திரைக்குப் பின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 3,699 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

குஷ்டரோகி என்று சொல்லப்படும் இந்த ராஜகுமாரியிடம் என் மனம் ஏன் இப்படி லயித்து விட்டது! எவ்வளவு சுந்தரிகள் என்னுடைய கவிதையைக் கேட்டுப் பரவசமாகி என் கண் பார்வைக்கு ஏங்கி இருக்கிறார்கள்! அவர்கள் யாரையும் நாடாமல் என் மனம் இப்படி. இப்போது வேதனைப் படுவது வீபரீதமாகவல்லவோ இருக்கிறது!

நாள் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது இந்தப் பெண் திரைக்கு அப்பாலிருந்து என்சொற்களை மட்டும் கேட்டு எப்படிப் பாடத்தைக் கிரகித்துக் கொள்ளுகிறாள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. என் வாய்ச்சொல்லுக்கும் அதிகமான என் முகபாவத்தை எப்படி அவன் ஊகிக்கிறாள்? நான் சொல்லப்போகும் பாடத்தையும் அவள் முன் கூட்டியே அறிந்தவள்போல, நாள் விளக்குவதில் கூடத் தெளிவாகாத பொருளை உணர்ந்து, என் கேள்விக்கு நான் எதிர்பாராத பதிலை அளிக்கிறானே! அவளுடைய பதில் எனக்கே என் வாக்கின் முழுப் பொருளை உணர்த்துவதாக இருக்கிறது. அதிலிருந்து தான் நான் சொன்ன சொல்லின் மகத்துவம் எனக்கு விளங்குகிறது.

இப்படி என் வாக்குக்கு அவள் அர்த்தம் சொல்லுவதுடனா நிற்கிறாள்? இல்லை! அது மேலே எப்படி வளர வேண்டும் என்ற குறிப்பைக்கூட எனக்குக் காட்டுகிறாள். ஏன். இவளுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பிறகுதான், எனக்கு உண்மை யாகக் கற்பனை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இதற்கு முன்பெல்லாம் ஏதேதோ காவியம் இயற்றினேன். அவற்றை இப்போது மறுபடியும் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது. அவற்றிற் காகத்தான் உலகத்தார் என்னைக் கவி என்று போற்றுகிறார்கள். அவற்றில் ஒன்றுமில்லை என்று எனக்கு இப்பொழுது தெரிகிறது. ஏதோ சில அழகிய வார்த்தைகளை அடுக்கி எமாற்றி யிருக்கிறேன். என்னையும் உலகையும்.

அன்று, ‘பெண் உள்ளம் வெண்மை போன்று தூயது’ என்று சொன்னேன்.

அவள் அதை உடனே விளக்கி, ‘ஏழு வர்ணங்களை அடக்கிக் கொண்டிருக்கிற வெண்மை போன்றது பெண் உள்ளம் என்றுதானே சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டான்.

திடீரென்று எனக்குத் தெளிவு ஏற்பட்டது. பெண்ணிடமிருந்தே பெண் உள்ளத்தைப் பற்றி அறிந்தேன். ‘அச்சம், பயிர்ப்பு, நாணம், மடமை என்ற குணங்கள் பெண்களுக்கு இயற்கை அணிவித்த ஆபரணங்கள்’ என்றேன்.

‘இயற்கை என்று எதைச் சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டாள்.

‘பெண் இயற்கை’ என்றேன்.

‘பெண் இயற்கை பெண்ணுக்கு அந்த ஆபரணங்களை அணிவித்திருக்கிறது என்பதை நான் உண்மையாக நம்புகிறேனா?’ என்று கேட்டாள்.

‘சந்தேகமென்ன?’ என்றேன்.

‘ஆபரணம் என்ற செயற்கையைக் கொண்டு இல்லாததை இருப்பது போல் காட்டும் கருவிதானே அது?’ என்று கேட்டாள்.

நாள் ‘ஆமாம்’ என்று ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று.

‘அப்படியானால் பெண்ணிடம் இல்லாததை இருப்பதுபோலக் காட்டத்தானே அச்சம், நாணம் முதலியவற்றைக்கொண்டு பெண் இயற்கை அவளை அலங்கரித்திருக்கிறது? ஆகையால் பெண்ணிடத்தில் அச்சம், நாணம் – இவை இல்லை என்றல்லவா ஆகிறது? பெண் இயற்கை என்பது அதனால் ஒரு போர்வை – அவ்வளவுதானே! பெண் இயற்கை என்று அவனிடம் தென்படுவது அவள் இயற்கையல்ல. உண்மையில் – அப்படித்தானே சொல்லுகிறீர்கள்?’ என்றாள்.

‘அவற்றால்தான் பெண்ணிடம் மனிதனுக்கு மோகம் ஏற்படுகிறது’ என்று நான் மேலே சொல்லப் போகுமுன் திடீரென்று நிறுத்திக் கொண்டேன். ஏனென்றால் நான் சொல்லப்போகும் வார்த்தைகளுக்கு, அவள் என்ன பொருள் கூறப்போகிறான் என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

‘ஆண்பிள்ளை தன்னை விரும்புவதற்காகவும், இடைவிடாமல் அவன் தன்னைக் கோருவதற்காகவும், பெண் அச்சமும், நாணமும் கொள்ளுகிறாள். தனது உள்ளத்தின் தைரியத்தையும், உணர்ச்சி வேகத்தையும் வெளிப்படுத்தினால் மனிதன் தாங்கமாட்டான் என்றே தன்னை அடக்கிக்கொள்ளுகிறாள் பெண்!’ – இப்படித் தான் அவள் பொருள் கூறுவான்!

உண்மையை அவளே வினக்கிக் காட்டிவிட்டான் போல எனக்குப் படுகிறது. தன்னுடைய ரகசியத்தை என் சொற்களின் மூலமாகவே அவள் வெளிப்படுத்தி விட்டாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அவளுடைய அழகைக் கண்டால் நான் தாங்கமாட்டேன் என்றுதான் அங்கஹீனம் கொண்டவன் போல் திரைக்குப்பின் இருக்கிறாளோ? அவள் சொற் களின் வேகத்தையும் உணர்ச்சியையும் நான் தாங்க மாட்டேன் என்றுதான் என் சொற்களைக் கொண்டு அவள் தன் பொருளை விளக்குகிறானோ?

அல்லது-? தனது அங்கஹீனம் உள்ளத்தின் பலத்தை மறைத்து நிற்கிறது என்று சூசனை செய்கிறானோ?

இல்லையே! அவள் அங்கஹீனமாகக்கூட இருக்க முடியாது. நான் இத்தனை நாட்கள் கேட்ட கேள்விகளுக்கு அவள் அளித்த பதில்களை ஒன்று சேர்த்து நினைத்துப்பார்த்தால் அவள் சர்வாங்க சுந்தரியாக அல்லவா என் கற்பனையின் முன் நிற்கிறாள்! அவள் திரைக்குப் பின்னா லிருந்த வீசிய பதில்களில் ஒவ்வொரு தடவையும் ஒவ்வோர் அங்கமும் சித்திரச் சலாகையில்போல, ஓவிய உருவம் கொண்டது – இன்று கடைசியாக அவள் முழுவடிவமும் பரிபூரணமான யௌவனத்தின் செருக்குடன் என்முன் தென்படுகிறது! நாள் கேட்ட கேள்விகள். ‘திரைக்குப்பின் இருக்கும் பெண்ணே, எனக்குத் தரிசனம் கொடு!” என்று கேட்டதுபோல் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவன் அந்தப் பதில் அளித்தாள்.

‘என் பாட்டைப் பாட முடியுமா? என்று கேட்டேன். சதங்கை ஒலி இருபாதங்களிலிருந்தும் ஒலியும் எதிரொலியும் போலக் கிளம்ப, அவள் எழுந்து சென்று வீணையை எடுத்து வந்து உட்கார்ந்து, சுருதி சேர்த்து, வாசித்துக்கொண்டே பாடினாள். ஒரு கேள்விக்கு எவ்வளவு பதில் அளித்துவிட்டான்! கால், கை, முடமல்ல; காது கூர்மையாக இருந்தது; கண் பார்வையிலும் தோஷமில்லை! இந்த மாதிரித் தன்னைப் பற்றி யாவற்றையும் தெரிவித்தான்!

இனி இந்தத் திரை இருக்கத் தேவை இல்லை! அரசனுடைய மதி யின்மைபோல இது இங்கே நிற்கிறது; அவ்வளவுதான்! நான் அவளை என் எதிரே பார்க்கிறேன். என்னுடைய கற்பனைக்குக் காவியமாக இருப்பதால்தான் அவளிடம் எனக்கு இவ்வளவு மோகம்.

யாமிளீ திலகம்! நீ இனிமேல் அந்தத் திரையின் பின்னால் இருக்கத் தேவையில்லை. திரையை அகற்று! நீ நன்றாக எனக்குத் தென்படு கிறாய். உன்னை நேரில் கண்டாவ் தாங்கமாட்டேன் என்பது இனிமேல் இல்லை. இப்பொழுது பார்க்காமலிருப்பதைத் தாங்க முடியவில்லை. என்னை நீ பார்க்க முடிகிறதா?

2

இதற்குமுன் சங்கீதம் கற்றேன், சித்திரம் கற்றேன், நாட்டியம் கற்றேன்- அப்பொழுதெல்லாம் எனக்கு இந்த மாதிரி ஒன்றும் ஏற்பட்டதில்லை. இந்தக் கவிஞர் திரைக்கு அப்புறம் இருந்துகொண்டு ஏதேதோ கேள்வி களைக் கேட்டு என் உள்ளத்தைத் தட்டி எழுப்புகிறார். தகப்பனார் சொல்வதுபோல இவர் குருடரா?

பில்ஹணருடைய காவியங்களைப்பற்றிப் பிரஸ்தாபம் என்னிடம் வந்திருக்கிறது; ஆனால் அவரைப் பற்றிய பிரஸ்தாபம் ஒன்றும் என் காதில் விழாமல் தகப்பனார் தடுத்துவிட்டார். அந்தக் காவியங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் இங்கே எனக்குப் பாடம் சொல்லும்போது விகசிக்கும் அளவு, அந்தக் காவியங்களில் அவருடைய கற்பனை எங்கேயும் விரிய வில்லை. அவர் என்னைக் கேட்கும் கேள்விகளே பதில்களையும் கூடவே கொண்டுவருகின்றன-சொல். பொருளைக் கூடவே கொண்டுவருவது போல!

என்ன கேள்விகள்! காலையில் கமலத்தின்மேல் வந்து பாயும் சூரிய கிரணங்களைப்போல என் உள்ளத்தின்மேல் பாய்ந்து அதன் ஒவ்வோர் இதழையும் விரித்துவிட்டனவே அவை! இனி, திரை மறைக்க வேண்டிய தொன்றும் என்னிடம் இல்லை. என் தந்தையின் பேதைமைதான் என்ன? திரைபோட்டுத் தடுத்து என் உள்ளம் பறிபோகாதபடி செய்து விட்டதாக எண்ணுகிறார்.

அவர் குருடராக இருந்தால் திரை ஏன் போட வேண்டும்? அவர் என்னைப் பார்க்க முடியாது. நான் அவரைப் பார்க்கக் கூடாது என்றா? ஏன், எதற்காக? இனிமேல் எனக்கு அவரைப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லையே! பார்த்துப் புதிதாக, நான் அறியாததை அவரிடம் என்ன காணப்போகிறேன்?

அவர் குருடராக இருக்கமுடியாது. அன்று, ‘இரவிற்கு எது அழகு?’ என்று கேட்டேன்.

‘அதோ வெளியே பிரகாசிக்கிற பூரண சந்திரனே இரவின் நெற்றியில் விளங்கும் திலகம்’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டு விட்டது. ‘யாமினிதிலகம்-‘ என்ற பெயரையே சொன்னார். ‘மனித உள்ளமாகிய இரவுக்குப் பெண்தான் திவகம்’ என்றார்.

‘மனிதனுக்குக் கண் இல்லை’ என்றேன் ஒரு தான்.

‘மனிதனுக்குக் கண் எதற்காக?’ என்று கேட்டார்.

‘பார்க்கவேண்டாமா?’ என்றேன்.

‘பெண்ணைத் தவிர வேறு எதைப் பார்க்கப் போகிறான்? பெண்ணை யும் அவன் பகலில்கூடக் கண்ணெடுத்துப் பார்க்க அவன் கண்களில் சக்தி இல்லை; கூசுகின்றன. ஆகையால்தான் இரவின் மறைவில் மனிதன், திருடன் போலப் பெண் உள்ளத்தைக் கவருகிறான்-‘ என்றார் அவர்.

அதெல்லாம் அவரிடம் ஒரு குறையுமில்லை. அவர் கவிஞர்! தெருவில் பாடுகிறவர்! நாடோடி! பித்தன்! – நான், ராஜகுமாரி! அரண்மனைக் கூட்டில் அடைப்பட்டிருக்கும் கிளி! எனக்கும் அவருக்கும் நடுவில் எந்தக் காலமும் ஒரு திரை இருக்கிறது. ஆகையால் பத்திரம்!” என்று என் தகப்பனார் எச்சரிக்கையாக இந்தத் திரையை இட்டிருக்கிறார் – அவ்வளவுதான்!

சுவரேறிக் குதிக்கும் சொல்லுக்கு, முதலில் இடம் கொடுத்துவிட்டு இந்தப் பயனற்ற திரையைப் போட்டு ஏன் அவதிப்படுகிறார் தகப்பனார்? குரலை உள்ளேவிட்டால் கவிஞர் பின் தங்கிவிடுவாரா? குரல் என் காதில் பட்டபிறகு – என் உள்ளத்தில் பட்ட பிறகு – அதன் பிறப்பிட மாகிய கவிஞர் படாமல் இருப்பரா? ‘அம்பு பாய்ந்தால் என்ன?” ‘வேடன் தான் வெளியே கண்ணில் படாமல் இருக்கிறானே!” என்று சொல்லுவதுண்டா?

உருவத்தைப் பார்க்காவிட்டால் உள்ளத்துக்கு ஒன்றுமில்லை என்றா என் தகப்பனார் நினைக்கிறார்? அப்படி அவர் நினைத்தால் அதற்கு நேர் விரோதமாகத்தான் இப்பொழுது நேர்ந்துவிட்டது. உருவம் கண்ணில் படாததாலேயே உள்ளங்கள் இரண்டும் ஒன்றையொன்று கண்ணாரக் கண்டு கலந்துவிட்டன!

ஆமாம்! இனிமேல் நான் மனசை ஏமாற்ற வேண்டிய அவசிய மில்லை: முடியவும் முடியாது! கண்காணாத கவிஞரிடம் நான் காதல் கொண்டு விட்டேன் என்பது ஒளிக்கமுடியாத உண்மை. ‘ஒட்டும் இரண்டு உள்ளங்களின் தட்டில்’ – ஒரு காவியம் பிறந்துவிட்டது. அதன் சொல் அவர் பொருள் நான்! இனி எங்களை எந்தத் திரையும் பிரித்து வைக்க முடியாது!

இந்தத் திரையை அகற்ற இன்று எனக்குத் தைரியமும், உணர்ச்சி வேகமும் வந்துவிட்டன. என் அச்சத்தையும் நாணத்தையும் இதுவரை யில் இந்தத் திரையில் மறைத்து வைத்திருந்தேன். அவை இன்று இருந்த இடம் தெரியாமல் அகன்றுவிட்டன. இந்தத் திரை இனி இருக்கக் கூடாது நடுவில்!

ஆனால் திரைக்கு அந்தப்புறம் அவர் இருக்கிறாரா? அதாவது – இன்று வரையில், என் காதில் பட்ட குரல், அதன் பிறப்பிடம், அங்கே இருக்கிறதா? ஏன், இன்று அது வாயடைத்துப் போய்விட்டது? பேசவே இல்லையே! பேச்சிற்கு வராத நிறைவு கொண்டு விட்டதோ? திரையை அகற்றிப் பார்த்துவிடுகிறேன்!

3

காவியத்தின் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே இருந்த திரை அகன்றது.

‘கள்வா!’ என்று கத்தினாள் காதலி,

‘கொள்ளை கொடுத்தவளே!’ என்று கூவினான் காதலன்.

உள்ளங்கள் சேர்ந்த பிறகு உடல்களைப் பிரிக்க யாரால் முடியும்? பில்ஹணன் இயற்றிய காவியம் அரங்கேறியது.

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *