காதல் யதார்த்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 17,703 
 

(இதற்கு முந்தைய ‘சதுரங்க சூட்சுமம்’ கதையைப் படித்த பின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

ராணி மேரிக் கல்லூரியின் எதிரே அகன்ற நடைபாதையில் இன்னமும் சிவா வராததால், குமரேசன் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான். பிறகு மகாத்மா காந்தி சிலையின் கீழ் நின்று நிமிர்ந்து பார்த்தான். சிலையின் பீடத்தை ஒருமுறை சுற்றி வந்தான்.

“என்னடா காந்தி சிலையைச் சுத்தி வந்து பாத்துகிட்டு இருக்கே?” சிவாவும் சுந்தரும் அங்கு வந்தார்கள்.

“இன்னும் பத்துப் பன்னிரண்டு நாள்ல காந்தி ஜெயந்தி வரப்போகுது இல்லே? அன்னிக்கு மகாத்மா காந்தியோட இந்தச் சிலைக்கு ஒரு மாலை வாங்கிப் போடலாம்னு பாக்கறேன்.”

“ஏன் பாலிடிக்ஸ்ல குதிக்கலாம்னு பாக்கறயா?” சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே சிவா கேட்டான்.

“பாலிடிக்ஸ்ல குதிச்சாத்தான் மாலை போடணுமா?”

“இந்த தேசத்ல அதான் வழக்கம்! அக்டோபர் ரெண்டாம் தேதி இங்க வந்து பார். எத்தனை அரசியல்வாதிங்க வந்து மாலை போடறான்னு… அசெம்பிளிக்குக் கூட போவாம இருப்பானுங்க.. ஆனா அக்டோபர் ரெண்டாம் தேதி காந்தி சிலைக்கு மாலை போடறதுக்கு மட்டும் மறக்கவே மாட்டானுங்க. மாலை போட்டாச்சா, அத்தோட அவரை மறந்துடுவாங்க; அப்புறம் அடுத்த அக்டோபர் ரெண்டாம் தேதிதான். எல்லாம் ஜஸ்ட் ஷோகேஸ் பிஸ்னஸ். ஒனக்கேன் அந்தக் கண்றாவி எல்லாம்?”

“அப்ப மாலை போட வேண்டாம்னு சொல்ற?”

“மாலை போட்டே ஆகணும்னா பேசாம எனக்குப் போடு. ஏன்னா நான் பொறந்த தேதியும் அக்டோபர் ரெண்டுதான்.”

“ஆமாமா… உன்னோட டேட் ஆப் பர்த்கூட அக்டோபர் ரெண்டுதான் இல்ல? மறந்தே போயிட்டேன். ரைட் சிவா உன்னோட பர்த்டேக்கு இந்த வருஷம் நான் பெரிசா ஒரு மாலை வாங்கி உனக்குப் போட்டுர்றேன்.”

“அப்ப நானும் ஒரு மாலை போட்டுர்றேண்டா சிவா…” – சுந்தர்.

“ஓயெஸ். தாராளமா போடு. சரி, இப்ப எங்கே உட்காரலாம்? மண்ணுக்குப் போயிடலாமா, இல்லே கொஞ்சம் தள்ளி புல்வெளியிலே போய் உட்காரலாமா?”

“லான்லேயே உக்காரலாம்.”

மூன்று பெரும் சற்றுத் தள்ளிப்போய் புல்வெளியில் அமர்ந்தார்கள்.

“மழை வருமோ?”

“வந்தா என்ன, நனைவோமே?” – குமரேசன்.

“நீ நனைவே குற்றாலத்ல பசுமாடு நனையற மாதிரி! அதுக்காக எங்களாலேயும் நனைய முடியுமா? சிவா, குமரேசனை ஏதாவது சீண்ட வேண்டும் என்கிற தொனியில் கேட்டான்.

“டேய் சிவா ஒரு விஷயம்.. வந்த உடனே உன்கிட்ட சொல்லணும்னு நெனச்சேன். இன்னிக்கி மார்னிங் நான் ஆபீஸ் போறதுக்காக கிளம்பிப் போயிட்டு இருந்தப்ப ரோட்ல கவிதாவைப் பார்த்தேண்டா…” என்று ஆரம்பித்து சிவா டெலிபோன் பேசியபோது “வெரிகுட் க்வீன்மேரீஸ் எதிர்லேயா, ஒரு நாளைக்கு அந்த அழகியை நான் பார்க்காமலா இருக்கப் போகிறேன்” என்று கவிதா கேலியாகப் பேசியதுவரை குமரேசன் விலா வாரியாகச் சொல்லி முடித்தான்.

சிவாகூடச் சிறிது ஆச்சர்யப்பட்டான். “என்னடா இது, நெஜமாவே சீரியஸா கேட்கிறாளா? இல்லை, சும்மா தமாஷ் பண்றாளா?”

“அதானே தெரிய மாட்டேங்குது… என்னோட பாஸா இருக்கிறவளுக்கு என்கிட்ட என்ன தமாஷ் வேண்டிகிடக்கு?”

“அதானே!”

“என்னைப் பாத்தா பொண்ணுங்களோட சினேகம் வச்சிகிட்டுச் சுத்தறவன் மாதிரி தெரியுதா?” அடி மனதில் இருந்த வேதனையை மறைத்துக் கொண்டு குமரேசன் கேட்டான்.

“சீச்சி.. உன்னைப் பாத்து எவளாவது அப்படிச் சொல்லி விடுவாளா என்ன? என்னைச் சொல்லு… பாத்ததுமே சொல்லி விடலாம், பொம்பளைங்க பின்னாடியே சுத்தறவன்னு! இதுலேயே ரெண்டு விதம் இருக்குதுன்னு நெனக்கிறேன். ஒண்ணு பொண்ணுங்களையே சுத்தற பையன்; இன்னொண்ணு பொண்ணுங்கல்லாம் சுத்தற பையன்.” என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா, தங்களைத் தாண்டிச் சென்ற இரண்டு பெண்களையே சிறிதுநேரம் பாத்திருந்துவிட்டுத் தொடர்ந்தான், “இப்பப் பாத்தியா, நம்மைத் தாண்டிப்போன பொண்ணுங்களையே தான் பாத்தேன்… ஆனா அந்தப் பொண்ணுங்க ஒன்னையேதான் பாத்திட்டே போனாளுங்களே தவிர, என்னைக் கொஞ்சம்கூட பாக்கலை.”

“சரி, அதுக்கு நான் என்னடா பண்ண முடியும் சிவா…?”

“அதாண்டா விஷயம், நீ பொண்ணுங்களைச் சுத்தறவன்கற நெனைப்பில கவிதா பேசலை, கண்டிப்பா உன்னை வந்து நெறைய பொண்ணுங்க சுத்தும்.. அதுவும் இந்த சென்னைல என்கிறது அவளுக்குத் தெரியுது..!”

“ரியல்லி?” குமரேசன் ஆர்வமாகக் கேட்டான்.

“சர்ட்டன்லி, நீயேதான் பாரேன், நான் எப்படித் தாடி வச்ச எருமை மாதிரி இருக்கேன்; நீயெப்படி எட்டு லிட்டர் கறக்கிற ஜெர்சி பசு மாதிரி ஜம்னு இருக்கே! அதுனால நீயே பாரேன், கொஞ்ச நாள்ல இதே சென்னைல இதே ட்ரிப்ளிகேன்ல ஏழெட்டுப் பொண்ணாவது ஒனக்கு ப்ரென்ட் ஆயிடுதா இல்லையான்னு பாரு. ஒரே ஒரு பொண்ணு ஒனக்கு ப்ரெண்ட் ஆயிட்டா போறும், ரெண்டாவது பொண்ணு தானா வரும். “ஹலோ ஆர் யூ நாட் சுமதிஸ் பாய் ப்ரெண்ட்…? ஐயாம் லதான்னு சொல்லி ஒரே நிமிஷத்ல ஒன்னை ஒட்டிக்கும்…”

“டேய் டேய்… சும்மா எதையாவது அள்ளி விடாதே..!”

“ப்ராமிஸா சொல்றேன் குமரேசா, ஜோக் இல்லை நான் சொல்றது! இது க்ளீயரா கவிதாவோட மைண்ட்ல கம்யூனிகேட் ஆகியிருக்கு..! உனக்கு பாஸா இருந்தா என்ன, அவளும் பொம்பளைதாண்டா..”

“அப்படியெல்லாம் தெரியலை எனக்கு சிவா.”

“லூஸ்டா நீ, சரியான டியூப்லைட்.. ச்சே! என்கிட்டல்லாம் இந்த மாதிரி ஒருத்தி வந்து பஸ் ஸ்டாப்ல, ஆர் யூ வெயிட்டிங் பார் ஸம்படின்னு கேட்க மாட்டேங்கறா. கேட்டா, அந்த எடத்லேயே கொன்னுட்டேன் அவளை. க்ளோஸ்! அம்பேல்தான்.. யெஸ் ஐயாம் வெயிட்டிங் பார் யூ டார்லிங்’னு ஒரே ஷாட்…”

“சிக்ஸர்தான்..” சுந்தர் குதுகலத்துடன் கூவினான்.

“நீ என்னடான்னா ‘டக்’ அடிச்சுட்டு வந்து நிக்கறே! நெனச்சாலே எரியுது எனக்கு…” சிவா வெறுப்புடன் சொன்னான்.

குமரேசனுக்கு அலுப்பாக இருந்தது. “நீ ஒரு விஷயத்தை மறந்துட்டு பேசிட்டு இருக்கே சிவா. கவிதா என் பாஸ்டா..!”

“அதனாலென்ன?”

குமரேசன் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, “சரி, ஏன் இந்த மாதிரி கவிதா வந்து என்கிட்டே இதுவரைக்கும் மூணு தரம் எனக்கு கேர்ள் ப்ரெண்டு ஏதோ இருக்ற மாதிரி நெனச்சு சும்மா கேக்கணும்? நீ பதில் சொல்லு.”

“அப்படி இருக்குமோன்னு நெனைக்கிறா.”

“அதான் கேக்கறேன் ஏன்னு?”

“அதான் சொன்னேனே, உன்னைக் கண்டா பெண்களுக்குப் பிடிக்கும்னு..! கவிதாவுக்கும் அது தெரியுது.”

“தெரிஞ்சா?”

“பல பெண்களுக்கு உன்கிட்ட இம்மீடியட்டா ஒரு ப்ரெண்ட்லினேஸ் வந்திடுமே..!”

“என்னடா இது… எவளோ ஒருத்திக்கு இம்மீடியட்டா என்கிட்ட நட்பு வந்திடும்னு இவளுக்கு எப்படித் தெரியும்?”

“ஏன்னா இவளுக்கே அந்த நட்பு உன்கிட்டே வந்திருச்சே? அது இன்னொருத்திக்கும் ஏன் வரப்படாது?”

சிவா இதைச் சொன்னவுடனே சுந்தருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. “குட் ஷாட்! குட் ஷாட்” என்று கூவி விசிலடித்தான். மூன்றுபேரும் அங்கு வந்த கரும்புச்சாறு விற்கிறவனை நிறுத்தி கண்ணாடித் தம்ளர்களில் ஐஸ் மிதக்க கரும்புச்சாறு வாங்கிக் குடித்தார்கள்.

குமரேசன் பணம் கொடுத்தான். அப்போது எழெட்டுப் பெண்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சிவா அவர்களைப் பார்த்துக்கொண்டே, “எல்லாம் கல்சுரல் அகடமியில் படிக்கிற பொண்ணுங்க.” என்றான்.

“அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே.. முன்னமே தெரியுமா?”

“இல்லை. ஆனா, பாத்தாலே தெரியுதே..!”

“அதான் எப்படித் தெரியும்னு கேக்கறேன்?”

“எப்படியோ தெரிஞ்சுடுது எனக்கு! அதே மாதிரி சர்ச்பார்க் கான்வென்ட்ல படிக்கிற பொண்ணுங்களையும் டக்னு கண்டுபிடிச்சிடுவேன்..”

“பரவால்ல. பெரிய ஜீனியஸ்தான் நீ..!”

“எல்லாம் இங்க்லீஷ்தாண்டா மச்சான். சர்ச்பார்க் கான்வென்ட்ல படிச்சிட்டு காலேஜ்க்கு வர்ற ஒரு பொண்ணுகிட்டே போய் எந்த ஸ்கூல படிச்சேன்னு கேளு பாக்கலாம், அவ என்ன சொல்றாள்னு?”

“ஏன், என்ன சொல்லும் அந்தப் பொண்ணு?”

“நான் போய் ஒருதடவைக் கேட்டுட்டேன்… ‘சேச்பக்’னு டமால்னு சொல்லிட்டு அப்பால போயிடுச்சு! எனக்கு ஒண்ணுமே புரியலை. என்னடாது, எந்த ஸ்கூல்ல பாப்பா படிச்சேன்னு கேட்டா, சேச்பக்னு சொல்லிட்டுப் போகுதே.. அப்ப ஒண்ணும் புரியாம பேசாம இருந்துட்டேன். அப்புறமா நம்ம ஆபீஸ் ஸ்டெனோ கிட்டே ஒருநாள் இதைப்பத்தி கேட்டேன். அவதான் சொன்னா, சேச்பக்னு அந்தப் பாப்பா சொன்னது சர்ச்பார்க். அதைத்தான் அந்த மாதிரி ஸ்லாங்ல அடிச்சிருக்காம் பாப்பா..!”

சுந்தர் “என்னடாது நம்பற மாதிரி இல்லையே… சர்ச்பார்க்கை எப்படி சேச்பக்னு சொல்ல முடியும்… என்னதான் ஸ்லாங்கா சொன்னாலும்?” என்றான்.

“நீ பஞ்சாயத்து ஸ்கூல் வாத்யாரோட பையன்! ஒனக்கு வராது அதெல்லாம்! போய் சர்ச்பார்க்ல படி; தானா வரும்… சர்ச்பார்க்; சேர்ச்பார்க்; சேச்பாக்; கடைசில சேச்பக்னு தானா வரும் உன் வாயில இருந்து!”

குமரேசன் உள்ளங் கைகளை சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டு, சப்பணமிட்டு உட்கார்ந்தான். “சரி, அதையெல்லாம் விடுங்கடா.. இப்ப நான் என்னடா பண்ணனும் சிவா, இந்த கவிதா விஷயத்ல? மறுபடியும் மறுபடியும் அவ இந்த மாதிரி எனக்கு கேர்ள் ப்ரென்ட் இருக்கிறதாவே நெனச்சு ஏதாவது கமென்ட் அடிச்சா என்ன பண்ண நான்?”

“ஆமா இருக்கான்னு சொல்லிடு.”

“ஐயையோ!”

“ஒண்ணு இல்லை, ஒன்பது கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்கன்னு சும்மா கப்ஸா அடி.”

“போச்சுடா! அந்த மாதிரி சொன்னா அவளுக்கு என்மேல ஒரு மோசமான இமேஜ் வந்திருமேடா சிவா?”

“வராதுடா மச்சான். அவ ஒன்னை சும்மா கேர்ள் ப்ரென்ட் பத்திக் கேக்கறதே உன்மேல அவளுக்கு ஏதோ ஒரு குட் இமேஜ் இருக்கிறதாலேதான்…! அதுதான் உண்மை.”

“இதை நான் நம்பலாமா?”

“தாராளமா நம்பலாம். கண்டிப்பா கவிதாவுக்கு உன்மேல் ஒரு நல்ல இமேஜ் இருக்கு. அதனால இந்த விஷயத்ல நாம செய்ய வேண்டிய காரியம் என்னன்னா, கவிதாவோட குட் இமேஜை இன்னும் ஸ்ட்ராங்கா பில்டப் பண்ணனும்! அதை எந்த வழியில எப்போ பண்ணனுங்கறத இப்ப டிசைட் பண்ண வேண்டாம், அதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகட்டும். அதுக்கு முன்னாடி நான் அந்த கவிதாவை ஒரு தடவை நல்லா டாப் டு பாட்டம் பாக்கணும்..! அப்பத்தான் என்னால அவளை கிளீயரா அசெஸ் பண்ண முடியும் அவ எப்படிப் பட்டவன்னு…”

சட்டென்று குமரேசன் பேச்சு மூச்சற்று விட்டான்.

“என்ன குமரேசா கப்சிப்னு ஆயிட்டே? என்னிக்கி நான் பாக்கறது உன்னோட சூப்பர்ஸ்டாரை?”

“பாக்கலாம் கொஞ்ச நாள் போகட்டும்.” – தயங்கியபடி சொன்னான்.

“பயப்படாதே… நான் ஒண்ணும் அவளை தூக்கிட்டுப் போயிட மாட்டேன்.”

“சீச்சி… அதுக்கு இல்லை..!”

“வேற எதுக்கு?”

“என்னதான் இருந்தாலும் அவ என் பாஸ்.”

“தெரிஞ்சதுதானே அது?”

“அதனால அவ போற பாதையில போய் நாம கும்பலா நின்னா, என்மேல அவளுக்கு இருக்கிற நல்ல இமேஜ் உடைஞ்சாலும் உடைஞ்சிடும்…”

சிவா பேசாமல் இருந்தான். அவர்கள் மத்தியில் சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது. எதையோ மனத்திற்குள் யோசனை செய்வது போலிருந்தான் சிவா. தாடியைச் சொறிந்துகொண்டே, “குமரேசா… கவிதா யார்ன்னு க்ளியரா பாக்கறதுக்கு முன்னாடி நீ யார்னு முதல்ல பாக்கணும்.”

“நான் யார்னா?”

“கவிதாகிட்டே ஒனக்கு ஏற்படற ரியாக்க்ஷன் க்ளீயரா என்னன்னு தெரியணுமே… நான் ஒரு கேள்வி கேக்கறேன். முதல்ல அதுக்குப் பதில் சொல்றயா…?”

“கேளு.”

“நான் வந்து எத்தனையோ பொண்ணுங்களை சைட் அடிக்கிறேன்… அதே மாதிரி நீயும் கவிதாவை வெறும் சைட்தான் அடிக்கிறியா?”

“இல்லை.”

“நிச்சயமா அந்த மாதிரி இல்லேன்னு தெரியுமா?”

“நிச்சயமா தெரியும்.”

“அப்ப அதுக்கும் மேல என்னவோ இருக்கு இல்லீயா?”

“ஆமா.”

“என்ன அது?”

“தெரியலையே.”

“சும்மா டக் டக்னு பதில் சொல்லாத. கொஞ்சம் யோசிச்சுச் சொல்லு குமரேசா…”

குமரேசன் மெளனமாக உட்கார்ந்திருந்தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *