Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கண்ணியத்தின் காவலர்கள்

 

தங்கள் தங்களுக்கென அவர்களாலேயே உருவாக்கப்பட்ட சட்டப் புத்தகங்களுடன் ஒவ்வொருவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். வீடு, கடை, வீதி, மலசலகூடம், குளியலறை, குசினி, வேலைத்தளம் என எல்லா இடங்களிலும் சட்டப் புத்தகங்களை இறுக்கி அணைத்தபடி இருந்தார்கள். அதில் இடப்பட்டிருந்த ஓட்டையினூடு எதிர்ப்படுவோரை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இயல்பாகிப் போன நடையும், அசைவுகளும் சட்டப்படி இருக்கும் போது மட்டுமே அவர்களது இதயம் சாதாரண வேகத்துடன் துடிப்பதுடன், உணவு ஜீரணிக்கும், கால்கள் நிலம்பட நடக்கும்.

மீறிய நடை பாவனையைக் காணும்போது தண்டனை வழங்க முடியாத கையாலாகாதா தனம் மேலோங்கும். ஏனைய நீதிபதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் புத்தகங்களின் படியும் இது குற்றமாகுமோ? என விசாரித்து, அது பற்றிய குறிப்பு இல்லாத பட்சத்திலும், நடத்தை சரியானது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்திலும் விவாதித்துக் கொள்வார்கள். அவனும், அவனது புத்தகமும் அநீதியானதென நிராகரிக்கப்படும் வரை விவாதம் தொடரும். பின் தன் சட்டங்களுக்கு ஒப்பான புத்தகத்தைக் கொண்டிருப்பவனை நெருங்கி அவனது நடை பாவனை சட்டத்தை மீறியதென அறிக்கை விடுவார்கள். அது பறக்கும் காற்றுப் போகும் திசையெங்கும் செய்திபரப்பும் மரம் – தூண் – கம்பி – வேலி – வாகனம் – கட்டிடம் எல்லாவற்றிலும் மோதிக் கிழிந்து துண்டு துண்டாகும் வரை அல்லது காய்ந்து முறுகி சருகாக நுண்ணிப்போகும் வரை பறக்கும்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நீதிபதிகள்தான், தாங்களே சட்டங்களை வரையறுத்துக் கொண்டு சம்பளமில்லா கடமையிலீடுபட்டிருந்தார்கள். ஏனைய தொழிலை விட நீதிபதி பதவி இலகுவானதாகவும் பகுதி – முழு நேரக்கடைமைக்குரியதாகவும் இருந்தது. வைத்தியனாக – கைமருந்துகளுடன், பொறியியலாளனாக – அளவுத்திட்டத்துடனும், உயிரியலாளனாக – மரக்கன்றுடனும், ஆசிரியனாக – பேனையுடனும், வியாபாரியாக – தொந்தியுடனும், அரசியல்வாதியாக – பொய்யுடனும் அலைந்து திரிந்தாலும், நீதிபதிகளாக தங்கள் தங்கள் சட்டப்புத்தகங்களைப் புரட்டி மற்றவர்களினுடைய வாழ்க்கையைத் தோண்டிக் கிளறி கூறுபோட்டு குறைகளைக் கண்டுபிடித்து குற்றப்பத்திரிகை அனுப்புவது போல இலகுவான, சுவாரசியமான தொழில் எதுவுமில்லை.

தனக்கென உரித்தான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியாமல் நீதிபதிகளாக ஆசைப்பட்டவர்கள், கற்காலம் முதல் வழங்கிய மதப்புத்தகங்களையும், அட்டவணைகளையும் தங்கள் தங்கள் சட்டப்புத்தகங்களாக பிரகடனப்படுத்தி அதில் ஓட்டை இட்டு எல்லோரையும் கவனித்தார்கள். சட்டப்புத்தகங்களில் இடப்பட்டிருந்த ஓட்டை அவர்கள் மட்டும் நுழைந்து கொள்வதற்குப் பயன்பட்டது.

நீதிபதிகள் பலரினால் குற்றமாகக் குறிப்பிடப்படும் சட்டத்தை சமூகச் சட்டமாக அமுல்படுத்தினார்கள். அதனூடாகத் தண்டனை வழங்கி விட எத்தனித்ததுடன் அவர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்பினார்கள்.
முடி நரைத்து, பற்கள் காவியேறிய கிழட்டு நீதிபதிகள் சிலர் தூசு படிந்து, கறையான் அரித்துக் கிடந்த தங்கள் சட்டப்புத்தகங்களைத் தட்டி, பகல் நீண்டிருந்த அந்தப் பின்னிரவுக் காலமொன்றில் அறிக்கையொன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். தூசுகள், மூக்குள் நுழைந்து பிசிர்களை ஆட்டி தும்மலை உண்டு பண்ணி சட்டப்புத்தகங்கள் மீது எச்சிலைத் தெளித்து ஈரப்படுத்தினாலும், குற்றப்பத்திரத்தைத் தயார் பண்ணி முடிப்பதில் மும்முரமாய் இருந்தார்கள். களைப்பு, வேலைக்காலங்களைத் தின்றுவிடக் கூடாது என்பதில் விழிப்பாய் இருந்த, தலைமயிர் பழுத்துப்போன கிழவிகள் இஞ்சி கலந்த சாயத்தைப் பகிர்ந்து கொண்டோ, சிறிய உரல்களில் வெற்றிலையை இடித்துக் கொண்டோ இருந்தார்கள். அவர்களில் பலருக்கு பொக்கைவாய் – கன்னங்கள் உட்குழிந்து போயிருந்தது. அவர்களெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகக் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களாம். அக்கிழட்டு நீதிபதிகளின் பின்னால் பதவி உயர்வில் ஆசைகொண்டு காத்துக்கிடந்த இளைய நீதிபதியின் வால்களைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் அனைவரதும் அயராத உழைப்பினால் இரவு பகலாகத் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரம் இரு இடங்களுக்கு அதிகாலையிலேயே அஞ்சல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரம்

இந்து, சமூக, நீதி, நிருவாக வலயத்தின் சமூக நீதிமன்றம், சட்டமா அதிபர் இலக்கம்: டிகே 77-15-01

சமூக நீதிமன்றத்தின் குற்றவழக்கு

இலக்கம் 0027 – 74320

இந்து சனநாயக சோசலிகக் குடியரசு எதிர்

பழனியான்டி சுகுமார்:

சற்குணம் சதீஸ்குமார்:

இந்து சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டமா அதிபர் கதிவேல் கணபதி அவர்களின் கட்டளைப்படி உங்களுக்கெதிராகக் குற்றப்பகர்வு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கெதிரானக் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:-

1) இந்த நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிறப்பு – இறப்பு – திருமணப் பதிவாளர் காரியாலயம் இருந்தும், ஆலயங்கள் இருந்தும் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணமோ, சங்கு முறையான திருமணத்தையோ நிகழ்த்திக் கொள்ளாமல், 2001ஆம் ஆண்டு மாசி மாதம் 08ம் திகதி முதல் இருவரும் இணைந்து, இந்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தங்கள் குடியிருப்பையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் இருவரும் ஆண்களாக இருந்தும் கூட்டாக ஒத்தியைந்து சமூகக் கட்டுமானத்தை உடைப்பதுடன் எதிர்கால சந்ததியினரிடையே கண்ணியம் தொடர்பான எண்ணக் கருவில் விரிசலை ஏற்படுத்த முனைவதாகவும் உள்ளது. இவைகள் பெண்கள் மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வாத்சாயனரையும் அவமதிப்புக்குள்ளாக்குவதாகக் கருதப்படுகின்றது. இதன் காரணமாக ஒத்தியைந்த எங்கள் சட்டப்புத்தகத்தின் 5(1) (ஆ) பிரிவின் கீழ் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள்.

2) இந் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிறப்பு – இறப்பு – திருமணப் பதிவாளர் காரியாலயம் இருந்தும், ஆலயங்கள் இருந்தும் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணமோ, சடங்கு முறையான திருமணத்தையோ நிகழ்த்திக் கொள்ளாமல், 2001ம் ஆண்டு மாசி மாதம் 08ம் திகதி முதல், இணைந்து வாழ்கின்றீர்கள். நீர் இருவரும் இரு வேறுபட்ட சாதியினராகக் காணப்பட்ட போதிலும் ஒருவரை ஒருவர் மணம் புரிந்துள்ளீர்கள். இது இரு இனக்கூட்டத்தாரிடையே ஒற்றுமையின்மையை, அல்லது காழ்ப்புணர்ச்சியை, அல்லது வெறுப்பை ஏற்படுத்துவதற்காக எத்தனிக்கப்பட்ட முயற்சியாகும். இது இருக்குவேதம் 10ம் மண்டலம் புருஷ சூக்தத்துக்கு அமையவும், மனுதர்மச் சட்டத்தின் படியும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சட்டப்புத்தகத்தின் 2(1) பிரிவின் கீழ் நீங்கள் இருவரும் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள்.

கையொப்பம்

சமூக கூட்டவாதி

2002ஆம் ஆண்டு 01ம் மாதம் 10ம் திகதி.

குறிப்பு:-

இக்குற்றப் பத்திரத்திலடங்கும் குற்றச் சாட்டுகளுக்காக இந்து, சமூக, நீதி, நிருவாக வலயத்தின் சமூக நீதிமன்றத்தால் குற்றவாளிக்கெதிராக வழங்கப்படவுள்ள தண்டனைக்கு உதவும் முகமாக கீழ்வரும் தண்டனைகளைப் பரிந்துரை செய்கின்றோம்.

1) மொட்டையடிக்கப்பட்டு, கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி, செருப்பு மாலை அணிவித்து, கழுதை மீது ஊரை வலம் வரச் செய்தபின் முச்சந்தியில் கல்லால் அடித்துக் கொல்லப்படுதல்.

2) கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மக்கள் கூட்டத்தின் முன், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தள்ளுதல், அல்லது இவர்களின் தலை மட்டும் தெரியும் வண்ணம் டயர்களுள் இட்டு பெற்றோல் ஊற்றி எரியூட்டல்.

3) மக்கள் குழுமி இருக்கும் போது குற்றத்தை உணரும்வரை முகமூடி இடப்படாமல் சாகும்வரை தூக்கிலிடப்படல்.

மேற்படி இரு நபர்களுக்கும் எவ்வித காரணங்கொண்டும் மன்னிப்போ, அல்லது தண்டனைக் குறைப்போ மேற்கொள்ளக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளோம். தவறும் பட்சத்தில் இது போன்ற ஓரினச் சேர்க்கையாளர்கள், அல்லது சாதியை மீறுபவர்கள் சமூகத்தில் அதிகரித்து விடுவார்கள் என்பதையும், சமூகக் கட்டமைப்பு சிதைவுறும் என்பதையும் தங்கள் கவனத்தின் கீழ் கொண்டு வர விரும்புகின்றோம்.

உண்மையுள்ள,

சமூக நீதிபதிகள்
1……………………..
2……………………..
3……………………..
மூலப்பிரதி – உயர்நீதிமன்றம்
பிரதி – எதிராளிகள்.

*****

”இன்று அவனால் எப்படியும் வேலை செய்யமுடியாது. காலையில் போக விருப்பமில்லாதவனை தள்ளி அனுப்பவேண்டி இருந்தது. சிலவேளைகளில் திரும்பி வந்துவிடுவானோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வரவில்லை. ஆனாலும் வழமையைப் போல படிப்பிக்க முடியாது. இருப்பினும் சமாளிப்பான். எப்போதும் இப்படித்தான் குழந்தைத்தனம். எனக்குத் தடிமன் என்றால் கூட பக்கத்திலேயே இருந்து கொண்டிருப்பான். யாரைக் காட்டிலும் அன்புடையவன்.

இரண்டு நாள் காய்ச்சல், நேற்று ஞாயிற்றுக்கிழமையாயிருந்தால் எனை எழும்ப விடவில்லை. இன்று கூட சமைக்கவோ, தேனீர் ஊற்றவோ வேண்டாமென உனை அனுபுவதாகக் கூறினான். எனை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில் அவனுக்கு எப்போதும் அக்கறையுண்டு.”
“எங்கள் வாரிசு பற்றிக் கதைத்தோம். வெள்ளி இரவு தொடங்கியது. சனி இரவு வரை தொடர்ந்தது. இருவரும் பெண்களாய் இருந்திருப்பின் ஆணின் அணுக்களைப் பெற்றுக் கொண்டு ஒருவரின் கர்ப்பப்பையில் வளர்த்து பிரசவித்திருக்கலாம் என நினைத்தோம். இக்கதை ஆரம்பமானது முதல் என் முகம் மாறி, உடல் சூடாகி இருந்ததை அவதானித்தானாம். “காய்ச்சலா…” இல்லை. அந்த ஏக்கமும், சிந்தனையும் தான் எனது காய்ச்சலுக்கு மூலக்காரணம் எனக் கூறினான். என்னால் அதை வரையறுக்க முடியவில்லை.”

குழந்தை எங்களில் ஒருவரின் இரத்தத்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதில் இருவருக்கும் உடன்பாடிருந்தது. கர்ப்பப்பையை யாரு வைத்துக்கொள்வதென்பதில் இன்னமும் சிக்கலுண்டு. அதிலுள்ள நடைமுறைச் சிக்கலை உணராமலேயே வாதிட்டோம். அவன் குழந்தைத்தனமானவன் என்பதும், எதையும் தாங்கிக் கொள்ள முடியாதவன் என்பதையும் நான் அறிந்திருந்ததனால் அதை நான் பொருந்திக் கொள்கின்றேன் என வாதிட்டேன். அவனது சிந்தனை கூரானது எனப்தனால் ஆண் அணுக்கள் அவனுடையதாக இருக்கட்டும் எனக் கூறினேன். அதைப் பற்றிய முடிவினை எடுத்துக் கொள்ளாமல் ”முதலில் வைத்தியரை அணுகி வசதி – செலவீனம் பற்றிக் கதைத்துக் கொள்வோம்.” கண்களை மூடி மௌனமானவன்.

”எங்கள் இருவரின் – ஒருவரினுடைய விந்தைக் கொடுத்து பெண் ஒருத்தியை அணுகி அதைக் கருவாக்கி – குழந்தையாக்கித் தரும்படி கேட்கலாம். இதுபற்றியும் வைத்தியரும் ஆராய்ந்தபின் முடிவெடுக்கலாம். எதற்கும் முதலில் வைத்தியரை….” மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். உடன் உறங்கிப் போய்விட மாட்டான். குறைந்தது அரை மணி நேரம் புரண்டபின்பே தூக்கம் தளுவும். அவனால் தூக்கத்தை விரட்டியடிக்க முடியாது. உறக்கத்தில் கனவு காண்பதென்றால் சரியான பிரியன். அதனால் உறக்கத்தில் ஆழ்ந்து போகவிட்டு தொல்லை பண்ணாமல் நானும் உறங்கிப் போனேன்.

ஞாயிறு பகலில் இது பற்றிக் கதைக்கவில்லை. காலையில் என் நெற்றியில் முத்தமிடும்போது உடல் சூடு அதிகரித்திருந்தது கண்டு காய்ச்சல் என்பதைக்கூட அவன் தான் உறுதியுடன் கூறினான். காலை உணவு விருப்பமில்லாமல் இருந்தது. காய்ச்சலினால் சுவை அரும்புகளையும், நுகர் அரும்புகளையும் சளியடைத்திருப்பதனால் உனக்கு உணவு விருப்பமில்லாமல் போய் இருக்கின்றது. நாக்குக்கு உணர்ச்சியைக் கொண்டுவரக் காரமாகக் கறியும், மூலிகை ரசமும் வைத்துத் தருவதாயும் கூறி சமயலறையுள் மூழ்கிப் போனான். எனது காய்ச்சல் பற்றிக் கதைத்துக் கொண்டு பாடக்குறிப்பு எழுதுவதில் பின்னேரம் ஓடிப்போனதால் இது பற்றிக் கதைக்க முடியாமல் போனது. இன்று எப்படியும் இதுபற்றிக் கதைக்க வேண்டும் என நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதனுள் நுழைய அவனால் முடியாதிருக்கும். எனைப்பற்றி அதாவது உடல்நலக்குறைவைப் பற்றியே இன்று சிந்தித்துக் கொண்டிருந்திருப்பான் என்பதும் எனக்குத் தெரியும். குழந்தை பற்றிச் சிந்திக்க நேரம் இருந்திருக்காது. வேலைகளும் தலைக்கு மேலாக இருந்திருக்கும். ”சுகு அண்ணன் நீங்கள் ஏன் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது.”

“எங்கள் ஒருவரின் இரத்த வாரிசை விரும்புகின்றோம். முடியாமல் போனால் இது பற்றி யோசிக்கலாம் என்றிருக்கின்றோம்.”

“நீங்களே இன்னமும் ஏற்றுக்கொள்ளப் படாமல் தள்ளப்பட்டிருக்கும் போது ….., நீங்கள் கல்வெட்டுக்காரர்கள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது. – முன்னர் எனக்கும் கூட -” “உண்மை, காலம் யாருக்காகவும் எதையும் தருவதில்லை பெற்றுக் கொள்ள இடம் கொடுக்கும் அவ்வளவுதான். ஓட்டைப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரம் வந்துள்ளது. அதுபற்றி அலட்டிக்கொள்ள எதுவுமில்லையாம். அதற்கெதிராக எங்களினால் மனுவொன்றும் தயாரிக்கப்பட்டாயிற்று. அதன் பிரதியொன்று சட்டத்தரணியிடம் கேட்டு ஆலோசனை பெறுவதற்காக அவனிடமுண்டு – பையினுள் இருப்பதைக் கூட மறந்து போயிருப்பான். – எதற்கும் ஆரம்பம் தடையாய்த்தான் இருக்கும். பின்னர் தானே வெளிக்கும்.” “இது எங்களின் மனு” -

சுய உரிமை – மேன் முறையீடு

ஐயா,

இந்த சனநாயக சோசலிசக் குடியரசு எங்களுக்கெதிராக அனுப்பிய குற்றப்பத்திரம் தொடர்பாக (டி.கே. 77-05-01) எங்கள் இணைவின் அடிப்படை அம்சங்களை விளக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாவன,

1) ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் (5(1) (அ))
2) வேறுபட்ட சாதியினர் (2(1))

என்ற வகையில் இருவரும் தண்டனைக்குரிய குற்றத்தை ஆற்றியுள்ளதாகவும், இதனால் சமூகக் கட்டுமானம் உடைந்து போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

திருமணம் என்பது புரிந்துகொண்ட இருவரின் இணைவு என்பது எங்களின் கருத்து. ஆனால் பெண்ணை ஆண் அடக்கியாள்வதற்காக வழங்கப்படும் அனுமதி என்றோ சந்ததியை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்றோ சமூக நீதிபதிகளால் கருதப்படுகின்றது.

ஒத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்துகொள்வது எந்தவகையிலும் பெண்களை அவமதிப்பதாக அமையாது. பெண்களைக் கட்டிலில் கிடத்தி கவிழ்ந்து கொள்வதாலோ, குழந்தையை – குடும்பப் பாரத்தை அவளுக்கென ஒதுக்கிக் கொடுத்து விடுவதாலோ அவர்கள் போற்றப் படுகிறார்கள் எனக்கருதிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் ஆணுக்குப் பின்னானவள் என்ற அவமதிப்பை சடங்குகள் நடத்திக் காட்டுகின்றன என்பதை சமூக நீதிபதிகள் மறந்தது எங்ஙனம் என விளங்கவில்லை.

ஆண் – பெண் காம உணர்வைப் பகிர்ந்து கொள்வதற்காக, அல்லது ஆணின் காமவுணர்வைத் தனித்துக் கொள்வதற்காகவென மட்டுமே திருமணங்கள் உள்ளன என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே வாத்சாயனரை அவமதிப்பாகக் கூறப்பட்டுள்ளது.

வேறுபட்ட சாதியினர் என்று, பிற்ப்பை வைத்துக் கொண்டு மனுவைத் துணைக்கழைத்தவர்களுக்கு, அதிலுள்ள குறிப்பின்படி சாதிகள் பிறப்பை கொண்டோ, தொழிலைக் கொண்டோ தீர்மானிக்கப்படுவதில்லை – ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும், கூட்டு சமபந்தி பற்றியும், அனுலோமம் – பிரதிலோமம் என்ற திருமணமுறைகளையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

இருப்பினும், எங்கள் கருத்தின்படி ஆண் – பெண் – அலி என்ற மூன்று சாதியினரைத் தவிர வேறு சாதியினர் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு இது கூட உடலில் அடிப்படையில் காட்டப்படும் வேறுபாடுகளே எனக் கருதுவதாலும், எண்ணங்கள் செய்கைகளெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் – இருக்கும் என்பதாலும், சாதியின் கொடுமைக்குள் எங்கள் இருவரையும் தள்ளி தீ மூட்டிவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

கறையான் அரித்த, ஓட்டைப் புத்தகங்களின் அடிப்படையில் மனிதாபிமானமற்ற நீதிபதிகள், குற்றப்பத்திரத்திலேயே – விசாரணை எதுவுமின்றி தண்டனையை சிபாரிசு செய்தது, எந்தவிதத்திலும் நியாயமாக இருக்கமுடியாது என்பதைத் தாங்களும் அறிவீர்கள். குற்றமே இல்லாத குற்றப்பத்திரத்திலும், எங்களின் தாழ்வான மேன்முறையீட்டையிட்டும் தங்களின் மேலான கவனத்தைச் செலுத்தி நியாயமான தீர்ப்பை வழங்குவீர்களென நிம்மதியடைகின்றோம்.
இவ்வண்ணம்,

உண்மையுள்ள,

(ஒப்பம்)

பழனியாண்டி சுகுமார்

(ஒப்பம்)

சற்குணம் சதீஸ்குமார்.

***

அவன் போய்விட்டான். சுகு மட்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு காலை நீட்டி கதிரையில் சாய்ந்திருந்தான். மூடிய கண்ணுள் பின்புற இருளில் தோன்றிய ஒளி நிறைந்த மனிதன் முன்னோக்கிக் கிடந்த இருளுக்குள் மங்கலாய் ஒளி வீசிக்கொண்டிருந்தான். அவன் நெருங்க ஒளி பரப்பை விரித்துக்கொண்டே போனது. ஒளிமனிதனுக்கு அருகில் சுகு நடந்து வந்து கொண்டிருந்தான். பின் – வலது – இடது இருளுக்குள் இருந்து கற்கள் வந்து தாக்கியது.

ஒளி மனிதன் – சதீசின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. பச்சை இரத்தம். அவன் வேற்றுச் சாதி என்பதால் பச்சை நிற இரத்தம் வடிந்தது. – வடிவமில்லாத கற்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தது. இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றார்கள். ஆட்களில்லாத வெறுமைக்குள் – காற்றை இருபுறமும் தள்ளி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். காற்றுச் சிரித்தது – “கல்வெட்டுக்காரர்கள்” பலமாய்ச் சத்தமிடுகிறது – சிரிக்கிறது. சுகு வாய்விட்டுக் கத்துகிறான். “எங்களைப் பிரித்து விடாதீர்கள் – எனக்கு இவன் வேண்டும்.” அழுகிறான். ஓட்டத்தில் கலங்கிய குரல் காற்றில் கலந்து அழிவுறுகிறது. ஓட முடியாமல் ஓடுகிறார்கள்.

கதவு தட்டப்படும் ஓசை, சுகு எழுந்து கதவைத் திறக்கிறான். தலையில் காயத்துடன் சதீஸ் சிரிக்கிறான். தலை வெடிப்பிலிருந்து கண்ணுக்கும், காதுக்கும் நடுவால் சிவப்பு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

- பங்குனி 2002

நன்றி – பண்புடன் குழுமம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)