அறிவுக்கண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 1,839 
 

ஒரு இரவு மட்டும் நடைபெறும் சிற்றுண்டி நிலையம்.

“ஏம்பா, இந்த டேபிள துடைக்க மாட்டீகளா” கடிந்து கொண்டார் வாடிக்கையாளர் ஒருவர்.

“சாரி சார்” பணிவான குரலுடன் அந்த டேபிளை துடைத்துவிட்டான் அந்த இளைஞன்.

உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு “என்னங்க சார் நல்ல ஆளா வேலைக்கு வச்சுக்கிறதில்லையா” முதலாளியிடம் சொல்லியவாறு சாப்பிட்டதற்கான தொகையை கொடுத்துவிட்டு டென்சனோடு புறப்பட்டார் வந்தவர்.

“தம்பி! வேலைக்குனு வந்தா சகிப்புத்தன்மை தான் முதல்ல வேணும். சங்கப்படாம வேலையப் பாரு” இரக்க குணத்தோடு பேசினார் முதலாளி.

“ம்.. சரிங்க சார்”. மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்.

“சட்னி வைப்பா”

“குருமா ஊத்து” சாப்பிடுபவர்களின் உதடுகள் ஒவ்வொரு விதமாக நச்சரித்துக் கொண்டு இருந்தன.

இரவு பனிரெண்டு மணி வரை நடைபெறும் அந்த சைவ கேண்டீன் அன்றுபதினொரு மணிக்கே முடிவடைந்தது. “தம்பி நீங்க வந்த நேரம் நல்ல யாவாரம்” சிரித்துக்கொண்டே சொன்னார் முதலாளி.

முதலாளியின் பேச்சு அந்த இளைஞன் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இரவு அங்கேயே உறங்கினான். மறுநாள் ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடத்திற்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சென்றான்.

இடைநிலை ஆசிரியருக்கு படித்த இளைஞன் தான் அவன். இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் தான் கேண்டியனில் வேலை பார்க்கிறான்.

வரிசை எண் படி அழைக்கப்பட்டனர். வரிசை எண் 82. கோபால் வாட்ச்மேன் குரல் கொடுத்ததும் இளைஞன் அறைக்குள் சென்றான்.

அதிகாரியின் கண்கள் அவனை உற்றுப்பார்த்தன.

“தம்பி! நீங்களா” அதிகாரியின் உதடுகள் பேசின.

ஏதோ கேட்பதுபோல் அவரது கண்கள் அவனைப் பார்த்தன.

“நான் தாங்க சார். உள்ளூர் பள்ளிகூடத்துல பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமா வேல பார்த்தேன். முந்நூறு ரூபா கொடுத்தாங்க. ஒன்றரை வருசம் வேல பார்த்தேன். வருமானம் கட்டுப்பிடியாகல. அதான் கேண்டீன்ல வேல பாக்குறேன்.”

“படிச்ச மாதிரியே காட்டிக்காம கொடுத்த வேலைய பாக்குற நீதான் பெரிய ஆளு. அதிகாரியான எனக்கிட்ட அந்த பண்பு இல்லாம போச்சே” மனசுக்குள் எண்ணியவாறு உங்களுக்கு சீக்கிரத்துல வேலை கிடைச்சிடும் அதிகாரியின் உதடுகள் பேசின.

சான்றிதழ் சரிபார்த்ததும் நன்றி கூறி வெளியே வந்தான்.

அந்த இளைஞனால் அறிவுக்கண் திறக்கப்பட்டதை எண்ணி அதிகாரியின் உதடுகளும் உண்மையாகவே நன்றி தெரிவித்தன.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *