கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை  
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 76,669 
 

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா பாவிகளும் ஆசைப்படுகிறார்கள். இது என் பிறப்பின் வரமா சாபமா?

“பரிகாரி”

பரிவு காட்டுவதைப் போன்ற நாடகத்தொனியில் அவன் அழைத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் கேளாதது போல வாளாவிருந்தேன். நானென்ன அவன் மனைவியா. அழைத்ததுமே போக.

மீண்டும் குரலுயத்தி அழைத்தான். “பரிகாரீஈஈஈஈஈஈஈஈ”

ஜனநடமாட்டம் அதிகரித்திருந்த முன்மாலைப் பொழுது. சந்தையே திரும்பிப் பார்த்தது. நான் திரும்பவில்லை.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். பைஜாமாவை தட்டி மணலை உதறினான். கையில் சவுக்கை எடுத்தவாறே என்னைப் பார்த்தான். இந்த அதட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கு நானா அஞ்சுவேன். அவனுடன் நின்றுகொண்டிருந்த தடியனை கண்டதுமே எனக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவன் அணிந்திருந்த கரும்பச்சை நிற குல்லா.

‘ப்பட்..’ என் முதுகை சவுக்கு முத்தமிட்ட சப்தம். அடிக்கடி வாங்கி பழக்கப்பட்டு விட்டாலும் ‘களுக்’கென்று ஒரு துளி நீர் கண்களில் கோர்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இந்த ஊடுருவும் பார்வைதான் எனக்கு பிரச்சினை. உடல் கூசுகிறது.

“திமிர் பிடித்தவள். யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அட்டகாசமானவள். ஆசைப்பட்டுதான் நல்ல விலைக்கு பிடித்தேன். நீயும் ஆசைப்பட்டு கேட்கிறாய். இருமடங்கு கூடுதல் விலைக்கு தருவதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?”, குல்லாக்காரனிடம் இவன் கறைபடிந்த பற்கள் பளிச்சென்று தெரிய, அசிங்கமாக இளித்துக்கொண்டே சொன்னான்.

புரிந்திருக்குமே? வணிகம். நான் மீண்டும் ஒரு முறை விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் பாரசீக நாட்டின் விலையுயர்ந்த பண்டங்களில் ஒன்றாக நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. எத்தனைமுறை கை மாற்றப்பட்டேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனால் என்னை வாங்கிய எவனுக்கும் நான் அடங்கிப் போனதில்லை. அது மட்டும்தான் என்னுடைய பெருமை. ‘அடங்கா குதிரைக்கு விலை அதிகம்’ என்று எங்கள் ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு. எனக்கு அது அப்பட்டமாய் பொருந்தும்.

நான் பிறந்த ஊரில் மருந்துக்கு கூட பசுமை கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாலைதான். எக்காலத்திலோ வறண்டுப்போன ஏரி ஒன்றுதான் எங்கள் ஊரின் அடையாளம். பாதங்கள் புதையுமளவுக்கு மென்மையான செம்மணல் ஏரிப்பரப்பு முழுக்க வியாபித்திருக்கும். இக்கரைக்கும் அக்கரைக்குமாக இலக்கில்லாமல் ஓடுவேன். மந்திரவாதி ஏவிவிட்ட பிசாசு துரத்துவதைப் போல அசுரவேகத்தில் ஓடுவேன். அதே வேகத்தில் திரும்ப வருவேன். செந்தூசி பறக்கும்.

தூரத்தில் இருந்து யாரேனும் அக்காட்சியை காண நேர்ந்திருந்தால் அமானுஷ்யமான ஓர் அனுபவத்தை உணர்வார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திண்மை என் நெஞ்சுக்கு கிடைத்தது அந்த இலக்கற்ற ஓட்டங்களால்தான். ஓடி ஓடி வலுவானது என் கால்கள். உரமேறியது உடம்பு. உறுதியோடு உபவிளைவாக வனப்பும் கூடியது. நானே சொல்லக்கூடாது. எங்கள் ஊரிலேயே அழகி நான்தான். என் அழகோடு போட்டிபோட யாருக்குமே அருகதை இல்லை. பேரெழில் என்கிற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால் நிச்சயமாக அது நான்தான். என் அழகை வருணிக்க பாரசீக மொழியில் வார்த்தைகளின்றி கவிஞர்கள் தடுமாறுவார்கள். அழகுதான் ஆபத்து. அழகின் விளைவு இரண்டு. ஒன்று அழகுக்கு மற்றவர்கள் அடிமை ஆவார்கள். அல்லது அழகு மற்றவர்களுக்கு அடிமை ஆகவேண்டும். துரதிருஷ்டவசமாக என் விஷயத்தில் இரண்டாவது நடந்தது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும். அந்த ஏரி முழுக்க நீலநீர் நிறைந்திருக்கும். அதில் நானும் என்னுடைய தோழிகளும் நேரம் காலம் இல்லாமல் விளையாடி களித்திருப்போம். கனவு. வெறும் பகற்கனவு. நிஜத்தில் எனக்கு தோழிகளே இருந்ததில்லை. தனிமை மட்டுமே நிழலுக்கு நிகரான என்னுடைய துணைவன். நான் அந்த ஊரில் இருந்தவரை ஒரு சொட்டு கூட மழை பொழிந்ததாக நினைவேயில்லை. மழைகூட கருணை காட்ட வக்கில்லாத ஓர் ஊரில் உயிரினங்கள் எத்தனை காலத்துக்கு ஜீவித்திருக்க முடியும். எல்லோரும் வேறு வேறு ஊர்களுக்கு இடம்பெயரும்போது நானும் இடம்பெயர்ந்தேன். பிடித்தது பீடை.

என்னை முதன்முதலாக பிடித்தவன் கொஞ்சம் நல்லவன்தான். இப்ராஹிம். கோதுமை விவசாயி. தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்பவன். முதன்முதலாக பச்சை நிறத்தை கண்ணில் கண்டதே இப்ராஹிமின் பரந்து வளர்ந்த வயலில்தான். எனது அழகை பற்றி அவனுக்கு அக்கறை எதுவுமில்லை. எனக்கு பரிகாரி என்று பெயர் சூட்டியவனே அவன்தான். வீட்டிலும், வயற்காட்டிலும் கொஞ்சம் ஒத்தாசை செய்யவேண்டுமென்று எதிர்பார்த்தான். காட்டுகுதிரையாய் திரிந்த எனக்கு வீட்டுவேலை என்ன தெரியும். அவனுடைய அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பதே எனக்கு அவஸ்தையாக இருந்தது. நல்ல மதுமயக்கத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்த ஓரிரவில் தப்பித்து ஓடினேன். ஓடப்பிறந்தவள் ஆயிற்றே நான். ஓரிடத்தில் தேங்க முடியுமா.

நான் எங்கெல்லாம் ஓடுகிறேனோ, அங்கெல்லாம் என்னை பிடிக்க எவனோ ஒருவன் தயாராக இருந்தான். எல்லாருமே பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை பிடித்த பேராசைக்காரன்கள். மனிதர்களைவிட அபாயகரமான ஜந்துகள் காட்டில்கூட கிடையாது. என்னை பார்த்ததுமே ஆசைபட்டு உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். எவனுக்குமே நான் அடங்கியதில்லை. இதனாலேயேதான் அடிக்கடி கைமாறி கொண்டிருந்தேன்.

“பரிகாரி நம்மிடம் இருக்கவேண்டியவளே அல்ல. பாரசீக மன்னரின் அரண்மனையை அலங்கரிக்க வேண்டியவள்” என் காதுபடவே நாலு பேர் பேசுவார்கள். பெருமையாகதான் இருக்கும். என்றோ ஒருநாள் காபூலுக்கும் வாழ்க்கைப்பட்டு தொலைக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொள்வேன்.

அந்த பச்சை குல்லாகாரன் என்னை காபூலுக்கு அழைத்துச்செல்லதான் வாங்கியிருக்கிறான். காபூல் சுல்தானின் அந்தரங்க ஆலோசகனாம் இவன்.

முட்டாள்களே! சுல்தான் என்ன பெரிய இவனா? நான் அவனுக்கும் அடங்கப் போவதில்லை. என்னுடைய இலட்சியம் இந்துஸ்தான். டெல்லி அரண்மனையை அலங்கரிக்கப் பிறந்தவள் நான். காபூல் எனக்கு சுண்டைக்காய்.

பச்சை குல்லா என்னை பட்டாடைகளால் அலங்கரித்தான். உடல் முழுக்க வாசனைத் திரவியங்களை தெளித்தான். இதுவரை எனக்கு யாருமே செய்யாத அலங்காரமாக, என்னுடைய வாலில் மல்லிகைச் சரத்தை சுற்றினான். ஆம், வாலில்தான்.

அன்பான வாசகரே! ஏன் குழப்பமடைகிறீர். நீங்கள் என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நானொரு குதிரை. மேலேயே இரண்டு முறை என்னை நான் குதிரை என்றுதான் சொல்லியிருக்கிறேன். மீண்டும் கவனமாக வாசித்துப் பாருங்கள். மனிதர்கள்தான் கதை சொல்ல வேண்டுமா. குதிரை சொல்லக்கூடாதா. சொல்லுகிறேன். கேளுங்கள்.

“இதுதானா காபூலில் இருந்து எனக்கு வந்து சேர்ந்திருக்கும் பிறந்தநாள் பரிசு?” டெல்லி பாதுஷா என்னை பார்த்ததுமே திருப்தி அடைந்தார் என்றுதான் அவரது இறுக்கம் தளர்ந்த சிரிப்பை பார்த்ததுமே எனக்கு தோன்றியது.

முதுகுவளைந்து பாதுஷாவுக்கு தொடர்ந்து சலாம் போட்டுக்கொண்டே இருந்த காபூல் மன்னரின் தூதன், என்னைப்பற்றி விளக்க ஆரம்பித்தான்.

“உயர்ஜாதி குதிரை பாதுஷா. புயல்வேகத்தில் பறக்கும். ஓராண்டு காலத்துக்கும் மேலாக கடுமையான பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறோம். போர்க்களத்தில் தன் உயிர்கொடுத்து நம்முயிர் காக்கும். காபூல் மன்னர் பெரும் பொருள் கொடுத்து வாங்கினார். இந்துஸ்தானின் பேரரசர்தான் இதில் ஆரோகணித்து பயணிக்க வேண்டும் என்று எங்கள் மன்னர் ஆணையிட்டுவிட்டதால், இதுவரை இந்த குதிரையின் மீது யாருமே ஏறியதில்லை. இது உங்களது பிரத்யேக சொத்து”

“அச்சா” என்று அவனை ஆமோதித்த ஆலம் ஷா, என்னை சுற்றி வந்து பார்க்கத் தொடங்கினார். உயர்ரக மஸ்லின் ஆடையை அணிந்திருந்தார். வழக்கமாக அரசர்கள் அணியும் தலைப்பாகை அன்று அவர் தலையில் இல்லை. ஏனோ ஒரு எளிமையான கதர் குல்லா அணிந்திருந்தார். அத்தர் நெடி அளவுக்கதிகமாய் வீசியது.

“அபாரம். ஆலம்ஷா அகமகிழ்ந்துவிட்டான் என்று போய் உன் மன்னனிடம் சொல். நினைவில் வாழும் என்னுடைய தந்தையார் பாதுஷா அவுரங்கசீப் இதே மாதிரி தோற்றம் கொண்ட குதிரையில்தான் கம்பீரமாக டெல்லியை வலம் வருவார். அவரது மகனான எனக்கும் அந்த பாக்கியம் அமைந்திருக்கிறது”

மன்னரை சுற்றி நின்றிருந்தவர்கள், அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தார்கள். லாயத்தில் திடீரென தீனமான, பரிதாபமான, எந்த விலங்கின் ஒலி என்று அடையாளம் காண இயலாத சப்தம் கேட்டது. இந்த சப்தம் காதில் விழுந்ததுமே மன்னர் எரிச்சலடைந்தார். லாயத்துக்கு பொறுப்பானவனை அழைத்தார்.

“இன்னும் அந்த சனியனை வெட்டிப் போட்டு புதைக்கவில்லையா? என்னுடைய ராஜாங்கத்தில் தகுதியற்றவர்களுக்கு இடம் இல்லை. இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு அவகாசம். இதே சப்தத்தை மீண்டும் ஒருமுறை கேட்டால் என்னுடைய வாள் உன் கழுத்தில் இருக்கும்” மன்னரின் முகத்தில் தவழ்ந்த சிரிப்பு மறைந்தது. கடுகடுவென மாறியது அவர் முகம்.

“இதோ பாதுஷா. பத்து நிமிடங்களில் முடித்துவிடுகிறேன்” லாயக்காரன் மன்னரின் ஆணையை கேட்டதுமே அரக்க பரக்க ஓடினான்.

“என்ன விஷயம் அரசரே?” நறுவிசாக உடையணிந்திருந்த இளைஞன் ஒருவன் கேட்டான். அவனுடைய தோரணையைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.

“சென்ற வாரம் வேட்டைக்கு போனபோது, ஒரு மானை துரத்த முயன்றேன். பாழாய்ப்போன குதிரை எங்கோ பள்ளத்தில் தெரியாத்தனமாக பாதம் பதித்து, காலை உடைத்துக் கொண்டது. இனி பழைய மாதிரி நலம் பெறாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு வீணாக அதையும் வைத்து அரண்மனை லாயத்தில் பராமரிக்க வேண்டுமென்று கொன்றுவிடச் சொன்னேன். மடையன், இன்னும் செய்யவில்லை” மன்னரின் குரலில் தெரிந்த அரக்கத்தனம் எனக்கு அருவருப்பு ஊட்டியது.

எந்த டெல்லியை என் கனவுதேசமாக நினைத்தேனோ, அதை ஆளுபவர்கள் இரக்கமற்றவர்கள் என்று தெரிந்ததும் மனக்கசப்படைந்தேன். திமிர் பிடித்த இந்த பேரரசன் மட்டுமல்ல. மொகலாய சாம்ராஜ்யத்தின் எடுபிடி எவனும் கூட என் மீது ஏறி அமர்ந்துவிடக்கூடாது என்று உடனடியாக ஒரு சபதம் மேற்கொண்டேன். கோபத்தில் முன்னங்கால் இரண்டையும் ஒன்றரை அடி தூரத்துக்கு தரைக்கு மேலாக தூக்கி பலமாக கனைத்தேன்.

மன்னன் என் அருகே வந்தான். இனி வந்தான்தான். வந்தார் அல்ல. உயிரின் அருமை தெரியாத, இரக்கம் என்கிற குணத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத இவனுக்கு எதற்கு மரியாதை?

“இரும்மா செல்லம். இதோ வந்துவிட்டேன். நகர் முழுக்க ஓர் உலா போகலாம். தங்கள் பாதுஷாவின் புதிய பட்டத்துக் குதிரையை டெல்லிவாசிகள் தரிசிக்கட்டும்” பட்டத்தரசியை கொஞ்சுவது மாதிரி என்னையும் கொஞ்சினான். எரிச்சலாக இருந்தது. முதுகை தடவிக் கொடுத்தான். பூச்சி ஊர்வதைப் போல அருவருப்பாக உணர்ந்தேன்.

“அடேய்! தயாரா?” மன்னன் யாருக்கோ குரல் கொடுத்தான்.

ஒருவன் ஓடி வந்தான். நீரெடுத்து வந்து என் உடல் துடைத்தான். இன்னொருவன் கையில் நிறைய பட்டுத்துணி. எனக்கு அணிவிக்க தொடங்கினான். ஒருவன் வாசனைத்திரவியங்களை என் உடல் முழுக்க பூசினான். முகத்தில் நான்கைந்து வண்ணங்கள் பூசி என்னை அலங்கரித்தார்கள். டெல்லி பாதுஷாவின் குதிரையாம். எல்லோரும் பார்த்ததுமே மூக்கில் விரல்வைக்க வேண்டுமாம்.

அமைதியாக எல்லா கூத்துகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன். மன்னன் ஓரமாக நின்று, முதலிரவு புதுப்பெண்ணை மாப்பிள்ளை ரசிப்பது மாதிரி என்னை ரசித்துக் கொண்டிருந்தான்.

முல்லா ஒருவர் வந்து ஏதேதோ மந்திரங்களை ஓதினார். என்னுள் ஏதேனும் சைத்தான் ஒளிந்திருந்தால், அதை அவரது மந்திரம் துரத்திவிடுமாம். சாம்பிராணி புகையெழுப்பி என் உடலை கதகதப்பாக்கினார்கள்.

எல்லாம் தயார்.

என் மீது ஆரோகணிக்க, கம்பீரநடை நடந்து வந்தான் மன்னன். என் கழுத்துக்கு கீழாக காலுக்கு அருகில் நீண்டிருந்த பட்டையில் அவன் கால் வைத்து, ஒரு எக்கு எக்கி, இன்னொரு காலை தூக்க முயற்சித்ததுமே ஒரு குலுக்கு குலுக்கி, முன்னங்கால்களை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றினேன். பாதுஷா தூரமாக போய்விழுந்தான். நீ இந்த வெறும் மண்ணுக்குதான் மன்னன். நானோ உலகக் குதிரைகளுக்கெல்லாம் பேரரசி. உன் திமிர் உனக்கென்றால், என் திமிர் எனக்கு.

சுற்றி நின்ற மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. பேரரசன் அவமானப்பட்டு எழுந்து நின்றான். அவனுக்கு அழுகையே வந்திருக்கும்.

“என்ன செய்வீர்களோ தெரியாது. இன்னும் பத்து நாளில் இந்த குதிரை எனக்கு அடங்க வேண்டும். தயார் செய்யுங்கள்” கரகரவென கத்திவிட்டு, திரும்பிப்பாராமல் நடந்தான்.

பிரதம அமைச்சர் என்னை கவலையோடு பார்த்துக்கொண்டே சொன்னார். “தளபதி! உடனடியாக செங்கிரிக்கு ஆளனுப்பி ஸ்வரூப் சிங்கை கையோடு அழைத்துவர ஆவன செய்யுங்கள். அடங்காத குதிரையெல்லாம் அவனுக்குதான் அடங்கும்”

“அப்படியே ஆகட்டும் அமைச்சரே. ஸ்வரூப்சிங்கின் மகன் தேஜ்சிங்கையும் உடன் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுகிறேன். அவன் அப்பனை மிஞ்சிய கெட்டிக்காரனாக வளர்ந்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்” என்றான் தளபதி. கட்டி வா என்றால் வெட்டி வருவான் போலிருக்கிறது. ஆர்வக்கோளாறு. அவசரக் குடுக்கை.

எவன் அவன் தேஜ்சிங்? வரட்டும். எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், நான் அனுமதிக்காமல் என் மீது எவனும் ஏற முடியாது. அப்பனையும், மகனையும் ஒரு வழி பண்ணாமல் அனுப்பமாட்டேன்.

“பரிகாரி, இதுதான் டெல்லி” அரண்மனை லாயத்துக்கு பொறுப்பான அமர்சிங் எனக்கு டெல்லியை சுற்றி காட்டிக் கொண்டிருந்தான். கடந்த பத்து நாட்களில் இந்நகரில் எனக்கு கிடைத்த பிரபலம் அளப்பரியது. பாதுஷாவையே ஏற்க மறுத்த குதிரையென்று முதலில் கோட்டையில் வசிப்பவர்கள் அசந்தார்கள். விஷயம் மெதுவாக நகர்வாசிகளுக்கும் பரவியிருந்தது. அமர்சிங்குக்கு ஏனோ என்னை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. என்னிடம் அன்பாக நடந்து கொண்டான். நிரம்பவும் பரிவாக நடத்தினான். கவனமாக பராமரித்தான். என்னை குதிரையாக நடத்தாமல், அவனுடைய நண்பன் மாதிரி பழகினான். சக மனிதர்களோடு பேசுவது மாதிரி, என்னோடும் பேசினான். அவன் பேசியது எனக்கு நன்றாகவே புரிந்தது.

லாயத்திலேயே அடைந்து கிடந்த என்னை இரண்டு நாட்களாக டெல்லியை சுற்றிக்காட்ட நடத்திக் கொண்டிருக்கிறான். நான் செல்லும் தெருவெங்கும் டெல்லிவாசிகள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்னை காட்டி, “அதுதான் பரிகாரி. இந்துஸ்தானத்திலேயே தலைசிறந்த குதிரை” என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பதேபூர் சிக்ரி அருகே நானும், அமர்சிங்கும் நடந்துக் கொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே இருந்த மக்களிடையே திடீர் பரபரப்பு. ஏதோ ஒரு இந்து கோயிலுக்கு உரிமையான கோயில்மாடு ஒன்று வெறிபிடித்தாற்போல ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைநிற காளை மாடு. நெற்றியில் நிறைய குங்குமம் அப்பிடப்பட்டிருந்தது. கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது. வீரர்கள் சிலர் அதை அடக்குவதற்காக, தங்களது ஈட்டியை கையில் ஏந்தியவாறு அதை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அதை கொன்று அடக்கும் வண்ணம், அதை நோக்கி ஈட்டியை எறிந்தார்கள். காளையோ லாகவமாக அதை தவிர்த்து, அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காளைமாட்டின் கூரிய கொம்புகளால், நான்கைந்து பேரின் குடல் உருவப்பட்டு விட்டது. தெருவெங்கும் ரத்தக்களரி.

என்னைவிட பெரிய அடங்காப்பிடாரியை அன்றுதான் கண்டேன். காளை என்னையும், அமர்சிங்கையும் நோக்கிதான் அதிவேகமாக வந்துகொண்டிருக்கிறது. பதட்டத்தில் அமர்சிங் என் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தான். போயும் போயும் ஒரு லாயக்காரன் என் மீது ஏறுவதா. வறட்டுக் கவுரவம் தலைக்கேறியது. அவனை ஏறவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். காளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் தப்பினால் போதுமென்று என்னை விட்டு விட்டு அமர்சிங் தெறித்து ஓடினான். பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நான், அந்த காளைக்கு வித்தியாசமாக தெரிந்திருக்க வேண்டும். என்னை குத்தி கிழிக்கும் ஆவேசத்தோடு நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோதி பார்த்துவிடலாமா. வெறிகொண்ட ஒரு காளையை, ஒரு குதிரையால் மோதி வென்றுவிட முடியுமா?

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கருநிற குதிரை, எனக்கும் காளைக்கும் இடையில் வந்து நின்றது. அதன் மீது நெட்டையாய் ஒருவன் ஆரோகணித்திருந்தான். ஒரு கையில் வாளும், மறு கையில் வேலுமாக கம்பீரமாக காட்சியளித்தான். நான் இருந்த இடத்திலிருந்து அவனுடைய பின்புறத்தைதான் காணமுடிந்தது. ஆவேசமாக வந்த காளை அவனை கண்டதும் தயங்கி நின்றது. குதிரையிலிருந்து வழக்கமான பாணியில் இறங்காமல், அப்படியே எகிறிக் குதித்தான். அச்சம் சிறிதுமின்றி காளையை நெருங்கினான். தன்னைப் பார்த்து பயப்படாமல் நெருங்கி வரும் வீரனை கண்ட காளைக்கு ஆவேசம் பன்மடங்கானது. முன்கால்கள் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொடூரமாக உறுமியது. புழுதி பறந்தது.

“இந்துஸ்தான் பேரரசரின் விசுவாசி, செங்கிரி கோட்டையை ஆளும் மாவீரன் ஸ்வரூப்சிங்கின் திருமகன் இளவரசன் தேஜ்சிங் ஆணையிடுகிறேன். அறிவுகெட்ட காளையே அடங்கிப்போ” என்று உரத்த குரலில் ஆணையிட்டான். அவன் மொழி காளைக்கு எப்படி தெரியும்? அவனை ஒரு வழியாக்கும் முடிவோடு ஆவேசத்தோடு நெருங்கி பாய்ந்தது. கூட்டம் ஓடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை காண முனைந்தது.

முதல் மோதலில் அவனுடைய வாளும், வேலும் தூரமாகப் போய் விழுந்தது. காளையின் இரண்டு கால்களுக்கிடையே நுழைந்து உயிர் தப்பினான். வேகமாக விலகி வாலைப்பிடித்து இழுத்து, பட்டென்று காளை மீதேறி, அதன் திமிலை வலுவாகப் பிடித்து, அவனுடைய கால்களை காளையின் உடலில் பின்னி அடக்க முனைந்தான். இப்படியும் அப்படியுமாக திமிறி காளை அவனை தூக்கியெறிந்தது. ஓரமாக விழுந்தவன் உடனே எழுந்தான். காளையே எதிர்ப்பார்க்காத கணத்தில் அதன் முன் நிறு இருகைகளாலும் கொம்பினை பிடித்தான். கால்களை தரையில் நன்றாக ஊன்றி, காளையின் தலையை அசையாதவாறு ஒரு நிமிடத்துக்கு அப்படியே நிறுத்தினான். கனத்த சரீரத்தை இடமும், வலமுமாக அசைத்துக்கொண்டிருந்த காளை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. அதன் கண்களில் மின்னிய கொலைவெறி அப்படியே மறைந்தது.

மக்கள் வாழ்த்தொலி முழங்க தொடங்கினார்கள். “இந்துஸ்தான் பாதுஷா ஆலம்ஷா நீடூழி வாழ்க. செங்கிரி இளவரசர் தேஜ்சிங் பல்லாண்டு வாழ்க”

சில நிமிடங்களுக்கு முன்னராக காட்டுமிருகமாக காட்சியளித்த காளை இப்போது பூனையாய் தேஜ்சிங்கின் கைகளுக்கு அடங்கியது. அதை தட்டி, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் இருந்து வந்த ஒருவர், அதன் கழுத்தில் கயிறு மாட்டினார். தேஜ்சிங்குக்கு நன்றி சொல்லிவிட்டு காளையை நடத்திச் சென்றார்.

ஆஹா இவனல்லவோ வீரன். இப்படியொரு வீரன் அல்லவா என்மீது ஏறி சவாரி செய்ய வேண்டும். முதல் பார்வையிலேயே எனக்கு தேஜ்சிங்கை பிடித்துவிட்டது. எங்கிருந்தோ அமர்சிங் ஓடிவந்தான். தேஜ்சிங்குக்கு வணங்கி வணக்கம் தெரிவித்தான். “இளவரசரே! இதோ நிற்கிறதே இதுதான் பரிகாரி. இதை அடக்கத்தான் பேரரசர் உங்களை இங்கே வரவழைத்திருக்கிறார்”

தேஜ்சிங் என்னை பார்த்தான். தீர்க்கமான பார்வை. அவனுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுதான் இருக்கும். தோள்கள் வலுவாக உரமேறி இருந்தது. கால்களும், கைகளும் நல்ல பருமனில் தூண்கள் மாதிரி இருந்தது. நெற்றியில் நீளவாக்கில் செந்தூரம் இட்டிருந்தான். பின்னங்கழுத்தில் முடி பரவலாக அடங்காமல் காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.

என்னிடம் வந்தவன் பரவசமாக என் முதுகை தொட்டான். தடவிக் கொடுத்தான். சிலிர்த்தது. வார்பட்டையில் கால்வைத்து, ஒரே மூச்சில் என் மீதேறினான். அமைதியாக, மகிழ்ச்சியாக அவனை அனுமதித்தேன். கடிவாளம் பிடித்து என்னை செலுத்த ஆரம்பித்தான். எதிர்காற்று முகத்தில் மோத, என்றுமில்லாத வேகத்தில் கோட்டையை நோக்கி பறக்க ஆரம்பித்தேன்.
“ஆண்டவா, நான் வெல்லவேண்டும் என்று உன்னிடம் பிரார்த்திக்கவில்லை. அதர்மம் வென்றுவிடக்கூடாது. எனவே தர்மத்தின் பக்கமாக நிற்கும் செஞ்சிப்படைகள், ஆற்காடுப்படைகளை வெல்ல நீ உத்தரவிட வேண்டும்” சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத சுவாமிகள் சன்னதியில் நின்று மனமுருக வேண்டினான் ராஜா தேசிங்கு.

தேசிங்கு வேறு யாருமல்ல. யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கிய தேஜ் சிங்தான். செங்கிரியை இங்கே எல்லோரும் செஞ்சி என்கிறார்கள். அந்த செஞ்சி கோட்டையின் ராஜா தேஜ்சிங்கை, சுருக்கமாக தேசிங்கு என்று அழைக்கிறார்கள். பரிவாதினி என்கிற என்னுடைய இயற்பெயரை மாற்றி, என்னை எல்லோரும் இங்கே ‘நீலவேணி’ என்று அழைக்கிறார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் அரங்கநாத சுவாமிகளின் உத்தரவு கிடைத்தபிறகே தேஜ்சிங் செய்வது வழக்கம். அதையொட்டிதான் போருக்கு தன் இஷ்டதெய்வத்திடம் அனுமதி வாங்க சிங்கவரம் வந்திருந்தான். அன்று இறைவன் என்ன நினைத்தானோ. தேஜ்சிங் இவ்வாறு பிரார்த்தித்ததுமே அவரது தலை பின்புறமாக திரும்பிக் கொண்டது.

அர்ச்சகர் பதறிவிட்டார். “மன்னரே! இந்த போரில் இறைவனுக்கு நாட்டமில்லை போலும். தன்னுடைய சிரசை திருப்பிக் கொண்டார். இம்முடிவு குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்”

அரசியும் கூட போர்வேண்டாம் என்று ராஜாவை வற்புறுத்தினாள்.

“முன்வைத்த காலை பின்வைக்க முடியாது ராணி. ஆற்காடு நவாப் சாதத் உல்லா கான், செஞ்சி மீது அநீதியாக போர் தொடுத்திருக்கிறார். எண்பத்தைந்தாயிரம் குதிரை வீரர்கள் நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் பக்கம் இருப்பதோ முன்னூற்றி ஐம்பது பேர்தான். நாம் வெல்லுவது நிச்சயமல்ல. நவாப் என்னை போரில் கொல்லலாம். ஆனாலும் வரலாறு நிரந்தரமாக வாழவைக்கும். திலகமிட்டு சிரித்த முகத்தோடு என்னை வழியனுப்பி வை தேவி” என்று கேட்டுக் கொண்டான்.

“மன்னர் மன்னா. இந்துஸ்தானின் பேரரசரின் அமைச்சருக்கு மகளாக டெல்லியில் பிறந்தவள் நான். உங்கள் வீரத்துக்கு பரிசாக என் தந்தை, எம்மை உமக்கு மணமுடித்து வைத்தார். விதியின் பயனாக இணைந்தோம். ஓரிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்ந்தோம். இந்த குறுகிய மணவாழ்க்கையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உயிராய் மாறினோம். போர்க்களத்தில் உங்கள் உயிர் பிரிந்தது என்று சேதி கேட்டால் அடுத்த நொடியே என் உயிரும் பிரியும். இது சத்தியம்!” என்று ஆரத்தித் தட்டில் எரிந்துக்கொண்டிருந்த கற்பூரம் மீது ராணிபாய் சத்தியம் செய்தாள். குங்குமம் எடுத்து தன் தாலியில் ஒற்றிக் கொண்டாள். அதே குங்குமத்தை கணவன் தேஜ்சிங் நெற்றியிலும் இட்டாள்.

“வீரவேல்! வெற்றிவேல்!” என்று முழங்கிக்கொண்டே உருவிய வாளோடு, ஓடிவந்து என் மீதமர்ந்தான் தேஜ்சிங். பாரசீகத்தில் பிறந்து, காபூலில் வாழ்ந்து, டெல்லிக்கு வந்து, கடைசியாக செஞ்சியில் பட்டத்து குதிரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என் மீதமர்ந்து ஏகப்பட்ட போர்களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறான் தேசிங்கு. இம்முறை வெற்றி சாத்தியமல்ல என்று அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரிகிறது. போரில் வெற்றியா முக்கியம். வீரம்தானே பிரதானம்? தேசிங்குவின் பெயர் வரலாற்றில் வாழ்ந்தால், இந்த நீலவேணியின் பெயரும் கூடவே வாழாதா?

கண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டும் நவாப்பின் வீரர்கள். கருநிற ஆடை அணிந்திருந்தார்கள். சமுத்திரமாய் விரிந்திருந்த நவாப்பின் படைகளுக்கு முன்பு சிறுகுட்டையாய் தேசிங்குவின் படைகள்.

“வீரர்களே! முன்னேறுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் வாளுக்கும் குறைந்தது பத்து ஆற்காடு தலைகள் மண்ணில் உருளட்டும். அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் செஞ்சி அடங்காது என்று ஆற்காடு நவாப்பு உணரட்டும்” வீரர்களை உரத்தக்குரலில் உற்சாகப்படுத்தினான் தேசிங்கு. அவனது உற்சாகம் வீரர்களுக்கும் தொற்றிகொள்ள போர் தொடங்கியது.

மனிதசுவர்களால் உறுதியாய் நின்றிருந்த நவாப்பின் சிப்பாய்களை ஊடறுத்து உள்ளே புகுந்தேன். எங்களை சுற்றி வளைத்த வீரர்களின் தலைகளை மண்ணுக்கு உரமாக்கினான் தேசிங்கு. அவனுடைய மனம் என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் வேகத்தோடு நான் இயங்கினேன்.

போர் தொடங்கி ஒரு மணி நேரம் ஆகியும், தேசிங்குவின் வீரப்படை சலிப்பில்லாமல் மோதிக்கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தலைகளை மண்ணில் உருட்டினாலும், போர் முடியவே முடியாது என்று தெரிந்திருந்தும் செஞ்சி வீரர்கள் மன உறுதியோடு போராடினார்கள். உயிரை இழந்தார்கள். தேசிங்கு மட்டுமே நானூறு, ஐநூறு பேரை வீழ்த்தியிருப்பான். ‘சுண்டக்காய் நாடு, நசுக்கி விடுகிறேன்’ என்று நவாப்பிடம் கிண்டலடித்துவிட்டு வந்த, ஆற்காடு தளபதி அசந்துப் போனான். தன்னுடைய வீரர்கள் தொடர்ந்து வீரமரணம் எய்திக்கொண்டே இருந்தபோதும், தனிமனிதனாக தேசிங்கு போராடினான். தானே நேரடியாக தேசிங்குவை எதிர்கொள்ள, பொறுக்கியெடுத்த இருபத்தைந்து பாதுகாவலர்களோடு களத்துக்கு வந்தான்.

சக்கரமாய் வட்டமாக நின்ற ஆற்காடு வீரர்களுக்கு நடுவிலே தேசிங்குவும், நானும் மட்டும்தான்.

“செஞ்சி மன்னரே! வீரத்தின் விளைநிலமே. உங்கள் வீரத்துக்கு முன்பாக நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உம்மை வீரத்தால் வெல்ல எங்களில் தனியொருவர் எவராலும் முடியாது. ஆனால் நாங்கள் நிறைய பேர். இப்போது நீங்களோ ஒருவர் மட்டும்தான். தயவுசெய்து ஆற்காடு நவாப்புக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் தளபதி.

“அச்சமா தளபதி? உயிரைவிடும் முடிவோடுதான் போர்க்களத்துக்கு வந்திருக்கிறேன். அநீதிக்கு அடிபணிந்தான் தேசிங்கு என்று யாரும் பேசிவிடமுடியாது. அதுதான் எனக்கு கிடைக்கப்போகும் வெற்றி. போரில் நீங்கள் வெல்லலாம். ஆனால் மக்கள் மனதில் தோற்கப்போகிறீர்கள். தயவுசெய்து உங்கள் ஆயுதங்கள் என் நெஞ்சில் பாய்ச்சுங்கள்” என்று சொல்லியவாறே தன்னை சுற்றி நின்றவர்களை எதிர்கொள்ள தயார் ஆனான் தேசிங்கு.

ஆற்காடு வீரர்களின் சக்கர வட்டம் சுருங்கியது. நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் என் கதையும் இந்த வரியோடு முடிந்தது.

பின்குறிப்பு :

* தேசிங்கு மறைந்த செய்தியை கேட்டதும் ராணிபாய் தீக்குளித்து மாய்ந்தாள். அவளுடைய நினைவாக ஒரு ஊருக்கு ‘ராணிப்பேட்டை’ என்று பெயர்வைத்தார் ஆற்காடு நவாப்.

* தேசிங்குவோடு வீரமரணம் எய்திய எனக்கும் தனியாக சமாதி வைத்து கவுரவித்தார்கள் ஆற்காடு வீரர்கள்.

* தேசிங்குவின் வீரத்தை போற்றும் வகையில் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள், அவன் கதையை வில்லுப்பாட்டாக தெருக்கூத்தாக இன்றும் தமிழகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

* பொய்க்கால் குதிரை என்று புதியதோர் கலை தமிழர்களுக்கு கிடைத்தது. பொய்க்கால் குதிரையில் வீற்றிருக்கும் ராஜா வேறு யார்? தேசிங்குதான். குதிரை? நீலவேணி என்கிற நான்தான்.

(தினகரன் வசந்தம் இதழில் நான்குவார தொடர்கதையாக வெளியான கதை)

– ஏப்ரல் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *