காதலுக்கு இந்தநாள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 36,006 
 

மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அனேகமானவர்களின் முகங்களில் புன்னகை தவழ்ந்தது. அவர்களின் கைகளில் இன்று வேலன்டைன்ஸ்டே என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணமலர்கள் சிரித்தன.

குறித்த நேரத்திற்கு அவள் கட்டாயம் வருவாள் என்பதால் அவன் பார்வை நீண்டு விரிந்தது. அவசர அவசரமாக அவள் நடந்து வருவது தூரத்தில் தெரிந்தது. டெனிம் பான்ஸ், நீலநிற ஸ்போட்ரீசார்ட், நைக்கி ~_ஸ். அவனுக்கு அவளின் அந்த நடை பிடித்தது. இந்த உடை பிடித்தது.

அவன் கண்ணுக்கு அவள் ஒரு அதிசயம். மறைவாக நின்று கொண்டு அவளது நடையைப் பார்த்து ரசிக்க வேண்டும் போலவும் அவனது மனம் விரும்பியது.

வியர்க்க விறுவிறுக்க அவள் அந்தக் கூட்டத்திற்குள் அவனைத் தேடினாள். தூரத்திலேயே அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. சட்டென்று அவள் நடையிலே ஒரு மாற்றம் தெரிந்தது.

இதுவரை அவசரமாய் வேகமாய் நடந்தவள் அவனைக் கண்டதும் மெல்ல அன்னநடை நடந்தாள். அவளது செய்கையைப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவள் அவனருகே வந்து “ஹாய்” என்று புன்னகை பூத்தாள்.

‘ரொம்ப நேரம் காத்திருக்க வைத்து விட்டேனா?’ அவளது கேள்வியில் ‘மன்னித்துவிடு’ என்று சொல்வது போல் இருந்தது.

“இல்லை”என்று அனிச்சையாய் தலையசைத்தான்.

‘அவசரம், கட்டாயம் சந்திக்க வேண்டும்’ என்று டெலிபோனில் அவள் கேட்டுக் கொண்ட படியால் தான் அவன் இங்கே வந்து அவளுக்காகக் காத்தி ருந்தான்.

டெலிபோனில் முழு விபரத்தையும் சொல்ல விரும்பாதது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. சிறிது காலமாகத் தான் அவனுக்கு அவளைத் தெரியும். அதுகூட ஒரு நாள் அவள் கையில் பாரத்தோடு இருக்க இட மில்லாமல் நின்றபோது அவன் எழுந்து அவள் இருப்பதற்கு இடம் கொடுத்தான். அவள் அதற்கு நன்றி சொன்னாள்.

அவனது அந்தச் செய்கை அவள் மனதில் அவனைப் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியது. அப்புறம் அவ்வப்போது எங்கேயாவது சந்திக்கும் போது இருவரும் பேசிக் கொள்வதுண்டு.

ஆரோக்கியமான நல்ல விடயங்களை விவாதிப்பதில் அவர்கள் மனம் நிறைந்து போவதுண்டு. ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாய் இருப்பதில் எவ்வித தவறுமில்லை என்பதில் இருவருக்கும் உடன்பாடு இருந்தது.

சமீபத்தில் தான் அவனது டெலிபோன் நம்பரை அவளுக்குக் கொடுத்திருந்தான். என்றைக்குமே அவள் அவனை டெலிபோனில் அழைத்ததில்லை! இன்று காலையில் அவளது குரலைக் கேட்டதும் அவன் அசந்து போனான்.

அப்படி என்ன அவசரம்?

அவளாகவே சொல்லட்டும் என்று எண்ணியபடி அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளுக்கு என்னவோ போல இருந்தது.

“என்னவாம்?” வெட்கப் பட்டுக் கேட்டாள்.

“ஒன்றுமில்லை” என்று தலையாட்டினான்.

“ஒன்றுமில்லை என்றால் ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீங்க?”

“ஏன் பார்க்கக் கூடாதா?”

“ம்…பார்க்கலாம் ஆனால் ஏன் என்று சொல்லலாம் தானே”

அவனது பார்வை இன்று வித்தியாசமாய் இருப்பது போல அவளுக்கு தெரிந்தது.

“என்னமோ பேசணும் என்று சொல்லிவிட்டு மௌனமாய் நின்றால் என்ன அர்த்தம்?”

“நிறையப் பேசணும் ஆனால் நீங்க பேச விட்டால் தானே!”

“நானா?….அம்மாடி நான் ஒன்றும் செய்யலையே! இங்கே ரொம்பக் கூட்டமாய் இருக்கு வாங்க வெளியே போய்ப் பேசுவோம்.”

இருவரும் கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வந்தார்கள். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல ஏனோ அவளின் முகத்தில் ஒருவித உற்சாகம் தெரிந்தது. நீண்ட மௌனத்தை அவன் தான் முதலில் கலைத்தான்.

“சரி என்ன விஷயம் என்று இப்பவாவது சொல்லுங்களேன்!”

“நீங்க சொல்லுங்க”

“நான் என்ன சொல்ல….நீங்க தானே ஏதோ பேசணும் வந்து சந்திப்பிங்களான்னு கேட்டீங்க”

அவள் ஒரு கணம் தயங்கினாள்.பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய்த் தலைகுனிந்தவள்,

“அப்பா ஊரிலே இருந்து கடிதம் போட்டிருக்கிறார்” என்றாள்.

“அதற்கென்ன சந்தோஷம் தானே”

“எனக்கா?…..இல்லை!”

“ஏன்?” கேள்விக் குறியாய்ப் பார்த்தான்.

“எனக்கு வரன் பார்க்கிறாங்களாம்”

அவனுக்கு அவளது பதில் எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது. வாய்க்குள் வார்த்தை வராமல் திணறினான்.

“நான் என்ன சொல்லட்டும்” அவள் தலை குனிந்து நைக்கியால் கோலம் போட்டாள்.

பெண்கள் தலை குனிந்து வலதுகாலால் கோலம் போட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஏதோ சினிமாவில் பார்த்த ஞாபகம் அவனுக்கு வந்தது.

“நீங்க என்ன சொல்லப் போறீங்க…?”

“தெரியாது……நீங்க தான் சொல்லணும்” அவள் மெல்ல நிமிர்ந்து ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் கெஞ்சல் தெரிந்தது. அது அவன் மனதைத் தொட்டது. இவ்வளவு விரைவில் இப்படி ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்று அவன் எதிர் பார்த்திருக்க வில்லை.

அவளைப் பார்க்கும் போதும் சரி அவளோடு பழகும் போதும் சரி அவனது மனத்தில் இனம் புரியாத ஒரு வித இன்ப அலை மோதுவதை அவன் உணர்ந்து தான் இருந்தான். அவளிடம் அவனுக்குப் பிடித்தமான பல விஷயங்கள் இருந்தன.

குறிப்பாக அவளது தெளிவான கள்ளத்தனம் இல்லாத கபடமற்ற பார்வை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். யாருடைய மனதையும் நோகடிக்காமல் பல சந்தர்ப்பங்களில் அவள் புத்திசாலித்தனமாய்ப் பதிலளிப்பதை அவன் தனக்குள் மெச்சியிருக்கின்றான். சில நேரங்களில் அவளைப் பார்க்கும் போது “ஐ லவ்யூ…..லவ்யூ”ன்னு தொண்டை கிழியச் சத்தம் போட்டுக் கத்த வேண்டும் என்று அவன் நினைப்பதுண்டு.

அப்போதெல்லாம் நட்பு என்கிற அந்தக் கோடு அவனைத் தடுத்து விடுவதுண்டு. அவள் கேட்காவிட்டால் என்றாவது ஒரு நாள் இதே கேள்வியை அவன் அவளிடம் கேட்கத்தான் நினைத்திருந்தான். அதற்கு நல்ல தொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தான் இதுவரை அவன் காத்திருந்தான்.

“நீங்க ஒருவரை விரும்புவதாக அப்பாவிடம் சொல்லுங்களேன்”

“சொல்லலாம்….. ஆனால்…?”

“ஆனால் என்ன?”

“அவருக்கும் என்னைப் புடிச்சிருக்கான்னு அப்பா கேட்டா நான் என்ன பதில் சொல்ல?” ஆவலோடு விழிகளை உயர்த்தி அவனின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

இப்போ அவன் துணுக்குற்றான்.

“அவருக்கென்றால்?”; இவள் என்ன சொல்ல வருகிறாள்? இவள் மனதை யாரோ ஒருவனிடம் பறிகொடுத்திருப்பாளோ? அது தான் நண்பன் என்ற முறையில் என்னிடம் ஆலோசனை கேட்கின்றாளோ?”

நட்பு என்கிற இந்தப் பந்தத்தை நான் அசிங்கப் படுத்தக் கூடாது. என்னுடைய தவறான முடிவால் அவளது மனம் என்றுமே நோகக் கூடாது. எதற்கும் வார்த்தையை அளந்து நிதானமாக அவளோடு பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“அந்தப் பையனைக் கேட்டுப்பாருங்க, அவனுக்கும் உங்களைப் பிடித்திருந்தால் சம்மதம் என்று சொல்லி விடுங்களேன்”.

அவள் அடிபட்ட மான் போலச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

இவன் என்ன சொல்கிறான்? உண்மையாகவே ஒன்றும் தெரியாதவன் போல நடிக்கிறானா, இல்லை என்னைச் சீண்டி வேடிக்கை பார்க்கிறானா?

“அந்தப் பையனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவன் நல்லவனா, இல்லையா? உங்க வீட்டிலே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனை ஏற்றுக் கொள்வாங்களா? இதை எல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்தீங்களா? சொல்லுங்க”.

அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவனைப் பார்த்து விழித்தாள்.

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்? மனதில் இருப்பதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள்.

‘தெரியாது……! ஆனால் என்னோட மனசிலே அவர்,…..அவர் மட்டும் தான் எனக்குள்ளே இருக்கிறார் என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்”.

“அப்புறம் ஏன் யோசிக்கிறீங்க, நீங்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனை நீங்க இழக்க வேண்டி வரலாம். பயப்படாமல் அவன் கிட்ட போய்ப் பட்டென்று

“ஐ லவ்யூ” சொல்லிடுங்க, ஏனென்றால் ‘நெகிலெட்டட் ஒப்பர்சூனிட்டி நெவ ரிட்டேன்’, அதாவது தவறவிட்ட சந்தர்ப்பங்கள் என்றுமே திரும்பக் கிடைப்பதில்லை! புரியுதா?

“சொன்னால் அவர் புரிஞ்சுக்குவாரா?” என்றாள் முகம் சிவக்க.

“நிச்சயமாய்…..உங்களைப் போல ஒரு அழகான, ஸ்மார்ட்டான பெண் அவனிடம்; போய் “ஐ லவ்யூன்னு” சொல்லும் போது, அதைக் கூட அவனால் புரிஞ்சு கொள்ள முடியாவிட்டால் அவன் ஒரு மாங்காய் மடையனாகத் தான் இருக்க முடியும்.

சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய் மூடி மௌனமாய் இருந்ததால் அழிந்து போன ஆயிரமாயிரம் காதற் கதைகளில் உங்கள் கதையும் ஒன்றாகிப் போய்விடலாம். நீங்கள் தவற விட்ட இந்தச் சந்தர்பத்திற்காக காலமெல்லாம் மனசுக்குள் வெந்து கண்ணீர் வடிக்க வேண்டியும் வரலாம்.”

அவன் உணர்ச்சி வசப்பட்டு கைகளை விரித்து அவளுக்கு விளக்கம் சொல்ல, அவள் வாய்விட்டுப் பலமாகச் சிரித்தாள்.

அவனுக்கு என்னவோ போல இருந்தது. சட்டென்று நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

“ஏன்…..உங்கள் அவரைப் பற்றி நான் ஏதாவது தப்பாய்ச் சொல்லி விட்டேனா?”

“ஆமா” என்று விழியசைத்தவள் சட்டென்று கேட்டாள்,

“ஒரு பெண் தன்னை விரும்புகின்றாள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களும் இருக்கிறார்களா?”

“இருக்கலாம்…..ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன்னை வெளிக்காட்டாமல் இருக்கலாம். அவள் தன்னைத்தான் விரும்புகின்றாள் என்று தெரிந்த பின்பும் மௌனமாய் இருந்தால் அவன் முட்டாளாய்தான் இருக்கணும்”.

“அப்போ…….நீங்க முட்டாளா?”

“இல்லையே” என்று தலையசைத்தான் அவசரமாய்.

“ஐ லவ்யூன்னு ஒரு பெண் சொன்னா, அதை நீங்க புரிஞ்சுக்குவீங்களா?” என்றாள்.

“நானா?” வார்த்தை வராமல் அவன் தடுமாறினான்.

இவள் என்ன சொல்லப் போகிறாள்?

இதயமே நின்று விடாதே! இவள் கொடுக்கப் போகும் அதிரடியை உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?

அவள் அருகே வந்து அவனது காதுக்குள்,

“ஐ லவ்யூ” என்றாள் சன்னமான குரலில்.

அவன் காதுக்குள் அந்த வார்த்தைகள் தேனாய்ப் பாய்தது.

ஒரு கணம் அவனது இதயம் துடிக்க மறந்தது. இந்த நிலா உனக்காகத்தான் என்று அவனது உள்ளம் கவர்ந்தவள் முதன் முதலாகக் கொடுத்த அங்கீகாரத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தவன், ஒரு விதமாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு,

“மீ……ரூ” என்றான்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் வார்த்தைகள் வாய்க்குள் தடுமாறின.

“உண்மையாகவா?” அவளை அறியாமலே அவள், அவன் எதிரே மிக அருகே நெருக்கமாய் வந்து தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.

“இன்னுமொரு தடவை சொல்லுங்க!”

“ஐ லவ்யூ ரூ” என்றான்

அவளது அழகான மெல்லிய பூப்போன்ற சிவந்த கைகளின் தொடுகையில் அவன் மீண்டும் மெல்ல உறைந்து போனான்.

இதமான தென்றல் அவர்களை மெல்லத் தழுவி “காதலுக்கு இந்த நாள்” என்று காதுக்குள் ஏதோ ரகசியம் சொன்னது!

Print Friendly, PDF & Email

1 thought on “காதலுக்கு இந்தநாள்!

  1. நட்பா காதலா என்று அனுமானிக்க முடியாத இளைஞன் இறுதியில் தான்தான் காதலன் என்பதை அறிந்ததும் அவன் செயல்பாடுகளை மிக நேர்த்தியாக வர்ணித்திருக்கிறார் ஆசிரியர் குரு அரவிந்தன்.
    இதுவரை இவரது 30 கதைகள் படித்ததில் 12 கதைகள் காதல் கதைகள். ஒவ்வொன்றும் வித்தியாசமாகப் புணையப்பட்டுள்ளன.
    ‘காதல் கதையரசு’ என்று நான் திரு குரு அரவிந்தன் அவர்களுக்குப் அன்போடு நான் பட்டம் அளிப்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன்.
    காதல் கதையரசு குரு அரவிந்தன் அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    ஜூனியர்தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *