கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்  
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 27,825 
 

‘இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு’ என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான்.

பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல். நிலவொளி இனம் புரியாதபடி அச்சமூட்டியது. தேசிய நெடுஞ்சாலை 94ல் சீராகச் சென்று கொண்டிருந்தது அவனுடைய பால்வண்டி. விடிவதற்குள் மினியெபொலிஸ் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தான். தன் தொழிலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இருபதாயிரம் கேலன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்தொட்டி பொருத்திய பதினெட்டு சக்கர க்ராஸ்லேன்ட் டிரக்கில், விஸ்கான்சின்-மினசோடா எல்லையருகே வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். பால் ஏற்றி வரும்போது அதிக எடை காரணமாகச் சோதனை அதிகாரிகளிடம் பலமுறை அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். எடை ஏறக்குறைய இருந்தாலாவது அபராதம் கட்டித் தப்பித்துக் கொள்ளலாம். இந்த முறை அவன் செய்வது கடத்தல். பால்தொட்டிக்குள், பதிமூன்று முதல் பதினெட்டு வயது வரையிலான ஒன்பது இளம் பெண்களைக் கடத்திக் கொண்டு வருகிறான். சிக்கினால் சிறையும் கிடைக்கலாம், கொலையும் நடக்கலாம்.

கழுத்தருகே ரத்தக்காயம் இன்னும் வலித்தது. டொலீடோவில் நிறுத்தி ஒன்பது பெண்களுக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு போனதைக் கவனித்து, அவனைப் பின்தொடர்ந்த டேனியின் இரண்டு ஆட்களையும் ஆண்கள் கழிவறையில் நாறாய்க் கிழித்துப் போட்டிருந்தான். அப்போது ஏற்பட்ட காயம். தவிர்த்திருக்கக் கூடிய சண்டை என்றாலும் டேனிக்குச் செய்தியனுப்பவேண்டி மிகையான வன்முறையைக் கையாண்டிருந்தான். டொலீடோவில் தப்பித்தது அதிசயம். டேனியின் ஆட்கள் விஸ்கான்சின் எல்லையருகே ஹட்சனில் நிச்சயம் காத்திருப்பார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் சாலையில் கவனம் செலுத்தினான்.

உள்ளே அடைபட்டுக் கிடந்த பதிமூன்று வயதுப் பெண் நினைவுக்கு வந்தாள். திட்டப்படி எல்லாம் நடந்து முடிந்ததும், இசைந்தால் அவளை இன்றைக்கு வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இந்த முறை அவள் தான் முதல் பயணி. பாஸ்டன் அருகே ஊஸ்டரில் அவளைச் சந்தித்தான். ‘முலைமுனை’ என்று வழங்கப்படும், இளம் பெண்கள் மேலாடையின்றி நட/நடனமாடும், ஆண்களுக்கான பொழுதுபோக்கு அரங்கத்துள் இரண்டங்குல இரும்புத்தூணில் கால்களைப் பிணைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தவளை, தனியறையில் சந்திக்க முதலாளியிடம் பேரம் பேசினான். அரை மணி நேரத்துக்கு முப்பத்தைந்து டாலர். பேருக்கு ஏதோ போர்த்திக் கொண்டு தனியறையில் அவனைச் சந்தித்தவள், உடனடியாகப் பயந்தாள்.

“அண்ணே, எனக்கு அது பழக்கமில்லே.. இது வேணும்னா…” என்று கைகளை வாயருகே வைத்துச் சைகை காண்பித்தாள்.

“உனக்கு என்ன வயசு?” என்று கேட்டான்.

“பதினெட்டு” என்றாள்.

“கொன்னுடுவேன், உண்மையைச் சொல்லு” என்றான்.

“பதினெட்டு தான்…” என்றாள் தயங்கியபடி.

“ஜட்டியை அவுடி, பாக்குறேன்” என்றான் கோபத்துடன்.

நடுங்கி விட்டாள். “இல்லண்ணே, எனக்கு பதிமூணு ஆவுது அண்ணே…முதலாளி தான் பதினெட்டுனு சொல்லச் சொன்னாரு… என்னை ஒண்ணும் செஞ்சிடாதீங்க” என்றாள்.

பொறுமையாக அவளை ஏற இறங்கப் பார்த்தவன், “என் கூட வரியா?” என்று கேட்டான். எல்லா விவரமும் சொன்னான். உடன் வராவிட்டால் போலிசிடம் சொல்லி விடுவதாக பயமுறுத்தியதும் இசைந்தாள். “முதலாளி கொன்னுடுவாரு..” என்று தயங்கினாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் முதலாளியிடம் பேரம் பேசி ஆயிரம் டாலர் கைமாறியதும், அவளைப் பால்வண்டியில் ஏறச் சொன்னான். மேலிருந்து கீழே மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பால்தொட்டியில், கீழ்ப் பகுதியிலும் மேல் பகுதியிலும் மட்டும் பால் இருந்தது. இடைப்பகுதியில் கடத்தலுக்காகவே பத்து படுக்கைகள், ரெயில்வே பெர்த் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுனர் அறை வழியாக பால்தொட்டியின் இடைப்பகுதிக்குள் நுழைந்தவளை உள்ளே போய் படுக்கச் சொன்னான். பயந்து கொண்டே உள்ளே போனாள். சரக்கு கிடைத்ததாகச் செல்போனில் செய்தி அனுப்பியதும், அடுத்த சரக்கு நியுயார்க் அருகில் பதினாறு பவுண்டு என்று விலாசத்துடன் மறுசெய்தி வந்தது. பதினாறு வயதுப் பெண் என்று புரிந்து கொண்டான். கதவை அடைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

முப்பது வருடமாக இதே தொழிலில் டேனியிடம் நாணயமாக வேலை பார்த்து வந்தான். படிப்பில் விருப்பமில்லாமல் ஓடிப் போன பெண்களும், அப்பனுக்கோ வீட்டில் அத்து மீறி நடக்கும் மற்ற ஆண்களுக்கோ, சில சமயம் கணவனுக்கோ, பயந்து வீட்டை விட்டு ஓடி வழிதவறிப் போன பெண்களும், வேறு எதற்காவது ஆசைப்பட்டு மோசம் போன பெண்களும்… இது போன்ற சிற்றூர்களில் ஆபாச நடனத்திலும் விபசாரத்திலும் ஈடுபட்டிருக்கும் விவரம் டேனிக்குக் கிடைக்கும். அந்தச் சிற்றூர்களிலிருந்து இருபது வயதுக்குட்பட்ட இளம் பெண்களை ஆசை காட்டியோ, பயமுறுத்தியோ, பல சமயம் போதை மருந்து கொடுத்தோ, முதலாளியிடம் பணம் கொடுத்தோ, கடத்திக் கொண்டு போய் லாஸ்வேகசிலும் ரீனோவிலும் தலைக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் டாலரென்று வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றபடி விற்க வேண்டியது அவன் வேலை. வேலை முடிந்ததும், ஒரு பெண்ணுக்கு ஐநூறு டாலர் என்று கணக்குப் பார்த்து டேனி அவனிடம் பணம் கொடுக்கத் தவறியதே இல்லை. சென்ற நான்கு வருடங்களாக அவன் தனியாக வந்து விட்டான். டேனியையோ மற்ற ஆட்களையோ காட்டிக் கொடுக்காவிட்டாலும், தனியாகத் தொழில் செய்ய வந்தது டேனிக்குப் பிடிக்கவில்லை.

பெண்கள் கடத்தல் வேலை நிறையவே மாறிவிட்டது என்று நினைத்தான். முன்பெல்லாம் வெள்ளைக்காரப் பெண்கள் தான் இப்படிச் சிக்குவார்கள். பிறகு மெக்சிகோ, பொலிவியா என்று தென்னமெரிக்கப் பெண்கள் சிக்கத் தொடங்கினார்கள். பல கிழக்கு ஜெர்மனி, போலந்து, ஆப்பிரிக்கப் பெண்களைக் கடத்தியிருக்கிறான். சமீப காலமாக இளம் இந்தியப் பெண்கள். சீனப் பெண்கள். படிக்க வேண்டிய வயதில் ஏன் இத்தனை இளம் பெண்கள் இப்படி அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்று நினைத்திருக்கிறான். அவர்கள் வீட்டை விட்டு ஓடாவிட்டால் தனக்கு ஏது பிழைப்பு, எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று அடங்கி விடுவான்.

ஹட்சன் வருவதற்குள் ஏதாவது யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் சரக்கையெல்லாம் வண்டியோடு சேர்த்து டேனி எடுத்துக் கொண்டு போய் விடுவான். வலது இருக்கையில் இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் சேனலை மாற்றி பால் வண்டிக்குள் நடப்பதைக் கவனித்தான். மற்றப் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்க ஏழாவது படுக்கையில் இரண்டு பெண்கள் எதிரெதிரே மண்டியிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆல்பெனியில் பிடித்த இரட்டையர்கள். அவர்களைச் சரியாகச் சோதனை செய்யாதது தவறோ? ஏதாவது அசட்டுத்தனம் செய்து வைக்கப் போகிறார்களே என்று நினைத்தான்.

ஆல்பெனியில் பதினேழு பவுண்டு என்று கிடைத்தச் செய்திப்படி விடுதி மேடம் மார்கோவிடம் பேரம் பேசித் தனியறைக்குள் போனதுமே, தான் போட்டிருந்த கால்சட்டையை கழற்றிப் போட்டாள் அந்தப் பெண். அவளைத் தடுத்து நிறுத்தி உடன் வரும்படி அழைத்து விவரமெல்லாம் சொன்னான். அடி உதை கிடையாது, வாரா வாரம் பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டியவுடன் “என் தங்கையும் கூட வந்தால் தான்” என்று அடம் பிடித்தாள். அப்போது தான் இரட்டையர் என்ற விவரமே தெரிய வந்தது. வேறு வழி தெரியாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்ததில் அவனுக்கு ஓரளவு திருப்தி தான் என்றாலும், அவர்களைச் சரியாகச் சோதனை செய்திருந்தால் டொலீடோவில் ஏற்பட்டதைத் தவிர்த்திருக்கலாம் என்று நம்பினான்.

டேனியின் இரண்டு ஆட்களயும் அடித்துப் போட்டுவிட்டு கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட வண்டிக்குள் போனதும், அந்தப் பெண்கள் இவன் கழுத்தைத் துடைத்த போது, இரட்டையரில் இரண்டாமவள் கையில் கட்டியிருந்த அடையாளத் தகட்டை கவனித்தான்.

“என்ன அது?” என்றான்.

“அதிர்ஷ்ட தாயத்து, கழற்றாதே என்று மார்கோ தான் சொல்லிக் கொடுத்தாள்” என்றாள் இரண்டாமவள்.

“கழற்று. அது தாயத்து இல்லை. ஜிபிஎஸ் அடையாளம். இதை வைத்து டேனி நம்மைத் தொடர்ந்து வந்திருக்கிறான். நீங்கள் இருக்கும் இடம் இன்னும் தெரியாது என்றாலும் கண்டுபிடிப்பது சுலபம். என்னிடம் இந்த வண்டியைத் தவிர எதுவும் கிடையாது” என்றான் கோபத்துடன். ரத்தக்காயத்தைக் கட்டுப்படுத்தக் கூட நேரம் எடுத்துக் கொள்ளாமல் வண்டியை கிளப்பினான்.

ஆல்பெனிக்குப் பிறகு அடிகா, சிரக்யூஸ், ஈரி, ஆக்ரன் என்று பல இடங்களில் பெண்களை ஏற்றிக் கொண்டு சுமுகமாக விஸ்கான்சின் எல்லை வரை வந்து விட்டிருந்தாலும், மார்கோ ஏமாற்றிவிட்டாளே என்று மீண்டும் ஆத்திரம் வந்தது. என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு டேனியிடம் காட்டிக் கொடுத்துவிட்டாளே? மினியெபொலிஸ் பற்றிச் சொல்லியிருப்பாளோ? அவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ? மினியெபொலிஸ் ஆட்களுக்கு போன் செய்தான். பதிலில்லை. ஹட்சன் கடந்தபின் மறுபடி போன் செய்து அப்பொழுதும் பதில் வராவிட்டால், திட்டப்படிச் சரக்கை மாற்றிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். சிக்கல் தான். முதலில் ஹட்சனிலிருந்து தப்பிக்க வழி செய்யத் தீர்மானித்தான்.

‘ஹட்சன்: 3 மைல்’ என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் வேகத்தைக் குறைத்தான். குறுக்கு வழியில் போக ஒரு கணம் யோசித்துவிட்டு, எண்ணத்தைக் கைவிட்டான். பொது இடங்களின் பாதுகாப்பு அவனுக்குத் தேவைப்பட்டது. எல்லையருகே நெடுஞ்சாலைப் பயணிகளுக்கான ஓய்வு மையத்துள் நுழைந்து, ஷெல் பெட்ரோல் நிலையத்துள் ஒதுக்குப்புறமாய் வண்டியை நிறுத்தினான். கண்டிப்பாக டேனியின் ஆட்கள் இங்கே இருக்கிறார்கள் என்று உணர்ந்தான். எப்படியாவது தப்பிக்க வேண்டும். கடவுளே, இன்றைக்கு ஒரு முறை எனக்கு உதவி செய். இன்றுடன் இந்த வேலையை விட்டு விடுகிறேன். பால்தொட்டியின் இடைப்பகுதி கதவைத் தட்டினான். இரட்டையர்கள் எழுந்து வந்தனர்.

“என்ன?” என்றார்கள்.

“என்ன ஆனாலும் சரி, போலீஸ் வந்தாலொழிய நீங்க யாரும் வெளியே வரவேண்டாம், புரியுதா? அவங்கள்ளாம் இன்னும் தூங்குறாங்களா?” என்றான்.

“இல்லை, சும்மா தான் படுத்துட்டிருக்காங்க. நாங்க எல்லாம் ஒண்ணுக்குப் போவணும். பசி வேறே”

“நான் எதுனா ஏற்பாடு செய்றேன். திரும்பி வரமட்டும் நான் சொன்னது கவனம் இருக்கட்டும்” என்று திரையை இழுத்து, மூடிய கதவை மறைத்தான். வண்டிக்குள்ளிருந்த ஐந்து கேலன் காலித்தொட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு நிலையத்திலிருந்த முப்பது பம்புகளில் ஆளில்லாத பம்ப் ஒன்றில் பொறுத்தி, இயக்கிவிட்டு ஒதுங்கினான். ஐம்பதடி நடந்து சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுத் தரையில் எறிந்தான். விரைவில் தொட்டி நிரம்பி பெட்ரோல் வழிந்தோடும். அதிர்ஷ்டமிருந்தால் சிகரெட் நெருப்பில் சிக்கி இந்த இடம் தீப்பற்றும். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் வந்து குட்டையைக் குழப்புவார்கள். அந்தக் குழப்பத்தின் பாதுக்காப்பில் தப்பிவிடலாம் என்று திட்டமிட்டான்.

ஓய்வறைக்குள் நுழைந்து, தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதாவென்று பார்த்தான். மெள்ள நடந்தபடி உணவகத்திலிருந்த பல கடைகளை நோட்டமிட்டான். நூறு பேர் பிடிக்கும் இடத்தில் பத்து பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கண்டிப்பாக இங்கே இருக்கிறார்கள் என்றது அறிவு. டாகோ பெல் கடைக்குள் நுழைந்தான். கடைக்காரப் பெண்ணிடம், “இரண்டு சிக்கன் பரீடோ, இரண்டு என்சிலாடா” என்றான். ஒவ்வொரு கடையிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்ள நினைத்தான். உணவு வரும் வரை ஓய்வெடுக்கலாம் என்று உட்கார்ந்தவனைச் சுற்றி நான்கு பேர், காற்றிலிருந்து உண்டானது போல், எங்கிருந்தோ வந்து அமர்ந்தனர். நால்வரில் ஒருவன் டேனி.

“டேனியல்.. எங்கே இன்னும் காணோமே என்று பார்த்தேன். நலமா?” என்றான். பயப்படுவதாகக் காட்டிக் கொள்வதில்லை என்று தீர்மானித்திருந்தான்.

“வாயைத் திறக்காம எங்களோடு வா” என்ற டேனி, இடுப்பில் மறைத்து வைத்திருந்தத் துப்பாக்கியைக் காட்டினான்.

இவர்கள் எல்லோரையும் கண்டு சந்தேகப்பட்ட கடைக்காரப் பெண், துப்பாக்கியைப் பார்த்து நடுங்கி துரிதமாக மறைந்து போனாள்.

“நீ கடத்திக்கிட்டு வந்த பொண்ணுங்களை என் கிட்டே கொடுத்துடு” என்றான் டேனி.

“நான் யாரையும் கடத்தலை. என் வண்டியைச் சோதனை போட்டுக்க. பத்தாயிரம் கேலன் பால் தான் எடுத்துட்டுப் போறேன்” என்றவன், ஓரக்கண்ணால் வலது பக்கத்திலிருந்த டேனியின் ஆள் தன்னைக் கத்தியால் குத்த வருவதைக் கவனித்து, புயல் வேகத்தில் பின்வாங்கி இடது பக்கத்திலிருந்தவனைக் கவசமாய் இழுத்து, கத்திக்குத்தைத் தாங்கினான். குத்த வந்தவன் சுதாரிக்குமுன் அருகிலிருந்த நாற்காலியை எடுத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்தான். அடி வாங்கியவன் மண்டையிலிருந்து ரத்தம் தெறித்துக் கீழே விழுந்தான். டேனியும் எஞ்சியிருந்த மற்றவனும் தன் மேல் பாய்வதைப் பார்த்து, கீழே விழுந்து கிடந்தவனை அப்படியே தூக்கிச் சுழற்றி அவர்கள் மேல் எறிந்து விட்டு ஓடினான்.

டேனி சுட்டான். துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டு அவன் உருள, வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறிக்கொண்டு ஓடினார்கள். டேனி மறுபடி சுட்டான். குண்டு அவன் இடது காலைத் தேய்த்துக் கொண்டு போக, சுருண்டு விழுந்தான். டேனியும் ஆளும் நொடியில் அவனருகில் வந்தனர். அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தி “வீணாச் சாவாதே” என்றான் டேனி. “எழுந்து நட, உன் வண்டிக்கு” என்றான்.

அவர்களுடன் வண்டியை நோக்கி நடந்தான். எப்படித் தப்புவது? பாழாய்ப் போன சிகரெட் என்னவானது? இத்தனை நேரம் இந்த இடமே எரிந்திருக்க வேண்டுமே? யாராவது பார்த்து அணைத்து விட்டார்களா? அவன் மனம் அலைபாய்ந்தது. வண்டியருகே வந்து விட்டார்கள்.

“நீ வெளியே நில்” என்றான் டேனி. அருகிலிருந்தவனிடம் “இவன் நவந்தா சுட்டுத் தள்ளு, நான் வண்டிக்குள்ள பாக்குறேன்” என்றபடி தொட்டியின் இடைப்பகுதியை மறைத்த திரையை விலக்கினான். அவனைப் பார்த்துச் சிரித்தான் டேனி. “நான் சொல்லிக் கொடுத்த வித்தையை என் கிட்டேயே காட்டுறியா?”. கதவை உதைத்துத் தள்ளி உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்த பத்து நொடிகளுக்குள் வெடிச்சத்தம் கேட்டது. டேனியின் துப்பாக்கி என்று நினைத்து அதிர்ந்தவன், திரும்பிப் பார்த்தான். அவனெறிந்த சிகரெட் துண்டிலிருந்து பற்றி வேகமாகப் பரவிக் கொண்டிருந்த தீயில் சிக்கிய ஒரு டயர் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியில் இருவரும் தரையில் விழுந்தார்கள். அவனோ விழுந்த வேகத்தில் எழுந்து, அருகிலிருந்த டேனி ஆளின் கழுத்தை நெறித்துப் போட்டான். வேகமாக வண்டியில் ஏறினான். கவனமாக இடைப்பகுதிக்குள் நுழைந்தவன், கீழே குப்புற விழுந்து கிடந்த டேனியைப் பார்த்தான். டேனியின் மண்டையிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

“எங்களுக்கு ஒண்ணுக்கு போவ அவசரம். நீ வர்றதுக்குள்ள இரண்டிரண்டு பேரா போவலாம்னு முடிவு செஞ்சு நாங்க இரண்டு பேரும் போனப்ப நீங்க சண்டை போட்டுக்கிட்டிருந்ததைப் பார்த்தோம். அதான் இங்கே வந்து தயாரா இருந்தோம். உள்ளே வந்தவனை இடறிட்டு, அவன் தலையைப் பிளந்துட்டோம்” என்றனர் இரட்டையர். “கீழே விழுந்த டேனி தன்னோட துப்பாக்கியினாலேயே சுட்டுக்கிட்டான்”. டேனி முனகினான்.

“உனக்கென்ன.. இப்படி கழுத்திலும் காலிலும் கையிலும் ரத்தமா கொட்டுதே?” என்றாள் அவனைப் பார்த்த இன்னொருத்தி.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. மொதல்ல டேனியை இங்கிருந்து தூக்கிப் போடணும்.. ஒரு கை கொடுங்க” என்றான். பெண்கள் உதவியுடன் டேனியைத் தூக்கி வெளியே எறிந்தான். தரையில் விழுந்த டேனி துடித்து அலறினான். “வேண்டாம்… தீ.. தீ” என்றான். விழுந்த இடம் அதற்குள் சூடேறிவிட்டது.

அவன் டேனியிடம் “அதிர்ஷ்டமிருந்தால் பிழைத்துக் கொள், இல்லாவிட்டால் கரியாகு” என்றான். வேகமாகப் பரவிக்கொண்டிருந்த தீ பின்தொடர, வண்டியைக் கிளப்பி அங்கிருந்து அவசரமாக விலகினான். பெட்ரோல் பம்பைச் சுற்றியிருந்த தானியங்கி நீர்த்தூறல் கருவிகள் தீயணைக்க முனைய, வந்திருந்த தீயணைப்புக் குழு மற்றும் காவல் துறையினர் தீயணைப்பதிலும் போக்குவரத்தைச் சீர்படுத்துவதிலும் கவனமாக இருந்தார்கள். அவன் பால்வண்டியை பெட்ரோல் பம்பின் பின்புறமாக ஓட்டிச் சென்று வரிசையாக நின்று கொண்டிருந்த நூற்றுக் கணக்கான வண்டிகளுடன் கலந்தான்.

மினியெபொலிஸ் சேரும் போது காலை ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. திட்டப்படி எல்லோரையும் மேரிஜேகப் நிலையத்தில் இறக்கிவிட்டான். வீட்டுக்குக் கிளம்பத் தயாரான போது அவனுக்கு மயக்கமாக வந்தது.

“உடம்பெல்லாம் இப்படி ரத்தக்காயமாக இருக்குதே… டாக்டரை அனுப்புறேன்” என்றாள் கிரேஸ், நிலையத்தின் தலைமையதிகாரி.

“ஓய்வெடுத்தா எல்லாம் சரியாயிடும். மாலை ஆறு மணி போல் திரும்பி வரேன்” என்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த பதிமூன்று வயதுப் பெண்ணைப் பார்த்துச் சிரித்து, அவள் கன்னத்தைத் தட்டினான். “இன்னிக்கு என் வீட்டுல வந்து ராத்தங்கிக்க, புரியுதா?” என்றான். அவள் புரியாமல் தலையாட்டினாள்.

அன்று மாலை இறந்து போனான்.

அடுத்த வாரங்களில் மேரிஜேகப் நிலையத்தைப் பற்றித் தொலைக்காட்சியிலும் செய்திப் பத்திரிகைகளிலும் நிறையவே அடிபட்டது. தொலைக்காட்சிப் பேட்டியில் கிரேஸ் சொல்லிக் கொண்டிருந்தாள் “… சிக்கிக் கொண்ட இளம் அபலைப் பெண்களை விடுதிகளிலிருந்து மீட்டுக்கொண்டு வந்து காப்பாற்றி இருக்கிறோம். சென்ற நான்கு வருடங்களில் இதுவரை ஐம்பது பேரை எங்கள் நிலையம் காப்பாற்றி புதுவாழ்வு அளித்திருக்கிறது. சேவை இயக்கமான எங்களால் இது போல் அபாயகரமான விழிப்புணர்ச்சி முயற்சிகளில் பிறர் உதவியில்லாமல் இறங்கிக் கொண்டிருக்க முடியாது. இவர்களையெல்லாம் காப்பாற்றி எங்களிடம் சேர்த்தவரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்….”

டிவி பார்த்துக்கொண்டிருந்த பதிமூன்று வயதுப் பெண், அவனுக்காகச் சொட்டுக் கண்ணீர் சிந்துவாள் போலிருந்தது.

– 2010/07/23

Print Friendly, PDF & Email

1 thought on “கடைசி வண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *