ஆக்கினைகள் செய்து வைப்போம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 5,752 
 

கீழேயிருந்து தாலாட்டுப்பாட்டுக் குரல் வந்தது. என் நண்பன் சுந்தரம் படித்துக்கொண்டிருந்த புஸ்தகத்திலிருந்து திரும்பி அதை கவனித்தான். நான் அவசரமாகப்பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். பாட்டு என் காதில் விழுந்ததானாலும் மனத்தில் உறைக்கவில்லை.

திடீரென்று சுந்தரம் என் கவனத்தைக் கட்டுரையிலிருந்து கலைத் தான். அந்தப் பாட்டைக் கேட்டாயா?” என்றான்.

நான் கவனம் கலைந்து பொறுமையிழந்து “அதற்கென்ன இப்பொழுது?” என்றேன். என் குரலிலிருந்து அவன் என்னை விட்டு விடுவானென்று எண்ணினேன். விடவில்லை.

“பிரமாதமாய்க் கட்டுரைகளும், கதைகளும் எழுதிக் குவிக்கிறாயே; அதிலுள்ள ஓரடியின் சுவையைக் கொண்டுவர முடியுமா உன்னால்? கொஞ்சம் கவனித்துக் கேள்; அப்புறம் பதில் சொல்லு” என்றான்.

கீழேயிருந்து குரல் கணீரென்று வந்தது.

அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப் போம்
தொட்டாரைச் சொல்லியழு
தோல்விலங்கு போட்டு வைப்போம்

என்ற அடிகள் கேட்டன.

இப்பொழுது உற்சாகம் என் பங்கில் திரும்பிவிட்டது.”ஆகா! தாய் தனியரசு செலுத்தும் ராஜாங்கப் பிரகடனம் அது. ‘தொட்டிலை ஆட்டும் கைதான் உலகத்தை ஆள்கிறது’ என்றானே மேல்நாட்டுப் புலவன் ஒருவன். அவனையும் ஒரு படி தாண்டி விட்டது இந்தத் தாலாட்டு. ஆக்கினைகள் செய்து வைப்பாளாம்! என்ன கம்பீரமான வீரம்!” என்று புகழ்ந்தேன்.

கீழே குடியிருப்பவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். கங்காதரய்யருக்கு எங்கேயோ ஒரு ஆபீஸில் வேலை தினம் தவறாமல் (ஞாயிற்றுக்கிழமை தவிர) சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி பொத்தான் போடாமல் மார்பைக் காட்டும் ஷர்ட்டு. அதற்குமேல் தொள தொளவென்று தொங்கும் பழைய செக் கோட்டு. இடுப்பிலே பஞ்சகச்சவேஷ்டி, செருப்பணியாத பாதங்கள். இடதுகை இடுக்கிலே காகிதக் கட்டு, இடதுகையில் ஒருடிபன் பாத்திரம். வலது கையில் ஒருநைந்த குடை தலையிலே ஒரு வெள்ளைத் தலைப்பாகை. அவருடைய உச்சிக் குடுமியை ஈரம் உலருவதற்காகத் தலைப்பாகைக்கு வெளியே விட்டு வைத்திருப்பார். வாய் வெற்றிலை பாக்குமென்று கொண்டிருக்கும். வாசலில் வந்து நின்று, எதிரே சகுனம் பார்ப்பதுபோல இரண்டொரு நிமிஷம் தயங்கி நின்றுவிட்டுப் புறப்படுவார். இனி, மாலை ஆறு அல்லது ஏழு மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

அவர் கையிடுக்கிலுள்ள காகிதக் கட்டில் என்னதானிருக்கு மோ! தினம் தவறாமல் ஆபீசுக்குப் போகும் போதும் அந்தக் கட்டோடுதான் போவார்; திரும்பும் போதும் அதோடுதான் திரும்புவார். இரவில் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் பன்னிரெண்டு மணி வரை விளக்கெரிந்து கொண்டிருக்கும். அந்தக் காகிதங் களோடு போராடிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன் அவரை முதல் முதலாகச் சந்தித்தேன்.சந்தித்தேன் என்பது சரியல்ல. பார்த்தேன். உடனே என் கவனத்தைக் கவர்ந்துவிட்டார்.

அப்போது நான் அந்தத் தெருக்கோடியிலிருக்கும் வீட்டில் ஓர் அறையில் வசித்துக்கொண்டிருந்தேன். அந்த வீட்டிற்கு அடுத்தது ஒரு பிள்ளையார்கோவில். ஒருநாள் வாசலில் சும்மா நின்று கொண்டிருந்தேன். கங்காதரய்யர் வழக்கம்போல உத்தியோகத் திற்குப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய உச்சிக் குடுமி தலைப்பாகையில் பின் பக்கச் சுருளின் மேலாக வெளிவந்து தொங்கிக்கொண்டிருந்தது, பார்ப்பதற்கு விநோதமான காட்சியாக இருந்தது. அதனால் அவரைக் கவனித்தேன்.

– நாற்பது வயதிருக்கும்; சாதுவான முகம். லேசான தழும்பு படர்ந்திருந்தது. தளர்ந்த நடை. கண்களில் ஒருவிதச் சோர்வு. ஆயிரக்கணக்காக மலிந்திருக்கும் குமாஸ்தாக்களிலே இவரும் ஒருவர் என்று எண்ணிக் கொண்டு நின்றேன்.

கங்காதரய்யர் பிள்ளையார் கோவில் முன் நின்றார் நிற்க வில்லை; நிற்பதுபோலத் தயங்கித் தமது இடது தோளை மாத்திரம் உயர்த்தி விட்டு மேலே நடந்தார். எனக்கு அது விசித்திரமாகப் பட்டது. அவர் கையிலிருந்த காகிதக் கட்டைக் கடவுளுக்குக் காட்டிவிட்டுப் போகிறாரோ என்று தோன்றியது.

அவரை அதோடு மறந்திருப்பேன். ஆனால் எப்படியோ தினம் தவறாமல் (ஞாயிற்றுக்கிழமை தவிர) அவரை நாலைந்து மாதம் அதே கோலத்தில் அதே விசித்திரச் செயலில் பார்க்க நேர்ந்தது. அவர் வருகைக்காக நான் தினம் வாசலில் காத்திருந்தேனென்று கூடச்சொல்லலாம்.

அவர் பிள்ளையாருக்கு முன்னால் இடது தோளை உயர்த்துவதன் அர்த்தம் முதலில் புரியவில்லை. பின்னால் நானாக ஊகித்துக் கெண்டே இரண்டு கைகளிலும் டிபன் பாத்திரமும் குடையும். இடது கையிடுக்கில் காகிதக் கட்டு. அந்தத் தடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு கும்பிடுவதற்கு அவசரம். அதனால் அவர் இடது தோளை ஆட்டுவதையே பிள்ளையார் கும்பிடாக ஏற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.

நான் அந்த வீட்டைவிட்டு எதிர்ச்சரகிலிருந்த ஒரு வீட்டில் சில மாதங்கள் குடியிருந்தேன். அதன்பின் இப்போது கங்காதரய்யர் வீட்டு மாடி மேலேயே ஓர் அறையில் சுந்தரத்துடன் கூட்டாக வசிக்கிறேன். இந்த இரண்டு வருஷங்களாக நாள் தவறாமல் கங்காதரய்யர் காலை ஒன்பதே முக்கால் மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். பிள்ளையார் முன் தயங்கி இடது தோளை ஆட்டிவிட்டு ஆபீஸுக்குப் போகிறார்.

பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் உள்ளே போகும் போது வாசலில் நிற்கும் காவல்காரனிடம் அடையாளச் சீட்டு ஒன்றைக் காட்டிவிட்டுப் போவதுண்டு. கங்காதரய்யர் பிள்ளை யாரிடம் காகிதக் கட்டைக் காட்டி விட்டுப் போவது அதேபோலத் தான் எனக்குப்பட்டது. அவர் வேலை பார்க்குமிடத்தில் வாசலில் காவல்காரனிருக்கிறனோ இல்லையோ, அவர் வரையில் ஒரு காவல்காரனிடம் ஆஜர் கொடுத்து அடையாளம் காட்டிவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார். பதினைந்து வருஷங்களாக அப்படிப் போய்க் கொண்டிருக்கிறார் என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன்.

கங்காதரய்யரின் தர்மபத்தினி சௌந்தரம். அந்த அம்மாளுக்கு முப்பத்திரண்டு வயதிருக்கும். நல்ல களை நிறைந்த முகம். உடலுழைப்பால் கெட்டிப்பட்ட தோற்றம். மாநிறம் என்று சொல்லமுடியாத நிறம். என்ன காரணத்தாலோ அவளைப் பார்க்கும்போதெல்லாம் தட்சன் யாகத்திற்குப் போகும் தாட்சாயணி யின் ஞாபகம் வருகிறதெனக்கு, அவளுடைய ஏழ்மைத் தோற்றமும் ஆடையாபரணங்களும் காரணமாக இருக்கலாம்.

அந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தது பெண். போன வருஷம் பிரசவத்திற்காக சௌந்தரம் தாய் வீடு போயிருந்த போது அந்தப் பெண்தான் வீட்டில் சமையல் செய்தாள். இரண்டாவது புதல்வனாகப் பிறந்ததில் அவர்களுக்கு ஒரேயடியாக மகிழ்ச்சி. தங்கள் கலிதீர்ந்துவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் அதற்காக அவர் புத்திரோற்சவம் கொண்டாட மாமனார் வீட்டிற்குப் போகவில்லை. வழக்கம்போலப் பிள்ளையாருக்கு ஆஜர் கொடுத்துக்கொண்டு தானிருந்தார். மனைவி குழந்தையுடன் திரும்பிவந்தபோது தான் மகன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தார்.

அந்த ஒரு வயதுக் குழந்தையைத் தொட்டிலில் போட்டுச் சௌந்தரம் பாடிய தாலாட்டுத்தான் நாங்கள் கேட்ட பாட்டு, அந்தப் பாட்டை நான் அதற்குமுன் கேட்டதில்லை. அதிலிருந்த பொருட் சுவையும், மனோபாவமும் என் உற்சாகத்தைத் தூண்டிவிட்டன. “வீரத்தாய்” என்ற தலைப்பில் ஆவேசம் பாயும் கட்டுரையொன்று எழுதவேண்டுமென்று அப்போதே முடிவு செய்தேன்.

மறுநாள் காலை எட்டு மணியிருக்கும். கீழேயிருந்து பலமான குரல்கள் கேட்டன.ஏதோ கலவரம்போல இருந்தது. அறையிலிருந்தே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. கீழே போய் மாடிப் படியிலேயே நின்று கொண்டு கவனித்தேன்.

ஒரு முரடன். அடர்த்தியாக வளர்ந்த மீசையை முறுக்கிக் கொண்டு வாசலில் நின்றான். கங்காதரய்யர் வெளித் தாழ்வாரத்தில் கதவு நிலையருகில் நிற்கிறார். அவர் பக்கத்தில் பெண் நிற்கிறது. கொஞ்சம் உள்ளே மறைவாகசௌந்தரம்மாள் நிற்கிறாள். வீதியில் ஏழெட்டுப் பேர்கள், அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள், நின்று வேடிக்கை, பார்க்கிறார்கள். பக்கத்து வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் இடையிலுள்ள சுவர் ஓரமாய், கங்காதரய்யர் வீட்டிற்குப் பால் ஊற்றும் சுப்பாயி நிற்கிறாள். –

முரடன் மீசையை முறுக்கிக்கொண்டே பேசினான். “ஒனக் கென்னையா போச்சு? ஒங்கப்பன் வீட்டு மொதலை எடுத்தாளா? அவங்க பால் பணம் பாக்கி தரல்லே. மூணு மாசமா சால்சாப்புச் சொல்லிக்கிட்டே வாராங்க. அதுக்காக எம்பொஞ்சாதி ஏதாவது செஞ்சா நீ ஏன்ய்யா குறுக்கே வரே?” என்று கூவினான்.

கங்காதரய்யர் பயத்தினால் அடங்கிய குரலில், “வீணாகப் பொய் சொல்லாதே. அவர்கள்தான் உங்களிடம் பால் வாங்கினதேயில்லையாமே. குழந்தை விளையாடிக்கொண்டே வெள்ளிப் பாத்திரத்தை வாசலில் கொண்டுவந்து போட்டுவிட்டால் அதை இவள் எடுக்கலாமா? அது திருட்டுத் தானே?” என்றார்.

“பொல்லாத் திருட்டைக் கண்டுப்புட்டியோ நீ? நீ என்ன போலீஸ்காரனா! ஒம்பாட்டுலே ஒன் வேலையைப் பார்த்துக் கிட்டுப் போகாமே…” என்று வாக்கியத்தை முடிக்காமலே முன்னால் நகர்ந்தான் முரடன்.

உள்ளேயிருந்தே சௌந்தரம் “ஐயோ! அவனைப்பார்த்தாலே போக்கிரியாட்டமா இருக்கு. நீங்க இப்படி உள்ளே வந்துடுங்கோ” என்று கங்காதரய்யரை அழைத்தாள்.

முரடன் வீட்டு வாசல் குறட்டருகில் வந்து நின்று கொண்டு, “ஏய், அய்யரே! நீ பிராமணன் சத்தியமாச் சொல்லுவையா? அவ திருடினதை நீ பாத்தியா?” என்றான்.

கங்காதரய்யர் “நான் பார்த்தேனென்றா சொன்னேன். காலையில் பால் ஊற்ற வந்தபோது சுப்பாயி மடியிலே இருந்தது. பால் ஊற்றக் குனிந்தபோது நழுவிவிழ இருந்ததை அவள் எடுத்துச் சரியாக வைத்துக் கொண்டதைப் பார்த்தேன் என்றுதானே சொன்னேன்” என்றார்.

“அதைத் தான் நீ ஏன்ய்யா சொல்றே? இந்த முத்தாண்டியை யார்னு நெனைச்சுக்கிட்டே? மருவாதையாப் பொழக்க மாட்டே போலிருக்கே” என்று கோபத்துடன் கூச்சலிட்டுக்கொண்டே தாழ்வாரத்தில் ஏறினான்.

கங்காதரய்யர் கொஞ்சம் பயந்து பின்னடைந்து நிலை மேல் சாய்ந்து நின்றார். பெண் அவரைத் தாண்டி ஒரே பாய்ச்சலில் அம்மா விடம் ஓடினாள். சௌந்தரம் உள்ளேயிருந்தே “நீங்க உள்ளே வந்துடுங்கோளேன்” என்று தணிந்த குரலில் கெஞ்சினாள்.

அவர்களுடைய பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு முத்தாண்டி, “அவுங்க போலீசிலே எழுதிவைக்கப் போறாங்களாம். அப்படி யாராவது வந்து கேட்டா எனக்கு ஒண்ணும் தெரியா துன்னுட்டையோ பொளைச்சே, இல்லாட்டி ஆமாம்” என்று மீசையை முறுக்கினான். அவன் குரலிலிருந்தமிரட்டலும் உருட்டலும், கங்காதரய்யரைக் கலகலக்க வைத்து விட்டன.

அவர் கரகரத்த குரலில், “அப்போது அவர்களிடம் நான் eபாத்தேன் என் சொல்லவிட இடபோக டிமாதம் சொல்லுகிறது? நான் வேண்டுமானால் அவர்களிடம் போலீசுக் கெல்லாம் போக வேண்டாமென்று சொல்லுகிறேன்” என்றார்.

முத்தாண்டி, “இந்தப் புத்தி அப்போ எங்கே போச்சு? வெள்ளிப் பாத்திரத்தைக் காணமின்னுயாரோ சொன்னாங்களாம். நீயாப் போயி சுப்பாயி மடியிலே இருந்துச்சுன்னு சொன்னியாமே. ஒன்னே! இரு இரு….இந்த ஊர்லேதானே பொளைக்கணும்.” என்று நிறுத்தினான். கங்காதரய்யரிடமிருந்து ஏதோ குறிப்பிட்ட பதிலை அவன் எதிர் பார்ப்பது போலிருந்தது.

எனக்கு முதலிலேயே விஷயம் விளங்கிவிட்டது. ஆனாலும் என்ன நடக்கிறதென்று பார்க்கவேண்டுமென்று மௌனமாக இருந்தேன். வீதியில் நின்று வேடிக்கை பார்த்தவர்களும் அதே காரணத்தினால்தான் அப்படிப் பேசாமல் இருந்தார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. முத்தாண்டியின் கடைசி மிரட்டல் என் ஆத்திரத்தைத் தூண்டி விட்டது. மாடிப்படியிலிருந்து இறங்கி கங்காதரய்யருக்கும் அவனுக்கும் குறுக்கேபோய் நின்றுகொண்டு, “அவர்கள் பால்பணம் பாக்கிக்காக உன் பெண்சாதி வெள்ளிப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்தாளென்றாயே” என்றேன்.

முத்தாண்டி, “நீ யாரடா இதில் தலையிட்” என்ற தோரணை யில் என்னை முறைத்துப் பார்த்தான். பதில் சொல்லவில்லை. நான் அவன் பதிலுக்காகக் காத்திருக்கவுமில்லை.

“போலீஸ்காரர் வந்து கேட்டால் என்ன சொல்ல வேண்டு மென்று எங்களுக்குத் தெரியும். உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டி யதில்லை உன்னாலானதைப்பார்த்துக்கொள்.போ.வாசலைவிட்டு இறங்கு” என்று நானும் மிரட்டினேன்.

முத்தாண்டி மீசையில் கைபோட்டான். என்னைப் பார்க்க வேயில்லை. லட்சியம்கூடச் செய்வில்லை. கங்காதரய்யரிடம், “சாமி! நான் சொல்லவேண்டியதைச் சொல்லிப்போட்டேன். புத்தியாப்பொளைச்சிக்குங்க” என்று சொல்லிவிட்டுத்தாழ்வாரத்தி லிருந்து இறங்கினான். தயங்கிநின்று திரும்பி என்னை முறைத்துப் பார்த்தான். நானும் முறைத்தேன். சுப்பாயி பக்கம் திரும்பி, “வாடி, அவரைப் பாக்கவேண்டிய எடத்துலே பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான். சுப்பாயியும் தொடர்ந்தாள்.

அதன்பிறகு நான் கங்காதரய்யர் பக்கம் திரும்பினேன். என்னுடைய குறுக்கீட்டால் திடீரென்று கிடைத்த பலத்தையும் தைரியத்தையும் அவர் முகத்திலே காணவில்லை. சோர்ந்து நின்றார்.

அவர் மனைவி உள்ளேயிருந்தே “ஒங்களுக்கென்னத்துக்கு இந்த வம்பெல்லாம்? அவா வந்து கேட்டா எனக்குத்தெரியாதுன்னு சொல்லி விட்டுப் போறதுதானே?…” என்று கணவனை அதட்டினாள்.

கங்காதரய்யர், “கண்ணாலே கண்டதை எப்படியடி தெரியா தென்று சொல்லுகிறது? போலீஸ் கேசில்லாமலே விட்டுவிடச் சொன்னால் போகிறது” என்று யோசனையோடு நிதானமாகப் பேசினார்.

இதற்குள் வாசலில் நின்ற அயலார்களில் இருவர் தாழ் வாரத்திற்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் “அவன் பெரிய போக்கிரியாச்சே. குடிகாரன். இதுவரை மூன்று தடவை ஜெயிலுக்குப் போய் வந்தவன். கொல்லு கொலைக்கு அஞ்சவே மாட்டான்” என்றார்.

மற்றவர், “பாருங்களேன். கண்ணெதிரில் திருடிக் கொண்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். ‘ஏன் ஐயா சொன்னே’ என்று கேட்கிறானே” என்று ஆச்சரியப்பட்டார்.

இருவரும் சேர்ந்து கங்காதரய்யரின் பயத்தை எத்தனை மடங்கு பெருக்கிவிட்டார்கள் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.“இது என்ன கேள்வி முறையில்லாதராஜ்யமா? வாய் மிரட்டலிலேயே எல்லாம் ஆய்விடும் என்று நினைக்கிறான். அவனாலே ஒன்றும் செய்யமுடியாது. போங்கள்” என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய் விட்டேன்.

சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு மாடிப் படியிலிருந்து “அம்பீ” என்ற கங்காதரய்யர் குரல் கேட்டது. கீழே போனேன். என்னிடம் ஒரு கடிதத்தையும், அவர் வழக்கமாக இடுக்கிக்கொண்டு போகும் காகிதக் கட்டையும் கொடுத்து, “இதைக் கொஞ்சம் எங்கள் ஆபீஸில் கொண்டுபோய்க்கொடுத்துவிட்டு வாயேன்” என்றார்.

“ரஜா கேட்டிருக்கிறீர்களா?’ ஏன் உடம்பென்ன?” என்றேன் அவசரமாக.

கங்காதரய்யர் “உடம்பு ஒன்றுமில்லை, மனசு சரியாயில்லை. போய் வருகிறாயா?” என்றார்.

“அதற்கென்ன கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று வாங்கிக் கொண்டேன்.

நான் திரும்பிவந்தபோது கங்காதரய்யர் வீட்டிற்குள் மூட்டை கட்டுவதுபோலத் தோன்றியது. அதனால் உள்ளே தலையை நீட்டி, “ஆபீஸில் கொடுத்துவிட்டேன்” என்றேன்.

நடைக்கருகிலிருந்த அறையில் ஒருபெட்டியில் சாமான்களை அடுக்கிக்கொண்டிருந்த கங்காதரய்யர் நிமிர்ந்து பார்த்து “கொடுத்து விட்டாயா? என்ன சொன்னார்கள்? நீயெங்கே உள்ளே போயிருக்கப் போகிறாய்! பதினைந்து வருஷமாகிறது. இதுவரை ஐந்தே ஐந்து வாரம்தான் ‘லீவு’ வாங்கியிருக்கிறேன். கொடுக்காம லென்ன” என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது போலச் சொன்னார்.

“பிரயாணமா? ஏது திடீரென்று?” என்றேன் ஆவலுடன்.

கங்காதரய்யர் எழுந்து என்னருகில் வந்து “ஆமாம். அதற்காகத் தான் இரண்டு மாதம் லீவு வேண்டுமென்று எழுதினேன். என்ன செய்வது அம்பி! மனமறிந்து பொய் சொல்ல இஷ்டமில்லை.

முத்தாண்டியோ போக்கிரி, காலையிலே நாக்கிலே ஏதோ சனியன் இருந்திருக்கிறான். உம்.” என்று திரும்பிப் பெட்டியைப்பார்த்தார்.

சௌந்தரம்மாள் உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டே வந்தவள் “என்னமோப்பா! காலையிலே ஒன்னாலே எங்க மானம் பொழச்சுது. அவன் பொல்லாதவன். துடுக்கா ஏதாவது செய்துட் டான்னா பட்டது பட்டதுதானே? நீ கூடக் கொஞ்சம் ஜாக்கிரதை யா இரு” என்றாள்.

எனக்கு ஆத்திரம்தாங்கவில்லை. அவர்களைத் திட்டவேண்டு மென்று கூடத் தோன்றியது. சமாளித்துக் கொண்டு, “இதற்காகவா நீங்கள் ஆபீஸில் ரஜா வாங்கிக் கொண்டு ஊருக்குப் போகிறீர்கள்? வாருங்கள். போலீசில் போய் முத்தாண்டி காலையில் வந்து மிரட்டி விட்டுப் போனதை அப்படியே எழுதிவைப்போம். அவன் கொட்டத்தை அடக்கி வைப்போம்” என்றேன்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கங்காதரய்யர் திரும்பி, “அம்பி, நீ சிறு பையன். முத்தாண்டி மிரட்டினானென்று புகார் செய்துவிட்டு அப்புறம் இந்த ஊரில் குடியிருக்க வேண்டாமா அப்பா?” என்றார்.

“என்ன செய்துவிடுவான்? காலையில் அவ்வளவு பேர்களுக் கெதிரில மிரட்டினானென்று ருசுச் செய்து ஒரு வருஷம் நன்னடத் தை ஜாமீன் வாங்கவைக்கலாம், வாருங்கள்” என்றேன்.

“அவ்வளவு பேர்! அடே அசடே அதிலே ஒரு பயலாவது வந்து “ஆமாம், முத்தாண்டி திட்டினான்” என்று சொல்லுவான் என்று நிக்ைகிறாயா? எங்களாலே உனக்கும் கஷ்டம் வரவேண்டாம். பேசாமல் போய் உன்வேலையைப் பார். போலீஸ், கேசு, மாஜிஸ் திரேட்டு இதுகளெல்லாம் நமக்குச் சரியில்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

கீழுதட்டைக் கடித்துக்கொண்டே மாடிக்குப் போனேன். சுந்தரம் வந்திருந்தான். அவனிடம் அந்தச் சம்பவம் முழுவதையும் சொல்லி “அவர்கள் ஊருக்குப் போகாமல் எப்படியாவது நிறுத்த வேண்டும். இதென்ன அநியாயமான கோழைத்தனமாக இருக் கிறதே” என்றேன்.

சுந்தரம், “அது உன்னாலேயும் முடியாது, இந்தத் தெருக் கோடியிலிருக்கும் பிள்ளையாராலும் முடியாது” என்றான்.

அதே சமயம் கீழேயிருந்து சௌந்தரம்மாளின் தாலாட்டுப் பாட்டுக் குரல் வந்தது.

அடிச்சாரைச்சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம்!

இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இருவரும் சிரித்தோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *