சங்கீதப் பயித்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை நாடகம்
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 5,849 
 

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்

சங்கீதாநந்தர் – ஒரு சன்யாசிப் பாடகர்
சங்கரன், பரசுராமன் – இரண்டு தாயாதிகள்
காவேரி அம்மாள் – சங்கரன் மனைவி
காந்தாரி அம்மாள் – பரசுராமன் மனைவி
வசந்த ராயர் – தேரடியூர் அரசர்

வெட்டியான், தெருப் பள்ளிக்கூடத்து உபாத்தி யாயர், சட்டாம் பிள்ளை, சிறுவர்கள் படைத் தலைவர், படைவீரர்கள், பீடா விற்கிறவன்,பால் மிட்டாய் விற்கிறவன், கறிகாய்க்காரி, துடப்பம் விற்கிறவள், கொத்தவால், கட்டியக்காரன், மந்திரி, முதலியோர்.

கதை நிகழிடம்-தேரடியூர்.


சங்கீதப் பயித்தியம்

முதல் அங்கம்

முதற் காட்சி

இடம் – தேரடியூரில் கடை வீதி.

வெட்டியான் தமுக்கடிக்கிறான், ஜனங்கள் சேர்கின்றனர்.

வெ: இதனால் சகலமான பேர்களுக்கும், தெரிவிக்கும்படி யான இவ்வூர் அரசரது ஆக்கினை என்னவென்றால்- “அரசருடைய தாயார் அந்திய காலத்தில் சங்கீதம் கேட்க வேண்டுமென்று பிரியப்பட்டபோது, ஆஸ்தான சங்கீத வித்வான் வந்து சேருமுன், அவர்கள் உயிர் போய்விட்ட படியால், அந்த ஆத்மாவின் பிரீ திக்காக, இன்று முதல் ஒரு வருஷ காலம் வரையில், இவ்வூரிலுள்ள எல்லா ஜனங்களும், சங்கீதத்திலேயே சம்பாஷிக்க வேண்டும். இவ்வூரின் பெயரும் தேரடியூர் என்பதிலிருந்து தோடியூர் என்று மாற்றப்பட் டது. அரசரும் தன் பெயராகிய வசந்த ராயர் என்பதை வசந்த ராக ராயர் என்று மாற்றிக்கொண்டார். அப்படியே எல்லோரும் எல்லாப் பெயர்களையும் மாற்றிக்கொள்ள வேண்டியது. ஆண்பெண் குழந்தைகள் உட்பட எல்லோரும் சங்கீதத்திலேயே சம்பாஷிக்க வேண்டியது. இந்த ஆக்கினையை மீறி நடப்பவர்களுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் பத்து பணம் வரையில் அபராதம் விதிக்கப்படும்”. – திடும் திடும் திடும்!

[ஜனங்கள் கூக்குரலுடன் கலைகின்றனர்.]

காட்சி முடிகிறது.


இரண்டாவது காட்சி

இடம்-ஒரு தெரு பள்ளிக்கூடம்.

பிள்ளைகள் நிற்கின்றனர். உபாத்தியாயர் வருகிறார்.

உ: அடே பசங்களா! இதென்னாடா பெரிய எழவா போச்சி! இது வரைக்கும் சொன்னமாதிரி பாடம் சொல்லக் கூடாதாம், புது மாதிரியிலே சொல்லணு மாம், இல்லாப்போனா அபராதம் விழுமாம் – உம்- என்ன செய்யரது! ராஜா ஆக்கினெ, மீறக்கூடாது- நான் சொல்ரபடியே பாடம் சொல்லுங்கள். [பாடுகிறார்.]

ராகம் – தன்யாசி – தாளம் ஆதி பல்லவி
அ ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ.
ஐ,ஒ ஓ ஓள-

[பிள்ளைகள் அப்படியே பாடுகின்றனர்]

அனுபல்லவி
கக் கா,கிக் கீ,குக் கூ,கெக் கே,
கை, கொக்கோ, ‘கௌ,

சரணங்கள்
சச் சா,சிச் சீ,சுச் சூ,செச் சே. சை, சொச் சோ, சௌ,
தத் தா,தித் தீ,துத் தூ, தெத்தே,
தை, தொத்தோ, தௌ.

[பிள்ளைகள் அப்படியே பாடுகின்றனர்.]

சட்டாம்பிள்ளை விரைந்து வருகிறான்

ச: சாமி! சாமி! – உங்க –

உ: அடெ பையா! சொல்லவேண்டியத்தெ பாட்டா சொல்லு, இல்லாப்போனா உனக்கும் எனக்கும் ரெண்டு பேருக்கும் அபராதம் விழும்!

ச: உங்க இஷ்டம் [சவுக்கமாகப் பாடுகிறான்]

ராகம் – காம்போதி – தாளம் – ஆதி

பல்லவி

வாத்தியாரே உங்கள் வீட்டில் – ஐயோ!

உ: என்னாடா வீட்டிலே? யாருக்கென்ன உடம்பு? யாருக்காவது அசௌக்கியமா என்ன?

ச: இல்லை! இல்லை! [பாடுகிறான்]
வாத்தியாரே – உங்கள் வீட்டில்-குதிரை !

உ: குதிரை என்னா! ஓடிப்பூட்டுதா என்னா- சீக்கிரம் சொல்லுடா!

ச: இல்லை! இல்லை! [ பாடுகிறான்]
வாத்தியாரே உங்கள் வீட்டில் குதிரை-
கொட்டகை-

உ: கொட்டகையா! – அது ரொம்ப பழசு – பிரிச்சுட ணும் இண்ணு இருந்தெ,என்னா அதுக்கு?

ச: (பாடுகிறான்.) வாத்தியாரே – உங்கள் வீட்டில்-குதிரை கொட்டகை தீ பற்றியது!

உ: ஐ ஐயோ! அத்தெ முன்னெயே ‘சொல்லி யழக் கூடாதா! அப்புறம் என் வீடுகூட பத்திக்கொண்டால்!- பாழும் சங்கீதம்! – வாங்கடா பசங்களா !

[உபாத்தியாயர் ஓடுகிறார். பிள்ளைகள் பின் தொடர்கின்றனர்]

காட்சி முடிகிறது


மூன்றாவது காட்சி

இடம் – அரசரது சைனியம் கபாத் பழகும் வெளி.

படைத்தலைவர் வருகிறார், பிறகு படைவீரர்கள் வருகின்றனர்.

ப.த.: நட பைரவ்!- ஏக்தாள்! வீரர்கள் நடக்கின்றனர்.] நீல் – ஆம்பரி! [வீரர்கள் நிற்கின்றனர்)
[கைகளைத் தூக்குகின்றனர்.)
ப.த.: இப்பொழுது கமாஸ் (கபாத்) பழகுவோம். ஆரோஹண்! அவரோஹண்! [கைகளை இறக்குகின்றனர். இப்படி மூன்று முறை செய்கின்றனர்.]

ப.த: கை சுருட்டி! ஆதி தாளம் – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு – ஐந்து, ஆறு,ஏழு, எட்டு! [இப்படி மூன்று முறை]

ப.த: தோடிராகம்! [வீரர்கள் துப்பாக்கிகளைத் தோளில் ஏந்துகின்றனர்.]

ப.த. : பிரசண்டமாருதம்! (வீரர்கள் துப்பாக்கிகளை முன்னால் ஏந்துகின்றனர். இப்படி மூன்று முறை செய்கின்றனர்.)

ப.த. : முத்தாயிப்பு![முடிவு]பூர்பிளாஸ்! [போகின்றனர்.]

நான்காம் காட்சி

இடம் – கடைத்தெரு,

பீடா விற்கிறவன் பாடிக்கொண்டு வருகிறான்.
பீ.வி. ராகம் – கலாநிதி-தாளம்- பல்லவி ஆதி

பீடா வாங்கலையோ பெருஞ்சீமான்களே
பீடா வாங்கலையோ! (பீ)

அனுபல்லவி

தேடாமல் வருகிறது தெருவிலே
திவ்யமான பீடா இதுதான் உருவிலே
பால் மிட்டாய்க்காரன் வருகிறான்.

பா.மி.[பாடுகிறான்.] பால்மிட்டாய், பன்னீர்மிட்டாய், பலெ ஜோர்மிடாய், பலேபசந்த் மிடாய், காலணா மிடாய், கைமேல் மிடாய், கோவா மிடாய், கோதம் மிடாய்!

கறி காய்க்காரி வருகிறாள்,
க.: ராகம் – தோடி-தாளம்-ஆதி

பல்லவி
கத்தரிக்காய் வற்றல் – வாங்கலையோ
ஒரு வழிப்போக்கன் வருகிறான்.

ஓ.வ.: ராகம் – தோடி – தாளம்-ஆதி பல்லவி

எத்தனை கொடுப்பாய் – துட்டுக்கே

அனுபல்லவி

க. : ஒன்று, இரண்டு,மூன்று, நாலு, ஐந்து,
ஆறு, ஏழு, எட்டு-

ஒ.வ: மொத்தவிலை, அதிகவிலை, கொஞ்சம்குறை-

துடப்பம் விற்கிறவள் வருகிறாள்.

து: துடப்பம்!துடப்பம்!

கொத்தவால் விரைந்து வருகிறான்.

கொ: ஏய்! துடப்பம் – வா இப்படி!

து: ஏன் சாமி!

கொ: வா, டாணாவுக்கு!

து: ஏன் சாமி!

கொ: இவ்வூர் சட்டம் தெரியாதோ உனக்கு?

து: தெரியாது சாமி!

கொ: தெருவுலெ யார் என்ன பேசனாலும் சங்கீதத்தோடு பேசணும்.

து: அப்படி இண்ணா?

கொ: பாட்டா பாடணும்.

து: எனக்கு பாடத் தெரியாதே சாமி, துடப்பக்கட்டைக்குக் கூடவா பாடணும்?

கொ: ஆமாம்! அப்படித்தான் ராஜா உத்திரவு, இல்லா போனா தெருவுலே விக்கக்கூடாது.

து: எனக்குத் தெம்மாங்குதான் தெரியுங்க.

கொ: ஆனால் அதுலே பாடு.

து: [பாடுகிறாள்.]
துடப்பக்கட்டே ராஜ்யத்துலே
துடப்பக்கட்டே விக்கக்கூட
துடப்பக்கட்டே பாடணுமாம்
துடப்பக்கட்டே! துடப்பக்கட்டே!

கொ: ஆ!- சரி! – போ போ!

காட்சி முடிகிறது.


இரண்டாம் அங்கம்

முதற் காட்சி

இடம் – முட்டுசந்து-இரண்டு பக்கமும் இரண்டு வீடுகள். சன்யாசி உடையில் சங்கீதானந்தர் பாடிக்கொண்டு வருகிறார்.

ராகம் – பைரவி – தாளம் – ரூபகம்

பல்லவி

சன்: சங்கீதத்தினும் சுகம்யாதே
சர்வலோகத்திலும் கிடையாதே

அனுபல்லவி

அங்கமெலாம் குளிருமே ஆனந்தமதனா றாலே
எங்குமிதற்கு நிகர் ஏதுமிலை சொன்னாலே.(ச)

சங்கரனும் பரசுராமனும் எதிர் எதிர் வீடுகளிலிருந்து ஓடி வருகிறார்கள்;

இருவரும்: சாமி! சாமி! நமஸ்காரம், [பாதத்தில் வீழ்கிறார்கள்]

சன்: யாரப்பா நீங்கள்? நான் ஒரு ஏழை, எனக்கேன் இப் படி நமஸ்காரம் செய்கிறீர்கள்?

இருவரும்: நீங்கள் தான் எனக்கு குருவாயிருக்கணும்!

சன்: நான் உங்களுக்கு குருவாயிருப்பதா! எனக்கொன்றும் அர்த்தமாக வில்லை.

இருவரும்: நான் சொல்ரேன் கேளுங்க சாமி!

சங்: அடே! பரசு!நான் பெரியவன்! நானு முன்னே சொல்ரேன்.

பர: ஏய்! சங்கராபரணம், நீங்க பெரியவரான உங்கமுட் டுக்கும் இருக்கட்டும்! நான் முன்னே சொல்ரேன் சாமி!

சன்: இதென்னடா அப்பா!- சங்கராபரணம்! பரசு!- ஏனப்பா, உங்கள் பேர்களா இவைகள்?

சங்: நான் சொல்ரேன் சாமி! – இந்த ஊர் ராஜா ஒருத்தர் இருக்கிறாரு.

பர: அவருக்கு சங்தேப் பயித்தியம்!

சங்: அவர் என்னா ஆக்கினெ பண்ணியிருக்கறாரு இண்ணா-

பர: எல்லாரும், பேருங்களே, சங்கீத பேரா மாத்திகணும் இண்ணு – உத்திரவு பண்ணி இருக்கிறாரு.

சங்: அத்தொட்டு, சங்கரன் என்ற என் பெயரெ சங்கரா பரணம் இண்ணு மாத்திகனேன்.

பர: எம்பேரு பரசுராமன், நான் பரசு இண்ணு மாத்திகனேன்

சன்: ஆமாம், இப்பொழுது என்னை என்ன கேட்கிறீர்கள்?

சங்: அவரு- எங்க ராஜா-வீட்டுக்கு வெளியே யார் என்ன – பேசனாலும் சங்கீதத்தோடு பேசணும், இல்லாப்போனா அபராதம் போடப்படும், இண்ணு தண்டோரா அடிச்சி யிருக்கராரு-எனக்கென்னமோ அவ்வளவா வராது.

பர: அவ்வளவா வராதென்னா- அவர் தொண்டையெ கிழிச்சாலும் ஒரு சொரம்கூட சரியா வராதுங்க –

சங்: உனக்கு மாத்திரம் சங்கீதம் ரொம்ப தெரியுமோ? உன்னே சுட்டு போட்டாலும் தாளமே வராதே!

சன்: இதற்கு என்னை யென்ன அப்பா செய்யச் சொல்கிறீர்கள்?

இருவரும்: என் ஊட்டுக்கு வந்து எனக்கு வாத்தியாராயிருந்து கொஞ்சம் சங்கீதம் கத்துக் கொடுக்கணும் சாமி!

சன்: உம் – அப்படியே ஆகட்டும்; ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன் – வாருங்கள்.

சங்: சாமி! என் ஊட்டுக்கு முன்னே வரணும்.

பர: சாமி! என் ஊட்டுக்கு முன்னே வரணும்.

சங்: நான் தானே முன்னே கூப்பிட்டேன்.

பர: நானு உங்களை முன்னேயே கூப்பிடலாமிண்ணு இருந்தேன்.

(இருவரும் சன்யாசியை இழுக்கிறார்கள்).

கொத்தவால் வருகிறான்.

கொ: சங்கீதம்! சங்கீதம்! சங்கீதம்! சங்கீதம்!

சங்: (பாடுகிறான்.)
வாருங்களையா டாணாகாரரே!
தீருங்களையா எங்கள் சண்டையை!
பாருங்களையா என் வீட்டிற்கு பரதேசி
போகக்கூடாதென்று தடுக்கிறான்.

பர: கூறுங்களையா நீர் தான் நியாயம்
கும்பிட்டு நான் இவரை முன்பழைத்தேன்
தாறுமாறாய் உளறுகிறார்
தடியாம்பிள்ளை இவர் தானையா

சங்: ஏண்டா கொழுப்பொ! (இருவரும் அடித்துக்கொள்கின்றனர்.)

கொ: பொறுங்கள்! பொறுங்கள்! [அவர்களைப் பிரித்து] தாளம் தப்பு!- தப்பு! – நான் தாளம் போடுகிறேன் அதற்குச் சரியாக அடித்துக் கொள்ளுங்கள்!
[ஜம்பை தாளம் கையில் போடுகிறான்.]

சங்: ஏனையா – நாங்க சண்டை போட்டா-

பர: உங்களுக்கு அது வேடிக்கையா யிருக்குதோ?

கொ: இல்லெடாப்பா! ராஜா ஆக்கினெ! அடி தடில் உழுந் தாலும் தாளத்தோடொ இருக்கணும்! – இல்லாப் போனா அரமனைக்கு இழுத்துகினு போயி அபராதம் போட்டு வைக்கணும்!

சங்: சரிதான்! அபராதம் குடுத்தது போதும்

பர: நாங்க சமாதானமா போரோம்.

இருவரும்: நீங்க சொல்லுங்கையா மத்யஸ்தம் – யார் ஊட்டுக்கு பாட்டு வாத்தியார் போவணும் முன்னே.

கொ: உம்- நீதான் பெரியவன் – நீ அழைச்சிகினு போ முன்னே.

பர: சரிதான் இருக்கட்டும் – அப்பறம் நானு அழைச்சிகினு போறேன்.(சங்கரன் சன்யாசியைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறான்.)

காட்சி முடிகிறது.


இரண்டாம் காட்சி

இடம் – சங்கரன் வீட்டில் கூடம்.

சங்கரன் வருகிறான்.

சங்: சாவேரி!- சாவேரி!

கா: இதோ வந்தேன் — இதென்னா இது!என்பெயரெச் சொல்லி கூப்பிடுங்களேன்! சாவேரி என்னா வந்தது! சாவேரி!

காவேரி அம்மாள் அடுப்பங்கரையிலிருந்து வருகிறாள்.

சங்: இல்லெடி,உம்பேரெசொல்லி காவேரி இண்ணு கூப்பிட்டதுக்குத்தான், நேத்து ஒரு பணம் அபராதம் விழுந்துதெ! மகாராஜா கட்டளே, எல்லா பேருங்களும் சங்கீத பேருங்களா இருக்கணும் இண்ணு.

கா: அதெல்லாம் வீட்டுக்கு வெளியே! உள்ளே எப்படியா வது பேசிக்கலாமில்லையா!யார் கேக்கப்போரா?

சங்: அப்பறம் இந்தப்பழக்கம் தானே தெருவிலேயும் வரும் இண்ணு, இப்பவே பழகி வைக்கரேன்!-சமையல் முடிஞ்சுதா?

கா: இல்லெ, இன்னும் அரைநாழி ஆகும்.

சங்: குருமகாராஜா ஸ்நானத்துக்குப் போயிருக்கிராரு; சீக் கிரம் சமையல் எல்லாம் முடிச்சூடு. (காவேரி உள்ளே போகிறாள்) அதுவரைக்கும் ஜன்டெவரிசெ பாடம் பண்ணி வைப்போம்.
சா சா சா சா சா-

காவேரி வருகிறாள்.

கா: இதென்னா இது? சா சா சா !-வெள்ளிக் கெழமெ சுபமா ஏதாவது சொல்லக்கூடாதா!

சங்: சா சா சா சா!

கா: யாரெ சாவச்சொல்ரைங்க?

சங்: நீ நீ நீ நீ !

கா:என்னாது?- என்னையா சாவச்சொல்ரைங்க ?

சங்: தா தா தா தா!

கா: எங்க தாதாவைய்யா?

சங்: பா பா பா பா!

கா: யாரெ ஒணு முண்ணாலும் சொல்லுங்க, பாபாவே மாத்திரம் அப்படிச் சொல்லாதைங்க!

சங்: மா மா மா மா!

கா: இதென்னாடி இது! எங்கமாமாவெபத்தி அப்படிச் சொன்னா எனக்கு கோவம் வரும்!

சங்: கா கா கா கா!

கா:ஆ! அப்படி காக்காயே ஓணும் இண்ணா, என்னா வோணு மிண்ணாலும் சொல்லுங்க.

சங்: இல்லெடி இதெல்லாம் ஜன்டெவரிசெ, குருமஹா ராஜா கத்து கொடுத்தாரு கொஞ்சமுன்னே.

கா: என்னா ஜன்டெ வரிசையோ கிண்டல் வரிசையோ! காது புளிச்சிப் போறது.
[உள்ளே போகிறாள்]

சங்: அப்புறம் என்னா? – அந்தப் புஸ்தகத்திலே எழுதி வைச்சேனே! [அதை எடுத்துப் பார்த்து] சானி சானி சானி சானி – நிதா நிதா நிதா நிதா – அப்பறம் தப தப தப் தப!

காவேரி மறுபடி வருகிறாள்.

கா: இதென்னாடி எழவாயிருக்குது! தப தப இண்ணுகினு! போதும் நீங்க சங்கீதம் கத்துகிறது, நிறுத்துங்க!
[உள்ளே போகிறாள்.]

சங்: மாங்கா- மாங்கா – மாங்கா – காரி – காரி-காரி மாங்காகாரி -மாங்காகாரி – மாங்காகாரி!

கா: [வெளி வந்து] ஏம் மாங்காகாரியே கூப்பிடரைங்களே!

சங்: இல்லேடி- வாத்தியார் காலமே பாடம் எழுதிகொடுத் தாரே – மாங்கா – காரி – மாங்கா -காரி இண்ணு-

கா: மாங்காயும் – கறியும் – நல்ல வாத்தியாரு – நல்ல பாடம்!

சங்: அடி அடி! அவரெ திட்டாதே – அப்பறம் அவரு எதிர் வீட்டுக்கு – எம்பங்காளி வூட்டுக்குப் பூடப்போராரு நானு எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே இழுத்துகினு வந்தே!

(தெருவில் கதவைத் தட்டுகிற சப்தம்.]

-அதோதோ! வந்துவிட்டாரு! சீக்கிரம் சமையல் முடிச்சூடு.

கா: செய்யரேன், அவரெ இந்த சா சா நீ நீ தவிர ஏதாவது நல்ல ராகமா -பாட்டா கத்துகொடுக்கச் சொல்லுங்களேன்.

சங்: அப்படியே ஆவட்டும், நீ போயி சமயலெபாரு.
[காவேரி உள்ளே போகிறாள்.)

சன்யாசி வருகிறார்.

வாங்கசாமி, ஸ்நானம் எல்லாம் ஆச்சோ?

சன்: முடிந்தது அப்பா.

சங்: இப்படி உக்கா ருங்க-சாமி, இந்த சரளி வரிசெ ஜன்டெ வரிசையெல்லாம் பக்கம் இருக்கட்டும். எம்பெண்சாதி நானு ஏதாவது பல்லவி கத்துகிணு மிண்ணு ஆசெ படரா, அத்தெ கொஞ்சம் முன்னே சொல்லிக்கொடுங்க.

சன்: அப்பா, முதலில், சரளிவரிசை, ஜன்டெவரிசை எல்லாம் ஆகவேணுமப்பா.

சங்: அப்பறம் தான் பல்லவி வரிசை வருமோ?

சன்: அதற்கப்புரம் ராகம் கடைசியிலே பல்லவி.

சங்: முன்னே கொஞ்சம் ராகமும் பல்லவியும் கத்துகொடுங் களேன்.

சன்: அது வராதப்பா, இதற்குள்ளாக.

சங்: கொஞ்சம் பாருங்களேன், அல்லாம் வரும்.

சன்: சரி, உன் இஷ்டம் – இப்பொழுது கொஞ்சம் பசியா யிருக்குது சாப்பாட்டுக்கு மேலே ஆகட்டும் அப்புறம் ஆரம்பிக்கலாம்.

சங்: சாவேரி! சமயலாச்சோ?

சன்: உன் பெண்சாதி பெயர் என்ன சாவேரியா?

சங்: இல்லெ அவபேரு காவேரி இந்த ராஜா எல்லாப் பெயரையும் சங்கீதமா மாத்திகணும் இண்ணு உத் தரவு போட்ட போது, அத்தெ சாவேரி இண்ணா மாத்திவிட்டேன்.

காவேரி வருகிறாள்.

கா: ஏன் கூப்பிட்டைங்க?

சங்: சமயலாச்சோ?

கா: இதுக்குள்ள என்னமா ஆவும்? வாதாபி கணபதி பச்சடியாச்சி; புந்நாகவராளி பொரியலாச்சி, கல்யாணிக்கா வேகுது, அத்தெ கொழம்புபண்ணி வுட்டு, அப்பறம் சாப்புதாளம் வரக்கணும்.

சன்: இதென்னடாப்பா இது! ஒன்றும் அர்த்தமாகவில்லை.

சங்: எல்லாம் இந்த வூரு ராஜா வேலெ! எல்லாபேரையும் மாத்திவுட்டாரு! வாதாபிகணபதி பச்சடி இண்ணா-வாழக்கா பச்சடி இண்ணு அர்த்தம் – புந்நாகவராளி பொரியல் — பொடலங்கா பொரியல் – கல்யாணிக்கா இண்ணா கல்யாணிப் பூசணிக்கா.

சன்: சாப்பு தாளம் என்றால்?

சங்: சோத்தப்பளம்!- உம் – அடி, இவருக்கு பசியாயிருக்கு தாம் – சீக்கிரம் சமயலெமுடி. [காவேரிஉள்ளேபோகிறாள்]

சன்: ஆனால், அதுவரைக்கும் கொஞ்சம் ராகம் பாடி ஒரு பல்லவி பாடுகிறேன் கேள் தோம்தர னனா …
[பாடுகிறார்]

சங்: கொஞ்சம் பொறுங்க – இதையெல்லாம் எழுதுகிறேன்.

சன்: இதையெல்லாம் எழுதிக்கொள்ள முடியாதப்பா, மனசுலெ பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

சங்: இல்லே சாமி-நானு எழுதுகிறேன். [சன்யாசி பாட, சங்கரன் எழுதுகிறான்.]

சன்: [ராகம் பாடி முடிந்ததும்] அப்பா,என்ன எழுதிக் கொண்டாய்?படி கேட்போம்.

சங்: [படிக்கிறான்] தோம்புதெரே – நாயினா நாயினா நாய் நரி – நாய் நரி

காவேரி உள்ளிருந்து வருகிறாள்.

கா: இதென்ன இது?நாயும் நரியும் – நல்ல பாட்டுதான்! வேறே என்னமானாலும் நல்ல பாட்டா கத்துக்குங்க.

சங்: அப்படித்தான் செய்யுங்க சாமி – எம்பொண்டாட்டி கோவிச்சிகரா.

சன்: அதெல்லாம் வராதே – பல்லவி வராதப்பா இதற்குள்ளாக-

சங்: நீங்க கத்து குடுத்துதாம் பாருங்களேன்.
[காவேரி உள்ளே போகிறாள்.]

சன்: ஆகட்டுமப்பா. [கல்யாணி ராகத்தில் பல்லவி பாடுகிறார்.] முருகையனே! பன்னிருகையனே!
அப்பா தொண்டை வறண்டு போச்சுது – கொஞ்சம் தாகத்திற்கு வெந்நீர் கொண்டுவா.

சங்: வேண்டாம் சாமி, வெந்நீரு சாப்பிட்டா அப்புறம் சாப்பாடு கொள்ளாது! கொஞ்சம் வெத்திலெ வேணுமிண்ணா போட்டுங்க-
(வெற்றிலைப் பெட்டியைத் திறந்து]

இந்தாங்க இந்த கொட்டெ பாக்கை போட்டுக் கொண்டு, கொஞ்சம் கடிங்க-இதொ வெத்திலெ- நான் பாடரேன் – கொஞ்சம் கேளுங்க- [பாடுகிறான்.]

முருக்கு – கையனே! பன்னீரு கையிலே-

[சன்யாசி பாக்கை வாயில் போட்டுக்கொண்டு சிரிக்கிறார், தொண்டை அடைத்துக்கொண்டு மூர்ச்சையாகிறார்.]

ஐஐயோ!- சாமி!- சாமி!- சாவேரி! சாவேரி-ஓடிவா!

காவேரி அம்மாள் உள்ளிருந்து வருகிறாள்.

கா: என்னா! என்னா!

சங்: சாமியாருக்கு கொட்டெபாக்கு கொடுத்தேன்! அது மார்லே அடைச்சிகினாப்போலே இருக்குது! அப்ப டியே உழுந்துட்டார்டி! என்னா செய்யரதடி?

கா: நான் சொல்ரபடி கேளுங்க!- அப்படி என்னமானாலு ஆனா அப்பறம் நம்ப பேர்லே பழி வரும். அப் படியே எடுத்தும்போயி எதிர் ஊட்டு திண்ணையிலெ வளத்தி உடுங்க!

சங்: ஆமாம், அதுதான் நல்லயுக்தி- நீ போயி தெருவுலெ யாரும் இல்லாத சமயம் பாத்து, கையெ தட்டு- நானு அப்படியே தூக்கிகினு போயி, எதிர் வூட்டிலெ வைச்சூடரேன் இவரே இல்லாபோனா இவரெ கொண்ணூட்டோம் இண்ணு நம்பபோலே பழி வரும்! போதாக் குறைக்கு இந்த சாமியாரு – சங்கீத வித்வான்!- ராஜாவுக்கு தெரிஞ்சா ரெண்டு பேருக் கும் கண்டம் தான் – நீ போயி வெளியிலே பாரு.
[காவேரி வெளியே போய் வருகிறாள்.]

கா: இந்தாங்க!- தெருவுலெ யாருமில்லே – எதிர்வூட்டு கதவு சாத்தியிருக்குது, அந்த கதவும் பேர்லே சாத்தி வைச்சூடுங்க! பழி அவங்க பேர்லெ விழும்.

சங்: ஆமாமாம்! நல்லயுக்தி!

காட்சி முடிகிறது.


மூன்றாம் காட்சி

இடம் – பரசுராமன் வீட்டின் உள்புறம்.

தெருக்கதவு உள் தாப்பாள் இடப்பட் டிருக்கிறது. ஒருபுறமாக பரசுராமன் உட்கார்ந்து சரஸ்வதி படத்திற்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறான். காந்தாரி உள் அறையில் சமையல் செய்கிறாள்.

பர: அடி-காந்தாரி!- உம் – தேவகாந்தாரி?

காந்: [அறையிலிருந்து வருகிறாள்] ஏன்! கூப்பிட்டைங்களே.

பர: சமய லாச்சோ?

காந்: இதோ ஆயிபோச்சி – ஒரு நொடியிலே – பூஜெ பண்ணும் போதுகூட சாப்பாட்டு கியாபகம் தானா!

பர: இல்லெடி, ரொம்ப பசியாயிருக்குது.

காந்: பூஜெ பண்ணும்போது மனசெ அடக்கவாணாமா? ஏதாவது ஸ்தோத்திரமா பாடிகினு பூஜபண்ணா சரியாபோவும்.

பர: ஸ்தோத்திரப்பாட்டு தமிழ்லே எனக்கு ஒண்ணும் தெரியாதே.

காந். ஒன்ணுமா தெரியாது? ஏதாவது தெரிஞ்சபாட்டா பாடுங்களேன் – சாதத்தெ வடிச்சூட்டு வர்ரேன்.
[உள்ளே போகிறாள்.]

பர: என்னடா கஷ்டமாயிருக்குது! எனக்கென்னா தமிழ் பாட்டு தெரியும்? ஒண்ணுதான் கியாபகம் இருக்குது. (பாடுகிறார்]
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

என் அம்மணி தாயே! சரஸ்வதி!
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்கவேண்டாம்
(தவடையில் போட்டுக்கொண்டு]

பூலோக சுந்தரி! கைலாசவாசி!

காந்: (மறுபடியும் உள்ளிருந்துவந்து) இது என்னா பாட்டு இது! போதும் நிறுத்துங்க! யாராவதுபாத்தா சிரிக்கப் போரா!- அதோ ஏதோ கதவண்டை சத்தம் கேட்டுது, என்னாண்ணு பாருங்க.

பர: [கதவண்டைபோய் மெல்ல கொஞ்சம் திறந்து பார்த்து] அடி அடி நம்ப பாட்டு வாத்தியார் வந்திருக்கிறாரடி! [கதவை நன்றாய்த் திறக்க, சன்யாசியின் உடல் வீட்டிற்குள் விழுகிறது.]

காந்: ஐ ஐ யோ! இதென்ன கீழே விழுந்தூட்டாரே!

பர: ஆமாண்டி! ஆமாண்டி!-என்னா செத்துப்பூட்டாரா என்னா! மூச்சிகீச்சி ஒண்ணையும் காணோமே!- அடி தேவகாந்தாரி! நம்ப என்ன செய்யரது ?

காந்: எனக்கென்னமோ சந்தேகமாயிருக்குது – நானு ஒரு யுத்தி சொல்ரேன் அதும்படி செய்யுங்க – எதிர் வூட் டிலே போய் – அவா புருஷன் பெண்சாதியே எதா வது சாக்கு சொல்லி ரெண்டாங்கட்டுக்கு – அழைச்சி கினுபோயி பேசிகினு இருக்கரேன், அந்த சமயம் – இத்தெ தூக்கிகினு வந்து, மொதல் கட்டிலே மறவா வைச்சூடுங்க.நம்பொமேலே பழியிருக்காது.

பர: அப்படியே ஆவட்டும் – அதோ அவுங்க கதவு தெற் திருக்குது – நீ முன்னேபோ. (காந்தாரி போகிறாள்.)

காட்சி முடிகிறது.


நான்காம் காட்சி

இடம் – சங்கரன் வீட்டில் கூடம்.

பரசுராமன் தெருக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே தலையை நுழைத்துப் பார்க்கிறான்.

பர: யாரையும் காணோம் அந்த மட்டும்! அவுங்களெ ரெண்டாம் கட்டுக்கு அழைச்சிகினு போயிருக்கரா- இதான் சமயம்-
[உடலைக் கொண்டுவந்து அங்கு மூலையில் இருக்கும் நாற்காலியின் பேரில் உட்காரவைத்து ஒரு போர் வையால் மூடிவிட்டு வெளியே ஓடிப்போய் விடுகிறான்.)

இரண்டாங்கட்டிலிருந்து சங்கரனும், காவேரியும், காந்தாரியும் வருகிறார்கள்.

காவே: அதுதாம்மா வழி, ரகசியமா – யாருக்கும் தெரியாமே செய்தூடச் சொல்லு – இல்லாப்போனா நம்பபேர்லெ பழிவரும்.

காந்: அப்படியே ஆகட்டும். (விரைந்து வெளியே போகிறாள்.)

சங்: சாவேரி, தெருக் கதவெ சாத்திக்கோ – இல்லாப் போனா நம்ப யுக்தியே நம்பளுக்கே காட்டப்போ ராங்க! – நம்ப இல்லாதபோது நம்ப ஊட்லெ கொண் டாந்து போட்டாங்கண்ணா என்னா செய்யரது!
[காவேரி தெருக் கதவைத் தாளிடுகிறாள்.]
கொண்டா சாப்பாட்டே – பசி யெடுக்குது.
[காவேரி உள்ளே போய் இலையைக் கொண்டு வருகிறாள்.]

சங்: இந்த போர்வையை நாற்காலி பேர்லே யார் போட் டது? அந்த முட்டும் நம்ப பழியே கழிச்சிகனமே!
[மூலைக்குப்போய் போர்வையை எடுக்க சன்யாசி உடலைக் கண்டு] இல்லேடி! இந்த பழி நம்ப ஊட்டுக்கு மறுபடியும் வந்துட்டுதடி!

கா: ஐயோ! கெட்டேனே! நம்பொ சொல்லரத்துக்கு முன் னையே இந்த யுக்தி செய்திருக்கராங்க!

சங்: ஆமாண்டி! ஆமாண்டி! ஏதோ நம்மெ ரகசியமா கேக் கரது போலெ, அவ ரெண்டாங்கட்டுக்கு நம்மெ அழைச்சிகினு போயிருந்தபோது, அவபுருஷென் இங்கெ கொண்டாந்து இத்தெ வைச்சிட்டுப் போயிருக்கரான்! – இருக்கட்டும் சொல்றேன் – சாயங்கால மாயிபோச்சி – கொஞ்சம் இருட்டட்டும் சொல்ரேன் – ஒரு கவுத்தெகட்டி, அவுங்க வூட்டுக் கூரெயின் பேர்லெ ஏறி வாசல் வழியா எறக்கிவுடரே இத்தெ!

காட்சி முடிகிறது.


ஐந்தாம் காட்சி

இடம் – பரசுராமன் வீட்டின் வாசல்; பரசுராமனும், காந்தாரியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பர: நம்போ யுக்தி பண்ணா- அதுக்குமேலெ யுக்தி பண்ணப் பார்க்கராங்க!

காந்: அவுங்களுக்கு மேலெ நம்பளுக்கு யுக்தி பண்ண தெரி யாதா என்ன! சீக்கிரம் சாப்டூட்டு – படுத்துக் கொள்ளலாம் –
(சாப்பிடுகின்றனர். இருவர் மத்தியில் சன்யாசியின் உடல் வாயில் வழியாக இறங்குகிறது.)

இருவரும்: ஐயோ! பிசாசி! பிசாசி! (எழுந்து ஓடுகிறார்கள்.]

பர: [மெல்ல திரும்பி வந்து] இல்லெடி!நம்ப பழய ஆசாமி! திரும்பி வந்திருக்கராரு!-ஓ! கவுத்திலே கட்டி, வாசல் வழியா எறக்கி யிருக்கராங்க கொஞ்சம் பொறு! அவுங்க யுக்தியே அவுங்களுக்கே காட்டரேன்!- அவுங்க இந்த வெய்ய காலத்திலே, வாசல்லெ தான் படுத்துகினு தூங்கர வழக்கம் ! – நடுராத்திரி யாகட்டும் சொல்ரேன்!

காட்சி முடிகிறது.


ஆறாம் காட்சி

காலம் – விடுயற்காலம். இடம் – சங்கரன் வீட்டின் வாசல்.

ஒருபக்கம் கிணற்றின்மீது ராட்டினம் போட்டிருக்கிறது. வாசலில் சங்கரனும், காவேரியும் படுத்துக்கொண்டிருக்கின்றனர். கூரையிலிருந்து, கிணற்றின் ராட்டினத்தின் வழியாக பரசு ராமன் சன்யாசியின் உடலைத் தூக்கிக்கொண்டு இறங்கி, இருவர் மத்தியிலும் வளர்த்திவிட்டு, கொடியிலிருந்த சால்வை யொன் றைப் போர்த்திவிட்டு, வந்த வழியே ஏறிப்போய் விடுகிறான்.

சங்: [கொஞ்சம் பொறுத்து விழித்து] அடி! அடி!- காலமே எழுந்து சீக்கிரம் சமயலாகணுமிண்ணேனே – எழுந் திரு ஏண்டி! இந்த சரிகெ சால்வையையா போத்துனு படுத்துகினே!

கா: ஏ!- நானா சால்வையே போத்துகினு படுத்துகினேன்! நீங்க போத்துகினு (அதை இருவருமாக இழுக்க சன்யாசியின் உடலைக் காண்கிறார்கள்.]

சங். கா. : ஆ! ஆ!
[அலறி எழுந்திருக்கின்றனர்.]

சங்: என்னாடா! எழவா போச்சி! இந்த சனி நம்மெ விடாது போலிருக்குதே?

கா: இது என்னமா வந்து சேர்ந்தது நம்ப வூட்டுக்கு மறுபடியும்?

சங்: நம்பளவங்க வேலெயாதான் இருக்கணும் இரு சொல்லரேன், பொழுது நண்ணா விடியரத்துக்குள்ளோ – இத்தெ கொண்டுபோய் அவன் திண்ணையிலெ வளர்த்தி விடரேன்! கதவெ தெற!-
[எடுத்துக்கொண்டு வெளியே போகிறான்.]

காட்சி முடிகிறது.


ஏழாம் காட்சி

இடம் – இருவர் வீட்டிற்கும் இடையிலுள்ள முட்டுச் சந்து.

காலம் – விடியற்காலம்.

தன் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு சங்கரன் சன் யாசி உடலுடன் ஓடிவருகிறான். திண்ணையிலிருந்து பரசுராமன் எழுந்திருந்து ஓடிவந்து அவனைத் தடுக்கிறான்.

பர: பொறுங்க! பொறுங்க! எங்கே தூக்கிக்கினு வர்ரைங்க இத்தெ!- நீங்க வருவைங்க இண்ணு எனக்குத் தெரிஞ்சிதான் திண்ணையிலே காத்துக்கினு இருந் தேன் தூங்காதே!

சங்: ஏண்டா பயலே! நீ இந்த சந்யாசியே கொண்ணூட்டு எம்பேர்லே பழியே போடப் பாக்கிறையோ?

பர: அந்தக் கதையெல்லாம் ஒதவாது! – நீங்க பெரியவ னிண்ணா உங்க வரைக்கும் இருக்கட்டும் – நீங்க கொண்ணூட்டு எம்பேர்லே பழியே போடப்பாக் கிறைங்களா!- எடுத்தும் போங்க உங்க வீட்டுக்கு இத்தே!

சங்: நீ எடுத்தும் போ உன் வீட்டுக்கு இத்தே!
(இருவரும் மன்றாடுகிறார்கள்.]

சற்று தூரத்தில் கொத்தவால் வருகிறான்.

சொ: என்னடாப்பா சந்துலே கெலாட்டா?

காந்தாரியும், காவேரியும் தங்கள் தங்கள் வீட்டிற்குள்ளிருந்து ஓடி வருகிறார்கள்.

காந்.கா: கொத்தவால்! கொத்தவால்!
[இருவரும் தங்கள் தங்கள் கணவரைப் பற்றி இழுக்க சந்யாசியின் உடல் கீழே விழுகிறது.]

பர: ஐயா! கொத்தவால்! அவர்தான் கொண்ணாரு சன்யாசியே.

சங்: இல்லெ! நானல்லா, இவன்தான் கொண்ணான்.

கொ: சங்கீதம்! சங்கீதம்! [இருவரையும் பிடித்துக்கொண்டு] [பாடுகிறான் ]

ராகம் பூபாளம்-தாளம் – ரூபகம்

சங்கீதம் சங்கீதம் – சமாசாரத்தை
சங்கீதமாய்ச் சொல்லுங்கள்.

சங்: அடெபோயா! இப்பொகூடவா பாட்டு! அவன் கொண்ணூட்டு பழியெ எம் பேர்லே போடப் பார்க்கரான்!

பர: அவர் கொண்ணூட்டு எம்பேர்லே பழி போடப் பாக்கராரு!

கொ: [பாடுகிறார்] ஹோ! அப்படியா வியாஜ்ஜியம்!
நீங்களிருவரும் சாட்சியம்! [ஸ்திரீகளுக்கு]
மன்னிப்புக் கிடையாது பூஜ்யம்!

வாங்க எல்லோரும் ராஜ சபைக்கு – தூக்குங்கடா உடலே.

சங்: நான் மாட்டேன் ஐயா! அவன்தான் கொண்ணான்! அவனெ தூக்கச் சொல்லுங்க.

பர: நான் மாட்டேன், அவர்தான் கொண்ணாரு! அவரெ! தூக்கச் சொல்லுங்க.

கொ: சரி! நான் தூக்கிக்கினு வர்ரேன்! உங்கபேர்லே மூணு வியாஜ்யம் – மொதல்லே தெருவிலே பாடாமேயே சும்மா பேசனது! ரெண்டாவது, கலாடா பண்ணினது!மூணாவது, சன்யாசியே கொண்ணது!
[பாடிக்கொண்டே போகிறான்.]

ராகம் – கேதாரம் – தாளம் – ஆதி

பல்லவி

எல்லோரும் வாருங்கள் –
வியாஜ்ய மிருக்குது பாருங்கள்
எல்லோரும் பாருங்கள்
[போகின்றனர்.]

காட்சி முடிகிறது.


மூன்றாம் அங்கம்

முதற் காட்சி

இடம் – வசந்தராயர் கொலு மண்டபம்.

காலம் – காலை.

மந்திரி முதலியோர் வீற்றிருக்கின்றனர். கொத்த வால், சங்கரனையும், பரசுராமனையும் கைதியாகப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். பரிவாரங்கள் சூழ்ந் திருக்கின்றனர். காவேரியும், காந்தாரியும் ஒரு புறம் நிற்கின்றனர்.

கட்டியக்காரன். [பாடுகிறான்.] ராகம் – வசந்தா -தாளம்-ஆதி

பல்லவி
வசந்தராயர் வருகிறார்
வசந்தராக ராயர் இதோ கொலுவிற்கு (வ)

அனுபல்லவி
இசைந்தமனத்துடன் எல்லோரையும் காத்திடும்
திசைகள் புழ்ந்திடும் தேவர்கள் போற்றிடும் (வ)

வசந்தராயர் பரிவாரங்களுடன் வந்து கொலுலில் அமர்கிறார்.

வ: [பாடுகிறார்.] ராகம்-சங்கராபரணம் – தாளம்- ரூபகம்
மண்டலம் எங்கும் புகழும் மந்திரியே கூறும் நீரும்
தண்டனை விதிக்கவேண்டிய தகராறுண்டோ பாரும்.

ம: மகாராஜா! தாங்கள் தீர்மானிக்கவேண்டிய வியவகாரம் இன்று ஒன்று உண்டு.
[கானடா ராகத்தில் பாடுகிறார்.]
உள்ளபடி உரைத்திடுவாய் உத்தமனான கொத்த [வாலே
கள்ளமொன்றின்றியே நடந்ததை நீதான் இன்றே.

கொ. அரசே! [கேதார கெளளத்தில் பாடுகிறார்.]
கொலைதனைச் செய்தனர் கொடும்பாவியர் இருவருமே
குலை நடுங்கிடவே கொன்றார் சன்யாசியைத் தெரு [வினிலே

வ: [அடாணா ராகத்தில் பாடுகிறார்.] ஆஹா! அப்படியா சமாசாரம்!
ஓஹோ! இதென்ன கிரஹசாரம்!
பாபிகளே! என்ன சொல்கிறீர்கள்?

சங்: மஹாராஜா!- பாரினில் நானிந்தப் பாபம் செய்தறி யேனிக் காரியம் செய்த துரோகி உம்முன் நிற்கின்றானே.

பர: தானே செய்துவிட்டு அனியாயமாய் மன்னா என்மேல் நானே செய்ததாக நாட்டுகின்றார் இப்பெரும் பழியை.

வ: ஆனால்-[பாடுகிறார்.]

ராகம் – பிலஹரி – தாளம்-ரூபகம்

பல்லவி
தண்டனை விதிக்கிறேன்
தப்பாமல் இருவர்க்கும்-நான்

அனுபல்லவி
கண்டனம் செய்யா விட்டால்
கர்மம் எனைச் சாரும்!

[முதலில் ஒவ்வொருவராய், பிறகு எல்லோரும் ஒன்றாக கீழ்க்கண்ட பாட்டுகளைப் பாடுகின்றனர்.]

ம: ராகம் – நளினகாந்தி-தாளம்-ஆதி

பல்லவி
சந்தோஷம் – மகாராஜா மிக
சந்தோஷம் மகாராஜா.

அனுபல்லவி
சன்யாசியைக் கொன்ற பாபம்
சாற்றிடப் போமோ புவியில்.

சங்: ராகம் – முகாரி – தாளம்-ஆதி

பல்லவி
ஒரு பாபமு மறியா என்னை
தண்டிப் பீராயின் உம்மை

அனுபல்லவி
பெரும் பாவம் சூழ்ந்திடும்
பின்னும் யோசிப்பீரே.

பர: ராகம் – சஹானா – தாளம் – ரூபகம்

பல்லவி
கொன்றவன் அவனிருக்க
கொடுங்கோல் மன்னா நீரும்

அனுபல்லவி
இன்றென்னை தண்டிப்பீரேல்
இன்னலுமக்கு வருந்தானே

காவே: ராகம் – நாதநாமக்கிரியை-தாளம்-ரூபகம்

பல்லவி
மாங்கல்ய பிச்சை தாரும்
மன்னனே என்னைக் காரும்

அனுபல்லவி
இங்கிவரைக் கொல்வீரானால்
என் கதி என்னாகும்.

காந்: ராகம் – எதுகுலகாம்போதி – தாளம் – சாப்பு

பல்லவி
கணவனைப் பிரிந்தே நான்
கணமேனும் வாழேனே

அனுபல்லவி
பிணமதாய்ப் போனாலும்
பெறுவேன் நான் சுவர்க்கத்திலே

கொ: [பியாகடையில் பாடுகிறான்.)
பாட்டைத் தப்பாகப் பாடுகிறார்
பாதகர்கள் இவர்களே
நாட்டைவிட் டிவர்களை
நானே துரத்த வேண்டும்.

[இக் கூச்சலில் சன்யாசியின் வாயினின்றும் இருமல் சத்தம் கேட்கிறது. பிறகு சன்யாசி எழுந்திருந்து வாயினின்றும் ஒரு கொட்டை பாக்கை உமிழ்கிறார். எல்லோரும் ஆச்சரியப்பட்டு திகைத்து நிற்கின்றனர்.]

வ: ஆஹா!- ஸ்வாமி பிழைத்தீர்களே! – நீங்கள் தேவலோகம் போய் விட்டீர்களென்று அல்லவோ நினைத்தோம்!

சன்: ஆம், அங்குதான் போய்ச் சேர்ந்தேன் – சற்று முன்பாக.

வ: அங்கே!- என் தாயாரைக் கண்டீர்களோ?

சன்: கண்டேன்.

வ: அவர்கள் எனக்கு ஏதாவது சொல்லியனுப்பினார்களோ?

சன்: அதைக் கூறத்தான் திரும்பி வந்தேன் – அவர்கள் இவ்வூரில் சிலகாலமாக பாடப்படும் அபஸ்வரமான ராகங்களையும், காலமில்லாத தாளங்களையும் கேட்டு, சில தினங்களாக தனக்கு தலைவலி உண்டானதாகவும், நித்திரையே யில்லா திருப்பதாயும்,தெரிவிக்கச் சொன்னார்கள்; ஆகவே உடனே இந்த சங்கீதத்தை யெல்லாம் நிறுத்திவிடும்படியாக கட்டளையிடும்படி யாகவும் சொன்னார்கள்.

வ: ஸ்வாமி!- அவர்கள் உத்திரவுபடியே!-மந்திரி! இனி நம்மூரில் ஒருவரும் பாடவேண்டியதில்லை யென்று உத்திரவிடு.

ம: சந்தோஷம் – கொத்தவால், இனி நம்மூரிலுள்ள ஒரு வரும் பாட வேண்டியதில்லை.

கொ: ஐயா! நீங்கள் எல்லோரும் இனி பாடவேண்டியதில்லை.

சங்: பர: அப்பா!- நாம் இனி ஒருவரும் பாடவேண்டியதில்லை.

கா: காந்: அம்மா – இனி நாம் இந்தப்பாட்டைக் கேட்க வேண்டிய தில்லை!

பரிவாரங்கள். அப்பா! ஒழிந்தது இந்த சங்கீதத் தொல்லை

வ: ஆயினும் மங்களம் மாத்திரம் பாடுவோம்.
[பாடுகின்றனர்.]

காட்சி முடிகிறது.

நாடகம் முற்றிற்று.

– மூன்று நகைச்சுவை நாடகங்கள், முதற் பதிப்பு: 1956, ப.சம்பந்த முதலியார் பி.ஏ, பி.எல்., சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *