கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 12,800 
 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-53

அத்தியாயம்-51

“வேறு எந்த வகையிலும் லிக்கதேகம் என்ற அகல், நீள, கன பரிமாணமில்லாத வஸ்து உடலை அடைய முடியாதா?” என்று கேட்டேன். 

“இறந்த பின் சில மணி நேரங்களில் உடலுக்குள் வேறு லிங்கதேகம் நுழையலாம். அதில் தொடர்ந்து வாழலாம், அதற்குச் சில சாதனைகள் தேவை. இது என் வாழ்க்கையிலேயே நடந்தது” என்று சொல்லிவிட்டுத் திடீரென்று அழ ஆரம்பித்தார். 

இந்தக் கொடூரமான மேஜருக்குக்கூட மனித உணர்ச்சிகள் இருக்கும், அவரால் கூட அழ முடியும் என்று என்னால் நம்பமுடியலில்லை. 

“திலீபா! நீ உண்மை ஆனந்தியைப் பார்த்ததில்லை. அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் தெரியுமா? என் கண்மணி பவித்திரமான பண்பு நிறைந்தவள், நீ மணக்க இருந்தாயே அந்தச் சீதாவைவிட உத்தமி! பாவம் இறந்து விட்டாள். என்னை விட்டே போய் விட்டாள்” என்றார். 

பூமியே பிளந்து என்னை விழுங்கிவிடப் போவது போல் இருந்தது இதைக் கேட்டதும் ஆனந்தியின் உருவத்தில் உட்கார்ந்திருக்கிறேன் நான். என்னிடமே ஆனந்தி இறந்து விட்டாள் என்று ஒருவர் கூறினால் எனக்கு எப்படி இருக்கும்!

“என்ன குடிவெறியில் உளறுகிறீர்களா மேஜர்?” என்றேன்.

அவர் மறுபடியும் ஒரு கிளாஸ் நிறைய மதுவை ஊற்றி அருந்தி விட்டு என்னை முறைத்துப் பார்த்தார்.”யாரடா உளறுவது! அவ்வளவும் உண்மை” என்றார். 

நான், “திடீரென்று சொன்னால் எப்படிப் புரியும்? ஆரம்பத்திலிருந்து சொன்னால் அல்லவா எனக்கு விளங்கும்?” என்றேன். 

போதையிலிருந்து மேஜர் “இப்போது சொன்னாயே அது கரெக்ட், ஆரம்பத்திலிருந்து சொன்னால்தான் புரியும்? சொல்லுகிறேன் கேள்” என்று சொல்ல ஆரம்பித்தார். 

“நான் ரங்கூனிலிருந்தபோது மாங்டின் சென்னை போக வேண்டுமென்று என்னிடம் சொன்னார். நான் அவரிடம், என் ஒன்றுவிட்ட சகோதரியான மல்லிகையம்மானின் விலாசத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினேன். மாங்டின் சென்னை வந்தபோது மல்லிகையம்மாள் கணவனோடு வாழ மனம் பிடிக்காமல் உதகமண்டலத்தில் இருப்பதாகத் தெரிந்ததும் உதகை சென்றிருக்கிறார். மல்லிகை அம்மாள். அப்போது உன் தந்தை சபாபதியுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறாள். அவரை விடாமல் பிடித்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறாள். அதற்காக மால்டின்னிடம், அவர் உதகையில் தங்கியிகுந்த சில வாரங்களில் ஹிப்நாடியம் கற்றுக் கொண்டிருகிறாள். ஆனாலும் அவளால் உன் தந்தையை நிரந்தரமாகத் தன்னோடு வைத்துக் கொள்ள முடியவில்லை. 

உன் தந்தை, மல்லிகையம்மாளைத் திருச்சிக்கு  அழைத்துப் பொய் அங்கு அவளைக் தனியே விட்டுவிட்டுச் சென்றவிட்டார். உன் தந்தையிடம் பணத்தையும் இழந்து மானத்தையும் இழந்த மல்லிகைஅம்மாள், மனம் உடைந்து போய்ச் காவேரி ஆற்றில் விழுந்து மடிந்து விட்டாள். சில மாதங்களுக்குப் பிறகு அவளது வக்கில் உதகமண்டல வீட்டையும் சொற்ப சொத்துக்களையும் எனக்கு உயில் மூலம் எழுதி வைத்து விட்டாள் என்று தெரிவித்தார். நான் உடனே இந்தியாவிற்கு வந்தேன் என் மகள் ஆனந்தியோடு. உதகமண்டலம் வீட்டில் தங்கினேன். வெகு சந்தேரஷமாகச் சில மாதங்கள் நானும் ஆனந்தியும் இருந்தோம். 

திடீரென்று ஆனந்திக்கு வாந்தி பேதி கண்டது. நான் சரியாகி விடும் என்று அலட்சியமாக இருந்து விட்டேன். பாவம், ஆனந்தி இறந்து விட்டாள் என்ற துக்கத்தில் நான் துடியாய்த் துடித்தேன். அவளை அடக்க செய்யக்கூட மனமில்லாது உட்கார்ந்திருந்தேன்.

அழுது அழுது மனம் குழம்பிப் போயிருந்த என் கண் முன்னால் ஒரு மாது நிற்பது போல் தெரிந்தது. “நான் தாண்டா மல்லி. உனக்கு அடையாளம் தெரியவில்லையா?”என்று சொன்னாள் மல்லிகையம்மாள். “மல்லிகைப் பூவை வாங்கி உன் மகள் மேல் போடுடா” அவள் பிழைத்துக் கொள்வாள்” என்று சொன்னாள்.

“நானும் உடனே என் மகள் பிழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, மல்லிகைப் பூவைச் சரம் சரமாக வாங்கி ஆனந்தியின் உடல் பூராவும் மறைத்தேன். ஆனந்தி அப்படியே அசையாமல் மல்லிகைப் பூவிற்கு அடியில் கிடந்தாள். எழுந்திருக்கவில்லை .ஆனால் ஆனந்தியின் குரல் மட்டும் கேட்டது. “கார் ஷெட்டுக்கு அடியில் புதைத்திருக்கும் வீணையை எடுத்து வந்து மாயா மாளவ கெளளவ ராகத்தை விணையில் வாசியுங்கள் அப்பா!” என்றாள்.

உடனே எழுந்து சென்று வீணையை எடுத்து வந்தேன். எனக்கு மாயா மாளவ கெளளவ ராகம் தெரியாது. ஆனால் என்ன ஆச்சரியம்! என் விரல் தானாக வாசிக்க ஆரம்பித்தது. அப்புறம் பார் அதிசயம். ஆனந்தி எழுந்து உட்கார்ந்தாள். தூங்க போனவள் மாதிரி. எனக்கு ஒரே சந்தோஷம், ஆனால் ஆனந்தி உடல் தான் திரும்பி வந்தது. என் ஆனந்தி எங்கோ போய் விட்டாள்.”

திடீரென்று மேஜர் குரலை மாற்றி என்னிடம் ரகசியமாசுச் சொன்னார். “திலீபா! பிழைத்து எழுந்தது ஆனந்தி அல்ல. மல்லிகை அம்மா. அன்று முதல் மல்லிகை அம்மாவிற்கு ஒரு வேலைக்காரனா இருந்து வருகிறேன். மல்லிகை அம்மா உன் அப்பாவைத் தேடிப் போய் பழி வாங்க வேண்டுமென்று என்ன என்னவோ செய்து பார்த்தாள். ஆனால் அவளால் அது முடியவில்லை. அவர் ஏதோ தகடும், யந்திரமும் வைத்திருந்தாராம்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார். 

அதே சமயத்தில் நாங்கள் இருந்த அறையின் தரையில் நீண்ட நிழல் ஒன்று படிந்தது. திலீபன் நின்று கொண்டிருந்தான் அவன் கண்கள் கோவைப் பழம் சிவந்திருந்தன.

அவன் மேஜரைப் பார்த்து “மாயநாதா! மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விட்டாயா? என்ன உளறினாய்? என்ன சொன்னாய்?” என்று இரைந்த குரலில் கேட்டான். 

மேஜர் அப்போதுதான், சொல்லக் கூடாத விஷயங்களைப் போதையில் சொல்லிவிட்டோம் என்று உணர்ந்தார். அவர் நடுங்கினார். “ஒன்றும் சொல்லவில்லை, ஒன்றும் சொல்லவில்லை” என்றார். 

திலீபன் என்னைப் பார்த்தான். அவன் கண்களில் பிரகாசம் அதிகமாகியது. “உன் தாயைப் பார்த்தேன், உன் சீதாவைப் பார்த்தேன்” என்றான். 

“ஐயோ சீதா!” என்று அவறினேன். 

“கவலைப்படாதே, அவளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு என்னால் ஆபத்து இல்லை – அதற்குள் நீயே அங்கு பொய் அவளைத் தோண்ட்டல் அல்லாமல்” என்று சொல்லி விட்டு என்னை அறைக்குப் போகச் சொன்னான். 

என் அறையில் போய்ப் படுத்ததும், என்னுடைய ஒரே எண்ணம் எப்படியாவது சிந்தாதிரிப் பேட்டைக்குச் செல்ல வேண்டும் என்பதே. அன்றிரவு திலீபன் உருவம் என் அருகில் வந்து படுக்கவில்லை. ஆனந்தியின் ரத்தம் உன் உடலில் ஓடுவதாலோ என்னவோ எனக்குச் சில எண்ணங்கள் திடீர் திடீர் என்று உதயமாகத் தொடங்கின. அதில் ஒன்று, மறுபடியும் எனக்கு என்னுடைய திலீபன் உருவம் நடுநடுவே கிடைக்கும் என்ற நம்பிக்கை, உடல் எரிந்து விட்டால் பிறகு லிங்க தேகத்தின் சேஷ்டைகள் மறைந்துவிடுகின்றன என்பது மற்றொன்று. 

குற்றாலம் பாழுங் கோயிலில் ரத்தம் மாற்றிய பின்பு எனக்கும் ஆனந்தி என்ற மல்லிகை அம்மாளைப் போலவே பூண்டின் நெடி பிடிக்காமல் இருந்தது. அதை நினைக்கும் போதே குமட்டல் எடுத்தது. இருந்தாலும் ஆனந்தி என்ற மல்லிகை அம்மாளிடமிருந்து தப்பப் பூண்டு ஒன்றே சரியான பரிகாரம் என்பதை அனுபவத்தில் அறிந்தேன். எப்படியாவது மேஜர், ஆனந்தி இவர்களிடமிருந்து தப்பி சீதாவிற்கு நேர இருந்த ஆபத்தைத் தடுப்பது என்று தீர்மானித்தேன். அதற்காகக் காத்திருந்தேன், 

சில நாட்களாக ஆனந்தி வீட்டிலேயே இல்லை, நான் என் உருவத்திலேயே இருந்தேன். அன்று தான் நான் உன்னை வந்து அழைத்துக் கொண்டு சிந்தாதிரிப் பேட்டைக்குச் சென்றது. அங்கு கோணிப்பையிலிருந்து யந்திரங்கள் எழுதி வைத்திருந்த் நோட்டுப் புத்தகத்தையும், அந்தக் காரியத் தகடு யந்தரத்தையும் எடுத்துக் கொண்டேன். பீதியால் உந்தப்பட்டு நின்ற நிலையில் எனக்கு அந்த நோட்டுப் புத்தகமும் யந்தரமும், மூழ்கும் நிலையில் இருக்கும் கடல் பிரயாணிக்கு ஒரு படகு கிடைத்தது போல் இருந்தன. அத்த நோட்டுப் புத்தகத்தில் ஒரு யந்திரம் சிவப்பு மையில் போடப்பட்டிருந்தது. அதே அட்சரங்கள்தான் காரியத் தகட்டிலும் எழுதப்பட்டிருந்தன. 

‘பிரேத பூத பைசாச விமோசனம்’  என்று எழுதி இருந்தது. அதன் கீழே சௌந்தர்யலஹரியிலிருந்து ஒரு வடமொழிச் செய்யுள் இருந்தது நள்ளிரவில் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற விவரமும், புவனத்தின் ஆதி சக்தியைத் தாயாக நினைக்க வேண்டிய சில சட்டங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. எனக்கு வாழ்வோம் என்ற நம்பிக்சை எழுந்தது. நான் குதுகலத்தோடு அடையாறு திரும்பினேன். நோட்டுப் புத்தகத்தில் இருந்த குறிப்பைப் பாடம் செய்து கொண்டு அதைக் கிழித்தெறிந்தேன். 

எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலில் காரியந் தகட்டைப் புதைத்து வைத்தேன். பிறகு உன்னிடம் வந்தது, நான் திருவல்லிக்கேணி சுப்ரமண்ய சிவம் என்பவர் வீட்டிற்குச் சென்றது, அங்கு திடீரென்று நான் மாறியது எல்லாம் உனக்குத் தெரியும், சில நாட்களுக்கு அந்த மந்திரம் பலன் அளிக்கவில்லை. நானும் அதை நம்பியது முட்டாள்தனம் என்ற முடிவிற்கு வந்தேன். 

ஆனால் ஆனந்தியின் உருவில் மல்லிகை அம்மாள் ஆசை வெறியோடு என்னை நெருங்கும்போது, அந்த வடமொழிச் செய்யுளை மனத்திலே சொல்லிக் கொண்டு மல்லிகை அம்மாள் உருவத்தை ஆனந்தியின் உருவத்தில் கற்பனை செய்து அவளை என் தாயாக நினைக்க ஆரம்பித்தேன். அந்தத் தாய் நினைவோ, அல்லது வடமொழிச் செய்யுளை ஆயிர கணக்கில் நான் முனுமுணுத்து வந்ததன் பலனோ தெரியாது. ஆனந்தி ‘உடல் எரிகிறதே!’ என்று சொல்ல ஆரம்பித்தாள். என்னை நெருங்கவும் பயப்பட ஆரம்பித்தாள்.

இருந்தபோதிலும் இரவில் நான் தூங்கும்போது, மந்திரத்தை மறந்து வேறு ஆசை நினைவுகளின் விளைவாக ஏற்படும் ஆபாசக் கனவுகள் என் உடலை மாசுபடுத்தி இருக்கும் நிலையில், ஆனந்தி என் உடலுள் நுழையத் தொடங்கினாள். ஆனால் அதிக நேரம் என்னுள் அவளால் தங்க முடியவில்லை. சில நாட்கள் செல்ல, அவள் என்னை அடைவதையே விரும்பவிலை என்பதையும் உணர்ந்து கொண்டேன்.  

அவனைப் பார்க்கும்போதெல்லாம். நான் அவளைத் தாயாக நினனத்து, செய்யுளை முணுமுணுக்க ஆரம்பித்தேன். ஆனந்திக்கு என்னிடம் கோபம் வந்தது. அவளைத் தடுக்கும் சக்தி என்னிடமிருப்பதை உணர்ந்தாள். அதை வெல்ல அவளால் முடியவில்லை. மல்லிகையம்மாள் என் முன்னால் தோற்று வருவதையும் அவள் குழப்பமடைவதையும் நன்றாக உணர்ந்தேன். 

திடீரென்று ஒரு நாள் மேஜர் என்னிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதானால் அவரும் ஆனந்தியும் என்னை விலகி விட்டு விலகி ரங்கூன் செல்வதாகச் சொன்னார். யோசிப்பதாகச் சொல்லிவிட்டு உன்னைச் சந்தித்தேன். பிறகு நீ அனுப்பிய பணம் வந்ததும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு வீடு வந்து சேர்ந்தோம். ஆனால் என் மனத்தின் அடித் தளத்திலிருந்து ஒரு குரல் மட்டும், ‘ஆனந்தியின பிடிப்பு இன்னும் நீங்கவில்லை; ஆகையால் சீதாவைத் தொடுவதுகூடத் தவறு என்று சொல்லிக் கொண்டே இருந்தது. 

நான் அந்தக் குரலைக் கேட்டு நடந்து கொண்டதினால் சீதா இதுவரை காப்பாற்றப்பட்டிருக்கிறாள். அன்று ஒரு நாள் இரவு நான் சீதாவின் அறையில் என்னையும் மறந்து அவளை அணைத்த போது நீ வந்து தடுத்தற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனந்தி வெளியூர் சென்ற பின்னும், பாதுகாப்பாகப் பிள்ளையார் கோவிலில் புதைத்து வைத்திருந்த காரியத் தகட்டை எடுத்து அணிந்து கொண்டிருந்தேன். 

அது கடலில் காணாமல் போனதிலிருந்து எனக்கு இரவு வேளைகளில் விசித்திரமான கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. அந்தக் கனவுகளில் ஆனந்தியின் உருவம் தோன்றி என்னைப் பிடிக்கத் தொடங்கியது அதனால்தான் தான் திருவண்ணாமலை சென்று சில நாட்கள் சீதாவை விட்டுத் தனித் திருப்போம் என்று நினைத்துப் புறப்பட்டுப் போனேன். பாதி செல்லும்போது ‘டீ’ சாப்பிடுவோம் என்று டீக்கடைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு டிரைவரை விட்டு, ‘டீ’ வாங்கி வரச் சொன்னேன். இருட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் டிரைவர் காரை நிறுத்தி இருந்தான்.

என் பின்னாலேயே ஒரு கார் வந்து சத்தமில்லாமல் நின்றது. சில விநாடிகளில் மல்லிகையின் மணம் வீச ஆரம்பித்தது. மனத்தில் லேசாகக் குழப்பம் ஏற்பட்டது. அடுத்த வினாடியே என் கார் கதவு திறந்தது. என் கழுத்தைச்சுற்றி ஒரு மெல்லிய கை பாம்பு போல் சுற்றிக்கொண்டது. ஆனந்தி ஆசை நெருப்பைக் கண்கள் வழியே கக்கியபடி நின்றாள்.

“ஆனந்தி, நீயா? ரங்கூன் போகவில்லையா?” என்றேன்.

“உங்களை விட்டு என்னால் பிரிய முடியுமா?” என்று சொல்லி விட்டு என் தீர்மானம், என் சுய அறிவு, என் வலிமை எல்லாவற்றையும் ஒருங்கே இழுத்துக் கொண்டாள்.

அத்தியாயம்-52

“நான் அவளைத் தொடர்ந்து அவள் காருக்குச் சென்றேன். பின் சீட்டில் படுத்துக் கொண்டேன் அவளும் என் அருகில் உட்கார்ந்து கொண்டாள். கார் டிரைவர் ‘டீ’க் கடையிலிருந்து ‘டீ’ வாங்கிக் கொண்டு காரை நோக்கி வருவதைப் பார்த்தேன். அப்புறம் எனக்கு ஞாபகம் இல்லை. கண்கள் தாமே மூடிக் கொண்டன. உணர்வு என் உடலை விட்டு மெள்ள விலகிக் கொண்டி ருந்தது. 

நான் விழித்தபோது, அடையாறு வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்தேன். நான் ஆனந்தியாக மாறி இருந்தேன். திலீபன் உருவம் என்ன ஆபத்து விளைவித்திருக்குமோ என்று கலங்கிப போய்விட்டேன். 

அப்போது மேஜர் வீட்டிற்கு வந்தார். நீ திலீபனைப் பைத்திய ஆஸ்பத்திரியில் சிறை வைத்திருப்பதாகக் கூறினார். ‘எத்தனை நாள் அவன் திலீபனை அங்கு வைத்திருக்க முடியும்? திலீபன் வெளி வந்ததும் சீதாவை அடையாமல் விடமாடடான்”, என்று சொன்னார். 

அன்று முதல் என் மனத்தில் ஒரே ஒரு விருப்பம்தான். எப்படி யாவது ஆனந்தி உருவத்திலாயினும் சரி, உன்னைச் சந்திக்க வேண்டும். உன்னிடம் என் டைரியையும் என் கடிதத்தையும் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதோடு மட்டுமல்ல. என் உடல் மடிந்தாலும் சரி, மல்லிகை அம்மாளை இந்த உலகத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தேன். 

சந்தர்ப்பம் கிடைத்ததும் சிறு சிறு பகுதிகளாக எழுதிய இந்தக் கடிதத்தையும், நான் வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் இது நாள் வரை ஒளித்து வைத்திருந்த இந்த டைரியையும் எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குப் புறப்பட்டேன். மற்றது உனக்குத் தெரியும். 

எப்படியாவது திலீபன் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிப்படுமுன் அவனைக் கொன்றுவிடு, அண்ணா. இதுதான் உன் தம்பியின் கோரிக்கை. இறந்தபின் அவனை உடனே எரித்து விடு. அப்போதுதான் சீதா காப்பாற்றப்படுவாள்… 


கோர்ட் கிளார்க் கடிதத்தைப் படித்து முடித்து நிறுத்தினார்.

ஜட்ஜ் ராமநாதனைப் பார்த்தார். 

ராமநாதன், “நான் திலீபனின் னைச் சுட்டதன் காரணத்தை இனி விளக்க வேண்டிய தேவையில்லை. இதுமாதிரி இருபதாம் நூற்றாண்டில் நடக்குமா என்று நீங்கள் கேட்கலாம். நடந்திருக்கிறது. நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் பரவாயில்லை. நான் கடமையைச் செய்து விட்டதாக நினைக்கிறேன்”,  என்று கூறி முடித்தான். 

சில வினாடிகளுக்கு ஜட்ஜ் வில் யாரும் பேசவில்லை. நீதிபதி கடியாரத்தைப் பார்த்தார். மூன்று மணி காட்டியது. ஜட்ஜ், கோர்ட்டாரோடு டாக்டர் சண்முகசுந்தரம் ஆஸ்பத்திரியில் போய், சாகாமலும் பிழைக்காமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் மயங்கிக் கிடக்கும் திலீபனை நேரிலேயே பார்க்க வேண்டுமென்றார். 

ராமநாதன், “நானும் ஒரு முறை என் சகோதரனின் உருவத்தைப் பார்க்க விரும்புகிறேன்,” என்று சொன்னான். 

போலீஸ் தரப்பு வக்கீல், “அது முறையல்ல”, என்று ஆட்சேபம் தெரிவித்தார். 

நீதிபதி, “எந்தவிதச் சலனமும் இல்லாமல் கிடக்கும் உருவம், ஒருவேளை ராமநாதனும் சீதாவும் அங்கு வந்தால் வாழ்வின் அறிகுறியைக் காட்டலாம். ஆகையால் தக்க பாதுகாப்போடு, ராமநாதனையும், சீதாவையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவு பிறப்பித்தார். 

இதே சமயத்தில் ஜட்ஜ் அறையின் கதவு திறந்தது. இன்ஸ்பெக்டர் நுழைந்தார். 

“கோர்ட்டாரிடம் ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்லவேண்டும். இப்போதுதான் டாக்டர் சண்முகசுந்தரத்தின் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தது. வீணையோடும் மல்லிகைப் பூக்களோடும் ஒரு பெண் வந்திருக்கிறாளாம். அவள் திலீபனின் அறைக்குள் வீணையோடு செல்ல வேண்டுமென்று கெஞ்சுகிறாளாம். உயிர் போகும் முக்கியமான விஷயம் என்று மன்றாடுகிறாளாம். அவளைத் திலீபனின் அறைக்குள் அனுமதிக்கலாமா என்று கோர்ட்டாரின் உத்தரவிற்காக டாக்டர் காத்திருக்கிறார்” என்று சொன்னார் 

ராமநாதன் தன்னையும் மறந்துபடி, “அந்தப் பெண் ஆனந்தியின் உருவத்திலிருக்கும் திலீபனாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூவினான்.

அத்தியாயம்-53

ஜட்ஜ் சற்றுக் கடுமையாக ராமநாதனைப் பார்த்து, “அமைதி” என்றார். பிறகு இன்ஸ்பெக்டரிடம், “அந்தப் பெண்ணைத் திலீபனின் அறைக்குள் அனுமதியுங்கள். ஆனால் அவள் திலீபனை மட்டும் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். கோர்ட்டும் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு விஜயம் செய்யும் என்பதை டாக்டருக்குத் தெரிவித்து அதை ரகசியமாக வைத்திருக்கச் சொல்லுங்கள்,” என்று கட்டளையிட்டார். 

இன்னொரு போலீஸ் அதிகாரி சீதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப் புறப்பட்டார். கோர்ட் கலைந்தது. 

போலீஸ் வக்கீல், ராமநாதனின் வக்கீலிடம், “என்ன சார் இதெல்லாம் நம்ப முடியுமா? இந்தப் பேய்க் கதையை நம்பி ராமநாதனை விடுதலை செய்ய முடியுமா?” என்றார். 

ராமநாதனின் வக்கீல், போலீஸ் வக்கீலிடம், ”சார், நீங்கள் போலீஸ் வக்கீலா, இல்லை உங்களுக்குள்ளே மல்லிகையம்மாள்தான் இருந்து பேசுகிறாளா என்று எப்படி சார் நிச்சயமாகச் சொல்வது?” என்று பதில் அளித்தார். 

போலீஸ் வக்கீல் அப்புறம் ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிட்டார். 

இதே சமயத்தில் ஆஸ்பத்திரியில் ஆனந்தி, திலீபன் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள். டாக்டர் அவளை “எட்ட இருந்தே பார்க்க வேண்டும்,” என்றார். 

ஆனந்தி, “டாக்டர் சார். நான் அவரை ஒன்றும் செய்ய மாட்டேன். இந்தப் பூண்டு இதழ்களை மட்டும் தயவு செய்து அவர் நாசியின் முன் வையுங்கள்”, என்றாள். 

டாக்டர், பூண்டு இதழ்களை வாங்கிக் கொண்டு யோசித்தபடி நின்றார். “யோசிக்காதீர்கள் டாக்டர் சார். உங்கள் நண்பன் ராமநாதனின் குடும்பத்தைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்குச் சேரும்”, என்றாள். 

திலீபனின் உருவத்தில் சலனம் தெரிந்தது. ஆனந்தி, மல்லிகைப் பூச்சரங்களைத் தன் மீது அணிந்து கொண்டு வீணையை வாசிக்க ஆரம்பித்தாள். டாக்டர், பூண்டு இதழ்களைப் படுத்திருக்கும் திலீபனின் நாசியின் முன் பிடித்தார். திலீபனின் உருவம் திணற ஆரம்பித்தது. 

இதுநாள்வரை பேசாமல் படுத்திருந்த திலீபன், “அவளை வெளியே தள்ளுங்கள். வெளியே தள்ளுங்கள்,” என்று கூச்சலிட்டான். 

ஆனந்தி, திலீபனின் கூச்சலை மதிக்காமல் அவனை நோக்கியபடி வீணை வாசிக்கத் தொடங்கினாள். வீணையின் நாதம் அவள் கை விரல்களில் ஊளை இடுவது போல் ஒலித்தது.திலீபன் கண்களைத் திறந்து வெறுப்போடு ஆனந்தியை நோக்கினான். 

அதே சமயத்தில் ஆனந்தி வீணையைக் கீழே வைத்துவிட்டு. டாக்டர் தடுக்குமுன் பாய்ந்து, திலீபனை அணைத்தபடி அவன் முகத்துக்கு நேர் தன் முகத்தை வைத்தாள். திலீபன் திணறினான். ஆனந்தியைத் தள்ள முயன்றான். சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்ச்சியைக் கண்ட டாக்டரும் சிப்பந்திகளும் ஓடிப்போய் ஆனந்தியைப் பிடித்து இழுத்தனர். ஆனந்தி விலக்கப்பட்டாள். திலீபன் உடனே எழுந்து உட்கார்ந்தான். டாக்டர் கையிலிருந்த பூண்டு இதழ்களைப் பறித்து மென்று தின்றான். 

அதே சமயத்தில் மேஜர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து ராமநாதன், ஜட்ஜ், வக்கீல்கள் நுழைந்தனர். மேஜர், ஆனந்தியைப் பார்த்ததும் ஆத்திரத்தோடு அவளைச் சுட்டார். ஆனந்தி அலறினாள். துப்பாக்கியோடு நிற்கும் மேஜரைப் பார்த்தாள். “ஐயோ மாயாநாதா! என்னைச் சுட்டுவிட்டாயே. திலீபன் தப்பிவிட்டானடா”, என்று சொல்லிச் சாய்ந்தாள். அந்தக் குரல் திலீபன் குரலாக இல்லை. வழக்கமாக உள்ள ஆனந்தியின் குரலாகவும் இல்லை. முற்றிலும் புதிய நடுத்தர வயதுள்ள மாதின் குரலாக இருந்தது. அது மல்லிகை அம்மாளின் குரல் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாவிட்டாலும் மேஜருக்கு அது புரிந்துவிட்டது. ராமநாதனும் ஓரளவு ஊகித்துக் கொண்டான். 

திலீபனை மேஜர் வெறுப்போடு பார்த்தார். தன் சுய அறிவை இழந்தார். 

ஜட்ஜ், “மாயநாதனைக் கைது செய்யுங்கள்”, என்று கட்டளையிட்டார். 

போலீஸ் அதிகாரி நெருங்குவதற்குள் மேஜர் தன் துப்பாக்கியால் திலீபனை நோக்கிக் குறி வைத்தார். அவர் சுடுவதற்குள் ராமநாதன் பாய்ந்து அவர் மீது விழுந்தான். அதே வினாடியில் துப்பாக்கி தொடர்ந்து இருமுறை வெடிக்கும் சத்தம் கேட்டது. ராமநாதன் தரையில் சாய்ந்தான், மார்பைப் பிடித்துக் கொண்டு. 

இன்ஸ்பெக்டர், மேஜர் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டார். மேஜர் கைது செய்யப்பட்டார். திலீபன் ஓடிப் போய் ராமநாதனை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு, “அண்ணா, அண்ணா! எனக்காக உன் உயிரைக் கொடுத்துவிட்டாயே!” என்று அழுதான். 

சீதா, “அத்தான், அத்தான்!” என்று கதறியபடி ராமநாதனை நெருங்கினாள். 

ராமநாதனின் கண்கள் இருண்டன. அவன் பேச முயன்றான். வார்த்தைகள் தடுமாறி வெளி வந்தன, “திலீபா! நீ சீதாவை மணந்து சந்தோஷமாயிரு. மாமா குடும்பத்துப் பெண்களைச் சுற்றிச் சுற்றி வந்த சாபம் என் உயிரோடு முடியட்டும். சீதாவை அது பாதிக்காமல் இருக்கட்டும்… நீதிபதி அவர்களே! உங்கள் வேலையை எளிதாக்கி விடடேன். திலீபனின் டயரியை நம்பி என்னை விடுதலை செய்வதா அல்லது சுட்டதற்காக என்னை தூக்கிலிடுவதா என்ற குழப்பம் யாருக்கும் வேண்டாம். திலீபனின் உடலைச் சுட்டது நான்தான். அதே திலீபனின் உயிரை இன்று காத்து விட்டேன்.” 

திலீபன் குறுக்கிட்டான், “அண்ணா, நான் வந்ததிலிருந்து ஒரு நாள் கூட உனக்கு அமைதி கொடுக்கவில்லை. உன்னைக் குற்றவாளியாக்கினேன். இப்போது உன் உயிரையே வாங்கிவிட்டேன். எப்படி உனக்குக் கைம்மாறு செய்வேன் அண்ணா, எப்படிக் கைம்மாறு செய்வேன்?”

ராமநாதன் சிரித்தபடி திலீபன் கைகளைப் பிடித்து, “திலீபா! நீ பிறந்தது முதல் வறுமை, துக்கம் எல்லாம் அனுபவித்துவிட்டாய். இனிமேலாவது நீ இன்பமாய் இருக்க வேண்டும். நான் மாமாவின் வீட்டில் சுகமாக வாழ்ந்தவன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. நீ தவறு செய்யாமல் வாழ்ந்தால் அதுதான் நீ எனக்குச் செய்யும் கைம்மாறாகும். சீதாவின் கண்களில் நீர் வழிய நீ காரணமாகிவிட்டால் அப்போது தான் நீ எனக்குத் துரோகம் செய்தவனாவாய்!” என்றான். 

சீதா, “அத்தான், வாழாமல் போகிறீர்களே அத்தான்! வாழாமல் போகிறீர்களே!” என்று கதறினாள். 

ராமநாதனின் கண்கள் மூடின. முயற்சியோடு அவற்றைத் திறந்தான். “சீதா, அண்ணன் தங்கையாக வளர்ந்தோம், குழந்தைப் பருவத்தில். பிறகு உன்னை மணக்க விரும்பிய காதலனாக இருந்தேன் சிலநாள். மறுபடியும் உன் அண்ணனாக மாறி உன் கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொண்டேன்,” என்று சொல்லிவிட்டுப் பேசமுடியாமல் திணறினான். 

“இப்போது நாங்கள் தொழ வேண்டிய தெய்வமாகிவிட்டீர்கள் அத்தான்.” என்று சீதா கதறினாள். 

“இல்லை சீதா! என்னைத் தெய்வமாக மதிக்காதே. நான் வெறும் மனிதன்தான். பிறருக்காகச் சாகும் மரணம் ஒரு நிரந்தர நீடித்த வாழ்வு” என்று சொல்லிவிட்டுச் சாய்ந்துவிட்டான். 

நீதிபதியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். திலீபனை மறுநாள் கோர்ட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மேஜர் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். ஆனந்தியின் உடல் அப்புறப்படுத்தப்பட்டு அன்றிரவு எரிக்கப்பட்டது. 


வருஷங்கள் ஓடின. 

சென்னையில் ஒரு மாளிகையின் ஹாலில் ஏழு வயதுச் சிறுவன் பந்தை வீசி எறிந்து கொண்டிருந்தான். அது மேஜை மீதிருந்த கடியாரத்தைக் கீழே தள்ளி விட்டது.

சீதா ஆத்திரத்தோடு ஓடி வந்தாள். “ராமநாதா! உன் விஷமத்துக்கு எல்லையே இல்லையா? கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த போக்கிரிப் பிள்ளையாயிட்டேடா”, என்று தன் மகனைத் திட்டிவிட்டு, தன் கணவன் திலீபனைத் திரும்பப் பார்த்தாள். 

திலீபன் சிரித்தான். 

சீதா. ”இப்படிச் சிரித்துச் சிரித்தே அவனைக் கெடுத்துவிட்டீர்கள். அவனுக்குப் பயமே இல்லை, பாருங்கள், கடியாரத்தை உடைத்து விட்டான். ஒரு அடி வைத்தால் என்ன?” என்றாள். 

திலீபன் குறுக்கிட்டு, ”குழந்தையை அடிக்காதே சீதா. அண்ணாவே மறுபடியும் நம் வீட்டிலே நமக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். எனக்காக எல்லாவற்றையும் கொடுத்து உயிர் நீத்த அந்த உத்தமனின் பேரைத் தாங்கிக் கொண்டிருக்கிற குழந்தையைத் தொட்டு அடிக்க மனம் வருமா சீதா? நீயே சொல்லு,” என்று கண்களைத் துடைத்துக் கொண்டான். குழந்தை ராமநாதன் தன் தந்தையையும் தாயையும் மாறி மாறிப் பார்த்தான். 

சீதா திலீபனை நெருங்கி, “பாருங்கள் குழந்தை பார்க்கிறதை. அப்படியே அத்தான் ராமநாதன் பார்க்கிற மாதிரி இருக்கிறது.” என்று சொல்லிக் கண் கலங்கி நின்றாள். 

(முற்றும்)

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *