Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கடவுச்சொல்

 

அன்று காலை விடிந்தபோது, அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சர்யமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்குத் தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். அவர் வசித்த நான்காவது மாடி, மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. ஜன்னலைத் திறந்தவுடன் குளிர்காற்று வீசியது. முன்னே நிற்பது வெள்ளையடித்தது போல பேர்ச் மரம். சற்றே தள்ளி சேடர் மரம். ஆக உயரமானது. ஆஷ் மரப்பட்டைகள் சாய்சதுரமாகவும், இலைகள் எதிரெதிராகவும் இருக்கும். ஐந்துகோண மேப்பிள் இலை அவசரமாக நிறம் மாறும். கடைசியாக மாறுவது ஓக்.

கடவுச்சொல்

தகவல் பெட்டியில், ‘மாலை நான்கு மணிக்கு தண்ணீர் அப்பியாசம்’ என்ற நினைவூட்டல் குறிப்பு கிடந்தது. நியூயோர்க்கில் இருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் முதியோர் காப்பகத்துக்கு அவரைக் கொண்டுவந்து மகள் விட்ட நாளிலிருந்து, அவர் தினமும் மறக்காமல் செய்தது தண்ணீர் உடற்பயிற்சி. அது அவரை ஆரோக்கியமாக வைத்திருந்தது. குளித்து உடுப்பை மாற்றி அரை மணி நேரம் பிரார்த்தனை செய்தார். ஒரு துண்டு ரொட்டியில் அப்ரிகோட் ஜாம் பூசி சாப்பிட்டுவிட்டு, தேநீர் பருகினார். அங்கே வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. மகள் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஐந்து நட்சத்திர ஹொட்டலில் இருப்பதுபோல வசதிகள். கடன் அட்டையில், கீழே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் என்னவும் வாங்கிச் சமைக்கலாம். அல்லது வேண்டிய உணவுக்கு ஓடர் கொடுக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். ரேடியோ கேட்கலாம். தினமும் மருத்துவர் வந்து சோதிப்பார். வேண்டுமானால், முழுநாளும் படுத்துக்கிடக்கலாம். ஒருவர் கேள்வி கேட்க மாட்டார்கள்.

கீழே போய் தோட்டத்தில் சிறிது நேரம் உலாத்தலாம் என்று நினைத்தபோது கதவு தட்டப்பட்டது. முன்கூட்டியே அறிவிக்காமல் ஒருவரும் வருவது இல்லை. வெளியே இருந்து வருபவர்கள் முதலில் பஸ்ஸரை அழுத்தி, இவர் கீழே மின்கதவைத் திறந்த பிறகுதான் மேலே வரலாம். மறுபடியும் யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்தபோது அதிர்ச்சியில் ஓர் அடி பின்னே நகர்ந்தார். நம்பமுடியவில்லை!

ஆப்பிரஹாம், நீலக் கண்களுடன் உயரமாக 14 வயதை நிரப்பிக்கொண்டு நின்றான். ”அம்மம்மா..!” என உரக்க அழைத்தான். அதன் பின்னர்தான் முன்னே பாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டார். வார்த்தைகள் குழறின. ”நீ என்னை மறக்கவில்லையா? மறக்கவில்லையா?” என்று அரற் றினார். ”அம்மம்மா, அம்மம்மா” என்று அழை த்தபடியே அவன் கூச்சமாக நின்றான். அவனுக்கு ஒன்பது வயது நடந்தபோது பிரிந்தது, இப்போதுதான் முதல் தடவையாகச் சந்திக்கிறார்கள்.

கடவுச்சொல்2

சிவபாக்கியம், பேரனைத் தடவித் தடவிப் பார்த்தார். ஈட்டி எறிபவன் போல உடம்பு. பொன்கம்பிகளாகத் தனித்தனியாகக் குத்திட்டு நிற்கும் முடி. அணைத்தார், மீண்டும் தடவினார். ”அம்மா நல்லாய் இருக்கிறாரா? அப்பா நல்லாய் இருக்கிறாரா… படிக்கிறாயா?” என்றார்.

”அம்மம்மா இன்று முழுக்க நான் உங்களுடன் தான். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கு. முதலில் மோலுக்குப் போவோம். அங்கே உங்களுக்கு விருப்பமான பிரவுணி ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம்” என்றான்.

”உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா?!” என்றார் சிவபாக்கியம் ஆச்சர்யத்துடன்.

அப்போது அவனுக்கு ஐந்து வயதிருக்கும். பிரவுணி ஐஸ்க்ரீம் என்றால் இருவருக்குமே பிடிக்கும். அன்று சாப்பிடும்போது அது கைதவறிக் கீழே விழுந்துவிட்டது. சிவபாக்கியம் அதைக் குனிந்து துடைத்துத் துப்புரவாக்கினார். மகள், ”எதற்காக கூட்டிச் சுத்தம் செய்கிறீர்கள்? அதற்குத்தான் வேலைக்காரர்கள் இருக்கிறார்களே!” என்றாள். சாதாரணக் குரல்தான். உடல் முழுவதும் சேகரமான கோபம் அவள் வாய் வழியாக வேகமாக வெளியே வந்தது. சிவபாக்கியம் திடுக்கிட்டுவிட்டார். அப்படித்தான் சச்சரவு ஆரம்பித்தது.

ஆப்பிரஹாமுக்கு ஆறு வயதானபோது, ஒருநாள் தாதி அவனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வந்தாள். அவன் வரவை எதிர்பார்த்த படியே வாசலில் சிவபாக்கியம் காத்துக்கிடந்தார். முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று இடிபட ஓடிவந்து சப்பாத்துகளைக்கூட கழற்றாமல் அவர் மடியில் தாவி ஏறி உட்கார்ந்து, அன்று பள்ளிக்கூடத்தில் நடந்ததை ஒவ்வொன்றாகச் சொன்னான் அபே. இவர் தமிழில் கேட்பார். அவன் ஆங்கிலத்தில் பதில் சொல்வான். எலும்புகள் இல்லாதவன்போல வளைந்து விளையாட்டுக் காட்டினான். நாற்காலியில் ஏறிப் பாய்ந்தபோது முழங்காலில் காயம்பட்டு அவன் உடலின் உள்ளே ஓடிய ரத்தம், அதே வேகத்தில் அதே திசையில் வெளியே ஓடியது. சிவபாக்கியம் ஒன்றுமே புரியாமல் ஓவென்று கத்தினார். தாதி ஓடிவந்து கட்டுப்போட்டாள். அன்று, மகள் அவர் மேல் பாம்புபோல சீறியதை மறக்க முடியாது. ‘தாதி ஒருத்தி இருக்கிறாளே. அவளுடைய வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?’ பழைய செய்தித்தாளில் சுற்றிவரும் இனிப்புக்காக வீட்டு வாசலில் இரண்டு மணி நேரம் காத்திருந்த அந்தச் சிறுமியா, இன்று அவர் மேல் அப்படிப் பாய்ந்தாள்? அவரால் நம்ப முடியவில்லை.

அவருடைய ஒரே மகிழ்ச்சி, ஆப்பிரஹாம்தான். அவர் கொழும்பிலிருந்து அமெரிக்கா வந்ததே அவனைப் பார்க்கத்தான். புலமைப் பரிசிலில் படிக்க வந்த மகள், பெஞ்சமினைக் காதலித்து மணந்துகொண்டாள். அவன், பரம்பரைச் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவன். மிக நல்லவன்; ஆடம்பரமே கிடையாது. பிள்ளை பிறந்து நான்கு வயதானபோது, மகள் அவரை வருவித்தாள்.

அந்த ஆரம்ப நாட்களில் மகளிடம் கேட்டார், ”ஏன் நீ யூத மதத்துக்கு மாறினாய்? ‘திரௌபதி’ என்ற பெயரைக்கூட ‘ரிபெக்கா’ என்று மாற்றிவிட்டயே!”

”அம்மா… நீதானே சொன்னாய் ‘எல்லா மதமும் ஒன்று’ என!”

”அதைத்தான் இப்பவும் சொல்கிறேன். எல்லா மதமும் ஒன்று என்றால், ஏன் நீ மாறவேண்டும்?”

”அம்மா, நீங்கள் முழங்காலில் உட்கார்ந்து இன்னொருவர் வீட்டுத் தரையைத் துடைப்பது தான் என் சிறு வயது ஞாபகம். அந்த நிலை எனக்கு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.”

வரவர சின்ன விஷயங்களுக்கெல்லாம் மகள் எரிந்து விழுந்தாள். புண்படுத்தும் வார்த்தைகள் சொன்னாள். மூடிவைத்த புத்தகம் போல முகம் இருந்தது. அன்பாகக் கதைப்பதென்பது அரிதாகிவிட்டது. ஆப்பிரஹாமுடன் கழிக்கும் அந்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்காக மட்டுமே சிவபாக்கியம் உயிர் வாழ்ந்தார்.

வெள்ளிக்கிழமை இரவுகளில் அநேகமாக வீட்டிலே பெரிய விருந்து நடைபெறும். ‘அம்மா இன்றைக்கு இரவு விருந்து நடக்கிறது’ என்று மகள் சொல்வாள். ‘நீங்கள் கீழே வந்து விருந்தினர் கண்ணில் பட வேண்டாம்’ என்பதுதான் பொருள். தாயாரை அறிமுகம் செய்யும் அவமானத்திலிருந்து அவள் தப்பிவிடலாம்.

அன்றிரவு வெகுநேரம் ஹோரா நடனம் ஆடிக் களித்துவிட்டு, விருந்தினர்கள் கலைந் தார்கள். அடுத்த நாள் காலை தேநீர் தயாரிப் பதற்காக சிவபாக்கியம் கீழே இறங்கி வந்து வாயு அடுப்பைப் பற்றவைத்தார். அன்று சனிக்கிழமை என்பதை முற்றிலும் மறந்து போனார். திரும்பிப் பார்த்தபோது பின்னால் மகள், மருமகன், ஆப்பிரஹாம், தாதி, வேலைக் காரி எல்லோரும் நின்று அவரை உற்றுப் பார்த்தனர்.

யூத வீடுகளில், வெள்ளி இரவு தொடங்கி சனி இரவு வரைக்கும் அடுப்பு பற்றவைக்க முடியாது. அது மகாபாபம். மகள், ”அம்மா, உனக்கு அறிவு கெட்டுப்போச்சா? எங்கள் வீட்டை நாசமாக்க வந்தாயா?” என்று எல்லோர் முன்னிலையிலும் கத்தினாள். ஏழு வயது ஆப்பிர ஹாம் ஓடிவந்து ‘அம்மம்மா’ என்று அவரைக் கட்டிக்கொண்டான். சிவபாக்கியம், மேலே போய் அறையில் தனிமையில் அழுது தீர்த்தார். கூட்டுவதையும் துடைப்பதையும் மட்டுமே அறிந்த அவரின் மூளைக்குள் இந்த விசயம் ஏறவில்லை. ‘நரகத்துக்குள் நுழைந்தவள் தங்கக் கூடாது; நடந்துகொண்டே இருக்க வேண்டும்!’

எல்லா வசதியும் இருந்தது. வெளியே போகலாம், வரலாம். வேண்டியதை வாங்கிச் சமைக்கலாம். ஆனால், மகள் அவரை வெறுத்தாள். பழைய வாழ்க்கையை அவளுக்கு ஞாபகமூட்டிய காரணமாக இருக்கலாம்.

கடைசி சம்பவம் ஆப்பிரஹாமின் ஒன்பதாவது வயதில் நடந்தது. அவன் கிளாஸில் தண்ணீர் குடிக்கும்போது கடைவாயில் இரண்டு பக்கமும் வழியும். சிவபாக்கியம் அதைத் துடைத்தபடியே அவனுக்கு இடியப்பத்தையும் றால் பொரியலையும் பிசைந்து ஊட்டுவார். வெட்டிய தக்காளி போன்ற சின்ன வாயை அவன் திறப்பான். பாதியில் ‘போதும்’ என்று மூடுவான். இவர் ‘இன்னும் கொஞ்சம்’ என்பார். அவன் திறப்பான். கால்களை உயரத் தூக்கிப் பாய்ந்து எங்கேயோ இருந்து மகள் வந்தாள். றால் பொரியலைப் பார்த்துவிட்டு ”அம்மா” என்று கத்தினாள். வீடு முழுக்க அதிர்ந்தது. ஆப்பிரஹாம் மடியிலிருந்து குதித்து இறங்கி மூலையில் போய் நடுங்கிக்கொண்டு நின்றான். ”எங்கள் குடும்பத்தைப் பிரிப்பதற்குத்தான் நீ வந்திருக்கிறாய். உன்னைப்போல என்னையும் வெகுசீக்கிரத்தில் வீடு கூட்ட வைத்துவிடுவாய்!”

இத்தனை கொடூரமான வார்த்தைகளை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அன்றே சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப் பட்டார். ஓர் ஒற்றையைத் திருப்புவதுபோல, அத்தனை எளிதாக அது நடந்துவிட்டது. அங்கே வந்த பின்னர்தான் சில விசயங்களைக் கற்றுக்கொண்டார். யூதர்கள், குளம்பு பிளந்த, அசை போடும் மிருகத்தின் இறைச்சியை மட்டுமே உண்பார்கள். ஆடு, மாடு, மான், மரை. பன்றிக்கு பிளவுபட்ட குளம்பு. ஆனால், அசை போடாது. ஆகவே, அது தள்ளிவைக்கப்பட்ட உணவு. ஒட்டகம் அசை போடும். ஆனால், குளம்பு பிளவுபடவில்லை. அதுவும் தள்ளிவைக்கப்பட்ட உணவு. நீரில் வாழும் பிராணிக்கு செதிளும் செட்டையும் இருக்க வேண்டும். ஆகவே, மீன் ஏற்கப்பட்ட உணவு. நண்டு, கணவாய், றால் தள்ளிவைக்கப்பட்டவை. சிவபாக்கியத்துக்கு இவை எல்லாம் தெரியவில்லை.

ஐந்து வருடங்களாக மகள், அவரை இங்கே வந்து பார்த்தது கிடையாது. பேசியதும் இல்லை. ஆனால், ஐந்து நட்சத்திர ஹொட்டல் போல எல்லா வசதிகளும் செய்து தந்திருந்தாள். கடன் அட்டையில் அவர் என்னவும் வாங்கலாம். எவ்வளவும் செலவழிக்கலாம். ஆனாலும் அவரால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. ஏதோ குறைந்தது. பயணி மறந்துவிட்டுப்போன பயணப் பெட்டிபோல ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமல் கிடந்தார். தியான வகுப்பில் மனதை மூடச் சொல்வார்கள். அப்படிச் சொன்ன உடனேயே அங்கே ஆப்பிரஹாம் தோன்றிவிடுவான்.

”அம்மம்மா, நீங்கள் மெலிந்துபோய்விட்டீர்கள். என் கையைப் பிடியுங்கோ, மோல் வந்துவிட்டது. பிறகு சுத்திப் பார்ப்போம். இப்ப ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். இன்றைக்கு மதியச் சாப்பாடும் என்னோடுதான், யப்பானிய உணவகத்தில்” – இருவரும் பிரவுணி ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள்.

”அம்மம்மா, நீங்கள் போன வருடம் என்னுடைய ‘பார்மிற்ஸா’வை மறந்துவிட்டீர்கள். 200 விருந்தினர்கள் வந்திருந்தார்கள். ஆனால், நீங்கள் வரவே இல்லை.”

”அப்படியா? என்னை ஒருவருமே அழைக்கவில்லை, அபே. அது என்ன பார்மிற்ஸா?”

”ஓ, அதுவா..! 13-வது பிறந்தநாளுடன் கொண்டாடுவது. நான் முழு ஆண் ஆகிவிட்டேன் என்ற பிரகடனம். என்னுடைய பாவங்களுக்கு, நானே முழுப் பொறுப்பு.”

”எனக்குத் தெரியாதே. என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு.”

”அம்மம்மா உங்களுக்கு என்ன வயது?”

”70.”

”அப்ப ஒன்று செய்யலாம். எங்கள் சமய முறைப்படி 83 வயதை அடைந்த ஒருவருக்கு நாங்கள் இரண்டாவது பார்மிற்ஸா கொண்டாடு«வாம். உங்களுக்கு 83 வயதாகும் போது எனக்கு 27 வயது நடக்கும். நான் உங்களுக்கு மிகப் பெரிய பார்மிற்ஸா ஏற்பாடு செய்வேன். சம்மதமா?”

”எனக்குச் சம்மதம். ஆனால், ஹோரா வட்ட நடனம் என்னை ஆடச் சொல்லக் கூடாது” – இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

அன்று நெடுநேரம் சுற்றிக் களித்துவிட்டு மாலையானதும் களைத்துப்போய் வீடு திரும்பினார்கள்.

”அம்மம்மா, இரவு என்ன சாப்பாடு?”

”நல்ல இடியப்பமும் சொதியும் இருக்கு. கொஞ்சம் சாப்பிடு அபே.”

”றால் இருக்கா அம்மம்மா?” – றால் ஆழ்குளிரில் கிடப்பது ஞாபகத்துக்கு வந்தது.

”ஏன் கேட்கிறாய் அபே?”

”றால் பொரியுங்கோ, அம்மம்மா.”

”அதே பிழையை இன்னொருமுறை விடமாட்டேன் அபே. நல்ல பாடம் படித்துவிட்டேன்… போதும்!”

”என்ரை அம்மம்மா! இனி நான் எப்ப வருவேனோ தெரியாது. எனக்கு வேணும். ப்ளீஸ்” அவனுடைய பிரகாசமான முகம் கறுத்து அழத் தயாரானபோது, அவளால் தாங்க முடியவில்லை.

”சரி சரி… அழ வேண்டாம், என்ரை ராசா.”

றால் பொரிந்து பொன்னிறமாக மாறிய போது மணம், அறை முழுக்க பரவியது. இரண்டு இடியப்பம், சொதி, றால் பொரியல் ஆகியவற்றை ஒரு தட்டில் பரிமாறி அபேயிடம் கொடுத்தாள். அவன் உள்ளங்கையால் பிசையத் தொடங்கினான்.

”அம்மம்மா வாயைத் திறவுங்கோ.”

”எனக்கு வேண்டாம். நீ முதலில் சாப்பிடு.”

”நான் சாப்பிடக் கூடாது. இது தடுக்கப்பட்ட உணவு. கோசர் அல்ல… உங்களுக்குத் தெரியும். அம்மம்மா, வாயைத் திறவுங்கோ.”

அவர் வாயைத் திறக்க, அவன் ஊட்டிவிட்டான். ‘போதும், போதும்’ என்றார் அவர். ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்றான் அவன். சாப்பாட்டின் சுவையோடு கண்ணீரும் அவர் வாய்க்குள் நுழைந்தது. அதுவரை சிவபாக்கியம் நினைத்திருந்தார் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய சந்தோசம், ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று சொல்லி ஏமாற்றி பேரனுக்கு உணவூட்டுவதுதான் என்று. இப்போது தெரிந்தது அதிலும் கூடிய மகிழ்ச்சி ஒன்று இருந்தது. அது பேரன் கையால், ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று சொல்லி உணவு ஊட்டப்படுவதுதான்.

மணி ஒன்பதை நெருங்கியது.

”அம்மம்மா நான் புறப்படவேண்டும், கார் வந்துவிட்டது” என்றான்.

”அம்மாவும் அப்பாவும் நல்லாயிருக்கிறார்களா?”

”ஒரு குறையும் இல்லை. இன்று முழுக்க அவர்கள் யூதக் கோயிலில் கழித்திருப்பார்கள்.”

”அப்படியா… என்ன விசேஷம்?”

”இன்றுதான் யம்கிப்பூர். பாவமன்னிப்பு நாள். விரதம் இருந்து பாவங்களைக் கழுவும் நாள். அப்பாவிடம் முன்னரே பேசி, உங்களிடம் வர அனுமதி பெற்றிருந்தேன்” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டு நின்றான். அவன் நீலக் கண்களில் வீசிய ஒளி அறையை நீல நிறமாக மாற்றியது.

”நீ பாவத்தைக் கழுவவா இங்கே வந்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்?”

அவன் ஒன்றுமே பேசாமல் நிலத்தைப் பார்த்தான்.

”அம்மாவுக்கு நீ இங்கே வந்தது தெரியுமா?”

”நான் சொல்லவில்லை? அவர் சம்மதிப்பாரோ என்னவோ. ஆனால் வீட்டுக்குப் போனதும் அவரிடம் சொல்லப்போகிறேன்” – முதுகுப்பையை மாட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.

”இனி எப்போது வருவாய், அபே?”

”புதிய பாவங்களைச் சேர்த்த பிறகு…” மீண்டும் சிரித்தான். திடீரென்று ‘I love you’ என்று சொல்லி மறுபடியும் கட்டிப்பிடித்தான்.

”ரோஷஹஷானாவுக்கு வீட்டுக்கு வருவீர்களா, அம்மம்மா?”

”அது என்ன?”

”எங்கள் புதுவருடம். ஆதாமும் ஏவாளும் சிருட்டிக்கப்பட்ட தினம்.”

”யார் என்னை அழைப்பார்கள்? நீ என்னை மறந்துபோக மாட்டாயே?” என்றாள் கிழவி தழுதழுத்த குரலில்.

பனிக்குளத்தில் குதிக்கத் தயாராவதுபோல சிறிது தயங்கி நின்றான். ”இல்லை, அம்மம்மா. எப்படி மறப்பேன்? என்னுடையitune, amazon, netflix, facebook, icloud, youmanageஎல்லா கணக்குகளுக்கும் உங்களுடைய பெயரைத்தானே கடவுச்சொல்லாக வைத்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 10 தரமாவது உங்களை நினைக்கிறேன் அம்மம்மா” – அவருடைய கன்னத்தைத் தடவினான். அது ஈரமாக இருந்தது. itune, amazon, netflix, facebook, icloud, youmanage என்ன என்று அவர் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அவன் தன்னை மறக்கவில்லை என்று சொன்னது புரிந்தது.

அவரின் கண்கள், அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தன. பேர்ச் மரத்தைத் தாண்டி, ஓக் மரத்துக்கும் மேப்பிள் மரத்துக்கும் இடையில் ஒரு துள்ளு துள்ளி, புகுந்து காரை நோக்கி ஓடினான். திடீரென்று அடித்த காற்றுக்கு திரைச்சீலை விழுந்ததுபோல இலைகள் பல வண்ணங்களில் உதிர்ந்தன. அவன் மறைந்து விட்டான். யூத காலண்டரில் அடுத்த யம்கிப்பூர் எப்போது வரும் என்ற ஆலோசனையில் அதே இடத்தில் நெடுநேரம் நின்றார் சிவபாக்கியம்!

- அக்டோபர் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
ஜகதலப்ரதாபன்
முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப் படம் வந்தால், அதைக் கிராமங்களில் விளம்பரப்படுத்துவதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவார்கள். வண்டியின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில், எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர்.ராஜகுமாரியோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சி அளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி ...
மேலும் கதையை படிக்க...
நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் ...
மேலும் கதையை படிக்க...
இலங்கை அரசனின் பட்டத்து ராணி அந்த நந்தவனத்தில் உலாவிக்கொண்டு இருந்தாள். மயக்கம் தரும் இந்த மாலை நேரங்களில் வழக்கமா அவள் அங்கேதான் இருப்பாள். அரசன் அவளுக்கா கட்டிய தாடகத்தில் மிதக்கும் வாத்துக்களைப் பார்த்துக் கொண்டிருப்தில் அப்படி ஒரு சந்தோஷம். கார்த்திகை நட்சத்திரங்களோல ...
மேலும் கதையை படிக்க...
சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கனடாவின் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட் எழுதியது. மார்கிரட்டின் தாயார் 94 வயதில் இறந்துபோனபோது அவரைப் பற்றிய தன் நினைவுக் குறிப்புகளை எழுதினார். அவருடைய ஆக முந்திய நினைவு அவர் சிறுமியாக இருந்தபோது காட்டோரத்தில் இருந்த ...
மேலும் கதையை படிக்க...
முன்குறிப்பு:- நான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது நடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களம் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு-புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும். --- அவருடைய ...
மேலும் கதையை படிக்க...
ஜகதலப்ரதாபன்
பவித்ரா
மனுதர்மம்
பாதிக் கிணறு
விழுக்காடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)