கடைசி அத்தியாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 3,757 
 

(இதற்கு முந்தைய ‘ஆறாத வடு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ராஜாராமன் இந்த மாதிரி சொன்னதும் எனக்குச் சிறிது ஏமாற்றமாகவே இருந்தது.

அதே நேரம் அவனுடைய நிலைமையும் புரிந்தது. அது மட்டுமில்லை; அவனால் உடனே மட மடவென்று சொல்லிவிடக் கூடியவை, வெறும் தகவல்கள் என்கிற மாதிரிதான் இருக்க முடியும். வெறும் தகவல்கள் மட்டும் போதுமா எனக்கு?

தகவல்களுக்கு மேற்பட்ட உணர்வு இயக்கங்களையும் நான் முற்றிலுமாக அறிந்து கொள்ள வேண்டாமா? அதுதானே ஒரு படைப்பாளிக்கு அழகு? அதனால் ராஜாராமன் சொன்னதை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன்.

என்னை அவன் ஹோட்டலில் ட்ராப் பண்ணினான். என்னைப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றுக்கொண்ட ஆற்றாமை அவனின் முகத்தில் தெரிந்தது. கொஞ்சம் வேதனையான குரலில் ராஜாராமன்,

“தொழிலையே வாழ்க்கையாக்கிகிட்டு ஓடிட்டு இருக்கிறதுல எத்தனையோ அற்புதமான விஷயங்களை எல்லாம் மிஸ் பண்றோம்னு பல நேரங்களில் தோணும். உங்களையும் இப்ப அதே மாதிரி மிஸ் பண்றேன் அண்ணாச்சி. அதையும் விட ரொம்ப நான் மிஸ் பண்றது உங்களோட கேள்விக்கு நான் நேருக்கு நேரா என் பதிலை பேசித் தள்ற எமோஷனல் மூமென்ட்… பட் எனக்கு வேற வழி கிடையாது. நான் போயாகணும். நீங்களும் போயிட்டு வாங்க அண்ணாச்சி. இன்னொரு தடவை எங்க வீட்லயே தங்கற மாதிரி வாங்க… அப்ப மதினியையும் மறக்காம கூட்டிட்டு வாங்க.”

என்னை இறக்கி விட்டவுடன், மீண்டும் பெய்யத் தொடங்கியிருந்த கோழிக்கோடு மழையில் ராஜாராமனின் படகு கார் ஆடி அசைந்து கிளம்பிச் சென்றது.

என் வாசக நண்பர் முகம்மது அன்ஸாரி என்னை விடை தந்து அன்புடன் அனுப்பி வைக்க, அன்றே நான் சென்னை கிளம்பிவிட்டேன். கோழிக்கோட்டின் ஈரச் சதுப்பிலிருந்து வந்த பிறகுதான் சென்னை வெம்மையின் கடுமை தெரிந்தது.

ஒவ்வொரு நாளுமே நான் ராஜாராமனின் கடிதத்திற்க்காகக் காத்திருந்தேன்.

மனதை ஈர்த்துவிட்ட தொடர்கதை ஒன்றின் கடைசி அத்தியாயத்திற்காகக் காத்திருக்கும் வாசகனின் மன நிலையோடு நான் காத்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். அதிர்ச்சித் தரும்படியான எந்தத் திருப்பமும் அந்தக் கடைசி அத்தியாயத்தில் இருந்துவிடக்கூடாது. அப்படி எதுவும் இருந்துவிட்டால் கோழிக்கோட்டில் ராஜாராமனைச் சந்தித்துவிட்டு வந்ததில் ஏற்பட்டிருத்த மனநிறைவும், மனநெகிழ்வும் சிதைந்து உடைந்து போய்விடும். இந்தப் பயம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அப்படி எதுவும் ஆகிவிடாது என்கிற நம்பிக்கையும் எனக்குள் இருந்தது.

சரியாகப் பத்தாவது நாள் ராஜாராமனிடம் இருந்து கடைசி அத்தியாயம் என்ற கடிதம் கொரியர் மூலம் வந்து சேர்ந்தது. வெள்ளை நிற நீளக் கவரில் அச்சடித்த மாதிரி என் பெயரும் முகவரியும் அழகாக எழுதப் பட்டிருந்தன. இவ்வளவு அழகான கையெழுத்து கண்டிப்பாக ஒரு ஆணின் கையெழுத்தாக இருக்க முடியாது என்ற எண்ணத்தோடு ஒட்டப் பட்டிருந்த வெள்ளைக் கவரை பத்திரமாகப் பிரித்தேன்…

முதலில் மேலாக ஒரு சிறிய காகிதத்துண்டு இருந்தது. அதில் சில வரிகள் மட்டுமே இருந்தன. படிக்கவே முடியாதவாறு ஒரு கோழிக் கிறுக்கல் மாதிரி இருந்த அந்த வரிகளை ராஜாராமன் எழுதியிருந்தான். ஒரு டாக்டரின் கையெழுத்து ஆயிற்றே!

அடுத்து இருந்த நீண்ட பெரிய பேப்பரில் அழகான அச்சடித்த மாதிரியான வரிகளை ராஜாராமனின் மனைவி பொற்கொடி எழுதியிருந்தாள். நான் சிறிதும் எதிர்பாராத விஷயம் இது.

முதலில் ராஜாராமனின் மோசமான கையெழுத்தில் இருந்த சின்ன துண்டுக் காகிதத்தைப் படித்தேன்.

“நிறைய நேரங்களில் என்னுடைய கையெழுத்தை என்னாலேயே படிக்க முடியாமல் போய்விடும். கடிதங்கள், அதுவும் தமிழில் எழுதிப் பழக்கமே கிடையாதபடியால் எழுத ரொம்ப சிரமப்பட்டேன் அண்ணாச்சி. பல தடவைகள் அடித்து அடித்து எழுத முயற்சித்தேன். அதை அப்படியே அனுப்ப மனம் வரவில்லை. அதனால் என் மனைவி பொற்கொடி என் கடிதத்தைப் பார்த்துப் பார்த்து அப்படியே அவளுடைய கையெழுத்தில் அழகாகக் காப்பி எடுத்துக் கொடுத்தாள். படித்துவிட்டு உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை எனக்கு எழுதுங்கள். மறுபடியும் உங்களைச் சீக்கிரமே சந்திப்பதற்கு ஆவலாக[SK1] இருக்கிறேன்.”

பொற்கொடி எழுதிய கடிதத்தை பரபரப்புடன் படித்தேன்:

“அண்ணாச்சி, நாச்சியப்ப மாமாவைப் பார்க்க வருவதற்கு முன்; அதற்குப் பின் என என் வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம்…!

நான் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே எனக்கு ஒரு அழகான மனைவி வேண்டும் என்கிற அளவிட முடியாத ஆசை என் மனதில் வந்துவிட்டது. அப்படி அழகானவளை மனைவியாக அடைந்த ஆண்கள் அனைவரும் எனக்கு லட்சிய ஆண்களாகத் தெரிந்தார்கள்! இன்றளவும் அழகான பெண்களுக்கு கிடைக்கும் வரவேற்பே தனிதானே!

அதேபோல நம் சமுதாயத்தில் ஒரு விஞ்ஞானிக்கு கிடைக்க முடியாத மரியாதையும் அங்கீகாரமும் ஒரு பெரிய டாக்டருக்கு சின்னக் கஷ்டம் கூட இல்லாமல் கிடைத்து விடுகின்றன. ஒருவேளை அதனாலேயேகூட இருக்கலாம், டாக்டர் படிப்பு அழகான பெண்ணை மனைவியாகப் பெற வேண்டும் என்ற என் விசையை அதிகமாக்கிவிட்டதற்கு…

படிப்பு முடிந்து டாக்டர் என்ற பெயரும் கிடைத்த பின் இந்த ஆசை இன்னும் உயரமான மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் அவசரம் என் மனதில் கிஞ்சித்தும் இல்லை. சில வருடங்களாவது டாக்டர் வேலையில் நான் சம்பாதிக்க வேண்டியிருந்தது.

இந்த நேரத்தில்தான் வீட்டில் நாங்கள் எதிரே பாராத சம்பந்தம் எங்களைத் தேடி வந்தது. என் மாமனார் திரு.வேணுகோபால் பொற்கொடியை எனக்குத் திருமணம் செய்விப்பதாகச் சொல்லி எங்கள் வீட்டிற்கு வந்தார்.

அவருடைய மகள்கள் ஐந்து பேருமே அழகாக இருக்க மாட்டார்கள்; கறுப்பாகவும் குண்டாகவும் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதனால் நான் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை. உடனே அம்மா நாச்சியப்ப மாமாவிடம் விஷயத்தைக் கொண்டுபோய் விட்டாள். எனக்குப் புத்திமதிசொல்லி கல்யாணத்துக்கு என்னைச் சம்மதிக்க வைப்பதாக நாச்சியப்ப மாமா அம்மாவிற்கு வாக்குக் கொடுத்து அனுப்பி வைத்தார். எனக்கு அவரைப் போய்ப் பார்க்க விருப்பம் கிடையாது.

ஆனால் என் அம்மாவின் ஆசைக்காகப் போனேன். எனக்கு மனைவியாக வருபவள் ரொம்ப அழகியாக இருக்க வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தை நாச்சியப்ப மாமாவிடம் ரொம்ப இயல்பாகத்தான் சொன்னேன். அப்போதுதான் ஈனத்தனமான அந்த அட்வைஸ் அவரின் வெட்கங்கெட்ட வாயில் இருந்து வந்தது.

என் மனதில் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சியைத் தந்த தரம் கெட்ட அட்வைஸ் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். அந்த அட்வைஸை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அண்ணாச்சி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *