கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 2,804 
 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 5 | 6 -10 | 11 – 15

6. யவனன் க்ளேஸியஸ்

கடல்வேந்தனை நோக்கி முகத்தை உயரத் தூக்கி செவ்விய தனது இதழ்களால் நிலக்கள்ளி அழைப்பையும் விடுத்தாளானாலும், அந்தக் கொள்ளைக்காரன் அவள் அழைப்பை ஏற்றானில்லை. அவள் கன்னத்தை மெதுவாகத் தடவிக் கொடுத்து கழுத்திலிருந்து அவளது கைகளையும் தூக்கிக் கட்டிலில் பழையபடி அவளைப் படுக்கவிட்டான். கள்ளியாற்றுக் காற்றால் அலைந்து அவள் உடலின் பல பாகங்களையும் வெளிப்படுத்தியிருந்த சேலையையும் சரி யாக இழுத்து விட்டு மூடினான். ‘தனது மகள் வலிய அவன் கழுத்தை வளைத்து முகத்தைத் தூக்கியவுடனேயே கடல் வேந்தன் சரசத்தைத் துவக்கி விடுவானென்றும், நிலக்கள்ளி யின் தூய்மையெல்லாம் பறந்துவிடுமென்றும் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாக நடந்த நிகழ்ச்சிகளைக் கண்ட அமைச்சர் அழும்பில்வேள் பெரும் வியப்பை அடைந்தார். கடல்வேந்தனைப் பற்றி உலாவும் நற்செய்திகளுக்கு நியாயமும் இருப்பதாக அந்தச் சமயத்தில் அவருக்குத் தோன்றியது. மேலும் அவர் கண்ட காட்சி அவரை வியப்புக்கு மட்டுமின்றி அச்சத்தையும் ஊட்டியதால் அவர் பெரிய மௌனியானார். ஏதோ கேட்க வாயெடுத்த சஞ்சயனையும் தமது ஒரே பார்வையால் அடக்கினார்.

வெளி அறையில் நிலக்கள்ளியை மீண்டும் பழையபடி படுக்க வைத்த கடல்வேந்தன், “நிலக்கள்ளி! அடுத்த உள்ளறையில் உன் தந்தையும் சஞ்சயனும் இருக்கிறார்கள்” என்று மெதுவாகக் கூறினான்.

“அப்படியா!” என்று அவள் கேட்டாள், அது ஏதோ சாதாரண சம்பவம் போல.

கடல்வேந்தன் அவளை நோக்கிப் புன்முறுவல் செய்து.- ‘நிலக்கள்ளி! அவர்களிருப்பது உனக்கு அச்சத்தை அளிக்க வில்லையா?” என்று வினவினான். 

நிலக்கள்ளியின் முகத்தில் மோகனச் சாயை ஒன்று படர்ந்தது. “உங்களுடனிருக்கும் போது எனக்கு யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் அச்சமேற்படுவது கிடையாது என்றாள் இதழ்களில் இளமுறுவல் கூட்டி, “ஆமாம். தந்தையைத்தான் நீங்கள் என்னுடன் அழைத்து வந்தீர்கள். தூதர் எங்கு வந்தார்?” என்று வினவினாள் அவள். 

கடல் வேந்தன் லேசாக சிரித்தான். ”சஞ் சயன் எப்படியும் என்னைக் கண்டுபிடிக்க முயலு பான் என்பது எனக்குத் தெரியும், உனக்கும் தெரியும். ஆகையால் அவனை அழைத்துவர எனது படகோட்டிகளில் ஒருவனை ஆற்றங் கரையில் இருக்கச் செய்தேன். நான் எதிர்பார்த்தபடிதான் எல்லாம் நடந்தது. அந்தப் படகோட்டி யார் தெரியுமா?” என்று சஞ்சயன் வந்ததற்குக் காரணமும் சொல்லி படகோட்டியைப் பற்றிய வினா ஒன்றையும் தொடுத்தான் வாலிப கொள்ளைக்காரன்.

நிலக்கள்ளி தனது அஞ்சன விழிகளை அகல விரித்து “யாரது?” என்று வினவினாள். 

“நம்முடன் பரணரிடம் தமிழ் படித்தானே நற்கிள்ளி நினைவிருக்கிறதா உனக்கு?” என்று வேந்தன் வினவினான் “இருக்கிறது. பெரிய வாள் வீரன். சோழர் சொந் தக்காரன்.” நிலக்கள்ளியின் சொற்களில் வியப்பு தெரிந்தது. 

“இப்பொழுது கொள்ளைக்காரன். எனக்கு அடுத்தபடி மரக்சலத்தைச் செலுத்த வல்லவன் அவன் ஒருவன் தான்– ஆனால் இன்னும் அவனுக்கு ‘கவிதைப் பைத்தியம் போக வில்லை” வேந்தன் சொற்களில் ஏளனம் இருந்தது. 

நிலக்கள்ளி அழகாக இதழ்களைக் குவித்து விசாரித்தாள், “அவரை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? உங்களுக்கில்லையா கவிதைப் பைத்தியம்? எந்த அபாயமிருந்தாலும் வாரத்திற்கு இருமுறையாவது நீங்கள் பரணரிடம் கவிதை படிக்கச் செல்வதில்லையா?” என்றாள் குவித்த இதழ்களால். 

அப்படி அவள் இதழ்களைக் குவித்துச் சொற்களைச் சொல்லியதால் சொற்கள் குழலிலிருந்து வரும் ஸ்வரங்களைப் போல் இன்பமாக ஒலித்தன. அதைக் கவனிக்கவே செய்த கடல்வேந்தன் திடீரென நிமிர்ந்து உட்கார்ந்து தூரத்திலிருந்து பெரிதாக வாசலுக்கு வந்துவிட்ட மாலுமிகளின் இரைச்சலைக் காதில் வாங்கினான். அவ்வளவுதான்! நிலக்கள்ளியைக் கட்டிலிலிருந்து தனது இருகைகளாலும் வாரியெடுத்தான். கட்டிலின் முகப்பில் உட்கார்ந்த வண்ணம் அவளைத் தனது மார்பை நோக்கி இழுத்து, ஆனால் புதையவிடாத நிலையில் நிறுத்தி, செவிகளைத் தீட்டிக் கொண்டான். 

நன்றாகக் குடித்து வெறிபிடித்த மாலுமிகள் அந்த இல்லத்தின் வாயிலிலே நின்று இரைந்தார்கள். யாருடனோ சண்டையும் போட்டார்கள். அவர்களைத் தடுத்து நின்றது தனது படகோட்டியே என்பதைக் குரலிலிருந்து நிர்ணயித்துக் கொண்ட கடல்வேந்தன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். உள்ளே புக முயன்ற கொள்ளைக்கார மாலுமிகளை வாயிலிலேயே தடுத்து நின்ற நற்கிள்ளி “டேய் மடையர்களா! இப்பொழுது தலைவரைப் பார்க்க முடியாது. பார்த்தால் உங்கள் தலை போய் விடும்” என்று இரைந்து கூவியது உள்ளேயிருந்த கடல்வேந்தன் காதுகளில் நன்றாகவே விழுந்தது. இருப்பினும் நற்கிள்ளி நீண்ட நேரம் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாதென்பதை கடல்வேந்தன் உணர்ந்தே இருந்ததால் “நிலக்கள்ளி! இப்பொழுது நாமிருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும். மாலுமிகள் உள்ளே நுழைந்தாலும் நீ இம்மி கூட தகலாதே” என்று எச்சரித்தான். 

அவன் நினைத்தபடிதான் சகலமும் நடந்தது. வெளியே இருந்த மாலுமிகள் நற்கிள்ளியைப் பார்த்து பெரிதாக நகைத்தார்கள், “பாட்டுப் பாடும் நற்கிள்ளி” என்று ஒரு மாலுமி பல்லவி எடுத்துப் பாட, அடுத்தவன் “இடம் கொட்டா கொஞ்சம் தள்ளி” என்று பாடி முடித் தான். பல்லவியை அடுத்து அதே வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்பட்டன. அப்படி பாடிய வண்ணம் நற்கிள்ளியை திடீரெனச் சூழ்ந்து அவனைத் தலைக்குமேல் தூக்கிக் கொண்ட மாலுமிகள் அவனைச் சுழற்றி தூரத்தே எறிந்து விட்டு உள்ளே நுழைந்த போதும். பாடிக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும். வந்தனர். ஆனால் சட்டென்று அவர்கள் பாட்டும் நின்றது. தாளமும் நின்றது. கடல்வேந்தனிருந்த அறைக்கு வெளியே இருந்த மூதாட்டி அவர்களை அறைக்குள் செல்லாதபடி. தடுத்து, “உங்களுக்கு புத்தி கெட்டுவிட்டதா?” என்று சீறினாள். 

அந்தக் கூட்டத்தின் முதலில் நின்ற யவனன், “தலைவரைப் பார்க்க வேண்டும், அவசரம்” என்றான் 

“அதற்கு வரும் முறை இதுதானா?” என்று சீற்றத் துடன் கேட்டாள் மூதாட்டி. 

“மாலுமிகள் குடித்து விட்டார்கள்” யவனன் காரணம் சொன்னான். 

“குடித்தவர்களை இங்கு ஏன் அழைத்து வந்தாய்?” மூதாட்டியின் குரல் அதிகாரத்துடன் ஒலித்தது. 

“நான் அழைத்து வரவில்லை. நான் போகுமிடம் தெரிந்ததும் அவர்களே தொடர்ந்தார்கள்” யவனன் குரலில் பணிவு சிறிது தெரிந்தது. 

“நீ ஏன் தடுக்கவில்லை?” மூதாட்டி வினவினாள் சீற்றத்துடன். 

“இந்த நிலையில் அவர்களை யாரும் தடை செய்ய முடி யாதென்பது உங்களுக்கே தெரியும்” என்றான் யவனன்.

அதுவரை வாளாவிருந்த மாலுமிகள் மீண்டும் பாட ஆரம்பித்தார்கள். ஒருவன் பெரிதாக ராகம் இழுத்தான். சிலர் சிரித்தார்கள். சிலர் அழுதார்கள். சிலர் பழைய பாட்டைத் தொடங்கினார்கள். இருவர் யவனனைப் பின் னாலிருந்து தள்ள அவன் மூதாட்டியின் மேல் விழப்போக மூதாட்டி சட்டென்று நகர்ந்துவிடவே, யவனன் அறைக் கதவில் முட்டிக் கொண்டான். அதன் விளைவாக சரியாகத் தாளிடாத அந்தக் கதவு சரேலெனத் திறந்தது. 

உள்ளே தங்கள் கண் முன்பு எழுந்த காட்சியைக் கண்ட மாலுமிகள் திக்பிரமை கொண்டார்கள். மாலுமி களால் தள்ளிவிடப்பட்ட யவனனும் எழுந்து நின்றான், நெட்டையாக, மாலுமிகள் திடீரென நகைத்தனர்.இரைந்து ‘தலைவரே தலைவரே” பாட்டிசைத்தார்கள். தாளத்தைப் பெரிதாகவே போட்டார்கள். இருவர் குடிவெறியில் நாட்டியமாடவும் தொடங்கினார்கள். 

இத்தனைக்கும் கடல்வேந்தன் அவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. பின்னால் யவனன் நின்றிருந்தது எப் படியோ புரிந்தது அவனுக்கு. தனது கையில் ஏந்தி நின்ற ஏந்திழையைக் கீழே விடாமலேயே கேட்டான், “கிளேஸி யஸ்! இங்கென்ன வேலை உனக்கு?” என்று. 

“முக்கிய வேலை” என்ற கிளேஸியஸ் விரைந்து நின்று தலை வணங்கினான் கடல்வேந்தன் முதுகுக்கு, 

“இவர்களை ஏன் அழைத்து வந்தாய்?” வேந்தனின் அடுத்த வேள்வியில் சொற்கள் சுடச்சுட சீறி வந்தன. 

“நான் அழைத்து வரவில்லை”. யவனின் குரலில் அச்ச மிருந்தது. 

“அவர்களாக வந்தார்களா?” 

“ஆம்.” 

“நீ ஏன் தடுக்கவில்லை?” 

“தடுக்க முடியவில்லை. சற்று முன்பு என்னையே கீழே தள்ளிவிட்டார்கள்.”

“அதாவது உனக்கு தலைவனாயிருக்கத் தகுதியில்லை” என்ற கடல்வேந்தன் மெதுவாக நிலக்கள்ளியை கட்டிலில் படுக்க வைத்து சுட்டில் முகப்பில் திரும்பி உட்கார்ந்து யவனன் மீதும், பின்னாலிருந்த மாலுமிகள் மீதும் தனது கண்களை ஓடவிட்டான். அந்தப் பார்வை மாலுமி களின் குடி வெறியையும் உடைத்திருக்க வேண்டும். கூச்சலும், பாட்டும் மந்திரத்தால் அடங்கியவைபோல் அடங்கின. 

”சரி! நீ வந்த வேலையைச் சொல் என்று வினவினான் கடல்வேந்தன். 

யவனன் தனது கண்களை கட்டிலை நோக்கி ஓடவிட் டான். பிறகு கேட்டான். “இங்கேயே சொல்லலாமா?” என்று. 

“சொல்லலாம் சுருக்கமாகச் சொல்” என்றான் கடல் வேந்தன். 

“இன்று நள்ளிரவில் சஞ்சயன் வீரர்கள் பத்துப் பேர் தங்கள் பெரியமரக்கலத்தில் நுழைந்துவிட்டார்கள்” என்று மேலும் சொல்ல பயந்து நிதானித்தான் யவனன். 

சொல் மேலே. கட்டளை சுரீரெனப் பாய்ந்தது யவனன்மீது.

“நள்ளிரவில் வந்ததால் மாலுமிகள் சற்று அசிரத்தை யாயிருந்து விட்டார்கள். ஆகவே அவர்கள், தங்கள் அறையில் நுழைந்து சோதனை போட்டார்கள். வெளியே வரும் போதுதான் பார்த்தோம்!” 

“உம்”

“நால்வர் கொல்லப்பட்டார்கள். இருவர் சிக்கிக் கொண்டார்கள். நால்வர் கடலில் குதித்து ஓடிவிட்டார்கள். சிக்கியவர்களை, காரணத்தைக்கக் கவைத்தோம். அவர்கள் சொல்லித்தான் அவர்கள் சஞ்சயன் ஆட்களென்று தெரிந்து கொண்டோம். சஞ்சயனைப் பிடித்து வந்து சித்திரவதை செய்யத் துடிக்கிறார்கள் மாலுமிகள். அதனால்தான் குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்,” 

“மேலே சொல்” 

“அழும்பில்வேள் இருக்கிறாரல்ல வா?”

“ஆம்” 

“அவர் கழுத்தைத் திருகி கடற்கரைக் கழுகுகளுக்குப் போட வேண்டுமென்று மாலுமிகள் கூவுகிறார்கள்.” 

கடல்வேந்தன் கட்டிலின் முகப்பிலிருந்து எழுந்து நின்றான். “அமைச்சர் என்ன செய்தார்?” என்று கேட்டான் அமைதியாக. 

“அவர்தான் சஞ்சயனைத் தூண்டியதாக மாலுமிகள் கருதுகிறார்கள். தங்களைப் பிடிக்க அவர் சபதம் செய்திருப்பதாகவும் முசிறியில் வதந்தி உலாவுகிறது” இதைச் சற்று சீற்றத்துடன் சொன்னான் யவனன். 

ஆறடி உயரத்துக்கு யவனனுக்கும் மேல் நின்ற கடல் வேந்தன் லேசாக நகைத்தான். “இம்மாதிரி விஷயங்களில் நீங்களே எத்தனை நாளாக முடிவெடுக்கிறீர்கள்?” என்று வினவினான் நகைப்பின் ஊடே. 

யவனன் உடல் சிறிது நடுங்கியது, கடல்வேந்தன் கேள்வியால். “முடிவு யாரும் எடுக்கவில்லை தலைவரே! வதந்தியால் மாலுமிகள் கொதித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் சஞ்சயன் ஆட்கள் நமது கப்பலுக்கு வந்தார்கள். இனி சஞ்சயனையும் அமைச்சரையும் உயிருடன் விட்டு வைப்பதில்லையென்று தீர்மானித்திருக்கிறார்கள். உங்கள் சம்மதம் பெறவே வந்திருக்கிறார்கள்” என்று சமாளிக்கப் பார்த்தான் கிளேஸியஸ்.

கடல்வேந்தன் சற்றே திரும்பி கட்டிலைப் பார்த்தான். “இந்த கட்டிலிலிருப்பது யார் தெரியுமா உனக்கு?” என்று வினவினான் நிலக்கள்ளியை சுட்டிக்காட்டி.

“தெரியாது தலைவரே!” என்றான் யவனன். 

“அமைச்சரின் மகள். அவர் மாளிகையிலிருந்தே தூக்கி வந்திருக்கிறேன் இன்று. அமைச்சரைப் பழிவாங்க உங்களைப் போன்ற முட்டாள்களின் உதவி எனக்குத் தேவையில்லை. மடத்தனமாக நீங்கள் மந்திரி இல்லம் சென்றால் அங்கு சேரர் படைவீரர்களால் அழிசுகப்படு வீர்கள், நான் அழைத்துச் செல்லாத இடத்துக்கு, என் உத்தரவில்லாமல் யாரும் செல்ல முயலக்கூடாது. புரிகிறதா?”” என்று பேசிய கடல்வேந்தன், “முதலில் இவர்களை அழைத்துச் செல். நாளை சந்திப்போம்” என்று. கையை வாசலை நோக்கிக் காட்டினான் 

யவனன் திரும்பினான். ஆனால் மாலுமிகள் அசைய வில்லை. நகைத்தார்கள் பெரிதாக. கடல்வேந்தன் பார்வை உக்கிரமாயிற்று. “அடுத்தமுறை நகைப்பவன் நிற்கும் இடத்திலேயே பிணமாகி விடுவான் என்ற அவன் சொற்கள் உள்ளிருந்த உக்கிரத்தைப் பிரதிபலிக்கவில்லை. யானாலும் கடல்வேந்தன் எரிமலையின் நிலையில் இருப்பதை யவனன் உணர்ந்தான். அடுத்து என்ன நடக்குமென்பதை யாரும் ஊகிக்கு முன்பு கடல்வேந்தன், எதிரே நின்ற யவனனை இடித்துத் தள்ளிக் கொண்டு மாலுமிகள் கூட்டத்தில் நுழைந்து அவர்களில் ஒருவனைத் தூக்கி வாசலை நோக்கி வீசி எறிந்தான். அடுத்தவனும் அதே விதத்தில் வாசலை நோக்கிப் பறந்த பின்பு, “நான் நிதானம் தவறு முன்பு ஓடிவிடுங்கள் எனறு சீறினான் கடல்வேந்தன். அடுத்து மாலுமிகள் முனகிக் கொண்டு வெளியேறத் தொடஙகினார்கள். யவனனும் அவர்களைத் தொடர்ந்தான். ஆனால் அவன் முகத்தில் சந்தேகம் நிரம்பிக் கிடந்தது. கடல்வேந்தன் எதையோ மறைக்கப் பார்க்கிறானென்ற எண்ணம் அவன் மனத்தில் மீண்டும் எழுந்தது. அதனால் மெதுவாகவே நடந்தனன் வாயிலுக்கு வந்ததும் மாலுமிகளை அனுப்பிவிட்டு தான் மட்டும் அந்த இல்லத்தின் அருகிலிருந்த சிறு குடிசைக்குள் நுழைந்து இல்லத்தின் வாயில்மீதே கண் வைத்திருந்தான். யவனனும் மாலுமிகளும் சென்றதும் அமைச்சரும் சஞ்சயனும் உள்ளறையை விட்டு வெளியே வந்தனர். நிலக்கள்ளி… என்று தொடங்கினார் அமைச்சர். 

“நான் உங்கள் மாளிகையில் சொன்னபடி நாளை வந்து சேருவாள்” என்றான் கடல்வேந்தன். 

“அதுவரை…. ” மென்று விழுங்கினார் மந்திரி. 

“அவளுக்கு எந்த ஆபத்துமில்லை’ என்று கடல்வேந்தன் அவர்களை மீண்டும் அறைக்குள் செல்லப் பணித்தான். இம் முறை அமைச்சரும், தூதனும் எந்த ஆட்சேபணையும் கிளப்பாமல் உள்ளறைக்குச் சென்றார்கள். 

அடுத்து சுடல்வேந்தன் மூதாட்டியை அழைத்து, “அம்மா! நிலக்கள்ளியைப் பார்த்துக்கொள். நான் மீண்டும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு இல்லத்தின் வாயிலுக்கு வந்து இருபுறம் நோக்கினான் பக்கத்துக் குடிசையில் எரிந்த விளக்கிற்கு முன்னால் வாயில் வரை ஓர் உருவத்தின் நிழல் நீண்டு விழுந்ததைக் கவனித்தான். பிறகு சடசடவென்று படிகளில் இறங்கி, யவனன் இருந்த குடிசையை நோக்கிச் சென்றான். திடீரெனக் குடிசை முன்பு தோன்றிய கடல் வேந்தனைக் கண்ட யவனன் திகைப்புடனும் பிரமிப்புடனும் எழுநதாள் கடல்வேந்தன் கண்களில் கொலைக்குறி துளிர்த்து சுடர்விடுவதைப் பார்த்தான். இனி விஷயம் தலைக்கு மேல் போய்விட்டதை உணர்ந்தான். அன்றுவரை கடல்வேந்தன் உத்தரவை மீறி யாரும் பிழைத்ததில்லை என் பதையறிந்திருந்ததால் தனது இடையிலிருந்த குறுவாளைக் கையில் எடுத்துக் கொண்டான். 

7. குறுவாளும் வரலாறும் 

கடல்வேந்தனே ஆறடி உயரத்திற்கும் சற்று மேலாக இருந்தானென்றால், யவனனான க்ளேஸியஸ் அவனைவிடச் சற்று அதிக உயரமில்லாவிட்டாலும் உயரத்திற்குத் தேவை யான அளவைவிட அதிகப் பருமனும் அவனுக்கு இருந்தபடியால் குறுவாளை எடுத்த வேகத்தில் அவனால் கடல் வேந்தன்மீது பாய முடியாததால் சிறிது நிதானமாகவே குடிசைக்குள் இருந்து வெளியே கால்டி எடுத்து வைத்தான். அப்பொழுதுகூட அசையாத கடல்வேந்தன் நின்ற நிலையி லேயே சொன்னான், “க்ளேஸியஸ்! இன்று என்னைநோக்கிக் குறுவாளை எடுத்துவிட்டாய்” என்று. 

”ஆம்! வேறு வழியில்லை” என்றான் யவனன். 

“என்னை நோக்கி வாளெடுத்தவர்கள்…” கடல் வேந்தன் வாசகத்தை முடிக்கவில்லை. 

யவனனே முடித்தான், “…யாரும் பிழைத்ததில்லை” என்று. 

“தெரிந்துமா உன் தலைவனை அழிக்க முயன்றாய்?” என்று சுடல்வேந்தன் வினவினான். 

”தலைவரே! நீங்கள் மரக்கலத்திற்குப் போகச்சொல்லி யும் நான் போகவில்லை. உங்களை வேவு பார்க்க இங்கு காத்திருந்தேன். அதற்கே நமது மரக்கலத்தில் பயங்கர உங்கள் நா அசைந்தால் மாலுமிகள் தண்டனை உண்டு. என்னை வெட்டி, கடல்கழுகுகளுக்கு இரையாகப் போட்டு விடுவார்கள். அந்தப் பயங்கர சாலைவிட உங்கள் கையால் எனக்குப் பெருமை தரும். யாரும் எதிர்க்கத் சாவது துணியாத கடல்வேந்தனையே க்ளேஸியஸ் எதிர்த்தான் என்று முசிறி யவனர் பேசுவார்கள்” என்று சொன்னான் க்ளேஸியஸ். 

கடல்வேந்தன் சிறிது நேரம் யவனனை உற்றுநோக்கி விட்டு, “அந்தக் குறுவாளை இப்படிக் கொடு” என்று கையை நீட்டினான் 

பதில் ஏதும் பேசாமல் குறுவாளைக் கொடுத்த யவனனை, “சரி நீ போ மரக்கலத்திற்கு! நான் விடிந்ததும் வருகிறேன். இங்கு நடந்ததை யாரிடமும் சொல்ல அவசிய மில்லை” என்ற வேந்தனை வியப்புடன் நோக்கினான் யவனன். 

பிறகு தலையை அசைத்துவிட்டு, “தலைவரே! என் குறுவாளும் நானும் பிரிந்ததை நமது மாலுமிகள் பார்த்த தில்லை. கைகால்கள் போல் என் உடலின் உறுப்புகளில் அதுவும் ஒன்று என நினைக்கிறார்கள். அது இல்லாது நான் போனால் சந்தேகப்படுவார்கள். காரணமும் கேட்பார்கள்” என்று தனது கஷ்டத்தை எடுத்துச் சொன்னான். 

யவனன் சொல்வதில் பொருளிருப்பதைக் சுடல்வேந்த னும் புரிந்து கொண்டானாதலால் தனது கையில் இருந்த குறுவாளை இருமுறை திருப்பிப் பார்த்தான். அதன் பிடி யிலிருந்த யவன நாட்டு வேலைப்பாடு அந்தச் சமயத்தில்கூட அவனைப் பிரமிக்க வைத்தது. பெரிய வல்லூறு போல் செதுக்கப்பட்டிருந்த அந்த அலங்காரப்பிடியில் வல்லூற்றின் கண்களில் மஞ்சள் வைரங்களும் புதைக்கப்பட்டிருந்ததால் சாட்சாத் வல்லூறே விழிப்பது போன்ற பிரமையை அளித் தது. அந்த வல்லூற்றின் இறகுகள் விரித்துக் கிடந்ததால் அந்தக் குறுவாளைக் கைப்பற்றுவதற்கும் வசதியாயிருந்தது. அந்தக் குறுவாளின்கைப்பிடி எப்பொழுதும் கடல்வேந்தனை பிரமிப்புக்குள் ஆழ்த்தியிருந்தாலும் அதை அடைய அவன் பலமுறை ஆசைப்பட்டிருந்தாலும், அவன் யவன னிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. “இதே மாதிரி குறுவாள் யவனர் யாரிடமாவது இருந்தால் எனக்கு வாங்கிக் கொடு” என்று ஒருமுறை மட்டும் க்ளேஸியஸ் கேட்டிருந்தான் க்ளேஸியஸை, அதற்கு சொன்ன மறுமொழியும் அவனுக்கு நினைவிருந்தது. “தலைவரே! இம்மாதிரி குறுவாள் எந்த யவனனிடமும் இருக்க நியாயமில்லை. இது என் குடும்பத்தில் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. தகப்பன் இறுதி மூச்சை விடும்போது மகனிடம் கொடுப்பான். “இதைத் துறப்பதை விட நீ உயிரை விடுவது மேல்” என்ற சுண்டிப்புடன் இதை மகனுக்குக் கொடுப்பது வழக்கம் எனக் கேட்டிருக்கிறேன். ஆசையால் இதைப்போல் இன்னொன்று கிடைக்காது” என்று யவனன்  சொன்னதையும் நினைத்தான் கடல்வேந்தன். 

”சரி, இன்று எதற்காக இந்தக் குடிசையில் மறைந்தாய்?” என்று வினவினான் கடல்வேந்தன், 

க்ளேஸியஸ் உண்மையே பேசினான், “தலைவரே! நீங்கள் இதுவரை எங்களை ஏமாற்றியதில்லை” என்று தொடங்கினான். 

“ஆம்! என் வாழ்க்கையே ஆபத்தானது. அதில் பங்கு கொள்ளும் சகோதரர்களை எப்படி ஏமாற்ற முடியும்?” என்று கேட்டான் கடல்வேந்தன். 

யவனன் தலைவனைக் கூர்ந்து நோக்கினான், “இன்று நீங்கள் உண்மை பேசவில்லை” என்றும் சொன்னான் உறுதியாக. 

“எதை மறைத்தேன்?'” வேந்தன் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது. 

“நீங்கள் இருந்த அறைக்கு உள்ளறையில் யாரோ இருந்தார்கள்…” க்ளேஸியஸ் முடிக்கவில்லை சொற்களை.

“எப்படித் தெரியும் உனக்கு?” 

“தாங்களும் அமைச்சர் பெண்ணும் இருந்த நிலையில் கதவு தாழிடாதிருந்தது. நீங்கள் ஆடிய காதல் நாடகமும் எங்களைத் திருப்புவதற்காகத்தான். இதை நீங்கள் மறுக்க முடியுமா” 

“சொல் மேலே…” 

“நீங்கள் உள்ளறையில் தங்க வைத்தவர்கள் புத்திசாலி களல்லர். உங்கள் நேர்மையில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. உள்ளறைக் கதவிலிருந்த துவாரம் அடைபட்டிருந் தது. அடைத்தது ஒரு கண்” 

வேந்தன் புன்முறுவல் கொண்டு க்ளேஸியஸை அணுகி அவன் தோள்மீது கையை வைத்தான். “க்ளேஸியஸ்! சில சமயங்களில் நமக்காக உயிர்விடச் சித்தமாயிருப்பவர்களை யும் நாம் ஏமாற்ற வேண்டியிருக்கிறது. அந்த அறையில் இருந்தவர் ஒருவரல்ல, இருவர். அவர்கள் யாரென்பதை மாலுமிகள் அறிந்தால் அவர்கள் உயிரை நான்கூடக் காப் பாற்ற முடியாது. யாரென்று என்னை இப்பொழுது கேட்காதே. காலம் வரும்போது நீயே புரிந்து கொள்வாய். மரக்கலத்திற்குப் போ'” என்று படகுத்துறையைக் காட்டினான் கடல்வேந்தன். 

“என் குறுவாள்?” க்ளேஸியஸ் கையை நீட்டினான்.

“நான் காலையில் மரக்கலத்திற்கு வரும்போது கொண்டு வருகிறேன். நான் உன்னை. விரட்டியதற்கு அத்தாட்சி வேண்டாமா?” என்று வினவிய கடல்வேந்தன், மீண்டும் இல்லத்தின் உள்ளே சென்றான். 

அங்கு உள்ளறையைத் திறந்து கொண்டு அமைச்ச ரும் தூதுவரும் வெளியறைக்கு வந்து விட்டதையும் நிலக்கள்ளி கட்டிலின் ஒரு மூலையில் சுருண்டு உட்கார்ந்திருப்பதையும் கவனித்தான். அதனால் வெகுண்ட உள்ளத்துடன், “அமைச்சரே! உங்களை யார் வெளியே சொன்னது?” என்று வினவினான். 

“சஞ்சயன்” என்று தூதனைக் காட்டினார் அமைச்சர். 

“நான் சொல்கிறபடிதான் நீங்கள் கேட்கிறீர்களா?” என்று சஞ்சயன் சீறினான், அமைச்சர் மீது. 

”உள்ளறையிலிருந்து வெளியேவர நீதானே தூண்டினாய்?” என்று அமைச்சர் கேட்டார். 

“தூண்டாமல் என்ன செய்வது? 

“அவர்கள் திரும்புவதற்குள் ஓடவேண்டாமா?” என்றான் சஞ்சயன். 

“எதற்கு ஓடவேண்டும்?” என்று அமைச்சர் சீறினார். 

“தாமதித்தால்….” சஞ்சயன் முடிக்கவில்லை சொற்களை.

“தாமதித்தால்?” அமைச்சர் கேட்டார். 

“உங்கள் கழுத்தைத் திருகிக் கடற்கரைக் கழுகுகளுக் குப் போடுவதாகக் கொள்ளைக்கார மாலுமிகள் சொல்ல வில்லையா?” சஞ்சயன் வினவினான் எரிச்சலுடன் அமைச் சரின் கழுத்தையும் உற்று நோக்கினான், 

“என் கழுத்தைத் திருகினால் நீ எதற்குப் பயப்பட வேண்டும்?” என்று அமைச்சர் சர்வ சாதாரணமாகக் கேட்டார். 

“உங்களையாவது கொல்வதாகத்தான் சொன்னார்கள்…” 

”ஆம்.” 

“என்னைச் சித்திரவதை செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். கொள்ளைக் கப்பல்களில் சித்திரவதையென் றால் என்ன தெரியுமா?” 

“தெரியாது. அந்த அனுபவமில்லை இன்று வரை.” 

சஞ்சயன் சினத்துடன் பார்த்தான் அமைச்சரை. அவருடைய விஷமப் பேச்சை அவன் ரசிக்கவில்லை யென்பது அவன் முகபாவத்திலிருந்தே தெரிந்தது. “நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை. நினைப்பதற்கே பயமாயிருக்கிறது” என்று சிந்தனைக்குப் பின் சொன்னான் சஞ்சயன் 

“அப்படி என்ன செய்து விடுவார்கள்?” அமைச்சரின் ஆவல் அதிகமாயிருந்தது. 

“மரக்கலத்தின் பாய்மரமொன்றில் கட்டிப் போடுவார்கள்…” சஞ்சயன் தொடங்கினான். 

“அது சகஜம்” என்றார் அமைச்சர். 

‘“கட்டியவனுக்கு உணவு கிடையாது” என்றான் சஞ்சயன். 

“அதுவும் சகஜம். அன்னதானம் செய்வதற்கா சிறைப் பிடிக்கிறார்கள்?” என்று அமைச்சர் வினவினார். 

“கைகால்களை நீங்கள் அசைக்க முடியாது…” 

“அசைக்கும்படி கட்டுவானேன்?” என்று அமைச்சர் கட்டின் அவசியத்தைத் தெளிவாக்கினார். 

“இப்படிக் கட்டிப் போடுபவர்கள் அநாதைகளென்றும் தங்களின் பிற்கால பட்சணமென்றும் கடல் நாரைகளுக்குக் கூடத் தெரியும்.” 

“கடற் பறவைகளுக்கு இதுகூடத் தெரியுமா?” 

“அவை கட்டியிருப்பவனைக் கொத்தும்….” 

“கஷ்டம்தான்” 

“கொத்தினால் ரத்தம் வரும்…..” 

“மனிதனைக் கொத்தினால் ரத்தம்வராமல் வேறென்ன வரும்?” 

“அந்த ரத்தத்தை உறிஞ்ச சிறிய பறவைகள் சில வரும். அவை மாமிசப் பட்சிணிகள்”. 

“மாமிசப் பட்சிணிகளுக்குத்தான் ரத்தம் பிடிக்கும்” என்று அமைச்சர் சொன்னார். 

இப்படி அமைச்சர் ஒவ்வொன்றுக்ரும் சமாதானம் சொல்லவே சீற்றமடைந்த சஞ்சயன், “விளையாட இது சமயமல்ல அமைச்சரே!” என்றான். 

“என் கழுத்தைத் திருகுவது விளையாட்டு விஷய மல்ல. அதற்காக நான் பிராணனைவிடத் தயாராயில்லை.” என்ற அமைச்சர், “சஞ்சயா! பயத்தால் நாம் பிராணனை விடவேண்டாம். நாம் இனி மாளிகைக்குப் போவோம்” என்றும் சொன்னார். பிறகு கடல்வேந்தனை நோக்கித் திரும்பி, “நான் மகளை எப்பொழுது சந்திக்கலாம்” என்று கேட்டார். 

அமைச்சரின் துணிவையும் நிதானத்தையும் கண்ட கடல்வேந்தன் வியப்பு உச்சத்துக்குச் சென்றது. “இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடியலாம். நாளை இரவு உமது மகள் மாளிகைக்கு வருவாள்” என்று கூறினான். 

“நாளை உன்னையும் எதிர்பார்க்கிறேன்” என்ற அமைச்சர், சஞ்சயனை, தம்மைத் தொடரும்படி கூறி வெளியேற முயன்றார். அப்பொழுதுதான் வேந்தன் கையி லிருந்த குறுவாளைப் பார்த்தார். அவர் முகத்தில் சொல்ல வொண்ணாத பிரமிப்பு விரிந்தது. “அது ஏது உனக்கு?’ பிரமிப்பின் ஊடே வினவினார். 

“ஏன் இதில் என்ன விசேஷம்?” என்று கடல்வேந்தன் வினவினான், அவர் பிரமிப்புக்குக் காரணத்தை அறியாமல். 

“அத்துடன் சேரநாட்டுச் சரித்திரம் கலந்திருக்கிறது” என்றார் அமைச்சர். பிறகு அதைக் கடல்வேந்தனிடமிருந்து வாங்கி இருமுறை திருப்பி ஊன்றிப் பார்த் தார். “ஆம். அதே குறுவாள் தான் சந்தேகமில்லை. இதைப் பெற மன்னர் எதை வேண்டுமானாலும் தருவார்” என்றும் கூறினார். பிறகு அதன் வரலாற்றையும் விவரிக்கலானார். 

8. குறுவாளின் கதை 

ஆற்றுக்கு அக்கரையிலிருந்த தமது அரண்மனைக்குப் புறப்பட்டுவிட்ட அமைச்சர் அழும்பில்வேள், தனது கையிலிருந்து குறுவாளைக் கண்டதும் பிரமித்து நின்று அந்தக் குறுவாளைக் கையில் வாங்கித் திருப்பிப் பார்த்து, அந்தக் குறுவாளைப் பெற மன்னர் எது வேண்டுமானாலும் தருவார் என்று கூறியதும் வியப்படைந்த கடல்வேந்தன். “அப்பேர்ப்பட்ட மகிமை இதில் என்ன இருக்கிறது?” என்று வினவினான். 

அமைச்சர் அழும்பில்வேள் உடனடியாகப் பேசச் சிறிது தயங்கினாலும், பிறகு சமாளித்துக் கொண்டு, “ஏற்கெனவே சொன்னேன், இத்துடன் சேரநாட்டு வரலாறு கலந்திருக்கிறது என்று” என மீண்டும் கூறினார். அடுத்த கேள்வியைக் கடல்வேந்தன் தொடுக்கு- முன்பே அந்தக் குறுவாளின் பிடியைத் திருப்பி கழுகின் விரிந்த சிறகு களின் அடியைக் காட்டி, “இதைப் பார்” என்று கூறினார். 

கடல்வேந்தன் கழுகுச் சிறகுகளின் அடிப்பாகத்தைப் பார்த்தான். அதில் சில வரிகள் வெளிநாட்டு மொழி ஏதோ ஒன்றில் எழுதப்பட்டிருந்ததைக் கவனித்து, ‘ஆம். ஏதோ எழுதப்பட்டிருக்கிறது” என்று சொன்னான். 

அமைச்சர் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தமது தலையை அசைத்தார். “அது என்ன மொழி தெரியுமா?” என்று வினவவும் செய்தார். 

“தெரியவில்லை” என்றான் கடல்வேந்தன். 

“இந்தக் குறுவாளை இதற்கு முன்பு நீ பார்த்ததில்லையா?” அமைச்சரின் கேள்வியில் வியப்பு ஒலித்தது. குறுவாளைப் பார்த்திருக்கிறேன். இத்தனை கூர்ந்து கவனித்ததில்லை” அமைச்சர் இத்தனை கேள்விகள் எதற்காகக் கேட்கிறார் என்ற நினைப்பால் கடல்வேந்தன் சிறிது குழப்பமும் கொண்டான். 

“அமைச்சரே குறுவாளின் கதையை விளக்க முற்பட்டு, “வேந்தனே! இதன் சிறகுகளின் அடிப்புறத்திலிருப்பது கிரேக்க மொழி. இது சேர மன்னர் செங்குட்டுவனின் உயிரைக் காத்தது. கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவந்தான். ஆனால் இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க் கிறது. எனக்கு என்றார். சிறிது நிதானித்துவிட்டு மேலும் சொன்னார். “கடல் வேந்தனே! சேர மன்னர் தோள்வலியும், வாள் வலியும் உலகம் அறிந்தவை. வடநாட்டு மன்னரையும் வெற்றிகொண்டு இமயத் திலோர் இலச்சினையும் பொறித்து வந்த சேர மன்னர் செங்குட்டுவர் அடிக்கடி கடல் புறமும் யவனர் சேரிக்கும் செல்வார். சேரர் தலைநகர் கரூர் வஞ்சியானாலும் இந்த முசிறி மாநகரில் அவருக்கு ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. சுள்ளியாற்று சங்கமத் துறையில் நின்று எத்தனையோ முறை கடலை உற்றுப் பார்த்திருக்கிறார். அப்பொழுது பல முறை சேர நாட்டுப் படைத்தலைவர் வில்லவன்கோதையும் நானும் கேட்டிருக்கிறோம், மாமன் னரை, “இந்தக் கடலை ஏன் துருவிப் பார்க்கிறீர்கள்?” என்று. சேரர் பெருமான் ஒருநாள் பதில் சொன்னார். “இதற்கு அப்பால் யவன நாடு இருக்கிறது. அதைப் பற்றி வணிகர்கள் எல்லாரும் பெருமையாகப் பேசுகிறார்கள். அங்குள்ள செல்வம், வீரம் எல்லாவற்றையும் பாராட்டு கிறார்கள். அந்த நிலத்தை வெற்றி கொண்டால் எனன என்று சிந்திக்கிறேன்” என்று. 

“அது முடிகிற காரியமா?” என்று வில்லவன் கோதை கேட்டார். 

“மேதைக்கு முடியாதது எதுவுமில்லை. பேதைக்கு முடிந்தது எதுவுமில்லை என்று மன்னர் சொன்னார், சேரமன்னர் மாமேதை, கருத்தை வைத்து ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் முடிக்காமல் அதை விடமாட்டார். அன்று- உருவான கரு, அந்த நோக்கம், மன்னர் மனத்தை விட்டு அகலவில்லை. அன்று முதல் அடிக்கடி யவனர் குடியிருப்புக்குச் செல்லத் தொடங்கினார். யாருக்கும் தெரியாமல் தனியாகவே சென்றார். இப்படிப் பல நாள்கள் கடந்தன. ஒரு நாள் சுள்ளியாற்றங்கரை அரண் மனை திரும்பியபோது ஒரு யவனச் சிறுவனைக் கைகளில் தூக்கி வந்தார். அவனை வாங்கிக் கொள்ள வந்த பணி மக்களை விலகும்படி சைகை செய்து நமது பள்ளி யறைக்கு அவனைத் தூக்கிச் சென்றார். அலனுக்கு மன்னர் பிரானின் வைத்தியரே வைத்தியம் செய்தார். வைத் தியரை விசாரித்ததில், “யாரோ ஒரு யவனச் சிறுவன் முதுகில் பெரிய சுத்திக்குத்து, குற்றுயிரும் குலை உயிரு மாசுக் கிடக்கிறான். மன்னர் மேல் வீசப்பட்ட குறுவாளை அவன் ஏற்று மன்னரைக் காப்பாற்றினானாம். வைத்தியம் செய்கிறேன்” என்று சொன்னார் வைத்தியர். அதற்குமேல் ஏதும் சொல்ல மறுத்தார். நாள்கள் ஓடின. இருமுறை வஞ்சித் தலைநகரிலிருந்து முக்கிய செய்திகள் வந்தன. அங்கிருந்த அமைச்சர்கள் மன்னரைத் திரும்பி வரும்படி விண்ணப்பித்துக் கொண்டார்கள் ஆனால் மன்னர் முசிறியை விட்டு நகரவில்லை. இரண்டு மாத காலம் அங்கிருந்தே அரசாங்க அலுவல்களைக் கவனித் தார். பரணரையும் அங்கு வரவழைத்துக் கொண்டார் யவளச் சிறுவன். காலாகாலத்தில் குணமடைந்தான். ஆனால் அவன் பகல் வேளைகளில் அரண்மனையை விட்டு வெளிவருவதில்லை. இரவில் மட்டும் மன்னருடன் படகில் சுள்ளியாற்றில் பணம் செய்வான். அவன் மொத்தம் நான்கு மாதங்கள் அங்கு தங்கியிருந்தான். ஒரு நாள் அவன் திடீரென மறைந்துவிட்டான். அவனை வலை போட்டுத் தேடினோம். கிடைக்கவில்லை. அவன் மறைந்த ஒரு வாரம் சுழித்து, யாரோ ஓர் அயல்நாட்டு வணிகன் மன்னரைத் தேடிக் கொண்டு வந்தான். ஏதோ செய்தி சொன்னான். ஆனால், எங்களுக்கு அது என்ன என்பது புரியவில்லை. மன்னர் அவனைத் தனிமையில் சந்தித்தார். அவன் போன பிறகு என்னையும் வில்லவன் கோதையையும் அழைத்து இதே மாதிரி ஒரு குறுவாளை எங்களிடம் காட்டி னார். அந்தக் குறுவாள் சுற்றப்பட்டு வந்த வெள்ளைச் ஒலை ஒன்றையும் காட்டினார். சீலையில் ஒரு கடிதம் மிக நீளமாயிருந்தது. அதைக் காட்டிய மன்னர் சொன்னார், “இங்குள்ள யவனவர்களிடம் எச்சரிக்கையாயிருக்கும்படி கடிதத்தில் கண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையை விடுத் திருப்பவன் அந்த யவனச் சிறுவன். அந்தக் குறுவாள் யவன ராஜகுடும்பத்தினுடையது என்று குறிப்பிட்டு, “இதே மாதிரி சித்திரத்தைச் சீலையில் தீட்டி வருபவனிடம் இந்தக் குறுவாளைக் கொடுத்து விடவும். அது போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரும் என்றும் எழுதியிருக் கிறான்’ என்று விளக்கினார் மன்னர். வணிகனுக்கு நிரம்பப் பொருள் கொடுத்து அனுப்பினார். அடுத்து யவனர் சேரியிடம் அதிகக் கண்காணிப்பை ஏற்படுத்தினார். ஆனால் எதுவும் நிகழவில்லை. யவனர் சேரி அமைதி யாகவே இருந்தது, அவர்களிடமிருந்து வியாபாரமும். சுங்க வரிப்பணமும் அதிகமாகவே வந்து கொண்டிருந்தன. அந்தக் குறுவாளை மன்னர் பத்திரமாக வைத்திருந்தார். ஒருநாள் சுள்ளியாற்றங்கரையிலிருந்து திரும்பிய போது இடையிலிருந்த அந்தக் குறுவாள் காணப்படவில்லை. அதற்குப் பதில் அவர் இடையில் அதே குறுவாளின் படம் வரையப்பட்ட சீலை மட்டும் இருந்தது. அரண்மனை திரும்பிய மன்னர் ஒரு குறிப்பிட்ட படகின் அடையாளத் தைச் சொல்லி, அதை மடக்கிக் கொணருமாறு ஆற்றங் கரைக் காவலருக்கு உத்தரவிட்டார். அவர் சொன்ன அடையாளமுள்ள படகு மாயமாய் மறைந்து விட்டது. திரும்ப அது இந்தப் பிராயந்தியத்தில் காணப்படவில்லை. அந்தக் குறுவாளைத் திரும்பக் கொணருபவர்களுக்கு யவனர் பொற்காசுகளை நிரம்ப அளிப்பதாகப் பறைமூலம் அறிவித் தார். குறுவாளும் வரவில்லை. அதைப் பற்றிப் பிறகு எந்தச் செய்தியும் இல்லை. இப்பொழுது இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை எந்தச் செய்தியும் கிடையாது. இன்றுதான் இதைப் பார்க்கிறேன்.”

இத்துடன் கதையை முடித்த அமைச்சர், “இப்பொழுதுகூட இதை என்னிடம் கொடுக்கலாம்” என்றார். 

“கொடுத்தால்?” கடல்வேந்தன் வினவினான். “அரசரிடம் பரிசு பெறலாம்” அமைச்சர் ஆசை காட்டினார். 

“அரசர் பரிசு கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறாரா?” கடல்வேந்தன் கேட்டான் ஏளனத்துடன். 

“ஏனில்லை?”

“அவருடைய பொருளையே அவரால் காப்பாற்ற முடியவில்லையே; அவருடைய இரண்டு பெட்டி வரிப்பணம் என்னிடமிருக்கிறதே.”

“கொள்ளையடித்தாய்…” 

“எப்படியோ என்னிடமிருக்கிறது” என்ற கடல் வேந்தன், “அமைச்சரே! கடல்வேந்தன் தனது நண்பர் களைக் கைவிட்டதாகச் சரித்திரமில்லை. இனியும் அது ஏற் படாது. இது எனது மரக்கலத் தலைவன் க்ளேஸியஸுக்குச் சொந்தம். அவனிடம் திரும்பிப் போகும்” என்று திடமாகச் சொன்னான். 

மேற்கொண்டு ஏதும் பேசாமல் அழும்பில்வேள் சஞ்சய னுடன் தமது மாளிகைக்குக் கிளம்பினார். அவர் சென்றதும் கட்டிலின் மூலையில் உட்கார்ந்திருந்த நிலக்கள்ளியை நோக்கிய கடல்வேந்தன், “நிலக்கள்ளி! விசித்திரமான கதையல்லவா?” என வினவினான். 

“ஆம்” என்றாள் நிலக்கள்ளி. கட்டிலைவிட்டு இறங்கி கடல்வேந்தன் பக்கத்திலும் நின்று கொண்டாள். 

“இதற்கு முன்பு இந்தக் கதையைக் கேட்டிருக் கிறாயா?” என்று கடல்வேந்தன் நிலக்கள்ளியைக் கேட்டான். 

“நீங்கள்?” நிலக்கள்ளி திருப்பினாள் கேள்வியை.

“கேட்டதில்லை”. 

“உங்களைவிட எனக்கு வயது குறைவு. நான் எப்படி கேட்டிருக்க முடியும்?” 

“அறிவு வயதைப் பொறுத்ததல்ல!” 

“ஆனால் அனுபவம் வயதைப் பொறுத்தது. உங்களுக் கிருக்கும் அனுபவம் எனக்கு எது?” என்று வினவினாள் நிலக்கள்ளி. 

அதற்கு மேல் உரையாடலை வளர்க்காத கடல் வேந்தன், “வா நிலக்கள்ளி” என்று அமைச்சர் மகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். புறப்பட்ட சமயத்தில் மூதாட்டியை நோக்கி, “அம்மா! இன்னும் மூன்று நாள் களுக்கு இந்த இல்லத்தை மூடிவிடு” என்று உத்தரவும் இட்டான். 

இல்லத்திலிருந்து கிளம்பி. சுள்ளியா ற்றங்கரைக்கு வந்ததும் அங்கிருந்த படகு எதிலும் ஏறாமல் அதன் கரை யோரமே மேற்கு நோக்கி நடந்தான் நிலக்கள்ளியின் கையைப் பற்றிய வண்ணம். சுள்ளியாறு, கடலுடன் கலக்கும் இடத்திற்கு வந்ததும் கடற்கரையில் இழுத்து விடப்பட்டிருந்த சிறுபடகு ஒன்றை மீண்டும் நீரில் தள்ளி, நிலக்கள்ளி ஏறியதும் தானும் ஏறி, படகைச் செலுத்த லானான். படகு கடலில் புகுந்த பின்பு கடற்கரையி லிருந்து அதிகம். விலகாமல் ஓரமாகவே சென்றது. சுமார் அரை ஜாமம் இப்படிப் பயணம் செய்தபிறகு எட்ட இருந்த ஒரு மரக்கலத்தை நோக்கிச் சென்றது. அந்த மரக்கல நூலேணியில் முதலில் நிலக்கள்ளியை ஏற விட்ட கடல்வேந்தன் அவளைத் தொடர்ந்து தானும், ஏறினான். 

அவர்கள் தளத்தில் ஏறுவதற்கும் பொழுது புலரு வதற்கும் சரியாயிருக்கவே தமிழக மாலுமிகள் வேட்டிகளை இறுக்கிக் கட்டியும், பிற நாட்டு மாலுமிகள் சராயைச் சுருட்டிவிட்டுக் கொண்டும், தளத்தைச் சுத்தம் செய்ய லானார்கள். க்ளேஸிபஸும் தனது அறையிலிருந்து வெளியே வந்து கப்பலை சாதாரண மாலுமிகளுடன் சேர்ந்து சுத்தம் செய்யத் தனது மேலங்கியைக் கழற்றி இடையில் கட்டிக் கொண்டு தளத்தைச் சுத்தம் செய்யக் குனிந்தாள் துடைப்பத்துடன் அவன் முதுகைக் கவனித்த நிலக்கள்ளி பிரமித்தாள். அதில் ஒரு குறுவாள் பாய்ந்த தழும்பு பெரிதாகத் தெரிந்தது. அதை அடுத்து பச்சையும் குத்தப்பட்டிருந்தது. நிலக்கள்ளி கடல்வேந்தனை நோக்கினாள்.  அவன் முகம் கல்லாயிருந்தது. பதிலே சொல் லாமல் சுடல்வேந்தன் அவள் கையைப் பிடித்து தரதர வென்று இழுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று விட்டான் நிலக்கள்ளி தரதரவென்று இழுக்கப்பட்ட சமயத்திலும் திரும்பித் திரும்பி க்ளேஸியஸின் முதுகைப் பார்த்துக் கொண்டே சென்றாள். அவளை அறைக்குள் அழைத்துச் சென்றதும் சுதவை மூடிய கடல்வேந்தன், “இந்த மரக்கலத்தில் இருக்கும்வரை இன்று கண்டதை யாரிடமும் சொல்லாதே” என்று கண்டிப்பான குரலில் கூறினான். 

“கூறினால்?” நிமிர்ந்து நின்று இறுமாப்புடன் வினவினாள் நிலக்கள்ளி. 

”உன் உயிர் அரைக்காசு பெறாது” என்றான் கடல் வேந்தன் அவன் முகத்தில் சுவலை அதிகமாகப் படர்ந்திருந்தது.

9. துணைவன் 

க்ளேஸியஸின் முதுகிலிருந்த கத்திக்குத்தையும், அதன் கீழ் வல்லூறின் சிறகுகளைப் போல் குத்தப்பட்ட பச்சையை யும் கண்டதும் கடல்வேந்தன் முகம் கல்லாகி விட்டதையும், தன்னைத் தரதரவென்று அறைக்கு இழுத்துவந்து அறைக் கதவைச் சாத்தி, ”இன்று கண்டதை யாரிடமும் சொல் லாதே!” என்று எச்சரித்ததையும், சொன்னால் தனது உயிர் அரைக்காசு பெறாதென்பதையும் அவன் உரைத்தபோது. சொற்களிலும், முகத்திலும் விரிந்த கவலையையும் கண்ட நிலக்கள்ளி, மெதுவாகக் கேட்டாள்: “இது உங்கள் மரக் கலந்தானே?” என்று. 

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த கடல்வேந்தன், “இருந்தாலும் இங்குள்ள மாலுமிகள் கொள்ளைக்காரர்கள். வேறு ஒரு தலைவன் தங்களுக்கு அதிகக் கொள்ளையைச் சம்பாதிக்க முடியுமென்று நினைத் தால் பழைய தலைவனைக் கொல்லவும் துணிவார்கள்’ என்ற கடல்வேந்தன், ”என்னைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. இவர்களை அடக்கவும், அவசியமானால் அழிக்கவும் எனக்கு வழி தெரியும். ஆனால் நீஇருப்பதில் இடைஞ்சல்கள் இருக்கின்றன” என்றான். 

நிலக்கள்ளி அந்த அறையின் சாத்திய கதவை நோக் கினாள் ஒரு விநாடி, பிறகு சென்று அதைத் தாழிட்டுத் திரும்பி வந்து, சுடல்வேந்தன் திண்ணிய தோள்களின்மீ தனது கைகளை வைத்து அவனைக் கூர்ந்து நோக்கினாள் நிலக்கள்ளி அபாயத்தைப் பற்றி அஞ்சுபவளென்று நினைக் கிறீர்களா?” என்று என்று வினவினாள், அவன கண்களுடன தனது கண்களைக் கலந்து. 

கடல்வேந்தனின் கண்கள் அவள் இதயத்தை ஊடுருவி விடுவன போல் அவள் கண்களை நோக்கின. ‘இல்லை நிலக்கள்ளி! நான் அப்படி நினைக்கவில்லை. மரணத்தைச் சற்றும் இமை கொட்டாத துணிவுடன் வரவேற்பாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மரணத்தை விடக் கொடிய அபாயங்கள் இருக்கின்றன’ என்றான் கடல் வேந்தன். 

அவன் எதைக் குறிப்பிடுகிறானென்பதை நிலக்கள்ளி புரிந்து கொண்டதால் புன்னகை செய்தான், ‘வேந்தரே! இந்த நிலக்கள்ளியின் மீது இஷ்ட விரோதமாகக் கை வைக்கத் துணிபவன் இனிமேல்தான் பிறக்கவேண்டும். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். ஆனால் க்ளேஸி யளின் முதுகின் காயத்தைக் கண்டதும் ஏன் அத்தனை கவலை கொண்டீர்கள்?” என்று நிலக்கள்ளி வினவினாள். கடல்வேந்தன் அவள் இடையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் அங்கிருந்த பஞ்சணையில் உட்கார வைத்தான். பிறகு அந்த அறையில் குறுக்கும் நெடுக்கு மாகச் சில விநாடிகள் தீவிர சிந்தனையுடன் உலாவினான். மீண்டும் உலாவலை நிறுத்தி அவள் எதிரில் வந்து நின்று கொண்டு ‘நிலக்கள்ளி! அமைச்சர் சொன்ன கதையை நீ கேட்டாயல்லவா?” என்று வினவினான். 

“கேட்டேன்” என்று சர்வசாதாரணமாகச் சொன்னாள் நிலக்கள்ளி. 

“மன்னர் காப்பாற்றி அரண்மனையில் சிகிச்சை செய்த சிறுவனின் முதுகில் கத்திக்குத்து இருந்ததாக உன் தந்தை குறிப்பிட்டார்….” என்று கடல்வேந்தன் வாசகத்தை முடிக்காமல் விட்டான். 

“ஆம். குறிப்பிட்டார்.” 

“க்யேஸியஸின் முதுகில் கத்திக்குத்து விழுந்த வடு இருக்கிறது”. 

“ஆம். சுவனித்தேன் அதையும்” 

“அதன் கீழ் குறுவாளின் பிடியைப் போல பச்சையும் குத்தப்பட்டிருக்கிறது”. 

“பார்த்தேன்.” நிலக்கள்ளியின் பதிலில் ஏதோ ஒருவித சந்தேகம் ஒலித்தது. 

கடல் வேந்தன் விளக்கினான் காரணத்தை. “நேற்று வரை இந்தப் பச்சை குத்தப்படவில்லை, அவன் முதுகில்” என்று கூறியவன் “க்ளேஸியஸ் வேண்டுமென்றே இந்தப் பச்சையைக் குத்திக்கொண்டிருக்கிறான். அதற்காகவே அவன் மரக்கலத்தை விட்டு நேற்று கரைக்கு வந்திருக் கிறான். வேண்டுமென்றே இந்தப் பச்சையை இன்று என் னிடம் காட்டியிருக்கிறான். இதுவரை க்ளேஸியஸ் முதுகை யாரிடமும் காட்டியதில்லை. மேல் சட்டையில்லா மல் அவனை யாரும் பார்த்ததில்லை. மரக்கலத்தை அலம் பும் போதும் அவன் சிறு சராயுடன் மேல் அங்கியை அணிந்தே வருவான். இன்றுதான் கீழ் சராயை மட்டும் அணிந்து முதுகைக் காட்டியிருக்கிறான். இதற்கு என்ன காரணமென்று நினைக்கிறாய்?” என்று விவரித்து ஒரு வினாவையும் தொடுத்தான் 

நிலக்கள்ளிக்குக் காரணம் புரிந்தே இருந்ததானாலும் முழு மர்மத்தையும் அவளால் புரிந்துகொள்ள முடிய வில்லை. “நீங்கள் அவனை யாரென்று உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அங்கியில்லாமல் தளத்தைச் சுத்தம் செய்ய முற்பட்டிருக்கிறான். மன்னரால் காப்பாற்றப்பட்டவன்தான் என்பதை உணர்த்த பச்சை குத்திக் கொண்டிருக்கலாம்” என்றாள் நிலக்கள்ளி. 

அவள் சொன்னது சரியென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு, “சொன்ன காரணம் சரிதான். ஆனால் காரணம் அத்துடன் நிற்கவில்லை. இந்தா. இந்தக் குறுவாளைச் சரியாகப் பார். சிறகின் கீழ் எழுதப்பட்டிருக் கும் வரிகளையும் படிக்க முடிந்தால் படி” என்று கூறி குறுவாளை நிலக்கள்ளியின் கையில் கொடுத்தான். குறுவாளை இருமுறை திருப்பிப் பார்த்தாள் நிலக் கள்ளி. ஏதும் புரியாததால் கடல்வேந்தனை நோக்கி, “நீங்களே சொல்லுங்கள்” என்றாள். 

“இந்தக் குறுவாள் யவனராஜ பரம்பரையைச் சேர்ந் தது. இவன் யார் என்ற குடும்ப விவரம் கிரேக்க மொழி யில் எழுதப்பட்டிருக்கிறது” என்று விளக்கிய கடல் வேந்தன், ‘இவன்’ தான் யார் என்பதை இதுவரை என்னிடம் சொல்லவில்லை. ஆனால் இன்று சொல்கிறான், தான் யவனராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதையும் குறிப்பிடுகிறான். அது உண்மையானால் முசிறி கிரேக்கர்கள் அனைவரும் சொற்படி கேட்பார்கள். அவனது இந்த முசிறி மாநகரை அவர்கள் ஆக்ரமித்துக் கொள்ள முயன் றால், அவர்களை அணிவகுத்து நடத்த உரிமையுள்ளவன் க்ளேஸியஸ்தான்” என்றும் கூறினான். 

நிலக்கள்ளியின் முகத்தில் வியப்பும் கவலையும் ஓரளவு அச்சமும் விரிந்தது. “அப்படியானால் இந்த ஆபத்தைப் பற்றி மன்னருக்குத் தெரிவிக்க வேண்டாமா?” என்று வினவினாள் நிலக்கள்ளி சுவலை நிரம்பிய குரலில். 

கடல்வேந்தன் அவள் கன்னங்களிரண்டையும் தனது கைகளால் பிடித்துக் கொண்டான். “நிலக்கள்ளி! மன்ன ரிடம் இதைத் தெரிவிப்பதில் பயனில்லை. இந்த ஆபத்து உண்மையானது என்பதை இமயத்தையே வெற்றி கொண்ட சேரமாமன்னர் நம்புவது கஷ்டம். அப்படியே நம்பினாலும், அதை அலட்சியம் செய்வது சகஜம். இதை நாமேதான் சமாளிக்க வேண்டும்” என்று கூறி, குனிந்து அவள் இதழ்களைத் தனது இதழ்களால் வேசாகத் தொட்ட கடல்வேந்தன், “நீ எதையும் காணாதது போல் நடந்து கொள் என்று புத்தியும் சொல்லிவிட்டு, அறைக் சுதலைத் திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான். 

சற்று நேரத்திற்கெல்லாம் அவன் தளத்தில் நின்று மாலுமிகளை அதட்டும் சத்தம் பெரிதாகக் கேட்டது. அந்த சத்தத்தாலும், அதை அடுத்து மாலுமிகள் துரிதமாகத் தளத்தைச் சரசரவென்று துடைப்பத்தால் தேய்த்த ஒலி இத்தனைக்கும் இடையில் அலுவலின் போது யாலும், மாலுமிகள் வழக்கமாகப் பாடும் ஓடப்பாட்டைத் தொடங் கியதால் ஒலித்த இசையாலும் அமர்க்களப்பட்ட தளத்தைப் பார்க்க அறை வாயிற்படியிலிருந்து நிலக்கள்ளி வெளியே எட்டிப் பார்த்தாள். 

அன்று காலைக் கதிரவன் வீசிய ஒளியால் மரக்கலம் மோகனாகாரமாகக் காட்சியளித்தது. சூரிய ஒளியில் பள பளத்த கழிவு நீர் அலைச்சலும், மாலுமிகள் உடல்களில் ஊடுருவிய காலைச் சூரியன், துளிர்த்த வியர்வைகளை கதிர்கள் விளைத்த பற்பல ஒளிப்பிரதிபிம்பங்களும், மரக் கலத்தின் நடுவிலிருந்த இரு பாய்மரச் சீலைகளில் தீட்டப் பட்டிருந்த சித்திரங்களும் தளத்தின் அழகைப் பல மடங்கு அதிகப்படுத்தியிருந்தன. நங்கூரத்தில் ஆடி நின்ற அந்த மரக்கலம் காலைக் காற்றின் விளைவாக லேசாக அசைந்ததுகூட கண்களையும் இதயத்தையும் பறிக்கும்படி யாக அமைந்திருந்தது. 

அந்த வெயிலில் தரைகளைக் கழுவிய மாலுமிகள் குனிந்து ஆடிப் பணி செய்த முறையிலும் ஓர் ஒழுங்கு அவர்கள் உடல்களின் இருந்தது. அசைவுகளில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஏதோ மந்திரங்கள் வேலை செய்வது போல் வேலையைத் தொடங்கிய மாலுமிகள், நேரம் ஏறஏறத் துரிதமாக வேலை செய்ததால் மிகத் துரிதமாக அவர்கள் உடல்கள் ஆடின. ஒரு கூட்டு நடனம் நடப்பது போன்ற பிரமையை அளித்தது நிலக்கள்ளிக்கு. ஆகவே அவள் கடல்வேந்தன் அறையிலிருந்து வெளியே வந்து பக்கப்புறமாக யார் கண்ணிலும் படாமல் நகர்ந்து மர கலத்தின் மேற்குப் பகுதியை அடைந்து பக்கப் பலகை ஓரமாகவே நடந்து சென்றாள். அந்த மரக்கலத்தின் நடுவில் கடல்வேந்தன் அறைக்கு நேர்ப்புறக் கோடியில் ஒரு சிறு அறை இருந்தது. அந்த அறையின் கதவில் குறுவாளால் வெட்டப்பட்ட ஓர் உருவம் இருந்ததைக் கவனித்தாள் நிலக்கள்ளி. அந்த உருவம் கிட்டத்தட்ட க்ளேஸியஸின் முகத்தைப் போலிருக்கவே அது அவன் அறையாகத் தானிருக்க வேண்டும். என்று ஊகித்துக் கொண்டவள், அறைக்கதவு பாதி திறந்திருந்தது கண்டு உள்ளே மெல்ல எட்டியும் பார்த்தாள். அடுத்து அவள் திகில் வசப்பட்டாள். “உள்ளே வரலாம்” என்று உள்ளிருந்து வந்தது க்ளேஸி யஸின் குரல், அவன் எப்பொழுது தனது அலுவலை முடித்துக் கொண்டான் என்பது அவளுக்கு விளங்கவில்லையாதலால் அவள் உடனடியாக உள்ளே உள்ளே செல்லாமல் வாயிற்படியி லேயே நின்று, “மன்னிக்க வேண்டும். நீங்கள் உள்ளே யிருப்பதைப் பார்க்கவில்லை என்று கூறிவிட்டுத் திரும்ப முயன்றாள். 

மீண்டும் க்ளேஸியஸின் குரல் ஒலித்தது, “இங்கு அச்சப்பட ஏதுமில்லை. தைரியமாக வாருங்கள். கப்பல் தலைவியாரை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று. 

உள்ளே நுழைந்த நிலக்கள்ளி அந்த அறைப் பலகை களில் கத்தியால் பற்பல உருவங்கள் செதுக்கப்பட்டிருப் பதைக் கண்டாள். ஒரு பெண்ணின் பெரிய நிர்வாணப் படம் செதுக்கப்பட்டிருந்ததைக் கண்டு திரும்ப முயன்ற வளை நோக்கி, “அம்மணி! அந்தப் படத்தில் தவறு ஏது மில்லை. அது கிரேக்கர்களின் அழகுத் தெய்வமான வீனஸின் படம்” என்று விளக்கினான். 

“இருக்கட்டும். நான் வருகிறேன். என்று கூறி விட்டுத் துரிதமாக வெளியே சென்றுவிட காலை எடுத்து வைத்தவள் சட்டென தானாகவே நின்றாள். அந்த அறையின் ஒரு புறத்தில் சேரன் செங்குட்டுவனின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அவன் காலடியில் ஒரு யவன மங்கை படுத்துக் கிடந்தாள். அவள் தலை மன்னன் திரு வடிகளைத் தலையணையாகக் கொண்டிருந்தது. 

அந்த இரு உருவங்களையும் மாறி மாறிக் கண் கொட் டாமல் பார்த்தாள் நிலக்கள்ளி “சேர மன்னனுக்கு யவன நாட்டுக் காதலியும் இருந்திருக்கிறார்களா?” என்று மனத் துக்குள் கேட்டுக் கொண்டாள். இருப்பினும் ஏதும் அறி யாதது போல், “அவர் யார்?” என்று வினவினாள். 

“படத்தில் நிற்பவர் என் தந்தை. அவர் காலடியில் கிடப்பவள் என் தாய்” என்று விளக்கிய க்ளேஸியஸ், தான் உட்கார்ந்திருந்த மஞ்சத்திலிருந்து எழுந்து வந்து நிலக்கள்ளி பக்கத்தில் நின்று கொண்டான். ‘அம்மணி! ஒன்று சொல் வேன் கேட்பீர்களா?” என்றான், 

“சொல்லுங்கள்” நிலக்கள்ளியின் குரல் வறண்டு கிடந்தது. 

“இரவு வரை இந்த மரக்கலத்தில் இருக்க வேண் டாம். பிற்பகலிலேயே கரைக்குச் சென்று விடுங்கள்” என்ற க்ளேஸியஸின் குரலும் வறண்டிருந்தது. 

“இதை வேந்தரிடம் சொல்லுங்கள்” என்ற நிலக்கள்ளி வாயிற்படியை நோக்கித் திரும்பினாள். மாலுமியொருவன் அங்கு அவளுக்குச் சிற்றுண்டி கொண்டு வந்திருந்தான். ‘இங்கேயே சாப்பிடுகிறீர்களா?” என்று வினவினான் அந்த மாலுமி. 

“கோடிக்கே வருகிறேன்”என்ற நிலக்கள்ளி அவனுடன் மரக்கலத்தின் சுக்கான் இருந்த கோடியை அடைந்து தளத்தரையில் உட்கார்ந்து கொண்டாள். “உங்களுடன் தலைவரும் கலந்து கொள்வார்” என்று கூறிய மாலுமி உணவுத் தட்டைக. கீழே வைத்துவிட்டுச் சென்றான். அடுத்த சில விநாடிகளில் கடல்வேந்தனும் அங்கு வந்து அவள் பக்சுத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கும் மாலுமி உணவைக் கொண்டு வரவே, அதை எடுத்துப் புசித்த வண்ணம் கடல்வேந்தன் அவளை நோக்கி, யார் அறையை விட்டு வெளியே வரச் சொன்னது? என்று வினவினான். 

“நான் இங்கு சிறையிலா இருக்கிறேன்?” என்று கேட்டாள் நிலக்கள்ளி. 

கடல்வேந்தன் அதற்குப் பதில் சொல்லவில்லை “க்ளேஸியஸ் என்ன சொன்னான்?” என்று வினவினான். 

“குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. என்னை இன்று பிற்பகலிலேயே கரைக்குச் செல்லும் படி சொன்னான்” என்றாள் நிலக்கள்ளி. 

கடல்வேந்தன் தலையை அசைத்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு பயங்கரச் சாயை விரிந்தது. “உணவு அருந்தியதும் அறைக்குப் போ. நான் அழைக்கும் வரை வெளியில் வராதே” என்று கூறினான். 

அவன் சொன்ன வண்ணம் அறைக்குள் சென்றாள் நிலக்கள்ளி. அவன் இரவு மூண்டதும் அறைக்குள் வந்தான். “நீ கிளம்பலாம். உன்னை இன்றிரவு ஒப்படைப்பதாக உன் தந்தையிடம் கூறியிருக்கிறேன்” என்று சொன்னான். “நீங்கள் வரவில்லையா?” என்று கேட்டாள் நிலக்கள்ளி. 

“இல்லை” 

“வேறு யார் எனக்குத் துணை?”

கடல் வேந்தன் நிதானமாகப் பதில் சொன்னான். “க்ளேவியஸ்” என்று அவன் பதிலைத் தொடர்ந்து க்ளேயஸும் அறைக்குள் நுழைந்தான். 

10. சஞ்சயன் சாமர்த்தியம் 

சேரன் செங்குட்டுவனைத் தனது தந்தையென்று அன்று பகலில் அறிவித்தவனும் யவனராஜ பரம்பரையைச் சேர்ந்தவனென்று கடல்வேந்தனால் நிர்ணயிக்கப்பட்டவனு மான க்ளேஸியஸ் அந்த இரவில் தனக்குத் துணை வருவா னென்று கடல் வேந்தன் சொன்னதும் சொல்லாததுமாக அவனே அறைக்குள் நுழைந்ததைக் கண்ட நிலக்கள்ளியின் மனம் மாறுபட்ட உணர்ச்சி அலைகளால் தூக்கி எறியப் பட்டது. கடல்லேந்தனையே கொல்ல முயன்றவனும், மர்மமான வாழ்க்கைச் சரிதத்தைப் படைத்தவனுமான க்ளேஸியஸ் தான் போகும் வழியிலோ, அதற்கு அப்புறமோ தாறுமாறாக நடந்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம் நிலக்கள்ளிக்கு அடியோடு இல்லை. ஆனால் தன்னைச் சிறைபிடித்தோ, தன்னை உபயோகித்து வேந்தனுக்கு ஏதாவது ஊறு விளைவிக்கவோ க்ளேஸியஸ் எண்ணினால் என்ன செய்வது என்று சிந்தித்தாள். தவிர, தன்னை அவன் கொண்டு போய் விட்டுத் திரும்பமுடியாமல் தன் தந்தையோ, சேர நாட்டு வீரர்களோ அவனை மடக்கி விட்டால் சுப்பலில் வேந்தன் கதி என்ன ஆகும்? தரையில் யவனர் சேரி கொதித்தெழுந்தால் பரிகாரம் எப்படி என்றெல்லாம் யோசித்தாள் நிலக்கள்ளி. 

இத்தகைய எண்ணங்களால் அவள் வதனத்தில் படர்ந்த சிந்தனை மேகத்தைக் கண்ட கடல் வேந்தன் அவள் உள்ளத்தில் ஓடிய சந்தேகங்களைப் புரிந்து கொண் டதால் சொன்னான். “நிலக்கள்ளி! க்ளேஸியஸைப் பற்றி எந்தவித சந்தேகமோ, கவலையோ வேண்டாம். துணிவில் என்னை மிஞ்சியவன், எந்த இக்கட்டிலும் வெளிவரும். சாமர்த்தியம் உடையவன், ஆகையால் அவனுடன் நிர்ப்பயமாகப் போய் வா” என்று. இதைச் சொன்ன கடல்வேந்தன் புன்முறுவல் செய்தான். ஆனால் ச்ளேஸி யஸின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. அவன் வாயைத் திறக்கவும் இல்லை. 

கடல் வேந்தனே மேலும் பேச முற்பட்டு”க்ளேஸியஸ்! இந்த நிலக்கள்ளி எந்தவித கஷ்டத்துக்கும் ஆளாகாமல், அவள் தந்தையிடம் போய்ச் சேருவதைப் பொறுத்திருக் கிறது நமது நலன். ஆகையால் உன் கண்களைக் காக்கும். இமைகளைப் போல் இவளைப் பாதுகாத்து அழைத்துச் செல். நமது மரக்கலத்துக்கும் மாலுமிகளுக்கும் அதிகாரப் பூர்வமாக அபயம் அளிக்கப்படுமானால், சேர மன்னன் அரசுக்குப் பலமாக இது இயங்க முடியுமானால் நாளை இந்தத் துறைமுகத்துக்கு யவன நாட்டிலிருந்து வரும் கப்பலின் வணிகப் பொருள்கள் சூறையாடப்படமாட்டா, என்று உறுதி கூறிப் பார். அவர் நாம் கோரிய படி அத் தாட்சி பத்திரம பொடுத்தால் அதை வாங்கி வா” என்று கூறிவிட்டு, “இந்தா உனது குறுவாள். இதன் மீது இவளை உன் உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பதாக சத்தியம் செய்” என்று குறுவாளையும் க்னேஸியஸிடம் நீட்டினான். 

தனது நீண்ட கரத்தால் அந்தக் குறுவாளை வாங்கிக் கொண்ட க்ளேஸியஸ் அதைத் தன் இதழ்களால் முத்த மிட்டு, இடையில் செருகிக் கொண்டு வேந்தனுக்கும் நிலக் கள்ளிக்கும் தலை வணங்கினான். “வாருங்கள் தேவி!” என்று நிலக்கள்ளியை அழைத்துவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான். அடுத்த விநாடி. அந்த அறை சாத்தப்பட்டதால் புன்முறுவல் கொண்டு அறை வாயிற் படியின் அருகிலேயே நின்றான். 

உள்ளே நிலக்கள்ளி கடல் வேந்தனின் அணைப்பிலிருந்தாள். “நீங்கள் கேட்டபடி அவன் சத்தியமேதும் செய்யவில்லையே?” என்று வினவினாள். 

“செய்தான் தேவி. குறுவாளை முத்தமிட்டு உனக்கும் எனக்கும் வணங்கவில்லையா அவன்?” என்று கேட்டான் கடல்வேந்தன். 

“ஆம்” என்றாள் நிலக்கள்ளி. 

“அதுதான் அவர்கள் சத்தியம் செய்யும் முறை, ஒரு முறை இப்படி. சத்தியம் செய்துவிட்டால் பவனர்கள் உயிர் போனாலும் அதிலிருந்து வழுவமாட்டார்கள். தைரியமாகப் போய் வா” என்ற கடல்வேந்தன் “நீ எங்திருந்தாலும் நான் அருகிலிருப்பேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்'” என்று உற்சாகமும் ஊட்டினான் 

“எங்கிருந்தாலுமா?” 

“ஆம்,” 

“நீங்களென்ன ஆண்டவனா, எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் இருக்க?” 

”சில சமயங்களில் மனிதன் ஆண்டவனாக வேண்டி யிருக்கிறது. நான் எங்கு தோன்றுவேன், எப்படி தோன்று வேன் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உன் தந்தையின் மாளிகையில் நான் தோன்றவில்லையா?” 

இதைக் கேட்ட இளநங்கை புன்முறுவல் செய்தாள். “ஆம், ஆம் தோன்றினீர்கள், என்னை தூக்கிவரத் திட்டமிட்டு” என்று சொன்னாள் புன்முறுவலின் ஊடே. 

கடல்வேந்தன் ஒருமுறை அவளை இறுக அணைத்து. “நிலக்கள்ளி! வாயிலில் யவனன் காத்திருக்கிறான். தாமதிக்காதே. அவன் ஏதாவது வித்தியாசமாகவும் நினைப்பான்” என்று கூறிவிட்டு அறைக்கதவைத் திறந்து அவளுடன் வெளியே வந்து கிளேஸியஸிடம் அவளை ஒப்படைத்தான். 

க்ளேஸியஸ் இருவருக்கும். தலைவணங்கி முன்னே நடந்தான். நிலக்கள்ளி மட்டும் அவனைப் பின்பற்றினாள். கடல்வேந்தன் அறை வாயிலிலேயே நகராமல் நின்றான். ஒரே ஒரு முறை திரும்பி கடல்வேந்தனைப் பார்த்த நிலக் கள்ளி க்ளேஸியஸைத் தொடர்ந்தாள். அவர்களிருவரும் மரக்கலச் சார்புப் பலகையை அடைந்ததும் க்ளேஸியஸ் அதைத் தாண்டி அங்கு பிணைத்திருந்த நூலேணியில் றங்கினான் வேகமாக. இறங்கிக் கீழிருந்த படகொன்றில் குதித்து நுலேணியை அசைத்தான். நிலக்கள்ளி இறங்கலா மென்பதற்கு அடையாளமாக, நிலக்கள்ளி தனது ஆடை யைச் சுருட்டி கால்களுக்கிடையில் திணித்து, திணித்த நிலைகளிலும் கால்கள் சிறிதும் புலப்படாதிருக்க சேலை யைச் சுற்றிக் கப்பலின் சார்புப் பலகை மீது காலொன்றைப் போட்டு லாகவமாக நூலேணியில் கால் வைத்தாள். பிறகு சரசரவென்று நீண்ட நாளாக நூலேணியில் இறங்கிப் பழக்கப்பட்டவள் போல் இறங்கி படகில் க்ளேஸியஸின் பக்கத்தில் நின்றாள். 

அடுத்து. க்ளேஸிபஸ் துரிதமாக இயங்கி கப்பவி லிருந்து படகின் பிணைப்பை அவிழ்த்துத் துடுப்புகளை எடுத்துக் கொண்டான். படகின் நடுவில் உட்கார்ந்து துடுப்புகளை எடுத்துக் கொண்டான் துழாவ. நிலக்கள்ளி யும் படகின் நடுவில் அவனிடமிருந்து சிறிது விலகி உட் கார்ந்து மரக்கலத்தையும் கடற்புறத்தையும் கவனித் தாள். கடலின் அகண்டமான பயங்கரமே அதற்கு ஒரு அழகை அளித்திருந்தது. இரண்டு சின்னஞ்சிறு விளக்கு களுடன் மட்டுமே நின்ற கடல்வேந்தன்-கப்பல் ஏதோ கடலுக்கு இரண்டு அணிகளை அளித்த பணிமகன் போல் காட்சியளித்தது. வானில் பளபளத்த விண்மீன்கள் ஆங்காங்கு கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகுகளிலிருந்த விளக்குகளுடன் போட்டி போட்டன. இத்தனை விளக்குகளையும் கறுத்த பெரிய கடல் பகுதியையும் அலட்சியம் செய்வன போல் முசிறித் துறைமுக விளக்குகளும், அதற்கப்புறமிருந்த நகர்ப்புற விளக்குகளும் பிரகாசித்தன. 

ஆனால் இரவு ஏறிவிட்டதன் காரணமாகத் துறைமுக விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படவே மீதி விடப் பட்ட சில விளக்குகள் அளவு மீறி பிரகாசித்தன. 

அந்த இரவிலும் சுள்ளியாற்றில் படகுகள் சில வந்து சுங்கத்துறையில் நிற்பதையும் பார்த்து நிலக்கள்ளி, ‘சேர நாட்டுக்கு இணை ஏது?” என்று பெருமிதம் கொண் டாள். ”இந்தச் சமயத்தில் இந்த க்ளேஸியஸுக்குப் பதில் வேந்தனிருந்தால் இயற்கை இன்பத்தை எப்படியெல் லாம் அனுபவிக்க முடியும்?” என்று எண்ணிப் பெருமூச்சும் விட்டாள். 

அவள் அசைவு ஒவ்வொன்றையும் பெருமூச்சையும் க்ளேஸ்யஸ் கண்டானானாலும் அவன் ஏதும் பேசவில்லை. முற்றும் பேசாமடந்தையாகி கர்மவீரன் போல் தன் கடமையிலேயே கண்ணும் கருத்துமாகப் படகைச் செலுத்தி கடற்கரைக்கு அதைக் கொண்டுவந்தான். கரையருகில் வந்ததும், தான் நீரில் குதித்துபடகின் முகப்புக் கயிறுகளைப் பற்றிப்படகை மறைவில் இழுத்துவிட்டான். அப்பொழுதும் அவன் பேசவில்லை. படகை விட்டு அவளே இறங்கினாள் கரையை அடைந்து விட்ட காரணத்தால்.

அவள் தரையில் இறங்கி நன்றாக நின்று தனது மேலாடையை இழுத்துவிட்டுத் தலையைக் கோதிக்கொண்டதும், அவன் சரேலென்று யந்திரம் போல் திரும்பிக் கடற்கரையில் நடக்கலானான். அவளும் அவனுடன் பேசாமல் பின் தொடர்ந்தாள். அவன் கடற்கரை மணலில் மெது வாக நடந்து சென்றான். மணல் தாண்டியதும் முதல் நாள் கடல்வேந்தன் நடந்த சுள்ளியாற்றங் கரைப் பாதை ஓரமே நடந்தான். அவன் நடந்த இடம், திரும் யிய திசைகள் எல்லாமே நூற்றுக்கு நூறு கடல்வேந்தன் முறையாக இருக்கவே சிறிது நம்பிக்கையுடன் நடந்தாள் நிலக்கள்ளி, சிறிது தூரம் இப்படி நடந்ததும் அவன் சற்று வழியைவிட்டு விலகினான். வில்லம்பு இலச்சினை இல்லம் சற்று தூரத்தில் தெரிந்தவுடனேயே அதை நோக்கிச் செல்லாமல் சுள்ளியாற்றங்கரையை அடுத்திருந்த ஒரு சிறு மணற்குன்றின்மீது நின்றான். அங்கி ருந்தபடியே தனது குறுவாளை எடுத்து அந்த இருட்டில் வீசினான். ‘இருட்டில் குறுவாள் எப்படித் தெரியப் போகிறது? யாருக்கு அடையாளம் காட்டுகிறான் க்ளேஸி யஸ்?’ என்று அவள் நினைத்திருந்த சமயத்தில், குறுவாள் பிடியிலிருந்த வல்லூறின் மாணிக்கக் கற்கள் இரண்டும் நெருப்புப் பொறிகளைப்போல் சுடர்விடுவதைக் கண்டாள். அதன் விளைவாகத் தூரத்திலிருந்து நதியின் குறுக்கே யாரோ இறங்குவதையும் ஒரு படகு அக்கரை யிலிருந்து குறுக்கே வருவதையும் கவனித்தாள் நிலக் கள்ளி. படகும் வேகமாக ஊர்ந்து அந்த மணற்குன்றுக்கு முன்னாலிருந்த கரையில் ஒதுங்கியது. அதன் சிறு வெளிச் சத்தில் நற்கிள்ளி படகில் உட்கார்ந்திருப்பதைக் கண்ட நிலக்கள்ளி ‘எல்லாவற்றையும் கடல்வேந்தன் ஏற்பாட்டோடு தான் செய்திருக்கிறார்” என்பதைப் புரிந்து கொண்டாள். நற்கிள்ளியின் படகு வந்ததும் நிலக்கள்ளியை உடன் வரும்படி சைகை காட்டிய க்ளேஸியஸ் படகை நோக்கி நடந்தான். நிலக்கள்ளியும் அவனைப் பின்பற்றிச் சென்று அவனுடன் படகில் ஏறிக்கொள்ள படகு அக்கரையை நோக்கி நகர்ந்தது. அன்று கள்ளியாற்றில் பிரவாகம் நிதானமாகவே இருந்தாலும் கடலில் அதிக அவைகள் எதிர்த்து வராததாலும் படகுப் பயணம் எந்தவித சிரமமுமில்லாமல் நடந்தது. அக்கரைக்கு வந்ததும் க்ளேஸியஸுடன் இறங்கிய நிலக்கள்ளி, நற்கிள்ளி யும் படகைக் கரையில் இழுத்துவிட்டுத் தங்களுடன் இறங்கு வதைக் கண்டாள். அன்று நற்கிள்னி பாட்டு பாடாததை யும் பூர்ண மெளனம் சாதித்ததையும் பார்த்த நிலக்கள்ளிக்கு அவன் போக்கு விசித்திரமாயிருந்தாலும் அவள் அவனை ஏதும் கேட்கவில்லை. அவனும் நிலக்கள்ளியைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளாமல் மற்ற இருவருடன் நடந்தான். 

க்ளேஸியஸும் நற்கிள்ளியும் தன்னை யவனர் சேரிக்கு அழைத்துச் செல்வதைக் கண்ட நிலக்கள்ளி “என் தந்தையின் அரண்மனை இங்கு இல்லை” என்று முதன் முதலாகப் பேசினாள். 

“அஞ்சவேண்டாம் அமைச்சர் மகளே! அங்குதான் போகிறோம்” என்ற நற்கிள்ளி “இது சற்றே சுற்றுவழி” என்றான். 

“இப்படி ஏன் போகவேண்டும்?” எனக் கேட்ட நிலக்கள்ளி நின்ற இடத்தில் நின்றுவிட்டாள். 

“போனதும் காரணத்தை நீங்களே புரிந்து கொள் வீர்கள். பேசாமல் வாருங்கள்” என்று உத்தரவிட்ட நற்கிள்ளி மேலே நடந்தான் திரும்பிப் பாராமல் போய்க் கொண்டிருந்த க்ளேஸியஸைத் தொடர்ந்து. 

மேலும் பிடிவாதம் செய்வதில் பயனில்லை என்று அறிந்த நிலக்கள்ளி அவர்களைத் தொடர்ந்தாள். மறுபடியும் யவனர் சேரியில் சில வீதிகளைக் கடந்து ஒரு தென்னந் தோப்புக்குள் புகுந்த க்ளேஸியஸ் அந்தத் தோப்பைத் தாண்டியதும் அதன் முனையிலேயே நின்று அமைச்சர் அரண்மனையைக் கவனித்தான். 

அப்பொழுதுதான் அவர்கள் எச்சரிக்கைக்குக் காரணம் புரிந்தது நிலக்கள்ளிக்கு. அரண்மனையைச் சுற்றி பலமான காவலிருந்த அந்தக் காவலரை எச்சரித்த வண்ணம் சஞ்சயன் அரண்மனையைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். 

க்ளேஷியஸ் நகைத்தான் லேசாக. அந்த நகைப்பில் ஏளனமும் பயங்கரமும் கலந்திருந்தன. அடுத்து அவன் நற்கிள்ளியை நோக்கி “நற்கிள்ளி ! நீ இந்தத் தோப்பின் வடக்குக் கோடிக்குப் போய் அங்குள்ள முந்திரிக் கிளைகளை பலமாக அசை. அங்கு சத்தத்தைக் கிளப்பு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்” என்று உத்தரவிட நற்கிள்ளி அங்கிருந்து அகன்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் முந்திரிக் கிளைகள் சத்தத்துடன் அசைந்தன. ஒரு கிளை உடைந்த சத்தமும் கேட்டது. காவலர் சிலர் அந்தத் திசையை நோக்கி ஓடினர். 

க்ளேஸியஸ் நிலக்கள்ளியைத் திரும்பி நோக்கி “நீங்கள் இந்தப்புறமாக ஓடி மாளிகைக்குள் நுழைந்து விடுங்கள். உங்கள் தந்தையைப் பார்க்கும்வரை இதை எடுக்க வேண்டாம்” என்று கூறித் தன் மீதிருந்த பெரிய மாலுமி போர்வையொன்றை உதறி விரித்து அவள்மீது முடினான். 

அவன் சொன்னபடி ஓடி மாளிகையில் புக முயன்ற நிலக்கள்ளியை சஞ்சயன் இறுகப் பிடித்துத் தனது குறுவாளை அவள் கழுத்தில் அழுத்தி “பேசாமல் வா” என்று கூறி அவளை இழுத்துக்கொண்டு அரண்மனைக்குள் சென்றான். அங்கிருந்த முகப்புக் கூடத்தில் அமைச்சர் அழும்பில் வேளே நின்றுகொண்டிருந்தார். “அமைச்சரே! சஞ்சயன் திட்டமிட்டால் அது தவறாது. இதோ நீங்கள் எதிர்பார்த்த குற்றவாளி” என்று கம்பீரமாகக் கூறி, நிலக்கள்ளியின் உடலை மூடியிருந்த போர்வையை எடுத்து ஜாலவித்தைக் காரன் மாம்பழச் செடியைக் காட்டுவதுபோல் காட்டினான். 

செடிக்குப் பதில் தமது எதிரே நின்றகொடியைக் கண்ட அழும்பில்வேள் பெரிதாக நகைத்தார். நகைப்புக்குக் காரண மறியாத சஞ்சயன் திரும்பி நோக்கினான். அவன் முகத்தில் விரிந்தது ஏமாற்றமா? அதிர்ச்சியா? அசட்டுத்தனமா? விளங்களில்லை அமைச்சருக்கு.

– தொடரும்…

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *