மாமன்னர் அசோக சக்ரவர்த்தி!..பராக்!….பராக்!…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 40,020 
 

“மாமன்னர் அசோக சக்ரவர்த்தி அவர்களே! ….வருக! வருக!…என் கோரிக்கையை ஏற்று பூலோகத்திற்கு, அதுவும் எங்கள் கோவை மாநகருக்கு வருகை தந்தற்கு மிக்க நன்றி மாமன்னா!..”

“தம்பி இளவலே சரவணா! நீயோ ஒரு பள்ளிச் சிறுவன்!……எதற்கு நான் சொர்க்கத்திலிருந்து உங்க கோவை மாநகருக்கு வருகை தந்து எதை நான் பார்த்து ரசிக்க வேண்டுமென்று இவ்வளவு கடுமையான தவம் செய்தாய்?..”

“மன்னா!…பரிட்சைக்கு சரித்திரப் பாடம் படித்துக் கொண்டிருந்தேன்!….அழகான சாலைகள்!.. இருபக்கமும் நிழல் தரும் மரங்கள்!..என்றெல்லாம் உங்க ஆட்சியைப் பற்றி வர்ணித்திருந்தார்கள்!….இந்த விஞ்ஞான உலகத்தில் தமிழ் நாட்டுச் சாலைகள் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு காட்ட வேண்டும் என்ற தீராத ஆசை எனக்கு வந்தது!…அதனால் தவமிருந்து சொர்க்கத்திலிருந்த உங்களை இந்த கோவைக்கு வரவழைத்தேன்!”

“அப்படியா?…எனக்கும் இந்த நவீன வசதிகள் பெருகியிருக்கும் விஞ்ஞான உலகில் உங்க நாட்டு நவீன சாலை வசதிகள் எப்படி இருக்கிறதென்று தெரிந்து கொள்ள ஆசையாகத் தான் இருக்கு! ….முதலில் என்ன பார்க்கலாம்?..”

“ராமநாதபுரம் சிக்னலில் இருந்து நஞ்சுண்டாபுரம் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான்! கோவையில் போக்குவரத்து மிகுந்த தினசரி இலட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் சாலை இது! இந்த சாலையில் உங்களை அந்த இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை என் பைக்கில் கூட்டிக் கொண்டு போய் காட்டப் போகிறேன்! கிட்டத் தட்ட தமிழ் நாட்டுச் சாலைகள் எல்லாம் அப்படித் தான் இருக்கும்!…”

“அப்படியா!..நானும் உங்க சாலைகளின் நவீன வசதிகளைத் தெரிந்து கொள்கிறேன்!.”

சிறிது நேரத்தில் ராமநாதபுரம் சிக்னலில் தயாராக இருந்த பைக்கில் மாமன்னன் அசோக சக்கரவர்த்தியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான் சரவணன்.

பைக் இருநூறு அடி கூடப் போயிருக்காது! “ ஐயோ!…ஐயோ!….” என்று அலறினார் மாமன்னர்.

“ என்ன மன்னா?…”

“நீ என்னை சாலையில் தானே கூட்டிக் கொண்டு போவதாகச் சொன்னாய்?…இப்பொழுது குளம், குட்டைக்குள் எல்லாம் பைக்கை விடுகிறாயே?!…”

“ இல்லை மன்னா!…இது தான் இங்கு சாலை!…”

“ ஐயோ!…எதிரே கிணறு வருகிறதே!..”

“ மன்னா!…அது கிணறு இல்லை!..மூடப் படாத பெரிய சாக்கடைக் குழி!.. மக்களின் பாதுகாப்பே லட்சியமாக கொண்ட எங்க அரசு அதற்குப் பக்கதில் ஒரு குச்சியோடு ஒரு செடியை கட்டி நட்டு வைத்திருக்கிறார்கள்!…அதைப் பார்த்து நாம் ஒதுங்கிப் போய் விட வேண்டும்!..

மேலும் ஒரு கிலோ மீட்டர் சரவணன் கடந்திருப்பான். அதற்குள் மாமன்னர் கூச்சல் போட்டார்.

“ ஐயோ!..என் இடுப்பே போய் விட்டது!…கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு போகலாம்!…நிழல் பார்த்து வண்டியை நிறுத்து!..”

“ என்ன மன்னா!…தமாஷ் செய்றீங்க? ..சாலைக்குப் பக்கத்தில் இந்தக் காலத்தில் எங்கும் நிழல் இருக்காது!.”

“ அது சரி!..நீ என்னிடம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் போவதாகச் சொல்லி விட்டு, குளம், குட்டையாகப் பார்த்து வண்டியை ஓட்டுகிறாயே….இது நியாயமா?..”

“ இந்தக் காலத்தில் குளம், குட்டையெல்லாம் தனியாக கிடையாது மன்னா! .அவையெல்லாம்…. சாலைகளுக்கு மத்தியில் தான் இருக்கும்!..”

சரவணன் மேடு, பள்ளம், குண்டு குழிகளில் இருந்து தப்பிக்க பைக்கை வளைத்து நெளித்து எதிரே வரும் வண்டிகளில் மோதாமல் இருக்க சர்க்கஸ் வேலைகள் செய்து பைக்கை ஓட்டிக் கொண்டு போனான்.

ஒரு மேடு ஏறும் பொழுது பைக் மெதுவாகப் போனது. அந்த நேரம் பார்த்து அசோகச் சக்கரவர்த்தி கீழே குதித்து தலை தெரிக்க எதையோ தேடிக் கொண்டே ஓடினார். சரவணன் பைக்கைப் போட்டு விட்டு, “மன்னா! மன்னா…..” என்று அவரைத் துரத்திக் கொண்டுபோய் பிடித்து விட்டான்!

“ என்ன மன்னா எதைத் தேடி ஓடுகிறீர்கள்?”

“ எதாவது பக்கத்தில் மரம் இருக்கிறதா என்று பார்க்கத்தான்!..”

“ சாலைக்கு பக்கத்தில் எல்லாம் இந்தக் காலத்தில் எங்கும் மரத்தைப் பார்க்க முடியாது!…அப்படி ஒன்று ரண்டு இருந்தால் ஏதாவது காரணத்தைச் சொல்லி உடனே அந்த மரத்தை நாங்க வெட்டி விடுவோம்! உங்களுக்கு மரம் எதற்கு?..”

“ தூக்குப் போட்டு இந்த உயிரைப் போக்கிக் கொள்வதற்கு!…”

“ உங்களுக்கு அவ்வளவு கஷ்டம் வேண்டாம் மன்னா!..இப்படியே போத்தனூர் வரை உங்களைக் கூட்டிக் கொண்டு போகிறேன்! ..அதற்குள் உங்கள் உயிர் தானாகப் போய் விடும்!..” என்று அசோகச் சக்கரவர்த்தியை சரவணன் உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டான். அசோக சக்கரவர்த்தி திமிறிக் கொண்டே இருந்தார்.

“ டேய்!…அறிவு கெட்ட முண்டம்!…சரித்திரப் பாடம் பரிட்சைக்குப் படிப்பதாகச் சொல்லி விட்டு இங்கு வந்து குறட்டை விட்டுத் தூங்குகிறாயே!…” என்று சொன்ன சரவணின் தாய் அன்னம்மா ஒரு வாளி தண்ணீரை அவன் தலையில் அப்படியே கொட்டினாள்!

– பாக்யா பிப் 17-23 2017 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *