மாடர்ன் தியேட்டர் அருகில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 18,568 
 

இந்த அழகான நகரம் எப்பொழுதும் பல வகையான ஓசைகளை எழுப்பி கொண்டே தான் இருக்கும், அந்த ஓசை அனைத்தும் இணைந்து இசையாய் ஒரு கானத்தை காலை முதலே இந்த நகர் எங்கும் காற்றோடு வருடிவிடும். ஆனால் இன்று இந்த நகரத்தால் ஒரு வெறுமையான பாடலை தான் தர முடிந்தது போலும்…! அந்த பாடலில் அமைதியே பெருமளவில் பின்னணி இசையை சேர்க்க, மவுனங்கள் கீதங்களை பாடியது.

இந்த நகரில் இன்று தொழிற்சாலைகள் இயங்காததால் பிரமாண்ட இயந்திரங்கள் இசை சேர்க்கவில்லை. மேலும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படவில்லை, அங்கே அதிகார, ஆணவ வசனங்களோ, ஏழை மக்களின் கெஞ்சலோ கேட்கவில்லை. சில தனியார் துறைகள் திறந்து இருந்தாலும் அங்கே ஆண்களின் அரட்டை சத்தமோ, பெண்களின் சிணுங்கலும், சிரிப்பொலியும் கேட்காமல் இனிமை மிகவும் தன்மையை இழந்தது. மாணவர்களின் ஆரவாரம் இல்லாமல் கல்வி கூடங்களி்ல் பாரதியும், காமராஜரும் சிரித்தவன்னம் பார்த்து கொண்டு மட்டும் இருந்தனர். கோஷங்களும்,கூச்சலும் போட தொண்டர்கள் இல்லாமல், கட்சி அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கிறது, அட தலைவர்கள் கூட அறிக்கை விட வரவில்லை போல.
ஆனால் இன்று கோவில்கள் முதல் தேவாலயங்கள் வரை மக்களின் கூட்டம் அமைதியான பிரார்த்தனையில் மூழ்கி இருந்தனர். பலரும் தங்கள் கண்களின் ஓரம் வழியும் நீரை துடைத்த வன்னம் தங்கள் வேண்டுதலை பலப்படுத்தினர். தெருக்களில் மேடை போட்டு கொண்டு அங்கும், இங்குமாய் சில நாத்திகர்கள் பேசி கொண்டு இருந்தனர், ஆனால் நின்று கேட்க யாரும் விரும்பவில்லை. இந்த நகரத்தின் ஒலி இவ்வாறாக அமைய.. காட்சிக்குவியலும் தன் பங்கிற்கு புதுமைகளை புகுத்தியது.

பல அடுக்குமாடி குடியிருப்புகளின் மாடியில் இருந்து பணம் வீசப்பட்டது. தெருக்கள் சீமான்கள் தங்கள் கார்களை நிறுத்து விட்டு ரூபாய் நோட்டுகளை காற்றல் வீசி எறிந்தனர். ஆனால் அவற்றை நின்று பொறுக்கிய மக்கள் சொற்பமே. நகரில் இருக்கும் ஏழை குழந்தைகள் திறந்து வைக்கப்பட்டு இருந்த வணிக வளாகளுக்குள் சென்று பிடித்த பண்டங்களை எடுத்து கொறித்து கொண்டு இருந்தனர் . அவர்கள் கண்ணில் பட்ட விளையாட்டு பொருட்களை விளையாடியும், உடைத்தும் பார்த்தனர், மேலும் விலை உயர்ந்த உடைகளை உடுத்தி அழகு பார்த்தனர். அவர்களை தடுக்கவோ, கேட்கவோ யாரும் வரவில்லை. குடிமகன்கள் மதுகடைகளுள் புகுந்து கண்ணில் படும் மதுவகைகளை ருசித்து கொண்டு பலமாக சிரித்தனர். இன்று இங்கே நாளை என்ற எண்ணமோ, சேகரித்து வைத்து கொள்ள விருப்பமோ இல்லை.

கோவில்களில் தஞ்சம் அடைந்தவர்கள் தவிர பலரும் வீட்டுக்குளே முடங்கி இருந்தனர். குழந்தைகள் தன் தாயையும், தந்தையையும் இருக்க கட்டி கொண்டு தங்கள் பயத்தை தூக்கி எறிகிறார்கள். காதலர்கள் தங்களின் இறுதி முத்தங்களை கண்ணீரோடு பரிமாறுகிறார்கள். இவ்வாறான காட்சி குவியலோடு வானை ஏறெடுத்து பார்த்தல் கண்களில் மிரட்சி தான் மிச்சம். இருண்டு கொண்டே செல்லும் வானம், எப்போதும் இடிந்து விழும் என்பது போல காற்றில் அலைகழிக்கப்படுகிறது.
இவற்றை வேடிக்கை பார்க்க வந்தவன் போல, இந்த வழிப்போக்கன் எனது பிரியமான மாடர்ன் தியேட்டரை நோக்கி நடந்து கொண்டு இருக்கிறேன். விண்கற்களும், பாறைகளும் இந்த பூமியை முத்தமிட நெருங்கி கொண்டே இருக்கிறது. இப்பொது நெருக்கம் மிக அருகில். விஞ்ஞானிகள் பூமியின் அழிவு தினமாக நாள் குறித்தது இன்றுதான். இப்போது இந்த உலகமே இந்த நகரை போல தான் சோசியலிசம் பாடுகிறது. நாளை இல்லை என்று தெரிந்ததும் தான் இங்கே அன்பும், காதலும் துளிர் விட பணம் என்பது மறதியாய் போனது. இருக்கும் சில மணி நேரங்களை எனது மாடர்ன் தியேட்டர் அருகில் செலவிட நினைக்கிறேன். எனது எனும் சொல் இன்று காலை முதல் தான் வசப்படுகிறது. இன்று அனைவரும் அனைத்தும் சொந்தம்.

என் பெயர் கார்த்திக். நான் பிறந்த மருத்துவமனை இங்கு தான் இருந்ததாக அம்மா எப்போதும் கூறுவாள். நான் பிறந்த சில ஆண்டுகளில் அந்த மருத்துவமனை இடித்து தியேட்டர் கட்டப்பட்டது. நான் சினிமா கற்று கொண்டது இந்த மாடர்ன் தியேட்டரில் தான், நண்பர்களுடன் கூடி திளைத்தும் இங்கு தான். என் முதல் காதல் துளிர்த்து, உதிர்ந்தது இங்கு தான். என் பெற்றோர் விபத்தில் இறக்க, அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது இந்த திரைஅரங்கின் வாசலை பார்த்த ஞாபகம். பல நாட்களுக்கு பிறகு இங்கு வருகிறேன், என் இறுதி நாளை இங்கே முடித்து கொள்ள எண்ணி தான் வந்தேன். தியேட்டர் கதவு தாளிட படவில்லை, யாருமே இல்லை. நேரே உள்ளே சென்று பிடித்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வெளியே கண்ட காட்சிகள் கண்கள் வழியாக திரையில் தோன்றியது, இன்று இறப்போம் என்று தெரிந்ததால் மக்களுக்கு சுயநலம் இல்லாமல் போய் விடாது போல, என்றோ இறப்போம், அதுவரை தேவை உள்ளது என்பது திரித்து கூறப்பட்டு இருக்க வேண்டும். கண்களை மூடி கொண்டு தூங்க முடிவு செய்தேன், இனி விழிக்கும் போது என் பெற்றோரை பார்க்கலாம் என்று.

உலகின் அழகான பாடல் இப்போது கேட்கிறது., என் கைபேசியில் தான் ரிங்காரம் இடுகிறது..!! இது ப்ரியாவிற்காக, அவள் நினைவாக, என்னை யார் அழைத்தாலும் அவளுக்கு பிடித்த பாடல் என்னை அழைக்கும் என்று..!! இப்போது அழைப்பது ஒரு புதிய எண். யாரிடமும் பேச பிடிக்கவில்லை, பாடல் ஒலிக்கும் வரை கேட்டு கொண்டு விட்டுவிட்டேன்..!! மீண்டும் அலைகிறது அந்த புதிய எண், வெளிநாட்டு எண் என்று மட்டும் பரிச்சியபடுகிறது. மீண்டும் அதே பாடல் கேட்டு கொண்டே இருக்கிறது, ஏனோ தெரியவில்லை பேச தோன்றியது இப்பொழுது..!

“ஹலோ..”

“ஹலோ..கார்த்திக் ?”

“ஹ்ம்ம்..நீங்க…”

“கார்த்திக், நான் ப்ரியா, எப்படி இருக்க கார்த்திக்?” இப்போது அந்த அழகான பாடல் என்னுள் கேட்கிறது..,

“ப்ரியா… நீ எப்படி இருக்க..?” ஆனால் தொடங்கும் முன்னே முடிந்தது இந்த உரையாடல்..! மறுமுனை இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது, என் வார்த்தைகள் இப்போது காற்றில் மட்டும் மிதந்து கொண்டு இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவளின் குரல், திருமணமாகி அமெரிக்கா சென்றவள், ஏன் இப்போது தொலைபேசியில் அழைத்தாள்? தெரியவில்லை. ப்ரியா..!! அவளோடு எனது முன்று வருட காதல், ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடிகளும் அவள் நினைவாக, அவளுக்காகவே வாழ்ந்தவை, மறக்க முடியாத தருணங்கள். பெண்களை கண்களை தாண்டி அனுமதிப்பதில்லை நான், இவள் மட்டும் இதயம் வரை சென்றாள். பேச தோன்றியது, பேசினேன் கல்லூரியில். மெல்ல பேசுவாள், ரோஜா வாசம் அவள் மீது எப்போதும், அவள் மல்லிகை வைத்தாலும் கூட. பல நாள் போராடி, காதலை ஏற்க வைத்தேன், மெல்ல கரம் பிடித்து நடப்பேன். ‘வேண்டாம்’ என்பாள் என் கைகளை இறுக்கமாய் பிடித்து கொண்டு. அவள் விரல்கள் ஏனோ பூக்காத மொட்டை போலவே மென்மையாக இருக்கும், அவள் விரல் தொடுகையில் அவள் நேற்று பிறந்த குழந்தையோ என்று எண்ணம் என்னுள் பிறக்கும். சில நேரங்களில் நட்பாய் இருப்போம்’ என்பாள் காதலித்து கொண்டே, என் பெற்றோருக்கு பிடிக்காது என்பாள் என்னை கட்டி பிடித்து கொண்டு. முதல் முத்தம் நான் கொடுத்தேன், அவள் கைகள் நடுங்கியது. இரண்டாம் முத்தம் அவள் குடுத்த போது என் சுவாசமே அடங்கியது. திருமணம் பற்றி பேசுவாள், நான் பேசினால் கடிந்து கொள்வாள். கல்லூரி முடிந்தது, காதல் கரையை கடந்து மெல்ல விலகி சென்றது, தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள். விடாமல் துரத்தினேன். என்னை பார்க்க மறுத்தாள், மதுவை தேடினேன். பேச மறுத்தாள். “உன்னை விட்டு செல்ல போகிறேன்” என்று சொன்னாள். ஏன் என்றால் திருமணமாம்.

அவசர சிகிச்சை பிரிவில் என் காதலுக்கு இறுதி சிகிச்சை அளித்தேன், அவள் மனம் இறங்க வில்லை, மணம் புரிந்தாள்.நாங்களும் பிரிந்தோம். இறுதியாய் காதலும் அங்கே மாண்டது. அழகான வலிகளை கொண்ட நினைவலைகள். இப்போது மீண்டும் என் தொலைபேசி சிணுங்கியது.. அழைப்பதும் ப்ரியா தான்.

“ஹலோ..கார்த்திக்..”

“சொல்லு ப்ரியா…, நீ பேசுறது கேட்குது..”

“நான் இப்போ வாஷிங்டன்ல இருக்கேன் கார்த்திக், இங்க கூட உலகம் அழிய போகுதுன்னு ஒரே பரபரப்பா இருக்கு.., ப்ளைட் கான்செல் பண்ணிட்டாங்க, இந்த ஊர விட்டு வெளிய வர முடியல…! எல்லாரும் அவங்க சொந்தங்கல்’ட போன்ல பேசிட்டு இருக்கோம்.. அதான் லைன்ல ஒரே ப்ரொப்லெம். எப்படி இருக்க கார்த்தி.. ??”

“இருக்கேன் ப்ரியா… யாருமே கூட இல்ல, தனியா ஒரு இடத்தில உட்காந்து இருக்கேன் ப்ரியா.., உங்க வீட்டுக்கு பேசிட்டியா? உன் கணவர் எங்க?”

“அம்மா, அப்பா போன் பேசுனாங்க.., கோவில் போக சொன்னங்க.. ! இங்க அவர்’க்கு இதுல நம்பிக்கை இல்ல, ஆபீஸ் கிளம்பிட்டாரு, கார்த்திக்..”

“ஏன் ப்ரியா..இப்போ எனக்கு கால் பண்ண??”

“இன்னியோட யாரும் இருக்க போறது இல்ல, உன்ன தவிர யாரிடமும் பேச பிடிக்கல கார்த்திக்..! எங்க இருக்க? உனக்கு புடிச்ச மாடர்ன் தியேட்டர் பக்கம் இருக்கியா..?”

“ஹ்ம்ம்.. உனக்கு கல்யாணம் முடிஞ்சுது ப்ரியா..”

“ஆமா கார்த்திக்.. உன்னை விட்டு வந்ததுமே எல்லாம் முடிஞ்சுது.. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு கார்த்திக், உன்கிட்ட பேசிட்டே இருக்கனும்…” இப்போது அவள் அழுகிறாள், உலகம் அழியும் முன் என்னிடம் இவள் பேசுவாள் என்றால், இனி இந்த உலகம் அழிந்து கொண்டே இருக்கட்டும்..!

“ப்ரியா… இந்த 2 வருஷம் என்கிட்ட ஒரு தடவை கூட பேச தோணலையா?”

“பேச தைரியம் இல்ல கார்த்திக், இப்போ நீ என்னை என்ன நினச்சாலும் சரி, மத்தவங்க என்ன நினச்சாலும் சரி, எனக்கு கவலை இல்ல கார்த்திக்.. இருக்கிற கொஞ்ச நேரம் உங்கிட்ட பேசணும்… நான் இங்க கொஞ்சம் கூட சந்தோசமா இல்ல..!! எனக்கும், அவருக்கும் ஸ்டேடஸ் ஒத்து வரும்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணாங்க, அதை தவிர ஏதும் சரியா வரல கார்த்திக்..”

இந்த உலகம் அழியும் அந்த வேளையில் தான் உலகில் ஒளிந்து இருக்கும் கருணை, பாசம், காதல் அனைத்தும் வெளியே வருகிறது.., வாழும் ஆசை இல்லாத போது தான் நம் முகமூடி’ஐ கழட்டிவிட்டு நம்முள் இருக்கும் மனிதர்களை நாமே பார்க்கிறோம்..

“ப்ரியா… நாம இப்போ பேசுறது சரியா படல. .நீ அவர்ட்ட பேசு, அவர் கூட இந்த நேரத்த கழிக்கணும்.. !” ஆண்கள் காதலில் மட்டும் முரடர்கள், முட்டாள்கள், ஆனால் அயோக்கியர்கள் இல்லை.

“உன்ன நான் ஏமாத்திட்டேன் கார்த்திக், என்ன மனிச்சிடு..!!”
காதலில் ஏமாற்றம் இல்லாமல் இல்லை. இவளை நான் காதலித்தது போல யாரும் காதலித்து இருக்க முடியாது.. இவளை நான் வெறுத்தது போல யாருமே வெறுப்பை கொண்டு இருக்க முடியாது. ஆனால் மனம் நங்கூரமாய் இவளோடு நின்று விட்டது..!!

“கார்த்திக்.. கார்த்திக்..!!” அங்கு எதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்ககூடும்.. ஆம்…!! பலத்த சத்தம் கேட்டது.. பூமி இரண்டாக பிளக்கும் சத்தம் போல…

“ப்ரியா….!! ப்ரியா..!!!!.” மறுமுனையில் நான் பேசி கொண்டே மாடர்ன் தியேட்டர் வெளியே வருகிறேன்.. ஆம்..!! அந்த நொடி அங்கு கடந்து விட்டது… அவள் எனக்கு முன்னால் சென்று கொண்டு இருக்கிறாள், இதோ இங்கும் வானம் மிகவும் இருட்டி கொண்டே வருகிறது… காற்று பலமாக வீசுகிறது, மேகங்கள் கீழே இறங்கி வந்துவிட்டது. எண் கண் முன்னே மனிதர்கள் தெரியவில்லை, உயிர்கள் தங்களையும், தங்கள் உறவுகளையும் காத்து கொள்ள வீட்டிற்குள் ஓடுவது போல தெரிகிறது. ஒரே நாள் மனிதர்கள் மனிதர்களாய் மாறிவிட்டனர், காதலும் திரும்பியது. ஆனால் அந்த நொடி இதோ இங்கே வந்துவிட்டது… என்னைவிட்டு சென்ற உறவுகளை பார்க்க போகிறேன்.

ஆம்..!!! இதோ மாடர்ன் தியேட்டர் அருகில் எங்களை நோக்கி…!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *