கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 7,397 
 

“ திஸ் இஸ் டூ மச் ” என்று வீறிட்டாள் மைதிலி. கையில் இருந்த செய்திப் பத்திரிகை எகிறிப்போய் விழுந்தது. கலவரத்துடன் எட்டிப் பார்த்தாள் சாவித்ரி. ‘ அறிவு ஜீவிகள் கிளப் ’ மொத்தமும் கூடத்தில் ஆஜராகியிருந்தது.

அறிவுஜீவிகள் என்றால் ஏதோ தலையில் கொம்பும், முதுகில் வாலும் முளைத்த ஆசாமிகள் அல்ல. பத்திரிகைக்காரர்கள் சித்திரம் போடுகிற மாதிரி அழுக்கு ஜீன்ஸும் கறுப்புத் தாடியுமாக உலவுகிற இளைஞர்கள் அல்ல. எல்லோரும் நடுவயதுக்காரர்கள். எம்.எஸ்ஸி., பி.எச்டி., என்று பெரிய படிப்புப் படித்து வெள்ளைச் சட்டை மாட்டிக்கொண்டு ஆபீஸ் போய் நாலு இலக்கம் சம்பாதிக்கிற அறிவுஜீவிகள்.

மேதைகள் என்று அவர்கள் தங்களைச் சொல்லிக் கொண்டதில்லை. அதுகூட சாவித்ரி வைத்த பெயர்தான். கல்யாணம் ஆன புதிதில் சம்பத் ஒரு தரம் சொன்னான். “தடித்தடியா வெறுமனே அரட்டைக்கு வருகிறார்கள் என்று நினைத்துக் கொள்ளாதே. அவனவன் ஜயண்ட்ஸ், புத்திசாலி, ராட்சன்கள், கிருஷ்ணன் – ஐ.ஐ.டி.-யில் பி.எச்டி., வசந்த் – பாங்க் அதிகாரி, நந்தா – கல்கத்தா பத்திரிகையின் சென்னை நிருபர். மின்னி – டாக்டர். மைதிலி – எக்னாமிக்ஸில் எம்ஃபில். ஒரு யுனெஸ்கோ திட்டத்தில் இங்கு வந்திருந்தாள். ஒரு நாள் உட்கார்ந்து பேசிப் பாரேன் ”

சாவித்ரி பேசிப் பார்த்தாள். சந்தேகமில்லை. எல்லோரும் சற்று முற்றிய புத்திசாலிகள். வெறும் புத்தகப் படிப்பாய் படித்து நலுங்கிப் போய்விடாமல், சுய சிந்தனையில் தீட்டித் தீட்டி மூளையைக் கத்தி போல் வைத்திருந்தார்கள். ஒரு பிரச்னையை எடுத்தால் வெறுமனே செய்தித்தாள் வாசிப்புப் போல் மேலோட்டமாய்ப் புரட்டிவிட்டு ஓய்ந்து விடுகிற ரகம் கிடையாது. அக்கக்காய்க் கழற்றுவார்கள். கட்சி கட்டிக் கொண்டு காமன் பண்டிகை நடக்கும். நாத்தனாரும் மதனியும் பேசிக் கொள்கிற மாதிரி இருக்கும். ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வார்கள். அதில் விரோதம் இராது. அவ்வப்போது புகழ்ந்து தள்ளுவார்கள் ; அதில் உண்மை இராது.

சில்லறைத் தட்டுப்பாடு, பஞ்சாப் பிரச்சினை, தக்காளி விலையேற்றம், சில்க் ஸ்மிதா… எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சிஸ்டம்தான் என்பதை அவர்கள் சாவித்ரிக்கு விவரமாகச் சொன்னார்கள். சமூக அமைப்பு மாறினால் ஒழிய நமக்கு விமோசனம் இல்லை என்று சத்தியம் செய்தார்கள். ‘ கம்யூனிஸ்டுகளோ என்று அவ்வப்போது சாவித்ரிக்குச் சந்தேகம் வரும். சம்பத்திடம் கேட்டபோது , ‘‘ சேச்சே ! இவர்கள் அறிவுஜீவிகள் ” என்று பதில் வந்தது. அன்றில் இருந்து சாவித்ரியும் அவர்களை அறிவுஜீவிகள் என்றே அங்கீகரித்துக் கொண்டாள். அறிவு ஜீவிகள் கிளப் அடிக்கடி கூடி, அத்தனை பிரச்சினைகளுக்கும் ஆணி வேர், அமைப்பு முறைதான் என்று நிரூபித்துவிட்டு சாவித்திரி வீட்டில் டீயும் சப்பாத்தியும் சாப்பிட்டுவிட்டுக் கலைவார்கள்.

“ உன்னை யாரோ கற்பழித்துவிட்ட மாதிரி ஏன் இப்படிக் கத்தறே ? ” என்று மைதிலியைக் கடிந்து கொண்டான் வசந்த். ‘ அவளை ஒருவன் கற்பழிக்கணும்னா அவனுக்கு எக்கச்சக்கமா கற்பனை வேணும் . ”

அவளுடைய ஆண்பிள்ளைத்தனமான உடம்பைப் பார்த்து முறுவலித்தாள் மின்னி.

“ ஸ்டாப் இட். ரேப்பிங்காவது பரவாயில்லை. அது ஒரு தனிப்பட்ட பெண் மீது ஒரு சில கணங்கள் நிகழ்த்தப்படும் உடல்ரீதியான வன்முறை. அநேகமாக அது ஆக்ஸிடெண்டல். ஆனால் இது ? இது … திஸ் இஸ் நத்திங் பட் மென்டல் வயலன்ஸ் ! அதுவும் இன்டென்ஷனல் ! பெண் சமூகத்தின் மீது அரசாங்கம் நிகழ்த்தும் வன்முறை ! ”

நந்தா, மின்னி, வசந்த் எல்லோரும் அவள் காட்டிய செய்தியைப் படித்தார்கள். இரண்டு சக்கர வாகனங்களின் பின்னால் அமரும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னது செய்தி. “ சமூகத்தில் ஆண் சமூகம், பெண் சமூகம் என்று உண்டா என்ன ? ”

“ உயிர்களில் ஆணென்றும் பெண்ணென்றும் உண்டா என்ன ? ” – பதிலுக்கு இரைந்தாள் மைதிலி.

“ ஏய் ! புரிந்து கொள். இது உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் சலுகை ! ”

“ சலுகை எதற்கு ? சாவதற்கா ?

“ உன்னால புத்திசாலித்தனமாகத்தான் பேச முடியாது. புரியும்படியாகக் கூடவா பேசக்கூடாது ? ”

“ விபத்து நடக்கும்போது பெண்கள் செத்தால் பரவாயில்லை. ஆண்கள் மட்டும் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் நினைப்பது உனக்கு புரியவில்லையா ? ஒன்று நீ முட்டாளாயிருக்கு வேண்டும் அல்லது ஒரு மேல் ஷாவனிஸ்ட் ஆக இருக்க வேண்டும், அரசாங்கத்தைப் போல ! ” “ என்னைத் திட்டு ! உன் ஜென்மம் சாபல்யமாகும். அரசாங்கத்தை ஏன் சபிக்கிறாய் ? அவர்கள் உங்களுக்குத் தந்திருக்கும் சலுகைகள் எத்தனை ? ”

“ எத்தனை ? எனக்கும் தான் சொல்லேன் ? ”

“ பஸ்ஸில் இருந்து பல்கலைக்கழகம் வரை எல்லாம் தனி. இப்ப புதுசா பெண்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு பல்கலைக்கழகம் வேறு ? ”

“ அது எங்களுக்குச் செய்யப்பட்ட இன்னொரு இன்சல்ட் ! ”

“ அப்படி என்ன அகௌரவம் ? அது வீக்கர் செக்ஸ் என்பதன் சலுகை . ”

“ உங்களோடு ஓடுவதில் நாங்கள் பலவினர்களாக இருக்கலாம். அது உடம்பின் அமைப்பு : ஆனால் படிப்பதில் அல்ல, எந்த ஆணையும் எங்களால் அறிவில் ஜெயிக்க முடியும். பத்தாம் வகுப்பு ரிசல்ட்களைப் பார். முதல் இடம் எல்லாம் பெண்கள் ! ”

“ இந்த வலுவான மூளைகளைப் பாதுகாப்பானேன் என்றுதான் ஹெல்மெட் வேண்டாம் என்று சொல்லி விட்டார்களோ என்னவோ ? ”

மைதில் நெற்றிக் கண்ணைத் திறக்க இருந்தபோது மின்னி குறுக்கிட்டாள்.

“ பதறாதே மைதிலி ! ஹெல்மெட்டுகளால் சாவை தவிர்த்துவிட முடியாது ! ”

“ அரசாங்க வைத்தியர்கள் அப்படித்தானே சத்தியம் செய்கிறார்கள் ? ”

“ அது அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். அபிப்பிராயங்கள் நிரூபணம் ஆகாது. உடம்பிலேயே கனமாக பகுதி தலை … ”

“ உன்னை மனத்தில் வைத்துக் கொண்டு சொல்கிறாயா ? ”

“ உஷ் ! உடம்பில் கனமாக பகுதி தலை. அதில் மேலும் எடை ஏற்றினால், பாலன்ஸ் தவறும்போது வேகமாகத் தரையில் மோதும், நியூட்டன் விதியை நியூராலாஜிஸ்ட்கள் மாற்றிவிட முடியாது. ஹெல்மெட்டே ஆளைக் கொன்ற வரலாறுகள் உண்டு, ஸ்வீடன் ஆராய்ச்சிகள், கர்நாடகா புள்ளி விவரங்கள் … ”

“ தாங்யூ டாக்டர் ! ஆனால் விவாசம் அது இல்லை. ஆணுக்கு கட்டாயம் என்று சொல்லும் அரசாங்கம், எப்படிப் பெண்ணுக்குச் சலுகை தர முடியும் ? சாதாரண லாஜிக் – அது கூடப் பெரிய வார்த்தை – அடிப்படையான ‘காமன் சென்ஸே ’ உதைக்கிறதே ! ”

“ இதைப் படித்துவிட்டு நான்கூட கேஸ் போடலாம் என்று நினைத்தேன் ” என்றான் சம்பத் சாவகாசமாக.

“ கமான் ! தட்ஸ் தி ஸ்பிரிட் ! ” என்று குதித்தாள் மைதிலி.

“ இரு … இரு… நீ நினைக்கிற கோணத்தில் நான் இதைப் பார்க்கவில்லை. இது பாரபட்சம் என்று நான் நினைக்கிறேன். கிளியர் கேஸ் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் ! ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்பது நம் அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது . ”

“ ஸோ , ஒரு சட்டம் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு, தர்க்க முறைகளுக்கு உடன்பட்டதாக இருந்தால் மாத்திரம் உங்களுக்குப் போதுமானது. அப்படித்தானே ? ” – வசந்த் குரலில் கோபம் இருந்தது.

“ வேறு எப்படி இருக்க வேண்டும் என்கிறாய் ? ”

“ இந்த மாதிரியான சட்டம் கொண்டு வருவதற்கு அரசுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ! ”

“ ஏன் இல்லை ? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. ”

“ நான் மெஜாரிட்டி பற்றிப் பேசவில்லை. மொராலிட்டி பற்றிப் பேசுகிறேன். புத்தக ரீதியாக உரிமை இருக்கலாம். தார்மீக ரீதியாக உண்டா ? ”

“ இல்லை என்று எப்படி … ? ”

“ விபத்துகளில் பாதி, மோசமான சாலைகளால் நிகழ்கின்றன. நான் மட்டும் சொல்லவில்லை. புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அநேக கோர்ட் தீர்ப்புகள் சொல்கின்றன. ஏன், அரசாங்கமே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய வழக்குகளில், தன் தரப்பு நியாயமாக இதைச் சொல்கிறது . ”

“ அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? ”

“ ஏன் இல்லை ? சாலைகளை மோசமான நிலையில் வைத்திருப்பது யார் ? ஒரு விபத்து நிகழ்ந்தால் போலீஸ் என் மீது கேஸ் போடும். கார்ப்பரேஷன் மீது போடுமா ? கமிஷ்னரை கோர்ட்டுக்கு இழுக்குமா ? சாலைகளை ஒழுங்காக பராமரிக்க முடியாத சர்க்காருக்கு, ஹெல்மெட்டைக் கட்டாயபடுத்தத் தார்மீக உரிமை எங்கே இருக்கிறது ? ”

“ நம்முடைய கார்ப்பரேஷன்கள், டெலிபோன்கள், பஸ் கட்டணங்கள், விரி விதிப்பு முறைகள், பத்திரிகைகள் எல்லாம் ஒழுங்குக்கு அப்பாற்பட்டவை என்பது உனக்குத் தெரியாதா ? ”

“ அமைச்சர்களை ஏன் விட்டுவிட்டாய் ? ”

“ இரண்டு கல்யாணம் செய்து கொண்டவர்கள் அரசு ஊழியனாகப் பணி செய்ய முடியாது என்பது பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விதி. ஆனால், இரண்டு பெண்டாட்டிகாரர்கள் அமைச்சர்களாக இருக்கலாம்.

“ நேற்று பேப்பரில் பார்த்தேன். ஒரு அமைச்சரின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தை ! இரண்டு போதுமே என்ற அரசு விளம்பரங்கள் … ? ”

“ மனைவிகள் குறித்துச் சொன்னதில்லை அது ! ”

“ இரண்டு குழந்தைகள் போதுமே என்று அறுவைக்கு ஆள் பிடிக்க ஆசிரியர்களை ஏவுவது இவருடைய அரசாங்கம்தான் . ”

“ எத்தனை படித்தும் முட்டாள்தனத்தை ஜெயிக்க முடியவில்லை என்றால் உங்களை என்ன செய்யலாம் ? ” என்றான் இத்தனை நேரம் பேசாதிருந்த பத்திரிகையாளன் நந்தா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *