இந்நாட்டு மன்னர்கள்

 

திரிசூலம்போல், மூன்று சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடு. கிழக்கு-மேற்காகச் சென்ற தேசிய சாலையில் இருந்து கிளைவிட்டு, தெற்கு நோக்கிச் செல்லும் சாலை பிரிவதால் ஏற்பட்ட அரைக்கோணம் போன்ற பகுதியில் நான்கைந்து டீக்கடைகள்,

ஒவ்வொரு கடையிலும், உரிமையாளருக்கு இஷ்டப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம், சின்னா பின்னமாக காட்சியளித்தன. வாசல்களுக்கு இருபுறமும் தேர்தல் தட்டிகள். சுவர்களில் போஸ்டர்கள். கடைகளுக்குள்ளே, கூரைப்பகுதியில் கட்சிக் கொடிகளின் தோரணங்கள்.

அந்த கூட்டு ரோட்டின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் இரண்டு சின்னஞ்சிறு கிராமங்கள். அவற்றை மறைப்பதுபோல், புளியமரங்களும், ஆல மரங்களும் நெருங்கி நின்றன.

இங்கே, சாலைகள், கூட்டணி வைத்து பிரிவதுபோல், அரசியல் கூட்டணிகளின் தேர்தல் கால அலுவலகங்களாகச் செயல்பட்ட இரண்டு ஒலைக் கொட்டகைகள். ஒன்று வடமேற்கிலும், இன்னொன்று தென்கிழக்கிலும் இருந்தன. சாலைகள்தான் கூடுமே அன்றி. மனிதர்கள் அல்ல என்பதுபோல், இந்த ஒலைக் கொட்டகைகளில் இருந்து. மைக்குகள் அலறின. பக்கத்து டவுனில் இருந்து வரவழைக்கப்பட்ட வாடகைத் தலைவர்கள், மைக்குகள் மூலம் வாயில் வந்ததையெல்லாம் தத்துவங்களாகவும், வாக்குறுதிகளாகவும், உளறல்களின் உருவங்களாகி, ஒலிவடிவங்களாக முழங்கினர்.

ஆரம்பத்தில், ‘லாவணி’ மாதிரி போட்டி கோஷங்கள் முழங்கினர். ஒருவர் நிறுத்தியதும். இன்னொருவர் பேசுவார் கொட்டகையையே. மனித உருப்பெற்று பேசுவதுபோலவும், அதன் வாசலே, வாயாகப் போனது போலவும் தோன்றும்.

‘அகப்பட்டதைச் சுருட்டும் கட்சிக்கா உங்கள் ஒட்டு?

‘அகப்படாததையும் சுருட்டும் கட்சிக்கா உங்கள் ஒட்டு?

‘எங்கள் தலைவர் சிங்கம்’

‘இல்லை… இல்லை… அசிங்கம்’

‘கருப்பட்டி விற்ற வேட்பாளருக்கா உங்கள் ஒட்டு?’

‘காண்டிராக்ட்ல கொள்ளை போட்டவனுக்கா உங்கள் ஒட்டு?’

‘பஞ்சாயத்து யூனியனில் பாதியைச் சாப்பிட்ட பாராங்குசத்திற்கா வோட்டு?’

‘முனிசிபாலிட்டியில் முக்கால்வாசியை ஏப்பம் போட்ட முத்தையனுக்கா வோட்டு?’

‘பாராங்குசத்திற்கு வாக்களிக்குமுன்னால், அபலைப்பெண் அஞ்சலையைக் கேளுங்கள்’

‘வேலை கிடைப்பதாக நம்பி, குழந்தையைப் பெற்றுக் கொண்ட ஆசிரிய பயிற்சி பெற்ற பார்வதியைப் பாருங்கள். பாராங்குசத்தின் சுயரூபம் தெரியும்’

‘ஒழிக ஒழிக.’

‘முத்தையன் ஒழிக… வாழ்க… வாழ்க…’

பாராங்குசம் வாழ்க…’

விட்டு, விட்டு, பேசிக் கொண்டிருந்த மைக்குகள். இப்போது விடாமல் ஒரே சமயத்தில் முழங்கின. இரண்டு கொட்டகைகளில் இருந்து வெளிப்பட்ட ஒலங்கள், தேர்தல் ஒப்பாரியாகி, திரண்டு நின்ற இருபக்கத்துத் தொண்டர்களையும், புறநானூற்று வீரர்களாக சிலிர்ப்படையச் செய்தது. இருப்பினும், யானைக்கு புலியிடம் பயம். புலிக்கு, யானையிடம் பயம் என்பார்கள். பரஸ்பரப் பயத்தில், இரண்டு கோஷ்டிகளும், நின்ற இடத்திலேயே நின்றன. சிறுவர்கள் மட்டும், அந்த கொட்டகைக்கும். இந்த கொட்டகைக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

டீக்கடைகளுக்கு எதிர்த்தாற்போல், பெட்ரோல் பங்கிற்கு அருகே உள்ள தன் பெட்டிக் கடையில் இருந்து, காதுகளைப் பொத்திக்கொண்டு, கண்களை வெறித்து வைத்துக் கொண்டிருந்த ராமையா, கடைக்கு முன்னால், திராட்சைப் பழங்களில் அழுகியதை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து அன்னாசிப் பழத்தை… எடு என்றான்.

டவுனில் போய், பழங்களை, அப்போதுதான் அவள் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். கடையில் ‘மிக்ஸி’ இருந்தது. வேர்க்க வைத்து விழுங்குவதுபோல் பயமுறுத்தும் வெயில் காலத்தில், லாரிக்காரர்கள், இந்த கடையில் வந்து ‘ஜூஸ்’ சாப்பிடுவது உண்டு. பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும். கடையில் விற்பனையான மிட்டாய், சிகரெட் வகையறாக்களில் கிடைத்த சொற்ப லாபத்தையும், மனைவியின் மூக்குத்தியை அடகு வைத்து கிடைத்த பணத்தையும் கொண்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஆயிரம் ரூபாயில், இந்த மிக்ஸியை வாங்கினான். ‘கல்லா’வில் கணக்குப் பார்க்கும்போது, ஐந்தாறுரூபாய் அதிகமாக விழுகிறது. கடனுக்கு வட்டி கட்டி விடலாம்.

தேர்தல் கொட்டகைகளில், கோஷங்கள் கேவலமாக போய்க் கொண்டிருந்தன. கடையில் சிகரெட் வாங்க வந்த நான்கைந்து கட்சிக்காரர்களிடம் ‘ஏம்பா… இப்படி கெட்டுப் போறீங்க… தோற்றவனும், ஜெயித்தவனும் ஒண்ணாய் சேருவாங்க… கல்யாண வீட்ல கைகுலுக்கிக்குவாங்க… கடைசில… மண்டைய உடைச்சிக்கிடுறது நீங்கதான்… ஆயிரந்தான் இருந்தாலும் நாம் அண்ணன் தம்பிங்க… தலைவருங்க மேல பாசம் வையுங்க… அதுக்கா, நமக்குள்ள இருக்கிற பாசத்தை குறைக்க வேண்டாம்… பாசத்தை குறைத்தாலும் பராவியில்ல… பகையை வளர்க்க வேண்டாம்…” என்று சொல்லப்போனான். வாய்க்கு வந்தததை, தொண்டைக்குள் போட்டுக் கொண்டான். மனைவியின் முகம் கூட எதிரியின் முகம்போல் தோன்றும் காலம். நல்லதாகச் சொன்னாலும், கெட்டதாக எடுத்துக் கொள்வார்கள். எதிர்கட்சியை ஒழிக என்றும். தன் கட்சியை வாழ்க என்றும் சொல்லாத எந்த வார்த்தையும், அவர்களுக்கு நன்றாகத் தெரியாது.

ராமையா, தொண்டர்கள் கேட்ட சிகரெட்டுகளை, மவுனமாக எடுத்து நீட்டினான். அவர்கள் சிகரெட்டுக்களை வாங்கி கொண்டிருந்தபோது, இரண்டு கொட்டகை முன்னாலும் நின்றவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி ஓடினார்கள். கைகளில் கம்புகள், கத்திகள், சைக்கிள் செயின்கள். கடைமுன்னால் நின்ற தொண்டர்களும், அங்கே இருந்த கலர் பாட்டில்களையும், சோடா பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

ஒரே அமளி… யார், யாரை அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தரத்தில் தாவிய கற்கள், எங்கே இருந்து எங்கே போகின்றன என்று தெரியவில்லை. ‘வெண்டை’ வார்த்தைகள், அரைவேக்காடுகளின் லட்சிய முழக்கங்கள். ஐந்து நிமிடத்தில், தலையில் ரத்தம் கொட்டும் இருவரை ஒரு தரப்பும், மயங்கி விழுந்த ஒரு தொண்டரை, இன்னொருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள். மயங்கி விழுந்தவருக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஓலங்கள் கேட்டன. உறவினர் ஓலங்கள்.

கடைக்குள் வந்த ராமய்யா, ஒரு அன்னாசிப்பழத்தின் காம்புகளை வெட்டிவிட்டு, அவற்றின் முட் பகுதியைச் சீவிக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தான். இந்த பழத்தைச் சீவினால் சாறு கிடைக்கும். மனிதனை சீவினால் என்ன கிடைக்கும்… ஒருவனின் உடம்புக்குள் ஒட்டுக்கள் இருப்பதுபோல், அவனைச் சீவும், இந்த பயித்தியககாரக் கூட்டத்தை என்ன சொல்வது… ஒருவருக்குப் பதவி கிடைப்பதற்காக, கூட்டங் கூட்டமாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும், இந்த அப்பாவித் தொண்டர்கள், கட்சி சார்பற்ற முறையில் அக்கிரமங்களுக்கு எதிரான நியாயக் கூட்டணி வைத்தால், அக்கம்பக்கம் எப்படிச் சீர்படும்…

கோவில் நிலம் முப்பது ஏக்கரை வளைத்துப்போட்டு, அதில் உழைக்காமலே, குத்தகைக்கு விடும் வீரராகவனைக் கேட்க ஆளில்லை… வரிப்பணம் பிரித்தாலும், வசூலிப்புக்கு ரசீது கொடுக்காத முன்சீப்பைக் கேட்க ஆளில்லை… போனவாரம், பனையேறும்போது தவறி விழுந்து தங்கப்பன் செத்ததால் அதுக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் கொடுக்காம்… இதை வாங்கி செத்துப் போனவனின் பிள்ளை குட்டிகளுக்குக் கொடுக்க ஆளில்லை… சைக்கிளில் போகும்போது, லாரியால் அடிபட்டு பாதியிலே போன முனுசாமி குடும்பத்திற்கு, லாரி முதலாளியைப் பிடித்து நஷ்ட ஈடு கேட்க நாதியில்லை…

சொந்தச் சகோதரர்கள், துன்பத்தில் சிக்கும்போது, போர் தொடுக்க மனமில்லாத இந்தத் தொண்டர்கள், இப்போது எப்படி போர் தொடுக்கிறார்கள். எப்படி அடித்துக் கொள்கிறார்கள்!… சம்பந்தப்பட்ட கர்ணமும், கோவில் சொத்தை மடக்கிப்போட்ட வீரராகவனும், எதிர் எதிர் கட்சிகளில் இருந்துகொண்டு, தங்களின் பாவங்களை, புண்ணியங்களாக்க முடிகிறது… ஏழை பாழைகளை, ‘சக்கராயுதத்தால் கொல்லும் லாரி முதலாளி, இருதரப்பும் நன்கொடை கொடுத்து, நல்ல பேர் வாங்க முடிகிறது. அநியாயக்காரர்கள் முகாம் கொண்ட அமைப்புக்களிலேயே, நியாயங்களை, விற்கவும், வாங்கவும். விசுவாசமாக முயற்சி செய்யும் இந்தத் தடிராமன்களை, எப்போது திருத்துவது? யார் திருத்துவது?…

‘ஏன் பித்துப் பிடிச்சு பார்க்கறே?’ என்று மனைவி சொன்ன பிறகுதான், ராமையா சிந்தனையை உதறுவதுபோல், தலையை, அங்குமிங்குமாக ஆட்டி கொண்டு. கடைக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்களை, கவனிக்கத் தலைப்பட்டான்.

‘மாம்பழ ஜூஸ் கொடு…’

ராமய்யா, இரண்டு ‘கிளிமூக்கு’ மாம்பழங்களை தோலுரித்துவிட்டு, பாளம் பாளமாகச் சீவி, மிக்ஸியில் போட்டான். ஸ்விட்சை, தட்டிவிடப்போனபோது, ஒரு அணியின் தொண்டர்க்ள் தேர்தல் சுவரொட்டி ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ராமையாவின் கடையின் நடுப்பக்கம் சாய்த்து வைத்தார்கள். இன்னொரு தொண்டன், வேறொரு சுவரொட்டியைக் கொண்டுவந்தான். முத்தையன் கட்சியினரின் வெறித் தாக்குதலால் ஒரு தொண்டனின் உயிர், ஆஸ்பத்திரியில அல்லாடுகிறது என்று அதில் எழுதப் பட்டிருந்தது. அந்த தட்டியை ஒரு தொண்டன், தேர்தல் சுவரொட்டியோடு சேர்த்து வைத்தான். ராமையா, பக்குவமாகப் பேசினான்.

‘ராஜு… ஒனக்கே தெரியும்… நான் எந்தக் கட்சியிலயும் இருக்க விரும்பல… ஒங்க கட்சிகளை… விமர்சிக்கிற அளவுக்கு அறிவு கிடையாது… ஆனால் இங்கே தேர்தலுல நிற்கி இரண்டுபேருமே ஒருமாதிரி… அதனால தயவு செய்து… என் கடை முன்னால இதெல்லாம் வேண்டாம். கடையில… அவங்களும் தட்டி கொண்டு வந்தாங்க… நான் இப்போ சொன்னதைத்தான் சொன்னேன்… ஒங்க வம்புல என்னை மாட்ட வைக்காதீங்க… நான் ரெண்டு பேருக்குமே பொதுப்பிள்ளையாய் இருக்க விரும்புறேன்..!

ராமய்யா, கடைக்கு வெளியே வந்து, இரண்டு தட்டிகளையும் எடுத்து, அவர்களிடம் கொடுப்பதற்காக குனியப் போனான். ராஜூ முன்பெல்லாம், இதே இந்த ராமய்யாவிடம் ‘அண்ணே அண்ணே’ என்று குழைகிறவன்; அதே அந்த ராஜூ இப்போது, முகம் விகாரப்பட அவனைத் தட்டினான்.

‘என்ன ராமய்யா… ஒனக்குத் தெனாவட்டு… எங்க தலைவர் படம் போட்ட தட்டியையும்… எங்க கட்சிக்காரன் உயிரைப் பற்றி எழுதியிருக்கிற தட்டியையும் எடுக்கிற அளவுக்கு வந்துட்டியா? ஒன்னை இதுவரைக்கும் சும்மா விட்டது தப்பாப் போச்சு… தட்டிங்கள தொட்டியானா… தரையில் ஒன் தலை விழும்…’

‘என்னப்பா. பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம்…’

‘பின்ன என்ன? நான் தட்டிங்கள வச்சிருக்கேன்… நீ… மரியாதை இல்லாமல் எடுக்க வர்ரே… சரி, ஒன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல… இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்து பார்ப்பேன்… தட்டிங்க மட்டும் இல்லன்னா… ஒன் உடம்புல தலையும் இருக்காது…’

ராமய்யா, ராஜூவை ஏறிட்டுப் பார்த்தான். அதில் கோரமான கொலைவெறிச் சுருக்கங்கள் தெரிந்தன. ‘உள்ளுர்க்காரன்… தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை அண்ணன், தம்பியாக இருந்தவன்’ என்ற நினைவுக்குரிய அடையாளத் தடயங்கள் ஏதும், அந்த முகத்தில் தெரியவில்லை. அந்தக் காலத்தில், அஸ்வமேத யாகம் செய்து, இதர நாடுகளுக்கு, சக்கரவர்த்தி குதிரையை அனுப்புவார். பிற நாட்டு மன்னர்கள், அந்தக் குதிரைக்கு மரியாதை செலுத்தி தங்கள் அடக்கத்தைக் காண்பிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் சவால் குதிரையை, எந்த மன்னரும் கட்டிப் போட்டால், அது போர்ப் பிரகடனமாக எடுத்துக் கொள்ளப்படும். அதே அந்த குதிரை, இப்போது தேர்தல் யாகத்தில், தட்டியாக வந்து ராமையாவின் கடையில் நிற்கிறது. இவனால் தட்டிகளைத் தட்டிப் பார்க்க முடியுமா…

ராஜு போய்விட்டான். ராமய்யா, எதுவும் புரியாமல், மிக்ஸியில் சிதறும் கனிச்சதைகள் போல் குழம்பிப் போனான். ‘சரி கடைக்கு வா… தட்டி இருந்தால் இருந்துட்டுப் போட்டும்…’ என்றாள்.

ராமய்யா வெளியே இருந்தே குரல் கொடுத்தான்.

‘காலையில் அவங்களை… தட்டியை – வைக்கக் கூடாதுன்னு சொன்னேன். அவங்களுக்கு என்ன ஜவாப்பு சொல்றது?’

‘என்னத்தைச் சொல்ல… அவங்களும் வைச்சால் வச்சுட்டுப் போகட்டும்… காலத்த அனுசரித்து நடக்கணுமுன்னு ஒனக்கு ஏன் தெரியமாட்டாக்கு? இந்தக் காலத்துல… நல்லதுல கலந்துக்காட்டா விட்டுடுவாங்க… கெட்டதுல கலந்துக்காட்டா விடமாட்டாங்க… சரி சரி… உள்ள வா…’

ராமய்யா, உள்ளே போனான். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இருதரப்புமே கோஷங்கள் போட்டாலும், தன்னுடைய சொந்த இடத்தில், அரசியல் கோஷங்கள் நுழைய முடியாமல் தடுக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை விசித்திரமாக உணர்ந்து, விரக்தியாகச் சிரித்துக் கொண்டான்.

மறுநாள் பிறந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராங்குசம் கட்சியின் தொண்டனின் உயிர் அபாயக் கட்டத்திலேயே இருந்ததாகச் செய்தி வந்தது. உடனே அந்தக் கட்சியின் தொண்டர்கள், ஆஸ்பத்திரிக்கு முன்னால் கூடி, பிறகு தலைவராக விரும்பிய ஒரு தலைவரின் தூண்டுதலில், வன்முறையை கண்டிக்கும் வகையில், அதற்கு அமைதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ‘கறுப்புப் பேட்ஜ்களை’ அல்லது கறுப்பு சட்டைகளை அணிந்துகொண்டு, டவுனுக்குள் ஊர்வலமாகப் போனார்கள். கண்ணில் தென்பட்ட எதிர்க்கட்சித் தொண்டர்களை உதைத்தும், கட்சிக்கொடிகளைக் கிழித்தும். வன்முறை எதிர்ப்பை வாஞ்சையோடு காட்டினார்கள். எதிர்க்கட்சித் தொண்டர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

எப்படியோ, இவர்கள், அடித்ததில் களைப்பும், உதைத்ததில் இளைப்பும் ஏற்பட்டு, ஒரு மணிநேர கோர தாண்டவத்திற்குப் பிறகு, ஆளுக்கொருவராகச் சிதறிப் போனார்கள். இவர்கள் போனதும், அவர்கள் திரண்டார்கள். ஒடி ஒளிந்தவர்கள், ஒன்றுதிரண்டு, ‘கறுப்பு பேட்ஜ்’ அணிந்தவர்களை தேடிப் பார்த்தார்கள். யாரும் கிடைக்கவில்லை. அவர்களால் அடையாளப்படுத்த முடியாதபடி, ஆங்காங்கே போய்க் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தொண்டர்கள், கறுப்பு பேட்ஜ்களை கழற்றி வைத்துக் கொண்டார்கள்.

ஆள் கிடைக்காததற்கு தேர்தல் அலுவலகங்கள் கிடைத்தன. அவற்றிற்கு தீவைத்த தொண்டர்கள், ஒரு ஆள்கூட கிடைக்காத ஆத்திரத்திலும், ஒரு தொண்டனையாவது உதைக்க வேண்டும் என்ற லட்சியப் பிடிப்போடும். டவுனுக்குள் இருந்த பழக்கடை பக்கமாக வந்தார்கள். அங்கே, ராமையா. ஒரு கறுப்புச் சட்டையுடன், பழக்காரர் ஒருவரிடம் ‘பேரம்’ பேசிக்கொண்டிருந்தான். ‘இப்போதுததான் ஜூஸ் விற்கிற நேரம்… பஸ் போற நேரம்… சீக்கிரமாக கடைக்குப் போகணும்… கட்டுபடியாகிற விலையாச் சொல்லுங்க’ என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது, அணிவகுத்து வந்த தொண்டர் கூட்டம், அவனை எதிர்க் கட்சிக்காரனாய் நினைத்து, தெருவுக்கு இழுத்து வந்தார்கள். பின்னால் தள்ளி, முன்னால் உதைத்தார்கள்.

‘நான் என்ன தப்பு பண்ணினேன்… என்னை ஏன் அடிக்கீங்க’ என்று ஒன்றும் புரியாமல் கத்திய ராமையாவின் வாய், கடைசியில் ரத்தத்தைக் கக்கியது. அவனை, அங்கேயே குற்றுயிரும், கொலையுயிருமாய் போட்டுவிட்டு, தொண்டர்கள், ஒரு லாரியில் ஏறிக் கொண்டார்கள். கூட்டு ரோட்டில் வந்தார்கள்.

லாரி வாகனாதிபதிகளைப் பார்த்த பாராங்குசத்தின் ஆட்கள் தேர்தல் அலுவலகத்தை அப்படியே போட்டுவிட்டு, ஓடி விட்டார்கள். தேர்தல் தட்டிகளை வைத்திருந்த டீக்கடைக்காரர்கள். அவற்றை உள்ளே எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.

பழம் வாங்கப்போனவரை இன்னும் காணுமே என்று கடையில் இருந்தபடியே, பஸ் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள். லாரியில் வந்திறங்கியவர்களில் யாராவது ஜூஸ் சாப்பிடுவார்கள் என்று. ஆனந்தமான எதிர்பார்ப்புடனும், அப்பாவித்தனமாகவும் சிரித்தபோது லாரியில் இறங்கியவர்கள், அந்தக் கடையைப் பார்த்தார்கள். என்ன திமிர்… பாராங்குசத்தின் தேர்தல் சுவரொட்டியை வச்சிருக்காள்… நம்மை குண்டர்கள் என்று சொல்லி அழைக்கும் இன்னொரு தட்டியையும் வச்சிருக்காள்… இதுவும் பத்தாது என்று, நம்மைப் பார்த்துச் சிரிக்கிறாள்… ஆம்புளைகள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டபோது, ஒரு பொம்பிளை சிரிக்கிறாள்… என்னதான் நினைச்சிக்கிட்டாள்… இவ்வளவு திமிரா…

லாரித் தொண்டர்கள் அந்தக் கடையை நோக்கிப் பாய்ந்தார்கள். கலர் பாட்டல்களை எடுத்து, மிக்ஸி யந்திரத்தை அடித்தார்கள். பெட்டிக்கடையை, கீழே இழுத்துப் போட்டார்கள். கண்ணாடிப் பீங்கான்களை தூக்கிப்போட்டு உடைத்தார்கள். மிக்ஸி யந்திரத்தை தனியாக எடுத்து, ஒரு கல்லை வைத்து அடித்து அடித்து கடைசியில் உருத்தெரியாமல் ஆக்கினார்கள். ஒன்றும் புரியாமல் வெளியே ஓடிவந்த ராமையாவின் மனைவியின் தலைமுடியைப் பிடித்திழுத்து மல்லாக்கத் தள்ளினார்க்ள். ‘அவ்வளவு திமுறாடி’ என்று சொல்லிக்கொண்டே இடுப்பை மிதித்தார்கள். அந்த வேகத்தில் குப்புறப் புரண்டவளின், தலையில் மிதித்தார்கள். முதுகில் ஏறி நின்று, கழுத்தை உதைத்தார்கள்.

எத்தனையோ பேருக்கு தாய்மையின் கனிவோடு, ‘ஐஸ்’ போட்டு, ‘ஜூஸ்’ போட்டுக் கொடுத்த ராமையா மனைவியின் மேனி முழுவதும் சாறுதிரண்ட சக்கையாகியது. வாயில் நுரை தள்ளியது. உடம்பு, அவள் போடும் ‘ஐஸ்’ மாதிரி குளிர்ந்து கொண்டே போனது.

- சிக்கிமுக்கிக் கற்கள், ஏகலைவன் பதிப்பகம், முதல் பதிப்பு – டிசம்பர் 1999 

தொடர்புடைய சிறுகதைகள்
காடுகொன்று நாடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு........ பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, ...
மேலும் கதையை படிக்க...
நீலா, தனது சபதத்தை இப்படி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது 'பைத்தியக்காரப் பொண்ணு' என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே ...
மேலும் கதையை படிக்க...
அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு அழகு என்பதை விட, எளிமைதான் எழில் என்பது போல் - அதே சமயம் தான் என்ற கர்வம் இன்றி காட்சியளித்தது. ...
மேலும் கதையை படிக்க...
ராமையா, தண்ணிர் புரையேற, "மூக்கும் முழியுமாக" திண்டாடினார். அதற்குக் காரணமான அவரது மனைவியோ, அவர் காதுகளில், நீர்த்துளிகள், அந்தக்காலத்து கடுக்கன்கள் மாதிரி மின்னுவதை ரசித்துப் பார்த்தபோது அவருக்கு கோபமும் புரையேறியது. ஆத்திரமாக ஏதோ பேசப்போனார். இதனால் அவர் வாய் குளமாகி, பற்கள் ...
மேலும் கதையை படிக்க...
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது.... எலெக்டிரிஸிட்டியை நம்பி இலையைப் போடப்படாது... இந்த ரெண்டையும் செய்தாலும் செய்யலாம்... ஆனால், வாடகை டிராக்டரை நம்பி வயலைக் ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் - அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு 'ஓம் வக்ர துண்டாயா' பன்றபோது, கீரைக்காரி ...
மேலும் கதையை படிக்க...
ஆரல்வாய் மொழியின் சுற்றுப்புறச் சூழலும், அதன் மடியில் கிடந்த அரண்மனை மாதிரியான அந்த வீடும், பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போதைய நாஞ்சில் நாட்டின் வட எல்லையான இந்த ஊரை வளைத்துப் பிடித்திருப்பதுபோல், அதற்கு வடக்குப் பக்கமாய் திரும்பி நிற்பதால் வடக்கு மலை ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பூங்காவில், ஆணும் பெண்ணுமாய் கலந்து நின்ற இளைஞர் கூட்டத்தை 'ஜிப்சி சிம்பா, கலப்படமாக்க ஆயத்தமானபோது - குமுதாவும் இளங்கோவும் இணை சேர்ந்து அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தார்கள். உள்ளடக்கம் எப்படியோ அவர்களின் உருவப் பொருத்தம் பிரமாதம். அவனும் இவளும் ஒரே ...
மேலும் கதையை படிக்க...
அந்த ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட்டியின் வாசலில், அக்னிநாத், உடலைக் காட்டாமல், தலையை மட்டுந்தான் காட்டியிருப்பான். அதற்குள், கூட்டம் அலை அலையாய் மோதியது. ரயில் இரைச்சலை தவிடுபொடியாக்கும் மனித இரைச்சல், கோஷக் கூச்சல்கள். தூங்கி எழுந்ததும் வெளிப்படுமே மிருகச் சத்தங்கள் - ...
மேலும் கதையை படிக்க...
கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும் இருள் மயம்... அந்த கட்டிடத்திற்கு பின்னணியாக உள்ள பாறைப் பொந்துகளும், அவைகளின் பின்புலமான மலைக் குவியல்களும், மரம், செடி, கொடிகளும், மங்கிப் போகாமலே மறைந்து போய் விட்டன. சாலையில் ஒளி உருளைகளாய் செல்லும் வாகனங்களைக்கூட ...
மேலும் கதையை படிக்க...
சிக்கமுக்கிக் கற்கள்
திருப்பம்
மூலம்
பாசக் கணக்கு
டிராக்டர் தரிசனம்
சாமந்தி ⁠சம்பங்கி ⁠ஓணான் இலை
பெண் குடி
பெரியம்மா மகன்
வெள்ளித் திரையும் ⁠வீதித் திரையும்
காவலாளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)