அப்பாவின் புத்தக அலமாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2013
பார்வையிட்டோர்: 10,416 
 

காலையில் கண் விழித்ததும் அசதியாக இருந்தது. இரவெல்லாம் சரியாக உறக்கம் இல்லை. விழித்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாத ஒரு மயக்கநிலையிலேயே இரவு கழிந்துவிட்டது. ஏதேதோ கனவுகள் வேறு. உடல் வலியைவிட மன அசதியே பெரிதும் இருந்தது. அனு பக்கத்தில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். இந்திரா முன்னதாகவே எழுந்துவிட்டாள். எப்போதுமே அவளுக்கு தினம் சீக்கிரமே விடிந்துவிடுகிறது. எனக்கோ நேரமாக எழுந்திருப்பது என்றாலே மிகச் சிரமமான காரியம். காலை நேரத்தின் ஓசைகள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. எனக்கோ இரவின் ஓசைகள்தான் பிடித்தமானது. ஓசை என்று சொல்வதைவிட அமைதி என்பதே பொருத்தமாக இருக்கும். எனக்கான காரியங்களை செய்து முடிக்க இரவே எனக்கு உகந்ததாக இருந்தது. ஒரு நாள் கூட அவளை காலை வேளையில் குளிக்காமல் நான் பார்த்தது இல்லை. குளிக்காமல் அன்றைய வேலைகளைச் செய்வதும் அவளுக்குப் பிடிக்காதது. அனுவின் கன்னத்தில் முத்தமிட்டேன். அவள் மெல்லிய முனகளுடன் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

இன்று ஊருக்குச் செல்வதாக நேற்றே திட்டமிட்டிருந்தோம். இன்னும் படுத்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று எழுந்தேன். அப்போது செல்போன் அடித்தது.

ஊரிலிருந்து மாமாதான்.

‘அலோ’

‘…….’

அவர் சொன்னதை என் மூளை கிரகிக்க சிறிது நேரம் பிடித்தது.

‘என்ன மாமா சொல்றீங்க?’

‘………’

அதன் பிறகு அவர் என்ன சொன்னார் என்பதை நான் வாங்கிக் கொள்ளவே இல்லை. அப்பா தவறிவிட்டார் என்றளவில் நான் செய்தியை உணர்ந்து கொண்டேன்.

கிளம்புவதற்கு எப்படியோ ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. போய்ச்சேருவதற்கு எப்படியும் நான்கு மணி நேரமாவது ஆகிவிடும். என்னால் காரை ஓட்டிச்செல்ல முடியாது என்று தோன்றியது. இந்திராவையே ஓட்டச்சொன்னேன். எங்கள் பேச்சிலிருந்து அனுவும் புரிந்துகொண்டாள். அப்பாவின் செல்லக் குழந்தை அவள். அப்பாவிடம் கதை கேட்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனது தம்பி பையனோ தங்கை பையனோ கூட அவரிடம் அவ்வளவாக நெருக்கமில்லை. அவர்கள் அம்மாவிடம் நெருங்கியிருப்பார்கள். எனக்கும் கூட அப்பாதான் நெருக்கமானவர்.

சரியாக அம்மா தவறி ஆறு மாதம்தான் இருக்கும். எவ்வளவோ சொல்லியும் அப்பா எங்களுடன் இருக்க மறுத்துவிட்டார். அவரேதான் சமையல் செய்து கொண்டார். அத்தை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் இழப்பு அவரை பாதித்தது என்றாலும் அவர் உடைந்து போகவில்லை. வாரம் ஒரு முறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். சில சமயங்களில் தம்பியும் குடும்பத்தோடு வருவான். தங்கையோ எப்போதாவதுதான் வருவாள். அவளுக்கு அம்மாவிடம்தான் ஒட்டுதல் அதிகம். அம்மாவின் மறைவின் போது அவளை சமாதானப் படுத்துவது பெரும்பாடு ஆகிவிட்டது. சிறுவயது முதலே அவளுக்கு அப்பாவிடம் பயம் இருந்தது. அதுதான் அவளை அவரிடமிருந்து விலக்கி வைத்தது. அம்மா அப்பா இருவரிடமும் நெருக்கமா இருக்க எனது தம்பியால் முடிந்தது. எல்லோரிடமும் இணக்கமாக இருக்கும் கலை அவனுக்கு கை வந்திருந்தது. நானோ வேண்டும் அல்லது வேண்டாம் என்று தாட்சண்யம் இல்லாமல் முடிவு எடுத்துவிடுவேன். பிறகு அதுபற்றி வருந்தும் பழக்கமும் என்னிடம் கிடையாது. சரியோ தவறோ என் முடிவு அது.

அனு என் மடி மீது புரண்டு படுத்தாள். ஊர் நெருங்க நெருங்க எனக்குள் பதட்டம் அதிகரித்தது. இதை நான் எப்படி எதிர்கொள்வேன் என்பது தெரியவில்லை. மனம் கனக்கத் தொடங்கியது. தொண்டை அடைத்துக்கொண்டது. மனைவியோ பதட்டப்பட வேண்டாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே வந்தாள். அனுவை அணைத்துக் கொண்டேன். மனம் ‘அப்பா..அப்பா’ என்று அரற்றியது.

வீடு நெருங்கியது.

முன்னால் பந்தல் போடப்பட்டிருந்தது.

உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் இருந்தார்கள்.

மூவரும் வீட்டிற்குள் நுழைந்தோம். நான் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. உள்ளே பெண்களின் அழுகுரல். அத்தையின் குரல்தான் சத்தமாக ஒலித்தது. கூடவே தங்கையின் குரல்.

அப்பா கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தார். அப்பா நல்ல உயரம். உயரத்திற்கு தகுந்தார்போல் உடல்வாகு. சிறுவயதிலேயே எங்களுக்கு யோகாசனம் சொல்லிக்கொடுப்பார். அவரும் தினமும் தவறாமல் செய்வார். காலையில் ஆசனங்கள் செய்துமுடித்து, இரவில் ஊற வைத்த சுண்டலுடன் வெல்லத்தைக் கடித்துக்கொண்டு சாப்பிடுவோம். அப்பாவின் உடல் திடகாத்திரமானது. அவரின் கையின் கடினத்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். என் சின்னக் கையை அவர் உள்ளங்கையில் வைத்துப் பார்ப்பேன். என் கை அவ்வளவு பெரியதாக ஆகமுடியாது என்று நினைப்பேன். ‘விடாம ஆசனம் பண்ணனும் அப்ப உனக்கும் இந்த மாதிரி ஆகும்’ என்று என் எண்ணவோட்டத்தைப் படிப்பார்.

என்னைப் பார்த்ததும் அத்தை மேலும் சத்தமாக அழ ஆரம்பித்தாள். தங்கை என்னைக் கண்டதும் ‘ஓ’ வென்று பெரும் குரலெடுத்து அழுதாள். அவளை எப்படித் தேற்றமுடியும்? முகம் கோணலாகியது. அழுகை வெடித்தது. கைகளால் வாயைப் பொத்திக்கொண்டேன். அப்பா அருகில் அமர்ந்தேன். அனுவும் அழத்தொடங்கினாள். என்னைப் பிடித்துக்கொண்டாள்.

அப்பாவின் கைகளைப் பிடித்தேன்.

அப்பாவின் ஸ்பரிசம். அப்பாவைத்தொட்டு எத்தனை வருடங்கள் இருக்கும். கடைசியாக எப்போது அப்பாவைத் தொட்டேன் என்பது நினைவில் இல்லை. சிறுவனாக இருக்கும்போது இரவில் அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டுதான் தூங்குவேன். அவர் கைவிரலைப் பிடித்துக்கொண்டு கடை வீதியில் நடந்துபோவது எனக்கு மிகவும் சந்தோசம் தரக்கூடியது. வீதியின் கடைசியில் பெட்டிக்கடை இருக்கும். அங்கே மிட்டாயும் பிஸ்கட்டும் வாங்கிகொடுப்பார். அப்பாதான் எனக்குக் குளிப்பாட்டி விடுவார். சோப்புடன் அப்பாவின் முரட்டுக் கைகள் உடல் மீது தவழ்வது ஒரு சுகமாக இருக்கும். அவர் கன்னத்தில் முத்தமிடும்போது அவரின் வாசனை என் நாசிகளில் ஏறும் தருணம்… அதற்காகவே நான் அவர் கழுத்தைக் கட்டிக்கொள்வேன். அப்பா ஊருக்கு சென்றுவிடும்போது எனக்கு தூக்கம் வராது. அம்மா அவரது உடை ஒன்றை என் கைகளில் கொடுப்பாள். அதை அணைத்துக்கொண்டு அதன் வாசனையில் நான் தூங்கிவிடுவேன். தம்பி பிறந்தபிறகு அப்பாவுடனான என் நெருக்கம் குறைந்து வந்தது. நான் வளர்ந்துவிட்ட பிறகு அப்பாவுடனான என் ஸ்பரிசம் நின்று போயிற்று. இருந்தும் பல சமயங்களில் அவரைத் தொடவேண்டும் என்று தோன்றும். இருந்தும் ஒருவகையான கூச்சம் அதைத் தடுத்தது.

என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

அம்மாவின் ஞாபகமும் வந்தது.

சுற்றிலும் பெண்களின் அழுகுரல். இந்திராவும் அத்தையைக் கட்டிக்கொண்டு அழுதாள். என் பெயரைச் சொல்லி சொல்லி அத்தை அழுது கொண்டிருந்தாள். என்னால் தரையில் அதிக நேரம் உட்கார முடியவில்லை. நான் எழுந்து சேரில் அமர்ந்தேன். அனுவும் என்ன செய்வது என்று தெரியாமல் என் அருகில் அமர்ந்தாள்.

அப்போதுதான், யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தேன்.

வெளியில் தம்பி மும்முரமாக சிலரிடத்து கட்டளை இட்டுக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் உள்ளே வந்தான். ‘பணம் வேண்டும்’ என்பதை அவன் குறிப்பாகச் சொன்னான். நான் பர்சிலிருந்து அவனுக்கு கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

தெரிந்த முகங்கள். தெரிந்த மனிதர்கள். வெளியே செருப்புகள் பல தாறுமாறாகச் சிதறிக்கிடந்தன.

சிலர் புன்னகைத்தார்கள். சிலர் கண் அசைவில் தங்கள் வருத்தத்தை தெரிவித்தார்கள். வேறு சிலர் புன்னகைப்பது சரியாக இருக்குமோ இல்லையோ என்று தயங்கினார்கள். சிலர் ஏன் எப்படி எப்போது என்று எல்லோரிடமும் கேட்கும் வழக்கமான கேள்விகளையே என்னிடமும் கேட்டபடி இருந்தார்கள். அனு, வேறு என்ன செய்வது என்று தெரியாமல் என் அருகிலேயே இருந்தாள். இப்படியே சோகமாக அமர்ந்திருக்க வேண்டுமா அல்லது எழுந்து விளையாடப் போகலாமா என்று அவள் தவிப்பது போல் இருந்தது. ‘அனு நீ வேணா போய் விளையாடு’ என்றேன்.

நேரம் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

ஆகவேண்டிய காரியங்களைப் பலரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டபடி இருந்தார்கள். சிலர் அவ்வப்போது சத்தம் போட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் வெளியேயும் உள்ளேயும் சென்று கொண்டிருந்தார்கள். சாப்பாடு காப்பி டீ என அவ்வப்போது பாரிமாற சில பெண்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். சிலர் அடிக்கடி தங்கள் கைக் கடிகாரத்தைப் பார்த்து ‘எப்போது எப்போது’ என்றிருந்தார்கள். பெண்களின் அழுகுரல் மட்டுப்பட்டிருந்தது. ஆங்காங்கே குழுக்களாகப் பிரிந்து பலர் தங்களது அரட்டையைத் தொடங்கிவிட்டிருந்தார்கள். எங்கே என்றாலும் அவர்களுக்குப் பேசுவதற்கு விசயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பேசுவதற்கு விசயம் இருந்தும் பேசாமல் இருந்தது சில பேர் மட்டுமே. அவர்களை நானும் என்னை அவர்களும் மவுனமாக அடையாளம் கண்டுகொண்டோம். சில பெண்கள் சத்தம் போட்டு தங்களின் குழந்தைகளைத் திட்டிக்கொண்டிருந்தார்கள். வெகு சிலர் தாங்கள் ஏதோ பொருந்தாத ஒரு இடத்திற்கு வந்துவிட்டது போல் அவஸ்தையில் இருந்தார்கள். புதிது புதிதாக ஆட்கள் வரும்போதெல்லாம் உள்ளே சத்தமாக அழுகுரல் கேட்கும். சற்று நேரத்தில் அழுகுரல் அடங்கி பேச்சுச் சத்தம் கேட்கும். சிலர் இனிமேலும் இருக்கத் தேவையில்லை என்று நினைத்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சற்றே தடுமாற்றத்துடன் தங்களது செருப்பைக் கண்டுபிடித்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தலை வலித்தது. என்னால் அதிக நேரம் உட்கார முடியாமையால் அவ்வப்போது எழுந்து நடந்து கொண்டிருந்தேன்.

மாலையும் நெருங்கிக்கொண்டிருந்தது.

என் மனதில் அப்பாவைப் பற்றிய சிந்தனைகள் ஓடியபடி இருந்தது. மனிதனுக்கு இறுதியில், மரணம் மனக்குறையால் வரலாம் அல்லது மனநிறைவால் வரலாம். அப்பாவின் மரணம் எத்தகையது? அவர் தன் வாழ்நாளில் சந்தோசமாக இருந்தாரா? தன் சந்தோசத்தை விட்டுக்கொடுத்து குடும்ப சந்தோசத்தை எவ்வளவு தூரம் பேணினார்? அத்தை எல்லோரிடமும் ஒரு விசயத்தை விடமால் சொல்லிக்கொண்டிருந்தாள். நேற்று இரவு அப்பா கதவை உள்பக்கமாகத் தாழிடவில்லை என்பதே அது. ‘முன்கூட்டியே அவருக்கு எப்படி தெரியும்’ என்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு மனிதன் தன் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

இறுதிச் சடங்கிற்கான சம்பிரதாயங்கள் நடக்கத் தொடங்கின.

இனி எப்போது பார்ப்போம் என்பதான கேள்வி எல்லோருக்குள்ளும் மீண்டும் துக்கத்தைக் கிளறியது. பெண்களின் அழுகுரல் சத்தமாக எழும்பியது. எனக்குள்ளும் தாங்க முடியாத ஏதோ ஒன்று என் தொண்டையை அடைத்ததுக் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அந்தக் கணத்தில் நானும் இல்லாமல் போய்விட்டால் நல்லது என்று தோன்றியது.

அவர் சிறுவயது முதல் எனக்குக் கற்றுக்கொடுத்த விசயங்கள் பல சம்பந்தமில்லாமல் மனதில் வந்து போனது.

எல்லாம் முடிந்த போது இரவாகிவிட்டது.

முதல் வேலையாகக் குளித்து உடல் கசகசப்பையம், மனக்கசப்பையும் போக்கவேண்டும்.

நீரில் குளித்தபோது மனம் சற்றே ஆசுவாசப்பட்டது.

உறவுகளில் பெரும்பாலோர் சென்றுவிட நெருங்கியவர்கள் மட்டும் இருந்தோம். பல விசயங்கள் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். அப்பாவிற்கு பிறகு வீட்டை விற்றுவிடுவது என்று முன்பே முடிவு செய்து வைத்திருந்தோம். மிச்சமிருக்கும் சாமான்களை யார் யார் வைத்துக்கொள்வது என்பது பற்றி பேச ஆரம்பித்தார்கள். என் மனம் ஏனோ அதில் அக்கறை கொள்ளவில்லை. எங்கே அதுபற்றி பேசி சண்டையாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. நான் அங்கிருந்து மேல் மாடிக்கு ஏறினேன்.

அங்கேதான் அப்பாவின் அறை.

கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன். தரையெல்லாம் புழுதியாக இருந்தது. அப்பா எப்போதும் சுத்தமாக வைத்திருப்பவர். அப்படியிருக்க இவ்வளவு குப்பையாக இருப்பதென்றால் அவர் சில நாட்களாக இங்கு வரவில்லை என்று தெரிகிறது. நாங்கள் கடைசியாக வந்தது பதினைந்து நாட்களுக்கு முன்னர். அப்படியாயின் அதன் பிறகு அவர் மேலே வரவில்லை. ஏன் அப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர், சாப்பிடாமல் கூட இருப்பார். ஆனால் புத்தகம் படிக்காமல் இருக்க முடியாதே?

மேஜை மீது நான்கைந்து புத்தகங்கள் கிடந்தன.

நான் புத்தக அலமாரியைப் பார்த்தேன்.

அதனுள் ஏராளமான புத்தகங்கள். அலமாரியைத் திறந்தேன். நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பல்வேறு தலைப்பகளில் பல்வேறு ஆசிரியர்களின் படைப்புகள். இவ்வளவு புத்தகங்களா என்று எனக்கு ஒரு கணம் வியப்பாக இருந்தது. எனக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லை. எங்கள் வீட்டில் யாருக்குமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே வாராந்திரப் பத்திரிக்கை படிப்பவர்கள்தான். எங்களுக்கு புத்தகம் என்பது வெறும் பொழுதுபோக்கு. அப்பாவுக்கோ அது வாழ்க்கை. அம்மாவிற்கு புத்தகங்களின் வாசனையே கிடையாது. எப்போது பார்த்தாலும் புத்தகங்களை வாங்கும் அப்பாவின் போக்கு அம்மாவிற்கு சுத்தமாகப் பிடிக்காது. இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். தன் வாழக்கையே பாழாகிவிட்டதாக அம்மா புலம்புவாள். அம்மாவின் நாக்கு மிகவும் கூரானது. அவளின் வார்த்தைகள் அப்பாவிற்கு ஊசி சொருகியது போல் வேதனையாக இருக்கும். இருந்தும் ஒரு வார்த்தைப் பேசமாட்டார். அவர் ஒன்றும் சொல்லாதது அம்மாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கும். அவள் பாட்டுக்குக் கத்திக்கொண்டிருப்பாள். அப்பாவின் மீது அம்மாவுக்கு சதா குறை இருந்துகொண்டே இருந்தது. அப்பாவின் பக்கத்து நியாயத்திற்கு அவள் ஒரு போதும் செவி சாய்த்ததே இல்லை. இத்தனைக்கும் அம்மாவின் எந்த விருப்பத்தையும் அப்பா தட்டிக் கழிக்கமாட்டார். அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றவே செய்வார்.

அவர் புத்தகங்கள் வாயிலாகவே சுவாசித்தார். புத்தகங்கள் இல்லா வாழ்க்கையை அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. புத்தம் புதிய புத்தகங்களின் மணம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்த மணத்தை அவர் ஆழ்ந்து அனுபவிப்பார். அவர் அவருக்கென்று செலவழிக்கும் பணம் புத்தகங்களுக்கு மட்டும்தான். புத்தகக் கண்காட்சிதான் அவருக்கு உண்மையான திருவிழா. கண்காட்சி நடக்கும் நாட்களில் எல்லா நாட்களும் செல்வார். சிறுவனாக இருக்கும்போது என்னையும் அழைத்துக்கொண்டு போவார். அப்போது அவர் முற்றிலும் வேறு மனிதராக மாறிவிடுவார். அவர் ஆகாயத்தில் மிதப்பதுபோல் தோன்றும். வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஒன்று எப்போதும் அவரிடம் இருந்துகொண்டே இருக்கும். அதிலுள்ள புத்தகங்கள் கிடைத்துவிடும்போது அவர் அடையும் மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எதையுமே கூறமுடியாது.

வாங்கிய புத்தகங்களைப் பாதுகாக்க என்றே மரத்தாலான கண்ணாடி வைத்த அலமாரி ஒன்றை வாங்கினார். அது மிகவும் அழகாக இருந்தது. நான்கு தட்டுகள் கொண்ட அதில் மேலே இரண்டு அறைகளுக்கு ஒரு கதவும், கீழே இரண்டு அறைகளுக்கு ஒரு கதவும் இருந்தது. எங்கள் எல்லோருக்குமே அந்த அலமாரி பிடித்திருந்தது. கதவின் மரத்தாலான பகுதியில் யானை மற்றும் குதிரையின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தது. கதவின் கண்ணாடியின் ஒரங்களில் மெல்லிய வண்ணத்தில் பூக்களின் சித்திரம் இருந்தது. அதனூடாக புத்தகங்கைளைப் பார்த்துக்கொண்டிருப்பது அப்பாவுக்குப் பிடிக்கும். பார்ப்பவர்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது அப்பாவின் அந்த புத்தக அலமாரி. ஊரிலிருந்து வரும் உறவினர்களும் அது அழகாக இருப்ததாகச் சொன்னார்கள். அந்த வீதி முழுக்கவே சில நாட்களுக்கு அப்பாவின் புத்தக அலமாரியைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. தாங்களும் அதுபோல் வாங்கவேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது. எங்களின் புத்தகங்களையும் கீழே கடைசி அறையில் வைத்துக்கொண்டோம். புத்தகங்களை எலிகளிடமிருந்து காப்பாற்றியதில் அப்பாவுக்கு பெருத்த நிம்மதி ஏற்பட்டது. ‘எப்போதும் புத்தகங்கள் கண்ணில் பட்டபடியே இருக்கவேண்டும்’ என்று சொல்வார். அதற்கு ஏற்றார்போல் அந்த புத்தக அலமாரி இருந்ததில் அவருக்கு பரமதிருப்தி. ஆனால் வழக்கம்போல் அம்மாவிற்கு அது பிடிக்கவில்லை. அலமாரி வந்த அன்று இரவு இருவருக்கும் சண்டை மூண்டது. அப்பா ஏதும் சொல்லவில்லை. மெல்லிய குரலில் ‘பசங்க எந்திருச்சுருவாங்க’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தது எங்கள் காதுகளில் விழுந்தது.

நான் ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்முன்னரும் ‘அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி வா’ என்பார். அவருக்கு நண்பர்கள் வட்டமும் மிகவும் குறைவு. சொல்லப்போனால் புத்தகங்களே அவருக்கு சிறந்த நண்பர்களாக இருந்தன. புத்தகமும் திறந்த ஜன்னல் ஒன்றும் இருந்தால் போதும், தன் வாழ்நாளை அப்படியே கழித்துவிடுவார் என்றே எனக்குத்தோன்றும்.

புத்தகங்களிடையே துளாவினேன்.

பழைய டையரி ஒன்று இருந்தது.

அப்பாவிற்கு டையரி எழுதும் பழக்கம் இருந்தது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தார். நான் பக்கங்களைப் புரட்டினேன். அம்மாவின் மறைவிற்குப் பின்னும் சில நாட்கள் வரை எழுதியிருந்தது தெரிந்தது. ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. சமீபமாக ஏதேனும் எழுதியிருக்கக்கூடும் என்று எனக்கு தோன்றவே பக்கங்களை வேகவேகமாகப் புரட்டினேன்.

யாரோ பார்ப்பது போல் ஒரு உணர்ச்சி.

சடாரென திரும்பிப்பார்த்தேன்.

யாருமில்லை.

என் முதுகுத்தண்டு சில்லிட்டது.

கடைசியாக நாங்கள் வந்துசென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேதியிட்டு எழுதியிருந்தது:

‘நான் இந்த வீட்டை இன்னும் சிறப்பானதாக கட்டியிருக்க வேண்டும். என் குழந்தைகளுக்கு இந்த வீடு சவுகர்யமாக இல்லை என்பது எனக்குத் தெரியும். நானே நினைத்திருந்த படியும் இந்த வீடு அமையவில்லை… இதைவிட நான் பெரிய சொத்துக்களாக மதிப்பது என் புத்தகங்களைத்தான். ஆனால் எனக்குப் பின் அது யாருக்குப் பயன்படும் என்பது தெரியவில்லை. யாருக்கும் பயன்படாமலும் போகலாம்…’

அதன் பிறகு ஒன்றும் எழுதியிருக்கவில்லை.

இதை எழுதியதற்குப் பின் அப்பா மேலேயே வரவில்லை என்பது புரிந்தபோது மனதில் வலித்தது.

புத்தகங்களுக்கிடையே நோட்டு ஒன்றும் இருக்கவே அதை எடுத்தேன்.

அடித்தல் திருத்தல்களுடன், அம்புக் குறிகள் இட்டு, அதில் கதைகள் எழுதியிருந்தன. அப்பா கதைகள் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. புரட்டப் புரட்ட பல தலைப்புகளில் கதைகள் இருந்தன. சில முழுமையடையாமலும் இருந்தது. நோட்டுக்கு இடையே மடித்து வைத்திருந்த காகிதம் இருக்கவே எடுத்தேன்.

அது ஒரு கடிதம்.

‘அன்புள்ள மதுமிதாவிற்கு,

நீ கொடுத்த “மிர்தாதின் புத்தகம்“ படித்தேன். என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை. என்ன புத்தகம் அது என்று வியந்துபோனேன். அதைப்படித்த பின் என் புத்தக ரசனை முற்றிலுமாக மாறிவிட்டது. அதற்காக நான் உனக்கு நன்றி சொ…..’

கடிதம் முடிக்கப்படவில்லை.

யார் இந்த மதுமிதா? சட்டென நினைவுக்கு வரவில்லை. நினைவின் அடுக்குகளின் துழாவினேன். சடாரென மின்வெட்டு போல் நினைவுக்கு வந்தது. எங்கள் ஊர் பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியை அவர். அப்பாவின் மீதான அம்மாவின் கோபங்கள் வெறும் புத்தகங்கள் சார்ந்தது மட்டுமல்ல என்பது புரிந்தது. அப்போது ஏதோ பொறிதட்டவே, கீழே கடைசி அறையில் வலதுபுறம் பார்த்தேன்.

by mm என்றிருந்தது.

மனதில் ஏதேதோ எண்ணவோட்டங்கள்.

நினைவின் நதியில் பலநூறு சிந்தனைகள் ஓடின.

ஜன்னலைத் திறந்து வைத்தேன்.

சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது.

மாடிப்படியில் யாரோ ஏறிவரும் ஓசை.

‘அப்பா சித்தப்பா வரச்சொன்னார்’

அனுதான் மேலே வந்தாள்.

நான் அவளை வாரி அணைத்தேன்.

‘அப்பா, தாத்தாதான் இல்லையே இந்த புக்ஸ் எல்லாம் யார் படிப்பாங்க? நாம ஊருக்கு எடுத்துட்டு போயிடலாமா?’

‘எடுத்துட்டு போலாம்’ என்றேன் கம்மிய குரலில்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்

அப்போது ஜன்னல் திரை காற்றில் படபடவென சப்தித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *