யார் மேல தப்பு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 15,721 
 

காட்சி 1:

“என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!”

“இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்”

“என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?”

“சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி”

“யார் மேல தப்பு?”

“ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். எப்பவுமே பொய் சொல்லிகிட்டே இருந்தா, எனக்கு அவன் பேர்ல ஒரு நம்பிக்கையே வரமாட்டேங்குதுடி”

காட்சி 2:

“கலாதான் எல்லாத்துக்கும் காரணம். என்னை நம்பவேமாட்டேங்கறாடா”

“ஏன் ரகு? நீ அவகிட்ட உண்மையாதான இருந்த, எனக்குத் தெரியுமே!”

“உனக்கு தெரியுது, அவளுக்குத் தெரியமாட்டேங்குதே?”

“ஏன்டா? என்ன ஆச்சு?”

காட்சி 3:

“எப்பவுமே பொய் சொல்றானா? என்னென்ன விஷயங்களுக்கு-டி?”

“ரொம்பச் சின்ன விஷயத்துல இருந்து பெரிய விஷயம் வரைக்கும்-டி. எப்பவும் அவன் சொன்ன நேரத்துக்கு என்னைச் சந்திக்க வந்ததே இல்ல, தெரியுமா? தாமதம் ஆனா ஒரு ஃபோன்கூட பண்ணமாட்டான். தாமதமா வந்ததுக்கு சொல்ற காரணமும் நம்பற மாதிரியே இருக்காது. ஒவ்வொரு தடவையும் காத்திருந்து காத்திருந்து எனக்கு வெறுத்துடுச்சி”

“உனக்கு பொய் சொன்னா பிடிக்காதுன்னு தெளிவா சொல்லவேண்டியதுதானே?”

“எவ்ளோ தடவைடி சொல்றது? இனிமே தாமதம் ஆகாதுன்னு தலையில் அடிச்சி சத்தியம் மட்டும் பண்ணுவான், ஆனா அது மாதிரி நடந்துக்கவேமாட்டான்”

காட்சி 4:

“உண்மையாவே என்னால சொன்ன நேரத்துக்கு அவளைப் பார்க்க போக முடியாம போனாலும், நான் பொய் சொல்றதா நெனைக்கறாடா”

“அப்படிப் போக முடியாதப்போ, ஒரு ஃபோன் பண்ணி சொல்லலாம்ல”

“அவ எப்படியும் நான் சொல்றதை நம்பமாட்டா, நேர்லன்னாவது கையை காலை பிடிச்சி கெஞ்சி சமாளிக்கலாம், ஃபோன்ல ஒண்ணும் முடியாதே”

“நீதான் உன்னோட நண்பர்கள் பிறந்த நாளுக்கே நிறைய பரிசுகள் குடுத்து அசத்துவியே? அப்படி அவளையும் அசத்தியிருக்கலாமே?”

காட்சி 5:

“பொய் சொல்றதைக்கூட விடுடி, என்னோட பிறந்த நாளுக்கு எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பரிசு கூட குடுத்ததில்ல தெரியுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு கூட தெரிஞ்சு வெச்சிக்கணும்-ங்கற ஆர்வம் இல்லைடி அவனுக்கு”

“இதெல்லாம் ரொம்ப மோசம்டி – பிறந்த நாளுக்கு பரிசு எதிர்பார்க்கறதெல்லாம் அடிப்படை ஆசைகள், அதைக்கூட செய்யலைன்னா எப்படி?”

“சம்பந்தமே இல்லாம பரிசு குடுக்கறதுல கில்லி அவன். ஒரு தடவை ஷேவிங் செட் குடுத்தான்னா பாரேன்”

“ச்ச்ச்சீ… என்னடி அவன் பைத்தியமா?”

காட்சி 6:

“அப்படிதான்டா அவளை அசத்த நெனைச்சி நெறைய பரிசுகள் குடுத்துட்டே இருந்தேன். எதுவுமே பிடிக்கலைன்னுட்டா. ஒரு தடவை நம்ம முகிலுக்கு குடுக்கவேண்டிய பரிசு தவறுதலா மாறிப் போய் அவளுக்கு ஷேவிங் செட் பரிசா போயிடுச்சி. செம திட்டு திட்டினா மச்சான் அன்னைக்கு, பத்து ஜென்மத்துக்கு மறக்காது”

“பூச்செண்டு, பூங்கொத்து மாதிரி ஏதாவது முயற்சி பண்ணவேண்டியதுதானே?”

“அதுவும் பண்ணிட்டேன் மச்சி, அதுல இருந்த பூக்கள் எதுவுமே நல்லாயில்லைன்னு சொல்லிட்டா”

காட்சி 7:

“சரி போகட்டும் பரிசுதான் இப்படி சொதப்பறானேன்னு பார்த்தா, பூச்செண்டு-ன்னு ஒண்ணு குடுத்தான் பாரு, இனிமேல பூ எதுவும் வெச்சிக்கவே கூடாதுன்னு வெறுக்கற அளவு பண்ணிட்டான். அதுல எல்லாமே வாடிப்போயிருந்தது, கண்ட கண்ட நிறங்கள்ல வேற இருந்தது. இவனுக்குன்னு எங்க இருந்துதான் கெடைக்குதோ இதெல்லாம்”

“உண்மைலேயே ரொம்பப் படுத்தறாண்டி உன்னை. வாசனை திரவியம், கைக்கடிகாரம், அலைபேசி இப்படி ஏதாவது குடுத்தானா?”

“அது ஒண்ணுதான் குறைச்சல். வெளிநாட்டு வாசனை திரவியம்-ன்னு ஒண்ணு குடுத்தான் பாரு, நம்ம பாரிஸ் கார்னர்ல கூட அதைவிட நல்லதா கிடைக்கும். ஆண்கள் கட்டிக்கற கைக்கடிகாரம் குடுத்தான். மொக்கையா ஒரு அலைபேசி குடுத்தான். எல்லாத்தையும் அவன் மூஞ்சியிலேயே வீசிட்டேன்”

காட்சி 8:

“வாசனை திரவியம், கைக்கடிகாரம், அலைபேசி இப்படி ஏதாவது குடுக்கவேண்டியதுதானே-ன்னு கேட்டு, மந்தமான மனசுல மங்காத்தா ஆடாதே. நான் எதைக் குடுத்தாலும் பிடிக்கலைன்னு என் மூஞ்சியிலேயே வீசிட்டா”

“ச்ச்சே..பொண்ணாடா அவ? ராட்சசி! உன்னைப் புரிஞ்சிக்காம வேற யாரைதான் புரிஞ்சிக்கப்போறா? பேசாம அவளை மறந்துட்டு வேற யாரையாவது காதலிடா, உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும் ரகு”

“அப்படித்தான் செய்யணும்-ன்னு முடிவெடுத்து இருக்கேன்டா”

காட்சி 9:

“உன் நிலைமையைப் பார்த்தா பாவமா இருக்குடி. உன்னைப்பத்தி எதுவுமே புரிஞ்சிக்காத ஒருத்தன் கூட உன்னால கண்டிப்பா சந்தோஷமா வாழவேமுடியாது. அவனை மனசுல இருந்து ஒழிச்சிக் கட்டிட்டு வேற நல்ல பையனா பார்த்து காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகற வழியைப் பாருடி கலா”

“அதைத்தான் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன்டி”

காட்சி 10:

“கலா! எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்குது. நாம கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம். ஆனா, ஒரே ஒரு நிபந்தனை. நீ உன் பேரை மாத்திக்கணும்”

“நான் காதலிச்ச உங்களையே கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கும் முழு சம்மதம் ரகு, ரஞ்சனி-ங்கற பேரு பிடிச்சிருக்கா?”

அதன் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

காட்சி 11:

“ரகு! எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்குது. நாம கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம். ஆனா, ஒரே ஒரு நிபந்தனை. நீங்க உங்க பேரை மாத்திக்கணும்”

“நான் காதலிச்ச உன்னையே கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கும் முழு சம்மதம் கலா, ரமேஷ்-ங்கற பேரு பிடிச்சிருக்கா?”

அதன் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

குறிப்பு :- ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இந்தக் கதைல மொத்தம் ரெண்டு கலா, ரெண்டு ரகு இருக்காங்க. தன்னோட முன்னாள் காதலன்/காதலி பேரையே வெச்சுட்டு இருக்கற தன் (எதிர்கால) கணவன்/மனைவி தன்னோட பேரை மாத்திக்கணும்ங்கறதுதான் அவங்க விருப்பம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *