தேடிச் சோறுநிதந் தின்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 289 
 
 

1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இரண்டு நாட்களாக அவள் வகுப்புக்கு வரவில்லை என்பதை கலகலப் பின்றி இருந்த வகுப்பு சொல்லிக் காட்டியது. சிணுங்கிய கைபேசியை எடுத்தேன். மறுமுனையிலே சரண்யா. 

“ஏன் வகுப்புக்கு வரேல்லை சரண்யா….?” 

“சேர்…. நான் வவுனியாவிலை நிக்கிறன்..!” ஏனோ அவளது குரலிலே உற்சாகம் குன்றியே இருந்தது.  

“அங்கை என்ன செய்யிறீங்கள் சரண்யா?” ஆச்சரியத்தோடு கேட்டேன். 

“காயப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்யிறன் சேர்” அவளின் பதில் குழப்பத்தையே தந்தது. 


சரண்யாவும் அவளது அம்மாவும்  5.30 மணி அளவில் வருவதாகவே கூறியிருந்தார்கள். பம்பலப்பிட்டியிலேயே அந்தச் சந்திப்பு என்பதால் 100ம் இலக்க பேரூந்திலே ஏறிக் கொண்டேன். பேருந்தோ அளவுக் கதிகமான ஆட்களால் நிறைமாதக் கர்ப்பிணியாக நெளிந்தது. மெதுவாகப் போய்க் கொண்டிருந்த அந்த வண்டி ஏனோ தெரியவில்லை திடீ ரென குலுங்கிக் கொண்டு நின்றது. என்னவோ ஏதோவென்று யன்னல் வழியே பயணிகள் எட்டிப்பார்த்தார்கள். சவோய் திரை அரங்குக்கு முன்பாக உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடிக்காகவே இந்தச் சிறப்புக் குலுக்கல் என்றதும் பலர் தமது முகத்தைச் சுழித்துக் கொண்டார்கள். பயணிகள் அனைவருமே வாகனத்துக்கு வெளியே இறக்கப்பட்டு அக்குவேறு ஆணிவேறாக கழற்றப்பட்டார்கள். தோளிலே தொங்கிய பையிலிருந்த குறிப்புப் புத்தகத்தினை எடுத்து மீண்டும் ஒரு முறை முகவரியை சரி பார்த்துக் கொண்டேன். 2ம் குறுக்குத் தெருவுக்குள்ளே நுழைந்து அவர்கள் குறிப்பிட்ட அந்த உணவகத்திலே நீண்டநேரமாக காத்திருந்தேன். நேரத்தைப் பார்த்தபோது 6 மணிக்கு இன்னும் பத்து நிமிடம் என்று கடிகாரம் கோபித்தது. இவ்வளவு நேரமாகியும் கூட ஏன் வரேல்லை? கைப்பேசியில் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும்கூட தொடர்பு கிடைக்க வில்லை. 


குடிப்பதற்கு கோப்பி ஒன்றை சர்வரிடம் சொல்லி விட்டு சரண்யாவிடம் பேச்சுக் கொடுத்தேன். உணவகத்திலே கூட்டம் குறைவு என்பதால் இடைஞ்சல் இல்லாமல் கதைக்கக் கூடியதாக இருந்தது. 

“சொல்லுங்கோ பயணம் திருப்தியா இருந்ததா….” நானாகவே பேச்சை ஆரம்பித்தேன். 

“வேணுமெண்டதை அம்மாட்டையே கேளுங்கோ. அவவும் என்னோடை அங்கை அந்த முகாமுக்கு வந்தவ” தாயை நோக்கி விரல் நீட்டினாள். 

பேசுவதற்கு அவள் தயங்குகிறாள் என்றே எனக்கு விளங்கியது. முதலில் தாயோடை பேசுவம். பிறகு கொஞ்சம் கொஞ்சமா சரண்யாவை பேச வைக்கலாம் என்று நம்பினேன். எனது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு சரண்யா பேசத் தொடங்கினாள். அழுகை வெடித்துச் சொற்களாக வெளிவந்து கொண்டிருந்தது. வவுனியாவுக்கான பயணம் என்பது நினைத்ததை விடவும் மிகச்சிரமமாகவே இருந்தது. அகதி முகாம்கள் பற்றி கதை கதையாக ஏராளம் கேள்விப்பட்டிருந்தாலும் கூட நேரடி அனுபவம் என்பது வித்தியாசமானதாகவும் சிரமமாக வுமே அவர்களுக்கு இருந்தது. வவுனியாவுக்கு அண்மையாக உள்ள ஒரு சிறு புகையிரத நிலையத்திலே புகைவண்டி நிறுத்தப்பட்டது. அங்கே சில சிறுவர்கள் கைகளிலே கூடைகளோடு ஏறிக் கொண்டார்கள். அவர்கள் கைகளிலே மிட்டாய் பைகளும் வடை, சோடா போத்தல்களுமாக இருந்தன. அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் “முறுக்கு…. முறுக்கு….” என்று கத்திக் கொண்டு எமை நோக்கி முன்னேறி தள்ளாடித் தள்ளாடி வந்தான். ஓடும் ரயில் என்பதால் அவன் கையிலிருந்த கூடையுடன் நடப்பதற்குச் சிரமப்பட்டான்.

“முறுக்கு….. முறுக்கு….” என்று அவன் கூவிய சத்தம் வண்டியின் இரைச்சலிலே கேட்கவில்லை. பாவம் பள்ளிக்கூடம் போக வேண்டியவன் காலக் கொடுமையாலே முறுக்கு விக்கிறான். வயிற்றுப் பசி அவனது அறிவுப்பசியை தின்று விட் டது. இப்படியான சிறுவர்கள் ஒன்றா…..! இரண்டா…? சிறுவர் உரிமைகள் சிறுவர் துஷ்பிரயோகம் எண்டு வாய்கிழியக் கத்துபவர்கள் கூட இங்குள்ளவர்களை ஏன்தான் கண்டுகொள்வதில்லை…? 

நினைக்க நினைக்க அவளுக்கு கவலையாவே இருந்தது. அவனுக்குக் கிட்டப் போய் நூறு ரூபாவிற்கு முறுக்கு வாங்கினாள். அதுகூட முறுக்குக்காக அல்ல. அவனது பரிதாப நிலமைக்காகவேயாகும். அப்போதைக்கு அவளாலே செய்ய முடிந்தது அது ஒன்று மட்டும்தான். 


மருத்துவர்களோடு சேர்ந்து நின்று பணிபுரியக்கூடிய வாய்ப்பு ஏராளமான தடைகளுக்குப் பிறகு இன்றுதான் அவளுக்கு கிடைத்தது. சிகிச்சைக்காக காத்திருந்த ஏராளமான சிறுவர்களைப் பார்க்கையிலே காயம் பட்டுப்போன முயல்களைப் பிடித்து முறித்துப் போட்டு கூட்டில் அடைத்ததைப் போலவே அவளுக்குத் தோன்றியது. 

அந்நேரம் பார்த்து வாசவிலே பெரும் சலசலப்பு. ஆட்களை விலக்கிக் கொண்டு பார்த்தாள். நெஞ்சு வலியிலே துடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியை சிலர் தூக்கியபடி ஓடி வந்தனர். அந்த சிறுமியை மேசையிலே கிடத்தி சிகிச்சையை ஆரம்பித்தபடி சிறுமியோடு வந்த பெண்ணிடம் அவளைப்பற்றிய தகவலைப் பெற்றாள். பெயர் சாலினி என்றும் உயிர் காப்பதற்காக எல்லோரும் தப்பித்து ஓடும்போது பெற்றோரை தவறவிட்டு விட்டாள் என்றும் அவளுக்கு உறவினர் என்று யாரும் இல்லை என்பதால் அந்த வயசுபோன பெண்மணியே சாலினியை பராமரிப்பதாகவும் அந்த அம்மா சொன்னாள். நெஞ்சுக்குள் கூடு. நீர் கொட்டியது போல கேட்க கேட்க அவளுக்கு கஸ்டமாகவே இருந்தது. 

போர் என்பது இந்த சந்ததியோடு முடிந்தாலும்கூட அதன் பாதிப்புக்கள் அடுத்த சந்ததியையும் காயப்படுத்தி விட்டுத்தான் செல்கிறது. கூடாரம் ஒன்றுக்கு வெளியே நின்றிருந்த சிறுவர்கள் தேங்கி நின்றிருந்த வெள்ளத்திவே கப்பல் ஒட்டி விளையாடிக் கொண்டி ருந்தார்கள். வேறென்ன செய்யலாம் அவர்களால், நீந்தி விளையாட இங்கென்ன நீச்சல் தடாகமா அவர்களுக்கு இருக்கிறது. இரண்டு கால்களையும் இழந்திருந்த சிறுவன் ஒருவன் துரத்தே நின்று கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான். எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அந்தச் சிறுவனைப் பார்த்துக் கேட்க வேண்டும் போல ஒரு அவஸ்த்தை மனதை வாட்டிக் கொண்டாலும் அதைப்பற்றி அவனிடம் கேட்கவில்லை அவள். சிலவேளை அவன் அவற்றை எல்லாம் மறந்திருக்கலாம். ஏன் வீணாக அவனைக் காயப்படுத் தோணும் என்று நினைத்தவள் அவன் தலையைத் தடவிவிட்டு சென்றாள். 

படிக்கட்டுகளிலிருந்து இறங்கி வரும் போதே குழந்தையின் அழு குரல் வந்த திசைநோக்கி தனது பார்வையை செலுத்தினாள். அந்தக் குழந்தையின் தலையிலே போடப்பட்டு இருந்த பாரிய பண்டேஜ் கட்டினூடாக இரத்தம் கசிவதை அவதானித்தாள். எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தான் அந்தப் பெண்குழந்தையை தூக்கி மடியிலே வைத்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கருகிலே நின்ற வைத்தியரும் தாதி ஒருத்தியுமாக மருந்துக் கலவைகளைத் தயார் செய்தபடிக்கு பண்டேஜ்மாற்ற தயாராகிக் கொண்டிருந்தார்கள். “பிள்ளைக்கு என்ன ஆச்சு?” சரண்யா கேட்டாள். 

“தலைக்காயம் இன்னும் மாறேல்லை அதனாலைதான் காய்ச்சலும் வலிப்பும் அடிக்கடி வருகுது போல’ தாதியே பதில் தந்தாள். 

“சிஸ்ரர் இவளைப் பாரமரிக்க வேற யாரும் இல்லையா”

சிஸ்டர் இல்லை என்றாள். 

“அப்ப அவள் அனாதையா” 

“உலகத்திலை இன்னொரு மனுசன் இருக்கும்வரை யாரும் அனாதை இல்லையே”. மருந்தை வாங்கி குழந்தைக்குப் பருக்கிக் கொண்டே சரண்யா சொன்னாள்.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பராமரிக்க வேண்டிய நிலமை. இதுன்ர காரணம் யார் எண்டதை தெய்வம்தான் வந்து கூற வேணும் என்று கூறியவள், இனியும் அங்கிருந்தால் கண்ணீர் வெளியே கொட்டிவிடுமோ என்றஞ்சி தனது அறைக்குச் சென்று கட்டிலிலே விழுந்து முகம் புதைத்து அழுதாள். 


ஹோட்டலில் இப்போது முன்பைவிட கூட்டம் அதிகரித்திருந்தது. அவர்களுக்கிடையே பூத்திருந்த மௌனத்தை நான்தான் உடைத்தேன். 

“எப்ப அமெரிக்க போறீங்கள்…?” 

“வாற கிழமை போறன் சேர். ஆனா அதுக்கு முன்னாலை திரும்பவும் ஒருக்கா வவுனியாவுக்குப் போக வேண்டி இருக்கு” 

“திரும்பியுமா…?” புருவங்களிலே ஆயிரம் வினாக்கள் துளிர்க்க அவளைப் பார்த்தேன். அதற்கான விளக்கத்தினை அவளது தாயே தந்தார்.
 
“இரவெல்லாம் சரண்யா தூக்கமில்லாம கஸ்டப்படுறா மாஸ்டர்..?’ 

“ஏன் ஏதாவது பிரச்சனையே” 

“அவள் சொன்னாளே ஒரு சாலினி… முகாமிலை இருக்கிற அந்தக் குழந்தையை நினைச்சு நினைச்சு சரண்யா சரியா கவலைப்படுறாள்… அதனாலை அந்தக் குழந்தையை தன்னோடை தங்கச்சியா தத்தெடுக்க விரும்புறாள்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளின் கண்களும் பனித்தன. 

“அம்மா… … உண்மையை சொல்ல வேணுமெண்டா….கொஞ்ச நாள்லை எல்லாமே மறக்கப்பட்டு விடும். மானாட மயிலாட பார்த்திட்டு தொலைக்காட்சி யோடை சேர்ந்து சிரிச்சுக்கிட்டே இருப்பினம். உறுப்புகளை இழந்த அந்த பிள்ளைகளைக் காக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்து எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக கழன்று விடுவினம்…! 

சாலினி போன்ற குழந்தைகளின் எதிர்காலம்…சம்மந்தருக்குப் பால் குடுத்த சிவன் வந்துதான் பதில் சொல்லவேண்டி வரும் எண்டுதான் நான் இது நாள்வரை நினைச்சிருந்தன். 

ஆனா அதெல்லாம் பிழையெண்டு இப்ப உணர்றன்” 

“நீங்கள்… நீங்கள்தான்” என்ற படி விடைபெற்றுக் கொண்டு வீடு நோக்கிப் போகையிலே மழை தூவி அணைத்துக் கொண்டது மேகம். 

– இருக்கிறம் 2010.05.15

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *