்பியுடன் வந்து விட்டாள் என்ற எரிச்சல் ஏற்பட்டது.
என் உள்ளத்தில் உள்ள கோபம் என் முகத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டும். சீதா உடனே கலவரத்துடன் பதிலளித்தாள். “அத்தான். என்மீது வீணாகக் கோபப்படாதீர்கள்… முறையோ, தப்போ உங்கள் இஷ்டப்படி நேற்று ராத்திரி உங்கள் அறைக்கு வர எவ்வளவோ முயற்சி செய்தேன். உங்கள் திட்டம் உங்கள் அம்மாவுக்குத் தெரிந்துவிட்டதோ என்னவோ – நேற்று பூராவும் உங்கள் அம்மா தூங்கவேயில்லை. நான் தண்ணீர் குடிக்கப் போவதுபோல் பின்கட்டுக்குப் போக எழுந்தேன். ‘நானும் துணைக்கு வரேன் சீதா’, என்று என்னோடு வந்துவிட்டார்கள். அப்போது மணி 12 இருக்கும். அப்புறம் நான் படுத்துத் தூங்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்,” என்றாள்
திகைப்பால் என் முகம் வெளுத்தது. கைகள் நடுங்கின. “அப்போ… நீ வரவே இல்லையா?”
“நான் வந்ததாகக் கனாக் கண்டீர்களா?’ என்றாள் சீதா சிரித்தபடி.
நான் சிரிக்கும் நிலையில் இல்லை. சீதா வரவில்லையென்றால்… சீதாவின் புடவையோடு கட்டிலில் படுத்திருந்தது யார்?
இருளில் நான் கவனிக்கவில்லை முகத்தை!
ஆம். கட்டிலில் படுத்திருந்தவள் அதிகம் பேசவில்லை. பேசிய ஒன்றிரண்டு வார்த்தைகளையும் சன்னமான குரலில் பேசினாள். அவள் பழகிய விதம்! அவள் ஆர்வம்! அவள் எப்படிச் சீதாவாக இருக்க முடியும்?
அப்போதே புரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே! அப்போதே விளக்கைப் போட்டிருந்தால்! சீதாவை அடைந்து ஆனந்தியை என் மனத்தை விட்டு விரட்ட நினைத்த நான் ஆனந்தியையே அடைந்துவிட்டேனோ என்று குழப்பத்தோடு தரையைப் பார்த்தேன். அங்கே ஒரு மூலையில் அரைவட்டமான மல்லிகைச் சரம் கிடந்தது. அந்த அரை வட்டமான மல்லிகைச் சரத்தைத்தான் ஆனந்தி எப்போதும் அணிவது வழக்கம்.
நேற்றிரவு என் அறையில் இருந்தது ஆனந்திதான் என்பதை உணர்ந்தேன்.
போர் முடிந்துவிட்டது, ஆனந்தி வெற்றி அடைந்துவிட்டாள் என்று நினைத்தபடி நாற்காலியில் உணர்விழந்தவனாய்ச் சாய்தேன்.
அத்தியாயம்-27
இரவில் நான் உலவிவரச் சென்ற போது டாக்சியிலிருந்து இறங்கி என்னோடு பேசிய மேஜர் மாயநாதன், ஆனந்தியை அழைத்து வந்திருக்க வேண்டும். எப்படி எனக்கு அப்பொழுது புரியாமல் போயிற்று? ஆசையால் கொதித்துக் கொண்டிருந்த உடல், ஆர்வத்தால் கோணலாகிப் போன சிந்தனை இவை என்னைக் குழப்பியிருக்க வேண்டும்! ஏமாற்றப்பட்டேன் என்று தெரிந்த பின்னும் ஏன் ஆனந்தியை நினைக்க ஆர்வம் அதிகமாகிறது. என் பழைய தீர்மானங்கள் லட்சியங்கள் எல்லாம். சரணடைந்த போர்க் களத்திலிருந்து தோல்வியுற்ற துருப்புக்கள் ஓடி ஒளிவது போல் ஏன் மறைந்தன? ராமலிங்கத்தின் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் ஏன் எனக்கு வேதனையை, வெறுப்பைக் கொடுக்கின்றன?
இன்னும் சில மணியில் ராமநாதன் வந்து விடுவான் என்று நினைக்கும் போதே எனக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. உற்றவர்கள் எல்லாம் ஏன் மற்றவர்களாய்த் தெரிகின்றனர்? இதுவரை நான் பயந்து ஒதுங்கிய மற்றவர்கள் எல்லாம் ஏன் உற்றவர்களாய்த் தெரிகின்றனர்?
ஐயோ, நானா இவற்றை எல்லாம் சிந்திக்கிறேன்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. ஜூரம் வந்தவனுக்கு. ஆரோக்கியத்தோடு இருக்கும் நிலையில் பிடித்த உணவு வகைகள் எல்லாம் வாய்க்குக் கசப்பது போல் அல்லவா இருக்கிறது என் நிலை. இது எந்த விதமான ஜுரம்? டைபாய்ட், மலேரியா போல் இது உடலைப் பற்றிய ஜூரம் அல்ல. இது மனத்தைப் பிடித்த ஜுரமா? இல்லை, ஆவியைப் பிடித்த ஜூரமா? ஒன்றுமே புரியவில்லை.
திலீபனின் டைரியைப் படித்து வந்த கோர்ட் குமாஸ்தா இந்த இடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு, நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். நீதிபதி மணிவாசகம், “தொடர்ந்து படியுங்கள்,” என்று கட்டளை பிறப்பித்தார். டயரியைப் படித்துவந்த குமாஸ்தா டயரியின் இதர பக்கங்களைப் புரட்டிவிட்டு ”கனம் கோர்ட்டார் அவர்களே, திலீபன் டைரி இந்த இடத்தில் முடிகிறது. அப்புறம் பக்கங்கள் காலியாக இருக்கின்றன”, என்றார்.
உடனே நீதிபதி ராமநாதனைப் பார்த்தார்.
“அப்புறம் நடந்தவற்றுக்கு என் வாக்கு மூலம்தான் சாட்சி. இதைத் தவிர ஒரு நீண்ட கடிதம் ஒன்று இருக்கிறது,” என்று ராமநாதன் கூறினான்.
உடனே, பிராசிகூடர் எழுந்திருந்து, “குற்றவாளியின் வாக்குமூலத்தைவிட அந்த நீண்ட கடிதத்தை அடுத்த சாட்சியமாக எடுத்துக் கொள்ளலாம்”, என்றார்.
உடனே ராமநாதன் குறுக்கிட்டான். ”கடிதம் கோர்ட்டாரிடம்தான் இருக்கிறது. அதைக் கோர்ட்டார் எப்பொழுது வேண்டுமானாலும் சாட்சியமாகப் படிக்கலாம். ஆனால் அதை இப்பொழுது படிப்பதனால் இந்த வழக்கு நிகழ்ச்சிகளின் கோவை கெட்டுவிடும். பின்னால் நடந்த விவரங்களைக் குறிப்பது கடிதம். கடிதம் வருவதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பது என் வாக்குமூலம். என் வாக்குமூலத்தைக் கேட்டுவிட்டுப் பின்னால் கடிதத்தைப் படித்தால் தெளிவாக விளங்கும். வழக்கின் விவரங்களில் முன்னுக்குப்பின் முரண் ஏற்படாது” என்று ராமநாதன் கேட்டுக் கொண்டான்.
மணிவாசகம் புன்னகை புரிந்தார். “இந்த வழக்கைப் பற்றிய பல விஷயங்கள், நிகழ்ச்சிகள் கனவுலகத்தில் நடப்பன போல் இருந்து பகுத்தறிவைச் குழப்புகின்றன. இதில் முன்னுக்குப்பின் முரண் எதற்கு? முறையாகவே ஆராய்வோம். பிராசிக்யூடருக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லையே” என்று கேட்டார் நீதிபதி.
பிராசிக்யூடருக்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது, ஆனால் வழக்கு ஒழுங்கான வழக்காக இல்லாமல் ஒரு கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. இதன் பின் கதை என்ன என்று தெரியாமல் எந்த முகத்தோடு ஆட்சேபம் தெரிவிப்பது என்ற அச்சத்தில் மௌனமாக இருந்தார் பிராசிக்யூடர்.
ராமநாதன் தன்னுடைய வாக்குமூலத்தைத் தொடர்ந்து கொடுத்தான். “உதகமண்டத்திலிருந்து நான் சென்னை வீட்டை அடைந்ததும் திலீபனைப் பார்க்கத் துடியாய்த் துடித்தேன். ஆனால் அவன் வீட்டில் இல்லை. வெளியே புத்தகக் கடைக்குச் சென்றிருப்பதாகவும், ஐந்து பத்து நிமிடங்களில் திரும்பிவிடுவான் என்று என் மாமா ராமலிங்கம் சொன்னார்.
சீதா “அவர் வீட்டிலேயே எப்பொழுதும் அடைந்து கிடக்கிறார். இன்றுதான் அதிசயமாகக் காலையில் வெளியே போனார்” என்று உரிமையோடு, கல்யாணமானவள் தன் கணவனைப் பற்றிக் கூறுவது போல் செல்லமாகக் குழைந்து கொண்டாள்.
அதைக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும், மறுபக்கம் சிறிது பொறாமையாகவும் இருந்தது.
அன்று நடுப்பகல் உணவிற்குக்கூடத் திலீபன் திரும்ப வில்லை என்றதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நான் அதைப்பற்றிப் பேச்சே எடுக்கவில்லை. திலீபனின் தாய் கவலையோடு இருந்ததாகத் தெரிந்தது.
மாமா ராமலிங்கம் எந்தவிதக் கிலேசமும் இல்லாமல் கல்யாணப் பத்திரிகையின் புரூபைக் காட்டியபடி இருந்தார்.
அவர் மனம் பூராவும் தன் மகள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தப் போகும் எதிர்கால ஆனந்தத்திலே லயித்திருந்தது. “ராமநாதா, நம்ம குடும்பத்திலேலே ஒரு பொண்ணுக்குக் கல்பாணம் சிறப்பாக நடந்தது, எங்க தாத்தா காலத்திலேதான். என் ஓரே சகோதரியான உன் தாயின் கல்யாணமோ நாங்கள் யாரும் இல்லாமல் சென்னையிலே பிச்சைக்காரன் வீட்டுக் கல்யாணம் போல நடந்துவிட்டது. அது அவள் தலையெழுத்து. ஐம்பது வருடத்திலே நம்ம குடும்பத்திலே நடக்கப் போகிற ஒரு பெண் கல்யாணம் சீதாவினுடையதுதான், குறைந்தது ஒரு லட்ச ரூபாயாவது செலவு செய்யலாமென்று இருக்கிறேன்” என்று பெருமையோடு சொன்னார். “அது மட்டுமல்ல ராமநாதா. கல்யாணத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் ஒன்பது ஏழைக் கன்னிப் பெண்களுக்கு ஸ்ரீதனம் கொடுத்து அதே முகூர்த்தத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். ஒன்பது பெண்கள் மனம் குளிரும்போது அதைவிடச் சீதாவுக்குச் சிறந்த வாழ்த்து என்னப்பா இருக்க முடியும்?” என்று ராமலிங்கம் சொன்னபோது, சீதாவின் முகம் ஒருவிதச் தெய்வீக மகிழ்ச்சியைப் பிரதிபலித்தது.
அன்றிரவு வரை திலீபன் திரும்பவில்லை என்றதும் எங்களுக்கு ஓரளவு பயமே ஏற்பட்டுவிட்டது. மீனாட்சி அம்மாள் கலவரம் அடைந்தாள்.
திலீபனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று தான் நினைத்தோம். உடனே அவசரப்பட்டுப் போலீசுக்குத் தகவல் கொடுப்பது என்பது கௌரவத்துக்கு இழுக்காக இருக்கும் என்று தோன்றியது.
திலீபன் தினமும் மாலையில் செல்லும் பார்க், பீச் முதலிய இடங்களில் தேடிப் பார்த்தோம். பயனில்லை. கந்தசாமி கோயிலில் போய்த் தேடிப் பார்த்தோம். அங்கும் திலீபன் இல்லை. மீனாட்சி அம்மாள் சிந்தாதிரிப்பேட்டைக்குச் சென்று, அங்கு அவர்கள் முன்பு வாழ்ந்த பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் போய் விசாரித்துப் பார்த்தாள்.
திலீபனை யாரும் பார்த்ததாகவோ, சந்தித்ததாகவோ எந்த விதத் தகவலும் கிடைக்கவில்லை. அன்றிரவு பூராவும் சஞ்சலத்திலேயே கழித்தோம்.
அவனது பெட்டி மேஜைகளைத் தேடினோம். அவன், துணிமணி ஒன்றும் எடுத்துப் போனதாகத் தெரியவில்லை. ஆனால் நான் கொடைக்கானலில் அவனுக்கு அன்பளிப்பாக கொடுத்த என் பெயர் முதல் எழுத்துப் போட்ட தோள் பை ஒன்றை மட்டும் காணோம்.
திருமணம் நெருங்கும் நிலையில், எந்தவித மனக்குறையும் இல்லாதவன் வீடு திரும்பவில்லை என்றால், எக்காரணமாக இருக்க முடியும் என்று புரியவில்லை. ஒருவேளை அவன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்றுகூட அஞ்சினோம்.
சென்னையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சென்று விசாரித்து வருவது என்று தீர்மானித்தேன்.
ராமலிங்கம் தமது நண்பரான திரு.சேர்வை என்ற போலீஸ் அதிகாரியின் உதவிகொண்டு, பேச்சைக் கிளப்பாமல் பக்குவமாகவும், ரகசியமாகவும் விசாரிப்பது என்று முடிவு செய்தார்.
எந்த ஆஸ்பத்திரியிலும், திலீபனது அடையாளம் கொண்ட இளைஞன் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரித்ததிலும், எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
முகூர்த்தநாள் நெருங்கிவிட்டதால், நண்பர்கள் கல்யாணம் பற்றிப் பேச வந்து போய்க் கொண்டிருந்தனர்.
அச்சடிக்கக் கொடுத்திருந்த அழைப்புத் தாள்கள் கட்டுக் கட்டாக வந்து இறங்கியபடி இருந்தன.
பந்தல், ஜோடனை, கண்ட்ராக்டர், கல்யாணச் சமையல்காரர் முதலியவர்கள் அட்வான்ஸ் கேட்க வந்து நிற்கும் போது, அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியவில்லை.
மறுநாளும் அலைச்சலிலும், குழப்பத்திலும் கழித்துவிட்டது. சீதாவோ தன்னுடைய அறையை விட்டு வெளியே வரவில்லை.
திலீபனின் தாய்க்கு மகன் காணாமல் போன கவலை ஒருபுறம் வாட்ட, நல்லவர்களுக்கெல்லாம் துயரம் கொடுத்து விட்டானே தன் மகன் என்ற குற்ற உணர்ச்சி மறுபுறம் வாட்ட, புழுப்போல் துடித்து வந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்த போது. திலீபன் வீட்டை விட்டுச் சென்ற மூன்றாவது நாள் சீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
கடிதத்தின் மேலிருந்த கையெழுத்தைப் பார்த்ததுமே.சீதாவுக்கு அது திலிபன் கையெழுத்து என்று புரிந்துபோய்விட்டது. அதை நடுங்கும் கைகளோடு பரபரப்புடன் பிரித்தாள்.
அவள் உயிரே அந்தக் கடிதத்தின் எழுத்துக்களில் பாய்ந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவளுடைய கண்களின் மருட்சி. அவள் உதடுகளின் அசைவு. கைகளின் நடுக்கம் எல்லாம், அந்தக் கடிதத்தில் அவள் வாழ்வுப் பிரசினையே தீர்மானிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்தின!
கடிதத்தைப் படித்து முடித்ததும் அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். “என்ன சீதா? திலீபன் என்ன எழுதி இருக்கிறான்? எங்கு இருக்கிறான்? எப்போது வருவான்?” என்று தன் தந்தை கேட்ட கேள்விகளுக்கு, அவள் பதிலே சொல்லவில்லை.
சீதா அழுதபடி அவளுடைய அறைக்குச் சென்றுவிட்டாள். தரையிலே கிடந்த அந்தக் கடிதத்தை எடுத்தேன். மாமா ராமலிங்கம் என்னை உரக்கப் படிக்கும்படி கேட்டார்.
(ராமநாதன் தன்னுடைய வாக்குமூலத்தை நிறுத்திவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சர்க்கார் தரப்பு பிராசிக்யூடர், “ராமநாதன், நீங்கள் சொன்ன நீண்ட கடிதம் அது தானா?” என்றார்.
ராமநாதன், உடனே. “இல்லை. அந்த நீண்ட கடிதம் வேறு. அது வெகு நாட்களுக்குப் பின் என்னிடம் கொடுக்கப்பட்டது. சீதாவுக்குத் திலீபன் எழுதிய கடிதம் சாட்சியாகக் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. அதில் எழுதியிருந்ததை நான் ஞாபகத்திருந்துதான் சொல்ல முடியும்,” என்று சொன்னான்.
ஜட்ஜ் மணிவாசகம், “மிஸ்டர் ராமநாதன், தொடர்ந்து சொல்லுங்கள்” என்றார்..
ராமநாதன் மீண்டும் துவங்கினான்.)
திலீபன் எழுதியிருந்ததை அப்படியே கூறுகிறேன்: ‘என் அன்பு மிக்க சீதாவுக்கு, நான் உனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவன் அல்ல என்பதை உணர்ந்து கொண் உனக்கேற்றவன் அண்ணா ராமநாதன்தான். என்னை மறந்து. ராமநாதனை அதே முகூர்த்தத்தில் மணந்து கொள்! நான் சௌக்கியமாக இருக்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம். மீறி என்னைத் தேடினால் எனக்கும் ஆபத்து, உங்களுக்கும் தீங்குதான் ஏற்படும். மன்னித்து விடு!
பெற்ற மகனான நான் தாயைக் காப்பாற்றத் தவறிவிட்டாலும். இடைக்காலத்தில் மகன்போல் வந்த நீ என் தாயைக் கைவிடாதே. அண்ணா ராமநாதனையும், அப்பா ராமலிங்கத்தையும் என்னை மன்னிக்கும்படி சொல். கல்யாணத்துக்குப் பின் இது நிகழ்வதை விட, இப்போதே நிகழ்ந்தது எல்லோருக்கும் நலம்! தயவு செய்து என்னைத் தேட வேண்டாம்.
திலீபன் இந்தக் கடிதத்தைப் படித்த எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ராமலிங்கத்துக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “அயோக்கியப் பயல், துரோகி, மண் குதிரை, நன்றி கெட்டவன், அவன் அப்பன் புத்தி எங்கு போகும்?” என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். திலீபனின் தாய் அருகில் இருப்பதைக் கூடக் கவனியாமல்.
மீனாட்சி அம்மரள் அழவில்லை. தன்மகனைத் திட்ட வில்லை. அப்படியே சித்தப்பிரமை பிடித்தவள் போல் கல்லாய்ச் சமைந்து விட்டாள். என் மாமா, அதே முகூர்த்தத்தில் எனக்கும், சீதாவுக்கும் கல்யாணம் நடத்திவிடுவது என்றும் தீர்மானித்தார்.
எனக்கு மாமாவின் அவசர முடிவுகள் பிடிக்கவில்லையென்றாலும் அவர் இருந்த நிலையில் அவரிடம் யாருமே எதுவுமே பேச முடியவில்லை.
எங்கள் வீடு திருமண வீடாக இல்லை. இழவு வீடு போல் காட்சியளித்தது. அன்று பிற்பகல் நான் சீதாவின் அறைப்பக்கம் சென்ற போது, அங்கு நடந்த சம்பாஷணைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அங்கு நடந்த பேச்சில் என் பெயர் அடிபட்டது. மீனாட்சி அம்மாள் சீதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். “ராமநாதனைப் போன்ற நல்லவர்களை நீ பார்க்க முடியாது சீதா! கடவுளே உன்னைத் திலீபனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றுதான் திலீபனுக்கு இந்தப் புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேனம்மா. நீ ராமநாதனையே சந்தோஷமாகக் கல்யாணம் பண்ணிக்கொள்.”
“அத்தை, நான் உங்கள் பிள்ளையைத் தவிர வேறு யாரையும் மனசால் கூட நினைக்க முடியாது. அவர் ஏதோ பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் அத்தை! அது எனக்குப் புரியாமல் போச்சு! இந்த லெட்டர் அவர் எழுதியிருக்கவே முடியாது. அப்படி அவர் எழுதியிருந்தாலும், அவர் மனமார எழுதியிருக்க மாட்டார்” என்று சீதா விம்மினாள்.
அத்தியாயம்-28
“சீதா, என் பிள்ளை மனம் எனக்குத் தெரியாதா? அவன் ஒரு வேளை அவன் அப்பா மாதிரியே ஆகிவிட்டானென்றால் அப்புறம் உன் வாழ்வு நரகமாயிடும்! அவனை மறக்கிறதுதாம்மா சரி”.
“அத்தை, நீங்க அவருக்கு அம்மாதான் இருந்தாலும் சமீப காலத்தில் அவர் மனசிலே இருந்தது உங்களுக்குத் தெரியாது அத்தை. அன்று ராத்திரி அவர் என்னை அவருடைய அறைக்கு வரச் சொல்லிக் கெஞ்சினார் அத்தை. அப்போது அவர் ஆசையிலே சொல்கிறார், அது தப்புன்னு நினைத்தேன்,” என்று சொல்லி விட்டு அழுதாள் சீதா.
மீனாட்சி அம்மாள், “திலீபன் எனனம்மா சொன்னான்? ” என்று கேட்டாள். நானும் ஆவலுடன் கவனித்தேன்.
“அத்தை, அவர் ஒரு நாள் ராத்திரி சாப்பிட்டவுடனே என்னிடமிருந்து பீடா வாங்கிட்டு போடடுக் கொண்டார். எதையோ பார்த்துப் பயந்தவர்போல் தெருப்பக்கம் ஓடி திரும்பி வந்து வீட்டுத் தோட்டத்திலே என்னமோ தேடினார். நான் என்ன தேடுகிறீர்கள? என்று கூட கேட்டேன். அவர் சரியான பதில் சொலலவில்லை.” சீதா நிறுத்தினாள்.
திலீபனின் தாய், “அப்புறம் என்ன நடந்தது?” என்று கேட்டாள்.
சீதா “என்னை இரவு அவர் அறைக்கு வரும்படி வற்புறுத்தினார். நான் தயங்கினேன். அவர் என்னிடம் ‘நான் ஒரு நெருக்கடியில் இருக்கிறேன். இன்று நீ என் அறைக்கு வந்து, என் விருப்பத்தை நிறைவேற்றினால் பண்பை நழுவ விட்டாலும் என்னைக் காப்பாற்றுவாய். நம் இருவர் வாழ்வையும் காப்பாற்றுவாய்’, என்று சொன்னார் அத்தை. அன்றிரவு நான் அவர் அறைக்குப் போயிருந்தால் ஒரு வேளை அவரைக் காப்பாற்றியிருக்க முடியுமோ என்று நினைக்கிறேன்’, என்றாள் சீதா.
நான் சிந்தித்தவண்ணம் கதவின் புறமிருந்து நகர்ந்தேன். திலீபன் உதகமண்டலத்தில் இரவு வேளையில் அலறி எழுந்து, ‘வீணைத் தந்தி பேசுகிறது,’ என்று கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
ஒருவேளை திலீபன் திடீர் திடீரென்று சித்த சுவாதீனத்தை இழக்கும் பைத்தியமாக இருப்பானோ என்று தோன்றியது. அப்படியானால் அவன் புத்தி தெளிந்ததும், வீடு திரும்பலாம் அல்லவா? இவ்வாறு நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே டெலிபோன் மணி அடித்தது. டெலிபோனை எடுத்துவுடன் என் திருச்சி சீனியரின் குரல் கேட்டது. ”என்ன ராமநாதா. . நான் காலையில்தான் வந்தேன். பூந்தமல்லி ரோடில் ஆனந்த பவனில் தங்கியிருக்கிறேன். உன்னை உடனே பார்க்க வேண்டும்”, என்றார். நான், “உடனே வருகிறேன்”, என்று சொல்லிவிட்டு, உடை மாற்றிக் கொண்டு கார் ஷெட்டுக்குப் போனேன்.
மாமா காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார் என்று தெரிந்தது, சீனியரைக் காக்க வைக்க வேண்டாமென்று நினைத்து, பஸ் ஏறிச் சென்று விடுவது என்று தீர்மானித்துப் புறப்பட்டேன்.
நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போகவும், பஸ் வரவும் சரியாக இருந்தது. நான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் எனக்கு எதிரே உட்கார்ந்திருப்பவர் மேஜர் மாயநாதன் என்பதை உணர்ந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் சிறிது கலவரம் ஏற்பட்டதுபோல் தெரிந்தது. ஆனால் உடனே சமாளித்துக் கொண்டார்.
எனக்கு அவர் மீது எந்தவிதச் சந்தேகமும் வரவில்லை.
மேஜர் சிரித்தபடியே, “என்ன ராமநாதன். மாமாவின் கார் இல்லையா? பஸ்ஸிலே போகிறீர்களே? என்ன கவலையோடு காணப்படுகிறீர்கள்?” என்றார்.
நான் அவரிடம் குடும்ப விஷயத்தைப் பற்றிப் பேசுவானேன் என்று எதையோ சொல்லிச் சமாளித்தேன்.
மேஜர் என்னை விடுவதாக இல்லை. “உங்க பிரதர் திலீபன் எப்படி இருக்கிறார்? எப்போ கல்யாணம்?” என்று சிரித்தபடி கேட்டார்.
“திலீபன்.. திலீபன்… சௌக்கியம்தான். கல்யாணம் சீக்கிரமே நடக்க வேண்டும்”, என்றேன்.
அதற்குள் அடுத்த ஸ்டாப்பிங் வந்ததும் மேஜர் உடனே இறங்கி விட்டார்.
அவர் இறங்கும்போது கண்டக்டர், “மவுண்ட்ரோடுக்கு டிக்கெட் வாங்கிக்கிட்டு, இங்கேயே இறங்கறீங்களே?” என்றார்.
மேஜர் கடுகடுப்புடன், “நான் மவுண்ட் ரோடு போகவில்லை!” என்று சொல்லி விட்டு, இறங்கிச் சென்றார்.
அப்போதுதான் அவர் கையிலிருந்த தோல் பையைக் கவனித்தேன். அதே பையைத்தான் நான் உதகமண்டலத்தில் திலீபனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். என் பெயரின் முதல் எழுத்தான ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்து அதில் பொறிக்கப்பட்டிருந்தது. திலீபனி டம் நான் கொடுத்த தோல்பை மேஜரிடம் எப்படி வந்தது? நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
திலீபனுக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்த அந்தத் தோல் பையை மேஜரின் கையில் பார்த்த பிறகு எனக்குப் பஸ்ஸிலே இருப்புக் கொள்ளவில்லை.
அந்தப் பை அவரிடம் எப்படி வந்தது என்று கேட்காமல் இருந்து விட்டதை நினைத்து வருந்தினேன்.
உதகமண்டலத்தில் திலீபனுக்கும் ஆனந்திக்கும் ஏற்பட்ட சம்பாஷணை பற்றியோ, திலீபனுடைய மனப் போராட்டம் பற்றியோ அப்போது எனக்கு ஒன்றுமே தெரியாதாகையால், என் மனத்தில் மேஜரைப் பற்றிச் சந்தேகமோ அச்சமோ எழவே இல்லை. அவரைப் பிழைக்கத் தெரியாத ஒரு விசித்திர நபர் என்றே நினைத்திருந்தேன். வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் செய்யும் தவறு இதுதானே? நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி நாம் பூராவும் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்ளவும் முடியாது. ஏன், நம்மைப் பற்றியே நாம் சரியாகப் புரிந்து கொள்வதில்லையே! வெளித் தோற்றத்தை வைத்து எல்லா முடிவுகளும் செய்து அதன்படி நடக்கிறோம். எதிர்பாராத திடீர் அதிர்ச்சிகள், ஆபத்துக்கள் ஏற்படும் பொழுது தான், தெரிந்தவர்களைப் பற்றிப் புதிய அனுமானத்தில் இறங்குகிறோம். புது விஷயங்களின் அடிப்படை பற்றிப் புதிய கோணத்தில் ஆராயத் தொடங்குகிறோம். மேஜரின் தோற்றம், அவருடைய களங்கம் நிறைந்த புன்னகை, அவர் அவசர அவசரமாகப் பஸ்ஸை விட்டு இறங்கியது எல்லாம் எனக்கு அவர்மீது சந்தேகத்தை எழுப்பின.
பூந்தமல்லி ஹோட்டலில் என்னுடைய சீனியர் லாயருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூட எனக்குச் சிந்தனையெல்லாம் திலீபன் மீதும் மேஜர் மீதும்தான் இருந்தது. சீக்கிரமே திருச்சி சீனியரிடம் ஏதோ சாக்குச் சொல்லி விட்டு, வீட்டிற்கு வந்தேன். மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி மேஜரைத் தேடவேண்டும் என்றேன். மாமா உதகமண்டலத்துக்குத் தொலைபேசி மூலம் எஸ்டேட் மானேஜர் சித்தய்யனைக் கொண்டு சென்னையில் மேஜர் தங்கும் விலாசத்தை விசாரிக்கச் சொன்னார். மேஜர் நீண்ட நாள் சென்னையில் தங்குபவராக இருந்தால், உதகமண்டலம் போஸ்ட் ஆபீஸில் மேஜரின் கடிதங்களை மாற்றி அனுப்ப விலாசம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று அனுமானித்ததில் இந்த முயற்சியைக் கையாண்டோம்.
இரண்டு மணி நேரத்தில் சித்தய்யன் அடையாறில் உள்ள ஒரு பங்களாவின் விலாசத்தைப் போனில் தெரிவித்தார். நானும் மாமாவும் காரை எடுத்துக் கொண்டு அந்த விலாசத்துக்குப் போனோம். மேஜரையும் திலீபனையும் சும்மா விடுவதில்லை என்ற ஆத்திரத்தோடு அந்தப் பங்களாவின் வாசலில் இறங்கினோம். வீட்டினுள் நுழைந்தோம்.
ஒரு வேலைக்காரன் வந்து எங்களைச் சந்தித்தான். எங்களை உட்காரச் சொல்லி. நாங்கள் யாரென்று விசாரித்தான். மேஜர் மாயநாதனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னோம்.
“மேஜர் வீட்டிலில்லையே.” என்றான்.
“மேஜர் இல்லாவிட்டால் பரவாயில்லை, திலீபனையாவது உடனே பார்க்க வேண்டும்!” என்று நான் ஆத்திரத்தோடு இரைந்தேன்.
வேலைக்காரன் நடுங்கியே போய்விட்டான். எங்களை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே அவன் உள்ளே போனான்.
நானும் மாமாவும் எங்கள் சிந்தனைகளோடு வரவேற்பு அறையில் மௌனமாக உட்கார்ந்திருந்தோம். மறுபடியும் வேலைக்காரன் திரும்பி வந்தான். ஆனால் இம்முறை ஒரு பிளேட்டில் இரண்டு கோப்பை காப்பியோடு வந்தான்.
“நான், திலீபன் எங்கே?” என்று கேட்டேன்.
“வருவாங்க.நீங்க முதல்லே காப்பி சாப்பிடுங்க.”
“நாங்கள் காப்பி சாப்பிட வரவில்லை. இந்த வீட்டிலே பச்சைத் தண்ணீர்கூடச் சாப்பிட மாட்டோம். உடனே போய்த் திலீபனை வரச் சொல்”, என்று அதட்டினேன்.
நடுக்கத்துடன், காப்பி தட்டோடு அவன் மறைந்தான். மறுபடியும் நிசப்தம் நிறைந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த அறையை அடுத்த நடைபாதையில் பூட்ஸ் காலடி யோசை கேட்டது.
திலீபன் வந்தான். அவன் இரவு உடையில் இருந்தான். கசங்கிய, நீல வரிகள் பைஜாமா. மார்பை வெளிக்காட்டும் ஒரு கசங்கிய நீல வரிகள் போட்ட மேல் சட்டை; இவைகளோடு, அப்பொழுது தான் படுக்கையிலிருந்து எழுந்தவன் போல் காட்சியளித்தான். தலை மயிர் கலைந்து, கண்கள் சிவந்து. உதடுகள் தடித்து இருந்தன. அவன் விரல்களிடையே ஒரு சிகரெட் எரிந்து கொண்டிருந்தது. அவன் நடையில் தள்ளாட்டம் காணப்பட்டது.
அப்பொழுது மாலை 4 மணி இருக்கும். ஆனால் திலீபன் முகத்திலே அப்பொழுதுதான் தூங்கி எழுந்த அலங்கோலம் காணப்பட் டது. பகலை இரவாக்கி, இரவைப் பகலாக்கி, உடல் இன்பத்தைத் தேடித் துரத்தி, அந்த இன்பத்துக்கு முடிவே காணாது பண்பு இழந்து நிற்கும் இளைஞர்களைப் போல் காணப்பட்டான் அவன்.
திலீபன் இந்தப் பங்களாவிற்கு வந்ததிலிருந்து அவன் எம்மாதிரி வாழ்க்கை நடத்துகிறான் என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. அவன் தன் வலிமையையும் இளமையையும் ஏதோ பலி பீடத்தில் வெகு வேகமாக அர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. வழக்கமாகத் திலீபனுக்கு உள்ள கூச்சம் அவனிடம் இப்போது இல்லை. எப்பொழுதுமே மாமா ராமலிங்கத்திடம் அவனுக்குப் பயம், மரியாதை உண்டு. அந்தப் பயமோ மரியாதையோ இப்போது இல்லை. அவன் அறையினுள் நுழைந்த விதம், அவன் கண்களில் தோன்றிய அலட்சியம், எல்லாம் அவன் நிரபராதி போலவும். நாங்கள் ஏதோ குற்றம் செய்தவர்கள் போலவும் தோற்றுவித்தது.
நாங்கள் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டான். பிறகு சிகரெட்டை ஒருமுறை இழுத்து. விட்டம் நோக்கிப் புகை வளையங்களை மிதக்க விட்டபடி மௌனமாக இருந்தான்.
என் மாமாவிற்கு ஆத்திரம் கொப்புளித்தது. அடக்கிக் கொண்டு, எதுவும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அடக்கப் பட்ட ஆத்திரம் அவர் சோபாவின் விளிம்புகளை அழுத்திப் பிடித்த விதத்திலிருந்து வெளிப்பட்டது.
யாரும் எதுவும் பேசாமல் சில வினாடிகள் சென்றன.
மௌனத்தைத் திலீபன்தான் கலைத்தான். “ராமநாதா, என்ன விஷயம்?”
எப்பொழுதும் என்னை அண்ணா என்று அழைத்துவந்தவன் இன்றுதான், ‘ராமநாதா’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டான்.
அதுவும் ரயிலை விட்டு இறங்கிய பிரயாணி, ஒரு போர்ட்டரைக் கூப் பிடும் தோரணையில் அழைத்தான். என் பொறுமை எல்லை கடந்தது.
“திலீபா! என்ன விஷயம் என்றா கேட்கிறாய், அதுவும் யாரைப் பார்த்துக் கேட்கிறாய், மடையா! கல்யாணத்துக்குத் தேதி வைத்து உன்னுடைய சந்தோஷத்திற்காக அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் எங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாடா இது?”
திலீபன் சிரித்தான். “என் சந்தோஷத்திற்காக மற்றவர் பாடு படுவானேன்? என் சந்தோஷத்தைத் தேடித்தானே நானே வீட்டை விட்டு வெளியேறினேன்!”
“திலீபா! நீயா பேசுகிறாய்? அல்லது உன்னை யாராவது இப்படிப் பேச வைக்கிறார்களா? உனக்கு என்ன நேர்ந்தது? சொல். திலீபா. சொல்!” கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
“என்னை யாரும் பேச வைக்க வில்லை.நானேதான் பேசுகிறேன். ராமநாதா! நான் பேசுவது உனக்குப் புரியாது. நான் பரிபூரணமான கட் டுப்பாடில்லாத வாழ்க்கையைத் தேடி வந்திருக்கிறேன். விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே புரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளைப் புரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் நிலையில் இருக்கிறேன். மற்றவர்களின் வாழ்க்கைக்கான சட்ட திட்டங்களில் நான் என்னைப் பிணைத்துக் கொள்ள முடியாது. மணந்து மக்களைப் பெற்று மடிந்துபோகும் சாதாரண வாழ்க்கைக்கு நான் பிறக்கவில்லை. மனக் கதவுக்கப்பால் புகுந்து, மரண வாசலையும் தாண்டி நிற்கும் புது நிலைகளைக் காணத் துடிக்கும் லட்சியவாதி நான்!”
திலீபனுடைய ஆணவமான பதில் என் கோபத்தை இன்னும் அதிகப்படுத்திற்று.
அத்தியாயம்-29
நான் என் கோபத்தை அடக்கிக் கொண்டேன். “டேய், லட்சியவாதி! உன்னை நினைந்துருகும் சீதாவைப் பற்றி நினைத்தாயா? உன்னைப் பெற்றெடுத்த தாயைப் பற்றி நினைத்தாயா? அவர்கள் படும் வேதனை உனக்கு ஒரு பொருட்டில்லையா?”
திலீபன் இரக்கத்தோடு என்னைப் பார்த்துவிட்டுச் சிரித்தான். “சிறு பூச்சி புழுக்கள் நசுங்கிவிடுமே என்று செருப்பணியாமல் இருக்க முடியுமா? நாம் மூச்சு விடும்போதே பல்லாயிரக் கணக்கான கிருமிகள் மடிகின்றன. நாம் உண்ணும்போது பல்லாயிரக்கணக்கான கிருமிகள் சாகின்றன. புவனத்து வாழ்வே ஒரு பெரும் கொலைக்களம். அண்ட சரா சரம் பூராவிலும் கோடிக்கணக்கான கொலைகள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. வாழ்வின் முடிவே கொலை தான். கொலையின் விளைவு பிறப்பு. உற்றவர், மற்றவர் சந்தோஷத்தில் எனக்கு அக்கறையில்லை.
இதுவரையில் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மெளனமாக இருந்த என் மாமா ராமலிங்கத்தால் இதற்கு மேல் பொறுக்க முடிய வில்லை. உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். “காலிப் பயலே! தத்துவமா பேசறே? உன்னை என்ன செய்கிறேன் பார்!” என்று சொல்லித் தன் காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்துக் கொண்டு, திலீபனை நெருங்கினார்.
திலீபன் ஆத்திரமடையாமல் அவரையே விறைத்துப் பார்த்தான்.
மாமாவின் ஓங்கிய கை ஓங்கியபடியே இருந்தது. கையிலிருந்த செருப்பு நழுவிக் கீழே விழுந்தது. மாமா. கையைப் பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியாமல் முனகினார்.
திலீபன் அவரைப் பார்த்து இளக்காரமாக, “நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பெரியவர் என்பதற்காக உங்களை இதோடு விட்டேன். இல்லாவிட்டால் என்ன விபரீதங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியாது. என்னுடைய சக்தியை நீங்கள் உணரவில்லை. இன்னும் சில மாதங்களில் என் சாதனைகள் முடிந்தபின் உலகமே என்னை வணங்கப் போகிறது பாருங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
நான் என்னையும் மறந்து அவன் மீது பாய்ந்து அவனை ஓங்கி அடித்தேன். நான் கொடுத்த அடிகளைத் தாங்கிக் கொண்ட திலீபன், என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
“ராமநாதா! இவ்வளவு தானா, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? உனக்குக் கோபம் வந்தால் என்னை அடிக்க உனக்குக் கைகள் தேவைப்படும். ஆனால் நான் மற்றவர்களைக் கண்டிக்கக் கையை உபயோகப் படுத்துவதில்லை. என் கண்களை உபயோகப்படுத்துவேன்!” என்று சொல்லிவிட்டு என்னை முறைத்துப் பார்த்தான்.
அவனை அடித்த என் கைகளின் உள்ளே காய்ச்சிய ஈயம் ஒடுவது போல் வலி ஏற்பட்டது. என்னையும் மீறி நான் வாய்விட்டு அலறினேன். அடுத்த வினாடி வலியும் நின்றது. திலீபன் உள்ளே சென்றுவிட்டான்.
நாங்கள் வீட்டுக்கு வந்ததும் மாமா, திலீபன் மீதும் மேஜர் மீதும் வழக்குத் தொடர வேண்டும் என்றார். போலீசில் புகார் செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று துடித்தார். எனக்கும் சீதாவுக்கும் உடனே கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஆத்திரப்பட்டார். சீதா அவள் தந்தையிடம் வந்து துணிந்து, ”அப்பா! எனக்கு இனி மேல் கல்யாணம் கிடையாது அவர் திரும்பி வந்து என்ன ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளட்டும்,” என்றாள்.
“திலீபன் ஒருநாளும் அந்த மந்திரவாதிக் கும்பலிலிருந்து திரும்பப் போவதில்லை. உன்னை அவன் மணக்கவும் போவதில்லை. நீ வாழா வெட்டியாகத்தான் அழிந்து போகப் போகிறாய்”, என்று இரைந்தார் ராமலிங்கம்.
”அப்பா! அப்படியே அழிந்து போனாலும் நான் அவர் நினைவோடு அழிந்து போவேனே அல்லாது, வேறு ஒருவரை மணம் செய்துகொள்ளப் போவதில்லை,” என்று அவள் உறுதியோடு சொன்னாள்.
ராமலிங்கத்தின் முகம் பரிதாபமாக மாறியது. “என் மகளே எனக்குச் சத்துருவான பின் நான் ஏன் இந்த வீட்டில் இருக்க வேண்டும்? ராமநாதா, நீ இவளைப் பார்த்துக் கொள். நான் திருச்சி போகிறேன். இன்றிரவே திருச்சி போகிறேன். கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் நிறுத்தி விடு. யார் முகத்திலும நான் விழிக்க விரும்பவில்லை!” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
என் நிலை பரம சங்கடமானதாகி விட்டது. என் நிலையை விட மீனாட்சி அம்மாளின் நிலை இன்னும் பரிதாபமாக இருந்தது. மீனாட்சி அம்மாள் என்னிடம் வந்து, ”நானும் என் மகனும் இந்த வீட்டில் நுழைந்து இந்த வீடே நாசமாகிவிட்டது. ராமநாதா. சாவு என்னைத் தேடி வரவேற்கிறதே, நான் என்ன செய்வேன்!” என்று பிரலாபித்தாள்.
நான். ”அம்மா! நீங்கள் என்ன செய்ய முடியும், உங்கள் மகன் செய்த தவறுக்கு?” என்று தேற்ற முனைந்தேன்.
“ராமநாதா! இந்த வீட்டையே அழித்துவிட்ட நான் எப்படியடா தினமும் இந்த வீட்டில் இலை போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது? ஒவ்வொரு கவளம் சோற்றையும் எடுக்கும்போது வேதனை என் வயிற்றைப் பிழிந்து எடுக்கிறதே. ‘கணவனால் தீராத கஷ்டம் மகனால் தீரும்’, என்பார்கள். என் நிலையோ, மாறாத. முடியாத துக்கமாகிவிட் டது. இனி ஒரு நிமிஷமும் இந்த வீட்டில் தங்க எனக்கு யோக்கியதை இல்லை”.
“அம்மா, நீங்கள் திலீபனுக்கு மட்டும் தாயல்ல. எனக்கும் சீதாவுக்கும் தாயாக இருங்கள். மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை தவறிழைத்தால் தாய் வீட்டை விட்டுப் போகத் துணிவாளா? மாமாவும் கோபப்பட்டுப் போய்விட்டார். நீங்களும் போய்விட்டால் நானும் கல்யாணமாகாத சீதாவும் எப்படியம்மா ஒரு வீட்டில் தனியாக இருப்பது? ஆறுதலுக்கு, துணைக்கு, பெரியவர்கள் வேண்டாமா? திலீபன் திரும்புவான் என்று சீதா நம்புகிறாள். அவள் நம்பிக்கைக்குப் பலம் கொடுக்கவாவது நீங்கள் இங்கே இருக்கத்தான் வேண்டும்.” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.
அன்றிரவு பூராவும், மறுநாள் என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே இருந்தேன்.
கல்யாண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் நபர்களுக் கெல்லாம், ‘கல்யாணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது,’ என்று கடிதம் எழுதி விட்டது.
மேஜரிடம் சென்று மன்றாடுவோமா என்றால் அது பலனளிக்கும் என்று தோன்றவில்லை.
சிந்தித்தபடி வாயிற்புற அறையில் உலாவியபடி நின்றேன். இரவு மணி ஒன்றடித்தது. படுத்துக் கொண்டேன். மறுநாள் பொழுது விடிந்ததும் கல்யாணத்தை நிறுத்த வேண்டிய ஏற்பாடுகளில் முனைந்தேன். காலை பதினொரு மணிக்கு ஒரு தபால்காரன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் ‘லோகல்’ என்ற முத்திரை இருந்தது. அது சீதாவின் விலாசமிட்டு வந்திருந்தது. ஸ்டாம்பு பணத்தைத் தபால்காரனிடம் கொடுத்துக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன். சீதாவை அழைத்து, அந்தக் கடிதத்தை அவளிடம் கொடுத்தேன்.
கடிதத்தின் கவர் மீதிருந்த கையெழுத்திலிருந்து அது திலீபனின் கடிதமென்று புரிந்துகொண்டு அதைப் பிரித்து ஆவலுடன் படித்தாள். பிறகு ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தாள்.
“என்ன அத்தான். நீங்களும் அப்பாவும் அவரைப் பற்றிச் சொன்னதற்கும் இதில் அவர் எழுதியிருப்பதற்கும் சம்பந்தமே இல்லையே!” என்றாள்.
நான் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன்.
”அன்புள்ள சீதாவுக்கு.
அண்ணாவையும், மாமாவையும் என்னை மன்னிக்கச் சொல். அப்படி நான் மரியாதையில்லாமல் அவர்களிடம் நடந்து கொண்டிருக்க மாட்டேன். ஆனால் நான் நானாக இருப்பதில்லை. தயவு செய்து யாரும் என்னை நாடி வரவேண்டாம். அழிவும் ஆபத்தும் என்னோடு நிற்கட்டும். என்னை மறந்தொழியுங்கள். என் சார்பில் பணம் சொத்து என்று யார் கேட்டாலும் – நானே கேட்டாலும் – கொடுக்க வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் போலீசுக்குப் போகாதீர்கள்.
திலீபன்.”
எழுத்துக்கள் எல்லாம் நடுக்கத்துடன் எழுதப்பட்டிருந்தன. அவசர அவசரமாக, திருட்டுத்தனமாக எழுதப்பட்டிருந்த கடிதம்போல் தெரிந்தது.
இந்தக் கடிதத்தை எழுதிய திலீபனா எங்களை உதாசீனப்படுத்தினான்? இவனா என் கைகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற வலியை ஏற்படுத்தினான்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
திலீபன் சீதாவுக்கு எழுதிய கடிதத்தை, அவன் தங்கியிருக்கும் வீட்டிலுள்ளவர்கள் யாருக்குமே தெரியாதபடி அவசர அவசரமாகப் போஸ்ட் செய்திருக்க வேண்டும். கடிதம் ஸ்டாம்ப் இல்லாமல் தபால் பெட்டியில் போடப்பட்டதிலிருந்தே அது தெளிவாயிற்று.
மாமா ராமலிங்கத்திடமும் என்னிடமும் ஆணவத்தோடும் அகம் பாவத்தோடும் நடந்து கொண்ட பொழுது அவனிருந்த மனநிலைக்கும், இந்த மன்னிப்புக் கடிதம் எழுதியபொழுது அவன் உள்ளம் இருந்திருக்க வேண்டிய நிலைக்கும் பெரும் வேறுபாடு இருந்தது. அதிலிருந்து, திலீபன் அந்த அடையாறு வீட்டில் ஒருவிதமான நிர்ப்பந்தத்தில் இருக்கிறான் என்று ஊகிக்க முடிந்தது. நான் நானாக இருப்பதில்லை, என்ற வாக்கியம் எனக்குப் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் கொடுத்தது. திருச்சியை அடுத்த கிராமப் பகுதிகளில், எழுத்தறிவில்லாத ஏழைகள் கதை கதையாகக் கூறும் நிகழ்ச்சிகள் என் ஞாபகத்துக்கு வந்தன.
ஒரு பெண் தண்ணீர்த் துறைக்கு நீர் எடுக்கச் சென்றாள். அங்கு ஒரு சாமியார் குளித்துக் கொண்டிருந்தார். அவர் ஏதோ சொக்குப் பொடி போட்டார். அந்தப் பெண் தண்ணீர் எடுக்க வந்ததை மறந்து சாமியார் பின்னால் பக்கத்து ஊர் வரை சென்றுவிட்டாள் – என்றெல்லாம் கதை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இம் மாதிரிக் கதைகளை நான் நம்பியதே இல்லை. ஏதோ அவசர புத்தியால் எழுத்தறிவில்லாத பெண்கள், துக்கம் காரணமாகவோ வறுமை காரணமாகவோ, வீட்டைவிட்டு ஓடிப் போகும் தவறை மறைப்பதற்காக, அப் பெண்களின் பெற்றோர்கள் கற்பனை செய்த கதைகளாகவேதான் நான் எண்ணி இருக்கிறேன்.
இப்பொழுது திலீபனுக்கு நிகழ்ந்ததைப் பார்த்த பிறகு அந்தக் கிராமக் கதைகளுக்கும் ஆதாரம் இருக்குமோ என்று என் மனம் எண்ணத் தொடங்கியது. திலீபனை வசியப்படுத்தி அழைத்துச் செல்வதால் என்ன லாபம் இருக்க முடியும்? அவனுக்கு அவனுடைய பெயரில் நிலமோ பணமோ எதுவும் கிடையாது. ஒரு வேளை திலீபனுக்குத் திருமணமாகி. அவன் உதகமண்டலம் மானருவி எஸ்டேட்டுக்கு முதலாளி ஆன பின்பு இது நேர்ந்திருந்தால், மேஜரோ அல்லது அவர் மகள் ஆனந்தியோ பணத்தாசையால் இதைச் செய்திருக்கலாம் என்று நான் எண்ணக்கூடும்.
வாழ்ந்தால் சீதாவோடு வாழ வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வே இனிக்காது என்று புதுக் காதலில் மூழ்கியிருந்த திலீபனின் மனம் எப்படித் திடீரென்று மாறியிருக்கக் கூடும்? எனக்குப் புரியவில்லை.
இதெல்லாம் அன்று ஒரு நாள் மாலை உதகமண்டலத்தில் திலீபனும் நானும் தேனீர் அருந்த மேஜர் வீட்டுக்குச் சென்றிருந்த பொழுது அங்கு நடந்த ஹிப்நாடிக் சோதனையில் திலீபன் பங்கெடுத்துக் கொண்டதன் விளைவாக இருக்குமோ என்றெல்லாம் நினைத்து நினைத்து மனம் அலுத்துப் போனேன். எதுவானாலும் திலீபன் ஓரிரண்டு மாதங்களில் திருந்தி வீடு திரும்பிவிடுவான் என்று சீதாவைப் போல நானும் நம்பினேன்.
ஆனால் திலீபனின் தாய் அந்த நம்பிக்கையில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. திலீபன் அவன் தந்தையைப் போல வாழ்நாள் பூராவுமே ஒரு விதமாகவே இருந்துவிடுவான் என்றுதான் மீனாட்சி அம்மாள் பயந்தாள். மகன் வெளியேறியவுடன் எங்களோடு தங்குவதையே அந்த அம்மாள் விரும்பவில்லை. நாங்கள் எவ்வளவோ மன்றாடியும் கேட்கவில்லை.
திலீபனின் கடிதம் வந்த மறு நாள். இரவு. மீனாட்சி அம்மாள் சப்தம் செய்யாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். இரவு பன்னிரண்டு மணிக்குச் சீதா விழித்தெழுந்து பார்த்ததும், பக்கத்தில் படுத்திருந்த மீனாட்சி அம்மாளைக் காணாமல் திடுக்கிட்டாள். பதறிப் போய் என்னை எழுப்பிச் சொன்னாள்.
மீனாட்சி அம்மாள் இரவு வேளையில் எங்கு சென்றிருப்பாள்? தன் மகன் தங்கியிருக்கும் அதே பங்களாவுக்குச் சென்றிருப்பாளோ? அவனோடு மன்றாடி அவனை அழைத்துவரச் சென்றிருப்பாளோ? உடனே காரை எடுத்துக் கொண்டு மேஜரின் அடையாறு பங்களாவுக்குச் சென்றேன்.
அங்கு மீனாட்சி அம்மாளோ, திலீபனோ இல்லை. ஏன், வீட்டில் யாருமே இல்லை. வீட்டின் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. இரவின் அமைதியிலும் தனிமையிலும் தகவல் கூறக்கூட ஆசாமி யாரும் இல்லை. திலீபன் ஒருவன் பொறுப்பில்லாமல் தவறு செய்யப் போக, ஒரு தவறும் செய்யாத நான் இரவில் சுற்றும்படி ஆயிற்றே என்ற ஆத்திரத்தில் காரில் ஏறி வேகமாகத் திருப்பியபடி எங்கு செல்கின்றோம் என்று சிந்தியாமல் அடையாறிலிருந்து எலியட்ஸ் பீச்சுக்குப் போகும் சாலையில் வேகமாகச் சென்றேன். வீட்டுக்குத் திரும்ப வேண்டியவன் வேறு திசையில் செல்கிறோம் என்ற எண்ணமே எனக்கு எழவில்லை. திலீபன் மீதுள்ள ஆத்திரம் காரை ஓட்டியதே இல்லாமல். நான் காரை ஓட்டவில்லை. கடலின் குளிர்ந்த காற்று என் முகத்தில் வீசவும்தான் சுயஉணர்வு வந்தது. நான் கடற்கரையில் இருப்பதை உணர்ந்தேன்.
காரை விட்டு இறங்கி மணலில் உட்கார்ந்தேன். மீனாட்சி அம்மாளை அழைத்துக் கொண்டு வராமல், சீதாவின் முகத்தில் எப்படி விழிப்பது என்ற ஏக்கத்தில் அப்படியே கடற்கரை மணலில் சாய்ந்தேன். ஓயாது ஓலமிடும் கடலுக்கும் மகனை இழந்து அல்லல்படும் மீனாட்சி அம்மாளுக்கும் ஒரு பொருத்தம் இருந்தது. அந்தப் பொருத்தத்தை நினைத்தபடி கண்கள் மூடினேன். சில வினாடிகள் தூங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன். கண்களை விழித்தபோது ஒரு பெண்ணும் ஆணும் கலகலவென்று சிரிப்பது என் காதுகளில் விழுந்தது. சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். ஒரு மூலையில். சிறு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. ஓர் ஆடவன் ஒரு பெண்ணை உப்பு மூட்டை தூக்குவதுபோல் தூக்கிக் கொண்டு போய் அவளைக் காரின் முன் சீட்டில் போட்டுவிட்டுப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
அத்தியாயம்-30
எனக்கு அவன் முகம் தெரிந்தது. திலீபன்! அடுத்த வினாடி, அந்தப் பெண் காரை மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு ஓட்டிச் சென்றாள்.
பின்தொடர்ந்து ஓடலாமா என்று நினைக்கும்பொழுதே, கார் நின்ற இடத்திற்கு நேர் எதிரே, கடலின் அலைகளின் நடுவே ஒரு பெண்மணி கடலில் இறங்குவதைப் பார்த்தேன். அவள் நடையில் ஒரு விரக்தியும் சோகமும் தெரிந்தன. அவள் முகம் கடலை நோக்கியிருந்த போதிலும், அவள் சாயல் எனக்கு மிகவும் தெரிந்த நபரின் சாயலாக இருந்தது. அது மீனாட்சி அம்மாளே தான்! நான் யாரைத் தேடி வந்தேனோ அந்த மீனாட்சி அம்மாள் தான். என் சிற்றன்னைதான். என் சிற்றன்னையேதான்!
“சித்தி, சித்தி,” என்று அலறியபடி நான் கடலை நோக்கி ஓடிப்போய் என்னுடைய சிற்றன்னையை நிறுத்தினேன்.
“என்னைத் தடுக்காதே! நான் வாழக் கூடாது!” என்று கூவினாள் அவள்.
“ராமநாதா! திலீபனைப் பார்த்துக் கெஞ்சியாவது அவனை வீட்டிற்கு அழைத்து வரலாம் என்று போனேன். அவன் அப்பொழுதுதான் அந்தச் சிறுக்கியோடு பீச்சுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். நான் காலில் விழாத குறைதான். அவ்வளவு தூரம் மன்றாடினேன். என் பேச்சு அவன் காதிலே விழவில்லை. அவன் இதயம் பாறாங்கல்லாகி விட்டது. ராமநாதா, அவன் எவளுக்கோ பிறந்தவன்போல் நடந்து கொண்டான்.
என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. அவர்களை விடாது பீச்சுக்குத் தொடர்ந்தேன். அங்கு நான் பார்த்தது – ஐயய்யோ! எப்படி வாய் விடடுச் சொல்வேன். அந்தச் சிறுக்கி, பெண்ணே அல்ல! அவள் ஒரு பேய்! அவள் ஒரு மானங்கெட்ட பேய்!” என்று புலம்பினாள்.
“அம்மா! தாயை மறந்துவிட்ட அந்தச் சொந்த மகனுக்காக வாழாவிட்டாலும், தாயை இழந்து நிற்கும் இந்த இரவல் மகனுக்காக வாழக்கூடாதா? உங்களைத் தொழுது நிற்கும் சீதாவிற்காக நீங்கள் வீடு திரும்பத்தான் வேண்டும்,” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.
மீனாட்சி அம்மாள், “ஐயோ, ராமநாதா, என்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து ‘காலம் மாறும் மாறும்’ என்று நம்பி நம்பி இந்த நரக வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். இனி எதை நம்பி உயிர் வாழ்வேன்?” என்று அரற்றினாள்.
மீனாட்சி அம்மாளை வற்புறுத்திக் காரில் ஏற்றினேன். அந்தக் கடற்கரையில் திலீபனுக்கும் ஆனந்திக்கு மிடையில் என்ன நடந்தது? மீனாட்சி அம்மாள் தற்கொலைக்குத் துணியும் அளவிற்கு என்ன நடந்தது? நான் கேட்கவில்லை. ஒரு தாயின் நிலையில் இருக்கும் உத்தம ஜீவனிடம் பேசக்கூடிய விஷயமல்லவே? ஆனால் மீனாட்சி அம்மாள் அந்த இரவு நிகழ்ச்சிக்குப் பின் இரண்டு மூன்று நாட்களுக்கு ஏதோ கெட்ட கனவு கண்டவள் போல் பீதியோடு காணப்பட்டாள். யாருடனும் பேசுவதில்லை. எதுவும் சாப்பிடுவதில்லை. இரவு வேளைகளில் திடீரென்று விழித்துக் கொண்டு புலம்புவாள். நான் எவ்வளவு மன்றாடிக் கேட்டும் மீனாட்சி அம்மாள் விவரம் ஒன்றும் சொல்வதில்லை. திலீபனைப் பற்றிப் பேசுவதைக்கூட நிறுத்திக் கொண்டேன்.
ஆனால் சீதாவால் திலீபனைப் பற்றிப் பேசாமலும் விசாரிக்காமலும் இருக்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சொர்ணம் என்ற வேலைக்காரியின் அண்ணன் ரங்கன்தான் திலீபன் தங்கியிருந்த வீட்டில் வேலைக்காரனாக இருந்தான். சீதாவிற்கு சொர்ணத்தின் அண்ணன் அடையாற்றில் வேலை செய்கிறான் என்று தெரிந்ததுமே சொர்ணத்தின் மூலமாக அங்கே நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. சொர்ணம் சீதாவிற்கு அளித்த தகவல்களின் முக்கிய விவரங்கள் இவை தான்.
மேஜர் அந்த வீட்டில் அடிக்கடி தங்குவதில்லை. எங்கெங்கோ வெளியூர் சென்றுவிடுகிறார். இரவு வேளைகளில் வேலைக்காரர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. திலீபனும். ஆனந்தியும் நாள் முழுவதும் பூட்டப்பட்ட அறையிலேயே சிரித்துப் பாடிய படியே இருப்பார்கள். நாளடைவில் சொர்ணம் கொண்டு வந்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. ஏதாவது சொல்லிவிட்டுப் பணம் பறிக்க அவள் காற்றைக் கயிறாகத் திரிக்கிறாளோ என்றுகூட நினைத்தேன்.
ஒருநாள் இரவு, திலீபன் நூறு மைல் வேகத்தில் கார் ஒட்டிப் போய் யார் மீதோ மோதிக் காயப்படுத்தி விட்டான் என்று சொர்ணம் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. திலீபனாவது கார் ஓட்டவாவது! வேகமாகக் கார் ஓட்டினால்கூட நடுங்குபவன், இவ்வளவு சீக்கிரத்தில் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியுமா?
இன்னொரு சம்பவம். அந்த வீட்டில் சமையலிலோ வேறு எந்த உருவத்திலோ பூண்டு உபயோகப் படுத்துவது கிடையாதாம். ஒருநாள் ரங்கன் தவறுதலாகச் சாமான்களுடன் பூண்டையும் வாங்கி வந்துவிட்டானாம். அதைப் பார்த்துவிட்ட ஆனந்தி, ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டு உடனே அந்தப் பூண்டுப் பொட்டலத்தை எடுத்து எங்காவது எறியச் சொன்னாளாம். திலீபன் இடைமறித்தானாம், ”எனக்குப் பூண்டு பிடிக்குமே, உனக்குப் பிடிக்காதா? ஏன் ஆனந்தி, பூண்டைக் கண்டு இப்படிப் பதறுகிறாய்? ரங்கன் இன்று இருவருக்குமே பூண்டு அரைத்துக் குருமா தயார் செய்வான்”, என்று சிரித்தபடியே சொன்னானாம். ஆனந்தி ஆத்திரத்துடன், “இந்த வீட்டில் பூண்டு இருந்தால் நான் இருக்கமாட்டேன்!” என்று பிடிவாகமாக மறுத்துவிட்டாளாம். அர்த்தமில்லாத ஒரு விஷயத்திற்கு ஏன் இந்தப் பெண் இவ்வளவு பிடிவாதம் செய்கிறாள் என்று தோன்றியதாம் ரங்கனுக்கு. அது மட்டுமல்ல, அடையாறு வீட்டில் மல்லிகைப் பூ வாங்குவதே இல்லை என்றாலும், ஆனந்தியின் அறையில் எப்பொழுதும் மல்லிகை மணம் வீசிக்கொண்டிருக்குமாம். இவ்வாறு தினமும் ரங்கன் கூறும் கதைகளைச் சொர்ணம் வந்து சீதாவிடம் சொல்வாள். சீதா சொர்ணத்தின் பேச்சைப் பங்கீடு செய்து என்னிடம் சொல்வாள். இப்படியே பல நாட்கள் கடந்துசென்றன.
ஒருநாள் காலையில் சீதா என்னிடம் வந்து, ”அத்தான்! இன்று நான் அவர் இருக்கும் அந்த அடையாறு வீட்டிற்குப் போகப் போகிறேன். என்னிடம் பணமாக இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள்”, என்று கேட்டாள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
”என்ன சீதா உளறுகிறாய்? அந்த ஆனந்தி இருக்கும் வீட்டிற்கு நீ செல்வதா? உனக்கு அவமானமாக இல்லை?” என்றேன்.
சீதா பதில் பேசவில்லை, “தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள். இன்று நான் பணத்தோடு போய்த் தான் ஆக வேண்டும்” என்றாள்.
“சீதா! என்ன நடந்தது சீதா? என்னிடம் சொல்லு சீதா”, என்று கேட்டேன்
“அத்தான், ஆனந்தியின் வீட்டில் பணமுடை ஏற்பட்டுவிட்டது. அவள் அவரை பணத்துக்கு நெருக்குகிறாள், மேஜர் ஊரில் இல்லையாம். பாவம், உங்கள் தம்பி ஆனந்தியிடம், ‘நான் பெரியவர் ராமலிங்கத்தையும், ராமநாதனையும் எவ்வளவோ வகையில் ஏமாற்றிவிடடேன் அவர்களிடம் போய் எப்படிப் பணம் கேட்பேன்?’ என்று மறுத்துவிடடாராம். பெட்ரோல் பங்க் பில் கொடுக்க, வீட்டு வாடகை கட்டக் கூடப் பணம் இல்லையாம்”.
“இப்பொழுதுதான் நாம் உறுதியாக இருக்கவேண்டும் சீதா. திலீபன் திருந்தத் திரும்பப் பணமுடைதான் வழிசெய்யும்!” என்றேன்
சீதா என்னைக் கோபத்தோடு பார்த்தாள். “பணமுடை காரணமாக அவர் அவளால் துரத்தப்படடு வீடு திரும்ப வேண்டாம். அவர் அப்பொழுது அரை மனிதனாகத்தான் மனம் உடைந்து திரும்புவார். ஆனந்தியின் மீதுள்ள கவர்ச்சி அவளைவிட்ட பின்னும் அவருக்கு இருந்துகொண்டே இருக்கும். அது கூடவே கூடாது.இப்பொழுது அவருக்குப் பணம் கொடுத்து உதவினால்தான் அவருக்கு ஓர் உண்மை தெரியும். அவருக்கும் ஒரு வீடு இருக்கிறது. அதன் கதவு எப்போதும் திறந்திருக்கும். அந்த வீட்டில் ஓரு அபலைப் பெண் அவரை என்றுமே மறவாமல் அவருக்காகக காத்திருக்கிறாள். அவளுக்கு அவர் தான் முக்கியம், பணம் பெரிதல்ல என்பதை நான் உணர்த்த வேண்டாமா?”
“பெற்ற தாயை மறந்தவன் திலீபன், வளமான எதிர்காலத்தை வீணாக எட்டி உதைத்தவன் திலீபன். அவனா உன் பெருந்தன்மையை உணரப் போகிறான்? உன் இஷ்டப்படி செய்து பார். ஆனால் அவள் வீட்டிற்கு நீயே போய் பணம் கொடுக்க வெட்கமாக இல்லையா?” என்று கேட்டேன்
சீதாவின் கண்கள் கலங்கின
“வெட்கமா! அவர் இருக்கும் இடத்திற்குப் போக அவமானம் என்ன? ஆண்டவன் கோயில், குப்பை கூளம் நிறைந்த வெளிப் பிரகாரத் தில், அங்கப்பிரதட்சணம் செய்ய உண்மை பக்தன் தயங்குவானா, வெட்கப்படுவானா? அவர் என் ஆண்டவன் அத்தான்! அவர் அசுத்தமான இடத்தில் கோயில் கொண்டிருக்கலாம். அதற்காக நான் அங்கு காணிக்கை செலுத்தப் போகக்கூடாது என்கிறீர்களா!” என்று உள்ளத்தின் நிறைவோடு என்னிடம் கேட்டாள்.
இவ்வளவு உறுதியான, ஆழமான அன்பு வைத்திருக்கும் பெண் சீதா என்று உணர்ந்ததும், அவளை மனைவியாக அடையாமல் போனாலும், அவளுக்குச் சகோதரன் நிலையிலாவது நாம் இருக்கிறோமே என்று பெருமைப்பட்டேன். அவள் அன்பை நிராகரித்துவிட்டு ஒரு மாயையில் சிக்கித் தவிக்கும் திலீபனை நினைத்து வருந்தினேன். சீதாவிடம் இரண்டாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துக் காரில் அனுப்பினேன். ஆனந்தியின் வீட்டில் நடந்ததை அவள் திரும்பி வந்து சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். அங்கு நடந்தது இதுதான்:
சீதாவின் கார் அடையாறு பங்களாவை நெருங்கும்பொழுது ஆனந்தியின் வீட்டினுள்ளிருந்து வந்த ஒரு கார் சீதா ஏறிச் சென்ற காரின் மீது மோதும் நிலையில் பிரேக் போட்டு நின்றது. அந்தக் காரை வேகமாக ஓட்டி வந்தவன் திலீபன். அவ்வளவு வேகமாக வந்ததும் பிரேக் போட்டுத் திருப்பி ஒரு விபத்து ஏற்படாமல் சமாளித்ததும் திலீபன்தான். திலீபன் இவ்வளவு அற்புதமாகக் கார் ஓட்ட எப்பொழுது கற்றுக் கொண்டான்! திகைத்துவிட்டாள் சீதா.
திலீபன் சீதாவைப் பார்த்தான். அவள் முகத்தில் சிறிது அச்சம் ஏற்பட்டது. அவன் கண்களில் சூதின் ஒளி புறப்பட்டது. ஒரு கேலிப் புன்னகை படர்ந்தது. ஒரே நபரை இருவர் காதலித்து அதில் ஒருவர் வெற்றி கண்டபின், வென்றவர் மற்ற நபரைப் பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு கேலிப் புன்னகை போல் தோன்றியது திலீபனின் புன்னகை. பிறகு முகத்தை அப்புறம் திருப்பிக் கொண்டு காரை ஓட்டிச் சென்றுவிட்டான்.
சீதாவைப் பார்த்ததும் பாராதது போல் அவன் சென்றது – சீதாவிற்குப் பெரும் வேதனை தந்தது. அதைவிட அதிகமாக சீதாவிற்கு அதிர்ச்சி அளித்தது திலீபன் முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் தான். அவன் உதடுகள் ரத்தச் சிவப்புடனும், அவன் கண்கள் அதிகக் கறுப்புடனும் காணப்பட்டன. திலீபனின் உருவத்தை ஒவ்வொரு நிமிடமும் மனதில் இருத்தித் தியானம் செய்துவந்த சீதாவிற்கு, காரில் பார்த்த திலீபன் அடியோடு மாறி விட்டதாகத் தோன்றியது.
அவள் இந்த மாற்றத்தைப் பற்றிச் சிந்தித்த வண்ணம் இருக்கும் பொழுது, சீதாவின் காரை ஓட்டி வந்த எங்கள் டிரைவர். “திலீபய்யா பார்த்தும் பார்க்காததுபோல் போயிட்டாரே, வண்டியை வீட்டிற்குத் திருப்பட்டுங்களா?” என்று கேட்டான்.
எடுத்துவந்த பணத்தைக்கூடக் கொடுக்காமல் திரும்பும்படி ஆயிற்றே என்று ஒரு கணம் நினைத்த சீதாவின் மனதில் ஓர் ஆசை வளர்ந்தது. திலீபனின் வெளித்தோற்றத்தையும் உள்ளத்தையும் இவ்வளவு சீக்கிரம் மாற்றக் கூடிய ஆற்றல் படைத்த அந்த ஆனந்தியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அவள் கவர்ச்சியின் ரகசியம்தான் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் ஏற்பட்டது.
டிரைவரிடம், “அவர் போனால் என்ன, நான் அந்த வீட்டிலிருக்கிறவர்களைப் பார்க்க வேண்டும்.” என்றாள்.
டிரைவர் மெளனமாக வண்டியை ஆனந்தியின் வீட்டுக் காம்பௌண்டிற்குள் கொண்டு போனான்.
– தொடரும்…
– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.