பாதியும் மீதியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 10,331 
 

சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல் என்ன? பரபரப்புகளுக்கு இனி இடமில்லை. போகும் முன்பாவது எவ்வளவு நிதானமாக நிறைவாக அமர்தலாக ஓய்வாக முடியுமோ அதுதான் இந்த மணித் துளிகளுக்கு தரக் கூடிய மரியாதையாக இருக்க முடியும். ஓடிய காலமெல்லாம் முடிந்தது. ஓட்டம் முடிகிற நேரம்; முடிக்கிற நேரம். இந்த நேரமாவது எவ்விதத் தடைகளும், இடையூறுகளும், தொந்தரவுகளும், கண்காணிப்புகளுமற்ற முழு சுதந்திரத்தின் நிச்சயமாய் இருக்க வேண்டும். அவர், இவர், அவர்கள், அந்த பொறுப்புகள், மரியாதைகள், அப்படியோ, இப்படியோ, எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், துக்கங்கள், துயரங்கள், சந்தோஷங்கள்,பாசங்கள், பரிதவிப்புகள், நிந்தைகள், பாடுகள், அவமானங்கள், கொண்டாட்டங்கள், உற்றம், சுற்றம், உறவுகள்,நட்பு, பகை, கோபம், தாபம், பொறாமை, புன்னகை எல்லாம் துறந்து இந்த இருத்தலின் இறுதி நிமிடங்களில் அந்த விடுதலையின் அழகை தரிசிக்க ஆராதிக்க; – தோளில் நழுவிக் கொண்டிருந்த அந்த சிறிய அலங்காரமான போர்வையை நன்றாகக் கழுத்திலும் முதுகு படிய சுற்றிக் கொண்டு பெஞ்சின் ஒரு முனையில் தன்னை ஒடுக்கிக் கொண்டு மறு படியும் எல்லாவற்றையும் நினைத்த போது அவனையுமறியாமல் சிரித்தான்.

இந்த கிழிசல் வாழ்க்கையில் இவ்வளவும் கடந்தோமா என்ன? இந்த கடைசி நிமிடத்தில்தான் சமூகத்தின் சாதரணனான அவனக்குக் கூட கடந்து வர இத்தனை களங்கள் காத்திருந்தன என்பது இப்பொழுதுதான் அவனுக்கே உறைத்தது. பெரு வாழ்வுதான்; அதிலொன்றும் சந்தேகமில்லைதான். என்றாலும் கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருந்தது. கழுத்துக்குப் பின்னால் ஒரு உறுத்தல் தொடர்ந்து கொண்டே வந்தது. உழைப்பிலும், உறக்கத்திலும், நிற்கையிலும், நடக்கையிலும், சிந்தையிலும், ஓய்விலும், தொடர்புகளிலும், நட்பிலும், உறவுகளிலும் துக்கத்திலும், சந்தோஷத்திலும், வெற்றியிலும், தோல்வியிலும் ஒழிக்கவே முடியாத நிழலாகத் தொடர்ந்தது. முதலில் சமரசம்; பிறகு கண்டு கொள்ளாமலிருந்தது; அதன் பிறகு இடையிடையே கோபத்தில் வாதங்கள்; அதற்கும் பிறகு கண்டித்தது; அதை தொடர்ந்து அனாகரீகமான அசிங்கமான காட்சிகளின் அரங்கேற்றம்; இந்த அவலங்கள் அவமானகளுக்குப் பிறகு அதுவே பழகிப் போனது; மரத்துப் போனது; முடிவில் வலி என்கிற சுரனையே இல்லாமல் அது ஒரு புற்றாக புரையோடிப் போனது. சுகம் நுகமாகிப்போன நிற்கதியில் வாழ்வின் அர்த்தம் என்பதெல்லாம் மிகப் பெரிய ஆடம்பரமாகிப் போய்விட்டது. அறிந்தும் அறியாமலும், ஜாடை மாடையாகவும் சிற் சில சமயங்களில் நேரடியாகவும் இந்த இருத்தலே அவசியமற்றதும் நிம்மதி கெடுக்கும் இடையூறுமாக அசிங்கமாக்கப் பட்டபின்பு, அந்த நிழல் துறக்க ஒரே வழி தன் உருவம் தொலைப்பது ஒன்றுதான் என்கிற முடிவோடுதான் இந்த வேளையும் இந்த பெஞ்சும்.

அந்த மாலைப்பொழுதும் அந்த சூழலும் மஞ்சள் வெயிலில் குளித்துக்கொண்டிருந்தன. ஒரு நெடுஞ்சாலையிலிருந்து ஒன்றரை அல்லது இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளடங்கியிருந்த ஒரு காட்டாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த மதகுகள் இனைக்கப்பட்டிருந்த சற்று பெரிய தடுப்பணை. அந்த அணையின் ஒரு பக்கத்திற்கு ஒரு பெரிய குன்று இயற்கையான தடுப்பாய் அமைந்து அதன் அடிவாரம் பெரிய பள்ளத்தாக்காய் அமைந்திருந்தபடியினால் திடுமென பார்க்கும் பொழுது பெரிய அணைக்கட்டை போலவே தோற்றமளிக்கும். மதகுகளின் பக்கத்தில் அணையின் கரையிலிருந்து சற்று கீழிறங்கி ஒரு சிறிய பூங்கா. இதுதான் அவன் அவ்வப்பொழுது பக்கதிலிருந்த நகரத்திலிருந்து வந்து தன்னைத் தேற்றிக் கொள்ளும் இடம். இதுவே அவன் கடைசியாகத் தெரிந்துகொண்ட இடமும் ஆயிற்று.

அணையில் இப்பொழுது பாதிக்கும் கீழாகத்தான் தண்ணீர். ஒரே ஒரு மீன்கொத்தி ஒரே இடத்தில் சரியான உயரத்தில் சிறகடித்துக் கொண்டே இருந்து பொத்தென்று நீருக்குள் விழுந்து தன் கடைசி இரையை கொத்திக் கொண்டு, அழகான ஓவியமாய் நீருக்குள் குப்புற கவிழ்ந்திருந்த குன்றின் பிம்பத்தைக் கலைத்துவிட்டு பறந்தது. பக்கத்திலிருந்த மரத்தின் மேலிருந்த கடைசி ஒற்றைக் காகம் தன் தலையை திருப்பி அவனைப் பார்த்துவிட்டு கரைந்து பறந்து சென்றது. தூரத்தில் வயலின் வரப்பின் மேல் சுற்றி சுற்றி வந்து தன் பயிரை நலம் விசாரித்துக் கொண்டிருந்த அந்த விவசாயியும் அவன் பண்ணையாளும் கூட இப்பொழுது இல்லை. கைகளை நன்றாக உயர்த்தி முதுகைப் பின்னிழுத்து சோம்பல் முறித்து அப்படியே அந்த பெஞ்சில் சரிந்து கால்களை நீட்டி படுத்தே விட்டான். அணையிலிருந்து வந்த மெல்லிய காற்று உடலைத் தழுவி செல்ல மேலே வெளிறிய நீல வானத்தில் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் நாங்கள் வந்து விட்டோமே என்பதைப் போல பூத்திருந்தன. துயரமற்ற தனிமை சொர்க்கம்தான். அவனைப் பொறுத்த மட்டும் இது ஒரு கனவோடைதான். எந்த மயக்கங்களுக்கும் இடம்கொடுக்க அவன் இப்பொழுது தயாரில்லை. போதும்; எல்லாம் போதும். இன்னும் சற்று இருட்ட்ட்டும்.

படுத்தவன் சற்று கண்ணயர்ந்து விட்டானா? அல்லது அயர்ந்ததைப் போன்ற பிரேமையா? அல்லது பாரத்தின் வெற்றிடத்தில் பிரியப்பட்டபடியே சூன்யத்தில் கரைந்திருந்தானா? என்னவென்று தெரியாத கிறக்கத்தில் பக்கத்தில் ஏதோ ஒரு அசைவு – அரவம் கேட்டதைப் போன்று? – சட்டென எழுந்து உட்கார்ந்தான்; எரிச்சலுடன் யாரிது சிவ பூஜை கரடியாக என்று பொருமிய வண்ணம் கண்களைக் கசக்கிக்கொண்டு இருட்டில் துழாவினான்.

இவன் அமர்ந்திருந்த பெஞ்சைப் போலவே பத்து பதினைந்து அடி தள்ளி மற்றொன்று. யார் இது? இந்த வேளையில் இப்படியொரு அழையாத துணை. மற்றவவன் இவனை இன்னமும் கவனித்ததாகத் தெரிய வில்லை. பையிலிருந்து எதையோ தேடி – எடுத்த சிகரெட்டை பற்றவைத்த வெளிச்சத்தில் அவனது சோகம் அறையப் பட்டிருந்த ஆனால் இளமையை மறைக்க முடியாத முகம் தெரிந்தது. அதே நேரத்தில் அந்த தீக்குச்சியின் இமைப்பொழுது வெளிச்சத்தில் அவனும் இவனைக் கவனித்து சட்டென்று தீயை அணைத்து விட்டு திடுக்கிட்டிருக்க வேண்டும். முகத்தை திருப்பிக் கொண்டான். விரல் இடுக்குகளுக்கூடே தெரிந்த அந்த கணலில் மறு படியும் அவன் முகம் தெரிந்தது. வாலிபம் வாசலில் வந்திருக்கும் சிறிய வயது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டான் போலும்? இவனைப் பார்த்து திரும்பி” யாரது?” என்று சத்தத்தைக் கூட்ட இவன் சிரித்துக் கொண்டே “நான் கேட்க வேண்டும் அதை” என்றவன் எழுந்து அவனருகே சென்றான். கண்களில் சற்று மிரட்சியுடன் இவனைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து இன்னொரு முறை நன்றாக புகையை இழுத்துவிட்டு சிகரெட்டை தூர எரிந்தான்.

பெஞ்சில் அமர்ந்து அந்த வாலிபனையும் உட்காரச் சொன்னான். “ பயப்பட வேன்டாம். ஏன் இந்த நேரத்தில் இங்கே?” வாலிபனின் பார்வை அதையே நானும் உன்னைக் கேக்கலாமே என்பது போலிருந்த்து. இவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தான். “ ஓன்றுமில்லை” என்றான்.

“ஓன்றுமில்லை என்றால் புறப்படலாம்” என்றான் இவன். வாலிபன் பதிலுக்கு “ஏன்?” என்றான்.

சிறிது இடைவெளிக்கு பிறகு “ நீங்களும் என்னைப் போன்றா?” என்று கேட்டான். இவனுக்கு தான் நினைத்ததை உறுதி செய்கிறானா என்ன? என்று நினைத்த வண்ணம் “ உன்னப்போன்று என்றால் – புரியவில்லை” என்றான்.

“நான் சில முடிவுகளுடன் வந்தேன்; பாதி முடித்தும் விட்டேன்” என்று ஒரு உலர்ந்த சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டான்; இருமினான்; இன்னமும் தோளில் ஒட்டிக் கொண்டிருந்த பையிலிருந்து பாட்டில் தண்ணீர் குடித்தான்;சற்றுசெருமினான்.

இப்பொழுது இவனுக்கு பகீரென்று உறைத்தது. “முட்டாள்” என்று கத்தி அவன் தோள்களைப் பிடித்து உலுக்கினான். பயமெல்லாம் தெளிந்து தன் கைகளை இவனது கரத்தின் மேல் வைத்து வெகு நிதானமாக “நான் முட்டளென்றால் நீங்கள்?” என்று சொல்லி சிரித்துக் கொண்டே வாய் குளறி சிரிப்பு வெளிரி அழுகை முட்ட இரும ஆரம்பித்தபோது சாராய நெடி பரவ ஆரம்பித்தது.

தர்க்கத்திற்கோ வாதத்திற்கோ இது நேரமில்லை என்பதை உணர்ந்தவனாய் ஆற்றாமையில் “என் வயதும் உன் வயதும் ஒன்றா என்ன?” என்று கடிந்து கொண்டான்.

“ வருத்தங்களுக்கும் வயதிற்கும் சம்பந்தம் உண்டென்று நினக்கிறீர்களா?” என்று இருமிக் கொண்டே பைக்குள் கை விட்டு தண்ணீர் பாட்டில் இல்லாமல் இன்னொரு பாட்டிலை எடுத்தபோது சடக்கென்று அவன் சுதாகரிக்கும் முன்பு இவன் பாட்டிலை வாலிபனின் கையிலிருந்து பறித்து சிறிது தூரம் அணையை நோக்கி ஒடி தண்ணீருக்குள் வீசி எறிந்தான். திரும்ப இவன் வந்த போது வாலிபன் இவனை தீர்க்கமாகப் பார்த்து “ பாதிதான்பாட்டிலில்; மீதி ஏற்கெனவே உள்ளே போய்விட்ட்து” என்றவன் இருமினான்; எழுந்தான்; கால்கள் தள்ளாடின; அமர்ந்தான்; மறுபடியும் இருமினான்: “ஸாரி, ஸாரி” என்று ஆங்கிலத்தில் உறுமிக்கொண்டே போராட்டத்தின் முதற்படியாக சாராயமும் சாப்பிட்ட நஞ்சின் நெடியுமாக பெரிதான சத்தத்துடன் வாந்தி எடுத்தான்; சரிந்தான். அழுதான். இவன் கையைப் பிடித்தான். “ ஆசை ஆசையான அப்பாவின் ஐ ஐடி கனவு; காசுதான் கரைந்தது; இனி என்ன? – வயிறு வலி”; – புரண்டான் – “அப்பா – அம்மா – ஸார் ஸார்”

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு இவன் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அழுவதற்கு நேரமில்லை; எதிரே வாழ வேண்டிய வயதில் துள்ளத் துடிக்க ஒரு ஜீவன் – தோளிலிருந்த பையிலிருந்த தண்ணீர் பட்டிலை எடுத்தான். பாதி இருந்தது. எல்லாமெ இந்த தருணத்தில் பாதியும் மீதியும்தான். பையை தலைக்கு அடைகொடுத்து அவன் கன்னத்தில் சற்று ஆறுதலாகவும் சற்று பலமாகவும் தட்டி “ ரிலாக்ஸ் – இரண்டு நிமிடத்தில் வருகிறேன்” என்று சொல்லி விட்டு தண்ணீர் பாட்டிலைக் கையிலெடுத்து அணையை நோக்கி – இடதுபுறமாக ஓடினான். கிராமத்து மக்கள் குளிப்பதற்காக அங்கு ஒரு படித்துறையைப் பார்த்த ஞாபகம். தடதடவென இறங்கி அந்த இருட்டில் கண்களை கூர்மையாக்கிக் கொண்டு துணிகளை துவைத்து துவைத்து சமனாயிருக்கும் படிக்கற்களில் கையை வைத்து தடவி தடவி மூன்றாவது கல்லில் தேடியது கிடைத்தது. சிறிய கரைந்த சோப்புத் துண்டுகளின் மிச்சம் இரண்டு கிடைத்தது. அப்படியே பாட்டிலுக்குள் போட்டு அணையின் தண்ணீரையும் பாட்டிலுக்குள் நிரப்பிக் கொண்டு, பாட்டிலை அடைத்து நன்றாகக் குலுக்கிக் கொண்டே திரும்பவும் வாலிபனை நோக்கி ஓடினான்.

இன்னுமொரு முறை கூட வாந்தி எடுத்திருந்தான். கையை வயிற்றில் வைத்துக்கொண்டு அரட்டிக்கொண்டிருந்தான். மறுபடியும் அவன் கன்னத்தை தட்ட அவன் விழித்து மறுபடியும் அதே “ஸாரி, ஸாரி” என்று முனங்க. தலையருகில் அமர்ந்து தன் மடியில் வைத்து வாயில் பாட்டிலை திணிக்க அவன் குடிக்க ஆரம்பித்தான் ; இரண்டு மடக்கு ; பிறகு மறுத்தான்; இவன் “ அப்பாவை பார்க்க வேண்டுமென்றால் வேறு வழியில்லை – குடி” என்று சொல்லி அதட்டி வாய்க்குள் பாட்டிலை மறுபடியும் திணித்து நன்றாக உள்ளே ஊற்றினான். சிறிது நேரம் புரண்டான். சற்று சாய்ந்தவாறு உட்கார வைத்து முதுகைத் தடவினான். சிறிது நேரத்தில் மறுபடியுமாய் இரண்டு முறை பெரிதாக வாந்தி எடுத்தான். அப்படியே சாய்ந்து உட்காரவைத்து விட்டு நேராக ஓடி கற்களின் ஊடாகஅணைக்குள் இறங்கி பாட்டிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி சுத்தமாக்கி சற்று தள்ளி போய் அணைத் தண்ணீரை பாட்டிலுக்குள் நிரப்பிக்கொண்டு மறுபடியும் வாலிபனிடத்தில் விரைந்தான். பாட்டில் தண்ணீரில் ஓரளவு குடிக்கச் செய்தான்.

முகத்தில் சற்று தெளிவு போல – அல்லது அப்படி நினைப்பா? ஏதானால் என்ன? இனி இறைவன் விட்ட வழி. நெடுஞ்சாலைக்கு போய் சேர்ந்தால் போதும். எப்படி? வழி தெரியும் – போகும் வகை? ஒவ்வொரு மணித்துளியிலும் இந்த வாழ்க்கை பாதியும் மீதியும்தான்; மீதியாய் கையிலுணர்வது விலை மதிக்க முடியாததுதான். இறைவன் மிகப் பெரியவன்; “ ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் “ என்றவன் இந்த போராட்டத்தின் உச்சத்திலும் போகும் வகை சொன்னான். முடிந்த வரை முயற்சிப்பதுதான். “ஏந்துவேன்; சுமப்பேன்: தப்புவிப்பேன்” என்றவன் செய்வான். கல்லூரி நாட்களின் என்.சி.சி. பயிற்சி நினைவில் வந்தது. தனது போர்வையை சுருக்கி இடுப்பில் கட்டிக் கொண்டான். முடிந்த மட்டும் வாலிபனின் பாரத்தைக் குறைக்க வேண்டும். கால்களின் ஷூவை கழற்றி தூர எறிந்தான். பெல்ட் – அதையும் . அவன் பையிலிருந்த அவனது பர்ஸ் எடுத்து தன் பையில்வத்தான். பெஞ்சில் நன்றாக்ச் சாய வைத்து , குனிந்து வாலிபனது இரண்டு கைகளையும் தலையய்யும் தன் முதுகுக்குப் பின்னால் வரும்படி வைத்துக் கொண்டு அப்படியே உயர்த்தினான். கால்கள் இவன் முன் பக்கத்திலும் தலையும் கைகளும் பின்னாகவும் பாரம் இவனுடைய இடது தோளின் மேல் ஏறியபோது சற்று தடுமாறி நிதானித்தான். திரும்பினான். வாலிபன் ஏதோ பிதற்றினான். “ இவன் “: கொஞ்ச நேரம்தான் – அப்பாவிடம் போகிறோம்– ஓய்வெடு “ என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். இவன் எதிபார்த்த பளு இல்லை என்றாலும் பழக்கமில்லாததால் முதலில் திணறி மூன்று நான்கு வருடங்களுக்கு பின்னாக தன் இரட்சகனுக்கு துதிகளை ஏறெடுத்த வண்ணம் முன்னேறினான்.

மெதுவாய் மெதுவாய்– ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சுமையுடன் கூடிய அவனுடைய நடையில் அவனுக்கே ஒரு நம்பிக்கை பிறந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக “ தாங்க்யூலார்ட் “ சொல்லியவாறே நடையிலும் சற்று வேகம் கூடியது. தோளின் மேல் துவண்டிருந்த பாரத்தை விட மனதின் பாரம் கனத்தது. எங்கு வந்தோம்? எதற்கு வந்தோம்? நித்தியமாய் உறங்கத் தீர்மானித்து வந்தவனை நிச்சயமற்ற நிமிஷங்களுடன் போராட நிர்ப்பந்தித்த நிலவரம் – இந்த கலவரம் – அவனுக்கு எதுவும் விளங்கவும் இல்லை; கேள்விகளுக்கு விடையும் இல்லை. இப்பொழுது இலக்கெல்லாம் எவ்வளவு விரைந்து முடியுமோ அவ்வளவும் அதற்கு மேலும் நெடுஞ்சாலை; ஆறு கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனை; அதுதான் ; அது மட்டும்தான் –மற்றெதெல்லாம்– அவை முன்னெழுதப்பட்டதாயும் முந்தித் திருத்தப்பட்டதாயும் இருக்கலாம். முயற்சி திருவினையாக்கலாம். ஆக வேண்டும். சிறிய கல் தட்டியது; உரைக்க வில்லை. தூரத்தில் அந்த இருளின் ஜீவ சாட்சியாக ஆந்தையின் அலறலும் ஒரு நடுநிசி நாயின் ஊளையும். “ இருள் இந்த வெளியை எவ்வளவாய் ஆக்ரமிக்கிறதோ அவ்வளவாய் விண்ணில் பிராகாசிக்கும் நட்சத்திரங்கள்; துயரங்கள் எவ்வளவாய் நெருக்குகிறதோ அவ்வளவாய் உணர முடிகின்ற இறையன்பும் அவன் துணையும்” என்கிற எப்பொழுதோ படித்த வரிகள் நினைவில் வந்தன. சற்று நிற்கலாமா? ஹூகும் – கிடைத்த பிடியை விடாமல் தொடருவதுதான் சரி. லேசாக ஒரு முறை வாலிபன் தொங்கிக் கொண்டிருந்த கையினால் இவன் முதுகை பிராண்டினானா? அல்லது வெறும் பிரேமையா?

தூரத்தில் முதலில் விட்டு விட்டு இருளை விலக்கும் வெளிச்சம் தெரிவது போல இருந்தது. வலது கையால் கண்களை கசக்கி விட்டு பார்த்தான்; இப்பொழுது அப்படி விலக்கிய வெளிச்சத்திற்கு பின்னால் ஒரு மெல்லிய சிவப்பு ஒளிக் கீற்று; அப்படியென்றால் “ஓ – நெடுஞ்சாலை – போராட்டத்தின் முதல் இலக்கு”; மனதில் ஒரு புது தெம்பும் இனம் புரியாத தைரியமும் பெருக்கெடுக்க – அடுத்த பதினைந்து நிமிடங்களில் அணைக்கரையின் அலங்கார வளைவைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்து விட்டான். உழைப்பிற்கு பழக்கமற்று பழுதாகியிருந்த தன் உடலை -“பீஹெல் வித் யூ; அனதர் டென்மினிட்ஸ் ப்ளீஸ்” ( பத்து நிமிடங்கள்தான்; பொறுத்திரு) என்று களைப்பை சட்டை செய்யாத நம்பிக்கையின் வேகத்தில் புரண்ட ஆங்கிலத்தில் தாஜா செய்த வன்ணம் நெடுஞ்சாலையின் எதிர் பக்கத்திற்கு கவனத்துடன் கடந்தான். ஒரு அடி உயரமான குறுக்கு தடுப்பு சுவரைத் தாண்ட வேண்டும்; சவால்தான் – மறு படியும் “ப்ரைஸ் தீ” என்று சத்தமாய் ஏறெடுத்து தடுப்பில் ஏறிய வேகத்திலெயே நிதானித்து இறங்கவும் செய்து விர்ரென்று காற்றை கிழித்துச் சென்ற காருக்கு காத்திருந்து மறு பக்கம் வந்து விட்டான். வலது கையால் முகத்தை துடைத்துக் கொண்டான்

தார் சாலையில் சற்று உள்ளே முன்னேறி எதிரே வருகிற வாகனங்களுக்கு நேராக, இடது கையால் வாலிபனை பற்றிக் கொண்டு வலது கையை உயர்த்தி உதவி கேட்க – முதலில் ஒரு கார் லேசாக வேகம் குறைத்து அருகில் வந்து பெரிய விபரீதத்தை கண்டது போல விருட்டென்று பறந்து மறைந்தது. அதற்குப் பின் ஒரு வேன்; உள்ளே இரண்டு இளைஞர்கள்தான்; நன்றாக நின்று வேடிக்கை பார்ப்பதை போல; இவன் வலது கையை தன் வாயிலும் தோளின் பாரத்திலும் மாறி மாறி உயர்த்தி சலாம் செய்து கெஞ்சினான்; உதட்டைப் பிதுக்கி தலைகளால் மறுத்து சென்று விட்டார்கள். இனி வேறு வழியில்லை; நடுச் சாலை ஒற்றை மறியல் தான் பயன் தரும் என்று தீர்மானித்தவனாய் வருகிற வாகனகளைப் பார்த்த போது – சிவப்பு மஞ்சள் நீலம் என பளிச்சிடும் வண்ணங்களை மேலே சுழல விட்டபடி – அப்பாடா? இவனில் வந்தது ஒரு நீண்ட நிம்மதி பெருமூச்சு .

அந்த காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்து வாகனம். நிதானமான வேகத்தில் வந்து சற்று தூரத்திலேயே இவனை பார்த்தவுடனேயே வேகத்தை குறைத்து இவனருகில் வந்து நிதானித்து நின்றது. ட்ரைவரைத் தவிர முன்னால் இருந்த அந்த அதிகாரியும் பின்னால் இருந்தவர்களும் பாதி தூக்க கிறக்கத்தில்தான். முகத்தில் மோதிக் கொண்டிருந்த காற்று நின்றதில் முதலில் அந்த அதிகாரி முழித்து ட்ரைவரை பார்த்து விட்டு சட்டென நிதானித்து இவனைப் பார்த்து “ என்னடா இந்த நேரத்தில? என்ற அதட்டலுடன் முறைத்தார். இதற்குள் பின்னாலிருந்து இருவர் தலையில் தொப்பிகளை சரி செய்து கொண்டே தட தடவென இறங்கி இவனிடத்தில் ஓடி வந்தனர். இவனை சுற்றி வந்தனர். வலது கையினால் சலாம் செய்து அதிகாரியின் காதுகளிலும் விழும்படி நடந்ததை கூறினான். “என்னய்யா?” என்று அதிகாரி கேட்டதற்கு “ லேசா ஊசாலாடுற மாறி தெரியுது ஸார்” என்றான். இவன் அதிகாரியை மறுபடியும் மன்றாடினான். “ யோவ் அதான் வீட்டுக்கு போர நேரம் குறுக்க விழுந்திட்டல்ல? இருய்யா கம்முன்னு – 853 . பின்னாடி வர்ரவன மடக்குயா; போற வழிக்கு புன்ணியமா போட்டும்; பெருசவிட்றாத. ஆஸ்பத்ரி அவுட்போஸ்ட்ல விட்டுட்டு போலாம்” என்றவர் இப்பொழுது மறுபடியும் நிதானமாக இவனை கண்களால் அளந்தார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இவனும் 853ம் அவரது மற்றொரு சகாவும் இவனது நம்பிக்கையான – இரண்டு மூன்று பழைய பேப்பர்கள் மேல் விரிக்கப்பட்டிருந்த இவனது போர்வையில் கிடத்தப்பட்டிருந்த – வாலிபனுமாக ஒரு திறந்த காலி சரக்கு வேனில் அந்த வாகனத்திற்கும் மீறிய வேகத்தில்தான் பயணித்துக் கொண்டிருந்தனர். முன்னால் ரோந்து வாகனத்தின் விட்டு விட்டு வந்த சைரன் ஒலி தடைகளை விலக்கி தந்த வண்ணம் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

மருத்துவமனை அவசர சிகிச்சையின் ஸ்ட்ற்றெட்சரில் படுக்க வைக்கப்பட்டு, வாலிபனின் நாடித்துடிப்புபை உன்னித்து கவனித்து அவனது மூடிக் கிடந்த விழிகளை லேசாகத் திறந்து பார்த்த செவிலியர் சகோதரியின் முகத்தில் இவன் திருப்தியுற முயற்சிக்கும் முன் இவன் விழிகளை நீர் மறைத்தது. ஒரு முறை குலுங்கினான். கால்கள் தள்ளாடின; சுவரில் சாய்ந்து கொண்டான். உருட்டப்பட்டு உள்ளே சென்று கொண்டிருந்த ஸ்ட்ற்றெட்சரின் பக்கமாக 853ன் சகா தொப்பியைக் கையிலெடுத்து தலையை சொறிந்து கொட்டாவி விட்டுக் கொண்டெ உடன் சென்றார்.

கையில் பேனாவுடன் எழுதும் அட்டையின் மேல் பரந்து கிடந்த பேப்பர்கள், ரெஜிஸ்டர்களில் மூழ்கியிருந்த மருத்துவமனை புறக் காவல் நிலையத்தின் தலமைக் காவலர் இவனை ஏற இறங்கப் பார்த்த போது இவன் தன்னுடைய அலுவலக அடையாள அட்டையை காண்பித்தான். வாங்கிப்பர்த்தவர்– “யோவ்” என்று ஆரம்பித்தவர் சட்டென்று சுதாகரித்துக்கொண்டு “ஸார் என்ன ஸார் இது? ஏன் சார்? சரி சரி உங்கள் ஸ்டேட்மெண்டை நீங்களெ எழுதிக்கொடுங்கள்” என்றார். “காலம்பற இன்ஸ்பெக்டெர்தான் வரனும், அந்த பெஞ்சில வேனும்னா படுத்துக்கலாம்; என்னால் முடிந்தது அவ்வளவுதான்.” என்றவர் தான் நிறுத்தி வைத்திருந்த தனது வேலையைத் தொடர்ந்தார்.

தலமைக் காவலர் தந்த பேப்பரில் தன் சுய அறிக்கையை எழுதிக் கொடுத்து விட்டு கால்களை முடக்கி பெஞ்சின்மேல் வைத்து சுவரில் சாய்ந்ததுதான் தெரியும். தோளின் பாரம் முழுதுமாயும் மனதின் பாரம் பாதியுமாய் குறைந்ததிலும் சோர்விலும் அயர்ந்தான். – கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பொங்கிப் ப்ரவாகிக்கும் ஒரு பெரிய நதியின் கரையில் அவனும் வாலிபனும் மிக உற்சாகமான உரையாடலில்; ஒரு படகுத் துறையை நெருங்கும் பொழுது வாலிபன் விடை பெறுகிறான்; நதியின் போக்கில் நதியின் வெள்ளத்தின் சிலிர்ப்பை கைகளில் அளைந்து கொண்டே வந்து சேர்ந்த மற்றொரு துறையில் இறங்க கால்களை வைக்கும்போது – பெஞ்சிலிருந்து கால்கள் நழுவ தடுமாறியவன் சுதாகரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். கனவா? – நதியும் படகும் மட்டும்தானா? நடந்தெல்லாமே கனவாய் கலைந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இவன் வெளியெ பார்த்த பொழுது கிழக்கே விடியலுக்கான ஒத்திகை அரங்கேறிக் கொண்டிருந்தது.

ஒரு அரை மணி நேரத்திற்கு பின் இவனைத் தேடி வந்த வாலிபனின் தந்தை இவனுடைய இரு கைகளையும் பிடித்து குலுங்கி அழுது – அந்த கண்ணீரில் அவர் கரைத்த நன்றிகள் இவன் உடல் வலியை எல்லாம் பறக்கச் செய்தது போல இருந்தது. பாரம் கரைந்து உள்ளம் லேசாகி அவர் இவனிடம் பேச ஆரம்பிக்கிற பொழுது பதினைந்து பதினாறு வயது இளம் சுடிதார் விழிகளும் முகமும் பரபரக்க “ டாடி அண்ணா விழிச்சிட்டான்; அம்மா உங்களை கூப்ட்ராங்க” என்று மூச்சிரைக்க வார்த்தைகளைக் கொட்டவும், அவர் “நான் பார்த்துட்டு உடனே வர்றேன் , இருங்க “ என்று மகள் முன் ஓட பின் தொடர்ந்தார். நீண்ட பெரு மூச்சுடன் முகத்தைத் துடைத்து அவன் தன் கண்களை ஏறெடுத்த போது காலை வெயிலின் மெல்லிய கத கதப்பில் புறக் காவல் நிலையத்தின் எதிரே நின்ற மரம் தன் பசுங்கிளைகளிலும் தளிர்களிலும் ஒளிர ஆரம்பித்திருந்தது.

“ஸார் நீங்கள் கிளம்பலாம் – தேவையென்றால் கூப்பிடும் பொழுது வாருங்கள்” என்ற காவல் துறையின் அனுமதி கிடைத்த மறு விநாடி இவன் புறப்பட்டான். வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. துப்புரவு ஊழியர்கள் மருத்துவமனையின் வரவேற்பு ஹாலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வெள்ளை வெளேரென சீருடையில் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், கந்தையும் நோயுமாய் வியாதியஸ்தர்கள், பார்வையாளர்கள்; பாதியும் மீதியுமாய், எதிரும் புதிருமாய் காலை பரபரப்பில் அந்த மருத்துவமனை; வளாகத்தை விட்டு வெளியே வந்தான். சற்று தூரத்திலிருந்த இரயில் நிலையத்திலிருந்து ஒரு மின்தொடர்வண்டியின் ஹார்ன் ஒலிகேட்டது. இரயில் நிலையத்தை நெருங்கு முன் இரு திசைகளிலும் இனையாமல் நீண்டு, பரந்த வெளியைக் கேள்வி கேட்பது போல பாம்பாய் படுத்திருந்த தண்டவாளங்கள் – மீதியை மற்றுமொரு மக்கள் கூட்டத்திலும், காலத்திலும், களத்திலும் கலந்திட; கரைந்திட .. ..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *