யார் நீ?

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 85,771 
 

இரண்டு நாள் outstation branch ஆடிட்டுனா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். ருடீன் போர் அடிச்சு போச்சு “I will start tomorrow itself, Sir”னு ரீஜனல் மானேஜர் கிட்ட சொன்னேன் நான்.

நான்? வெங்கடேஷ், வங்கி அதிகாரி, வயசு 48. லக்னோவில் போஸ்டிங். மனைவியும் பெண்ணும், அவள் பக்க உறவுல ஏதோ கல்யாணத்துக்காக சென்னை போயிருக்காங்க. நான் தனியா லக்னோல போர் அடிச்சிகிட்டு. அது தான் சரின்னு உடனே சொல்லிட்டேன்.

ஆனா branch எதுன்னு தெரிஞ்சப்பறம் கொஞ்சம் யோசிச்சேன். லக்நோவிலிருந்து தள்ளி பஸ்தினு ஒரு கிராமம். அதிலிருந்தும் ஒரு நாலு கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு குக்கிராமமுத்துல branch. பட் வேற வழியில்ல, போகத்தான் வேணும்.

மறுநாள் வெளியூர் பஸ் பிடிச்சி ஒரு இரண்டு மணி நேரப் பயணத்துக்கு அப்புறம் பஸ்தி. அப்புறம் பஸ்தியிலிருந்து ஒரு ரிக்க்ஷா பிடிச்சு அந்த ஊரு போய் சேர்ந்தேன். அந்த ரிக்க்ஷா ஒரு இரண்டு கிலோமீட்டர் ஒரு காடு மாதிரியான மரங்கள் அடர்ந்த இடம் வழியாகச் சென்று பின்னர் ஒரு இடத்தை அடைந்தது. ஒரு கிராமம் என்று சொன்னால் கிராமம் கோபித்துக் கொள்ளும். குக்கிராமம் என்று சொல்லலாம்.

ஒரு வழியாக branch போய் சேர்ந்தேன். ஒரு மேனேஜர் ஒரு அதிகாரி ஒரு கிளார்க் ஒரு ப்யூன். அவ்வளவு தான் branch! அதுவே அதிகம் போல தோன்றியது. போதாதற்கு அந்த கிளார்க் லீவில் இருந்தான்.

என்னை வரவேற்று உட்கார வைத்த மேனேஜர் ப்யூனை விட்டு டீ வாங்கி வரச் சொன்னார். இதை விட அழுக்காக இருக்க முடியாது என்பதைப் போன்ற ஒரு கண்ணாடி டம்ப்ளரில் வந்த டீயை கடனே என்று குடித்து விட்டு வந்த வேலையை ஆரம்பித்தேன்.

எனக்கு தேவையான டாக்குமென்ட்ஸ் புக்ஸ் எல்லாம் அந்த அதிகாரி ( அவர் பெயர் ராம் கிஷோர் என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்) எடுத்துக் கொடுத்து உதவினார்.

பின்னர் வேலையில் மூழ்கிய நான் வயிறு பசிக்க கடிகாரத்தைப் பார்த்த போது மணி இரண்டு. ப்யூன் ‘ சர் கானா ‘ என்று கூப்பிட்டதும் கையை அலம்பிக்கொண்டு மேனேஜர் கேபினுக்குள் சென்று மூவருமாக உணவு அருந்தினோம். என் முகம் போன போக்கை பார்த்து அவர்கள் இருவரும் சிரித்தார்கள். இதை விட நல்ல உணவு பஸ்தியில் தான் கிடைக்கும் என்றார்கள். பஸ்தியில் எனக்கு தங்குவதற்கு ஒரு சிறிய லாட்ஜில் இடம் போட்டு இருப்பதாகவும் சொன்னார்கள்.

லஞ்ச் முடிந்து திரும்பவும் வேலை. முடித்து நிமிர்ந்தால் மணி நாலு. ராம் கிஷோர் ‘ சர் நீங்கள் கிளம்புங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டி விடும் (அது குளிர் காலம்) அப்புறம் அந்தக் காட்டுப்பாதையில் செல்வது அவ்வளவு உசிதம் இல்லை” என்று சொன்னார்.

என்ன விஷயம் என்று தூண்டித துருவி விசாரித்ததில் எனக்குச் சிரிப்பு வந்தது. இந்தக் காலத்தில் பேய் பிசாசு இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்களே என்று வியந்தேன்.

“Dont worry Ram Kishore, I’ll manage. Also, I don’t believe in such things” என்று சிரித்தபடியே சொன்னேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சென்று விட்டார். ஐந்து மணிக்கு வெளியே வந்த நான் ஏதும் சைக்கிள் ரிக்க்ஷா கிடைக்கிறதா என்று பார்த்தேன். அந்தப் பாதையின் ஆரம்பத்தில் ஒரு ரிக்க்ஷா!

வேகமாக அந்த ஆளிடம் சென்று ஹிந்தியில் எனக்கு பஸ்தி போக வேண்டும் என்று சொல்லி ஏறி அமர்ந்து கொண்டேன். அவனும் ஒன்றும் சொல்லாமல் ஏறி அமர்ந்து ரிக்க்ஷாவை ஓட்டத் தொடங்கினான்.

இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டுமே? ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தேன். அவனிடம் ஹிந்தியில் உனக்கும் வேண்டுமா என்று கேட்க “வேண்டாம் சாப்” என்றான்.

ஒரு ஐந்து நிமிஷம் சென்றபின் . “நீங்கள் அந்த பாங்கிற்கு வந்திருக்கும் புதிய அதிகாரியா?” என்று கேட்டான்.

இல்லை அங்கு inspectionக்கு வந்து இருக்கிறேன் என்று சொன்னதும் மடை திறந்த வெள்ளம் போல அவன் பேச ஆரம்பித்தான். அதன் சாரம் இது தான்:

அவன் பெயர் அன்வர். அந்தக் குக்கிராமத்தைச் சேர்ந்தவன் தான். அவனுக்கு ஓரு தங்கை. நஜ்மா. திருமணமான இரண்டு வருடத்திலேயே ஒரு விபத்தில் தன் கணவனை இழந்து விட்டாள். ஒரு வயது குழந்தை வேறு. பிழைப்புக்காக அரசாங்க கடன் கேட்டு விண்ணப்பிக்க அந்த கடன் எங்கள் பேங்க் மூலமாக வாங்கிக் கொள்ள ஆணையும் வந்தது.

நஜ்மா பாங்கிற்கு சென்று அந்த ஆணையை கொடுக்க, அதை வாங்கி வைத்துக் கொண்ட அந்த மேனேஜர் இதோ அதோ என்று ஒரு மாதம் ஒட்டிவிட்டானாம். அந்த கிளார்க் மூலமாக விவரம் கேட்ட நஜ்மாவிற்கு அதிர்ச்சி. “ அந்த மேனேஜர் ஒரு மாதிரியான ஆளு. உன்ன ஒரு நாள் அவன் வீட்டுக்கு கூப்பிட்டான். நீ வந்து போனியானா லோன் sanction பண்றதா சொல்றான்” என்றானாம் அவன்!

இதைச்சொன்ன அன்வர் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்துவிட்டான். “ சாப்! நீங்க தான் பெரிய மனசு பண்ணி அந்த லோன் வாங்கித் தரணும். நாங்க ஏழைங்க. எங்க பேச்சை யாரும் மதிக்க மாட்டாங்க. போலீசுல போய் complaint கொடுத்தாக் கூட அவங்க அந்த ஆளைத் தான் சப்போர்ட் பண்றாங்க. நீங்க தான் எங்களுக்கு தெய்வம் “ என்று சொல்லியபடியே திடீரென்று வண்டியை நிறுத்தி கீழே இறங்கி என் கால்களைப் பிடித்துக்கொண்டான்.

எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. “அன்வர் காலை விடு. நாளைக்கு என்னவென்று விசாரிக்கிறேன் “ என்று சமாதானம் பண்ணிய பிறகு தான் அவன் விட்டான்.

ராத்திரி லாட்ஜில் கூட இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பாவம் நஜ்மா! ஏழையின் கற்பிற்கு விலை இல்லையா? திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து எங்கள் ரீஜனல் மேனேஜருக்கு ஒரு போன் செய்தேன். அவருடன் எனக்கு நல்ல பழக்கம் என்பதால் விஷயத்தை எடுத்துச் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்டேன்.

“ நானே நாளைக்கு அவனுக்கு போன் செய்து அந்த லோன் sanction பண்ண வைக்கிறேன். நீ கவலைப் படாதே” என்று அவர் சொன்னதும் தான் எனக்கு தூக்கமே வந்தது.

மறு நாள் நான் ப்ராஞ்சிற்கு சென்றதும் அந்த மேனேஜர் முகம் ஒரு மாதிரி வெளுத்து இருந்ததைப் பார்த்து, “ ஓஹோ RM போன் செய்திட்டார் போல இருக்கு “ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அந்த ஆள் அன்று என்னுடன் பேசவே இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சென்ற அந்த ப்யூன், வரும்போது ஒரு இளம் பெண்ணை உடன் அழைத்து வந்தான்.

அவள் தான் நஜ்மா என்று யூகிக்க எனக்கு நேரம் பிடிக்கவில்லை. ரொம்ப அழகு. அது தான் அந்த மேனேஜரை இப்படிப் பித்தாக்கி விட்டது போலும்!

லோனும் sanction ஆகியது. அந்தப் பெண்ணின் கையில் பணமும் வந்தது. ரொம்ப சந்தோஷத்துடன் அவள் சென்றாள்.

பின்னர் அன்று மாலையே வந்த வேலையும் முடிந்து விட்டது. ரிப்போர்ட் தயார் செய்து ஒரு காப்பியை பிரான்ச் மேனேஜரிடம் ராம் கிஷோரை விட்டுக் கொடுக்க சொல்லி விட்டு கிளம்பினேன். வாசல் வரை வந்து ராம் கிஷோர் என்னை வழியனுப்பினான்.

சிறிது தூரம் சென்றதும் அன்வரைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தான். “ சாப்! வாங்க வாங்க உட்காருங்க” என்றான். “என்னய்யா அன்வர்! உன் தங்கச்சிக்கு லோன் கிடைச்சாச்சு அப்படின்னு சந்தோஷமா” என்று கேட்க அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது.

“அழாதே அன்வர்! நம் எல்லாருக்கும் மேலே ஒருத்தன் இருக்கிறான். அது வரையில் நமக்கு எந்தக் குறையும் வராது” என்று சொல்லி ரிக்க்ஷாவில் ஏறி அமர்ந்தேன். பஸ்தி வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

பஸ்தி வந்ததும் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டான். சரி என்று அவனிடம் விடை பெற்று லாட்ஜிற்கு சென்று check out செய்து பஸ் பிடித்து ஏறி அமர்ந்தேன். பஸ் கிளம்பியது.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு போன் வந்தது. எடுத்துப் பேசினால் ராம் கிஷோர். “ சர், ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க. ரொம்ப நன்றி “ என்று சொன்னான். பின்னர் “ ரொம்ப தைரியசாலி சர் நீங்க. ரெண்டு நாளும் தைரியமா அந்தக் காட்டுப்பாதைல போய்டீங்க” என்று சொல்ல, “ எனக்கெங்க தைரியம் ராம் கிஷோர்? ஏதோ அந்த அன்வர் புண்ணியத்துல அந்தப் பாதைல வந்தேன்” என்று நான் சொன்னதும் எதிர் முனையில் ஒரு அமைதி.

“யாரு அன்வர்?” என்றான் ராம் கிஷோர். “ அது தான் அந்த நஜ்மாவோட அண்ணா “ என்று நான் சொன்னேன்.

“ஐயோ” என்று அலறினான் ராம் கிஷோர். அவன் அலறல் போனிலிருந்து வெளி வந்து அந்த பஸ் முழுவதும் நிறைத்தது. பலர் திரும்பிப் பார்த்தார்கள். “ஏன்யா ராம் இப்படிக் கத்துறே? என்ன விஷயமானாலும் கத்தாம சொல்லு “ என்றேன்.

“ சர்! அந்த விபத்துல நஜ்மா புருஷன் மட்டுமில்ல, அவ அண்ணனும் இறந்துட்டான் சர்” என்று மீண்டும் அலறினான் ராம் கிஷோர்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நேற்று அன்வர் என் காலைத் தொட்டபோது ஜில்லென்று இருந்தது நினைவுக்கு வந்தது.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

4 thoughts on “யார் நீ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *