Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறகுகள்

 

அது ஒரு துர்ச் சம்பவம். தப்பிக்கவே முடியாத ஒரு மாயவலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது போல முடிந்துவிட்டிருந்தது . எல்லாம் கொண்டாட்ட கதியில் நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில் ஓர் ஊழிப் பெரும் கொடுக்குப் பிடியில் இறுக்கப்பட்டு விடுவோமென்று மதி எதிர்பார்க்கவில்லை.

தேனிலவின் மூன்றாவது நாளில் நீர்வீழ்ச்சியில் குளிக்கப் போனபோது ஒரு மூன்று நான்கடி உயரத்திலிருந்து குதூலத்தோடு பாய்ந்தவர் குப்புற விழுந்து நீரிலிருந்து சில நிமிடங்கள் எழாதிருக்க, பதறி ஓடிப்போய் தூக்கும் போதுதான் தெரிந்தது ரமேஷ் நினைவற்றும், மூச்சுப் பேச்சற்றும், கைகால் அசைவற்றும் அப்படியே பாறைபோல சில நிமிடங்கள் அமிழ்ந்து கிடந்தது. மூச்சு நீரை உள்ளிழுத்ததோடு அந்த நினைவிழப்பு நிகழ்ந்துவிட்டிருந்தது. முதுகுப்புறம் சுவாமிழந்த அசைவின்மையை உணர, உடனடியாக கூடியிருந்தோர் உதவியை நாடி மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சேர்த்து மூன்று மணி நேரப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்கள் சொன்ன செய்தி அவளின் முதுகுத் தண்டில் நடுக்கம் தொற்றி அவசரமாக மேலேறி உடல் முழுதும் பரவி வியாபித்தது!

ரமேஷ் கோமாவுக்குள் போய்விட்டார் என்றார்கள்.

அவருக்கு எப்போது நினைவு திரும்புமென உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் கைவிரித்து விட்டார்கள். அவரை இத்தனை மணி நேரம் பரிசோதித்த மூவருமே ஸ்பேசியலிஸ்ட் மருத்துவர்கள். அக்கணம் தொட்டு மதியின் உடல் மன அசைவும் ஸ்தம்பித்துப் போனது. அவளின் மூளைச் சுவர்கள் அதிரத்தொடங்கின. நாளங்களின் ரத்தம் உறைந்து ஒரு கணம் அசைவற்றுப் போனது!

அவர் விபத்துக்குள்ளாகி எல்லாம் சரியாகிவிடும், சாதாரண விழுதலில் உண்டான மயக்கம்தான் என்று எண்ணியிருந்தாள், மருத்துவப் பரிசோதனை முடிவைச் சொல்லும் வரை. சுய ஆறுதல்,தேறுதல் எல்லாம் கணத்தில் பொய்த்தது. கலைந்து கலைந்து ஆடிக் திரிந்த நீர்ப் பிம்பமாய் ஆனது அவள் நினைவுலகு . மருத்துவர்களின் அந்த முடிவான செய்தி உள்ளுடலை தாக்கிய அதிர்வு நின்றபாடில்லை . அவளிடமிருந்த எல்லா வார்த்தைகளையும் ஏதோ ஒரு அசுர சக்தி உறிஞ்சித் தீர்த்துவிட்டது. அவள் அக்கணமே மௌனமாய்ப் போனாள். யார் வந்து ஆறுதல் சொன்னாலும் அதனை உள்ளிழுக்க சுரணையற்றுப்போயிருந்தன செவிகள். அந்தச் சொற்கள் இன்னாருடைய குரல் என்ற அடையாளத்தைக் கூட விரக்தி மனம் மறுதலித்துவிடுகிறது. தன் கண்களை நேரடியாகப் பார்த்து தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவுகளின் முகங்களும் அவளுக்கு இன்னார் என்ற அடையாளத்தைக் கூடக் காட்டும் சக்தியையும் இழந்துவிட்டிருந்தது. மிகுந்த கரிசனத்தோடு தழுவும் கரங்களின் ஸ்பரிசித்தை உணராதவளாக இருந்தாள். அவளை ஓர் இருட்டுச் சிறைக்குள் தள்ளி இறுக முடிக்கொண்டது இன்னதென புரியாத காரிருள்.

அவன் எந்தவித அசைவுமற்றும் அவர் மருத்துவமனை கட்டிலில் படுத்துக் கிடப்பது இது எத்தனையாவது நாள் என்று தெரியவில்லை. பல சமயங்களில் பிரக்ஞையற்ற அவள் பார்வை அவன் மீது கவிந்திருந்தது. சதா அவனையே பார்த்துப் பார்த்து களைப்படைந்த கண்களும் மனமும் மரத்து ஒரு கவனமின்மை நிலைமைக்கே அவளைத் தள்ளியிருந்தன. டாக்டர்கள் சொன்னது அவள் நினைவிலிருந்து போகவில்லை. ஓர் திடீர் மோதலில் உண்டான அதிர்ச்சிதான் கோமாவுக்குக் காரணம் என்றார்கள். மண்டையில் லேசான ரத்தக் கசிவு இருப்பதாகவும், உள் உறுப்புகள் சரியாக இயங்குகிறது என்றார்கள். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சீராக இருக்கிறது என்றும் மருத்துவ அறிக்கை சொல்கிறது என்றார்கள். அவன் உயிர் டிர்ப்ஸ் புட்டி போல நீண்ட குழாயில் ஆடிக்கொண்டிருந்தது.

நோயாளிக்கு மிக நெருக்கமானவர் அவரோடு பேசுவது நல்லதென்று அறிவுறுத்தினார்கள். உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவருக்காக நீங்கள் காத்திருப்பதாகச் சொல்லுங்கள். அவர் மீண்டுவந்துவிடுவார் என்று ஆதரவாகச் சொல்லிக் கொண்டே இருங்கள். இந்தத் தொடர்பு உறுதியாய்ப் பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையோடு செய்துவாருங்கள். நீங்கள் நம்பிக்கை வையுங்கள். உங்கள் வார்த்தையின் கனிவும் அன்பும் நிறைந்த அலைவரிசையை அவரின் ஜீவனுக்குள் கொண்டு செல்லும். அது அவரை அசைக்கலாம் . எங்கள் கடமைகளையும் நாங்கள் செய்துகொண்டே இருப்போம் என்றார்கள்.

அவள் அவன் கைகளைப் பற்றியபோதெல்லாம் அவளின் விழியில் ததும்பிய நீர் அவன் புறங்கையில் சொட்டியபடி இருந்தது. சொற்கள் வலுவற்று உணர்வுக்குள் அடங்கிப் போய்விடுகிறது. அவள் நிராதரவற்ற அழுகை , பதிலற்று அந்த அறையின் மூலைகளில் முடங்கிப்போய்விட்டிருந்தது.

எல்லா திசையிலும் தேடிப்போய் தெய்வங்களை வேண்டிக்கொண்டு வந்தாயிற்று. அக் கோயில்களின் திருநீறும் குங்குமமும் தீற்றலாய் பாதி நெற்றியை மறைத்திருந்தது. அவள் இரு கணுக்கைகளிலும் சிவப்பு மஞ்சள் வண்ணக் கயிறுகள் சுற்றி முடிச்சிடப்பட்டிருந்தன.

இந்தத் திடீர் விபத்து அவளுக்கும் ரமேஷின் அம்மாவுக்குமான உறவில் மேலும் விரிசலை அகலமாக்கும் என்று மதி எண்ணியிருந்திருக்க மாட்டாள். ரமேஷின் அம்மா இவர்கள் திருமணத்தைக் கடைசிவரை அங்கீகரிக்காதவள். ரமேஷ் கெஞ்சி கெஞ்சி அழைத்த பின்னரே அவள் தாய் என்ற தன் ஸ்தானத்துக்கான சுய மதிப்பு குன்றாமல் இருக்க, பேருக்கு மணவறையில் வந்து நின்றாள். அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக, இப்போதும் அவள் மகனுக்காக அழுதாளே ஒழிய இவளை ஏறிட்டும் பார்க்க விரும்பாதவாளாய் இருந்தாள். அவள் இருக்கும் திசையைக் கூட அவள் விரும்பவில்லை என்பது அவள் உடலசைவு கட்டியம் கூறிற்று. அவன் கிடத்தப்பட்டிருக்கும் அறையில் மாமியாரும் மருமகளும் ஒரே நேரத்தில் இருப்பதில்லை. ஒருவர் நுழைந்தால் ஒருவர் விலகி வந்துவிடுவார்.

ஐந்தாறு நாள் கழித்து மீண்டும் குமரன் வந்திருந்தார். ரமேஷின் நெருங்கிய நண்பர். மதியின் அருகில் வந்து , “மன்னிக்கனும் மேடம், உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. உங்கள் வேதனையின் சம அளவு என்னையும் பாதித்திருக்கிறது. அதனால் உங்கள் கவலை எவ்வளவு ஆழமுன்னு எனக்கும் புரியும். ரமேஷுயுடைய இப்போதைய நிலையை நானும் அறிவேன்,” மதி அந்த அதிர்ச்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாத தருணம் அது. பேசும் சக்தியை முற்றிலும் இழந்துவிட்ட அல்லது பேசுவதற்கு ஒன்றுமற்று மௌனித்திருந்தாள் அவள். அவனை ஏறிட்டுப் பார்த்தாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் ஏறிட்ட முதல் முகம் அது. அவன் கணகளில் கரிசனம் . வார்த்தைகளில் கனிவு . உண்மை நட்பின் முகவரி எழுதியிருந்தது. ரணம் தன்னைச் சூழ்ந்து வருத்திக் கொண்டிருக்கும் சில நாட்களுக்குப் பிறகு அவள் தன்னிச்சையாய் ஏறிட்டுப் பார்க்க வைத்தது அவன் கனிவு நிறைந்த வார்த்தைகள்.

“ரூமுக்குள்ளயே அடைச்சிக் கிடக்காதீங்க மேடம். முன்பு போல எல்லார்ட்டேயும் பேச முயற்சி பண்ணுங்க. ஆறுதல் வார்த்தைகளுக்குப் புண்ணை ஆற்றும் வலிமை இருக்கு. அவரையே பாத்துக்கிட்டிருந்தால் அவரின் இப்போதைய நிலைதான் மேலும் மேலும் மனச்சுமையைக் கூட்டும். வெளிய போங்க. கவனத்த வேறு பக்கம் திருப்புங்க. இந்த இக்கட்டான நிலைமையை ஏற்றுக்கொள்ளும்படி மனதுக்குப் வலிமை கொடுங்க. நம் கையிலோ, கட்டுப்பாட்டிலோ எதுவுமே இல்லை. நடப்பது நல்லதாய் நடக்கட்டும் என்று மனதளவில் சொல்லிக் கொண்டே இருங்கள். கொஞ்ச நாள்ள சரியாயிடும். நீங்களும் சரியாயிடுவீங்க.”

அவள் மௌனமாய் இருந்தாள். மனதின் ஆழத்தில் உறைந்துவிட்ட அழுத்தம் அவளை சொல்லற்றவளாக்கியிருந்தது. இயலாமையின் செயலின்மையில் அவள் நிர்க்கதியான பொழுதில்தான் அவன் சொற்கள் தாகத்தில் வரண்டுபோன தொண்டையில் நீரைப்போல் அவளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது. மனம் முற்றிலும் நொருங்கி விளிம்புவரை சென்றவளுக்கு மெல்லிய தன்னம்பிக்கை கீற்றாக உணர்ந்தாள். அவன் வாங்கி வந்த உணவு பொட்டலத்தைக் கையில் கொடுத்து. “ கொஞ்சமாவது சாப்பிடுங்க. உடல்ல தெம்பு வந்தால் உள்ளத்துக்கும் அது தெம்பாகும். தெம்புதான் நம்பிக்கையையும் வளர்க்கும்.” அவள் தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டாள். “நான் ரெண்டு நாள் கழிச்சி வந்து பாக்குறேன் மேடம்,” என்று சொல்லி விட்டு, அவளின் மறுமொழிக்கான சாத்தியமற்ற மனநிலையைப் புரிந்தவன் கிளம்பி நடந்தான்.

“இந்த மூதேவிய கட்டிக்காதடான்னு தலப்பாட அடிச்சிக்கிட்டேன். பொருத்தம் சரியா வர்லடான்னு படிச்சி படிச்சி சொன்னேன். இவதான் வேணுமுன்னு ஒத்த கால்ல நின்னான். இப்போ அவன் ரெண்டு கால்லேயும் நிக்க முடியாம கீரைத் தண்டு கணக்கா நீட்டிக் கெடக்கிறது பாக்கும்போது பெத்த மனசு பதறுது,” என்று சொல்லிவிட்டு முந்தானையை வாயில் பொத்திக் கொண்டு குமுறினாள் அவளின் மாமியார். “அம்மா அம்மான்னு சுத்திச் சுத்தி வருவானே.” உடன் இருந்தவர்கள் அவளைத் தேற்றினர்.

மதி இந்நேரத்தில் வெளியே வந்திருக்கக் கூடாது. சற்று அமைதியுற்றிருந்த மனம் கூரான வார்த்தைகளால் மேலும் ரணமேறியது. அவள் சொற்கள் காதுக்குள் நுழைந்ததும் அவள் கால்கள் வலுவிழந்து தடுமாறின. உள்ளமும் உடலும் பலவீனமான நேரத்தில் வரும் தாக்குதலைச் சமாளிக்கத் திணறியது.

மாமியார் வெளியேறியதும் மீண்டும் உள்ளே நுழைந்து , ரமேஷின் படுக்கைக்கருகில் அமர்ந்து அவன் கையைப் பற்றினாள். அச்சொற்களின் வன்மத்திலிருந்து விடுபட அந்தத் தனிமை அவளுக்கு அத்தருணத்தில் தேவையாக இருந்தது. ஆனால்.அவன் மூடிய இமைகளும் வாடிய முகமும், அசைவற்ற இருப்பும் அவளைக் மேலும் கலங்க வைத்தது. “ ‘எழுந்து வாங்க ரமேஷ் . நானொருத்தி இங்கே தனிமையில் இருக்கேன். எனக்கிருந்த ஒரே துணை நீங்க. நீங்களும் என்னை நிராதரவா விட்டுட்டா…. நான் எங்க போவேன்? மீண்டு வாங்க ராமேஷ்…என் கைப்பிடித்து நீங்க சொன்ன எடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போங்க. என் கைய பிடிங்க ரமேஷ்!’

அதற்குள் டாக்டர் இரண்டு தாதிகளோடு படுக்கையை நெருங்கி வந்தனர். ஒருவர் ரத்த அழுத்தம் பார்த்தாள். பிறிதொருவர் நாடிப் பிடித்துப் பார்த்தாள். இமைகளைத் திறந்து விழிப்படலத்தில் அசைவு ஏதும் தெரிகிறதா என்று டார்ச் அடித்துக் கூர்மையாகப் பார்த்தார். பாதங்களையும் முட்டிகளையும் கைச்சுத்தியல் கொண்டு மிருதுவாகத் தட்டிப் பார்த்தார். அசைவுகள் இல்லை. டாக்டர் நல்ல செய்தியைச் சொல்லவேண்டும் என்று அவள் மனது அடித்துக்கொண்டது. டாக்டர் அங்கிருந்து நகர்வதற்கு முன்னர்,பிரதி தினமும் அவள் கேட்கும் அதே வினாவைக் கேட்டாள்.

“ பழைய நிலைக்கு திரும்பிடுவாரா டாக்டர்?” மிகுந்த தர்மசங்கடத்துக்கு ஆளானவர், அதனை மனதில் புதைத்து, உங்களைப்போலவே நாங்களும் பிரார்த்திக்கிறோம்,” என்றார். தொடர்ந்து அவர்ட்ட பேசு….மா. நம்பிக்கையோட பேசுங்க. காதருகே போய் பேசுங்க. நம்பிக்கைய மட்டும் கைவிட்ராதேம்மா, எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்பு . விரல் அசைவோ விழி அசைவோ இருந்தா உடனே கூப்பிடுங்க” என்றார். திரும்பத் திரும்ப ஒன்றையே வெவ்வேறு சொற்களில் கேட்டுக் கேட்டு அவளுக்கு மெல்லிய சலிப்பு மிஞ்சியது.

தகவல் தெரிந்து தொடக்கத்தில் மருத்துவ மனைக்கு வந்த உறவு, நட்புக் கூட்டம் சன்னஞ் சன்னமாய்க் குறைந்து இப்போது ஓரிருவர் மட்டுமே காணப்பட்டனர். அந்தத் தனிமையில் கூடுதல் மனச்சுமை உள்ளேறியிருந்தது.

குமரன் வாக்களித்தவாரே அன்று வந்திருந்தார். அவள் நாற்காலியை விட்டு எழுந்து இடம் கொடுத்தாள். “நீங்க ஒக்காருங்க…”சற்று நேரம் அமைதியாய் ரமேஷைப் பார்த்துவிட்டு, “ஏதாவது சாப்பிட்டீங்களா மேடம்….மணி ரெண்டரை ஆச்சே !” என்றார். வாங்க மேடம் கேண்டீனல சாப்பிடுவோம். வயித்த காயப் போடாதீங்க. நீங்க பசியோட இருக்கிறத ரமேஷ் கண்டிப்பா விரும்பமாட்டார்….வாங்க.” அவள் அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். அவன் வார்த்தைகளில் ஒலித்த பாவனையற்ற பச்சாதாபம் அவள் எதிர்கொண்டிருக்கும் தடித்த, கருணையற்ற வார்த்தைகளுக்கு வடிகாலாய் இருந்தது .

என்ன சாப்பிடுறீங்க மேடம்? “தக்காளி சோறையும் ஊடான் சம்பலையும் அவனே கொண்டு வந்து வைத்தான். ரமேஷோடும் மதியோடும் பல தருணங்களில் சேர்ந்து உண்டவன் தாம் விரும்பி உண்ணும் உணவு வகையை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார் என்பது அவளுக்கு உள்ளுக்குள் வியப்பை உண்டாக்கியது.

“ நடப்பதெல்லாம் ஏதோ ஒரு முன்னேற்பாடு என்றே எண்ணத் தோணுகிறது எனக்கு. யார் எதிர்பார்த்தார் இப்படியெல்லாம் ஊழ் வந்து தாக்குமென்று. நம்ம திட்டத்துக்குள் எதுவுமே இல்லை மேடம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல எல்லாருக்கும் இதுபோன்று நடந்துகிட்டுதானே இருக்கிறது..”

உணவு வந்தது. தட்டை அவள் அருகில் தள்ளிச் சாப்பிடுங்க மேடம். பிலேக் காப்பி சொல்லிருக்கேன். அவளுக்கு அன்றைக்குப் பசிப்பதுபோல இருந்தது.

உணவுண்ட பின் எழுந்தபோது “ரொம்ப தாங்க்ஸ்.” என்றாள். குரலில் தளர்ச்சியும், கரகரப்பும் இருந்தது. பல மணி நேரங்கள் அசைவற்று இறுகியிருந்த குரலில் துருவேறி வெளிப்பட்ட தொனி அது. தலையை நீருக்குள் அழுத்தியிருந்த சூழ்நிலையின் கைகள் சட்டென்று விடுபட்ட தருணத்தில் சோகத்தையும் மீறி இரண்டு சொற்கள் தன்னிச்சையாய் வெளியானது அவளுக்கெ வியப்பாக இருந்தது.

“மேடம் லீவ முடிச்சிக்கிட்டு வேலைக்குத் திரும்புங்க. இந்த இருண்ட உலகத்தில் எந்த வழியும் புலப்படாது. வெளிச்ச உலகம் வெளியே காத்துக் கிடக்கு. நீங்கள் தனித்து விடப்பட்டது குறித்துதான் உங்கள் கவலைக்குக் காரணம். வேலையிடத்தில் சக பணித்தோழர்களுடனான பழக்கம், அன்னியோன்யத்தில் உங்கள் சுமை கண்டிப்பா இறங்கும், ”

அவள் தலையசைத்து ஆமோதித்தாள்.

கேண்டீனை விட்டகன்று வார்டுக்கு நடந்தனர். அவளுடைய மாமியார் உறவுகள் இருவரோடு வந்திருந்தார். இருவரும் சேர்ந்து நடந்து வருவதை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டார். ஐ சி யு வார்டுக்குள் நுழைந்து வெளியேறியதும் , “அண்டி, எல்லாம் நல்லாயிடும் அண்டி, கவலைப் படாதீங்க , தைரியமா இருங்க,” என்றார் குமரன். அவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி, கடமைக்குத் தலையை மட்டும் ஆட்டினாள். அவன் விடைபெற்றுக் கொண்டான்.

“இன்னோரு ஆம்பளையோட என்ன பேச்சு வேண்டிக்கெடக்கு? இவ்ளோ நேரம் எங்க போய்ட்டு வர்தூங்க…என்ன பழக்கம் இது? கட்ன புருஷன் படுத்த படுக்கையா கெடக்கறப்போ?”

‘என் மனக்கவலைய ஏன் இவங்களால புரிஞ்சிக்க முடியல? எனக்கு ஆறுதல் சொல்லவும், பேசவும் எனக்கொரு ஒரு நட்பு தேவையின்னு தெரியாம தொடர்ந்து புண்படுத்துறாங்களே!” என்று எண்ணியவாறு கடந்து சென்றாள்.

இரண்டு மாதங்கள் வார்டிலேயே கதியாய்க் கிடந்தவள் மீண்டும் வேலைக்குத் திரும்பினாள். வாரம் ஒருமுறை ரமேஷைப் பார்க்க வருவாள்.

ரமேஷ் உடல் சிறுத்துப் போயிருந்தான். கைகால்கள் மெலிந்த உடல் நலிந்து முகம் கருத்து சதைபற்றற்றுக் கிடந்தான். அவன் சன்னஞ் சன்னமாய் உடல் தேய்ந்து , தோல் ரேகைகளாகச் சுருக்கம் விட்டிருந்தது. அவள் அழுகையை எப்போதோ நிறுத்தியிருந்தாள். அவள் கவலைகளுக்குப் பழகிபோய் மனம் ஒரு திடமாய் ஆகியிருந்தது.

உள்ளே நுழைந்த மருத்துவரும் தாதியும் மாமுலான பரிசோதனையில் ஈடுபட்டனர். அவனுடைய இருதயம் கிட்னி, மெல்ல செயலிழப்பதாகச் சொன்னார். ஒரு சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய நாடித்துடிப்பிலும் குறைபாடு தெரிகிறது என்றார். விழிப்படலத்துக்குள் டார்ச் அடித்துப் பார்த்தவர் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். அவள் பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றாள். அவளுக்கு என்ன சொல்வதென்ற குழப்பமே மேலிட்டது. அதனை எப்படி எடுத்துக் கொள்வதென்ற புதிர் மேலும் சிக்கலாக்கியது.

வேலை இடைவேளையில் எப்போதும் போல குமரன் அழைத்திருந்தான். “இறங்கிட்டீங்களா? நான் வந்துகிட்டு இருக்கேன். இன்னும் ஒரு நிமிடத்துல வந்திடுவேன்.” குமரனோடு இருக்கும் இந்த ஒரு மணி நேர உணவு வேளை துயரத்தை கடந்துவர எவ்வளவோ உதவியிருக்கிறது! இந்த இடைப்பட்ட நேரம் அவள் மீண்டுவர பெரும் உதவி புரிந்திருக்கிறது.அவன் கார் வந்ததும் அதில் ஏறிக் கொண்டாள்.

“எப்படி இருக்கார் மேடம்?”

“ ஒரு வருஷத்துக்கு மேலாகுது! எந்த முன்னேற்றமும் இல்லை. ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் சீரா இல்லையுன்னு சொன்னாங்க. என் நம்பிக்கையெல்லாம் என்ன விட்டு நழுவிட்டிருக்கு!”

“உங்க மாமியார்ட்ட ஏதும் மாற்றம் இருக்கா?”

“ எப்படியிருக்கும்…. என்னாலத்தான் இவ்வளவும் நடந்ததுன்னு நான் கேக்கும்படி சொல்லிட்டே இருக்காங்க. நம்ம நட்பை மோசாமா விமர்சிக்கிறாங்க. ”

“வயசானவங்க அப்படித்தான் இருப்பாங்க. யார் மேலேயாவது பழி சொல்லனும், யாரையாவது திட்டனும் அப்பதான் அவங்க மனக்குமுறல் அடங்கும். இது ஒரு வகை சுய சமாதானம் அவங்களுக்கு. ”

அதற்குள் அவர்கள் சாப்பிடும் உணவகம் வந்தது.

“இங்க வேண்டாம் வேற இடம் போவோம். ஒரே இடம் ஒரே வகை உணவு போரடிக்குது.”

உணவுக்கு ஆர்டர் கொடுத்தவுடன் அவர்களிடையே சற்று நேரம் பேச்சற்ற இடைவெளி இருந்தது.

“மேடம்….”

“மேடம் னு கூப்பிடாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது? எனக்கு அப்படியொன்னும் வயசாயிடல. மதின்னே கூப்பிடுங்க. இவ்ளோ நாளா பழகியும் மேடம்னு கூப்பிட்டு நமக்குள்ள இடைவெளிய உண்டாக்காதீஙக”

“சரி ….” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

“சரின்னா எப்படி? இப்பயே கூப்பிடுங்க.. இப்போதிருந்தே தொடங்குங்க தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தா.. அது நடக்காமலேயே போயிடும்.”

“சரிங்க…ம் மதி” என்றார். இருவரும் சேர்ந்தே சிரித்தனர்.

கேண்டீனில் கண்ணாடி வழியே தெரிந்த மரம் ஒன்றின் வேர் சிமிந்துத் தரையை பற்றி முன்னேறியிருந்தது. அதனையே கண்மாறாமல் பார்த்த வண்ணம் இருந்தாள் மதி. அவள் ஏதும் பேசாமல் ஒரே திசையைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த குமரன், அத்திசைக்குத் தன் பார்வையைத் திருப்பினான்.

மதி மறுவாரம் ஞாயிறு மருத்துவ மனைக்குப் போனாள். இம்முறை அவள் வார்டை நெருங்கியதும் ஏதோ ஒன்று கால்களைப் பின்னுக்கு இழுத்தது. அவள் ரமேஷிடம் சொல்லப்போகும் முடிவை கால்கள் அறிந்திருந்ததன!

சமீப காலமாக டாக்டர்களின் கூற்றுப்படி அவனின் எந்த மாற்றமும் இல்லை. உடல் மேலும் சீரற்றுப் போவதாகவே சொன்னார்கள். உடல் கிடந்து மட்கிக்கொண்டிருப்பதை இந்தனை நாளும் அவளே பார்த்து மருகிக்கொண்டிருக்கிறாள். அந்நிலை அவளை முற்றிலுமாக நம்பிக்கை இழக்கச் செய்தது.

இந்த முறையாவது மனக்கிடக்கை ரமேஷிடம் சொல்லி விடவேண்டுமென்று முனைகிறாள். அதனைச் சொல்ல முயற்சி செய்யும் போதெல்லாம் ஏதோ ஒருவித மனத்தடை வார்த்தைகளுக்கு வழிவிடாமல் செய்துவிடுகிறது. அவளுக்குள் நடக்கும் சொல்லலாமா வேண்டாமா என்ற போராட்டத்தில் பெரும்பாலும் அவள் சொல்லாமலேயே திரும்பியிருக்கிறாள். ஆனால் இம்முறை அவன் கைகளைப் பிடித்து ஒப்புவித்துவிடவேண்டும். தயக்கத்தோடு நடந்து கட்டிலருகில் போய் அவனருகில் அமர்கிறாள். அவள் சொல்லப் போகும் வார்த்தைகள் அவனைப் போய்ச் சேரும் என்று எண்ணும்போது வார்த்தைகளை வெளியே வரவிடாமல் கடிவாளம் கொண்டு பின்னிழுக்கிறது. போய்ச்சேர வாய்ப்பில்லை என்று இன்னொரு மனம் அபிப்பிராயப் படும் போது சொல்லத் துணிகிறாள். ஆனால் வாய்வரை வரும் வார்த்தைகளுக்கு நாக்கு முள்படுக்கை விரித்துவிடுகிறது. .

அவன் கையை சன்னமாய்ப் பிடித்தாள். மெல்ல நடுங்கியது. குரல் தழுதழுத்தது. உடலில் மெல்லிய வியர்வை துளிர்த்தது. சொற்கள் தடமிழந்து வெளியே வர மறுத்தன. சொற்களை அடுக்கி மீண்டும் முயற்சி செய்தாள். இம்முறையும் நா தழுதழுத்துத் தடுத்தது.

ஒரு திட்டவட்டமான மனத்துணிவில் பட்டென்று எழுந்தாள். சொல்வற்கு என்ன உண்டு?

கதவைத் திறந்து கொண்டு விரைந்து நடந்தால். அவள் நடையில் இப்போது தயக்கமோ மயக்கமோ இல்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும் செவிமடல்களைச் சிலிர்க்கச் செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் ...
மேலும் கதையை படிக்க...
இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது. ...
மேலும் கதையை படிக்க...
கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்குத் தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் ...
மேலும் கதையை படிக்க...
கூர்மையான விசில் சப்தம் மீண்டும் காதுகளை மோதியது. அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி திடுக்கிட்டு எழசெய்து சினத்தைக் கிளறிக்கொடிருந்தது. அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது. கண்கள் மீண்டும் மூடித், ...
மேலும் கதையை படிக்க...
மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில் வாய்போல லேசாக பிளந்திருந்தது. அப்பா அம்மாவின் பொட்டுவைத்த நிழல் முகத்தை அசையாது பார்த்தபடி இருந்தார். தான் இழந்த புற உலகை ...
மேலும் கதையை படிக்க...
எம்ஜியார்
வழித்தடம்
புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கடைசி இரவு
என்னைக் கொலை செய்பவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)