கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 3,785 
 
 

நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற டேபிளில், ‘வெல்வெட்’ துணி விரிப்பில், அலங்கரித்த, பூச்சாடி வைக்கப்பட்டிருந்தது.

வங்கியின் பெயரும், அது துவங்கப்பட்ட ஆண்டும், மற்ற குறிப்புகளும் எழுதப்பட்ட, ‘பேனர்’ பின்புறம் தொங்க, மற்றொருபுறம், அன்று வங்கியில் இருந்து, விருப்ப ஓய்வு பெறும் வர்ஷாவின் புகைப்படமும், வாழ்த்தும் இடம் பெற்றிருந்தது.

இத்தனை நாளும், வங்கிக்கும், அதன் கிளை வங்கிகளுக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கியவள், வர்ஷா கோவர்த்தன்!

அவளின் மேற்பார்வையில் இந்த மூன்று ஆண்டுகளில் வங்கி, அளப்பரிய முன்னேற்றத்தையும், லாபத்தையும் ஈட்டியிருந்தது.

வர்ஷாவின் கண்டிப்பும், கறாரும் வங்கியின் முதலீடுகளுக்கு உகந்ததாக இருந்தாலும், ஊழியர்களுக்கு அவளின் பெயரைக் கேட்டாலே எரிச்சலாக இருக்கும்.

வர்ஷாவிற்கு முன் மேனேஜராக இருந்தவர் ஓய்வு பெற்ற போது, அவருக்கு அடுத்து பதவி உயர்வுக்கு காத்திருந்த நீலமேகம், ‘நான் தான் அடுத்த மேலாளர்…’ என்று மார்தட்டியபடி காத்திருக்க, ஜோனல் ஆபீசிலிருந்து, வர்ஷாவை நியமித்ததும், பெரும் ஏமாற்றமும், வெறுப்பும் அடைந்தார், நீலமேகம். ஆனால், வர்ஷாவோ, நிர்வாகம் எதிர்பார்த்தபடி தன் பணியை இரண்டாண்டுகளில் திறமையாய் செய்து முடித்தாள்.

வர்ஷாவிற்கு, பிரியாவிடை கொடுக்க, வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து பலர் வந்திருந்தனர்.

இளம் ஆரஞ்சு வண்ணத்தில், காட்டன் புடவையும், சிறிய மூக்கு கண்ணாடியும், மிதமான அலங்காரமுமாய், தனக்கான இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்தாள் வர்ஷா.

எல்லாரும் அவளை பிரமிப்பாய் பார்க்க, கூட்டம் துவங்கியது. முதலில் பேசிய சீனியர் அலுவலர் தாமோதரன், “கம்பீரத்தின் மறு உருவம், வர்ஷா மேடம். அவங்க, நம்முடைய மேலாளர்ன்னு சொல்றதை விட, நம் வங்கியுடைய மெய்காப்பாளர்ன்னு சொல்லலாம். அவருடைய ஓய்வு நமக்கு மட்டுமில்ல, வங்கிக்கும் மிகப் பெரிய வெற்றிடம்,” என்றார்.

இவர் தான், வர்ஷாவை பல முறை, ‘சனியன் புடிச்சவ… என்னோட திறமைக்கெல்லாம் நான் எப்படியோ இருக்க வேண்டியவன்; இந்த ராங்கிக்காரி பொட்டச்சிக்கு கீழ வேலை பாக்குறேன்; எல்லாம் என் தலையெழுத்து…’ என்றவர்!

அடுத்து பேசியவர், “பெண்களுக்கான அடையாளத்தை மாற்றி அமைச்சவங்க, வர்ஷா மேடம். உயர் பதவிக்கு வருகிற பெண்கள், தங்களுடைய இலக்குகளை, ஆண்களுடைய சிந்தனைக்குள் அடக்கி, தங்களையே சுருக்கி, முழுத்திறமையும் வெளிப்படுத்த தயங்கி வாழ்ற நிலையை தான், இதுவரை நாம பார்த்திருக்கோம்; அந்த பிம்பத்தை, உடைச்சவங்க வர்ஷா,” என்றார்.

இன்று இப்படி பாராட்டும் இவர் தான், எத்தனையோ முறை வர்ஷாவை, ‘அடங்காப்பிடாரி… நாம சொல்றத காதுல வாங்குறாளா பாரு… மேல் அதிகாரியா இருந்தா, இவ, நம்பள விட பெரியாளா ஆயிடுவாளா… இல்ல, தெரியாம கேட்கிறேன்… ஒரு பொம்பளைங்கறதாவது இவளுக்கு ஞாபகம் இருக்கா…’ என்று பொங்கியவர்.

மற்றொருவர் எழுந்து, “தன் தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி, துளியும் அக்கறை இல்லாம, ‘பணி நலமே, பெரும் நலம்’ன்னு வாழ்ந்தவங்க வர்ஷா மேடம். அவங்களுடைய சறுக்கல்கள், அவருடைய வாழ்க்கையில் இருந்ததே தவிர, வேலையில் இருந்ததில்ல… நிச்சயம், அவங்களுடைய இடத்தை, வேற யாரும் நிரப்ப முடியாது,” என்றார் வருத்தத்துடன்!

‘இவ எல்லாம் ஒரு பொம்பளையாடா… பொம்பளையா இருந்தா, புருஷன் கூட ஒழுங்கா வாழ்ந்திருப்பாள்ல… அவன பிரிஞ்சு வந்து, அவ பாட்டுக்கு இருக்கான்னா, எப்படிப்பட்டவளா இருப்பா… வாழ்க்கையில தோத்துட்டோம்ங்கிற காண்டுல தான் அடுத்தவங்க வாழ்றது புடிக்காம, கொன்னு, கொலை எடுக்குறா…’ என்று, பேசியவர் தான் இவர்.

அத்தனையும், காதில் வாங்கியபடி, புன்னகை மாறாமல், அமர்ந்து இருந்தாள் வர்ஷா.

அவள் மனதில், நிழற்படமாய், பழைய காட்சிகளும், இன்றைய பேச்சும் ஓடியது. அவளை, இந்த இடத்திற்கு கொண்டு வர, அவள் அப்பா பட்டபாடு, சில நொடிகள் மனதில் தோன்றி, மறைந்தது.
கணவன், குடும்பம், குழந்தை என, மற்றவர்களை போல, அவளுக்கும் இயல்பாக தான் நிகழ்ந்தது.

ஒரு சின்ன பிரச்னையால், இருவரும், 10 ஆண்டுகள் பிரிந்திருக்க நேர்ந்தது; இன்று, அந்த பிரச்னைகள் சரியாகி, இருவரும் இணைகிற சூழல் வந்ததால், தன் வேலையில் இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, கணவருடன் அமெரிக்கா சென்று, குடியேற போகிறாள்.

ஒவ்வொருவரும், மனைவி வர்ஷாவை பாராட்டும் போது, இதழில் சிரிப்போடு, அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தார், அவளின் கணவன் கோவர்த்தன்.

கடைசியில், வர்ஷாவை ஏற்புரைக்கு அழைத்தனர்.

கரம் கூப்பி, அனைவருக்கும் வணக்கம் கூறி, பேச ஆரம்பித்தாள்…

“மிகுந்த சந்தோஷமும், பெருமிதத்துடனும் உங்கள் முன் நிற்கிறேன். இந்த இரண்டரை ஆண்டுகளில், நான், எனக்கு இட்ட பணிகளை, முடித்து விட்டதாகவே கருதுகிறேன். அதேநேரம், எனக்கான பாராட்டுதல்களை கேட்ட போது, ஒருபுறம் மகிழ்ச்சியும், மற்றொருபுறம் அதற்குள் ஒளிந்து நிற்கும் போலித்தனத்தையும் நினைத்து வியக்கிறேன்,” என்றதும், முதுகுத்தண்டில் சூடு வாங்கியது போல், நிமிர்ந்து உட்கார்ந்தனர், பாராட்டி பேசியோர்.

தொடர்ந்து பேசினாள் வர்ஷா…

“என்னுடைய வாழ்க்கை வலியானது; அதுவும், உடலால் பலவீனப்பட்ட பெண்ணுக்கு, அந்த பயணம், எத்தனை கரடுமுரடானதுன்னு ஆண்களாகிய உங்களுக்கு தெரியாது. அந்த வலிக்கு ஆறுதலான வார்த்தைகள், வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெண்களுக்கு கிடைக்கிறதில்ல.

“ஒரு பெண் தனக்கு அதிகாரியா இருக்கிறதை, எந்த ஆணாலும் ஏத்துக்க முடியுறதில்ல; அதுதான் நிஜம். ஆனா, அவங்க பேச்சு மட்டும் பெண்ணீய சிந்தனை நிறைந்ததாகவே இருக்கும். சிலர், இதை வெளிப்படையா காட்டிக்கிறாங்க; பலர், அதை வெளிக் காட்டுறதில்ல. இதை தான், போலித் தனம்ன்னு சொல்றேன்.

“நான் சிறந்த நிர்வாகி; என் நிர்வாக திறமையால் இங்க பல கோடி ரூபாய், ‘டிபாசிட்’களையும், நம் வங்கிக் கிளைகளை முதல் தரமா உயர்த்தினேன்னும் என் சக ஊழியர்கள், நண்பர்கள் ஒத்துக் கொள்ள, நான், என் வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டியிருக்கு இல்லயா…” என்று அவள் புன்னகை மாறாமல் கேட்க, அவர்கள் தலை தாழ்ந்தது.

“ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவங்க திறமைய அங்கீகரிக்க, அவங்க, அந்த இடத்தில இல்லாம இருக்கணும்ன்னு எதிர்பாக்குறோம்; அப்ப தான், நம்மோட, ‘ஈகோ’ நிவர்த்தி ஆகும்ன்னு நம்புறோம்.

“நான் விடைபெறும் போது, என்னை சிறந்த நிர்வாகின்னு புகழ்ற நீங்க, நான் உங்களுக்கு நடுவே, அந்த சீர்த்திருத்தங்கள செஞ்சப்போ, மனசார பாராட்டி, இரண்டு வார்த்தை சொல்லி இருந்தா, நான், இன்னும் சிறப்பா செயல்பட்டு இருப்பேன்ல… அந்த ஆதரவ ஏன் நீங்க தர மறுத்தீங்க…

“பாராட்டோ, விமர்சனமோ அத, அவங்க இருக்கும் போது சொல்லி, மேம்படுத்த உதவாத போது, அவங்க அந்த இடத்தில இல்லாத போது சொல்லி என்ன பிரயோசனம்… அந்த வார்த்தைக்குத் தான் என்ன மரியாதை இருக்க போகுது?

“உங்க சக மனிதர்களோட திறமைய, வெற்றிய, மனதார பாராட்டுங்க; அவங்க குறைய, ஏளனம் செய்யாம எடுத்து சொல்லுங்க; அதுதான், ஆண், பெண் உறவுக்கான ஆரோக்கியமான வழிகாட்டி,” என்று பேசி முடித்த போது, அரங்கில் அமைதி நிலவியது. அவர்களின் தவறு, அவர்கள் மனதில் ஓங்கி அறைந்திருக்க வேண்டும்.

பின், அனைவரும் எழுந்து நின்று, ஒருசேர கைதட்டினர்.

“இப்ப மனசார சொல்றேன் மேடம்… எப்பவும் நீங்க வித்தியாச மானவங்க தான்; மறுபடியும், உங்கள பாராட்டுறதுல ரொம்பவும் பெருமைப்படுறோம்,” என்றார், குற்ற உணர்வுடன் நீலமேகம்.
இதை அங்கீகரித்து, அனைவரும் கைதட்டி, கரவொலி எழுப்பினர், வர்ஷாவின் கணவன் கோவர்த்தன் உட்பட!

– ஏப் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *