காதலுக்கு மரியாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 11,698 
 

சென்னையின் அந்த மிகப் பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலையில் சேர்ந்த முதல்நாளே முரளி இன்பமான அதிர்ச்சியடைந்தான்.

அவனுடைய ப்ராஜெக்ட் மனேஜர் ஒரு அழகிய பெண்மணி என்பதுதான் அவனுடைய இன்ப அதிர்ச்சிக்கு காரணம்.

பெயர் கவிதா. வயது முப்பது இருக்கலாம்.

முரளியிடம் முதல்நாள் அவனுடைய வேலைகளைப் பற்றிதான் கவிதா அதிகம் பேசினாள். மூன்றாவது நாள் தன்னை அவளுடைய கேபினில் சந்திக்கச் சொல்லி நேரம் கொடுத்திருந்தாள்.

பேச்சின் நடுவே அவ்வப்போது தன் டேபிளின் மீது வைத்திருந்த டிஜிடல் வீடியோ பேபி மானிடரை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென “எக்ஸ்க்யூஸ் மீ” என்று முரளியிடம் சொல்லிவிட்டு தன் மொபைலில் “கீதா, நரேன் முழிச்சிக்கிட்டான்… அவனை உடனே கவனி” என்றாள்.

பின்பு முரளியிடம் திரும்பி, மானிட்டரைக் காண்பித்து “நரேன் இஸ் மை ஒன்லி ஸன்… அவனைக் க்ரெஷ்ஷில் தினமும் விட்டு விட்டுத்தான் நான் ஆபீஸ் வருவேன். இங்கிருந்தபடியே இந்த மோட்டரோலா மானிட்டர்ல அவனைக் கவனித்துக் கொள்வேன்…” என்றாள்.

“என்ன வயசு மேடம்…? ”

“மூன்று.”

“பரவாயில்லை, இந்த டிவைஸ் இருக்கிறதுனால நீங்க நரேனை மிஸ் பண்ண வேண்டாம் மேடம்.”

“என்னை பெயர் சொல்லியே நீங்கள் அழைக்கலாம்…” அவள் உடனே பேச்சை மாற்றி ப்ராஜெக்ட் பற்றி அதிகம் பேசினாள்.

வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே முரளிக்கு கவிதாவை ரொம்பப் பிடித்துவிட்டது. அவளைப்பற்றி மற்றவர்களிடமிருந்து நிறைய தெரிந்து கொண்டான்.

அவளது கணவன் அவளை டிவோர்ஸ் செய்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது; ஒரே மகனுடன் அவள் பாலவாக்கத்தில் தனிமையில் வசிக்கிறாள்; கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாக அடிக்கடி அமெரிக்கா பறக்கிறாள்; வேலையில் மிகவும் கண்டிப்பானவள்; கம்பெனிக்கு அவளது திறமையின் மீது ஏராளமான நம்பிக்கை உண்டு; அவளது செகரட்டரி மாதுரி ஒரு ஊமை; மாதுரியை கவிதா மிக மரியாதையுடன், கவனத்துடன் நடத்துவாள்.

முதல் மாதத்திலேயே முரளி தன் திறமையினால் கவிதாவிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டான். முரளியை அடுத்த வருட அப்ரைசலில் டீம் லீடராக ப்ரோமோஷன் செய்யப் போவதாக அவனிடமே சொன்னாள். அதனால் அவன் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்தான்.

முரளிக்கு வயது இருபத்தி ஐந்து. கவிதாவின் சுறு சுறுப்பு, அவளின் திறமை ஆகியவைகளை தினமும் அருகில் இருந்து பார்த்து வருவதால் முரளிக்கு கவிதாமேல் ஒரு அதீத ஈர்ப்பு உண்டானது. தன்னைவிட ஐந்து வயதுகள் அதிகம்; ஒரு குழந்தையுடன் டிவோர்ஸ் ஆனவள். தன்னுடைய பாஸ்; ஸோ வாட்? வேறு பாஸ், வேறு ப்ராஜெக்டில் சேர்ந்து கொண்டால் போயிற்று…

அவளிடம் நேர்மையாகத் தன் விருப்பத்தைச் சொல்லி அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டான். சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.

() () ()

மாதுரியின் வீடு திருவான்மியூர் பகுதியில் இருந்தது.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அவளின் அப்பா சுவாமிநாதனும்; அம்மா மல்லிகாவும் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். அப்போது சுவாமிநாதன் ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தாலும், ஓரளவு வளமுடன்தான் இருந்தார். திருமணமான பதினைந்து வருடங்கள் கழித்துதான் மாதுரி பிறந்தாள் தவமிருந்து தங்களுக்கு ஸ்வர்ண விக்ரகம் போல் ஒரு பெண் பிறந்தபோது மகிழ்ச்சிக் கடலில் திளைத்த தம்பதியர், மாதுரி பிறவியிலிருந்தே பேசும் சக்தியற்றுப் போயிருந்தது தெரிந்தபோது கலங்கிப் போயினர்.

கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக அவர்களின் இரண்டு பக்கப் பெற்றோர்களாலும் உதாசீனப்படுத்தப்பட்டு அவர்கள் சார்ந்த சமூகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனிமை கொண்டிருந்தவர்களால் பதினைந்து வருஷம் கழித்துப் பிறந்த அழகிய பெண் ஊமையாகிப் போய்விட்ட கொடுமையைத் தாங்கவே முடியவில்லை.

அந்தத் துக்கத்திலேயே முடங்கிப்போன சுவாமிநாதனின் மேல் இரக்கமற்ற விதி மேலும் ஒரு பாணத்தைத் தொடுத்துவிட்டது. சொற்ப லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த அவருடைய போட்டோ ஸ்டூடியோவையும் நடத்த முடியாதபடி, சுவாமிநாதன் பயங்கரமான பக்கவாத நோயால் தாக்கப்பட்டு பல மாதங்கள் படுக்கையில் கிடந்து பிழைத்தார். தனக்குத்தானே பெரும் சுமையாகிப் போய்விட்ட சுவாமிநாதன், அந்த அவல நிலையிலிருந்து மீளவே இல்லை. அவரது சொற்ப சேமிப்பும் கரைந்து போயின. ஸ்டூடியோ உபகரணங்கள் அனைத்தும் வந்த விலைக்கு விற்கப்பட்டன.

செயலற்று முடங்கிப்போன கணவனுடனும்; பேசும் சக்தியற்றுப் போயிருந்த பெண் குழந்தையுடனும் மல்லிகா தன்னந்தனியாக வாழ்க்கையை திட சித்தத்துடன் எதிர்நோக்கி நின்றாள். சமையலில் தனக்கிருந்த தேர்ச்சியை மூலதனமாக்கி வித விதமான ஊறுகாய்களை தயார்செய்து விற்றாள்.

ருசியான அவளது ஊறுகாய்கள் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவான்மியூர் பகுதிகளில் பரபரவென விற்றுத் தீர்ந்தன. மல்லிகா சுயமாக தன் காலை ஊன்றிக் கொண்டுவிட்டாள்.

அப்போதுதான் ஊறுகாய் வாங்க வீடு தேடி வந்த கவிதா அவர்களுக்கு தற்செயலாக அறிமுகமானாள்.

கிணற்றடி வாழை போன்ற இருபது வயது பருவச் செழிப்பில் வளர்ந்து நின்ற மாதுரியிலும், முடங்கிப்போய் வீழ்ந்து கிடந்த அறுபது வயது சுவாமிநாதனிலும் கனத்த சோகம் கவிந்திருந்த அவலத்தைக்கண்டு கவிதாவின் மென்மையான மனம் பதை பதைத்துவிட்டது. ஊறுகாய் வியாபாரத்தின் மிகச்சொற்ப லாபத்தில் ஓர் ஊமைப் பெண்ணின் எதிர்காலத்தை உருவாக்க கனவு கொண்டிருந்த அந்த வயதான கலப்பு மணத் தம்பதியின் குடும்பப் பின்னணி கவிதாவின் காருண்யம் மிகுந்த சுபாவத்தைப் பலமாகத் தாக்கிவிட்டது.

அவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தே தீரவேண்டும் என்று மனதில் சங்கற்பமே செய்துகொண்டாள்.

கம்ப்யூட்டர் கற்றிருந்த மாதுரியை மிகச் சுலபமாக தன்னுடைய அலுவலக உதவியாளராக நியமித்தாள். அவளுக்கு வேலைகளை அக்கறையுடன் கற்றுக் கொடுத்தாள். அது மட்டுமல்லாமல், அந்தக் குடும்பத்திலேயே தன்னை ஒருத்தியாகப் பிணைத்துக் கொண்டாள்.

அந்த உண்மையான பிணைப்பால், மல்லிகா தங்கள் வீட்டின் எந்த விஷயத்திலும் கவிதாவைக் கலந்து ஆலோசித்தே முடிவு செய்தாள். கவிதாவும் அமெரிக்கா செல்லும்போதெல்லாம் நரேனை அவர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றாள்.

சேமித்திருந்த பணத்தில் மாதுரிக்கு ஒரு நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்துவிட சுவாமிநாதன்-மல்லிகா தம்பதியினர் காத்திருந்தார்கள். ஆனால் எந்தச் சமூகத்தில் போய் வரன் தேடுவது? யாரிடம் சொல்லி எந்தச் சமூக அடையாளத்தில் தங்கள் ஊமைப் பெண்ணுக்கான திருமண சம்மதம் பேச முடியும்?

கவிதாதான் தனி ஒருத்தியாக அவர்களுக்கு நம்பிக்கையையும், மாதுரிக்கு ஆறுதலையும் சொல்லியிருந்தாள். மாதுரியின் உயர்ந்த எழிலுக்கும், உன்னத குணத்திற்கும் ஏற்ற கணவன் நிச்சயமாக அவளுக்கு வாய்ப்பான் என்று கவிதா உளமார நம்பினாள். மாதுரியைப் பற்றி தனக்குத் தெரிந்த நல்ல குடும்பங்களிடம் அவளை வானளாவப் புகழ்ந்து சொல்லி வைத்திருந்தாள்.

யார் யார் வழியாகவோ சிலர் வந்து மாதுரியைப் பெண் பார்த்துவிட்டுப் போய் மேலும் அக்குடும்பத்தின் நம்பிக்கையை சிதைத்து விட்டுப் போயிருந்தனர். கவிதாதான் அவர்களை மிகவும் பொறுமை காக்கச் சொன்னாள்.

தன்னுடைய தலைமையில் மாதுரியின் திருமண வைபவம் மிக எளிமையாக, அதே சமயம் நிச்சயமாக நடைபெறுமென்று அவர்களை அமைதிப்படுத்தியிருந்தாள்.

முரளி, கவிதாவைக் கவரும் வகையில் பண்புடன் நடந்துகொண்டான். அவளுடைய பையன் நரேனை ஞாயிறுகளில் பாலவாக்கம் பீச்சுக்கு அழைத்துச்சென்று விளையாடினான். நரேன் அவனுடன் நன்றாக ஒட்டிக்கொண்டான். முரளி அவளை மணந்துகொள்ள தன்னுள் மிகுந்த ஆசையை வளர்த்துக்கொண்டான்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. நரேன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கவிதாவுடன் நிறையப் பேச முரளிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

“கவிதா, நான் உங்களுடன் இன்று ஒளிவுமறைவு இல்லாமல் பேசலாமா?”

“சொல்லுங்க முரளி, எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்க…”

“உங்களின் போராட்ட குணமும், தன்னம்பிக்கையும், அழகும் என்னை ரொம்ப பிரமிக்க வைக்கிறது…”

“சரி…அதுக்கு என்ன இப்ப?”

“நான் உங்களை மணந்துகொள்ள ஆசைப் படுகிறேன். நரேனுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், உங்களுக்கு நல்ல கணவனாகவும் என்னால் இருக்க முடியும் கவிதா… இதற்கு உங்க சம்மதம் மட்டும் கிடைத்தால் போதும்…”

“…………………….”

கவிதா பதில் சொல்லாது சிறிதுநேரம் அவனையே அமைதியாகப் பார்த்தாள்.

“முரளி, நீங்க ரொம்ப நல்லவர். முன்னுக்கு வரத் துடிக்கும் இளைஞர். எனக்கு உங்களிடம் மரியாதை உண்டு; ஆனால் எனக்கு காதலோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எண்ணமோ உங்களிடம் துளியும் ஏற்படவில்லை…”

“………………………….”

“ஆனால் எனக்காக என்னுடைய ஒரு வேண்டுகோளை பரிசீலிக்க முடியுமாவென்று பாருங்கள்…”

“சொல்லுங்க கவிதா..”

“என்னுடைய செகரட்டரி மாதுரியை உங்களுக்குத் தெரியும்… அவள் பண்பானவள், அழகானவள். ஆனால் பேசமட்டும் முடியாது.. அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நான் ஆசைப் படுகிறேன். அது நீங்களாக இருந்தால் நான் ரொம்பவே சந்தோஷப் படுவேன். நன்றாக யோசித்துப் பிறகு சொல்லுங்கள். நான் காத்திருப்பேன்…”

“இதில் யோசிக்க எதுவுமில்லை… நீங்க எது சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் கவிதா. என்னுடைய காதலில் உங்கள் மீது ஆணுக்குரிய ஒரு ஆளுமை இல்லை. நான் உங்களிடம் கொண்டது பிரமிப்புடன் கூடிய ஒரு தஞ்சமான காதல். இந்தக் காதல் தஞ்சம் உங்களிடம் எனக்கு எப்போதும் நீடிக்கும். உங்களை மணந்து கொள்ளாமலே என்னிடம் அந்தக் காதல் உங்கள்மீது மரியாதையுடன் வளரும்… ஆனால் இந்தத் திருமணத்திற்கு மாதுரியோ, அவர்களது பெற்றோர்களோ ஒத்துக் கொள்வார்களா?”

“கண்டிப்பாக ஒத்துக் கொள்வார்கள் முரளி. அதை என்னிடம் விட்டுவிடுங்கள்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *