கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 15,464 
 

“எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலும் முதலாளியிலிருந்து சக தொழிலாளி வரை ஜானகி என்று கூப்பிடுவார் யாருமின்றி ஜாங்கிரியாகவே இருப்பவள்.

இத்தனைக்கும் காரணமான அவள் தலைமுடி எண்ணெய் காணாமல் வறண்டு சுருண்டு மேலேறியிருந்தது. எடுத்து ஒரு ரப்பர்பேண்டில் அடக்கி வைத்திருந்தாலும் அந்த அத்துவானத்தின் அந்திக்காற்றில் திமிறிப் பறந்து கொண்டிருக்க, முடிக்கற்றைகளை அடிக்கொரு தரம் இடதுகையால் இழுத்து இழுத்துக் காதோரம் செருகி மாளவில்லை அவளுக்கு.

அவள் காலருகே பரட்டை தலையும் ஒழுகும் மூக்குமாய் நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் ஒன்றரை வயது மகள் செல்லியை இழுத்து முந்தானையை உதறி மூக்கை நோகாமல் துடைத்து விட்டாள். அவளிடமிருந்து திமிறி இறங்கிய அது மண்டியிட்டு ‘விசுக் விசுக்’ என நகர்ந்து அடுத்ததாக குவித்திருந்த கருங்கல் ஜல்லி முட்டில் சட்டமாக உட்கார்ந்து கொண்டது. ரெண்டு நாளாகப் பெய்த மழையில் தேங்கிக் கிடந்த ரோட்டுப் பள்ளத்தில் ஒவ்வொரு ஜல்லியாக விட்டெறிந்து விளையாடத் துவங்கியது.

அரை கிலோ மீட்டர் தூரத்தில் வந்த தொழிற்பேட்டையால் இந்த இடத்துக்கு பவிசு வந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் கட்டிக் காசுபார்த்துக் கைதேர்ந்த அவள் முதலாளி, அடுத்த கட்டடத்துக்கான அஸ்திவாரம் போடுவது பற்றி மேஸ்திரிகளிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்.

“ஏலே, ஜாங்கிரி, உம்மவ என்ன இலவசமா ரோடு போடுறாப்போல… நேத்து போட்ட வார சம்பளத்தை புருசன்கிட்டேயிருந்து கைப்பத்த துப்பில்லாம விட்டுட்டு, இன்னிக்கே அதிக பைத்து கேட்டு வந்து நின்னா என்ன அர்த்தம்? உன்னாட்டம் 576 பேருக்கு சனிக்கிழமை வந்தா நான் படியளக்க வேண்டாமா? ம்ம்…?”

“இல்லிங்க்… ஊருல அண்ணன் மவ சடங்கு வெச்சிருக்காங்க. நேரிலே வந்து கூப்பிட்டுட்டு போனாங்க. மொத காரியம். அத்தைக்காரி வரிசைய செண்டுப்பா செய்யணும்ன்னு…”

“நேத்து வாங்கின பணமெல்லாம் எங்க?”

“அந்தப் பாடையில போறவன்ந்தான் மளிகைக்கடை, பால்காரன் பாக்கிய தீர்த்துட்டு மிச்ச மொத்தத்துக்கும் ரெண்டு நாளா ஊத்திட்டு வாரதையே வேலையா இருக்கானுங்க… நா இதோட அக்காவ நேத்து பள்ளியோடத்துலயிருந்து கூட்டாறதுக்குள்ள எஞ்சம்பளத்தையும் சேர்த்து வம்படிச்சு மேஸ்திரியாண்ட வாங்கீட்டாம்பாருங்க…”

“ஊரில தண்ணியில்லாம மழையும் பேயாம பொழைப்பத்துக் கடந்தவன கொண்டாந்து வேலைக்கு வெச்சு என்ன புண்ணியம்? சம்பளம் முழுசும் குடிச்சி தீர்க்கறவனுக்கு எதுக்கு பொண்டாட்டி, புள்ளைங்க? ஊரைப் பாக்க கிளம்பு நீ. சோத்துக்கு சிங்கியடிச்சா தன்னால வழிக்கு வருவான் படுவா… லேய் அன்பு, அவன் வந்தா நாளைக்கு வேலைக்கு சேர்த்துக்காதே, ஆமா”

‘உள்ளதும் போச்சுடா நொள்ளையா’ என்றாக, தன் தலையெழுத்தை நொந்துகொண்டு ஜாங்கிரி செல்லியை தூக்கி இடுப்பில் இறுக்கிக் கொண்டு நடையை கட்டினாள், முதலாளியின் முந்தைய கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் வாகன நிறுத்தத்துக்கு விட்டிருந்த இடத்தில் சாக்கு படுதா கட்டி குடும்பம் குடும்பமாக பொங்கித் தின்னும் தம் இருப்பிடத்துக்கு.

நேற்று சனிக்கிழமை வார சம்பளம் வாங்கிய மிச்சம் பேரெல்லாம் குடும்பத்துக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு பெண்டு பிள்ளைகளுடன் படம் பார்த்து விட்டு, ராத்திரிக்கு பரோட்டா பார்சல் கட்டிக் கொண்டு சாரிசாரியாக வந்தபடி இருந்தனர். அவர்களும் தண்ணியடிப்பார்கள். ஜாங்கிரி புருஷன் போல சம்பளம் தீரும்வரை அதே கதியாக கிடப்பதில்லை.

வழியில் தள்ளாடியபடி எவனையோ பாட்டு விட்டுக் கொண்டு வந்த பல்ராமை பார்த்து வேகாளமாக வந்தது ஜாங்கிரிக்கு. பரமுவை பல்ராமுவாக்கிய அவனது துருத்திய மேற்பற்கள். ஆதார் அட்டைக்கு படம் பிடிக்க ஊருக்கு போனபோது உதடுகளுக்குள் அடக்க அவன் பட்ட பாட்டில் புகைப்படமெடுப்பவன் பல்லைக் காட்டும்படியானது. இப்போதும் சுரந்து வழியும் எச்சிலை உறிஞ்சியபடி ஆவேசமாக கேவிக்கொண்டு வந்தவன், ஜாங்கிரியைப் பார்த்ததும் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், கெத்தை விடாமல், அருகில் வந்ததும் “நீயெங்கேடி போய் நின்னுட்டு வர்றே? … த்தா… வூட்டாண்ட கறியெடுத்து வச்சிட்டு தேடறேன்ல?” என்று நாக்கை துருத்தினான்.

“ஆமா… சாராயமும் கறியுமா வார சம்பளத்தை ஒழிச்சுட்டு, ஊர்த் தேவைக்கு வெறுங்கையா போய் நின்னு நாந்தானே மொக்கப்படணும்? வந்துட்ட பெரிசா… கறியெடுத்துகிட்டு…” தோளில் முகவாயை இடித்துக் கொண்டே, நழுவின பிள்ளையை இடுக்கிக்கொண்டு மறுகையால் அவனைத் தள்ளினாள்.

“இன்னா பெரிய்ய தேவ… ஒலகத்துல இல்லாதவனுவோ வூட்டுது… ஒன் சாதிசனம்ன்னா கெடந்து தவிப்பியே…” விழாமல் சுதாரித்து நின்றான். “நாங்க எப்பவும் ஸ்டடிதான் தெரியும்ல.”

செல்லி அவனிடம் தாவியது. வாரி முத்தமிட்டு தோளில் உட்கார வைத்துக் கொண்டு ஒரு கரகாட்டம் போட்டான். செல்லி கலகலவென சிரித்து அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

“ஆமாய்யா… கெட்ட பழக்கம் ஒண்ணுமில்லாதவன்னு உன்னைக் கெட்டுனேன். சித்தாளு வேலை செஞ்சி எம்பாட்டைப் பார்க்கறாப்புல வெச்சிட்டே. ஒனக்கு பேச என்னா யோக்கியதை இருக்கு? எல்லாத்தையும் தோத்துட்டு உம்பின்னாடி ஊர் மாறி வந்து கெடந்தாலும், பொறந்த வூட்டு மொத தேவைக்கு அத்தக்காரி செய்யற சீருக்குக் கூட வக்கில்லாம…” உதடுகள் கோண மடங்கி உட்கார்ந்து ஒப்பாரி வைத்தாள்.

“இந்தாம்மே… இந்தா… ஜாங்கிரி… ஏ எடுபட்டவளே… ஒப்பாரிய நிப்பாட்டு. வம்பாடுபட்டாச்சும் நீ சீர் செய்ய பணம் பெறட்டிட்டு வர்றேன். ஒரேயடியாக் காட்டாதே…அக்காங்…” உரக்கக் கத்தினான்.

செல்லியை இறக்கி விட்டான். அதன் அக்கா பள்ளி விடுமுறை நாட்களில் செல்லிக்கும் தனக்குமாக பட்டாம் பூச்சிகளையும், தட்டான்களையும் வழுவழு கூழாங்கற்களையும் ஓட்டாஞ்சில்லுகளையும் சேகரித்து விளையாடும் பழக்கத்தில் அது ஓரத்துப் புல்பூண்டுகளில் மேய்ந்த தட்டான்களை பிடிக்க முயன்றது. . முடியாமல் அந்தச் செடிகளின் இலைகளைப் பிய்த்துப் போட்டது.

விருக்கென பிள்ளையை எடுத்து இடுப்பில் வைத்து வேகமாகப் போகும் ஜாங்கிரியைப் பார்த்து, முணுமுணுத்துக் கொண்டே நடந்தவன், முதலாளி பேச்சுக் குரல் கேட்டுப் பம்மினான். ஞாயித்துக் கெழமையாச்சே… இவரெங்கே இங்கே? யோசனையுடன், கட்டடத்தை சுற்றிக் கொண்டு அவர் கண்ணில் படாமல் அப்பால் போனான். தன்னைத் தாண்டிச் சென்ற அன்புவை வழிமறித்தான். “ஏ அன்பு, ஒரு ஆயிரம் ரூவா யார்கிட்டயாச்சும் கடன் ஏற்பாடு செஞ்சு தாயேன். அடுத்த வார சம்பளத்துல நீயே பிடிச்சிகிட்டு மீதியத் தந்தா போதும்” கெஞ்சலாகக் குழறினான்.

“என்னாத்துக்கு… ஏத்துனது எறங்கிடுச்சா? நாளையிலேயிருந்து ஒனக்கு வேலையே இல்ல. ஊருக்கு கெளம்பச் சொல்லிட்டாரு மொதலாளி. அடுத்த வார சம்பளத்துல தருவாராம்ல…” போய்க்கொண்டே இருந்தான் அவன்.

‘சரி, சாட்சிக்காரன் கால்ல வுழறதக் காட்டியும் சண்டைக்காரன் கால்லயே வுழுந்துடுவோம்’ என்ற யோசனையில் தள்ளாட்டத்தை நிலைப்படுத்தி முதலாளியிடம் போனான். தூக்கிக் கட்டியிருந்த கைலியை இறக்கிவிட்டு, அவசரமாக தலையை ஒதுக்கிக் கொண்டு வணக்கம் போட்டான்.

“ஏண்டா மூதேவி, சம்பாதிக்கறதெல்லாம் குடிச்சே ஒழிக்கிறியே… பொண்டாட்டி புள்ளைங்களை நெனைக்கிறியா… அட உன்னைத் தான் நினைக்கிறியா? என்னாத்தைக் கண்ட அதில? மடப்பயலே, மடப்பயலே.”

“இல்லைங்க ஐயா… ஒடம்பு வலிக்கு… கொஞ்சூண்டு…” வாயை பொத்திக்கொண்டான்.

“அடி செருப்பால… ஒடம்பு வலிக்கு குடிக்கறவன் குவார்ட்டர் போட்டுட்டு வீட்டிலேயே படுப்பாண்டா. பொழுதுக்கும் எறங்க எறங்க ஏத்திகிட்டு சலம்பல் பண்ணிட்டு திரியற… ஒடம்பு வலிக்கு குடிக்கறானாமாம்? போ… போய் கொஞ்ச நாளைக்கு ஊரில வேலை வெட்டியில்லாம கெடந்தேன்னா தானா வழிக்கு வருவே. கெளம்பு.”

“அன்பு, நாளைக்கு கெரகப் பிரவேசம் வெச்சிருக்கறவங்க வர்ற நேரம். அவங்க எதிர்ல இவன் எதாச்சும் அடாவடி பண்ணாமப் பார்த்துக்க…” பின்னால் வந்தவனிடம் சொன்னவர், பக்கத்திலிருந்த மேனேஜரிடம் ஏதோ கேட்டபடி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அன்புவும் பல்ராமும் ஒரே ஊர்க்காரர்கள் தான். பத்து வகுப்பு படித்திருக்கிறான். பொறுப்பான பயல். விசுவாசமானவனும் கூட. அதனால் தான் முதலாளி தன் சொந்த ஊரின் பிழைப்பற்ற பலரில் அன்புவை ஒரு கட்டடத்துக்கு மேஸ்திரி ஆக்கினார்.

“ம்ஹூம்… நாமளும் தான்… தவக்களை தன் வாயாலே கெடறாப்ல…” மனசுக்குள் நொந்துகொண்ட பல்ராமு காம்பவுண்டு சுவரோரமாக குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டான். நேற்றிலிருந்து இறங்க விடாமல் அடித்தது தலையை கனத்துக் கொண்டு வலி பின்னியது. ஜாங்கிரி இருக்கிற இருப்பில் இப்ப கறிக்கொழம்பு கெடைக்காது. பசிக்கிதா எரியுதான்னு தெரியாம குண்டிகுடலெல்லாம் ஒரு நமைச்சல். ஊரில் மாடுகன்னு, நிலம் நீச்சு, வீடு வாசல் என்று கெளரவமாக வாழ்ந்த காலம் மனசில் நினைப்பாக பிசைந்தது.

“போச்சு. எல்லாம் ஒவ்வொன்னா போனபோதே அம்மா கெடந்து அடிச்சுகிச்சு. “சூதானமா இருந்துக்கடா. கூடாதவங்க கூட சேராதே. உன் அப்பன் பாட்டனெல்லாம் கெளரதையா வாழ்ந்த ஊர் முன்னால கெட்டு சீரழிஞ்சி கெடக்கறத பார்த்துக் கெடக்க நானும் பண்ணுனது கலம் பாவமோ”ன்னு புலம்பிகிட்டே இருக்கும்.” அதுவும் மண்டையப் போட்ட பிறகு தான் இவன் ஊரை விட்டுக் கிளம்பியது.

“இப்ப அதே ஊர் முன்னால ஏதுமில்லா வெறும்பயலா போய் நிக்க வேண்டிய கட்டாயமாயிடுச்சேங்கிற நெனைப்பு அறுத்த அறுப்பில தானே நேத்து மொத ரவுண்டு ஊத்தினேன். நெகா திரும்பறப்பல்லாம் பாழும் நெனைப்பு வந்துடுதே… என்ன செய்வேன்… நல்லவன்னு நம்பி பொண்ண குடுத்தவன் வாசல்ல இப்படி நலம்தப்பி நிக்கறது எப்பிடிடா ஐயனாரே…” பல்ராமு பினாத்தல் ஒரு காரும் வேனும் வந்து காம்பவுண்டுகிட்ட நின்னதோட நின்னுச்சு.

வாகனங்களிலிருந்து பெரியவர்களை முந்திக் கொண்டு இறங்கிய வாண்டுகள் திசைக்கொன்றாய் கூவலுடன் ஓட, அவசர அவசரமாய் இறங்கிய அவர்களின் அம்மாக்கள் துரத்திப் பிடித்தனர்.

செல்லி வயசிலொரு பிள்ளை பளபளப்பான கவுன் மினுங்க புசுபுசுன்னு அம்மா இடுப்பிலிருந்து இறங்கி ஓடியது. பல்ராமு அந்தப் பிள்ளையையே பார்த்துக் கொண்டிருந்தான். எதேச்சையாக அவனைப் பார்த்த அந்தக் கும்பலில் ஒரு மூதாட்டி, அதன் பின்னால் வேகமாகப் போய் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.

செல்லிக்கு இப்படியொரு துணியெடுத்து போட்டா எப்படி இருக்கும்! செல்லிக் குட்டி மேல் இவனுக்கு அலாதி பிரியம். அவன் அம்மா சாயலில் இருப்பதும் கூட ஒரு காரணமாயிருக்கலாம். பெரியவள் ஒட்டமாட்டாள். விவரம் தெரிந்துவிட்டதால் குடிகார அப்பன் மேல் ஒரு அலட்சியம்.

காரில் வந்தவர் போன்போட்டு அன்புவை வரவழைத்தார் போல. வந்தவன், அவரிடம் ஏதோதோ பேசிக்கொண்டு உள்ளே அழைத்துப் போய் நெடுநேரம் கழித்து வந்தான். கூடவே வந்த அவர், தவிப்பாக, எல்லா ஏற்பாடும் ஓகே. இந்த திருஷ்டி பொம்மை சுத்தத் தான் ஒரு ஆள் சொல்லி வைக்கச் சொன்னேனே, என்ன ஆச்சு…? என்றார்.

“அதெல்லாம் யாரும் ஒத்துக்க மாட்டேன்றாங்க சார். தெரியாதுங்கறாங்க. மீறி கேட்டா, ஐயாயிரம் தருவியாங்கறாங்க. தருவீங்களா?”

“ஐயாயிரமா? ரொம்ப ஜாஸ்தியா கேட்டா எப்படிப்பா?”

“அப்ப வுட்டுட்டுப் போங்க சார். போன வாரம் அதோ மேற்கால ஒரு கட்டடம் வெள்ளையடிச்சிருக்காங்க பாருங்க… அதுல ரெண்டு பேரு பால் காய்ச்சினாங்க. திருஷ்டியும் சுத்தல, ஒண்ணும் சுத்தல… இந்தாண்ட தெற்க, போன மாசம் ஒருத்தங்க பால் காய்ச்சினாங்க. ஹோமம் வளர்த்தாங்க, திருஷ்டியெல்லாம் சுத்தலை. வாடகைக்கும் ஆள் வந்தாச்சு.”

“நம்ம முறைப்படி ஹோமம் வளர்த்து, திருஷ்டி சுத்தி, பால்காய்ச்சறது தானே பழக்கம். ஊரிலெல்லாம் பார்த்திருப்பியே..”

“அதெல்லாம் ஊர் நாட்ல சார். டவுனுல எங்க தேடறது? அங்கல்லாம் ஓமம் செய்ய வர்ற ஐயரே சவுண்டி பார்ப்பான்னு ஒருத்தரை இதுக்காக கூட்டிட்டு வந்துடுவாரே. இந்த காலத்துல அதெல்லாம் யார் பார்க்கறாங்க சார்?”

“நீ ஏற்பாடு செய்யறேன்னு சொன்னதால நம்பி நான் வந்துட்டேன். இப்ப கைவிடறயே.. எங்க மனசாந்திக்காச்சும் யாரையாவது பாரேன்…”

“கொத்தனாருங்க சில பேரு இங்கல்லாம் செய்ய ஒத்துக்கறாங்க. எங்க கம்பெனி கொத்தனாரு ஒருத்தர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். ஒடம்பு சரியில்லாம ஒருவாரமா ஊருக்கு போனவரு வருவாரு வருவாருன்னு பார்த்தேன். இன்னும் காணலே. என்னா பண்றது?” வேகமாகப் போனான் அன்பு.

பல்ராமு எழுந்து அவரருகே வந்து என்னா பிரச்சினை சார்? என்றான்.

“கிரகப் பிரவேசத்துக்கு முந்தி நாள் ராத்திரி இந்த கிரக சாந்தின்னு… திருஷ்டி சுத்துவாங்க… அது செய்ய ஒரு ஆள் வேணும். உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?”

‘காத்து வீசறப்போ தூத்திக்கடா பல்ராமு’ மனசு உஷார்பண்ண, “நானே செய்வேனே சார்!” அள்ளி விட்டான்.

“அப்படியா…! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்துடுச்சு! “

“எனக்கும் தான்.”

“என்ன?”

“இதுவேற, நீ சொல்லு சார்.”

“சரி, எவ்வளவு கேட்கறே?”

“ஒரு… ரெண்டாயிரம்?”

“ரொம்ப கேட்கறயே…”

“விலைவாசியெல்லாம் பாரு சார்…”

“ஐநூறு வாங்கிக்க.”

“கட்டாது சார், ரெண்டாயிரத்துல ஒரு எறநூறு கொறைச்சுக்க, ஒரு குவார்ட்டர் சேர்த்துக்க”

“அதெல்லாம் சரிப்படாது, ரவுண்டா ஆயிரம் வாங்கிக்க. இல்லேன்னா வேற ஆளைப் பார்த்துக்கறோம்.”

“ம்ம்ம்… (தும்பை உட்டுடாதேடா பல்ராமு) சரி, கூட ஒரு பாட்லு”

“அதெல்லாம் யாரு வாங்கறது? பணம் மட்டும் தான். வேண்டிய பொருளெல்லாம் நீயே வாங்கிக்கறியா?”

“என்னா தேவையோ வாங்கிக் குடு. என்னா செய்யணும்னு சொல்லு… செஞ்சிடலாம்.”

“எல்லாம் தெரியும்ன்னே?”

“அதான் சார், அவங்கவங்க பழக்கத்த சொன்னாங்க; செஞ்சேன். உம்பழக்கம் என்னான்னு சொல்லத் தாவலே?” (சமாளிச்சிட்டியேடா பல்ராமு! எவ்வளவு அடிச்சாலும் ஸ்டடிதாண்டா நீயி!)

“வெத்தலை, பாக்கு, வாழைப்பழம், அவல்பொரிகடலை, தேங்காய், எலுமிச்சம்பழம், சூடம், வத்தி, கொஞ்சம் பழந்துணி எல்லாம் தந்துடறோம். பொம்மை செஞ்சு வீட்டுக்கு திருஷ்டி கழிச்சு முச்சந்தியில பொம்மையை எரிக்கணும். ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேல… தட்சிணையும் பொருளும் வரும். தெரியுதா? படைச்ச பொருளெல்லாம் நீயே எடுத்துக்க. நாங்க எல்லாம் வேற இடத்துல ராத்திரி தங்குறோம். வேலை முடிஞ்சதும் போன் பண்ணு.”

“ஆகட்டும், ஆகட்டும்.”

அவங்களெல்லாம் கிளம்பிப் போனாங்க.

அன்பு திரும்ப வந்தான். “என்னா பல்ராமு, நல்ல வேட்டையா இன்னிக்கு…?”

“அடப்போ அம்பு, வூட்டுக்காரி இம்சை தாங்காம ஏதாச்சும் செய்ய வேண்டியிருக்கு” சலித்துக் கொண்டான். அன்பு, அம்புவாகி விட்டான்.

“உழைக்கிற காசை குடிக்காம குடும்பம் பண்ணலாம்ல.”

“ஆங்… நீங்கள்ளாம் காந்தி மகானுங்க! போவியா…”

“எதிலயும் அளவோட இருப்போம்யா நாங்கள்ளாம். எப்படியோ என் வேலைய மிச்சப் படுத்திட்ட, திருஷ்டி கழிக்க ஒத்துகிட்டு.”

“தலைய ஒடைக்குது, ஏதாச்சும் மிச்சம் மீதி இருந்தா குடேன்…”

“உன்னாட்டம் ஸ்டாக் வைச்சு அடிக்கறதில்லையேய்யா… ம்… நீ பூசை போடப் போற ஊட்டுல கடைசி ரூம்பு சிலாப்புல போன வாரம் ஒரு பாட்லு சொச்சம் வச்சி உருட்டி விட்டதா பயலுவ பேசிட்டிருந்தாங்க. சாவி மொதலாளி கைக்குப் போயிட்டதால எடுக்க முடியலையாம். தேடிப் பார்த்துக்க. இருந்தா எடுத்துக்க.”

பன்னெண்டு வரைக்கும் படுக்க முடியாதா? குடிக்கவும் முடியாதா? அடராமா! கண்செருக அரை நெனைப்பில் கிடந்தபோது ஜாங்கிரி தேடிகிட்டு வந்துட்டாள்.

“வந்து கொட்டிக்க, வா. வெறுங்கொடலு எரிஞ்சே சாவப் போற நீ.”

“போடி சர்தான். என்னை வக்கத்தவன்னு சொல்லிக்காட்டினியே, உன் சேனைக்கு சீர் செய்ய பணம் சம்பாதிச்சுட்டுத் தான் இனிமேட்டு சோறு எனக்கு. வருவேன் போ.”

“இந்த ரெண்டு ஜாமத்துக்கப்பறம் துரை ஆபீஸ்ல கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கப் போறாரு… வெறுங்கையோடவும் வீறாப்பு கொறையலையே உனக்கு.”

“விடிஞ்சா உன் வாசல்ல பணம் கெடக்கும், பொறுக்கிக்க. இப்ப போயிடு. என்னை வெறியேத்துனா அடிச்சே கொன்னுடுவேன்,ஆமா.”

“விதி அப்படின்னா யாருதான் என்னா செய்யறது? எக்கேடும் கெட்டுப் போ. புள்ளைங்க தனியா தூங்குது, நான் போறேன்.”

“நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன்…” உரக்கப் பாடி விசிலடித்தான் பல்ராமு. கிறக்கம் மட்டுப் பட்டிருந்தாலும் தலைபாரம் மட்டும் அதிகப்பட்டிருந்தது. வெறும் வயிறு வேறு கடா முடா என புரட்டியது.

பன்னிரெண்டு மணிக்கு கார் டிரைவர் வந்து வீட்டு சாவியை தந்து, சாமான்களை ஒப்படைத்து, ஆயிரத்தையும் எண்ணி வைத்தான்.

“கோழி எங்க? பலி போடணுமே…”

“இவங்க சைவக்காரங்க. எலுமிச்சம்பழத்துல குங்குமம் தடவிக்க. பையில இருக்கு.”

“பாட்லு?”

“இந்தா மேல நூறு. ஆளை விடு.” போயே விட்டான்.

பணத்தை அண்டர்வேரில் பத்திரப்படுத்தினான் முதல் காரியமாக. பழந்துணிகளை உதறிப் பார்த்தபோது செல்லிக்கு சொல்லி வைத்து தைத்தது மாதிரி ஒரு கவுன். கிழிசல் இல்லை. பழசு போலவும் இல்லை. அதை மட்டும் எடுத்து தனியே வைத்து விட்டு மிச்சம் துணிகளை சுருட்டிக் கொண்டு, இன்னொரு கையில் பூசை சாமான்களையும் வீட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு தள்ளாடிப் படியேறினான்.

தலைமட்டும் விண் விண் என தெறித்தது. முடிச்சதும் அன்பு சொன்ன பாட்ல ஊத்திகிட்டு ஜாங்கிரி ஆக்கி வைச்ச சோத்தை ஒரு கட்டு கட்டிட்டு சாய்ஞ்சிடனும். நல்லா தூங்கி எழுந்துட்டா தலைபாரம் போயிடும். கொலசாமி ஐயனாருதான் மனசு எறங்கி இந்த கிராக்கிய கொண்டாந்துருக்காரு. இனிமேட்டுக்கு அளவா குடிச்சு பொண்டாட்டி புள்ளைவோலோட நிம்மதியா வாழணும். இந்த பணத்தை முழுசா ஜாங்கிரி கையில தந்தா போதும். கோவமெல்லாம் பறந்துடாதா அவளுக்கு!

மனசின் வேகத்தில் கைகளும். துணிகளை சுருட்டி தலை, உடம்பு, கைகால் என உருவாக்கினான். வைக்கோல் ஒரு கட்டு இருந்திருந்தா சுலபமா முடிச்சிருக்கலாம். ஊர்விட்டு ஊர் வந்து வூடு வாங்கறவன் வைக்கோலுக்கு எங்க போவான்… துணிக்கும்பலிலிருந்து எடுத்து வைத்த பழைய பேண்ட் சட்டையை போட்டு ஒருவாறாக பொம்மையை ஒப்பேத்தினான்.

இழுத்துப் போக பிடிமானம் வேணுமே… சுற்றுமுற்றும் தேடி வெளியில் கிடந்த கட்டுக்கம்பித் துண்டை எடுத்து பொம்மை கழுத்தில் பிணைத்துக் கொண்டான்.

நடுவீட்டில் பூசை சாமான்களைப் பரப்பினான். எலுமிச்சம்பழங்கள் நான்கை இரண்டாக வெட்டி எல்லா துண்டுகளிலும் குங்குமத்தை அப்பினான். வத்தியை கொளுத்தி வாழைப்பழமொன்றில் செருகினான். சூடத்தை பிரித்து வைத்துக் கொண்டு, தேங்காயை உடைத்து வைத்தான். இன்னொரு எலுமிச்சை இருந்தது. அதையும் வெட்டி குங்குமம் பூசி வீடு முழுக்க பிழிந்து விட்டான். ரத்தம் சிந்தியது போலிருந்தது அச்சு அசலாய்.

“டேய்… இதெல்லாம் செஞ்சா பூதம் பிசாசெல்லாம் போயிடும்ன்னு நம்பிகிட்டு, இவுனுவோ நாம என்ன கேட்டாலும் வாங்கித் தருவானுவோ. நமக்கும் ஓசிக் கோழிக்கறியோட சோறு ஒருநாளைக்கு. மோட்டிலேயிருந்து பள்ளத்துக்கு தண்ணி பாயறாப்புல இருக்கறவன்கிட்டயிருந்து இல்லாதவனுக்கு காசு வரதுக்கு இதெல்லாம் ஒரு வழி.” போன மாசம் இதுமாதிரி ஒரு பார்ட்டி சிக்குன நம்ம குடிகாரக் கூட்டாளி வேம்பைய்யன் சொன்னானே…

“போகுது விடு. சடங்குக்காச்சும் பணம் தேறுச்சே நமக்கு” மனசை சமாதானப்படுத்திக்கொண்டு வெளியே வந்து குங்குமம் பூசிய எலுமிச்சை துண்டுகளை வீட்டைச் சுற்றி எட்டுத் திக்கும் வீசி எறிந்தான். திரும்பவந்து சூடம் கொளுத்தி எல்லா இடத்துக்கும் காட்டிவிட்டு, பொருளையெல்லாம் பழையபடி பையில் அள்ளிக் கொண்டு, பொம்மையை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

பொம்மையை கொளுத்தியவன், காம்பவுண்ட்டை சுற்றி இழுத்து வந்தான். காம்பவுண்டு தாண்டியதும் செல்லிக்கு எடுத்து வைத்த கவுன் நினைவுக்கு வர பொம்மையை அப்படியே விட்டுவிட்டுத் திரும்பினான். “இந்த அம்புப்பய வேற பாட்லு இருக்குன்னான். பார்க்காமயே வந்துட்டம்…”

இருட்டு. தூக்க கலக்கம். போதை வேறு. ரோட்டு பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்துவிடவே தடுமாறி கீழே விழப் பார்த்தான். செல்லி சாயங்காலம் ஜல்லி தூக்கிப் போட்ட அதே பள்ளம்!

சுதாரித்து காம்பவுண்டை எட்டிப் பிடிக்க காம்பவுண்டு சுவர் மேலிருந்த சிமெண்ட் கலவை தூக்கும் பாண்டு தான் கைக்கு அகப்பட்டது. பிடி நழுவி அதுவும் விழ இவனும் விழுந்து எழுந்தான். இடது காலில் நல்ல அடி.

சமாளித்து மாடியேறினான். வெளியே கிடந்த கோக்காலியை இழுத்துப் போய் கடைசி ரூம் சிலாப்புக்கு கீழே போட்டு ஏறியபோது இடது கால் பயங்கரமாக வலித்தது. பாட்லு கைக்கு வந்தால் எல்லா வலியும் பறந்து போகும். ஸ்லாப்பில் துழாவினான். கைக்கு எதுவும் அகப்படவில்லை. அம்புப் பய பொய் சொல்லிட்டானா? இல்ல, வேற எவனாச்சும் ஏற்கனவே ஆட்டைய போட்டுட்டானா? இன்னும் கொஞ்சம் எக்கி மூலையெல்லாம் தேடிய போது பாட்டில் தட்டுப்பட, கோக்காலி நொடித்துக் கால் தவறியது.

சலவைக்கல் வழுக்கிய கோக்காலி தடாபுடா என விழ அதன் மேல் இசகுபிசகாக விழுந்த பல்ராமு, எழுந்திரிக்கவேயில்லை. திறந்த வாயிலிருந்து கசிந்த இரத்தம் அவன் பிழிந்து விட்ட எலுமிச்சை குங்குமக் கலவையோடு கலந்தது.

காம்பவுண்டு சுவர் மேல் செல்லிக்காக அவன் எடுத்து வைத்திருந்த கவுன் காற்றில் அனாதரவாகப் படபடத்துக் கொண்டிருந்தது. தெருவில் எரிந்தடங்கிய திருஷ்டிப் பொம்மை புகையத் தொடங்கியது. இந்தக் களேபாரங்களைப் பற்றிய கவலையேதுமில்லாமல் எங்கேயோ ஜாமக்கோழியொன்று கூவியது, நிசப்தத்தை அதிபயங்கரமாகக் கிழித்தது.

நன்றி: ‘தினமணிக்கதிர்’ 05.01.2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *