உன் மகன் கடத்தப்பட்டான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 5,369 
 

சூரியன் மறைய தொடங்கும் நேரம் ரங்கசாமியின் வியாபார அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில் சுகமாக உட்கார்ந்து கொண்டிருந்த ரங்கசாமி தன் பெர்சனல் டெலிபோன் மணி அடிக்க, போனை எடுத்து ஹலோ.சொல்லி வாய் மூடுவதற்குள் இடி போல ஓசை ஒன்று கேட்டது, காதை உடனே மூடிக்கொண்டார். ஒரு நிமிடம் கழித்து மீண்டும் போனை காதில் வைக்க அதே சத்தம் கொஞ்சம் தொலைவில் கேட்டது போல உணர்ந்தார். ஹலோ இப்பொழுது சத்தமாய் கூப்பிட ஒரு நிமிட அமைதி..ஹலோ யார் பேசறது? எரிச்சலுடன் சே.. யார் பேசறது?

இப்பொழுது இரண்டு பேர் பேசிக்கொள்வது கேட்டது, ஹலோ, யார் பேசறது? இந்த கேள்விக்கு முரட்டுத்தனமாய் ஒரு குரல் உன் பையன் பேரு மணிகண்டனா? குரலின் அதிர்ச்சியை விட பையனை பற்றி கேட்டது அதிர்ச்சியாய் இருந்தது ஹலோ நீங்க யாருங்க?அதை முதல்ல சொல்லுங்க? முட்டாள் நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு உன் பையன் பேரு மணிகண்டனா?

ஆமா..இப்பொழுது ரங்கசாமியின் குரல் தேய்ந்து போய், எதுக்கு கேக்கறீங்க?.உன் பையன் ஆ.வி.ஏஸ்.ஸ்கூல்லதானே படிக்கிறான். இப்பொழுது பயமே வந்து விட்டது, ரங்கசாமிக்கு, ஆமாங்க, அங்கதான் படிக்கிறான், அவனுக்கு என்னங்க? இந்நேரம் ஸ்கூலு விட்டு வீட்டுல இருக்கணுமே?

எதிரில் மெல்ல சிரிப்பொலி, அப்ப நாங்க கடத்துனது கரெக்ட்டுதான். கடத்தலா !

ஹலோ, நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? இப்ப என் பையனை பத்தி எதுக்கு விசாரிக்கறீங்க, சும்மா கடத்தல் அது இதுன்னு பேசறீங்க? அடுக்கடுக்காய் கேள்விகள் பதட்டத்தில் அவர் வாயிலிருந்து வந்தன.

முட்டாள் உன் பையனைத்தான் இப்ப கடத்தி வச்சிருக்கோம், இப்ப போனை வச்சிடுறேன். இன்னும் அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடுறேன். நீ போலீசுக்கு போறீயான்னு

எங்க ஆளுங்க உன்னை வாட்ச் பண்ணுவாங்க, நீ போலீசுக்கு போகலையின்னு தெரிஞ்சாத்தான் அடுத்த அரை மணி நேரம் கழிச்சு உன் கூட பேச்சு வார்த்தை வச்சுக்குவோம். இல்லையின்னா, உன் பையனோட உடம்பு ஆறோ, குளத்துலயோ கிடக்கும். பட்டென

தொடர்பு அறுந்து போனது.

ரங்கசாமி பதட்டமானார், ஐயோ பையனுக்கு என்ன? உடனே ஸ்கூலுக்கு போன் போட்டார், பதட்டத்தில் கை நடுங்கியது, இவருடைய அவசரத்துக்கு எதிர்பக்கத்திலிருந்து

பதில் வரவே இல்லை. மீண்டும் ஒரு முறை போன் அடிக்க இரண்டு நிமிடத்தில் யாரோ

போனை எடுத்து ஹலோ என்றார்கள்.

ஆ.வி.ஏஸ் ஸ்கூல்தானே, பதட்டமாய் இவர் கேட்க ஆமா நீங்க யாரு பதில் சாவகாசமாய் வந்தது. முதல்ல நீங்க யார் பேசறீங்க? ரங்கசாமியின் அதட்டலுக்கு எதிர்ப்புறம் பயத்துடன் வாட்ஸ்மேன் பேசறேன் சார்? எல்லோரும் போயிட்டாங்க சார், இப்பத்தான் பிரின்ஸ்பாலும் போனாங்க, நான் வகுப்பு எல்லாம் பூட்டிகிட்டு இருந்தேன், போன் மணி அடிச்ச சத்தம் கேட்டு ஓடி வந்தேனுங்க? நீங்க யாருங்க சார்?

ஸ்கூல் பஸ் எல்லாம் போயாச்சா? எல்லாம் போயாச்சுங்க சார், எட்டாவது படிக்கற பையன் மணிகண்டன் உனக்கு தெரியுமா? யாரு சில நிமிடங்கள் யோசிப்பது புரிந்தது,

ஓ கொஞ்சம் உயரமா இருப்பானுங்களே, நல்ல சிவப்பா இருப்பானுங்களே, ஆமா அவனேதான், அவன் ஸ்கூல் பஸ்ல ஏறினதை நீ பார்த்தியா? இல்லேங்கலே சார், நான் அப்ப பின்னாடி தோட்டத்துல இருந்தேன், சட்டென அமைதியானார் ரங்கசாமி.ஹலோ ஹலோ கூப்பிட்டு பார்த்த வாட்ச்மேன் எதிர்புறமிருந்து எந்த பதிலும் வராத்தால் போனை வைத்தான்.

வீட்டுக்கு போன் பண்ணலாம் ! ஆனால் மைதிலி இருப்பாளா? இன்று மாலை லேடீஸ் கிளப் மீட்டிங்க என்று சொன்னாள், அங்கு போன் போட்டு விசாரிக்கலாம் என்றால் கோபித்து கொள்வாள். சரி வீட்டுக்கே போன் போடுவோம், எப்படியும் வேலைக்காரர்கள் இருப்பார்கள், யாராவது எடுத்தால் பரவாயில்லை, இல்லை மணிகண்டனே இருந்தாலும் போனை எடுத்து பேசுவான்.

போன் அடித்துக்கொண்டேதான் இருந்தது. சே இந்த வேலைக்காரர்கள் எங்கு போய் தொலைந்தார்கள்? அவ்வளவு பெரிய வீட்டில் என்னதான் செய்கிறார்கள் இவர்கள். ஒரு சமையல்காரன், இரு வேலைக்காரன் பற்றாகுறைக்கு தினமும் வந்து துணி துவைத்து தேய்த்து கொடுக்க ஒருவன். ஆனால் ஒரு போனை எடுக்க அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. கோபம் கோபமாக வந்தது. மணிகண்டன் வந்திருந்தால் போனை எடுப்பான்.

மணி மணி இப்பொழுது மணிகண்டன் அவர் மனதுக்குள் கண் முன்னால் நின்றான். உனக்கு என்னாச்சோ? ஐயோ மகனே, உன்னை பெற்று ஆறு வயதில் கையில் கொடுத்துவிட்டு போய்விட்ட உன் அம்மா இருந்திருந்தால் இந் நேரம் துடித்திருப்பாளே. எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பாயேடா, நான் என்ன சொன்னாலும் எதிர்த்து ஒரு வாய் பேச மாட்டாயே? உன் சித்தியை அம்மா ஸ்தானத்தில் வைத்துக்கொள் என்று ஒரு தடவைதானே சொன்னேன். இதுவரைக்கும் மைதிலிக்கு எதிராக பேசியிருப்பானா? இப்பொழுது என்ன செய்வது? மனம் பதை பதைக்க அடுத்த போனுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.போலீசுக்கு போகலாமா என்று ஒரு பக்கம் மனம் துடித்தாலும், அடுத்து போன் செய்பவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்கலாம் என்று முடிவு செய்தார்.

சரியாக அரை மணி நேரத்தில் மீண்டும் மணி அடிக்க பாய்ந்து சென்று எடுத்தார்.

ஹலோ பதட்டமாய் கூப்பிட எதிர் முனையில் சிரிப்பு, எல்லா இடத்தையும் சோதித்திருப்பாயே? குரலில் எகத்தாளம். பளீஸ் நீ யார்? என் மகனை எதுக்காக கடத்தி போய் வைத்திருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும்? எனக்கு இருப்பது ஒரே பையன், தயவு செய்து அவனை ஒண்ணும் பண்ணிடாதே. குரல் கமுற கெஞ்ச ஆரம்பித்தார்.

ஏன் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி இரண்டாம் குழந்தை பெத்துக்கறதுதானே, குரலில் மீண்டும் எகத்தாளம். ஐயோ இவன் யார்? தயவு செய்து என்னை கஷ்டப்படுத்தாதே, என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதுன்னு டாக்டர் சொல்லிவிட்டாங்களே !.

அவங்க சொல்லிவிட்டார்களா? இல்லை உன் மனைவியே குழந்தை வேண்டாம் என்று தடுத்து விட்டாளா? இந்த கேள்வி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. நீ கண்டிப்பாக என் குடும்பத்தை பற்றி தெரிந்தவனாகத்தான் இருக்க வேண்டும். தயவு செய்து சொல் நீ யார்?

என் மகனை கடத்தி வைத்து உனக்கு என்ன பயன்?

முட்டாள் உன்னுடைய சொத்துக்களுக்கு ஒரே வாரிசு உன் பையன்தான். நான் நினைத்தால் இப்பொழுதே அவனை முடித்து விட முடியும். ஆனால் பொன் முட்டையிடுகிற வாத்தை கொல்வதற்கு நான் என்ன முட்டாளா?

நான் சொல்கிறபடி செய்வதாக சொன்னால் உன் பையனை ஒரு கீறல் கூட இல்லாமல் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். போலீசுக்குத்தான் போவேன் என்றால் தாராளமாக போ, முடிவில் நான் சொன்னது போல ஆறோ, குளமோ எங்காவது உன் பையன் உடம்பு கிடக்கும்.

ஐயோ அப்படி எல்லாம் செஞ்சுடாதே, நீ என்ன சொன்னாலும் செஞ்சுடறேன், குரலில் அழுகை எட்டி பார்த்தது.

பெருத்த சிரிப்புடன் எதிர்முனையில் சிரிப்பு வந்தது. நான் சொன்னால் உன்னால் செய்ய முடியுமா? குரலில் கிண்டல் தொனித்த்து.

இப்பொழுது ரங்கசாமிக்கு தலை சுற்றியது. இவன் யார்? என் மகனை கடத்தி வைத்துக்கொண்டு என்ன செய்கிறான். தன்னுடைய பிசினஸ் மூளையை கசக்க ஆரம்பித்தார்.

என்ன பேச்சையே காணோம்? இப்பொழுது உன் குறுக்கு புத்தி யோசித்து கொண்டிருக்குமே? இவன் யாரென்று. திடீரென்று குரலில் கடுமை ஏறியது. இங்கு பார்

நான் சொல்லப்போகும் காரியங்களை செய்ய முடியுமா? முடியாதா?

சரி செய்கிறேன், என் மகன் என்னிடம் பேச வேண்டும், அவன் பேசினால்தான் நீ சொன்னதை செய்ய முடியும்.

ஹா ஹா சிரிப்பு அடேயப்பா, ரொம்பவும்தான் பாசத்தை கொட்டுகிறாய்? இங்கு பார் உன் மகன் உன்னிடம் பேச ஒரு நிமிடம்தான் வாய்ப்பு கொடுப்பேன், அதற்கு மேல் பேசினால்

உன் மகனை உயிரோடு பார்க்க மாட்டாய்.

சரி ஆவலுடன் மகனின் குரலுக்காக காத்திருந்தார். அப்பொழுது மீண்டும் அந்த பேரிரைச்சல் கேட்டது. இவரின் காது கிழிந்து விடுவது போல் இருந்தது. சத்தம் பொறுக்காமல் போனை காதிலிருந்து சற்று தள்ளி வைத்துக்கொண்டார். மெல்ல அந்த சத்தம் அடங்கியதும்,

அப்பா என்று மகனின் குரல் கேட்டது. மணி மணி..அவரின் குரலில் பாசம் வழிந்தோடியது.

உன்னை அவங்க ஒண்ணும் பண்ணலியே, இல்லைப்பா, அவங்க என்னை ஒண்ணும் பண்ணலை, நீங்க அவங்க சொன்னதை எல்லாம் செஞ்சிட்டீங்கண்ணா விட்டுடுவாங்கலாம்.

சரி மணி உன்னைய கண்டிப்பா காப்பாத்திடுவேன், முதல்ல போனை அவங்க்கிட்ட கொடு. என்ன உன் பையன் குரலை கேட்டுகிட்டயா? கேட்டேன், இப்ப சொல்லு நான் என்ன பண்ணனும்?

சற்று மெளனம், உன் மனைவிகிட்ட குழந்தை பெத்துக்கறதுனால உன் அழகு ஒண்ணும் கெட்டு போயிடாது, அப்படீன்னு சொல்லி அடுத்த வாரிசா ஒரு குழந்தைய நீ பெத்துக்கணும்.

இந்த கோரிக்கை அவருடைய புத்தியை உசார்படுத்தியது. நிச்சயம் நம் குடும்பத்தை சேர்ந்தவன்தான் இந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறான். அவர் குரலில் சற்று தெம்பு கூடியது. சரி செய்யறேன்.

நீயா மீண்டும் சிரிப்பு நீதான் பொண்டாட்டிக்கு பயந்தவன் ஆச்சே? குரலில் சிரிப்போ சிரிப்பு

இப்பொழுது ரங்கசாமிக்கு எரிச்சலாக வந்தது..வேறென்ன செய்ய வேண்டும்?

உன் முதல் மனைவி குடும்பம் ஞாபகம் இருக்குதா? நீ ஒண்ணுமில்லாதவனா இருக்கறபோது உனக்கு பொண்ணையும் கொடுத்து ஒரு வியாபாரத்தையும் நடத்தறதுக்கு பண உதவி செஞ்சு கொடுத்தாங்களே அவங்க குடும்பம் இப்ப ஒண்ணுமில்லாம இருக்கு. அவங்களுக்கு எவ்வளவு பண உதவின்னாலும் கண்டிப்பா செஞ்சு கொடுக்கணும்.

ரங்கசாமிக்கு தெளிவாக தெரிந்து போனது, ராஸ்கல் யாரிடம் விளையாடுகிறான், இந்த ரங்கசாமியிடமா? முதல் மனைவி செத்து ஏழு வருசம் ஆச்சு, இப்ப என்ன உறவு கொண்டாடிட்டு வர்றான் அவளோட அண்ணனாத்தான் இருக்கணும், இரு வர்றேன். பட்டென போனை வைத்தவர் அலுவலகத்தை விட்டு வேகமாக வெளியே வந்தார். கார் டிரைவர் கதவை திறக்க கூட விடாமல் இவரே திறந்து உள்ளே உட்கார்ந்தவர் மசக்காளிபாளையம் போ கார் அடுத்த நிமிடம் சீறி பாய்ந்தது.

இதற்குள் ரங்கசாமியின் வீட்டுக்குள், வேலைக்காரர்கள் அனைவருக்கும் ஏதொவொரு வேலை கொடுத்து வெளியே அனுப்பி விட்டு மணிகண்டனும் அவனுடைய நாடகக்குழுவை சேர்ந்த மாணவர்களும் போனை சுற்றி உட்கார்ந்திருக்க,ஒருவன் அப்பாடி மிமிக்ரி பண்ணி பேசி தொண்டை எல்லாம் வத்தி போச்சு. மணிகண்டா உங்கப்பா போனை பட்டுன்னு வச்சிட்டத பார்த்தா கண்டு பிடிச்சுட்டாருன்னு நினைக்கிறேன்.

இன்னொரு மாணவன் நம்மதான் போன் கூடவே சவுண்ட் எபெக்ட் எல்லாம் கொடுத்தமே.இடத்தை கண்டு பிடிக்க வாய்ப்பு இல்லை

மணிகண்டன் சிரித்தான், இடத்தை கண்டு பிடிச்சிருக்கமாட்டாரு. எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வேணுமுன்னா கூட இப்படித்தான் இந்த ஆளை மிரட்ட வேண்டி இருக்கு. இப்ப என்னை கடத்துனது எங்க மாமா பாண்டியோட வேலையாத்தான் இருக்கும்னு அவங்க வீட்டுக்கு சண்டை போட போய்கிட்டு இருப்பாரு. பாவம் அவங்க எல்லாத்தையும் தொலைச்சுட்டு குடும்பத்தோட பொள்ளாச்சிக்கு போயிட்டது கூட தெரியாது இந்த ஆளுக்கு. வருத்தத்துடன் சொன்னான் மணிகண்டன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *