Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வாளியில் பயணம் செய்கிறவன்

 

நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது; வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்துகொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய் உறைபனியால் போர்த்தப்பட்டுள்ளன; தன்னிடம் உதவியைத் தேடும் எவருக்கும் எதிராக ஒரு வெள்ளி அரணைப்போல வானம். எனக்கு நிலக்கரி அவசியம் வேண்டும்; விறைத்துப்போய் இறப்பதற்கு என்னால் முடியாது; எனக்குப் பின்னால் இரக்கமற்ற அடுப்பு, முன்னால் இரக்கமற்ற வானம்; எனவே, இரண்டுக்கும் இடையே ஒரு பயணத்தை நான் மேற்கொள்ள வேண்டும்; பயணத்தின் முடிவில் நிலக்கரி விற்பனையாளரிடம் உதவி கோர வேண்டும். ஆனால், சாதாரணக் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்பதை அவர் ஏற்கனவே நிறுத்திவிட்டார்; என்னிடம் ஒரு துணுக்கு நிலக்கரிகூட மிச்சம் இல்லை என்பதையும் அவர் எனக்கு வானத்தில் உள்ள சூரியனைப் போன்றவர் என்பதையும் அவர் மறுக்க முடியாத அளவுக்கு நான் நிரூபித்தாக வேண்டும். தொண்டையில் மரணத்தின் இரைச்சல் ஏற்கனவே கேட்கத் தொடங்கிவிட்ட ஒரு பிச்சைக்காரனைப் போல நான் அந்த விற்பனையாளரை அணுக வேண்டும்; பணத்திமிர் கொண்டவர்களின் வாசற்படியில் உயிரை விட்டுவிடுவேன் என்று ஒரு பிச்சைக்காரன் வலியுறுத்திச் சொல்லும்போது அவர்களுடைய சமையற்காரன் காஃபிக் குவளையின் அடி வண்டலை அவனுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கிறான்; அதைப் போல நிலக்கரி விற்பனையாளர், பெரும் கோபம் கொண்டாலும், “கொலை செய்யாதே” என்ற கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மண்வாரி அளவுக்கு நிலக்கரியை என்னுடைய வாளிக்குள் வீசி எறிய வேண்டும்.

நான் அந்த விற்பனையாளரைச் சென்றடையும் விதம் விஷயத்தைத் தீர்மானிக்க வேண்டும்; ஆகவே நான் வாளியின்மீது பயணத்தைத் தொடங்குகிறேன். மிக எளிய கடிவாளமான வாளியின் கைப்பிடியில் என்னுடையக் கைகள் இருக்க, வாளியின்மீது உட்கார்ந்துள்ள நான் சிரமத்துடன் படிக்கட்டில் கீழ்நோக்கி என்னை உந்தி நகர்த்துகிறேன்; தரையை அடைந்தவுடன் என்னுடைய வாளி நேர்த்தியாக, மிக நேர்த்தியாக மேல்நோக்கிச் செல்கிறது; தரையில் குந்தியிருக்கும் ஒட்டகங்கள் தங்களைச் செலுத்துபவர்களின் கழியடிகளால் சோம்பலை விலக்கி எழும்போதுகூட இத்தனை கண்ணியமாக எழுவதில்லை. கெட்டியாக உறைந்துபோன தெருக்களின் ஊடாக நாங்கள் சீரான குதிரையின் பாய்ச்சல் வேகத்தில் போகிறோம். அடிக்கடி நான் ஒரு வீட்டின் முதல் மாடி உயரத்துக்குத் தூக்கப்படுகிறேன்; வீடுகளின் வாயில் அளவுக்கு நான் ஒருபோதும் கீழே போவதில்லை. கடைசியில் உயரமான முகடு அமைந்த விற்பனையாளரின் நிலவறைக் கிடங்குக்கு மேலே, மிக உயரத்தில் நான் மிதக்கிறேன்; கீழே அந்த விற்பனையாளர் தன்னுடைய மேஜையின் அருகே குனிந்து உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அதிகப் படியான வெப்பத்தை வெளியேற்ற அவர் கதவைத் திறந்துவைத்திருக்கிறார்.

“நிலக்கரி – விற்பனையாளரே!” உறைபனியால் தீய்க்கப்பட்டு வெறுமையாகிப்போன, என்னுடைய சுவாசம் உண்டாக்கியப் புகையில் மட்டுப்பட்ட ஒரு குரலில் நான் கத்தினேன், “நிலக்கரி-விற்பனையாளரே, தயவுசெய்து எனக்குக் கொஞ்சம் நிலக்கரி கொடுங்கள். நான் ஏறி உட்கார்ந்து பயணம் செய்யும் அளவுக்கு என்னுடைய வாளி லேசானதாக இருக்கிறது. என்மீது இரக்கம் காட்டுங்கள். எப்போது இயலுமோ அப்போது நான் அதற்குரிய விலையைக் கொடுத்துவிடுவேன்.”

நிலக்கரி விற்பனையாளர் தன்னுடைய கையைக்காதருகே வைக்கிறார்.“நான் கேட்பது சரிதானா?”தனக்குப் பின்னால் இருக்கும் மனைவியைக் கேட்கிறார். “நான் கேட்பது சரிதானா? ஒரு வாடிக்கையாளர் போல இருக்கிறது.”

பின்னல் வேலையைத் தொடர்ந்துகொண்டு, சீராகச் சுவாசித்தபடி, தணல் ரம்மியமாக முதுகை வெதுவெதுப்பாக்கிக் கொண்டிருக்க அவருடைய மனைவி, “எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே,” என்கிறாள்.

“ஓ, ஆமாம். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்,” என்று நான் கத்துகிறேன். ”நான் உங்களுடைய ஒரு பழைய வாடிக்கையாளன். நம்பிக்கைக்குரிய, நேர்மையான வாடிக்கையாளன்; இப்போதைக்கு என்னிடம் பணமில்லை.”

“என்னவளே,” என்கிறார் நிலக்கரி விற்பனையாளர். “அது யாரோ ஒருவர். அது யாரோ ஒருவராக இருக்க வேண்டும்; என்னுடைய காதுகள் அந்த அளவுக்கு என்னை ஏமாற்றியிருக்க முடியாது; இந்த அளவுக்கு என் உணர்ச்சியைத் தூண்டுகிறார் என்றால் அவர் ஒரு பழைய, மிகப் பழைய வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.”

பின்னல் வேலையை ஒரு கணம் நிறுத்திய அவருடைய மனைவி பின்னல் துணியை மார்போடு அணைத்தபடி, “என்னவரே, உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள். “அங்கே யாருமே இல்லை; தெரு வெறிச்சோடி கிடக்கிறது; நம்முடைய எல்லா வாடிக்கையாளர்களுக்கும் தேவையான அளவுக்குக் கொடுத்துவிட்டோம்; கடையை சில நாட்களுக்கு மூடிவிட்டு நாம் ஓய்வெடுக்கக்கூடச் செய்யலாம்.”

“ஆனால், நான் இங்கே வாளியின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறேனே,” என்று நான் கதறுகிறேன்; உணர்ச்சியற்ற, உறைந்துபோன கண்ணீர்த் துளிகள் கண்ணை மங்கலாக்குகின்றன. “தயவு செய்து ஒரே ஒரு தடவை உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்களேன்; உங்கள் கண் முன்னால் நான் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்; உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், ஒரே ஒரு மண்வாரி அளவுக்கு நிலக்கரி கொடுங்கள்; இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் என்ன செய்வது என்று தெரியாத அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைவேன். மற்ற எல்லா வாடிக்கையாளர்களுக்கும் தேவையான அளவுக்குக் கொடுத்துவிட்டீர்கள். என்னுடைய வாளிக்குள் நிலக்கரி விழும் கடகடச் சத்தத்தை நான் கேட்டால் எப்படி இருக்கும்!”

“நான் வருகிறேன்,” என்கிறார் நிலக்கரி விற்பனையாளர். நிலவறைக் கிடங்கின் படிக்கட்டில் தன்னுடைய குட்டைக் கால்களால் அவர் ஏறத் தொடங்குகிறார்; ஆனால், ஏற்கனவே அவருக்குப் பக்கத்தில் வந்துவிட்ட அவருடைய மனைவி அவருடையக் கையைப் பிடித்து நிறுத்திவிட்டு சொல்கிறாள்: “நீங்கள் இங்கேயே இருங்கள்; நீங்கள் உங்களுடையக் கற்பனைகளில் விடாப்பிடியாக இருப்பதைப் பார்க்கும்போது நான் போவதே உசிதம். நேற்றிரவு உங்களுக்கு இருந்த மோசமான இருமலை நினைத்துப்பாருங்கள். உண்மையென்று நீங்களாகக் கற்பனை செய்துகொண்டிருக்கும் இந்த ஒரு சிறு வியாபாரத்துக்காக உங்களுடைய மனைவியையும் குழந்தையையும் மறந்துவிட்டு, உங்களுடைய நுரையீரல்களின் ஆரோக்கியத்தைக் குறைத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். நான் போகிறேன்.”

“அப்படியானால், நம்மிடம் எல்லா வகை நிலக்கரியும் இருப்பில் இருக்கிறது என்பதை அவரிடம் சொல்; விலைகளை உன் பின்னாலிருந்து நான் கத்திச் சொல்கிறேன்.”

“சரி” என்று சொல்லும் அவருடைய மனைவி தெருவுக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டில் ஏறுகிறாள். இயல்பாக, அவள் என்னை உடனடியாகப் பார்க்கிறாள். நான் கத்திச் சொல்கிறேன்: “நிலக்கரி விற்கும் அம்மணியே, உங்களுக்கு என்னுடையப் பணிவான வணக்கங்கள்; இதோ இங்கிருக்கும் வாளியில் ஒரே ஒரு மண்வாரி அளவுக்கு நிலக்கரி கொடுங்கள்; நானே அதை வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்; உங்களிடம் இருப்பதிலேயே மிக மோசமான நிலக்கரியை ஒரு மண்வாரி அளவுக்குக் கொடுங்கள். அது முழுவதுக்கும் பணத்தைக் கொடுத்துவிடுவேன்; ஆனால், நிச்சயமாக இப்போது கொடுக்க முடியாது, இப்போது முடியாது.” “இப்போது முடியாது” என்ற வார்த்தைகள் எப்படி சாவுமணி போன்ற ஓசையைப் பெறுகின்றன! அருகிலுள்ள தேவாலயக் கோபுரத்திலிருந்து ஒலிக்கும் மாலை நேர மணியோசையோடு அவை ஒன்றிக் கலப்பது எத்தனைத் திகைப்பூட்டும் விஷயம்!

“சரி, அவருக்கு என்ன வேண்டுமாம்?” என்று கத்திக் கேட்கிறார் நிலக்கரி விற்பனையாளர். அவருடைய மனைவி திருப்பிக் கத்துகிறாள், “ஒன்று மில்லை; இங்கு எதுவுமில்லை; நான் எதையும் பார்க்கவில்லை; எதையும் கேட்கவில்லை; மணி ஆறு அடிக்கிறது; இப்போது நாம் கடையை மூட வேண்டும். குளிர் பயங்கரமாக இருக்கிறது; நாளைக்கு மீண்டும் நமக்கு நிறைய வேலை இருக்கும் போலிருக்கிறது.”

அந்தப் பெண்மணி எதையும் பார்க்கவில்லை, எதையும் கேட்கவில்லை; ஆனாலும், உடை அழுக்காகாமல் இருக்க முன்புறம் அணியும் தன் மேலாடையின் இணைப்புக் கயிறுகளைத் தளர்த்திவிடுகிறாள்; காற்றில் நான் மிதந்துபோய் அகலுமாறு தன் மேலாடையை வீசுகிறாள். துரதிருஷ்டவசமாகத் தன் முயற்சியில் அவள் வெற்றியடைகிறாள். எதிர்க்கும் சக்தியைத் தவிர ஒரு நல்ல குதிரையின் பிற எல்லா நற்பண்புகளும் என்னுடைய வாளிக்கு இருக்கின்றன. அந்தச் சக்தி மட்டும் அதற்குக் கிடையாது. அது மிக லேசானது; ஒரு பெண்ணின் மேலாடையால் அதைக் காற்றின் ஊடாகப் பறக்கச் செய்துவிட முடியும்.

“கொடிய பெண்மணியே!” பாதி ஏளன உணர்வுடனும், பாதி கவலை நீங்கிய உணர்வுடனும் அவள் கடைக்குத் திரும்பிப் போகத் தொடங்கியபோது நான் திருப்பிக் கத்தினேன். “கொடிய பெண்மணியே! உங்களிடம் இருப்பதிலேயே மிக மோசமான நிலக்கரியை ஒரு மண்வாரி அளவு தருமாறு கெஞ்சினேன்; ஆனால், நீங்கள் அதை எனக்குக் கொடுக்கவில்லை.” அதன் பிறகு பனி மலைகளின் மேலேறி அதன் பிரதேசங்களுக்குள் நுழைகிறேன்; என்றென்றைக்கும் இல்லாமல் போகிறேன்.

ஆங்கிலமொழிபெயர்ப்பு: வில்லா எட்வின் ம்யூர்
ஃப்ரன்ஸ் காஃப்கா
தமிழில்: ஆர். சிவகுமார் 

தொடர்புடைய சிறுகதைகள்
அவரை நான் பார்த்தது காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் ஒரு சாக்கடை அருகில். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. சாக்கடை அருகில் குடிபோதையில் உருளும் மனிதர்களை தினமும் காண்பதெல்லாம் எங்களுக்குப் புதிய விஷயம் இல்லை என்பவர்களுடன் முரண்படுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. இந்த மனிதன் ...
மேலும் கதையை படிக்க...
மனிதர்கள்
“ஏனுங்கோ, இப்பிடி இங்க வந்து ஒக்காருங்க!’ லட்சுமி, ஜன்னலோரம் நகர்ந்தமர்ந்து தன் கணவருக்கு இடமளிக்கிறாள்.அருகமர்ந்த நாச்சிமுத்துவிடம், “என்னங்க இது, இங்க இப்படியோரு சன நெரிசலு! ஒரு நாளைக்கே நாம் இப்பிடி நசுங்கிக் கசங்கிப் போறமே, புள்ள சென்னி எப்பிடித்தான் நெதமும் அமிஞ்சிக்கரைக்கு ...
மேலும் கதையை படிக்க...
forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற ஆடை போர்த்தியதான கோலம். பரந்த காட்டின் கரைகளில் சில வரண்ட பகுதிகள். அவை ...
மேலும் கதையை படிக்க...
அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்..... நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை... காட்டாறு என்றே கொள்வோம்... அபரிமிதமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.... கொஞ்சம் மேட்டிலிருந்து இறங்கும் பொழுது மீன்கள் துள்ளிக் குதித்து இறங்கியது.... கொஞ்சம் தூரத்தில் நிலம் சமனடைய நீரோட்டம் ...
மேலும் கதையை படிக்க...
ரங்கனை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்தார் டிராப்ட்ஸ்மேன் வாசு. ”என்ன ஸார் ஒரு மாதிரி பாக்குறீங்க? கேள்வி கேட்டான் ரங்கன். ”என்னப்பா, இந்த காலத்துல, வீடு கட்டுறதுக்கு, இப்படி ஒரு வரைப்படம் வரைஞ்சு கொடுக்க சொல்றீயே, இதெல்லாம் பழைய காலத்து ஆட்கள் கட்டுறது. ...
மேலும் கதையை படிக்க...
எச்சில் சோறு
மனிதர்கள்
இனி எந்தக்காடு…?
உணவு
திண்ணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)