Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆடி அமாவாசை

 

ராமுவுக்கு பசி தாங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாளாக கொலைப் பட்டினி. செல்போனுக்கும் ரீசார்ஜ் பண்ணவில்லை. அதனால் உள்வரும் அழைப்புகள் மட்டும்தான். வெளிச் செல்லும் அழைப்புகள் பேச முடியாது. இப்படி ஒரு நாளை கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. அவன் தொழிலில் செல்போன் அத்தனை முக்கியம். அலுப்பும் சலிப்புமாக வந்தது. மனைவி வேறு துர்கா மாத விலக்கு. அப்படி இல்லாவிட்டால் அவளாவது எதாவது திவசம் திங்கள் என்று சமைக்கப் போய் விடுவாள். அதுவும் இல்லை. காலேஜில் படிக்கிற மகனுக்கு யாரோ பெயர் சொல்லாத தர்மவான் மதியம் சாப்பாடு சத்திரத்தில் போட்டு படிக்க கட்டணம் கட்டுகிறார். இல்லையென்றால் அவனும் சாமு தொழிலுக்குத்தான் வந்திருப்பான்.

ராமுவின் பிள்ளை மாதவன் பிளஸ் டூ வில் 1160 மார்க் எடுத்திருந்தான். சென்னையில் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியர்கள் பணம், உடை என்று உதவியதிலும் சத்துணவு ஆயாக்களின் பரிதாபத்தால் மதியம் ஒரு வேளை உணவுமாக மிகுந்த போராட்டங்களுக்கிடையே பள்ளிப்படிப்பு முடிந்தது. சென்னையில் கல்லூரியில் சேர்க்கிற அளவுக்கு ராமுவுக்கு ஐவேஜி கிடையாது. கணக்கு வாத்தியார் பொன்னையா சார் திருச்சிக்காரர். தேர்வு முடிவுகள் வந்ததும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அவனது கல்வி முடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தான் படித்த செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு கூட்டிப் போய் மாதவனின் நிலையை தன் ஆசிரியரான பாதிரியாரிடம் சொல்ல, அந்த கிருஸ்தவப் பாதிரியார் பரிதாபப்பட்டு தர்மவான் ஒருவரைக் கைகாட்டினார். மாதவனை மட்டுமே பார்த்து ராமுவை யாரென்று தெரியாமலே, பார்க்காமலேயே பாதிரியார் சொன்னதை மட்டும் வைத்து அந்தப் புண்ணியவான் தான் டிரஸ்டியாக உள்ள தர்ம சத்திரத்தில் தங்கிக் கொண்டு மத்தியானம் சாப்பிடவும் வகை செய்து கொடுத்தார். அதற்கு பதிலாக சத்திரத்தில் தங்க வரும் ஆட்களுக்கு அறை காட்டி, ரசீது எழுதி, காலையில் அலுவலகம் திறந்து என்று கிட்டத்தட்ட ஒரு கிளார்க் மாதிரி கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்ய வேண்டும். எப்படியோ அவனும் இரண்டாம் வருடம் பி.எஸ்சி வந்து விட்டான். இன்னும் ஒரு வருட படிப்பு. அந்த ரங்கநாதன் பார்த்துப்பான். சத்திரத்தில் தங்க வருபவர்கள் அவனது குணத்திற்காகவும் பண்பான பேச்சுக்காகவும் பலமுறை பத்து இருபது என்று பணம் தந்துவிட்டுப் போவது வழக்கம். ஆனால் அதை அங்கே வைத்துள்ள டிரஸ்டின் தர்ம உண்டியலில் செலுத்த சொல்லிவிட வேண்டும். இதை டிரஸ்டி முகுந்தன் செட்டியார் முதலிலேயே சொல்லி விட்டார். மாதாமாதம் டிரஸ்ட் காரியஸ்தர் வந்து அதை திறந்து பணத்தை எடுத்து எண்ணித் தருவார். அதை அவனே சலான் எழுதி தெப்பக்குளம் கரூர்வைஸ்யா வங்கிக் கிளையில் கட்டி ரசீதை கார்யஸ்தரிடம் தர வேண்டும். அவனுக்கும் அதில் எந்த சங்கடமும் இல்லை. தனக்கு சோறிட்டு படிக்க வைக்கும் அந்த அறக்கட்டளைக்கு அவன் செய்யும் நன்றிக்கடனாக அதை கருதினான்.

‘படித்து நல்ல வேலைக்குப் போய் அப்பா, அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும்’, இதுதான் அவன் தினசரி பிரார்த்தனை.

மாதவன் பிளஸ் டூ படிப்பு முடிந்ததும் அவனை திருச்சிக்கு அனுப்பி வைக்க சாமு புரோகிதம் சுந்தர வாத்தியாரிடம், “ஸ்வாமி, மாதவன் பிளஸ் டூ பாஸ் பண்ணிட்டான். பள்ளிக்கூடத்திலே பொன்னய்யா சார் உபகாரத்திலெ பட்டப்படிப்புக்கு சீட் கிடச்சிருக்கு. இப்போ கொஞ்சம் இரண்டாயிரம் ரூபாய் பணம் தந்து உதவினா கோடி நமஸ்காரம்” என்றதும்

அவர் ஹாஹா என்று சிரித்து “ஓ, அப்படியா சேதி. பிள்ளையை ஏண்டா கிருஸ்தவ காலேஜில சேர்க்கற. எதோ உன்கூட வந்து இரண்டு மந்திரம் கத்துண்டு கூடமாட ஒத்தாசையா வைத்துக் கொள்ள நினைத்தேன். இப்படி பொணம் தூக்கி கர்மா செய்யறதுக்கெல்லாம் இந்த ஆசை வராலாமா. எல்லாம் கலிகாலம். இப்போ என்னிட்ட பணம் இல்லை”, என்று நிர்தாட்சண்யமா அவர் பேசிய பின்புதான் தெரிந்தது தன் அப்பா புரோகிதர் இல்லை. பிணம் தூக்கி கர்மா செய்யும் சவண்டி என்று. கண்ணில் கண்ணீர் வந்தது. நேராக பொன்னையா சார் வீட்டிற்கு வந்தவன் நடந்ததைச் சொல்லி அழ, மனிஷன் அவனைச் சமாதானப்படுத்தி கையில் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து தெரிந்த லாரியில் ஏற்றி விட்டார்.

அன்றிலிருந்து மனசில் ஒரு வைராக்கியம். படிப்பு தவிர வேறு நினைப்பில்லை.

ராமுவின் முன்னோர்கள் எல்லாம் காவேரிக்கரையில் நில் நீச்சோடு வாழ்ந்தவர்கள் தான். குடி, கூத்தி, திண்ணைச் சீட்டுக் கச்சேரி என்ற ஜபர்தஸ்தில் காலமும் பணமும் கரைந்து, ராமு தலைஎடுக்கும் போது ஊர்முச்சூடும் கடன். ராமுவின் அப்பாவின் கூத்தி மயக்கத்தில் அடித்த அடியும் உதையும் பொறுக்க மாட்டாமல் அவனைப் பெற்றெடுத்த புண்ணியவதி முப்பது வயதிலேயே போய் சேர்ந்து விட்டாள். கடன் காரர்கள் துரத்த இருந்த கொஞ்ச நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு உள்ளூரில் கடன்களை ஒன்றும் பாதியுமாய் கொடுத்து விட்டு, மிச்சமிருந்த ஒரு லட்சத்துடன் சென்னைக்கு வந்த ராமுவின் அப்பா வைத்தியநாதனுக்கு பழைய வாய் மட்டும் அப்படியே இருந்தது. எந்த வேலையிலும் கால் தரிக்கவில்லை. ஹோட்டல் சரக்கு மாஸ்டர் எல்லாம் கௌரவ குறைவு, புரோகிதம், கோவில் அர்ச்சகர் வேலைக்கு உருப்படியாக மந்திரம் எதுவும் தெரியாது. இப்படி இருந்தாலும் ஏ. ஆர்.ஆர் கும்பகோணம் வெத்தலை, பன்னீர் புகையிலை டிகிரி காபி என்று பழைய நினைப்புகள் பொழைப்பைக் கெடுத்தது. ஊரில் நிலம் வித்து கடன் பைசல் பண்ணியது போக மீதம் இருந்த பணமும் சென்னை வாழ்க்கையில் கரைய அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத போது சவண்டி சாப்பிட பலிக்கடா ஆக்கப்பட்டவன் தான் ராமு. பாவம் தன் படிக்க ஆசைப்பட்டதைச் சொல்ல முடியவில்லை. செத்த வீட்டில் 13 நாள் அபர காரியத்திற்கும் அந்த பத்து பதினைந்து வயதில் புரோகிதம் கிருஷ்ண வாத்தியாரிடம் சேர்த்து விடப்பட்டான். காலம் ஓடிப் போய் விட்டது. ஸ்ரீமான் வைத்தியநாதன் கண்ணை மூட இப்போது இந்த துறையில் முப்பது வருட அனுபவம். கிருஷ்ண வாத்தியார் காலமான பின் ராமுவிற்கு ஆதரவு இல்லை. சவண்டிக்கு எந்த பிராமணன் பெண் கொடுப்பான். கன்னையன் பேட்டை மின் மயானத்தில் டிராலி தள்ளும் மாரிதான், “ அய்யரே, நீயும் எத்தினி நாளு ஒண்டிக்கட்டையா காலம் தள்ளுவே. நல்ல குணவதியா ஒரு பொண்ணு நம்ம ஊட்டாண்ட இருக்கு. அது அப்பனும் உன்னை மாதிரித்தான். நீ பொண்ணைப் பார்த்து சரின்னா நான் கிட்ட இருந்து முடிக்கிறேன்”, என்றான். சவண்டி என்றே பெயராகிப் போனவனை அய்யரே என்று அழைப்பது கன்னையன் பேட்டை பணியாளர்கள் மட்டும்தான்.அப்படி மாரியால் ராமுவிற்கு கட்டி வைக்கப் பட்டவள் தான் துர்கா. ராமுவின் அப்பா ஸ்ரீமான். வைத்தியநாதன் உயிரோடு இருந்தபோது ஒரு நாள் கூட அவன் திருமணம் பற்றி பேச்செடுத்ததே இல்லை. அவன் சாப்பிட்டு வந்த பின் தந்த தெஷ்ணையை வாங்கிக்கொண்டு தி.நகர் கிளப்பிற்கு சீட்டாடப் போய் விடுவார். எப்போதும் தலைமை வாத்தியாருக்கு தெஷ்ணையில் கமிஷன் கொடுப்பது வழக்கம். அப்போது சுந்தர வாத்தியாரிடத்தில் வேலை. அது கூட மாரிதான் சிபாரிசு செய்து வாங்கித்தந்ததுதான். தெஷ்ணையில் நூறு ரூபாய் வழக்கம் போல கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தவனிடம்,

“ டேய் ராமு, நாளையிலிருந்து ஐம்பது ரூபாய் கமிஷன் கொடு. அது போதும்” என்றார்.

மறுநாள் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த சுந்தர வாத்தியாரிடம் ஐம்பது ரூபாய் தர, “ என்னடா ராமு அம்பது ருபாய் குறைகிறதே” என்றவரிடம்

“அப்பா, அம்பது ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொல்லியனுப்பினார்”

என்றதும், “ ஓகோ. அப்படியா. சரி” என்று பதில் வந்தது. அப்புறம் அவர் அவனை கூப்பிடவே இல்லை.

அப்பாவிடம், எந்த மாற்றமுமில்லை. “அடப்போடா, இவன் இல்லைனா வேற வாத்தியார். அவரை விட உனக்குத்தான் கிராக்கி அதிகம்” என்று அலட்சியமாகப் பதில் வந்தது. அப்புறம் மாரிதான் சுந்தர வாத்தியாரிடம் மத்யஸ்தம் பேசி மீண்டும் வேலை வாங்கித்தந்தான். என்ன கமிஷன் தொகை அதிகமானதுதான் மிச்சம்.

மெல்ல நடந்து சுடுகாட்டிற்கு வந்தவன் பசி மயக்கத்தில் காரியம் செய்யும் ஷெட்டில் சுருண்டு படுத்து விட்டான்.

“அய்யரே, அய்யரே எழுந்துரு” என்ற மாரியின் குரல் கேட்டு எழுந்தவனைப் பார்த்த மாரி, “ சாப்பிடலையா? உன்னை பார்த்தாலெ தெரியுது. வா இன்னிக்கு ஆடி அம்மாசியாமெ பொண்சாதி குளிச்சி புது மண் சட்டியில சுத்தமா சமைச்சதுதான். அத்த நீ சாப்பிடு. நான் காசியோட போயி கடையில சாப்பிட்டுக்கிறேன், நம்மை போல ஏழைக்கு ஏது சாதி அய்யரே. என்று சொன்னவன் கைத்தாங்கலாக அவனை நந்தவன ஓரத்தில் உட்கார வைத்து தலை வாழை இலையில் கொண்டு வந்த சாப்பாட்டை பரிமாறினான். மயான பூமியில் ருத்திரன் பூமியதிர உதைத்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டான். 

தொடர்புடைய சிறுகதைகள்
டேய், முத்து, “இன்னிக்கி நீ கேட்டபடி கூளயனை நீ கூட்டிக்கிட்டு போ. நூத்தம்பது ரூபாய் அக்காட்ட கொடுத்திட்டு போயிடு. ராத்திரி 9 மணிக்கு கூளையனை கொண்டு விட்டுறணும். மத்ததெல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்”. அண்ணாச்சியிடமிருந்து போன் வந்ததும் முத்துவிற்கு சந்தோசம். பதுவா அண்ணாச்சியோட ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது பொதுவாக மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில்தான். திரும்பத்திரும்ப ஒரே நேர்கோட்டில் கைத்தறியில் ஊடை நூலைப் போல இயந்திரத்தனமாய் ...
மேலும் கதையை படிக்க...
மனநல மருத்துவர் டாக்டர். சிவகுருநாதன் காரை விட்டு இறங்கி கைப் பெட்டியுடன் ஏதோ சிந்தனையில் திவ்யா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்தார். அந்த பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்குரிய ஆலோசனை அறையை அடைய வரவேற்பறையைத் தாண்டித்தான் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவரது ...
மேலும் கதையை படிக்க...
“டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும் . நான் அதனால இன்னோவாவை எடுத்துக்கிறேன். நம்ம நீ ...
மேலும் கதையை படிக்க...
‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது. அந்த அரசுப் பள்ளியில் ...
மேலும் கதையை படிக்க...
கூளயன்
இன உணர்வு
அடையாளம்
மகளிர் தினம்
சண்முகவடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)