கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 1,774 
 
 

எனக்கு இந்த அபார்ட்மெண்ட் பிடித்துப் போனதற்கு காரணமே, மொட்டை மாடிக்குப் போனால், மூன்று பக்கத்திலும் கடலைப் பார்க்கலாம் என்பது தான்.

மும்பை கடற்கரையை ஒட்டிய குடியிருப்புகளின் விஷேசமே அது தான். ஆங்காங்கே கடலுக்குள் துறுத்திக் கொண்டிருக்கும் நிலப் பகுதிகள். அதில் அமைந்த வசதி படைத்தோரின் குடியிருப்புகள்.

இந்த மும்பைக்காரர்கள் கிரீக் என்கிறார்கள். காஸ்வே என்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரிவதில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சித்தது இல்லை.

மொட்டை மாடி எனக்கு பிடித்த இடம் என்றாலும், நினைத்த போதெல்லாம், மொட்டை மாடிக்குச் சென்று விட முடியாது. மொட்டை மாடிக்கான இரும்புக் கதவைப் பூட்டி, வாட்ச்மேன் சாவியை தன் பொறுப்பில் வைத்து இருப்பான்.

வசதி படைத்தோரின் குடியிருப்பு என்றா சொன்னேன். ஆமாம். ஆமாம். இந்த மும்பையில் வசதி படைத்தோர் கூட தனியாக ஒரு வீடு கட்டி, சொந்தமாக ஒரு மொட்டை மாடி வைத்துக் கொள்ள முடியாது. விலை அதிகம். எல்லோருக்கும் அபார்ட்மெண்ட் வீடு தான்.

நான் ஒரு தனி ஒருவனாய், குடும்பம் என்று எதுவும் இல்லாமல் இருப்பதால், எனது தனிமையைப் போக்க, மொட்டை மாடிக்கு அடிக்கடி போய் கடலின் அந்த ரம்மியமான காட்சிகளைப் பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த வாட்ச்மேன், நான் விரும்பும் பொதெல்லாம் அந்த மொட்டை மாடிக் கதவைத் திறந்து காண்பிப்பான்.

அந்த வாட்ச்மேன் என்னைப் போல் தனியாகத்தான் இருக்கிறான். பீகாரின் வடக்குப் பகுதியில், நேபாள எல்லையை ஒட்டிய ஒரு குக்கிராமம் அவனுடையது. ஒரே பெண் அவனுக்கு. கல்யாணம் செய்து கொடுத்து விட்டதாகச் சொல்லி இருந்தான். இந்திய எல்லையைத் தாண்டி, நேபாளத்திற்குள் இருக்கும் ஒரு கிராமத்தில் தன் பெண்ணைக் கொடுத்து இருப்பதாகவும், பாஸ்போர்ட், விசா ஏதும் இல்லாமல் இரு குடும்பத்தாரும் போய் வந்து கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருந்தான்.

“எப்போதும் மொட்டை மாடிக் கதவைத் திறந்தே வைத்தால் என்ன.. எதற்காக பூட்டி வைத்து இருக்கிறாய்” என்று நான் கேட்டதற்கு, அவனிடமிருந்து ஒரு அர்த்த புஷ்டியான புன்னகை ஒன்று பதிலாக வந்ததே தவிர பதில் ஏதும் வரவில்லை.

“என்ன சிரிக்கிறாய்.. பதில் சொல்லேன்..” என்று நான் அவனை கடிந்து கொண்டேன்.

“இல்லீங்க சார்.. நம்ம அபார்ட்மெண்ட்ல பசங்க இருக்காங்க.. பொண்ணுங்களும் இருக்காங்க..”

“அதுக்கு என்ன..”

“இல்லீங்க.. உங்க அசிஸ்டெண்ட் .. ஒரு நாள்..”

“பூமிகாவா.. அவளுக்கு என்ன..”

“அந்த ஐந்தாவது மாடியிலே இருக்காரே கிரிக்கெட் பிளேயர்.. அடிக்கடி டிவியிலே கூட வருவாரே..”

“ஜெயராம் குஸ்லானி.. அவருக்கு என்ன.”

“அவரும், பூமிகாவும்..”

முடிக்காமல் நிறுத்தினான். நான் அதற்கு மேல் எதுவும் கேட்க வில்லை.

பூமிகா எனது ஆய்வுக் கூடத்தில் பணி செய்கிறாள். எனது சமையலுக்கும் உதவி செய்வாள். சயான் மருத்துவ மனையில் டாக்டராக பணி புரிந்த நான், அறுபதாவது வயதில் ரிடையர்ட் ஆனவுடன் மருத்துவ பிராக்டீஸ் செய்வதில்லை என்றும், எனது அனுபவத்தை வைத்து மேலும் மருத்துவ துறையில் ஆராய்ச்சி செய்வது, கட்டுரைகள் எழுதுவது என்று முடிவு செய்து கொண்டேன்.

பூமிகாவுக்கு முப்பது வயது இருக்கலாம். காதல் திருமணம் செய்து, அது முறிந்து போனதாகச் சொல்லி இருந்தாள். குழந்தை ஏதும் இல்லை.

தனது செல் போனில் யாரிடமாவது பேசிக் கொண்டே இருப்பாள். சில சமயத்தில் ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்துக் கொண்டு, நான் கொடுக்கும் வேலைகளைச் செய்து கொண்டே பேசிக் கொண்டு இருப்பாள். அது பெரும்பாலும் ஆண்களின் குரலாகவே இருக்கும். அவளுடைய அந்த பேச்சு, தனது பகுதியில் உள்ள ஏழை மக்களின் தேவைகளைப் பற்றி இருக்குமே ஒழிய, தனக்கு ஏதாவது உதவி கேட்டோ, பணம் கேட்டோ இருக்காது.

அவள் ஒண்டிக்கட்டை. அவளுக்கு தேவை என்ன இருக்கப் போகிறது. மேலும் நான் நல்ல சம்பளம் தருகிறேன். சாப்பாடு கூட எனக்கு செய்யும் சமையலில் மீதியானதை சாப்பிட்டு முடித்துக் கொள்வாள்.

திறமைசாலிகளை, உதவி செய்பவர்களை தானே வலிய சென்று பாராட்டுவாள். உதவி செய்யக் கூடிய நிலையில் பெரும்பாலும் ஆண்கள் தானே இருக்கிறார்கள். இது ஆண்கள் டாமினேட் செய்யும் உலகம் தானே. அது தானே நிதர்சனம். நல்ல காரியமாக இருந்தாலும் ஆண்கள் தானே முன் வந்து உதவ வேண்டி இருக்கிறது. ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்.


அது கணேஷ் உத்சவ் காலம்.

இந்த மும்பையில் கோலாகலமாக பத்து நாட்களுக்கு மேல் நடக்கும். முதலிலேயே சொல்லி விட்டாள். தனது ஏரியாவில் ஒரு பெரிய பந்தல் போட்டு கணபதியை வைக்கப் போவதாகவும், அதற்கான நன் கொடை வசூல் செய்யப் போவதாகவும், சொல்லி இருந்தாள். வேலைக்கு வரப் போவதில்லை. பத்து நாட்களுக்கு விடுப்பு என்று சொல்லி இருந்தாள்.

எனது ஆய்வுக் கூடத்துக்கு வேண்டுமானால், பத்து நாட்களுக்கு விடுப்பு கொடுத்து விடலாம். ஆனால், ஓட்டல் சாப்பாடு பத்து நாட்களுக்கு என் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாதே. ஐந்து நாட்கள் தாக்குப் பிடித்தேன். முடியவில்லை.

பூமிகாவுக்கு போன் செய்து பார்த்தேன். எடுக்கவில்லை. கணேசுக்கான பஜனைப் பாடல்கள் சத்தத்தில் எனது போன் அடித்தது அவளுக்கு கேட்டிருக்காது என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு அவளைத் தேடி அவள் குடி இருப்பதாகச் சொல்லி இருந்த குடிசைப் பகுதிகளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னிடம் அவள் வீட்டு விலாசம் இல்லை.

மழையில் சேறும், சகதியுமாக இருந்த அந்த குறுகிய சந்தில் நடக்க ஆரம்பித்தேன். மும்பையின் குடிசைப் பகுதிகள் விசித்திரங்கள் கொண்டது. படித்து, சுமாரான வேலையில் இருப்பவர்கள் கூட அங்கே குடி இருப்பார்கள்.

வழியில் இரண்டு பக்கத்து வீட்டுப் பெண்கள் ஆங்கிலத்தில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில் சில கெட்ட வார்த்தைகளும் இருந்தன. இந்த குடிசைப் பகுதி மக்கள் எப்படி சரளமாய் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்ற பிரமிப்பில் அவர்களின் அந்த கெட்ட வார்த்தைகளை மன்னிக்க மட்டுமல்ல, பாராட்ட வேண்டும் என்றே தோன்றியது.

எதிரே வந்தவர்களிடம் பூமிகாவின் பெயரைச் சொல்லி விசாரிக்கும் போது, அனைவருக்கும் அவளைத் தெரிந்து இருந்தது. தன் பகுதியில் பிரபலமாய் அவள் இருப்பது புரிந்தது. அவளைக் கண்டு பிடித்து ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்பதைச் சொல்லி இன்று ஒரு நாள் மட்டும் வந்து சமையல் செய்து கொடுக்குமாறு சொன்னேன். சரி என்று அவள் சொல்லி விட்டு வந்து சமைத்து கொடுத்தாள்.

அவளிடம்,

“பூமிகா.. உன்னோட ஏரியாவிலே எல்லோருக்கும் உன்னைத் தெரிந்து இருக்கிறது. எல்லோருக்கும் நல்லது செய்கிறாய். நீ ஏன் தேர்தலில் நின்று, ஒரு வார்டு கவுன்சிலராக வரக் கூடாது. வார்டு கவுன்சிலர் பதவி என்பது சுயநல அரசியல் வாதிகளுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் சொந்தமாக இருக்க வேண்டுமா..” என்றேன்.

எனது பேச்சைக் கேட்டு ஆச்சர்யப் பட்டாள். பதில் எதுவும் சொல்ல வில்லை.


மற்றுமொரு நாள்.

“அங்கிள்.. உங்களுக்கு மும்பையின் குடிசை மாற்று வாரியத்தில் யாரையாவது தெரியுமா..” என்று கேட்டாள் பூமிகா.

“எதுக்கு.. நான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யும் போது, எங்க ஆஸ்பிட்டல் கட்டறதுக்கு ஒரு

இன்ஜினியர் வந்தாரு. இப்ப அவரு தான் அங்கே சிஈஓ. உனக்கு என்ன உதவி வேணும்.” என்றேன்.

“எனக்கு இல்லீங்க அங்கிள். எல்லாத்துக்கும் தான். எங்க குடிசைகளை இடித்து தள்ள, புல்டோஸர் வருதாமே.. உங்களுக்கு தெரியுமா..” என்றாள்.

என்னுடைய ஆய்வக ஆராய்ச்சி பணிகளை எல்லாம் நிறுத்தி விட்டு, பூமிகாவிடன் சென்று அந்த இன்ஜினியரை அறிமுகம் செய்து வைத்தேன்.

தன் பகுதி மக்களுடன் பல முறை சென்று அந்த இன்ஜினியரை சந்தித்ததின் பேரில் நல்ல படியாக ஒரு தீர்வு கிடைத்ததாகச் சொன்னாள் பூமிகா.

உடனடியாக குடிசைகள் இடிக்கப் படாது என்றும், ஏற்கனவே குடியிருப்பவர்களைப் பற்றி கணக்கு எடுக்கப் பட்டு, அவர்களுக்கு பட்டா போன்ற ஒரு சான்றிதழ் வழங்கப் பட்டு, டிரான்சிட் அக்கோமோடஷன் என்று சொல்லப் படும் மாற்று குடியிருப்புகளில் அவர்கள் குடி அமர்த்தப் படுவார்கள் என்ற ஒரு உடன்படிக்கை ஏற்பட்டதாகச் சொன்னாள்.

அடுத்த நாட்களில் புயல் மழை கொட்டித் தீர்த்தது.

வெள்ளத்தில் மும்பை நகரம் தத்தளித்தது.

தனது தகரக் கூரை பிய்த்துக் கொண்டு போய் விட்டதாகவும், மழை நீர் கூரை வழியே கொட்டுவதாகவும், மழை வெள்ளம் தரை வழியாகவும் உள்ளே வந்து விட்டதாகவும் சொன்னாள்.

அவளது வீட்டை பழுது பார்க்க பண உதவி செய்வதாகவும், அதை அவள் திருப்பிக் கொடுக்க வேண்டியது இல்லை என்றும் சொன்னேன். மறுத்து விட்டு சொன்னாள்.

“இல்லீங்க அங்கிள்.. என்னோட ஒரு வீட்டுக்கு நீங்க செய்யற உதவியை வாங்கிக் கிட்டா, மத்தவங்க என்ன ஆகறது. நான் ஒரு சினிமா நடிகரை கூட்டிக் கிட்டு வந்து காண்பிக்கப் போறேன். அவரு எல்லா ஜனங்களுக்கும் உதவி செய்யறதா சொல்லி இருக்காரு..” என்றாள் பூமிகா.

அடுத்த நாள் மொபைலில் அவளுடைய ஸ்டேட்டசை பார்க்கும் போது, ஒரு வில்லன் நடிகர் பெயரைப் போட்டு, “தேங்கஸ் பார் யுவர் ஹெல்ப்.. ஐ லவ் யூ..” என்று போட்டு இருந்தாள்.

நான் கேட்டேன் அவளிடம்,

“தேங்கஸ் போட்டது சரி.. அது என்ன.. ஐ லவ் யூ..” என்றேன்.

“எங்க ஜனங்க எல்லாத்துக்கும் உதவி செஞ்சி இருக்காரு. மொத்தம் பத்து லட்சம் செலவு செஞ்சாரு..” என்றாள்.

“அந்த வில்லன் நடிகருக்கு நல்ல பேர் இல்லியே..பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசம்னு கேள்விப் பட்டேன்.” என்றேன்.

அவள் எதுவும் பதில் சொல்ல வில்லை.

“நீ அவனை தனியாக அவனைச் சந்தித்தாயா..”

இதற்கும் அவள் பதில் சொல்ல வில்லை.

“நம்ம அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் சொன்னான்.. அந்த ஐந்தாவது மாடி கிரிக்கெட் பிளேயர் கூட, நீ மொட்டை மாடியில..”

நான் முடிக்க வில்லை.

“ஆமா. அதுக்கென்ன.. கிரிக்கெட் ரொம்ப அருமையா வெளையாடுவான்.. சம்பாதிக்கற பணத்தில ஏழைகளுக்கு உதவி செய்வான்..” என்றாள்.

அதற்குப் பிறகு அவளுடைய சொந்த விஷயங்களைப் பற்றி நான் பேசுவது இல்லை.

நாட்கள் ஓடின.

எனது மருத்துவ ஆராய்ச்சி முன்னேறிக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் வெளிப்படும் கெமிக்கல்ஸ் என்னுடைய உடல் நிலையைப் பாதித்தது. சதா இருமிக் கொண்டே இருந்தேன். பூமிகாவும் என் உடல் நிலையைப் பற்றி கவலையுடன் விசாரித்தாள். நான் ஏதோ சொல்லி மளுப்பினேன்.

மும்பைக்கு வார்டு கவுன்சில் தேர்தல் அறிவிப்பு வெளியானது. நான் பூமிகாவிடம்,

“நீ கவுன்சிலர் தேர்தலுக்கு நில்லு..” என்றேன்.

“நானா.. ஏகப் பட்ட பணம் செலவு ஆகுமே.. பணத்துக்கு நான் எங்கே போறது..” என்றாள் பூமிகா.

“செலவைப் பத்தி கவலைப் படாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்றேன் நான்.

– காவியா தமிழ் 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *