கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 12,999 
 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-53

அத்தியாயம்-46

திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல் அவர் உடலைச் சுற்றி அணிந்திருந்த காரீயத் தகட்டை எடுத்துக் காட்டி என்னிடம் சொன்னார், ‘என்னை எரிக்கிறபோது இதையும் சேர்த்து எரித்து விடாதே! இதுவும் அந்தப் பழம் பெட்டியில் இருக்கிற நோட்டுப் புத்தகமும்தான் நான் உனக்கு வைத்து விட்டுப் போகிற சொத்து’, என்று சொல்லிக் கண்ணை மூடியவர் தான் அப்புறம் கண்ணைத் திறக்கவே இல்லை. நானும், குழம்பிய நிலையில் ஏதோ உளறுகிறார் என்று நினைத்தேன். அப்பா வார்த்தையை நம்பவில்லை, என்றாலும், ஏதோ ஓர் உணர்வு, அவர் மேலிருந்த காரீயத் தகட்டையும் அந்த நோட்டுப் புத்தகத்தையும் எடுத்து கோணிப் பையிலே பத்திரமாக வைக்கும்படி எனனைத் தூண்டிற்று. அதை மட்டும் நான் செய்யாதிருந்தால் நான் இப்போது உனக்கு இந்தக் கடிதம் எழுதும் வாய்ப்புக்கூட இருந்திருக்காது. 

தந்தை இறந்த தினத்தன்று நீயும் உன் மாமாவும் சில மணிநேரம் இருந்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள். அப்போதெல்லாம் என் மனத்தில் விபரீதமான சிறு மாறுதல்கள் நிகழத் தொடங்கின. என் தூக்கத்தில் வித விதமான கனவுகளாக வந்து சேர்ந்தன. விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இரண்டும் கெட்டான் நிலை அது. தூக்கத்தின் வரம்பு நிலை என்று சொல்கிறார்களே அந்த நிலை எனக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்தது. 

திருச்சியில் உன் மாமா வீட்டில் தங்கியிருந்தபோது நான், சித்ரா பௌர்ணமி இரவு காவேரிக் கரைக்குச் சென்றேன். அங்கு மறுபடியும் என்னையும் அறியாமல் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டதை டைரியில் குறிப்பிட்டிருக்கிறேன். அன்று தூக்கத்தின் வரம்பில் கண்ட நங்கை, கிட்டத்தட்ட ஆனந்தியின் சாயலில் இருந்தாள் என்பதை உதகமண்டலத்தில் நான் ஆனந்தியைப் பார்த்த போது அறிந்தேன். உதகமண்டலத்துக்கு நாம் ஓர் இரவு வேளையில் வந்தோம் என்பது உனக்கு உனக்கு ஞாபகமிருக்கும். அந்த முதல் இரவு மேஜரின் மாளிகையைப் பார்த்தபோது எனக்கு ஏற்கனவே அந்தக் கனவில் பார்த்த ஓர் இடம்போல தெரிந்தது. அன்றிரவு கனவில் தந்தை தோன்றி என்னை அந்த மேஜர் பங்களாவுக்கு அழைத்துப் போனதையும்,பிறகு தொடர்ந்து என்னைச் சவுக்கால் அடித்து. திருச்சி காவேரிக் கரை அரசமரத்துக்கு அழைத்துப் போனதையும் நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். 

கனவில் இடம், பரிமாணம், காலம் இம்மூன்று விஷயங்களுக்கு உள்ள சட்ட திட்டங்களே வேறு. நடைமுறை வாழ்க்கையில் விழிப்பு நிலையில் அவைகளுக்குள்ள சட்ட திட்டங்கள் வேறு. மறுநாள் மாலை நானும், நீயும் மேஜர் பங்களாவுக்குச் சென்றதும், அங்கு நான் ‘ஹிப்நாடிக்’ சோதனைக்கு ஒப்புக் கொண்டதும் உனக்குத் தெரிந்ததே. ஆனந்தியின் கண்களைப் பார்த்து நான் சோதனைக்கு ஒப்புக் கொண்டபோது என்னையும் அறியாமல் என் உடல் பொருள், ஆவி மூன்றையும் அன்று மாலை அவளுக்கு விற்றுவிட்டேன் என்பதை நான் அன்று உணரவில்லை. 

ஹிப்நாடிசம் என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்று நினைத்தேன். அது என் மன ஆவியைப் பிடித்துச் சிறை வைக்கும் விலங்கு என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு மனிதனைச் சிறை வைக்கச் சுவர்கள், கதவுகள். பூட்டு தேவையில்லை. கண்ணுக்குத் தெரியாத சுவர்களை மனத்தால் எழுப்ப முடியும். என் உடலின் ஒரு பகுதி, என் உள்ளத்தின் ஒரு பகுதி என்னைக் கேட்காமல் இயங்கத் தொடங்குவதை அறிந்ததும் பீதியடைந்தேன். மெள்ள மெள்ள நான் நானல்ல என்பதையும். நான் என்னை அறியாமல் எனக்குப் புறம்பாக உள்ள சக்திகள் தீர்மானிப்பதையும் அறிந்தேன். மேஜர் வீட்டில் பார்த்த வீணை சாதாரண வீணையல்லை, இறந்து போன மனித நரம்புகளால் ஆனது. அந்த வாத்தியம். ஒருவேளை அந்த வீணையின் நரம்புகளில் மல்லிகை அம்மாளின் நரம்புகளே இருக்கின்றனவோ தெரியவில்லை. அந்த வீணையின் நாதம் ஒலிக்கும்போது ஏற்படும் ஒரு கிளர்ச்சி, அதை இப்போதும் நினைக்கவே எனக்குப் பயமாயிருக் கிறது.

அண்ணா! முன்னுக்குப் பின்னாக விஷயங்களை இந்தக் கடிதத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். இந்தக் கடிதத்தை மேஜருக்குத் தெரியாமல் எழுதுகிறேன். மேஜரிடமிருந்து கடிதத்தை மறைப்பது என்றால் மற்றவர்களிடமிருந்து மறைப்பது போல் அல்ல. மேஜர் என்னைப் பார்க்கும்போது நான் கடிதத்தைப் பற்றி நினைத்தால்கூட, அவர் என் நினைப்பிலிருந்து நான் உனக்குக் கடிதம் எழுதுகிறேன் என்பதைத் தெரிந்து கொள்வார். அவர் பார்வையில் வந்தவுடன் நான் கடிதத்துக்குச் சம்பந்தமில்லாத உணவுப் பொருட்கள், சினிமாக் காட்சிகளைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடுவேன். இந்தக் கடிதம் பூராவையும் அவர் தூங்கிய சமயத்தில், அவர் மதுவருந்தித் தன்னுடைய மனத் திறமைகளை இழந்திருந்த சமயத்தில் எழுதி முடித்திருக்கிறேன். ஆகையால் நிறையக் குறைபாடுகள். தெளிவின்மை இருக்கும். அதற்காக என்னை மன்னித்துவிடு. 

காவேரிக்கரையிலிருந்து என்னைத் தொடர்ந்துவந்த மல்லிகைப் மணம். ஆனந்தியின் வீட்டில் ‘ஹிப்நாடிக்’ சோதனையின்போது. நான் பார்த்த அந்த வீணை, அந்த வீணையின் அருகில் இறந்துபோன மல்லிகை அம்மாள் நின்று கொண்டிருந்தது. இவையெல்லாம் எனக்குப் பயத்தையும். குழப்பத்தையும் கொடுத்தன. அதனால்தான் உதகமண்டலத்தை விட்டுப் புறப்பட்டேன். உதகமண்டலத்தைவிட்டு வந்த பின்னும் ஆனந்தி என்னை நிழல்போல் தொடர்வதை உணர்ந்தேன். கந்தசாமி கோவிலின் வெளிப்புறம் ஆனந்தியைச் சந்தித்தேன். அன்று சீதாவும் என் அருகில் இருந்தாள். 

சீதா இருக்கும்போது எனக்கு ஆனந்தியின் மீது கவர்ச்சி ஏற்படவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனந்தியின் வலிமை, அவள் திறமை, எல்லாம் சீதா அருகில் இருக்கும் போது சிறிது கூடப் பலிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் உணர்ந்து கொண்டதை ஆனந்தியும் உணர்ந்து கொண்டாள் என்பதை அவள் பார்வையே காட்டியது. அவ்வளவு வெறுப்போடு ஆனந்தி சீதாவைப் பார்த்தாள். திருமணம்வரை காத்திராமல் சீதாவை அடையத் துடித்தேன். சீதா பண்புள்ள பெண்ணுக்கு உரித்தான கூச்சத்தோடு இரவு என் அறைக்கு வர மறுத்துவிட்டாள். 

சீதா மட்டும் என் அறைக்கு வந்து என் இச்சைக்கு இசைந்திருந்தால் எனக்கு நேரவிருந்த கஷ்டங்கள் எல்லாம் நேராமலே இருந்திருக்கும். என் தலைவிதியை என்ன என்று சொல்வது! ஒருநாள் என் அறையில் சீதா என்று நினைத்து என் ஆண்மையை ஆனந்தியிடம் நிவேதனம் செய்துவிட்டேன். அதோடு என் மனம் என் ராஜ்யத்தின் கடைசிக் கோட்டையும் விழுந்துவிட்டது. அப்புறம், நான் நானாக இல்லை. என் மனத்தில், புற்றுக்குள் பாம்பு நுழைவது போல் புது ஆசைகள் நுழைந்தன. 

வீட்டைவிட்டு நேராக மேஜர் இருக்கும் அடையாறு வீட்டுக்குச் சென்றேன். மேஜரும் ஆனந்தியும் தங்கியிருந்த வீட்டை எப்படிக் கண்டு பிடித்தேன் என்பது எனக்குத் தெரியாது. தூக்கத்தில் நடப்பவன்போல் ஆனந்தியின் வீட்டை அடைந்தேன். அவளைப் பார்த்ததும் அவளை அடைய வேண்டுமென்று துடித்தேன். அவள் முதலில் மறுத்தாள். பசித்த பிச்சைக்காரன் உணவுக்குக் கெஞ்சுவது போல் அவளிடம் கெஞ்சினேன். அவளோடு இன்பம் துய்க்கத் துய்க்க என் ஆசை அதிகமாயிற்று. விறகைப் போடப் போட நெருப்பு ஜ்வாலை விட்டு எரிவதுபோல் என் உடல் வலிமை குறைந்து கொண்டே போயிற்று. உலகம் எங்கள் இருவருக்காகவே ஆக்கப்பட்டது போலவும், உலகத்தில் வேறு எந்தவித லட்சியமும் இல்லை போலவும் நடந்து கொண்டோம். 

அப்போது வேண்டுமென்றே மேஜர் வீட்டில் இருக்கமாட்டார். ஒவ்வொரு முறை கலவி இன்பம் துய்க்கும்போதும் இன்பத்தின் உச்ச வரம்பில் நான் ஆனந்தியின் உள்ளமாக மாறி அவளோடு ஒன்றாக கலந்துவிட்டதுபோல் நினைப்பேன். இதைப்பற்றி ஆனந்தியிடம் கேட்டேன். அவள் என்னை ஒருவிதமாகப் பார்த்தாள்.பிறகு சிரித்தாள். ‘உண்மைக் காதலில் அப்படித்தான், உடல் பொருள் ஆவி மூன்றும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாவதால்தான் அந்த உணர்வு ஏற்படுகிறது.’ என்றாள். 

பகல் பொழுதில் உணவு அருந்தியபின் ஆனந்தி தூங்குவாள். அப்படியொரு சந்தர்ப்பத்தில், ஒருநாள் நான் மேஜரின் அறைக்குள் சென்றேன். அவரது மேசையின் மேல் சிறு சிறு குறிப்புப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் புரட்டிப் பார்த்தபோது அதிலிருந்து ஒரு வாக்கியம் என் சிந்தனையைத் தூண்டியது. ‘மனிதன் சிரத்தை மயமானவன். அவன் எந்தப் பொருளில் உடல், உள்ளம், ஆன்மா மூன்றையும் சேர்த்து தியானிக்கிறானோ அவன் அதேபோல் ஆகிறான்.’ கிட்டத்தட்ட இது பகவத் கீதை வாக்கியம்போல் இருந்தது. மேஜர் எதற்குப் பகவத் கீதையின் பொன் மொழிகளை நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைக்கிறார் என்று ஆச்சரியப் பட்டு, குறிப்புப் புத்தகத்தின் மற்றப் பக்கங்களைப் புரட்டினேன் 

அதில் சில தேதிகளில் சில நிகழ்ச்சிகள் எழுதியிருந்தார். என் தந்தை இறந்த தேதியன்று அவர் சென்னையில் தங்கியிருந்திருக்கிறார் என்பது தெரிந்தது. சித்ரா பௌர்ணமி யன்று அவர் திருச்சியில் இருந்திருக்கிறார் என்றும் தெரிந்தது. நாம் இருவரும் உதகமண்டலம் வருவதைப் பற்றிய ஒரு குறிப்பு அதில் பதிவு செய்யப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இந்த விவரங்களைப் படித்த எனக்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று. மேஜரையோ, ஆனந்தியையோ நான் எதேச்சையாகச் சந்திக்கவில்லை. எனக்கு நிகழ்ந்தவை மேஜரின் ஏதோ ஒரு திட்டத்தின்படி நடக்கின்றன. 

அவரது மேசையிலுள்ள மற்றப் பொருட்களைத் தேட ஆரம்பித்தேன். அங்கு என்னுடைய போட்டோவும், உன்னுடைய போட்டோவும் இருந்தன. என்னுடைய போட்டோவின் அடியில், ‘திலீபன்- பொருத்தமான மனஅலைகள். உபயோகப்படுத்தலாம்,’ என்று எழுதி இருந்தது. உன்னுடைய போட்டோவில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. நம் இருவர் போட்டோவும் மேஜரிடம் எப்படி வந்தன என்று நினைத்து மனம் குழம்பினேன். போட்டோக்களைக் கூர்ந்து கவனித்தபோது, உன் போட்டோவின் பின்புறச் சூழ்நிலை உதகமண்டலக் காட்சியாக இருந்தது. என் போட்டோவின் பின்புறம் சென்னைத் தெருக்களின் ஒரு பகுதியாக இருந்தது. உன்னையும் என்னையும் மேஜர் ரகசியமாகப் போட்டோ எடுத்திருக்கிறார் 

மேஜரின் இழுப்பறையில் காபாலிகர்களின் மந்திர தந்திரங்களைப் பற்றிய புத்தகமும், பழைய சீனா பாஷையில் சில குறிப்புக்களும் இருந்தன. பர்மாக்காரன் ஒருவன் படமும் அதன் அடியில் ‘மாங்-டின்’ என்ற பெயரும் எழுதப்பட்டு இருந்தது. அந்த மாங்டின் படத்தில் அவன் கண்கள் என்னை அப்படியே சுட்டுப் பார்ப்பதுபோல் இருந்தது. படத்தின் கண்கள் உயிரோடு ஒருவனைப் பார்ப்பது போல் இருந்தன. 

மேஜர் வருவதற்குள் எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டு மென்ற ஆவலில் நான் அங்குள்ள பழைய பெட்டியைத் திறந்தேன். அதில் சில காகிதக் கட்டுக்க இருந்தன. எல்லாம் கோயமுத்தூரிலிருந்து ரங்கூனுக்கு எழுதிய கடிதங்கள். கடிதங்களின் அடியில் இருந்த கையெழுத்து ‘மல்லி’ என்று எழுதியிருந்தது. கடிதங்கள் நைந்து விழும் நிலையில் இருந்தன அதைப் பிரித்துப் படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்குள் ஆனந்தி விழித்துக் கொண்டால்…? கடிதக் கட்டுகளை அவசர அவசரமாக வைத்தேன். 

அப்போது அடியில் 5 அங்குல நீளம் 3 அங்குல அகலத்தில் ஒரு சிறு போட்டோ வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அது ஆனந்தியின் படம். அவள் 16 வயது தோற்றத்தோடு இருக்கும்போது எடுக்கப்பட்டது. இப்போது இருக்கும் ஆனந்திக்கும் அந்தப் படத்தில் இருக்கும் ஆனந்திக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்தது. அந்தப் படத்தில் உள்ள ஆனந்தியின் கண்கள் கண்ணியமாக இருந்தன. ஆனால் இப்போது காணும் ஆனந்தியின் கண்களோ ஒரு கவர்ச்சி நெருப்பு! ஆசையை அனலாகக் கக்கும் இந்தக் கண்களைப் போன்ற கண்களை எங்கு பார்த்திருக்கிறேன். எங்கு பார்த்தேன் என்று திரும்பத் திரும்பச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே என் மனத்தில் ஒருவிதப் பீதியோடு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. திரும்பினேன். ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தபடி.

அத்தியாயம்-47

என் கையிலுள்ள படத்தையும் என்னையும் பார்த்தபடி ஆனந்தி நின்றாள். 

அவள் நின்ற இடத்துக்கு நேராக, அவள் தலைக்கு இரண்டு அங்குல உயரத்தில், மல்லிகை அம்மாளின் படம் மாட்டப்பட்டிருந்தது. 

படத்திலுள்ள உருவத்தின் கண்களைக் கவனித்தேன். படத்தின் அடியில் நிற்கும் ஆனந்தியின் கண்களையும் கவனித்தேன். 

இரண்டுக்கும் ஒருவித ஒற்றுமை இருப்பதாகத் தெரிந்தது. என் கையில் உள்ள பதினாறு வயது பருவ மங்கை ஆனந்தியின் கண்ணுக்கும், போட்டோவிலுள்ள கண்ணுக்கும் எந்தவிதப் பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘கண்கள் உடலிலுள்ள ஆன்மாவின் ஜன்னல்’, என்று நான் படித்த ஆங்கில வாக்கியம் என் மனத்தில் எழுந்தது. 

ஆனந்தி என்னை நோக்கிச் சிரித்தபடியே நடந்து வந்தாள், நெருங்கியதும், அவள் என் கையில் இருந்த போட்டோவை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். அவள் முகம் என் முகத்தை நெருங்கியது. என் கண்கள் தாமே மூடின. அதோடு என் சுய அறிவும் எங்கோ மறைந்தது. எங்கோ இருளில் விழுந்து கொண்டிருந்தேன். அந்த இருள் இன்பம் நிறைந்ததாக இருந்தது. என் தேகத்தில் ஒரு முரட்டுத்தனம், ஒரு பலம், ஒரு புதுமை நுழைவதை உணர்ந்தேன் 

வேலைக்காரன் தோன்றி, நீயும் மாமாவும் வந்து வெளி ஹாலில் காத்திருப்பதாகச் சொன்னான். நானும் ஆனந்தியும் பிரிந்தோம். 

நான் வீட்டை விட்டு வெளிச் சென்ற சில நாட்களில் நீயும் மாமா ராமலிங்கமும் அடையாறு வீட்டுக்கு வந்தபோது நடந்த நிகழ்ச்சி உனக்கு ஞாபகமிருக்கும். திடீரென்று எனக்கு உன் மீதும் மாமா மீதும் ஒரு வித வெறுப்பு என்னையுமறியாமல் ஏற்பட்டது. என் சுபாவம் அடியோடு மாறியது. வெளி ஹாலில் நான் உங்களிடம் எப்படி நடந்துகொண்டேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். உங்களை அவமானப் படுத்தி அனுப்பிவிட்டு என் அறையில் வந்து உட்கார்ந்த உடனே எனக்கு மறுபடியும் பழைய அன்பு தோன்றியது. பெரியவரிடம் தவறாக நடந்து கொண்டோமே என்ற பச்சாதாபம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அப்போதுதான் நான் ஓர் உண்மையை முதல்முறையாக உணர்ந்தேன். ஆனந்தியை அணைக்கும் – ஸ்பர்சிக்கும் – ஒவ்வொரு சமயமும் சிறிது சிறிதாக என் குணத்தில், சிந்தனையில் மாறுதல்கள் ஏற்படுவது போல் தெரிந்தது. 

ஆனால் அந்த மாறுதல் சீக்கிரமே விலகிவிடுவதையும் உணர்ந்தேன். மாமாவும் நீயும் வந்துவிட்டுப் போன அன்று ஆனந்தியை விட்டுப் பிரிந்துவிடலாமா என்றுகூட நினைத்தேன் ஆனால் இரவு நெருங்கியதும் தீர்மானங்கள் மாறின. ஆனந்தியின் மீதிருந்த ஆசைதான் மிஞ்சியது. அன்றிரவு பசி இல்லை என்று வேலைக்காரனை விட்டு அண்மையில் உள்ள ஹோட்டலிலிருந்து பூரி குருமா வாங்கிவரச் சொன்னேன். அதைச் சாப்பிட்டுவிட்டு அறையில் படுத்து ஆனந்தியின் வருகைக்குக் காத்திருந்தேன். 

ஆனந்தி பத்து மணி சுமாருக்கு என் அறைக்கு வந்தாள் வழக்கம் போல் மல்லிகைப் பூச்சரங்கள் அணிந்து வந்தாள். என்னை நெருங்கியதும் திடீரென்று தேள் கொட்டி யது போல் அலறினாள். 

அவள் உதடுகள் துடித்தன. கண்கள் குத்திட்டு நின்றன. அசையாமல் மூக்கைக் கைவிரல்களால் அழுத்தி மூடிக் கொண்டாள்.

படுக்கையை விட்டு எழுந்து அறைக் கதவின் அருகில் நின்றபடி என்னை வெறுப்போடு பார்த்தாள். அப்போது அவள் முகத்தில் இளமை இல்லை, கவர்ச்சி இல்லை. 

பீதியோடு, “பூண்டு தின்றீர்களா?” என்று கேட்டாள். 

அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. நான் சாப்பிட்ட குருமாவில் பூண்டு இதழ்கள் மிதந்ததை உணர்ந்தேன். “ஆமாம்”, என்றேன். 

அடுத்த நிமிஷமே அறையை விட்டுச் சென்றுவிட்டாள். அன்று இரவு பூராவும் அவள் என் பக்கம் வரவே இல்லை. 


மறுநாள் காலையில், பூண்டு கலந்த உணவே வீட்டினுள் கொண்டு வரக் கூடாது என்று வேலைக்காரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நான் நினைப்பதை உணர்ந்துகொள்ளும் சாமர்த்தியம் படைத்தவள், கேவலம் பூண்டைக் கண்டு பயப்படுகிறாளே என்று ஆச்சரியமாய் இருந்தது. மேஜரும் ஆனந்தியின் காரணமாகத்தான் அதை வெறுத்து ஒதுக்கியிருக்கிறார் என்பது தெரிந்தது. மறுநாள் மேஜர் வந்துவிட்டார். அவர் மகளோடு தனிமையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். தகப்பனும் மகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் இருந்தது. ஆகையால் மேஜர் அறைப்பக்கம் சென்று கதவருகில் நின்றேன். கதவு மூடியிருந்தது. மேஜரின் குரல் மட்டும் கேட்டது. 

“ரொம்ப நாளாகிறதே. திட்டத்தின் முதல் படிக்கே இவ்வளவு நாளா?” என்று மேஜர் கேட்டார். 

“என்ன பண்ணுவது? அவர் மனசு இன்னமும் இரண்டு பகுதியாகவே இருக்கே! ஒரு பகுதியிலே சீதாவின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அவர் சீதாவைச் சந்திப்பதற்குமுன், நாம் சோதனையை ஆரம்பித்திருந்தால் இப்போ சுலபமாக முடிந்திருக்கும்.” என்றாள் ஆனந்தி. 

உடனே மேஜர் சிரித்தார் “நம்ம முடிவை மறந்து பேசுகிறாயே ஆனந்தி! சீதாவை இவன் மூலமாகத் தானே அடைய முடியும்? உன் உடல் ‘வைப்ரேஷன்’ இவனோடு பொருத்தமாயிருக்கிறது. திலீபனின் வைப்ரேஷன் சீதாவுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாயிருக்கிறது. நல்ல வேளை, திலீபன் திருமணமாகி சீதாவோடு ஒன்றாயிருந்தால் நாம் அவனை ஒன்றுமே செய்ய முடியாது”. 

மேஜரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட எனக்கு மனம் ஆத்திரத்தால் குமுறியது. 

ஒரு பயங்கர சதியின் இடைப் படி நான். முடிவுப் படி சீதா 

ஆனால் அதிலும் ஓர் ஆறுதல். அவர்கள் திட்டம் எதுவானாலும் நேரடியாக அவர்கள் சீதாவை நெருங்கப் போவதில்லை. என் மூலமாகத்தான் நெருங்க முடியும். 

‘கடவுளே! நான் நானாக இல்லாத மனநிலையிலும் சீதாவுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டு நின்றேன். 

அறையில் நிசப்தம் நிலவியது. மேஜரும், ஆனந்தியும் பேசவில்லை. உடனே கதவு திறந்தது. 

ஆனந்தி நின்றாள் என்னைப் பார்த்தபடி . “நாங்கள் பேசியதில் எவ்வளவு தூரம் கேட்டீர்கள்?” என்றாள். 

நான் ஆத்திரத்தோடு, “நான் இங்கேயே இருக்கிறேன். நீ சொல்கிறபடி கேட்கிறேன். சீதாவை மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள். அப்படி ஏதாவது சீதாவுக்குத் தீங்கு நேர்ந்தால் நான் உடனே போலீசுக்குப் போவேன்”, என்றேன். 

மேஜர் சிரித்தார். “திலீபன்! உறுதியாகச் சொல்லுகிறேன். நாங்கள் சீதாவை நெருங்கிப் பேசக்கூட மாட்டோம். நீங்கள்தான் அவளை நெருங்கப் போகிறீர்கள். அவளுக்கு ஆபத்து வந்தால் அது உங்களால் தான் ஏற்பட வேண்டும்.” என்று சொல்லிவிட்டு ஆனந்தியைப் பார்த்து, “மாப்பிள்ளையை ரூமுக்கு அழைத்துக்கொண்டு போம்மா.” என்றார். 

எனக்கு அவமானமாகவும், கோபமாகவும் வந்தது. 

”ஆனந்தி, இன்றைக்கு என் ரூம் பக்கம் வராதே. வரவே வராதே”, என்று சொல்லிவிட்டு என் அறையினுள் போய்ப் படுத்துக் கொண்டு கதவைத் தாளிட்டேன். 

ஜன்னல் கதவை மூடினேன். காற்றுக்கூட நுழைய முடியாத படி செய்துவிட்டுக் கண்களை மூடிக் கொண்டு படுத்தேன். 

என் மனத்தில் ஆசை கொழுந்து விட்டு எரிந்தது. 

அந்த ஆசை அசுத்தமானது; ஆபத்தானது. 

என்ன ஆனாலும் சரி, ஆனந்தியை அறைக்குள் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டுப் படுத்திருந்தேன். 

சில விநாடிகளில் அந்த வீடு முழுவதும் மல்லிகை மணம் நிறைவதைக் கண்டேன். 

மணம் நிறைய நிறைய, என் மனமும் அதனுடன் இழைந்தது. 

பக்கத்து அறையிலிருந்து வீணையின் ஒலி கேட்டது. மாயா மாளவ கெளள ராகத்தின் இசை கேட்டது. 

இசையும் மணமும் என் உறுதியைத் தளர வைத்துவிடுமோ என்று தோன்றியது. 

என் தீர்மானம், என்னுடைய உறுதி என்னை விடடுக் களைந்து விழுந்து விடும் போல் தோன்றியது. 

சீதாவையும் அவள் அழகையும் திரும்பத் திரும்ப நினைத்து என்னுள்ளே நுழையத் துடிக்கும் ஆசைகளைத் தடுத்து வைத்தேன். 

சீதாவின் அழகான உடலைப் பன்முறை வற்புறுத்தி நினைத்துப் பார்த்து மகிழ முயன்றேன். 

வீணையின் இசை ஊளையாக மாறத் தொடங்கியது. 

சீதாவிடம் நான் லயித்து நின்ற சிந்தனை கலையத் தொடங்கியது. 

சீதாவின் அழகான முகத்தை நினைப்பேன். அந்த நினைவைத் தள்ளிக் கொண்டு ஆனந்தியின் முகம் தோன்றும். 

சீதாவின் புனிதமான பரிசுத்தமான பருவத்தை நினைத்தேன். 

ஆனால் சீதாவின் வனப்பு நான் அனுபவித்து அறியாத ஒன்றல்லவா? 

என் மனத்தில் நிலைத்து நிற்க மறுத்தது: ஆனந்தியோடு நான் அனுபவித்த காட்சிகள் சீதாவின் எண்ணத்தை உந்தித் தள்ளிக் கொண்டு முன் தோன்றின. 

சீதாவை நினைக்க நினைக்க ஓரளவு அமைதி ஏற்பட்டது. ஆனால் அந்த அமைதி சில வினாடிகளுக்கே. 

மல்லிகைப் பூவின் மணம் அறையில் தலைவலி உண்டு பண்ணும் அளவுக்கு நிறைந்தது. 

மேஜர் வாசித்த அந்த வீணையின் ஒலி, பன்மடங்கு அதிகமாகிச் சப்தம் காதை அடைத்தது. 

சப்தத்தின் சக்தியை அன்று உணர்ந்தேன். எந்த உலகத்து நாதமோ அறியேன். 

என் ரத்தத்தைச் சுண்டிவிட்டு ஜுரம் வந்தவன் உடல் போல் வெப்பமுள்ளதாகச் செய்தது அந்த நாதம். 

சீதாவைத் திரும்ப நினைத்தேன். நினைவு நிலைக்கவில்லை. அறையில் மாட்டியிருந்த காலண்டரில் உள்ள முருகன் படத்தைப் பார்த்தேன். முருகனை நினைத்தேன். கோவிலில் நான் கண்ட கந்தனின் சிலை உருவத்தை மனத்தில் பதிய வைத்துத் துடிதுடித்தேன். 

காந்தியடிகள் சொல்வாரே, ‘ஜீவ நம்பிக்கை’ என்று. அந்த வாழும் நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. திரெளபதிக்குக் கௌரவர்கள் முன் மானம் போகும்போது ஏற்பட்ட அசையாத நம்பிக்கை. சாவு முனையில் வேறு எந்த உதவியும் பலன் தராது என்ற இக்கட்டான திருப்பத்தில் ஏற்படும் நம்பிக்கை எனக்கு அன்றிரவு ஏற்பட்டது. 

முருகனின் வேல் கண்முன் நின்றது. என் உதடுகள், ‘முருகா, முருகா’ என்று உச்சரித்தபடி இருந்தன . முருகன் உருவத்தை மனத்தில் பதிய வைத்தபடி படுக்கையில் புரண்டு படுத்தேன். 

ஏன் திடீரென்று முருகனை நினைத்தேன், அவன் பெயரை உச்சரித்தேன் என்று என்னால் இன்று வரை கூறமுடியவில்லை. ஒருவேளை, அந்த அறையில் மாடடியிருந்த பால முருகனின் படம் போட்ட காலண்டரை ஒருமுறை பார்த்ததன் விளைவோ? தெரியவில்லை. 

என் உடல், பொருள், எண்ணங்களோடு முருகன் பெயரில் ஐக்கியமானேன். என் உடல் வியர்த்தது. என் அறையின் கதவை வெளிப்புறமிருந்து ஆனந்தி திறக்க முயல்வதை உணர்ந்தேன். 

தாழ்ப்பாள் ஆடியது. நான் அறையிலுள்ள காலண்டரைப் பார்த்தபடி, முருகன் நாமத்தை ஜெபித்தபடி கிடந்தேன். சில வினாடிகளில் வீணையின் நாதம் நின்றது. மல்லிகை மணம மறைந்தது. வீடு பூராவும் நிசப்தம் நிலவியது. 

களைப்பின் மிகுதியால் நான் கண்களை மூடினேன். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று எனக்குத் தெரியாது. திடீரென்று விழித்துக் கொண்டேன். நான் படுக்கையில் படுத்திருக்கவில்லை. கதவருகில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன் தூக்கத்தில் கதவு வரை நடந்து வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன் தூக்கத்தில் நடந்து மட்டும் வரவில்லை. கதவையும் விரியத் திறந்து வைத்திருக்கிறேன், கண்களை மூடியபடி!

கதவையடுத்த வராந்தா காலியாக இருந்தது. மேஜரோ ஆனந்தியோ வராந்தாவில் இல்லை. வீணையின் ஒலியும் கேட்கவில்லை. இதுவரை தூக்கத்தில் நடக்கும் பழக்கம் நமக்குக் கிடையாதே? எப்போது எழுந்தோம், எப்போது எழுந்து வந்து கதவைத் திறந்தோம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே என் முன்னால் வெள்ளை நிறத்தில் காகிதம் போல் ஒன்று வீசப்பட்டது. 

அதைக் கூர்ந்து கவனித்தேன் அது அறையில் மாட்டியிந்த காலண்டர் என்பதைத் தெரிந்து கொண்டேன் அறையினுள்ளிருந்து யார் இதை வீசி இருப்பார்கள் என்று ஆச்சரியத்துடன் திரும்பினேன். 

ஆனந்தி படுக்கையில் உடகார்ந்திருந்தாள், மேலாடை நழுவிக் கிடந்தது. கை நீட்டி என்னை அழைத்தாள். “கதவைத் தாளிட்டுவிட்டு வாருங்கள்” என்றாள். 

நான் பதில் பேசாமல் சென்று கதவைத் தாளிட்டேன்.

அத்தியாயம்-48

முருகன் காலண்டர் அறைக்கு வெளியே கிடந்தது. ‘முருகா, முருகா.’ என்று சொல்ல முயன்றேன். என் வாயிலிருந்து வெளி வந்ததென்னவோ, ‘ஆனந்தி, ஆனந்தி’ என்ற வார்த்தைகள்தான். நான் ஓர் இயந்திரம் போல் அவள் அருகில் போய் அவளை அணைத்துக் கொண்டேன். ஆனந்தி சிரித்தபடி என்னைப் பார்த்து, ”ஒழுங்கான பாதையை விட்டு விலகப் பார்த்தீர்களே! ஆனால் அது உங்கள் குற்றம் அல்ல. அறையில் எந்தக் காலண்டரை மாட்ட வேண்டுமென்று தெரியாமல் போனது என் குற்றம்,” என்று சொல்லிவிட்டுக் கை விரலால் என் தோள்களைத் தொட்டாள். 

அன்றிரவு. விடியுமா, விடியாமலே தொடர்ந்து தேவர்களின் இன்ப இரவுகள் போல் நீண்டு விடுமா என்று தெரியவில்லை. 

மறுநாள் பொழுது காலை 11 மணி ஆன பின்பும் நான் எழுந்திருக்கவில்லை. நான் எழுந்தபோது என்னால் படுக்கையில் எழுந்து உட்காரவும் முடியவில்லை. மிகவும் முயற்சியோடுதான் எழுந்து உட்கார்ந்தேன். கை கால்கள் தள்ளாடின. கண்கள் இருண்டு என்னை மயக்கத்தில் ஆழ்த்தின. 

சிறிது சிறிதாக இரவின் நினைவு வந்தது. அறையின் சுவர்களைப் பார்த்தேன். அங்கு முருகன் படம் இல்லை. 

என் மங்கிய பார்வை சுவரிலிருந்து என் கைகள் மீது விழுந்தது. கை கால்களில் ஏதோ மாறுதல் இருந்த மாதிரி இருந்தது. கைகள் மிருதுவாகவும் மெல்லியதாகவும் பெண்ணின் கைபோல் இருந்தது. 

என் உடலைச் சுற்றி அதிக ஆடை இருப்பது போல் தெரிந்தது. 

அதுவும் சேலை சுற்றப்பட்டு இருப்பதுபோல் தெரிந்தது. 

அதே சமயத்தில் மறுபடியும் மயங்கி விழுந்தேன். மரணத்தின் முன் மனிதனுக்கு ஏற்படும் சோர்வு என்னைச் சூழ்ந்து கொண்டது. 

ஒரு பிணத்திற்கு உயிரை ஊட்டினால் எப்படியோ அந்த நிலைமையில் நான் இருந்தேன். படுக்கையில் விழுந்தவன் மறுபடியும் ஞாபகத்தை இழந்தேன். வெகு நேரம் வரை ஞாபகம் இல்லை. 

மறுபடி விழித்தபோது பிற்பகல் மணி இரண்டிருக்கும். ஓரளவு பலம் இருந்தது. அயர்வும் சோர்வும் சிறிது குறைவாகத் தெரிந்தது. எழுந்து உட்கார்ந்தேன். 

என் உடலைச் சுற்றிச் சேலை இல்லை. என் கைகள் மெல்லிய பெண்ணின் கரம் போல் இல்லை. இடையில் நான் விழித்தெழுந்தது ஒரு கனவாக – இருக்குமோ என்று தோன்றியது. 

அறையிலுள்ள கடிகாரத்தில் 11 மணி என்பதையும் சுவரில் முருகன் படம் போட்ட காலண்டர் இல்லை என்பதையும் பார்த்தவுடன் நினைவுதான் என்று நிச்சயமாயிற்று. 

அறைக் கதவைத் திறந்து கொண்டு பாதாம் அரைத்துவிட்ட பாலோடு ஆனந்தி நுழைந்தாள். அவள் முகத்தில் ஒருவிதமான ஆண்மையும் மந்தகாசமும் காணப்பட் டன. அவளிடம் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சொன்னேன். 

அவள் சிறிது நேரம் கூர்ந்து பார்த்தாள். பிறகு மேஜரிடம் இதைப் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். 

நான் உணவருந்தப் போன போது மேஜர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் அந்தப் புத்தகத்தில் மனிதனின் தேகத்திற்குள் பலவித கோசங்களாக உடல்கள் அமைந்திருப்பதைப் பற்றிய விளக்கம் இருந்தது. அன்னமய கோசம் என்பதுதான் புறத் தோற்றமுள்ள உடல். அதாவது, உணவால் ஆன உடல். அதற்குப் பின் பிராணமய கோசம். மனோமய கோசம், ஆனந்த மய கோசம் என்றெல்லாம் வருணிக்கப் பட்டிருந்தது. இம்மாதிரி விளக்கங்கள் நான் ஏற்கெனவே படித்தவை தான், எனக்குப் படிக்க அவை பழமையானதாகவும் சோர்வு கொடுப்பதாகவுமே இருந்தன. 

அந்தப் புத்தகத்திலிருந்த இரண்டு விஷயங்கள் கலக்கத்தைக் கொடுத்தன. என் சிந்தனையையும் தூண்டின. 

ஒன்று லிங்க தேகம் என்பதைப் பற்றிய விளக்கம். ‘மனிதன் இறக்கும்போது மனிதனின் கைகூடாத இச்சைகளோடு அவனுடைய லிங்க தேகமானது பூமியிலேயே சுற்றுகின்றது. லிங்க தேகத்துக்குப் பரிமாணமில்லை. அதற்குக் கனம் இல்லை. ஆனால் ஆசைகள் மட்டும் இருக்கின்றன’, என்று எழுதப்பட்டிருந்தது.

‘மனமே உடலைத் தருகிறது. உடலை வளர்க்கிறது. அதுவே உடலை அழிக்கிறது. மனம் இல்லையேல் உலகம் இல்லை. மனம் வேகமாக இயங்க, சக்தியோடு பணிபுரிய, அதற்கு வலிவு கொடுப்பது ஆசை. நெருப்பென எரியும் ஆசை. ஆசை ஒழியும்போது மனம் அடங்குகிறது.’ 

இவ்வாறு ஏற்கெனவே நான் படித்த பலவித பழைய கருத்துக்காக நிறைந்து கிடந்தது புத்தகம் பூராவும். இதைப் பற்றி நான் மேஜரிடம் பக்குவமாகப் பேசினேன். மேடம் நான் எதிரி போல் நடந்து கொள்ளாமல் அவர் சிஷ்யன் போல் நடித்து உண்மைகளை உணர முயன்றேன். 

மேஜர் என்னைப் பார்த்துச் சிரித்தார். “திலீபா! என்னிடமே உன் வித்தையைக் காட்டுகிறாயே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச இந்த மேஜரிடம் முடியாது என்பதை உணராமல் பேசுகிறாயே. உன் மனத்தில் என்ன நினைக்கிறாய் என்று என்னால் கண்டு கொள்ள முடியும். என் சாதனையில் அது ஆரம்பப் பாடம். இத்தனை நாளும் நீ என்னையும் ஆனந்தியையும் பற்றி என்ன நினைக்கிறாய் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். உன்னை பச்சாதாபத்தோடுதான் விட்டு வைத்திருக்கிறோம். நீ எங்கள் சோதனைக்குத் தேவை. இந்தச் சோதனையில் பூராவும் வெற்றி கண்டுவிட்டால் இருபதாம் நூற்றாண்டின் எந்த விஞ்ஞானியும் அடைய முடியாத வெற்றியை நாங்கள் அடைந்துவிட்டது போலாகும். அப்புறம் உலகத்தையே ஆட்டி வைக்க முடியும். எங்களால். இம்மாதிரி நாகரிகத்தை ஒருபடி உயர்த்தும் ஒரு சோதனையில் ஒரு திலீபனின் சந்தோஷமோ அல்லது சீதாவின் எதிர்காலமோ பலியாவதை நினைத்து வருந்த முடியுமா? விட்டில்பூச்சி இறக்குமே என்று விளக்கை ஏற்றாமல் இருக்க முடியுமா?” என்றார். 

இரக்கம் ஏதுமில்லாமல் பயங்கரமான உறுதியோடு அவர் சொன்ன வார்த்தைகள், அவர் ஒரு பைத்தியக்காரனாய் இருக்க வேண்டும் அல்லது பெரிய மேதையாய் இருக்க வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டின. 

அன்று முதல் தொடர்ந்து சில நாட்கள் நான் எதையுமே சிந்தியாமல், வேதனைப்படாமல் ஆனந்தியோடு கடற்கரை மற்ற இடங்களில் சுற்றிப் பொழுது போக்கினேன். 

ஓரிரு முறை உங்கள் வீடு திரும்பலாமா என்று முயன்று வெளியேற நினைத்தேன். மனம் இடம் கொடுக்கவில்லை. முருகன் பெயரை ஜபம் செய்யவும் பிடிக்கவில்லை. கோயிலுக்குச் செல்லவும் பிடிக்க வில்லை. 

என் இயற்கை ஒருவித மாறுபாடு அடைந்தது. அந்தச் சமயத்தில் தான் ஒரு விபரீதம் நிகழ்ந்து, எப்படியாவது மேஜரையும் ஆனந்தியையும் விட்டுப் பிரியவேண்டும். அவ்ர்களின் சக்தியோடு போராடவேண்டும் என்ற தீவிரமான சங்கல்பம் என் மனத்தில் ஏற்பட்டது. 

ஒருநாள் நடுப்பகல் நான் உணவருந்தும்போது, என் உணவில் ஏதோ ஒரு பச்சிலைச் சாற்றைப் பிழிந்து சாப்பிடச் சொன்னார் மேஜர். 

ஆனந்தியும் மேஜரும் அதை அருந்தாமல் என்னை மட்டும் அருந்தச் சொன்னார்கள். நான் மறுத்தேன். ஆனந்தி எவ்வளவோ என்னிடம் வேண்டிக் கொண்டும் நான் சாப்பிடவில்லை. 

அந்தப் பச்சிலையின் வாடை காட்டு ஊமத்தையின் வாடை போல் இருந்தது. 

அன்று மாலை வரை ஆனந்தி என்னுடன் பேசவில்லை. 

அவள் மௌனமும், மாலைவேளை நெருங்க நெருங்க அவளை அடைய வேண்டும் என்ற ஆசையும் சேர்ந்து என்னைச் சித்திரவதை செய்தன. 

இரவுச் சாப்பாட்டின்போது மறுபடியும் மறுபடியும் அந்தப் பச்சிலையைக் குடிக்கச் சொன்னாள். நான் பேசாமல் இருந்தேன். ஆனந்தி தன் கண்களால் என்னைப் பார்த்தாள். என் கைகள் தாமாக அந்தப் பச்சிலை சாற்றை எடுத்து வாயில் ஊட்டின. 

என்னை அழைத்துப் போய்ப் படுக்கையில் படுக்க வைத்தாள். நான் நீரில் மிதப்பதுபோல் கிடந்தேன். என் உடலை விட்டு இன்னோர் உடல் எழுந்து வெளியே புறப்படத் தயாராவது போல் தோன்றியது. நான் அதைத் தடுக்கவுமில்லை. என்னால் தடுக்கவும் முடியவில்லை. 

அடுத்த அனுபவம் இன்னும் விசித்திரமாக இருந்தது. நான் அறையிலே என் கட்டிலில் படுத்தே இருந்தேன். விட்டத்திலிருந்து நான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு நான் கீழே இறங்கி வருவது போலவும் உணர்ந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே இருளாக இருந்தது. ஆனந்தியோடு ஆனந்தமாக இருப்பது போன்ற இன்பம்தான் மிஞ்சியது. பிறகு களைத்துப் போய்த் தூங்குவதாக உணர்ந்தேன். விடிந்து பார்த்ததும் என் படுக்கையில் நான் மட்டும் இருந்தேன்.ஆனால் நானாக இல்லை! 

அங்கு திலீபன் இல்லை! அங்கு யாரும் இல்லை. ஆனால் நான் இருந்தேன். எழுந்திருக்க முடிய வில்லை. மல்லாந்து படுத்தபடி விட்டத்தைப் பார்த்தேன். என் கைகள் பெண்ணின் கைகளாக இருந்தன. எனக்குப் பெண்ணைப் போல் மார்பு இருந்தது. என் உடலைச் சுற்றிப் புடவை ரவிக்கை இருந்தது. கைகளில் வளையல்கள் இருந்தன. எது பிரமை எது உண்மை என்று புரிய வில்லை. ஓடிப்போய் ஒரு கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்று துடித்தேன். எழுந்திருக்க முடியவில்லை. 

“ஆனந்தி! ஆனந்தி!” என்று கூப்பிட்டேன். யாரும் வரவில்லை. 

தொடர்ந்து என் பலம் கொண்ட மட்டும் கூச்சலிட்டேன். மேஜர் வந்தார். என்னை வெற்றிப் புன்னகையோடு பார்த்தார். அவரிடம் கண்ணாடி வேண்டுமென்றேன். சிரித்தபடி என்னிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார். அதில் நான் பார்த்தபோது என்னையே அறியாமல் வீரிட்டு அலறிவிட்டேன். நான் கண்ணாடியில் பார்த்த முகம் என் முகமல்ல, ஆனந்தியின் முகம். கண்ணாடியில் நான் பார்த்த உடல் ஆனந்தியின் உடல். 

நான் மேஜரிடம், “எப்படி சார் ஏற்பட்டது இந்த மாறுதல்? கண்ணாடியில் பாருங்கள். திலீபன் முகத்தையா பார்க்கிறீர்கள்? நீங்களே சொல்லுங்கள்,” என்றேன். 

மேஜர் என்னிடம், “திலீபா, நீயாக ஏதேதோ நினைத்துக் கொள்கிறாய். கண்ணாடியில் உன் முகம் தானே தெரிகிறது?” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். 

எனக்குப் பைத்தியமே பிடித்து விட்டதோ என்று தோன்றியது. மேஜர் எனக்கு மேஜராகத்தான் தெரிகிறார். மற்றப் பொருள்கள் எல்லாம், அவை அவை உருவத்தில் சாதாரணமாகத் தெரிகின்றன. என் உடலும் முகமும் மட்டும் ஏன் எனக்கு மாறுபட்டுத் தெரியவேண்டும்? 

வெளியே ஓடிப்போய் இது என் மனப் பிரமைதானா என்று தெரிந்து கொள்வோம் என்றால் அதற்கும் முடியவில்லை. அசைய முடியாத அளவிற்குச் சோர்வு உடலில் இருந்தது. 

அந்தச் சமயத்தில்தான் சீதா அடையாறு வீட்டிற்கு என்னைப் பார்க்க வந்திருந்தாள். வேலைக்காரன் அவளை என் அறை ஜன்னல் வரை அழைத்து வந்தான். அவன் என்னைப் பார்த்து ஆனந்தி என்று தான் நினைத்துக் கொண்டான். திலீபன் என்று கண்டு கொள்ள வில்லை. 

என் கண்கள் எனக்குத் துரோகம் செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். எண்ணம், விருப்பம் எல்லாம் திலீபனாக இருக்கும்போது, என் உடல் மட்டும் எப்படி ஆனந்தியாக மாறியது? அல்லது நானே ஆனந்தியாக இருந்தும் திலீபன் என்று என்னைத் தவறாக நினைத்துக் கொள்கிறேனோ புரியவில்லை. 

ஆனந்தியின் தோற்றத்தில் இருக்கும் எனக்கு ஆனந்தியின் பழைய கால வாழ்க்கையின் ஞாபகங்கள் இருக்க வேண்டுமல்லவா? கொஞ்சம்கூட இல்லை. அப்படியே மனக் கலவரத்தில் படுத்தவன்தான். அன்று மாலை ஆறு மணி வரை பிரக்ஞையற்றுக் கிடந்தேன். 

விழித்ததும். மேஜரைப் பார்த்துவிட்டு அவர் வீட்டிற்கு ஒரு முழுக்குப் போடுவது என்று நினைத்து, மேஜரின் அறைக்குச் சென்றேன். 

அத்தியாயம்-49

அங்கு ஆனந்தி உட்கார்ந்திருந்தாள் . மேஜரும் உட்கார்ந்திருந்தார். நான் என் கைகளையும் அங்குள்ள பீரோ கண்ணாடியில் என் பிம்பத்தையும் பார்த்தேன். நான் திலீபனாக நின்று கொண்டிருந்தேன்! 

நடுப்பகல் நான் ஆனந்தியாக இருந்தேன். மாலையில் திலீபனாக மாறிவிட்டேனா! மேஜர் சொல்வது போல் எல்லாம் என் மனப்பிரமை தானா! சீதாவும் என்னைப் போல் தான் மனம் குழம்பி ஏமாந்துவிட்டாளா? 

மேஜரிடம் மிகவும் கோபமாகப் பேசினேன் அவர் பதறாமல் என்னிடம் சொன்னார்: “‘உலகத்தில் சில பைத்தியங்கள் உண்டு. தன்னை வேறு நபராக நினைத்துக் கொண்டு வேதனைப் படுவார்கள். அம்மாதிரி நோய் உன்னைத் தாக்கி இருக்கிறது!” 

“நான் மட்டும் என்னை ஆனந்தி என்று நினைத்துக் கொள்ளவில்லை. சீதாவும் அவளை அழைத்து வந்த வேலைக்காரன் இருவருமா பைத்தியங்கள்?” என்றேன். 

ஆனந்தியும் மேஜரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பதில் பேசவில்லை. அன்று முதல் ஆனந்தியை நான் என் அறையினுள்ளே அனுமதிப்பதில்லை. அந்த வீட்டை விட்டுப் போவதில்லை என்று தீர்மானித்தேன். 

ஆனந்தியைத் தடுக்கும் வல்லமை கொண்டது பூண்டு மணம். முருகன் தோத்திரம் என்பது நினைவிற்கு வந்தது. வீட்டு வேலைக்காரனிடம் ரகசியமாகச் சொல்லி, கந்தசஷ்டி கவசத்தையும் பூண்டையும் வாங்கி வரும்படி சொல்லி இருந்தேன். 

அவன் அன்றிரவு மணி 10 ஆகியும் வரவில்லை. கதவைத் தாளிட்டுக் கொண்டு முருகனை நினைத்துப் படுத்திருந்தேன். வீணையின் ஒலி, மல்லிகையின் மணம், ஆனந்தியின் சாகசம் ஒன்றும் என்னிடம் பலிக்கவில்லை. 

அந்த இரவு பத்து மணிக்கு மேல் வேலைக்காரன் வந்து வீசியெறிந்த பூண்டுப் பொட்டலம் என்னை அன்று காப்பாற்றியது. அப்புறம்தான் அந்த வேலைக்காரன் வேலையை விட்டு நின்றுவிட்டான் என்று தெரிந்தது. 

மறுநாள் வேலைக்காரன் அன்று இரவு நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டான் என்று தெரிந்ததும் மேஜரும் ஆனந்தியும் ஊரை விட்டே வெளியூர் செல்வது என்று தீர்மானித்தார்கள். நான் அவர்களோடு செல்ல மறுத்தேன். அன்று பூராவும் என் அறையை விட்டு வரவே இல்லை. 

ஆனந்தியும் மேஜரும் அன்று பகல் வெளியே செல்ல இருந்ததால், டிபன் காரியரில் உணவை எடுத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் இருவரும் வீட்டிலேயே மறைந்திருப்பார்கள் என்று வெகு நேரம்வரை நான் என் அறைக் கதவைத் திறக்கவே இல்லை. 

மணி ஒன்றானதும் பசி பொறுக்கவில்லை. சத்தம் செய்யாமல் கதவைத் திறந்து டிபன் காரியரை எடுத்துக்கொண்டு மறுபடியும் கதவைத் தாளிட்டு விட்டேன். 

உணவில் ஏதாவது பச்சிலை கலந்திருப்பார்களோ என்று பார்த்தேன். உருளைக்கிழங்குப் பொடியும் குழம்பும் மோரும்தான் வைக்கப்பட்டிருந்தன. 

அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டுக் கையை ஒரு துணியில் துடைத்துவிட்டுப் படுத்தேன். 

ஏப்பம் ஏப்பமாக வந்தது. ஒவ்வொரு முறை ஏப்பம் வரும் போதும் எனக்கு அந்தப் பச்சிலையின் வாசனை தான் தெரிந்தது. மோரிலோ அல்லது சாம்பாரிலோ நிறம் தெரியாமல் அதைக் கலந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போதே என்னை மயக்கம் வந்து சூழ்ந்து கொண்டது. மயக்கம் தூக்கமாக மாறியது. 

தூக்கம் கலைந்தது. நான் எழுந்து ஆனந்தியின் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். வீணையின் நாதம் வீடு பூராவும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனந்தி என் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். இருவரும் அவள் அறையில் கலந்தோம். ஒன்றானோம். 

காலையில் பிரிந்தோம். 

பிரிந்த நிலையில் நான் மறுபடியும் ஆனந்தியாக நின்றேன். என் எதிரே திலீபன் நின்றான். என்னைப் பார்த்துச் சிரித்தான். “குற்றாலம் வரையில் போய் வருவோம் வா. ஆனந்தி!” என்று என் முன்னால் நின்ற திலீபன் என்னை அழைத்தான். நானும் திலீபன் பின்னால் சென்று காரில் அமர்ந்து கொண்டேன்.

‘திலீபனே’ கார் ஓட்டினான். மைல்கள் செகண்டுகளில் பறந்தன. மேஜர் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். 

சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் இல்லாத நான் என் உதடுகளில் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தேன். அதை ஆனந்தியின் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன விசித்திரமான நிலை பார் ராமனாதா! இம்மாதிரி சோதனை என் ஏழு ஜன்ம விரோதிக்குக்கூட வரக்கூடாது. 

பயத்தோடு நான், கார் ஓட்டி வரும் திலீபனைப் பார்த்து, “உன்னை என்னவென்று கூப்பிடுவது?” என்றேன். 

அவன் என்னைப் பார்த்து, “நான் உன்னை ஆனந்தி என்று அழைக்கிறேன். நீ என்னைத் திலீபன் என்று கூப்பிடு”, என்றான் சிரித்தபடி. 

நான், “திலீபா, எதற்கு நாம் குற்றாலம் போகிறோம், சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். 

“ஒரு முடிவு காணப் போகிறோம். ஆயில்ய நட்சத்திரம் முடிவதற்குள் அதை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சித்திக்காது.” என்று பதில் வந்தது. 

திலீபனின் உருவம் வேகமாகக் காரை ஒட்டிச் சென்றது. திலீபன் உள்ளம் உருவத்தருகில் பெண் உடையில் கிடந்தது. 

எது நான்? கார் ஓட்டிச் செல்லும் திலீபன் உருவமா? பெண் உடலில், பெண் உடையில் பயந்து கிடக்கும் ஆனந்தியின் உருவமா? எது நான் என்ற கேள்வி மேலும் மேலும் என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது. 

சீதாவின் மீது பரிவு, மீனாட்சியம்மாளிடம் தாய் என்ற விசுவாசம், ராமநாதனிடம் தாய் என்ற விசுவாசம், ராமநாதனிடம் நன்றி கலந்த கனிவு, இவ்வுணர்ச்சிகள் பெண் உடலில் கிடந்த உள்ளத்திற்கு இருந்தன . கார் ஓட்டிச் செல்லும் திலீபன் உருவத்திற்கு அந்த ஞாபகங்களே இல்லை. அவன் மேஜரின் திட்டத்தை நிறைவேற்றச் செல்கிறான். 

அவனை ‘அவன்’ என்று சொல்லவா, ‘அவள்’ என்று சொல்லவா? இல்லை பயங்கரமான அது என்றுதான் வர்ணிக்கவா? 

இந்தத் திலீபனைச் சீதா சந்தித்தால் அத்தான் என்றுதானே அழைப்பாள்? ராமநாதன், தம்பி என்றுதானே நினைப்பான்? என் தாய், பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் என்றுதானே இந்த முரடனைக் கருதுவாள்? இவ்வாறு நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே என் அருகில் இருந்த திலீபன் உருவம் என் சிந்தனைகளைப் புரிந்து கொண்டது போல் சிரித்தது. 

புரளியாக என்னைப் பார்த்துப் பேசியது. “திலீபா! திலீபன் இல்லை, ஆனந்தி! என்ன தத்துவ விசாரணையில் இறங்கிவிட்டாய்? நீ யார், நான் யார் என்ற விசாரணை, உபநிடத கால நிலைக்கு வந்த பின்னும் நீ இம்மாதிரிச் சிந்தனையில் ஈடுபடுவது வேடிக்கையாக இல்லை? இந்தச் சென்னையில் வாழும் மேதாவிகளிடம், படித்த கலைஞர்களிடம் உன் நிலையை விளக்கிப் பார் உன்னை யாரும் நம்ப மாட்டார்கள். உன்னைப் பைத்தியம் என்று சொல்வார்கள். விஞ்ஞான நாகரிகத்தின் பலமே அதன் முட்டாள் தனம்தான். விஞ்ஞானச் சட்டங்களுக்குக் கட்டுப்படாத எதையும் அது நம்பாது. அதற்குப் புரியாத விஷயங்களுக்கு அழகாக இயற்கை அன்னையின் மர்மம், என்ற ஒரு முத்திரைப் பெய ரைக் கொடுத்து ஒதுக்கிவிடும். இருபதாம் நூற்றாண்டு மனிதனுக்கு அதிக அகம்பாவம். ஆகையால், அவனால் நம்ப முடியாத, அவனுக்குத் தெரியாத ஒன்று, கடந்து போன நூற்றாண்டுகளில் நடந்திருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ள மாட்டான். 

“ஒன்பதாம் நூற்றாண்டு மனிதன் ஆனந்தியில் திலீபனையும், திலீபனில் ஆனந்தியையும் காணும் போது அது பொய் என்று சொல்ல மாட்டான். அதை நம்பவும் மறுக்க மாட்டான். மனிதன் படிப்படியாக முன்னேறுவதாகத் தம்பட்டம் அடிக்கிறான். ஒவ்வொரு நூற்றாண்டிலும் மனிதன் சில விஷயங்களில்தான் முன்னேறுகிறான் சில விஷயங்களில் பின் போகிறான் ஆதி மனிதனிடம் இருந்த நுகரும் உணர்ச்சி, அவன் கண்களில் கூர்மை, அவனுக்கு இருந்த ஆத்மபலம், இவை நாகரிக மனிதனுக்கு இல்லை. ஜடப் பொருள்களின் ரகசியங்களை உணர்ந்து அவற்றை ஆட்டிப் படைப்பதனால், தான் முன்னேறிவிட்டதாக நினைக்கிறான் நாகரிக மனிதன். 

“இருபதாம் நூற்றாண்டு ஜடப் பொருள் நாகரிகம், துல்லியமான மனத்தின் சக்திகளைக் கவனியாமல் ஒதுக்கிய நாகரிகம் இது.” என்று சொல்லி முடித்தான். இல்லை, சொல்லி முடித்தாள். 

நான் பேசும்போது, இடையிடையே ஆண் குரலில் சில வார்த்தைகள் தொனிப்பது போலவே, என்னருகில் இருந்த திலீபன் பேசும் போது சில வார்த்தைகள் பெண் குரலில் ஒலிப்பதையும் உணர்ந்தேன் 

”ஆயில்ய நட்சத்திரம் முடிவதற்குள் ஒரு முடிவு காண வேண்டு மென்றாயே, அது என்ன முடிவு?” என்று கேட்டேன் 

கார் ஓட்டியபடி என்னருகில் இருந்த திலீபன் உருவம் சிரித்தது. பின்புறம் திரும்பி, “மாயநாதா! மாயநாதா!” என்று கூப்பிட்டது. 

வயது முதிர்ந்த மேஜரை இதுவரையில் ஆனந்தி சிறு பிள்ளைபோல் விரட்டிக் கூப்பிட்டதை நான் பார்த்ததில்லை. இதுதான் முதல் முறை. ஆனால், ஆனந்திதான் ஆனந்தியாக இல்லையே! திலீபன் உருவமல்லவா மேஜரை அழைத்தது! 

மேஜர் விழித்துக் கொண்டு, “என்ன, என்ன?” என்று கேட்டார். 

திலீபன் உருவம் சிரித்தபடி பதில் சொல்லிற்று. “திலீபனுக்குக் குற்றாலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரிய வேண்டுமாம். பதில் சொல், மாயநாதா!” 

மேஜர் என்னைப் பார்த்துச் சொன்னார். “குற்றாலத்தில் வீணை வாசிக்கப் போகிறேன். வேறொன்று மில்லை. வீணை வாசிக்கப் போகிறேன், திலீபா, வீணை வாசிக்கப் போகிறேன்.” 

என் அருகில் இருந்த திலீபன் உருவம் சிரித்தது. 

நான், எவ்வளவோ நிகழ்ந்து விட்டது. இனி நடப்பது நடக்கட்டும் என்று படுத்துவிட்டேன் 

கண்ணை விழித்தபோது, குற்றாலத்தின் அருகே உள்ள காட்டில் ஒரு பாழும் கோயில் முன்பு கார் நின்று கொண்டிருந்தது. அந்தக் கோயிலில் சிலை இல்லை. தொலைவில் தவளைகளின் குரல் தான் ‘கொர்… களக்… களக்’ என்று ஒலித்தது. 

மேஜர் ஏதோ இறைச்சியைத் தணலில் சுட்டபடி இருந்தார். சிறு அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

அத்தியாயம்-50

நான் மல்லாந்து தரையில் படுத்தபடி இருந்தேன். என்னைச் சுற்றி மல்லிக்கைச் பூச்சரங்களாகக் கிடந்தன. அந்தப் பூச்சரங்களடியில் ஆனந்தி கிடந்தாள். உடனே நான் என்னையே பார்த்துக் கொண்டேன். நான் மறுபடியும் திலீபன் ஆகிவிட்டதை உணர்ந்தேன். எழுந்து ஓடிவிடலாம் என்று எழுந்திருக்க முயன்ற போது, மயங்கிக் கிடக்கும் ஆனந்தியோடு என்னுடைய கையும் சேர்த்துக் கட்டியிருப்பதை உணர்ந்தேன். மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை அறிந்தேன். 

என் அருகில் ஆனந்தி கண் மூடி ஒரு பிணம் போல் கிடந்தாள். அவள் கையிலும் ஒரு கட்டு இருந்தது. எங்கள் இருவர் தேகத்தையும், சன்னமான ஒரு குழாய் இணைத்திருந்தது. என் தேகத்திலிருந்து ரத்தம் ஆனந்தியின் தேகத்துக்குப் பாய்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்! 

மேஜர் அவருடைய வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். 

எப்போது என் மனம் மறுபடியும் என் உடலை அடைந்தது? காரிலிருந்து தரையில் போடும் வரை உணர்வு இல்லாமலா இருந்திருக்கிறேன்! கையைத் துளைத்து என் ரத்தக் குழாயோடு ஒரு ரப்பர் குழாய் சேர்க்கப்படும் போதுகூட உணர்வில்லாமல் இருந்திருக்கிறேனா! ரத்த மாற்றம் எதற்கு நடக்கிறது? எனக்குப் புரியவில்லை. 

முன்பு, உடையை மாற்றினார்கள். பிறகு மனம் தேகத்தை விட்டு இன்னொரு தேகத்துக்கு மாற்றப்பட்டது. இப்போது என் ரத்தமே ஆனந்தியின் தேகத்துக்கு மாறுகிறது! இந்த ரத்த மாற்றம் ஒரு வேளை எனக்கு நிரந்தரமாக ஆனந்தியின் தேகத்தைக் கொடுத்துவிடுமோ! 

அப்படியானால்? ஆனந்தி, திலீபன் உருவில் திலீபனுடைய வைப்ரேஷனுடன் சீதாவைச் சந்திப்பாள். ‘சீதாவை அடைவதுதான் எங்கள் சோதனையின் கடைசித் திட்டம்’, என்று மேஜர் ஒருமுறை சொன்னது என் ஞாபகத்துக்கு வந்தது. 

சீதாவை அடைந்துவிட்டால், அவளுக்கும் அந்தப் போலி திலீபனுக்கும் திருமணமாகி விடும். திருமணமான பின், பெரியவர் ராமலிங்கத்தின் சொத்து, பணம் எல்லாம் போலி தீலீபன் கைவசமாகும். சீதாவும் இம்மாதிரியான சூனிய சோதனைகளுக்கு உள்ளாகி, ஒரு பேய் போல் உலாவுவாள். இதை நினைக்க நினைக்க, நானும் ஓர் ஆண் மகனாகப் பிறந்தும், ஆண்மை இல்லாமல் கோழை போல் கட்டுண்டு கிடக்கிறேனே என்று ஆத்திரம் வந்தது. 

இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தால்கூட, அப்போது அந்த ஆத்திரத்தின் பலத்தால் அவைகளை அறுத்து எறிய முயன்றிருப்பேன். என்னைப் பிணைத்திருந்த சங்கிலிகள் கண்களுக்குத் தெரியாத இரும்புச் சங்கிலிகளைவிட பலம் பொருந்திய, காந்தச் சங்கிலிகளாயிற்றே. என்ன செய்வேன்! 

“முருகா..முருகா!” என்று ஓலமிட வாயசைத்தேன். சப்தம் வர வில்லை. உதடுகள் மட்டும் அசைவு கொடுத்து நின்றன. 

மேஜர் வாசிக்கும் வீணை ஒலியின் ஸ்தாயி அதிகமாகிக் கொண்டே போயிற்று. என் தலைக்கு மேல் ஆகாயத்தில் நட்சத்திர மண்டலம் தெரிந்தது. இந்த வீணை, இந்த மல்லிகை, சுடப்பட்ட இறைச்சித் துண்டுகளோடு, வானத்தில் தெரிந்த அந்த ஆயில்ய நட்சத்திரத்துக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். 

என்ன தொடர்பு? சிந்திக்கவே பைத்தியக்காரத்தனமாய் இருந்தது. என் பக்கத்தில் படுத்திருந்த ஆனந்தியின் உருவம் சிலிர்க்கத் தொடங்கி அதே சமயத்தில் என் உடல் பலவீனமாகி ஞாபகம் தப்பத் தொடங்கியது. என் ரத்தம் பாய்ந்து பலமடைந்திருக்கிறாள் ஆனந்தி. அதே போல் நான் நினைவில்லாமலிருந்த போது ஆனந்தியின் ரத்தம் என் உடலில் பாய்ந்திருக்க வேண்டும். இப்போது இருவர் ரத்தமும் கலப்படைந்த ரத்தம் என்பது தெளிவாயிற்று. 

அடுத்த வினாடியே, என் அருகில் இருந்த ஆனந்தி, கையை உருவியபடி எழுந்து நின்றாள். என்னைக் கூர்ந்து கவனித்தாள். அவள் பார்வையில் தோன்றிய அந்த வெறி, அவள் கண்களில் தோன்றிய அந்தப் பச்சை ஒளி- நினைக்கவும் பயமாயிருக்கிறது. 

அவள் முகம் குனிந்து என் முகத்தை நெருங்கியது. “சபாபதியின் மகன் நீயல்லவா? உன்னைப் பழிவாங்கப் போகிறேன். காதல் பசியோடு, அதைத் தீர்த்துக் கொள்ள வழியில்லாமல் நீ திரிய வேண்டும்” என்று சொல்லிலிட்டு மேஜரைப் பார்த்தாள். ”மாயநாதா! இவன் ரத்தம் இழந்து மடியட்டும்”. என்றாள். 

மேஜர் ஓடிவந்து அவுளை இழுத்துச் சென்றார். அவர்கள் இருவருக்கும் இடையே என்னைப் பற்றிய விவாதம் நிகழ்ந்தது. எனக்கு வார்த்தைகள் தெளிவாக விழவில்லை. ஆனால் மேஜர் நான் வாழ வேண்டு மென்று விரும்புகிறார் என்பதும், ஆனந்தி நான் அங்கேயே மடிய வண்டுமென்று விரும்புகிறாள் என்பதும் தெளிவாயிற்று. நான் அன்று இறந்து போவது மேஜரின் இறுதித் திட்டத்துக்குச் சரிப்பட்டு வரவில்லை என்பதுதான் அவர் அன்று என்னைக் காப்பாற்றியதற்குக் காரணமாக இருக்கவேண்டும். என் மீதுள்ள அன்பாக இருக்க முடியாது. 

இவர் விவாதித்துக் கொண்டிருக்கும்போது. என் ரத்தம் குழாய் வழியாக வெளியே தரையில் பாய்ந்து கொண்டிருந்ததையும் கவனித்தேன். அதை மேஜரும் கவனித்தவராய், ஓடி வந்து குழாயை உருவி ஏதோ களிம்பு போன்ற ஒன்றைத் தடவினார், என் கை துளைக்கப்பட்டிருந்த இடத்தில் நான் மயக்கமடைந்து விழுந்தேன். மறுநாள் நான் விழித்தபோது. திருக்குற்றால டாக்டர் வீட்டில் படுக்கையில் படுத்திருந்தேன். அந்த டாக்டர் சரியான சமயத்தில் வந்து என்னை எடுத்துச் சென்றதும், பிறகு தக்க சிகிச்சை எனக்குச் செய்ததும் ஆண்டவன் கருணைதான். இந்தக் கடிதத்தை உனக்கு எழுதவே அவர் என்னைக் காப்பாற்றினார் என்று நினைக்கிறேன். 

டாக்டர் தந்தி கொடுத்து, நீ என்னை எடுத்து வந்தது உனக்குத் தெரியும். உன்னிடம் நான், இனி மேல் ஆனந்தி வீட்டுப் பக்கம் கூடப் போவதில்லை என்று என்னுடைய தீர்மானத்தைக் காரில் செல்லும் போது தெரிவித்தேன். காரணம், எனக்கு அன்றிரவு பாழும் கோயிலில் நடந்த ரத்தமாற்றம் என்ற பரிசோதனையின் விளைவு புரியாமல் இருந்ததால்தான். 

நீ உளுந்தூர்பேட்டையில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய வேளையில், எனக்குள் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அயர்ந்து படுத்துக் கொண்டிருக்கும் போது என் உடல்மீது ஏதோ நிழல் படிவது போல்தான் தெரிந்தது. அடுத்த வினாடி என் தேகத்தில் ஒரு விதமான பலம் பாய ஆரம்பித்தது. சத்தான உணவு, மருந்து, வைத்தியம் ஒரு மாதத்தில் தர முடியாத ஒரு தேக புஷ்டியைத் திடீரென்று ஒரு வினாடியில் என் தேகம் அடைந்தது. 

அப்புறம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அது உனக்குத் தெரிந்திருக்கும். நான் புடவை உடுத்தியபடி ஆனந்தியாக மேஜர் ஓட்டிச் சென்ற காரின் பின் புறத்தில் கிடந்தேன். காரில் ஏதோ மாறுதல் இருப்பதாகத் தெரிந்தது. காரின் முன் சீட்டில் நீ இல்லை. மேஜர் உட்கார்ந்து ஒட்டிக் கொண்டிருந்தார். இந்த மாறுதல் எப்படி நடந்தது என்று எனக்கு இன்று வரையில் புரியவில்லை. பிறகு நான் கேட்ட போதுகூட மேஜரும் விளக்கம் தரவில்லை. இந்தத் திடீர் மாற்ற விஷயம் மட்டும் புரியாமல் இருக்கிறது. ஆனந்தியாக நான் அடையாறு வீட்டில் படுத்துக் கிடந்தேன். 

மேஜரிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார், பாழும் கோயிலில் அவர் செய்த சோதனை பூராவும் வெற்றி அடைந்துவிட்டது என்று தன்னையே புகழ்ந்து கொண்டார். “இனிமேல் அடுத்தபடி சீதா தான். நான் தயாரித்த திலீபன் சீதாவை நெருங்குவான். அப்புறம் உனக்கு உலகத்தில் எந்தவிதக் கவலையும் இல்லை. பணத்தைப் பற்றி கவலை இல்லை,” என்று சொல்லி ஒரு பாட்டிலில் இருந்து விஸ்கி அருந்த ஆரம்பித்தார். 

வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். அவர் குடிக்க ஆரம்பித்ததும். தன் கவன சக்தியும் ஹிப்னாடிக் சக்தியையும் இழக்கத் தொடங்கினார். 

மேஜரின் மர்மங்களை உணர்ந்து கொள்ள இதுதான் தக்க சமயமென்று சாதுர்யமாக நான் பேச ஆரம்பித்தேன். முதலாவதாக அவரி மாங்டின் என்ற பர்மிய ஹிப்னாடிக் மேதையைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். அவர் அவனைப் பற்றிப் புகழ ஆரம்பித்தார்: 

“ஒரு நாள் மாங்டினோடு திலீபா…ஐ ஆம் சாரி,ஆனந்தி! அயிராவதி நதி வழியாகப் படகில் நம் செய்து கொண்டிருந்தேன் படகு கரைக்கு வந்தததும் ஒரு வெள்ளெலி கரையில் இறந்து கிடப்பதையும், அருகில் இன்னொரு பெண் வெள்ளெலி நிற்பதையும் பார்த்தேன். உடனே மாங்டின் தரையில் கண்களை மூடிப் படுத்தார். பேச்சு மூச்சு இல்லை. அவர் இறந்துவிட்டாரோ என்ற பயம் எனக்கு, அதே சமயத்தில் இறந்து கிடந்த வெள்ளெலி எழுந்து விளையாட ஆரம்பித்தது. இரண்டு வெள்ளெலிகளும் ஒன்றை ஒன்று கலந்து மகிழ்ந்தன. மறு நிமிஷமே அந்த எலி படுத்து விட்டது முன்போல். மாங்டின் எழுந்து உட்கார்ந்தார், ‘என் மன பலத்தால் சில வினாடிகளுக்கு அந்த எலிக்குப் பலம் கொடுத்து அதன் மூலமாகப் பெண் எலிக்குக் கர்ப்பத்தை அளித்தேன். அந்தப் பெண் எலிக்குப் பிறக்கப் போகும் குட்டி என் மனத்தில் இருந்து பிறந்தது. என் மானச புத்திரன்’, என்று சொன்னார். வேடிக்கையாக இல்லை?’ 

நான், “மாங்டின் தன் சக்தியால் அந்த ஆண் எலிக்கு நிரந்தரமாக உயிர் கொடுக்க முடியவில்லையா?” என்று மேஜரைக் கேட்டேன். 

மேஜர், “இதே கேள்வியைத் தான் அன்று நான் மாங்டினிடம் கேட்டேன். அவர் பதில் சொன்னார். ‘அது முடியாது. லிங்கதேகம் இருந்தால், ஒருவேளை அதைச் செய்யலாம். அதுவும், இரண்டு லிங்க தேகங்களின் அலைகளும் ஒத்திருக்க வேண்டும். இரண்டுக்குமிடையே காம ஆசை ஏற்பட வேண்டும். அது தொடர்ந்து சில நாட்கள் இரண்டு லிங்க தேகங்களையும் பிணைக்க வேண்டும். பிறகு உணவு முறையில் சில பச்சிலைகள் கலக்கப்பட வேண்டும். பிறகு ரத்தம் உடல்களுக்குள் மாறி மாறிப் பரிமாறப்படவேண்டும். இதைப் பக்குவமாகத் தொடர்ந்து நடத்தினால், ஒரு மனம் ஓர் உடலை விட்டு மாறி இன்னொரு உடலில் செல்லலாம்.’ என்று மாங்டின் கூறினார்,” என்றார்.

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *