கலையோ – காதலோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 2,551 
 
 

(1948ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலையோ – காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல் 

நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது 

இவர் எழுதிய மற்று நூல்கள் 

லீலாவதி சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம், மனோஹான், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுற மும், என்ன நேர்ந்திடினும்,விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப் பெண், மய்க்காதல்,பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதரன், சதி – சுலோசனா, புஷ்பவல்லி,கீதமஞ்சரி, உத்தமபத்தினி, அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம்,ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்திரர்ஜுனா, கொடையாளி கர்ணன், சஹாதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து, மாளவிகாக்னி மித்ரம்; விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அஸிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலை காளப்பன் கள்ளத்தனம், விக்ரமோர்வசி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், நாடக மேடை நினைவுகள் – ஆறு பாகங்கள், நாடகத் தமிழ், யயாதி, பிராமணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன்,மார்க்கண்டேயர், ரத்னாவளி,கண்டுபிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையில் கூட்டம், வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி? ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக்காக்ஷி, விடுதிப் புஷ்பங்கள்,பேசும் பட அனுபவங்கள், வள்ளி மணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தான புர நாடகச் சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள், சபாபதி ஜமீன்தார், சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும் முதற் பாகம் – இரண்டாம் பாகம், சிவாலய சில்பங்கள். சதி சக்தி, மனை ஆட்சி, இந்தியனும் ஹிட்லரும், காலக் குறிப்புகள், தீயின் சிறுதிவலை முதலியன. 

முதற் பதிப்பு: 1948 விலை 2.00. 


‘கலையோ – காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல் 

நாடக பரத்திரங்கள் 

கிருஷ்ணமூர்த்தி – கதா நாயகன்  

தனம்மாள் – அவன் மனைவி 

காந்தாமணி – தியாகராஜ முதலியாரின் பெண் 

தாமோதரம் – ஓர் நடிகன் 

தியாகராஜ முதலியார் – ஓர் நாடக கம்பெனியின் தலைவர். 

ராஜரத்தின முதலியார் – தனம்மாளின் அத்தை புருஷன். 

மங்களாம்பாள் – ராஜரத்தின முதலியாரின் மனைவி. 

ஜகந்நாதம் – ஒரு வயித்தியர் 

பிளாக்மன் – ஒரு அமெரிக்கன் டைரெக்டர். 

ரஞ்சிதம்மாள் – ஒரு லேடி வயித்தியர் 

ஓர் வேலையாள், ஒரு நர்ஸ், கேமரா மனிதர்கள், மைக் மனிதர்கள், எலெக்டிரிக் மனிதர்கள், முதலிய ஸ்டூடியோ சிப்பந்திகள்,நாடகாபிமானிகள் முதலியோர். 

கதை நிகழ் காலம் – வருங்காலம். 

இடம் – சென்னையிலும், பெங்களூரிலும், பல்லாவரத்திலும். 

என் தகப்பனுார் பம்மல் விஜயரங்க முதலியார் 

என் தாயார் பம்மல் மாணிக்க வேலம்மாள் 

என் நண்பர் சி. ரங்கவடிவேலு 

ஞாபகார்த்தமாக அச்சிடப்பெற்றது 


‘கலையோ – காதலோ?

முதல் அங்கம்-முதல் காட்சி 

இடம் – விஜயலட்சுமி நாடக சாலை, ரங்கமும்,சாலையும். காலம் – நடு ராத்திரி. 

ரங்கத்தின் முன் படுதா மூடியிருக்கிறது. தனம், மங்களாம்பாள், ராஜரத்தின முதலியார், சாலை யில் உட்கார்ந்திருக்கின்றனர் மற்ற ஜனங்களு டன் ; சபையிலுள்ளவர்கள் பெருங் காகோஷம் செய்கின்றனர். 

(சபை ஜனங்கள்) (உரக்க) ரமணன்! ரமணன்! (ஆரவாரம் செய்கின்றனர் கைகொட்டி – முன் படுதா இரண்டு பிரிவாக விலகுகிறது; தியாகராஜமுதலியார், கிருஷ்ணமூர்த்தியை பலாத்காரமாக ரங்கத்தின் முன்பாக இழுத்துக்கொண்டு வருகிறார். கிருஷ்ண மூர்த்தி குனிந்த முகத்துடன் சபையோர்க்கு நமஸ்காரம் செய்கிறான்.) 

தி. : மாது சிரோமணிகளே! கனவான்களே! உங்களுக் கெல்லாம் என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்து கிறேன். இன்றைத் தினம் நாடகமே நடவாது என்று பயந்திருந்த எனக்கு, இந்நாடகத்தை, உங்கள் எல்லோர் மனதையும் அதிக மகிழ்ச்சி யடை யும்படி முடித்து வைத்த, எல்லாம் வல்ல இறைவ னுக்கு, முதலில் நான் நமஸ்காரம் செய்கிறேன். பிறகு இந்நாடகத்தில், கடைசி நிமிஷம் கதா நாயக னாக வேடம் பூண்டு, நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் படியாகவும்,நானும் ஆச்சரியப் படும்படியாகவும், மிகவும் நன்றாய் நடித்து பூர்த்தி செய்த, என் வளர்ப் புப் பிள்ளையாகிய கிருஷ்ணமூர்த்திக்கு, நான் வந்தனம் செலுத்த வேண்டியவனா யிருக்கிறேன். (சபை யில் அனைவரும் கரகோஷம் செய்கின்றனர்.) நாளை முதல் – வழக்கம் போல் – தாமோதரம் நடிப்பதாக சொல்லியனுப்பி யிருக்கிறார் 

ச-ஜ. : (உரக்க) வேண்டாம்! வேண்டாம்! இவரே நடிக் கட்டும்! இவரே நடிக்கட்டும்! கிருஷ்ணமூர்த்தியே நடிக்கட்டும்! 

தி. : அதைப் பற்றி 

ச-ஜ. (உரக்க) இவர் தான் வேண்டும் எங்களுக்கு! தாமோதரம் வேண்டாம்!தாமோதரம் வேண்டாம்! 

(காந்தாமணி,பக்கப்படுதாவின் அருகிலிருந்து புன் சிரிப்புடன் கிருஷ்ண மூர்த்தியைப் பார்க்கிறாள்) 

தி. ஆனால் – உங்கள் – இஷ்டப்படியே ஆகட்டும். 

(மறுபடியும் கரகோஷம்) 

(கிருஷ்ணமூர்த்தி விரைந்து ரங்கத்தின் பின் மறைகிறான்) 

(தியாகராஜ முதலியார் அவனைப் பின் தொடர்கிறார் – முன்படுதா மூடப்படுகிறது; ஜனங்களின் கர கோஷம்.) 

இரண்டாம் காட்சி

இடம் – நாடக சாலையில் வேடம் பூணும் அறை ஒன்று.

காலம் – இரவு 8 மணி. 

காந்தாமணி தன் வேடத்திற்குக் கடைசியில் செய்ய வேண்டிய அலங்காரங்களை யெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள்.தாமோதரம் வருகிறான். 

கா. : வாருங்கள்! – உட்காருங்கள் – ஏது இவ்வளவு தூரம்? இந்த நாடக சாலையில் இனி அடியெடுத்து வைப்ப தில்லையென்று போனீரே! 

தா. : அதெல்லாம்- ஏதோ கோபத்தில் கூறினால் -அதை வாஸ்தவம் என்று நீ எண்ணிவிடலாமோ? 

கா. : ஆனால் – மறுபடியும் இங்கே நடிக்க சித்தமாயிருக்கிறீர்களா என்ன? 

தா . : அதற்கென்ன ஆட்சேபனை? 

கா. : ஆனால் – தகப்பனாரிடம் போய்க் கேட்கிறது தானே?

தா. : கேட்டேன் – அவர் ஏதோ ஆட்சேபனை சொல்லுகிறார். 

கா.: என்ன ஆட்சேபனை சொன்னார்? 

தா. : இந்த நாடகத்தைப் பார்க்க வருபவர்களெல்லாம் கிருஷ்ணமூர்த்திதான் நடிக்கவேண்டுமென்கிறார்கள்- இது முடிவு பெறுமளவும் – இப்பொழுது மாற்றினால் தன் வருமானம் குறைந்துபோகும் – என்கிறார் – உன்னால்தானிருக்கிறது. 

கா.: என்னாலா?- நான் என்ன செய்வது இதற்கு? 

தா. : நான் உன்னுடன் இந்த நாடகத்தில் நடிக்க வேண்டு மென்றிருந்தால் உன் தகப்பனாரிடம் நான்தான் வேண்டும் என்று ஒரு வார்த்தை கூறினால்தான் அவர் இதற்கிசைவார். 

கா.: நான் எப்படி அப்படி கூறுவது? – அவர் என்மீது கோபம் கொள்வார் – என்னால் அது முடியாது. 

தா. : ஏன் முடியாது? 

கா.: முடியாதென்றால் – முடியாது – இதற்கு ஒரு காரணம் வேண்டுமா? 

தா. : காரணத்தை நான் சொல்லவா?

கா. : என்ன சொல்லுங்கள்? 

தா. : கிருஷ்ணமூர்த்தியுடனேயே நீ நடிக்க விரும்புகிறாய்.

கா. : உம் – அப்படியொன்றுமில்லை. 

தா. : பொய் பேசாதே என்னிடம் எனக் கொன்றும் தெரியாதென்று நினைக்கிறாயோ? இந்த நாடகத்தில் கடைசி காட்சியில் நீ ரமணனை முத்தமிட வேண்டி வரும்பொழுது, என்னுடன் நீ நடித்தபோதெல்லாம், மேலுக்கு முத்தமிடுவதுபோல் நடித்தவள், அவனுடன் நடிக்கும்போதெல்லாம் அவனை இறுகக் கட்டி முத்தமிடுகிறாயா இல்லையா? 

கா.: மேடையில் நடிக்கும்போது என்ன செய்கிறோம் என்று நமக்கெல்லாம் ஞாபகமிருக்கிறதா என்ன?

தா. : இந்தக் கதை யெல்லாம் என்னிடம் உதவாது! நீ அவன்மீது காதல் கொண்டிருக்கிறாய் என்பதை நான் நன்றாய் அறிந்தேன் – அவன் அண்ணாமலை நகரிலிருந்து வந்தது முதல், உன் மனம் என்னை மறந்து அவன் பட்சம் மாறியிருக்கிறதென்பதற்குச் சந்தேகமில்லை. 

கா. : அப்படி யொன்றுமில்லை – அப்படி யிருந்தாலும் உமக்கென்ன அதைப்பற்றி? 

தா.: அதைத்தான் கூற வந்தேன்-உன் நன்மையின் பொருட்டு. 

கா.: என் நன்மையின் பொருட்டா? 

தா. : ஆம்-நீ அவன்மீதில் காதல் கொள்வதில் பயனில்லை! அவனை மணக்க உன்னைவிட அழகிலும் ஐஸ்வர்யத்திலும் சிறந்தவள் – ஒருத்தி அவன்மீது கண்ணைப் போட்டுக்கொண்டிருக்கிறாள்! 

கா. : அதுயார் அது? – என்னைவிட அழகிற் சிறந்தவள்?

தா. : சொல்கிறேன் கேள் – தினம் இந் நாடகத்தைப் பார்க்க வருகிறாள் – நாடகத்தைப் பார்க்கவோ, கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கவோ! தினம் முதல் வகுப்பில், இரண்டாம் வரிசையில் தன் அத்தைக்கும், அத்தை புருஷனுக்கும் மத்தியில் உட்கார்ந்திருக்கிறாள் – கவனித்துப் பார் அவள் முகத்தை; கிருஷ்ண மூர்த்தியைவிட்டு அவள் கண்கள் வேறெதையும் கவனிப்பதேயில்லை, நீ கடைசி காட்சியில் ரமணனுக்கு முத்தமிடும்பொழுது – திடீரென்று அவள் பக்கம் திரும்பி அவள் முகத்தைப் பார்! நான் கூறியதின் உண்மை தெரியும். 

கா.: பார்க்கிறேன் – வேடிக்கைக்கு!

தா . : வேடிக்கைக்கோ – விபரீதத்திற்கோ?  – யாருக்குத் தெரியும்? 

கா. : விபரீதமென்ன இதில் – எனக்கு நேரமாகிறது – அதோ மணியடிக்கிறார்கள். பிள்ளையார் பாட்டிற்கு நான் மேடைமீது போகவேண்டும் – நீங்கள் புறப்படுங்கள். 

தா.: அப்பொழுது – எனக்கென்ன பதில்? 

கா.: நான் என்ன பதில் சொல்லக்கூடும்?- நான் என்ன செய்யக்கூடும்? 

தா.: நீ செய்யக்கூடியதைச் சொல்கிறேன் – அதையாவது செய். இந்நாடகத்தில் வில்லனாக நடிக்கும் ஜம்பு நாதன் தாயார் மிகவும் காயலா யிருப்பதாகத் தந்தி வந்ததாகவும், தான் இன்றிரவே நாடகம் முடிந்தவுடன் ஆம்பூருக்கு அவசியமாகப் போகவேண்டி யிருப்பதாகவும் எனக்குச் சொன்னான், சற்று முன்பாக – அவன் பாகத்தையாவது – மர்மாவிடம் சொல்லி- நாளை எனக்குக் கொடுக்கச் சொல்.

கா. : அப்படியே ஆகட்டும் – நீங்கள் புறப்படுங்கள்.

தா.: இதோ (போகும்போது) நான் சொன்னதை இன்று கவனித்துப்பார். (போகிறாள்) 

மூன்றாம் காட்சி 

இடம் – திறக்கப்பட்ட ரங்கமும், நாடகசாலையும்.

காலம்– நடு ராத்ரி. 

ரங்கத்தில் கிருஷ்ணமூர்த்தி ரமணன் வேடத்திலும், காந்தாமணி, அயன் ஸ்திரி வேடத்திலும் தோன்றுகின்றனர். 

நாடகாபிமானிகள் சபையில் வழக்கம்போல் தனம்மாள் முதலியோருடன் உட்கார்ந்திருக்கின்றனர். சற்று தூரத்தில் தாமோதரம் உட்கார்ந்திருக்கிறான். 

கி.: பெண்மணி! என் உயிரைக் காப்பாற்றினை! உனக்கு நான் என்ன கைம்மாறு கொடுத்தாலும் போதாதே!

கா.: நீங்கள் ஒன்றும் கொடுக்கவேண்டிய தில்லை! நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும். 

(தன் மோதிரத்தை கழற்றுவதுபோல் அபிநயக்கிறாள்) 

கி. : உன் இஷ்டம். 

கா. : ஆனால் –இதைப் பெற்றுக்கொள்ளும்! (திடீரென்று அவனைக் கட்டி முத்தமிடுகிறாள்). 

அங்ஙனம் செய்யும்போது, தன் தலையைத் திருப்பி, சபையில் உட்கார்ந்திருக்கும் தனத்தைப் பார்க்கிறான், தனம் ஒருவாறான முகத்துடன் தலை குனிந்துகொள்கிறாள் தாமோதரம்,காந்தாமணியைப் பார்க்கிறான்.) 

ரங்கத்தின் முன்படுதா,விடப்படுகிறது. நாடகசாலையில் ஆரவாரமான கரகோஷம். 

தா-அ. (கரகோஷத்துடன்) ரமணன் !-ரமணி! 

(என்று கூவுகின்றனர்) 

கா. : (ரங்கத்தின் முன்புறமாக, கிருஷ்ணமூர்த்தியை பலாத்காரமாய் இழுத்துக்கொண்டு வருகிறாள். புஷ்பச் செண்டுகளும்,மாலைகளும் அவர்கள் மீதில் நாடகாபிமானிகள் இறைக்கின்றனர்.) 

த. : (ராஜரத்தின முதலியார் காதில் ஏதோ சொல்கிறாள்) 

ராஜரத்தின முதலியார், ஒரு சரிகை மாலையை எடுத்துக்கொண்டுபோய் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தில் போடுகிறார். 

(தாமோதரம் ஏளனமான முகத்துடன் காந்தாமணியைப் பார்க்கிறான்.) 

காட்சி முடிகிறது. 

நான்காம் காட்சி 

இடம் – திறந்திருக்கப்பட்ட ரங்கம். 

(அதன் ஒரு பக்கம் ஒரு ஜெய தோரணம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 

அதன் மத்தியில் கீழ் பாகத்தில் ஒரு சிம்மாசனம் வைக்கப்பட்டிருக்கிறது. 

அதன் கீழ் இரு பக்கத்திலும் மந்திரிபிரதானி வேஷ தாரிகள் நிற்கின்றனர். 

அவர்கள் பாரிசங்களில் சேவகர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். 

ரண பேரிகை ஜெய பேரிகை முழக்கம்,சங்கீதம்.

ரமணன் வேடம் பூண்ட கிருஷ்ணமூர்த்தி ராஜ கோலத்தில் வருகிறான். 

தோரணத்தின் படிக்கட்டுகள் மீதேறி உட்காரப் போகிறான். 

தாமோதரம், நாடகத்தில் அவனது வைரி வேடம் பூண்டு, தோரணத்தில் விசை வைத்திருக்கும் இடத்தை அணுகுகிறான் ரகசியமாக.

முக்கிய மந்திரி ரமணனுக்கு வெற்றி மாலை யிடுகிறார்.

தாமோதரம் ரகசிய விசையை முடுக்க, தோரணம் ரமணன் தலைமீது விழுகிறது. 

ரங்கத்தில் பெரிய கூக்குரலும் ஆரவாரமும் -நடிகர்கள் ரமண்னைத் தப்ப வைக்க விரைகின்றனர். 

சபையில் அதைவிட பெரிய ஆரவாரம். 

சபையிலுள்ள சிலர் ரங்கத்தின்மீது பாய்ந்து ஏறுகின்றனர். 

எல்லோருமாய்க் கூடி கிருஷ்ணமூர்த்தியின்மீது விழுந்த சாமான்களை யெல்லாம் அவசரமாக எடுக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி தலையில் பெருங்காயத்துடன் தென் படுகிறான். 

நாடகம் பார்க்க வந்த ஒரு வயித்தியர் அவனைப் பரிசோதித்துப் பார்க்கிறார்.) 

வை. : மிகவும் அபாயமான காயம்! உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு போங்கள்! 

(தியாகராஜ முதலியார் விரைந்து வெளியே போகிறார், வைத்தியர் காயத்தைக் கட்டுகிறார்) 

ஒதுங்கி யிருங்கள்! காற்று நன்றாய் வரட்டும்!

தி. : (திரும்பி வந்து)என் ஷாபரைக்காணோம்! எங்கேயோ போய்விட்டாள் இச்சமயம்! 

யாருடைய காராவது கிடைக்குமா? – சீக்கிரம்!

தனம்மாள் பக்கப் படுதாவினருகிலிருந்து வருகிறாள்.

த. : என் ‘கார்’ இருக்கிறது! – எடுத்துச் செல்லுங்கள்! சீக்கிரம். 

தி. : அம்மா! உங்களுக்கு கோடி நமஸ்காரம்! 

(வைத்தியர்,தியாகராஜ முதலியார், இன்னும் இரண்டு பெயருமாக ரமணனை வெளியே தூக்கிக்கொண்டு போகின்றனர்) 

காட்சி முடிகிறது. 

ஐந்தாம் காட்சி 

இடம் – ஆஸ்பத்திரியில் ஒரு வார்ட் அறை. 

காலம் – காலை 8-மணி. 

கிருஷ்ணமூர்த்தி, தலை காயம் கட்டப்பட்டு, படுக்கையில் படுத்திருக்கிறான். 

டாக்டர் ஜகந்நாதம் ஜ்வரக் கருவியைக் கொண்டு அவனது ஜ்வரத்தை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார். 

ஒரு நர்ஸ், பக்கலில் நின்றுகொண்டிருக்கிறாள். 

கி. (மெல்லிய குரலுடன்) : டாக்டர்- என்னமாயிருக்கிறது. 

ஜ. : அப்பா!-பிழைத்தாயப்பா! தெய்வாதீனத்தால்!- ஜ்வரம் இறங்கிவிட்டது. 

கி. : அப்பொழுது – எப்பொழுது – நான் நாடகமாடலாம்? 

ஜ. : நாடகமா? உனக்கென்ன பயித்தியம் பிடித்திருகிறதா என்ன? – இன்னும் ஆறு மாதத்திற்கு அந்த ஞாபகம் கனவிலும் வேண்டாம்! நாடகமா ஆட வேண்டும் இதற்குள்? மறுபடியும்? (உரக்க நகைக்கிறார்) நாடகமா ஆடவேண்டும்! 

மங்களாம்பாளும் தனம்மாளும் வருகிறார்கள். 

ம. : டாக்டர், இன்றைக்கு எப்படி யிருக்கிறது? 

ஜ. : நான், நேற்றே சொன்னேன், கண்டம் தப்பி விட்டான் பிள்ளையாண்டான்! டாக்டர் சிரித்துக் கொண்டிருந்தால் நோயாளிக்கு பயமில்லை என்று அர்த்தம்! (நகைக்கிறார்) 

த. : சந்தோஷம். – எதற்காக நகைக்கிறீர்கள்?

ஐ. : அதுவா? பிள்ளையாண்டானை இப்பொழுது தான் யமன் கையினின்றும் உன் உதவியால் நான் தப்பிப் பிழைக்க வைத்தால் இதற்குள்ளாக தான் எப்பொழுது மறுபடியும் நாடகமாட முடியும் என்று கேட்கிறான்! 

கி. : அவர்கள் – உதவியாலா 

ஜ.: அடடா!- நான் வாய்தவறி கூறிவிட்டேன் – என்னை மன்னியுங்கள்! இதை நான் அவனுக்குச் சொல்வ தில்லை யென்று நான் கூறிய மொழியினின்றும் தவறிவிட்டேன்! அவன் பிழைத்த சந்தோஷத்தில் நான் கொடுத்த வாக்கை மறந்தேன். இனி ஒளிப் பதில் பயனில்லை, கிருஷ்ணமூர்த்தி நீ அந்த பெரிய ஆபத்தினின்றும் தப்பி உயிர் பெற்றது,முக்கால் வாசி இந்தப் பெண்மணியால் – கால் பாகம் என் சிகிச்சையால். 

கி. : அது எப்படி? 

ஜ.: எனக்கு உத்திரவு கொடுங்களம்மா – இனி நான் சொல்லித் தான் தீரவேண்டும். கிருஷ்ணமூர்த்தி, ரத்தப் பெருக்கினால் உன் உயிர்போக இருந்த சமயத் தில், தன் ரத்தத்தை, டிரான்ஸ்பியூஷன் (Transfusion) பண்ணுவற்காக, கொஞ்சமும் பயப்படாமல் கொடு த்து, தனம்மாள் தான் உன் உயிரைக் காப்பாற்றி னார்கள்; இல்லாவிட்டால், அன்றே, நீ இறந்து போயி ருப்பாய்! அப்புறம் உன் நாட மெல்லாம் வைகுண் டத்தில் தான் ஆடவேண்டி வந்திருக்கும். 

(கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தனம்மாளின் கண்களைச் சந்திக்கின்றன) 

த. : அதிருக்கட்டும் டாக்டர் இனிமேல் உயிருக்கு அபாயமில்லையே? 

ஜ. : இல்லை. ஆயினும் அவன் உடம்பு தேறுவதற்கு, இன் னும் ஆறு மாதம் பிடிக்கும். அதுவரையில் நாடக மேடையையே எட்டிப் பார்க்கலாகாது, என்று சொல்லியிருக்கிறேன். ஏன்? உங்களுக்கு அதுவருத்த மாயிருக்கிறதோ? 

த. : எனக்கு வருத்தமேயில்லை – அவர், நாடகமே எப்பொ ழுதும் ஆடக்கூடாதென்று நீங்கள் கட்டளை யிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான் 

ஜ. : நீ புத்திசாலி அம்மா, அம்மட்டும் எங்கே உனக்கும் இந்த நாடகப் பயித்தியம் பிடித்திருக்கிறதோ என்று பார்த்தேன் 

காந்தாமணியும் தியாகராஜ முதலியாரும் வருகிறார்கள்.

ம. : தனம் – நாம் போகலாம் வா -(கிருஷ்ணமூர்த்தியிடம்) நாங்கள் வருகிறோம். 

(இருவரும் போகிறார்கள்)

தி. : என்ன டாக்டர்? இன்றைக்கு எப்படி இருக்கிறது? 

ஜ. : ஜ்வரம் பூராவாக நின்றுவிட்டது.இனி ஒரு அபாயமு மில்லை. 

தி-கா.: ஆனால்- 

ஐ.: நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் – இப்பொழுதே சொல்லி விட்டேன். உடம்பு நன்றாய்த் தேறி, முன்பிருந்த பலம் வருமளவும் பிள்ளையாண்டான் நாடக மேடைமேல் கால் வைக்கக்கூடாது. 

தி. என்ன டாக்டர்! – உடம்பு தேறுவதற்காக ஏதாவது நல்ல டானிக் (Tonic) கொடுத்தால்?- 

கா. : அதற்காக என்ன செலவானாலும் பெரிதல்ல. 

ஐ.: இந்த டானிக்குகளிலெல்லாம், எனக்கு நம்பிக்கை யில்லை. பெஸ்ட்டானிக் (Best Tonic) என்னவென்றால் கம்ப்ளீட் ரெஸ்ட் (Complete rest) தான். அவன் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் அவனை மறுபடியும் ஆறு மாதம் வரையில், நாடகமாடும்படி கேட்காதீர்கள்!- எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது — நான் வருகிறேன். 

(போகிறார்) 

(காந்தாமணி படுக்கையிலிருக்கும் நாற்காலியில் போய் உட்காருகிறாள். )

(அறையில் இருக்கும் கடிகாரம் 9 – மணி அடிக்கிறது) 

நர்ஸ். : அம்மா – ஐயா – மணியாகி விட்டது. இனிமேல் நீங்கள் வார்டில் இருக்கக்கூடாது. 

கா. : (கிருஷ்ணமூர்த்தியிடம்) ஆனால் நாளைக்கு சீக்கிரம் வருகிறேன். 

(தியாகராஜ முதலியாருடன் போகிறாள்) 

காட்சி முடிகிறது. 

ஆறாம் காட்சி 

இடம்- ஆஸ்பத்திரியின் வெளி வெராண்டா. 

கிருஷ்ணமூர்த்தி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். வெயில்பட பின்புறம் ஒரு ஜன்னல் திறந்திருக்கிறது. 

கி. : இன்னொருமுறை படித்துப் பார்க்கிறேன். (கையி லிருக்கும் ஒரு கடிதத்தைப் படித்துப் பார்க்கிறான் ஐயோ! இன்னும் ஆறு மாதமா? 

தியாகராஜ முதலியார் காந்தாமணியுடன் வருகிறார். 

தி. : என்ன காகிதம் கையில்? சர்ஜன்களால் அனுப்பியதா ? அந்த மேதாவி என்ன சொல்லுகிறார். 

கி. : நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் — இன்னும் ஆறு மாதம் பொறுக்கவேண்டுமாம். 

தி. : (காகிதத்தை விரைவில் படித்துப் பார்த்து) நினைத்தேன்! – எல்லாம் அந்த தேவடியாள் நாரி செய்யும் சூழ்ச்சி என்று நினைக்கிறேன். 

கி. : அப்பா! – அப்படி யாரைச் சொல்கிறீர்?

தி. : யாரை! அவள் பெயர் என்ன? தனம்மாளா? அவளைத்தான் ! 

(இச்சமயம் தனம்மாள் பலகணியில் தோன்றி, உடனே மறைகிறாள்) 

கி. : அப்பா, என்னை என்ன வேண்டுமென்றாலும் திட்டுங்கள், என் உயிரைக் காத்த அந்த உத்தமியைத் திட்டாதீர்கள் அவ்வாறு அவர்கள்மீது ஒரு குற்றமுமில்லை. 

தி. : ஒரு குற்றமுமில்லை என்னேரமும் உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறாளே! இதைவிட இன்னம் என்ன குற்றம் செய்யவேண்டும்? – சம்சாரிப் பெண்ணாயிருந்தால் இவ்வாறு செய்வாளா?- கிருஷ்ணா! நான் சொல்வதைக்கேள், இதுதான் என் கடைசி வார்த்தை; இந்த வைத்தியர்கள் பேச்சை யெல்லாம் நம்பாதே – எனக்குத் தெரிந்த தமிழ் வைத்தியர் ஒருவரைக் கேட்டேன்; அவர் தன்னிடம் ஒரு சிறந்த லேகியம் இருப்பதாகச் சொல்லுகிறார், அதைச் சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கெல்லாம், உன் உடம்பு முன்போல் பலமாகிவிடும்; இன்றைக்கு ஒன்பதாம நாள் நமது நாடகசாலையை மறுபடியும் திறப்பதாகப் பிரசுரம் செய்து விட்டேன் – நீயும் காந்தாமணியும் – முன்போல் நடிக்கலாம். 

கா. : ஆம் – எனக்காகவாவது கொஞ்சம் ஒப்புக்கொள்ளுங்களேன். 

கி. : அப்பா -என்மீது கோபியாதீர் – எனக்காக இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்ட – அந்த தனம்மாளை – ஒரு வார்த்தை கேட்டுவிட்டு –

தி. : கிருஷ்ணா !- இனி அந்த தேவடியாள் பெயரை என் முன் – இன்னொரு முறை கூறினால் – உன் முகத்தி லேயே விழிக்கமாட்டேன்! அவள் தான் இந்த இரண்டு வயித்தியர்களுக்கும் ஏதோ வஞ்சம்கொடுத்து இவ்வாறு உனக்கு போதிக்கும்படி செய்திருக்கிறா ளன்று நான் நினைக்கிறேன். இதுதான் என் கடைசி வார்த்தை – குரியாக இப்பொழுதே, என் வீட்டிற்கு என்னுடன் வந்துவிடு. வயித்தியர்களுக்குச் சேரவேண்டிய பணத்தை யெல்லாம் எப்படி யாவது கஷ்டப்பட்டாவது, உடனே நான் இன்றே தீர்த்து விடுகிறேன். (தனம்மாள் மறுபடியும் ஜன்னலண்டை வந்து, ஒட்டுக் கேட்கிறாள்; மறைவாக) என்ன சொல்கிறாய்? – ஆம் இல்லை என்று சொல்! திருடனைப் போல் விழிக்காதே! 

கி. : உம் – (தியாகராஜ முதலியாரைக் கோபித்துப் பார்க் கிறான்.) 

தி. : சரி! நீ பதில் சொல்லவேண்டாம்! உன்மீது தவ றில்லை. அவள் சொக்குப் பொடி போட்டுவிட்டாள்! இனி என் வீட்டின் வாசலண்டை கால் எடுத்து வைக்காதே! – நீ யில்லாவிட்டால் எனக்கு ஆயிரம் ஆக்டர்கள் கிடைப்பார்கள்! நான் அவர்களைக் கொண்டு என் கம்பெனியை நடத்தத்தெரியும் – உன் வயித்தியச் செலவையெல்லாம் நீயே கொடுத்துக் கொள்!- இந்த ஆறுமாசம் உன்னை யார் சவரட்சணை செய்கிறார்களோ பார்ப்போம். 

கா. : (கிருஷ்ணமூர்த்தி அருகிற்போய்) கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்களேன்? 

தி. : ஏ! கழுதை! அவனோடு உனக்கென்ன பேச்சு இனி மேல்? நீயும் அந்த தனம்மாளைப்போல் தேவடியாள் ஆகாதே!- அநாதையாய் தெருவில் கிடந்த அவனை எடுத்து வளர்த்து – அவனை பெரிய ஆக்டராக்கினதற்கு – எனக்கு நல்ல புத்தி கற்பித்தான் அவன்!

கா. : அப்பா – கொஞ்சம் பொறுங்கள் – 

தி. : ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன்!-வா என்னு டன் உடனே! (காந்தாமணியைக் கையும் பிடியுமாக இழுத்துக்கொண்டு வெளியே போகிறார்) 

கி. : ஈஸ்வரா! ஈஸ்வரா! என்ன உலகம் இது (பக்கத்தி லிருக்கும் மேஜையின் மீது தலைசாய்த்து தேம்பிப் புலம்புகிறான்.) 

(சில வினாடிகள் கழிந்தவுடன் தனம்மான் மெல்ல சந்தடி செய்யாமல் உள்ளே வருகிறாள்)

கி. : என்ன உலகம்! இதுவும் ஒரு நாடகமேடையா!- இதிலிருப்பதைவிட என் உயிரை மாய்த்துக்கொள் கிறேன் !- வாஸ்தவத்தில்?- (எழுந்திருக்கிறான்)

த. : (அவனைத் தடுத்து) வேண்டாம்! வேண்டாம்! பொறுங்கள்! பொறுங்கள்! 

கி. : தனம்மாள்!- எப்பொழுது வந்தாய் இங்கு? 

த. : கொஞ்ச நேரத்திற்கு முன் அவசரப்பட்டு ஒன்றும் செய்யாதீர்கள்! எல்லாக் கஷ்டங்களினின்றும் ஈஸ்வரன் காப்பாற்றுவார்! 

கி. : ஓ! இங்கு நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாயா? கேட்டுக்கொண்டிருந்தாயா? 

த. : ஆம்! – என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். 

கி.: உன் வழக்கத்திற்கு விரோதமாய் நீ யேன் தனியாக வந்தா யிங்கு? 

த.: நான் என் அத்தையுடன் தான் வந்தேன்- அவர்கள் மெத்தைப்படி இந்தப் பக்கம் ஏறி வரும்பொழுது ஒரு கடுந்தேள் அவர்கள் காலில் கொட்டி விடவே அப்பாதை பொறுக்காமல், வயித்தியரிடம் போய் சிகிச்சை செய்துகொள்ளப் போனார்கள் விரைவாக. நான் சர்ஜன் ஜெனரல் என்ன அபிப்பிராயம் எழுதியனுப்பினார் — என்று ஒரு நிமிஷத்தில் கேட்டுக் கொண்டு திரும்பிப் போகலாம் என்று வந்தேன். அந்த ஜன்னலண்டை வரும்போது என் பெயரைக் கேட்கவே – நான் தியாகராஜமுதலியார் பேசியதைக் கேட்க வேண்டியதாயிற்று. 

கி. : ஐயோ! தனம்! என் உயிரைக் காத்த – உத்தமியாகிய உனக்கு – நான் ஒரு கெட்ட பெயர் கொண்டுவருவது நியாயமல்ல! சர்ஜன் ஜெனரல் இன்னும் ஆறுமாதம் பொறுக்க வேண்டு மென்று எழுதிவிட்டார் தனம்!- இனி இங்கு இராதே நீ! போய்விடு! முகத்தைத் திருப்பிக்கொள்கிறான்) 

த. : உடனே போய்விடுகிறேன் – நீங்கள் இனி என்ன- செய்யப்போகிறீர்கள் — என்று மாத்திரம் சொல்லி விடுங்கள். 

கி.: நானா? எந்த தீர்மானத்திற்கு வரவும் சக்தி யில்லாதவனா யிருக்கிறேனே! என்ன ஜென்மம்! என்ன ஜென்மம்! எனக்கு நன்மை செய்தவர்களுக்கெல்லாம் தீமைசெய்ய நான் பிறந்திருக்கிறாற்போலிருக்கிறது. தந்தை போல் என்னை வளர்த்தெடுத்தவர் என்னை வெறுத்துச் செல்லும்படியாகச் செய்தேன்! என் உயிரைக் காத்த உத்தமியாகிய உனக்கு- அபகீர்த்தியைக் கொண்டுவருவேன் போலிருக்கிறதே. 

த. : அவ்வாறு நீங்கள் – செய்ய மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். 

கி. : ஐயோ! தனம்! இந்த உலகம் எவ்வளவு கெட்ட தென்று உனக்குத் தெரியாது – எனக்கு இப்பொழுது தான் தெரிகிறது! 

த. : எனக்கும் தெரிகிறது – தெரிந்தபடியால்தான் – இப்படிக் கூறுகிறேன். 

கி. : அந்தோ ! உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதென்கிறார்களே? 

த. : அதை அடக்கும் மார்க்கம் உங்கள் கையிலிருக்கிறது. 

கி. : என் கையிலிருக்கிறதா? 

த. : ஆம் (தலை குனிந்துகொள்கிறாள்) 

கி. : என் கையிலா?- ஓ ! 

த. : ஆம் – (மெல்லிய குரலுடன்) 

கி. : தனம்! எத்தனையோ செல்வவந்தர்களெல்லாம் உன்னை மணக்கக் காத்துக்கொண்டிருக்கும்பொழுது – பரம ஏழையாகிய என்னை –  

த. : யார் உங்களை ஏழை என்று சொன்னது? 

கி. : வயித்தியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவும் – தற்காலம் – சக்தியற்ற நான் ஏழை அல்லாது என்ன? என்கையில் அரைக் காசும் கிடையாது 

த. : உங்கள் கையில் – வேண்டிய – தனம் – இருக்கிறது.

கி. : (அவளைக் கட்டியணைத்து) என் கண்ணே! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன்! நான் உன் உடையவன்!

த. : இல்லை! நான் தான்- உம்முடையவள்! 

கி. : இல்லை நான்தான் உன் உடையவன், 

த. : சரி! இனி இந்த நாடகச் சண்டை வேண்டாம்! யாராவது வரப்போகிறார்கள்! 

(அவன் கரத்தினின்றும் பிரிந்து சற்று விலகி உட்கார்ந்து)

இப்பொழுது சொல்லுங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்று. 

கி. : நீ என்ன செய்யச் சொல்கிறாய்?- நான் தான் உன்னுடையவயிைற்றே. 

த. : சரி, அப்படியே இருக்கட்டும் — என் காரைக்கொண்டு வருகிறேன். இன்றைக்கே இவ்விடம் விட்டுப் புறப் படு நாம் சீக்கிரம் மணம் செய்துகொண்டு- பெங்களூருக்குப் போய் – வயித்தியர் சொன்ன ஆறு மாதத்தையும் – கவலையின்றிக் கழிப்போம். 

கி. : அப்படியே ஆகட்டும் ஆனால் கொஞ்சம் பொறு. வயித்தியரைப் பார்த்து அவருக்குச் சேரவேண்டிய பணத்தை – நான் எப்படியாவது – பிறகு செலுத்து வதாகக் கூறிவிட்டு – (எழுந்திருக்கிறான்) 

த. : அப்படிக் கூறவேண்டியதில்லை – அந்தப் பணம் எல்லாம் அவருக்கு சேர்ந்துவிட்டது. 

கி. : (நின்று) சேர்ந்து விட்டதா? யார் கொடுத்தது? 

த. : யார் கொடுத்தாலும் உமக்கென்ன – ஒருத்தி கொடுத்தாள். 

கி.: உம் – அவள் பெயர் எனக்குத் தெரியும் (மறுபடியும் அவளைக் கட்டி அணைத்து) கண்ணே! நீ செய்யும் உபகாரத்திற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? 

த. நான் ஒரு வரம் கேட்கிறேன் அதைக் கொடும்.

கி. : ஒன்றல்ல நூறு கேள் – தருகிறேன். 

த. : இன் இந்த நாடக மேடைமீது ஏறுவதில்லையென்று, சத்தியம் செய்துகொடும். 

கி. : தனம்! – என்ன இப்படி கேட்கிறாய்? 

த. : அதற்கு ஒரு காரணமுண்டு –நான் கேட்கும் வரத்தைக் கொடுக்க மாட்டீரா? 

கி. : நீ கேட்பதை நான் எப்படி மறுப்பேன்? ஆகட்டும்- அப்படியே ஆகட்டும். (கையடித்துக் கொடுக்கிறான்)

த. : இதோ நான் – இதற்கு -உமக்கும் கொடுக்கும் கைம்மாறு!  (முத்தமிடுகிறாள்) 

(இச்சமயம் பலகணி வழியாக, படியேறி விரைந்து வந்த காந்தாமணி, இதைக்கண்டு அசைவற்று நின்று விடுகிறாள்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் அங்கம்-முதல் காட்சி 

இடம்- பெங்களூரில் லால்பாக்குக் கடுத்த ஓர் பங்க ளாவின் வெராண்டா. ஒரு டிபாயின் மீது காப்பி முதலியன வைத்திருக்க அதன் இருபுறமும் கிருஷ்ணசாமியும் தனம்மாளும் உட்கார்ந்திருக்கின்றனர். 

(கிருஷ்ணசாமி காபியைக் குடித்துக்கொண்டே ஒகு காகிதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான்.) 

த.: டாக்டர்.என்ன எழுதியிருக்கிறார்? 

கி.: “இனி யொன்றும் பயமில்லை, உனக்கு எல்லாம் முன் போல் சவுக்கியமாய்விட்டது” என்று எழுதியிருக்கிறார் அடே! இதை யார் எழுதச் சொன்னது இவரை? 

த. : என்ன எழுதியிருக்கிறார் இன்னும்? 

கி. : “இனி – நீ உன் இஷ்டப்படி நாடகமாடலாம்” முன் போல்! – (ஒருவிதமாக நகைக்கிறான்) 

த. : நீங்கள் இதைப்பற்றி – கேட்டீர்களா என்ன? 

கி. : எனக்கென்ன பயித்தியமா கேட்க? – அவராக எழுதி யிருக்கிறார். 

த.: அவராக ஏன் எழுதினார்?  

க. : நீ நல்ல புத்திசாலியாயிற்றே !- இந்தக் கேள்வி நீ அவரை யல்லவோ கேட்க வேண்டும் – என்னைக் கேட்பதில் என்ன பிரயோஜனம்? 

த.: ஆனால் – உங்களை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்- உங்களுடைய உண்மையான அபிப்பிராயத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டும். 

கி. : கேள்.. 

த. : மறுபடியும் நாடக மேடைமீதேறி நடிக்கவேண்டு மென்று, உங்களுக்குக் கொஞ்சமாவது விருப்பமிருக்கிறதா – இல்லையா? 

கி.: இதென்ன கேள்வி? – இருக்கிறது, இல்லை – இதைப் – பற்றி யோசித்து என்ன பிரயோஜனம்? நான்தான் உனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேனே! 

த. : அதிருக்கட்டும் – என் கேள்விக்குப் பதில் சொல்லும் ஒன்றும் ஒளியாமல். 

கி. : இதில் ஒளிப்பதற்கொன்றுமில்லை – உனக்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன் – ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு- “ஒரு முறை நடிகன் – எப்பொழுதும் நடிகன் என்று – ஆயினும் இதைப்பற்றி உனக்கு கவலையே வேண்டாம் — நான் இனி ஒரு ஸ்திரீயுடனும் நாடகமேடையில் நடிக்கமாட்டேன். 

த. : என்னோடு கூட நடிக்கமாட்டீரா? 

கி. : ஆ!– உனக்கு அந்த இச்சையிருக்கிறதா?-நீ நடிக் கக கற்றுக்கொள்கிறாயா? – நான் கற்பிக்கவா?

த. : இந்த ஜன்மத்தில் அக்கலையை நான் கற்பது அசாத்திய மென்று நினைக்கிறேன். 

கி. : இவ்வுலகில் ஒன்றும் அசாத்திய மென்பதில்லை நான் உனக்குக் கற்பிக்கிறேன். 

த. : எனக்குப் பாடத் தெரியாதே? 

கி. : ஒன்றும் கஷ்டமில்லை – உனக்கு நல்ல குரல் இருக்கிறது – இன்றைக்கே உனக்கு பாட்டு கற்பிக்க ஆரம்பிக்கிறேன் – என்ன சொல்கிறாய்? 

த. : இப்பொழுது வேண்டாம் இரண்டு மூன்று மாதங்கள் போகட்டும் – எனக்குப் பிரசவ மாகட்டுமே அப்புறம் ஆரம்பியுங்கள்.  

கி. : அவ்வளவு சொன்னது போதும் கண்ணே! (அவளைக் கட்டி முத்தமிடுகிறான்)  

(தியாகராஜ முதலியார் மூச்சு இறைக்க விரைந்து வருகிறார்.)

கி. : அப்பா வாருங்கள்! என்ன பெருமூச்சு வாங்குகிறது?

தி. : உட்காருங்கள் மாமா 

தி. (உட்கார்ந்து பாதி சந்தோஷத்தினால் – பாதி வந்த அவசரத்தினால்.

கி.: என்ன சந்தோஷம்? 

த. : என்ன அவசரம்? 

தி. : சுருக்கிச் சொல்கிறேன் – ரெயிலைவிட்டு இறங்கியதும் டாக்டரிடம் விரைந்து போனேன். அவர் உனக்கு உன் உடம்பு எல்லாம் சவுக்கியமாகிவிட்ட தென்றார் – அது சந்தோஷம் மிகவும்! அங்கிருந்து விரைந்து ஓடி வந்தேன் — அது அவசரம்! அம்மா, கொஞ்சம் காபி யிருந்தால் கொடு. 

த. : இதோ (விரைந்து போகிறாள்) 

கி.: நாடகங்களெல்லாம் சரியாக நடந்து வருகின்றனவா? 

தி. : அதைப்பற்றிதான் உன்னிடம் அவசரமாகப் பேச வந்தேன். 

(தனம்மாள் ஒரு வெள்ளித் தட்டில் காப்பி முதலியன கொண்டு வருகிறாள்.) 

கொண்டு வா அம்மா. (காப்பியைக் குடிக்கிறார்) நீ தீர்க்க சுமங்கலியாய் சிரஞ்சீவியாய் வாழவேண்டும். 

(காப்பி டம்லரை தட்டில் வைக்கிறார்.) 

கி. : என்ன விசேஷம் அப்பா? பட்டணத்தை விட்டு அவசரமாக வந்தது? 

தி, : முதலில், உன்னை நான் ஏதோ கடிந்து பேகினேன் என்பதை நீ மன்னிக்க வேண்டும் – அதை யெல்லாம் மறந்து விடு. 

கி. : அப்பொழுதே மறந்து விட்டேன். 

தி. : கிருஷ்ணமூர்த்தி! நான் உன்னிடம் ஒரு வரம் கேட்க வந்தேன்.  

கி. : என்னிடமா? 

தி. : ஆம் அப்பா – உன்னைச் சிறு வயது முதல் பதினைந்து பதினாறு வருடங்கள் நான் உன்னைக் காப்பாற்றினேன். இப்பொழுது நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்! 

கி. : இதென்ன இப்படி கூறுகிறீர்கள்? நான் உங்களைக் காப்பாற்றுவதாவது? 

தி. : என்மானம் -என் உயிர் – எல்லாம் உன் கையிலிருக்கிறது! நான் கேட்கும் வரத்தை நீ இப்பொழுது கொடுக்கவேண்டும். 

கி. : ஆகட்டும் –என்ன சமாசாரம் சொல்லும். 

தி. : சுருக்கமாய்ச் சொல்கிறேன்-நீ என் நாடக கம்பெனியை விட்டது முதல், எல்லாம் பாழாகி விட்டது! வசூலெல்லாம் போய் கடன்காரனாகிவிட்டேன்! இதையெல்லாம் சரிப்படுத்த நான் ஒரு புதிய நாடகம் தயாரித்து, ஒத்திகை செய்து கொண்டு வந்தேன்- வருகிற சனிக்கிழமை ஆரம்ப விழாவென்று எல்லாப் பிரசுரங்களும் செய்துவிட்டேன் கனம் கவர்னர் அவர்கள் அதற்கு விஜயம் செய்வதாக ஒப்புக்கொண்டார். நேற்று – திடீரென்று அயன் ராஜபார்ட் ஆக்டர் – தாமோதரத்திற்கு – அவனை உனக்குத் தெரியுமே – ஓர்வித பாரிசவாயு மாதிரி கண்டுவிட்டது. டாக்டர்கள் அவன் பிழைப்பதே கஷ்டம் என்று கூறுகிறார்கள். நான் என்ன செய்வது? ஒருவன் தான் அந்த பாத்திரத்திற்கு லாயக்கானவன் உன்னால் தான் இன்னுயிருக்கும் இந்த இரண்டு நாட் களில் அதைக் கற்று நடிக்க முடியும் கிருஷ்ண மூர்த்தி! இப்பொழுது நீ என்னைக் கை கொடுத்து தூக்கி விடாவிட்டால், என் மானமும் போய், என் உயிரும் போம்! – எப்படியாவது நீ அந்த பாரத்தை மேற்கொள்ள வேண்டும். 

(எழுந்திருந்து கிருஷ்ணமூர்த்தியின் கரங்களை பற்றுகிறார்) 

கி. : (தன் கரங்களை மெல்ல வாங்கிக்கொண்டு) அப்பா! – என்னை மன்னிக்க வேண்டும். இது என்னால் செய்ய முடியாது. 

தி.: கிருஷ்ணமூர்த்தி! நீ எனக்கு வரங்கொடுத்துவிட்டாய் – அதை மறுக்கலாமா? 

கி. : ஒருமுறை வாக்களித்தால் அதை மறுக்கலாகாது என்று கூறுகிறீர்களா? 

தி. : ஆம்! அதுவே எல்லா மதத்தினர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம். 

கி. : அக்காரணத்தினால் தான் – நான் உமக்கிசைய அசக்தனாயிருக்கிறேன். 

தி. : ஏன்?- எப்படி? 

கி. : இதற்கு முன்பாக தனத்திற்கு – நான் மறுபடியும் நாடகமேடை ஏறுவதில்லை என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன் – என் விவாக காலத்தில், 

தி. : ஐயோ!- நான் அப்பொழுதே சந்தேகித்தேன் இனி என் கதி என்ன ஆவது? (துக்கப்படுகிறார்) அம்மா! தனலட்சுமி! – இனி வேறு வழியில்லை நீ தான், என்னை இப்பெரிய ஆபத்தினின்றும் காப்பாற்றவேண்டும்! (தேம்பி அழுகிறார்) 

த.:மாமா! துக்கப்படாதீர்கள் – சொல்லும் — நான் என்ன செய்யக்கூடும் இச்சமயத்தில்? 

தி. : சொல்கிறேன்! உனக்குத் தானே – உன் புருஷன் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை அதனின்றும் மாற, அதற்கு நீயே உத்திரவு கொடுத்தால் அது தவறாகாது. தனலட்சுமி, வாஸ்தவமாகச் சொல்கிறேன், நீ எனது நாடகசாலைக்கு வருவதை விட்டது முதல், அதிலிருந்த லட்சுமியே விலகிவிட்டது போல் ஆகிவிட்டது நீ கொஞ்சம் பெரிய மனது பண்ணி என் மீதிரங்கி – உன் புருஷனுக்கு இந்த ஒரு நாடகத்தில் மாத்திரம் நடிக்க உத்திரவு கொடு. அப்பொழுது அவர் உனக்குக் கொடுத்த வாக்கினின்றும் தவறிய பாபத்திற்கு ஆளாக மாட்டார். என் மானத்தையும் – என் உயிரையும் காப்பாற்றியவளா வாய்! (தேம்பி அழுகிறார்) 

த. : மாமா – நான் உத்தரவு கொடுக்கிறேன் – இந்த நாடகத்தில் மாத்திரம் நடிப்பதற்கு. 

(இச்சமயம் ஓர் மூலையில் ஓர் பிராகட் (Bracket) டில் வைத்திரூந்த லட்சுமியின் பொம்மை கீழே விழுகிறது, ஓர் பெருங்காற்றடித்ததினால்) 

கி.: தனம் — இது எனக்கிஷ்டமில்லை. 

த.: பாவம்!–மிகவும் வருத்தப்படுகிறார்.நானே உங்களைக் கேட்டுக்கொள்கிறேனே. 

கி. : அப்படியானால் – ஆகட்டும். 

தி. : .அப்பா!- அம்மா! – தனலட்சுமி! என் வயிற்றில் பாலை வார்த்தாய் நீ தீர்க்க சுமங்கலியாய் பல்லாண்டு வாழ் வாயாக –அப்பா,கிருஷ்ணமூர்த்தி- இன்றைக்கே சாயங்காலம் ரெயிலேறிப் புறப்படவேண்டும் – காலமில்லை. 

கி.: தனம் – நீயும் வா என்னுடன். 

த.: உம் – நாளை காலை லேடி டாக்டர் என்னைப் பார்த்து, ஏதோ புதிய மருந்து கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு – அவர்கள் உத்தரவு பெற்று – நான் உடனே பட்டணம் வந்து சேர்கிறேன். 

கி.: அப்பா,அப்பொழுது-நானும் லேடி டாக்டர் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டுவிட்டு நாளைக்கு வருகிறேனே. 

தி. : ஐயோ! இன்னும் இரண்டு நாட்கள்தானிருக்கின்றனவே — ஒரு ஒத்திகையாவது பார்க்க வேண்டுமே உன்னுடன். அம்மா – இதற்கும் நீ உத்தரவு கொடு. த. (கிருஷ்ணசாமிக்கு) நீங்கள் எனக்காக ஒன்றும் யோசிக்க வேண்டாம் — புறப்படுங்கள் இன்றைக்கே. நான் கூடிய சீக்கிரத்தில் வந்து சேர்கிறேன். 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் அங்கம் -முதல் காட்சி

இடம் – பெங்களூரில் ஓர் பங்களாவில் ஓர் உள் அறை. 

காலம் – பகல். 

தனம்மாள் சோபாவின்மீது படுத்துக்கொண்டிருக்கிறாள். அவள் பக்கலில் ஒரு டிபாயின் மீது. சில மருந்து புட்டிகள் வைக்கப்பட் டிருக்கின்றன 

த. : இரண்டு நாளாகக் கடிதம் வரவில்லை – தாயி– தாயி. (கூப்பிடுகிறாள்) 

வேலைக்காரத் தாய் வருகிறாள். 

தா. : ஏம்மா? 

த. : இன்றைய தபால் வந்ததா? 

தா. : இன்னும் வரலெ அம்மா இன்னம் பத்து மணி ஆவலெயே. தபால் வந்தவுடனே உங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கறேன் இண்ணேனே! 

த. : அதோ! யாரோ கதவைத் தட்டுகிறார்கள்? – தபால் காரனா பார். 

தா. : அது டாக்டரம்மாள் தட்டுகிறது – எனக்கு தெரியுமே 

(போகிறாள்) 

த. : என்ன – என் மனம் இப்படி திகிலடைந்திருக்கிறது!

(லேடி டாக்டர் மீனாட்சியம்மாள், தாயுடன் வருகிறார்கள்.)

மீ. : தனம்மாள், இன்றைக்கு எப்படி யிருக்கிறது?

த. : எல்லாம் சரியாகிவிட்டது டாக்டரம்மா- இன்றைக்கு எனக்கு உத்தரவு கொடுக்கிறீர்களா சென்னப் பட்டணம் போக (தாயி வெளியே போகிறாள்) 

மீ. : கொஞ்சம் பொறு அம்மா, இத்தனை நாள் பொறுத் தாயே — இன்னும் இரண்டு நாள் பொறுக்கிறதற் கென்ன?- என்ன அப்படி துடிக்கிறாய் பட்டணம் போக? (சொல்லிக் கொண்டே, ஹிருதயம் பரிசோதிக்கும் கருவியை வைத்து ஹிருதயப் பரீட்சை செய்கிறாள்) என்ன இது? தனம்மாள்! என்ன உன் இருதயம் இப்படி படபட வென்று அடித்துக்கொள்ளுகிறது! எதையாவது கண்டு பயந்தாயா? (மறுபடியும் பரிசோதிக்கிறார்கள்) – உண்மையைச் சொல். 

த. : ஒன்றைக் கண்டும் நான் பயப்படவில்லை. என் மன திற்குள் – என்னமோ மாதிரி இருக்கிறது. சீக்கிரம் பட்டணம் போகவேண்டு மென்றிருக்கிறது – அங்கே போனால் எல்லாம் சுவஸ்தமாகி விடுமென்று நினைக்கிறேன். 

மீ. : பட்டணமா போகவேண்டும்! இந்த ஸ்திதியில் நீ படுக் கையை விட்டே எழுந்திருக்கக்கூடாது!- எழுந்திருந்தால் உனக்கு அபாயம் நேரிடும். 

த. : என்ன – அபாயம்? 

மீ. : உனக்குச் சொன்னால் தெரியாது. 

து.: டாக்டரம்மா, அம்மா சொல்லுங்களேன் – நான் பயப்படமாட்டேன். 

மீ. : உம் – உன் உடம்பு கொஞ்சமாவது இந்த ஸ்திதியில் அலண்டால் – உனக்கு அபார்ஷன் (abortion) ஆனாலும் ஆகும்! நான் சொல்வதைக் கேளம்மா. ஒரு வாரம் அதிகமாக அசையாமல் படுக்கையிலேயே இருந்து கொண்டு, நான் ஒரு புதிய மருந்து கொடுத்தனுப்புகிறேன் – அதை அதில் குறித்தபடி – சாப்பிட்டுக் கொண்டுவா – பிறகு ஒருவாரம் ஆனபின் – உன்னை பட்டணம் அனுப்புகிறேன். 

த. : அப்படியே– செய்கிறேன். 

(தாயி ஒரு கடிதத்துடன் வருகிறாள்.) 

தா. : இதோ அம்மா- காயிதம் வந்துட்டுது – பெரிய காயிதமா இருக்குது. 

மீ. : நான் வருகிறேன் – அம்மா (போகிறார்கள்) 

த.: (காகிதத்தை வாங்கிக்கொண்டு) இது யார் கடிதம்? அவருடைய கையெழுத்தல்லவே! (பிரித்து விரைவில் படித்துப் பார்க்கிறாள்) 

தா. : இப்போ – சந்தோஷமா போச்சாம்மா? சும்மா காயிதம் வரலே வரலே இண்ணு துடிதுடிச்சிகினு இருந்தைங்களே ! 

த. : (காகிதத்தில் வைத்திருந்த ஒரு புகைப் படத்தைப் பார்க்கிறாள்) ஹா!- நினைத்தேன்! நான் பயந்தபடி ஆச்சுது !- (மூர்ச்சையாகிறாள், காகிதமும் படமும் கீழே நழுவி விழுகின் றன.) 

தா. : ஐஐயோ! என்னம்மா இது! டாக்டரம்மா! டாக்டரம்மா! ஓடிவாங்க (கூவிக்கொண்டே வெளியே ஓடுகிறாள் – லேடி டாக்டர் மீனாட்சி விரைந்து வருகிறார்கள்)

மீ. : என்ன! என்ன! (தனம்மாளை விரைந்து பரிசோதித்து, ஒரு போர்வையை எடுத்து அவர்கள் மீது போர்த்துகிறார்கள்)- நினைத்தேன் ! நினைத்தேன்! (கீழே பார்த்து) என்ன படம் இது? அதை எடுத்துப்பார்க்கிறாள் ) — இந்தக்கடிதத்தையும் நான் பார்த்துத்தான் ஆகவேண்டும் — (கடிதத்தை எடுத்து விரைவில் படித்துப் பார்க்கிறாள்) -யாரோ பாபி! – எழுதியிருக்கிறான்! 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி 

இடம் – நாடகசாலையில் கிருஷ்ணமூர்த்தி வேஷம் தரிப்பதற்காகப் பிரத்யேகமாய் அமைக்கப்பட்ட அறை. 

காலம் – இரவு. அறையில் வெளிச்சம் மங்கலாயிருக்கிறது. 

தியாகராஜ முதலியார் தனம்மாளை அழைத்துக்கொண்டு வருகிறாள். 

தி. : இதுதான் அம்மா, கிருஷ்ணமூர்த்தி வேஷம் பூணம் அறை – கடைசி காட்சி முடிந்துவிட்டது – அவனுக்கு மாலை மரியாதை செய்கிறார்கள் –உடனே இங்கு வந்து விடுவான் – நீயேன் அதைப் பார்க்காமல் வந்து  விட்டாய்? 

த. : உம் – ஒரு காரணம் பற்றி – நான் அவரைத் தனியாகப் பார்க்க விரும்புகிறேன். 

தி. : உன் இஷ்டம் – இந்த வெளிச்சத்தை ஏறப் பார்க்கலாமா? 

த. : வேண்டாம் – இப்படியே இருக்கட்டும். 

(நாடகசாலையில் ஏ நடகாசிரியர் நாடகாசிரியர் என்னும் கோஷ்டம்) 

தி. : அதோ! என்னை அழைக்கிறார்கள் – நான் வருகிறேன் (விரைந்து போகிறார்) 

த. : என்ன தப்பிதம் செய்தேன்!- அதன் பலனை நான் அனுபவிக்கவேண்டும்!–அதோ வருகிறார்போலிருக்கிறது! அவளுடன்!- இந்த மறைவில் இருக்கிறேன். (அங்கிருக்கும் ஒரு ஸ்கிரீனுக்குப் பின்னால் மறைந்து கொள்கிறாள்.) 

(கிருஷ்ணமூர்த்தியும் காந்தாமணியும் பல ஹாரங்களணிந்து வருகிறார்கள்) 

கி. : அப்பா ! இந்த மாலைகளைச் சுமப்பதே பெருங் கஷ்டமாயிருக்கிறது! 

(ஒன்றொன்றாய் எடுத்து எறிகிறான்) 

கா. : நானும் எடுத்து விடுகிறேன்.(அப்படியே செய்கிறாள்) ஆயினும் — இந்த ஒன்றை மாத்திரம் அணியுங்கள். (தன் கடைசி மாலையை அவன் கழுத்திலிட்டு, அவ னைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள்) ஒரு வரம்–இனி என்னைவிட்டு வேறொருத்தியுடனும் நடிப்பதில்லை, யென்று பிரமாணம் செய்யும் !

(தனம்மாள் மறைவிடமிருந்துச் சரேலென்று வெளியில் வருகிறாள்.) 

த. : வேண்டாம்! ஒரு முறை சத்தியம் செய்து – தவறிய பாபம் போதும்! 

கி.: (இடிவிழுந்தாற்போல் ஆச்சரியத்துடன்) தனம்!- நீ எப்படி – இங்கு வந்தாய்? என்ன இளைத்திருக்கிறாய்! – உன் உடம்பிற்கென்ன? 

த.: எல்லாம் சொல்லுகிறேன் – முன்பு அந்த மாலையை எறிந்துவிடும்!  

கி. : உம் (அப்படியே செய்கிறான்) 

த. : உம் – உடனே! இதையெல்லாம் விட்டு – பெங்களு ருக்குத் திரும்பி வருகிறீரா? மாட்டீர்களா? என்ன சும்மா இருக்கிறீர்கள்? எனக்கென்ன பதில்? 

கி.தனம் – நான் – சொல்வதைக் கேள் – சற்று –

த. : ஒரு வார்த்தையும் கேளேன்! இந்தட்சணமே! இப் பாழுங் கலையையும் – இவளையும் – விட்டு – என்னுடன் பெங்களூருக்கு வந்துவிடுங்கள்! இல்லாவிட்டால் இப் பாழுங் கலையையும் – இவளையும் – கட்டிக் கொண்டு -இங்கேயே இருங்கள்! 

கி. : (பெருமூச்செறிந்து — தலைகுனிந்து கொள்கிறான்)

த. : சரி! இனி உம்மைக் கண்ணெடுத்தும் பாரேன் இனி! ஒரு சமயம் வரும் வரையில்! 

(விரைந்து போகிறாள்)

கா.: (சற்று பொறுத்து, அவன் எறிந்துவிட்ட மாலையை மறுபடியும் அவன் கழுத்திலிட்டு அவனைக் கட்டியணைக்கிறாள்.) 

காட்சி முடிகிறது. 

நான்காம் அங்கம்-முதல் காட்சி 

இடம் – பல்லாவரத்தில் ஒரு சாதாரண வீட்டில் ஓர் றையில் காந்தாமணி படுத்துக்கொண்டிருக்கிறாள். 

சற்று தூரத்தில் உட்கார்ந்து கிருஷ்ணமூர்த்தி தம்பூர் ஸ்ருதியுடன் பாடிக்கொண்டிக்கிறான் 

கா.: ஹா! (பெருமூச்செறிகிறாள்) 

கி. : ஏன்? உன் உடம்பு என்னமா யிருக்கிறது இன்றைக்கு? 

கா. : அப்படியேதானிருக்கிறது – ஆயினும் உங்கள் பாட்டைக் கேட்கும்பொழுது, என் நோயெல்லாம் பறந்து போகிறது எங்கேயோ? – அது முடிந்தவுடன் மறு படியும் என்னிடம் வந்து சேர்கிறது!- ஆயினும் அத்தான் – உங்களை ஒன்று கேட்கிறேன். உங்கள் பாட்டு மிகவும் இனிமையா யிருந்தபோதிலும் – முன் போல் நீங்கள் சந்தோஷத்துடன் பாடுவதில்லை!- ஏன்? அதற்குக் காரணம் என்ன? 

கி. : உம்- அதெல்லாம் ஒன்றுமில்லை. 

கா.: இல்லை – உமது மனதில் ஏதோ இருக்கிறது – என்னிடம் சொல்லலாகாதா? 

கி.: பபித்தியக்காரி! ஒன்றுமில்லை யென்றால்–என்ன இருக்கப்போகிறது? 

கா.: ஒருவேளை நான் – ஏதாவது – காரணமா இருக்கக்  கூடுமோ? 

கி. : காரணமா இருப்பதாவது?-பயித்தியம்! 

கா. : இல்லை – நான் உம்மிடம் வந்தது முதல் – எல்லாம் தாறுமாறாகி வருகிறது!- முதலில் நம்முடைய நாடக சாலை தீப்பற்றி எரிந்து போயிற்று! பிறகு என் தகப் பனார் காலமானார்! – பிறகு உம்முடைய வரும்படியும் குறைய ஆரம்பித்தது.- நானும் நோயாளியானேன்.

கி. : சீச்சீ! இவைகளை யெல்லாம் பற்றி யோசியாதே!- உன் உடம்பு சவுக்கியமாகட்டும் -டாக்டர் தான் சொன்னாரே. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக் குள் எல்லாம் சவுக்கியமாகி விடுமென்று. அப்புறம் நாமிரண்டு பெயரும், நடித்து வேண்டிய பணத்தை சம்பாதிக்கலாம். 

கா. : அக்காலம் – எப்பொழுது வருமோ? 

(ஓர் வேலைக்காரி வருகிறாள்) 

வே. : உங்களே பாக்க, யாரோ ஒருத்தரு வந்திருக்கராரு – வரலாமா இண்ணு கேட்டுகினு வரச்சொன்னாரு. 

கி. : யாராவது நாடகமாடக் கேட்க வந்திருப்பார்கள். – இப்பொழுது நான் ஆடமுடியாதென்று – மற்றவர்களுக்குச் சொன்னதுபோல் இவருக்கும் சொல்லி அனுப்பி விடு. 

வே. : சொன்னேனுங்க! அவரு நாடகத்துக்காவ கேக்க வரலே—இண்ணு சொல்ராரு. 

கி. : வேறே, எதற்காக இருக்கப்போகிறது? வரச் சொல் ஆனால், 

கா. ஐயோ! என் பொருட்டு நீங்கள் எத்தனை பெயருக்கு முடியாதென்று பதில் சொல்ல வேண்டி வந்திருக்கிறது? எவ்வளவு நஷ்டம் உமக்கு! — நமக்கு! 

(ராஜரத்தின முதலியார் வருகிறார்)

கி.: நீங்களா! -வாருங்கள் – உட்காருங்கள் – என்ன விசேஷம் பட்டணத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்தது?

ரா : கிருஷ்ணமூர்த்தி,உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். உன் உடம்பு எப்படி யிருக்கிறது? என்ன இளைத்திருக்கிறாய்? அம்மாளுக்கு உடம்பு ஏதோ காயலாவா யிருக்கிறாற்போ லிருக்கிறதே- 

கி. : நான் சவுக்கியமாய்த்தா னிருக்கிறேன். காந்தா மணிக்கு உடம்பு கொஞ்சம் சௌக்கியமில்லை– இன்னும் சில மாதங்களுக்குள் எல்லாம் சவுக்கியமாகி விடுமென்று வயித்தியர் கூறுகிறார் ஆயினும் என் வேலைக்காரி உங்களிடம் சொல்லி இருப்பாளே, நாங்கள் இப்பொழுது நாடகமாட முடியாது – இன்னும் சில காலம் வரையில். 

ரா. : அது சரிதான், நான் நாடகமாடுவதைப்பற்றி கேட்க வரவில்லை – அப்படி வந்தாலும் அம்மாளுக்கு உடம்பு இப்படி யிருக்கும்போது உங்களிருவரையும் நாடக மாடும்படி கேட்பேனா? நான் வந்தது வேறு வேலைக்காக –  

கி. : என்ன வேறு வேலை? 

ரா.: நான் இப்பொழுது ஒரு சினிமா ஸ்டூடியோவை விலைக்கு வாங்கியிருக்கிறேன். 

கி. : எந்த ஸ்டூடியோவை? விக்டோரியா ஸ்டூடியோவையா? 

ரா. : ஆம் – ஐந்தரை லட்சத்திற்கு வாங்கினேன் ஜனவரி மாசம். அதற்குமேல் ஒரு நாலைந்து லட்சம் செலவழித்து இந்தியா முழுதும் இதைப்போன்ற சினிமா ஸ்டூடியோ கிடையாதென்று சொல்லும்படியாக, எல்லாப் புதிய சாமான்களையும் அமெரிக்காவிலிருந்து வாங்கி,ஏற்படுத்தியிருக்கிறேன். நான் முதல் முதல் அதில் ஒரு நல்ல பேசும் படத்தை யெடுக்க வேண்டு மென்று, உத்தேசித்திருக்கிறேன். அதற்காக ஒரு புதிய கதையையும் தயாரித்திருக்கிறேன். அதில் நீ நடிக்க முடியுமோ? – நாடகசாலையில் நடிப்பதுவேறு – இதில் நடிப்பது வேறல்லவா? 

கி. : இதில் என்ன வித்தியாசம்? – உம் – நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் நான் காந்தாமணியுடனன்றி வேறெவருடனும் நடிக்கமுடியாதென்று – ஆகவே அவளுக்கு உடம்பு சவுக்கியமாகட்டும். 

ரா. : அந்த அம்மாளை இந்த ஸ்திதியில் சீக்கிரம் நடிக்கும் படி கேட்பது நல்லதல்ல நீ மாத்திரம் நடிக்க முடியாதா இப்பொழுது? உனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் தருகிறேன்- 

கி. : ஹும்! ஐம்பதாயிரம் அல்ல- ஐம்பது லட்சம்கொடுத் தாலும், என் தீர்மானத்தினின்றும் மாற மாட்டேன். வேறெந்த ஸ்திரீயுடனும் நடிக்க இசையேன் – தீண்ட மாட்டேன் 

ரா. : வேண்டாம் – நான் சொல்வதைக் கொஞ்சம் கேளப்பா- என் ஸ்டூடியோவுக்கு, அமெரிக்காவிலிருந்து ஒரு புதிய டைரெக்டரை வரவழைத்திருக்கிறேன்; அவர் ஹீரோயினை ஹீரோ தீண்டாதபடி எல்லா ஷரட்களையும் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்- நான் செலெக்ட் (Select) பண்ணியிருக்கும் ஹீரோயின் கூட – உன்னைப் போல்தான் ஒரு நிபந்தனை செய்திருக்கிறாள் – அவள் உனக்குமேல் ஒரு படி போயிருக்கிறாள்! தான், தன்னுடன் நடிக்கும் ஹீரோ தன்னைப் பார்க்கவும் கூடாதென்று கட்டாயப்படுத்தியிருக்கிறாள். 

கி. : ஆஹா! அப்படிப்பட்ட ஸ்டார் யாரோ ? பெரிய நட்சத்திரமா யிருக்க வேண்டும்! சந்திரனைப்போல் அவ்வளவு பெரிய நட்சத்திரமா யிருக்கவேண்டும்! (நகைக்கிறான்) 

ரா. : அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா! மைசூரி லிருந்து புதிதாய் வந்திருக்கிறாள் – கிழவனாகிய என் னுடன் பேசுவ தென்றாலும் முக்காடிட்டுக்கொண்டு பேசுகிறாள்! – என்ன சொல்கிறாய்? – – நான் சீக்கிரம் என் படத்தை ஆரம்பிக்க வேண்டும், என் ஸ்டூடியோ காலியாயிருக்கும் காலமெல்லாம் என் சிப்பந்திச் செலவே பதினாலாயிரத்துக்கு மேலாகிறது. 

கா. : அப்படியானால் நீங்கள் – ஒப்புக்கொள்ளுகிறது தானே? எனக்கு ஆட்சேபனை இல்லை. 

கி.: சரி-உன் அனுமதியின்மீது ஒப்புக்கொள்ளுகிறேன் உங்களுக்கு என் நிபந்தனை ஞாபகமிருக்கட்டும். 

ரா. : என் ஹீரோயின் நிபந்தனையும் — உனக்கு ஞாபகமிருக்கட்டும் -ஆனால் முடிவு தானே? 

கி. : சரி. 

ரா. ஆனால் இந்தா – இருபதினாயிரம் ரூபாய்க்குச் செக் அட்வான்சு. இந்த அக்ரிமெண்டில் கையெழுத்து போடு. 

கி. : (அதைப் படித்துப் பார்க்கிறான்; கடியாரம் மணி அடிக்கிறது) சரி! நற்சகுனம்! இதோ கையெழுத்து போடுகிறேன் (அங்ஙனமே செய்கிறான்) 

ரா. : சந்தோஷம்! நாளைத்தினம் காலை என் காரைக் கொண்டு வந்து – உன்னை – என் ஸ்டூடியோவுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன் – எல்லாம் சித்தமாயிரு ! நான் வருகிறேன் (போகிறார்) 

கி. : காந்தாமணி — இந்தா செக்! 

கா. : உங்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்தது! 

கி. : ஏன்! உன் கஷ்டமும் தீரவில்லையா என்ன? 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி 

இடம்- சென்னையில் விக்டோரியா ஸ்டூடியோ. 

ஸ்டுடியோவானது, மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய ஸ்ரீனால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது; அதன் ஒரு பக்கம் கிருஷ்ணமூர்த்தி ராஜ குமாரன் உடையில் நின்றுகொண்டிருக்கிறான்; அவனுக்கு எதிராக பட மெடுக்கும் காமிரா வைக்கப்பட்டிருக்கிறது. பொடக்ராபர் அதன் அருகில் நிற்கிறான்; மற்றொருபுறம், ராஜகுமாரியின் வேஷத்தில் தனம்மாள் நிற்கிறாள்: அவள் முகமானது முக்காடால் ஏறக்குறைய முற்றிலும் மறைக்கப் பட்டிருக்கிறது. 

ராஜரத்தின முதலியார் ஒரு ஸ்கிரீன் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார். 

அமெரிகன் டைரெக்டர் அவர் பக்கத்தில் நிற்கிறான்.

அ-டை. : இது ஒட்டகை – ஆரம்பியுங் – கல். (கிருஷ்ண மூர்த்திக்கு)

கி.: (நடிக்கிறார்) பெண்மணி! நீ எல்லா ஆடவர்களையும். அவ்வாறு மதித்துவிடலாகாது. மற்றவர்களெல்லாம் நீ கூறியபடி நன்னடக்கையுள்ளவர்களாய் இல்லா விட்டாலும், சிலராவது உத்தமர்களாக இருக்கமாட்டார்களா? ஸ்திரீகளில் அநேகர் நன்னடக்கையுடைய வர்களாக இல்லாவிட்டாலும், உன்னைப்போன்ற உத்தமிகளையும் உலகில் பிரமன் படைக்கவில்லையா? -அதைப்போல் நீயும் எங்களைப்பற்றி ஏன் எண்ணலாகாது 

அ-டை : நிறுத்துங் – கல் – பேச்சுகல் – நண்ணாயிருக்குது – மூஞ்சி சரியாயில்லை. 

கி.: அது எப்படி இருக்கும்? வெறும் ஆகாயத்தைப் பார்த்து, இவ்வார்த்தைகளைப் பேசுவ தென்றால் சரியான முகக்குறிப்பு – எப்படி வரும்? 

அ-டை. : நீங்கல் -பெரிய ஆக்டரா யிருந்தால் அப்படித் தான் – வரவேணும்-கல். 

கி. : என்னடா கஷ்டமா யிருக்கிறது! இந்த சினிமாவில் இந்த தொந்திரவுதான்-(முன்பு சொன்ன வார்த்தைகளை மறுபடியும் சொல்கிறான்.) 

அ-டை. : ஆ! – இது சுமாரா! – இருக்குதுங்கல – சரி. இப்போ உங்கல் பாட்டை பாடுங்கள் – 

கி. : (ஒரு பாட்டைப் பாடுகிறான்) 

அ-டை. : பேச்சு – சுமாரா – இருக்குதுங்கல்.பாட்டு எனக்கு திருப்தியாயில்லைங்கல். 

கி. (சற்று கோபத்துடன்) என் பாட்டு திருப்தியாயில்லை யென்று முதல் முதல் இவர் தான் சொன்னவர்?

அ-டை. : இருக்கட்டுங்கல்.(மற்றொரு பக்கம் போய்) – அம்மா, நீங்கல், உங்கள் பாட்டை பாடுங்கல். 

த. (ஒரு பாட்டைப் பாடுகிறாள் ; ) இதைக் கேட்டதும் கிருஷ்ணமூர்த்தி முகத்தை ஒருவிதமாகச் சுளித்து தன் பக்கமிருக்கும் திரையோரம் உலாவுகிறான். 

அ-டை, அம்மா நேத்து தனியா – ஒட்டகை – பண்ணின போது – நீங்கல் – இதைக் காட்டிலும் -நண்ணா பாடனைங்கல்லே? 

த. : (தாழ்ந்த குரலுடன்) இன்றைக்கு – எனக்கு உடம்பு ஒரு மாதிரியா யிருக்கிறது.(எழுந்து வெளியே போய் விடுகிறாள்) 

கி. : என்ன சார்ரம் என்ன சாரீரம்!- என்ன ஸ்வர சுத்தம்! எந்த ஸ்தாயியில் போனாலும் கொஞ்ச மாவது தளராமலிருக்கிறதே! 

அ-டை. : (கிருஷ்ணமூர்த்தி யிருக்கும் பக்கம் போய்)ஐயா இனிமேல் எண்ணைக்கி- ஷருடிங் (Shooting) இல்லை. காலைக்கி, பார்ப்போம் – நீங்கள் உங்கள் வேஷத்தை கலைத்துவிட்டு போங்கள் – நாலைக்கி வாங்கள். அந்தப் பாட்டை சரியா ஒத்துகை — பண்ணி– பாடுங்கல்.

கி. : டைரெக்டர் – இப்பொழுதே ஒத்திகை செய்து பார்க் கிறேன் நான் (மறுபடியும் அப்பாட்டை மிகவும் அழ காகப் பாடுகிறான்) 

அ-டை. : பலே! பலே! பேஸ்! -இப்படி ஏன் முன்னே– பாடலெ? ஐயா இப்படியே நாளைக்கி பாடுங்கள்! பேஸ் பேஸ்! (போகிறான்) 

கி. : (ராஜாத்தின முதலியாரிடம்) அப்பா, இப்பொழுதாவது சொல்லமாட்டீர்களா – யார் அந்த பெண்மணி? 

ரா. : என்ன அப்பா இது? எனக்குத் தெரிந்திருந்தால் உனக்கு சொல்லாதிருப்பேனா? அவர்கள் மைசூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று மாத்திரம் தெரியும் வேறொன்றும் தெரியாது. (வெளியே மோடார் ஹாரன் சப்தம்) அதோ! அவர்கள் மோடார் வண்டி வந்து நிற்கிறது – கேட்டருகில் -இப்படிவா – அவர்கள் வண்டியில் ஏறப் போகிறார்கள், வேண்டுமென்றால் நேராகப் பார்த்துக் கொள். 

கி. (ஸ்டூடியோவிலுள்ள ‘ஜன்னல் அருகில் ஓடுகிறான்) – ஹா! என்னகடை! என்னநடை! இன்னும் முகத்தை மூடியிருக்கிறாள்! அப்பா, இவர்கள் இதற்கு முன்பாக எந்த சினிமாவிலாவது நடித்திருக்கிறார்களா? 

ரா. : என்ன பயித்தியக்காரனா யிருக்கிறாய்! அவர்கள் பெயரே எனக்குத் தெரியாதென்றால், இந்தக்கேள்வி கேட்கிறாயே என்னை! 

கி. : அந்த குரல் – எங்கேயோ கேட்ட ஞாபகம் இருக் கிறது – (மறுபடியும் ஜன்னலண்டைப் போய் வண்டி போன பக்கம் மௌனமாய் உற்றுப் பார்க்கிறான்) 

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி 

இடம் – விக்டோரியா ஸ்டூடியோ முன் காட்சியைப் போலவே ஜோடிக்கப்பட்டிருக்கிறது. 

தனம்மாள் ஒருபுறம் வேஷத்துடனும் முக்காடுடனும் இருக்கிறாள். 

கிருஷ்ணமூர்த்தி மற்றொருபுறம் வேஷத்துடன் இருக்கிறான். 

இரண்டு பக்கமும் இரண்டு படம் பிடிப்பவர்கள் முதலியோர் இருக்கின்றனர். 

ராஜரத்தின முதலியார் நடுவிலிருக்கும் ஸ்கிரீன் பக்கலில் நின்றுகொண்டிருக்கிறார். 

அமெரிகன் டைரெக்டர், கிருஷ்ணசாமியின் பக்கலில் இருக்கிறான். 

அ-டை. : ஒட்டகை – சரி- ஆயிடுதுங்கல். ரெண்டுபேருக்கும் ஐயா, அந்த அம்மால் பேசி முடிந்தவுடன்- வெளியே போவார்கள். அப்புறம் நீங்கள் அந்த காமிரா இருக்கற பக்கம் வரணுங்கல். 

கி. : உம். 

அ-டை.: (மற்றொருபக்கம் போய் அம்மா – ஆரம்பியுங்கள் பொறுங்கல்,! பொறுங்கல்,! இந்த கடாசி சீனில் நீங்கள் முக்காடு எடுத்தூடணுங்கல் இண்ணு எய்தி இருக்குதுங்கல் — கொஞ்சம் தயவு செய்யுங்கள். 

க. : ஐயோ !–வேண்டாம் !-என்னால் முடியாது!

ரா.(அவளருகில் போய்) இதில் தப்பில்லையம்மா இது தானே உன் கடைசி காட்சி ஆகவே நீ பயப்பட வேண்டாம் (மெல்ல அவளது முக்காட்டை விலக்கி விடுகிறார்)- என்ன! அழுதுகொண்டிருக்கிறாய்?

அ-டை. : ஆ!ரொம்ப சரி! ரொம்ப சரி! நண்ணா அழுங்கல்! அப்படியே ஆரம்பியுங்கல் – மொகத்தே மாத்தாதீர்கள்! (சற்றுதூரம் போய்) டேக் (Take) பிகின்! (Begin) 

த. : (ஒரு மிகவும் துக்ககரமான பாட்டைப் பாடுகிறாள்; அதன் முடிவில்) அரசே! என் எண்ணங்களை யெல்லாம் பாழாக்கினீர்!- என் கோரிக்கைகளை யெல்லாம் அழித்தீர்! என் யௌவனமும் போயது ! – இனி இப்புவியில் கான் உயிர்வாழ்வது நியாயமல்ல! நான் அக்னிப் பிரவேசமாகப் போகிறேன் – நான் உம்மை மன்னிக்க முடியாது! அந்த ஈசனைப் பிரார்த்தியும் உம்மை மன்னிக்கும்படியாக! 

(போகப் புறப்படுகிறாள்)

கி. : (அவளிருக்கும் பக்கம் ஓடிப்போய், அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டு) நாரீமணி! நாரீமணி ! ஈசன் என்னை மன்னிக்கமாட்டார் – நீ என்னை மன்னிக்கா விட்டால்! — ஒரு வார்த்தை சொல்! ஒரு வார்த்தை சொல்! என்னை மன்னித்ததாக! (ஒரு பாட்டைப் பாடுகிறான்) 

(அமெரிகன் டைரெக்டர் அப்படியே அயர்ந்து நின்று விடுகிறார், ராஜரத்தின முதலியார், காமிரா மனிதனுக்கும் ஒலிப்பதிப்பாளிக்கும் காட்சியை அப்படியே பிடிக்கும்படியாக சைகை செய்கிறார், அவர்களும் அப்படியே செய்கிறார்கள்) 

த. : மான்-நான்-உம்மை மன்னித்தேன்? மன்னித்தேன்! (தேம்பி அழுகிறாள்) 

கி. : அவ்வளவு போதும்! (அவள் காலருகில் மூர்ச்சையாகி விடுகிறான்) 

அ-டை,: கட் (Cut) (காமிரா நிற்கப்படுகிறது) 

த. : ஐயோ! ஐயோ! என்ன? இறந்து விட்டாரா?

ரா. : (கிருஷ்ணசாமி யருகில் விரைந்து போய் அவனைப் பரிசோதித்து) இல்லை! இல்லை! மூச்சு வருகிறது!- மூர்ச்சையா யிருக்கிறான்! ஒன்றும் பயப்படாதே அம்மா! 

காட்சி முடிகிறது. 

நான்காம் காட்சி 

இடம்- ஸ்டூடியோவில் ஓர் அறை. 

அ-டை. : எப்படி இருக்கிறார்? 

அமெரிகன் டைரெக்டர், கையில் சில காகிதங்களுடன் உட்கார்ந்திருக்கிறார் அவைகளைப் படித்தவண்ணம். ராஜாத்தின முதலியார் வருகிறார். 

ரா. ஒன்றும் பயமில்லை மூர்ச்சை தெளிந்துவிட்டார்! 

கொஞ்சம் சோடா கொடுத்துவிட்டு வந்தேன். அ-டை. அதிருக்கட்டுங்கல் அந்த காச்சி கெட்டு பூட்டுதே!ரெண்டு பேரும் நண்ணாதா -ஆக்ட் பண்ணாங்கல் – ஆனா – அப்பிடி நீங்கள் எழுதலையெ?

ரா. : டைரெக்டர், உங்களுக்கொன்று கூறுகிறேன்.- இப்படிதான் முடியவேண்டுமென்று கோரிக்கொண் டிருந்தேன் – அப்படியே முடிந்தது தெய்வாதீனத் தால் – நம்முடைய ஹீரேர் ஆக்டர்தான் அந்த அம் =மாளுடைய புருஷன்? அந்த அம்மாள் அவருடைய பெண்சாதி வாஸ்தவத்தில்! 

அ-டை.: ஓ — ஐசி! ஐசி! அதுதான் அந்த சீனில் அப்டி நடித்தார்கள்! ரொம்ப சரி – ஆனால் கடைசி சீனை எப்டி முடிக்கப் போகிறீர்கள்? 

ரா. : நான் அதை மாற்றி எழுதித்தருகிறேன் நாளைக்கு – இன்றைக்கு ஷூடிங் போதும். 

அ-டை, : சரி-ஒலகமானது ரொம்ப Wonderful ஆ இருக்கு துங்கள்! 

ரா. : (நகைத்துக் கொண்டே) ஆமாங்கல்! நான் வருகிறேன் கல்! (போகிறார்) 

காட்சி முடிகிறது. 

ஐந்தாம் அங்கம்-முதல் காட்சி

இடம் – பல்லாவரத்தில் ஒரு சினிமா சாலை.

காலம் – சாயங்காலம். 

காந்தாமணியும், தாமோதாழும் ஒரு முதல் வகுப்பு அறையின் உட்கார்ந்திருக்கின்றனர். 

திரையில் மூன்றாம் அங்கம் மூன்றாவது காட்சி காட்டப்படுகிறது. 

காந்தாமணி அதை கவனித்து வருகிறாள். 

கா. : (தனம்மாளின் முக்காடு, எடுக்கப்படும் பாகம் வரும் பொழுது) ஓ! (திடுக்கிட்டெழுந்திருக்கிறாள்) இவளெங்கு முளைத்தாள் மறுபடியும் – அப்படியா சமாசாரம்! (வெளியே எழுந்து விரைந்து போகிறாள் தாமோதரம் பின் தொடர்கிறான்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி 

இடம் – விக்டோரியா ஸ்டுடியோவின் ஓர் பாகம். 

காலம் – இரவு

(காந்தாமணி வருகிறாள்.) 

கா. : இந்த வழியாகத்தான் அவர்கள் செட் (Sat) டுக்குப் போகவேண்டும் – ஹூம்! என்ன தப்பிதம் செய்தேன்! நானே இதில் அவரை நடிக்கத் தூண்டினேனே ! சரோஜினி என்பவள் யாரோ என்று ஏமாந்தேன்!- கெட்டிக்காரிதான்! நான் அவளுக்குச் செய்ததை, அவள் திருப்பிச் செய்துவிட்டாள்! பழிக் குப் பழியாகிவிட்டது! அதோ வருகிறார்கள் (ஒருபுறம் ஒதுங்கி நிற்கிறாள் மறைவில்) 

கிருஷ்ணமூர்த்தியும், தனம்மாளும், ஓர் புதிய பேசும் படத்திற்காக வேஷம் பூண்டு வருகின்றனர், 

கி. : நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல் -முன்பு.

கா.: (திடீரென்று அவர்கள் முன் தோன்றி) நான் கேட்கும் கேள்விக்கு நீர் பதில் சொல்லும் முன்பு! 

கி. : காந்தா!

கா. : ஆம்! 

கி. : இங்கெப்படி வந்தாய்? எப்பொழுது வந்தாய்? காந்தா உனக்கு எழுத வேண்டுமென்றிருந்தேன்.நீயாக என்னைப் பார்த்தது சுலபமாயிற்று – நான் இப்பொ ழுது அவசரமாக செட்டுக்குப் போகிறேன் – காலைவந்து என்னைப் பார். 

கா. : உங்களை நான் காக்க வைக்கவில்லை செட்டுக்கு சீக்கிரம்.போக வேண்டியது எவ்வளவு அவசியம் என்று எனக்குத் தெரியும்- நான் உங்களை இப்பொ ழுது ஒரே கேள்வி கேட்கிறேன் – அதற்கு பதில் சொல்லிவிட்டு உடனே போகலாம். 

கி. : என்ன கேள்வி? – சீக்கிரம் கேள் 

கா. : காதலைவிட – கலையே மேல் என்றீரே — அது எப்படி போயது? 

கி. : ஆம் – அதுவரையில் உண்மைதான் – ஆயினும் இவ்விரண்டிற்கும் மேலாக ஒன்று இருக்கிறதெனக் கண்டேன்! 

கா.: என்ன அது? 

கி. : இவ்விரண்டும் ஒருங்கே கூடியிருப்பது! 

கா.: சரி– (ஒருவாறு நகைத்து) என் அதிர்ஷ்டம்!

கி. : காந்தா,என்மீது கோபியாதே – என்னை மன்னிப்பாய்-என்னை இனி மறந்து விடு. 

கா. : மன்னித்தேன் – உம்மை – நீங்கள் போங்கள் – செட்டுக்கு 

(அவர்கள் இருவரும் மௌனமாய்ப் போகிறார்கள்) 

என்ன பொய் பேசினேன்!- மன்னிப்பதாவது! – மறப்பதாவது! எதிர்புறமாக மெல்ல போகிறாள்.) 

காட்சி முடிகிறது. 

ஆறம் அங்கம்-முதல் காட்சி

இடம் – கிருஷ்ணைசாமியின் பங்களா தோட்டம். 

தனம்மாளும், காந்தாமணியும் பேசிக்கொண்டு வருகிறார்கள். 

த. : அவரை தீ மற்றவர்களைப்போல் நேரில் பார்க்கிறது தானே? 

கா. : அது முடியாத காரியம் – நான் அவரைப் பார்ப்பதற்காக, எழுதிக் கேட்டபோது வேண்டாம்,பார்ப்பதில் பிரயோஜனமில்லை, என்று பதில் எழுதி விட்டார் இன்னும் என்மீது கோபமாயிருக்கிறார் போலும் அம்மா, உங்களை வேண்டிக்கொள்கிறேன் (அவளது கரத்தைப் பற்றி) இது உங்கள் கையல்ல! கால்! இரண்டு வருடங்களாக;என்னை துரதிர்ஷ்டமே பிடித்து வருகிறது- நான் கடன்காரி யாகிவிட்டேன். இந்த சமயம் அந்த பாத்திரத்தை எனக்குக் கொடுத்து — நீங்கள் இருவரும் என்னை கைதூக்கி விடாவிட்டால் – என் கதி அதோகதிதான்! (துக்கிக்கிறாள்)

த. : உம் – துக்கப்படாதே அம்மா  – நான் சொல்லிப் பார்க்கிறேன். 

கா. அவ்வளவு போதும் உங்கள் உயிர்-என் உயிர் – உங்கள் கையிலிருக்கிறது – உங்கள் வார்த்தையை அவர் தட்டமாட்டார். 

த. : நீ நாளை காலை பத்து மணிக்கு இங்கே வா – நான் உன்னை ஸ்டூடியோவுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். 

கா. : அம்மா – நீ – தீர்க்கசுமங்கலியாய் – சிரஞ்சீவியாய்! வாழவேண்டும்!  (போகிறாள்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாம் காட்சி 

இடம் – விக்டோரியா ஸ்டூடியோவில், ஒத்திகை அறை. 

கிருஷ்ணமூர்த்தியும், ராஜரத்தின முதலியாரும் உட்கார்ந்திருக்கிறார்கள் 

அவர்கள் எதிரில் ஒரு நடிகை நிர்த்தனம் செய்கிறாள் (நிர்த்தனம் முடிந்தவுடன்) 

கி. : நன்றாய்த்தா னிருக்கிறது – ஆயினும் ஆட்டக் கச்சேரிக்குத் தக்க பருவம் வரவில்லை. 

ரா. ஆம் – போதும் அம்மா ஆடியது – பிறகு உனக்கு சொல்லியனுப்புகிறோம். (நடிகை போகிறாள்) 

கி. : (தன் எதிரில் இருக்கும் மணியை அடிக்கிறான்) 

ஒரு நடிகன் வருகிறான் 

(தன் கையிலிருக்கும் கடிதத்தையும் அவன் முகத்தையும் பார்த்து ) அப்பா – இதற்கு முன்பாக எங்காவது பேசும் படத்தில் நடித்திருக்கிறாயா?  

ஓ. : பால மனோரஞ்சித சபாவில் – நடித்திருக்கிறேன். (கட்டைக் குரலில்) 

கி. : என்ன வேடத்தில் நடித்திருக்கிறாய்? 

ஒ. : பாலபார்ட்டில். 

கி. : உனக்கென்ன வயது? 

ஒ. : இருபத்திரண்டு. 

கி. : பாடத் தெரியுமா? 

ஒ. : கொஞ்சம் பாடத் தெரியும். 

கி. : போதும் – வேண்டுமானால் உனக்கு சொல்லியனுப்புகிறோம்.(நடிகன் போகிறான்)

(மணியை மறுபடி அடிக்கிறான்) 

மற்றொரு நடிகன் வருகிறான் (மிகுந்த அசங்கிய முகத்துடன்) 

கி. : உனக்கென்ன தெரியுமப்பா? இந்தக் கதையில் உனக்கென்ன பாகம் கொடுக்க முடியும்! 

ம – ந. : நான் கழுதையைப் போலவே கத்துவேன்.

ரா. : கழுதையைப் போலவா? ஏதோ கொஞ்சம் கத்து கேட்போம்! 

ம-ந : (கழுதையைப்போல் கத்துகிறான்) 

கி-ரா. (கெட்டியாய் சிரிக்கிறார்கள்) 

ரா. : (கிருஷ்ணசாமிக்கு) மூன்றாவது காட்சியில் ஒரு கழுதை கத்த வேண்டியிருக்கிறதே அதற்கு உதவுவான்!

கி. : ஆமாம் – அப்பா, நாளை காலை ஒன்பது மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்து சேர். 

ம – ந. : நமஸ்காரம் (போகிறான்) 

கி. : கலையென்றால் – எல்லாம் கலையாகத்தானிருக்கிறது – மாமா,இன்றைக்கு இவ்வளவு பெயர்களைப் பார்த்ததுபோதும் — மிகுந்த பேர்களை – நாளைக்கு வைத்துக் கொள்வோம் 

ரா. : உன் இஷ்டம். 

ஒரு வேலையாள் வருகிறான். 

வே. அம்மா வந்திருக்கிறார்கள் – வரலாமா என்று கேட்கச் சொன்னார்கள். 

கி. : அம்மாவா ? 

வே ஆம் – யாரையோ அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். 

கி. : வரச்சொல். (வேலையாள் போகிறான்) 

ரா. : ரமாமணி பாத்திரத்திற்கு – அதையே – ஸ்திரி பாத்திரம் தேர்ந்தெடுக்கச் சொன்னயே – அதற்காக இருக்கலாம். 

தனம்மாள் வருகிறாள். 

கி. : தனம் சந்தோஷம் – யாரைத் தேர்ந்தெடுத்தாய்? எங்கே அந்தப் பெண்? 

த.: நான் உடனே அழைத்து வருகிறேன் – நீங்கள்  ஒன்றும் ஆட்சேபனை சொல்லக்கூடாது? 

கி.: நீ தேர்ந்தெடுத்தால், அதற்கு நான் ஆட்சேபனை சொல்வேனா? நான்தான் அந்த தேர்தலை உனக்கு விட்டு விட்டேனே – யார் அந்தப் பெண்! சீக்கிரம் அழைத்து வா. (தனம்மாள் போகிறாள்) 

ரா. : அந்த பாத்திரத்திற்கு தக்க நடிகை கிடைத்து விட்டால் – நாம் மறுவாரமே ஷடூட்டிங் (Shooting) ஆரம்பிக்கலாம்.  

தனம்மாள் காந்தாமணியை அழைத்துக்கொண்டு வருகிறாள். 

கி. : காந்தாமணி! 

த. : ஆம் – அத்தான் — இவர்களை ரமாமணி பாத்திரத்தை நடிக்கச் செய்து பார்த்தேன் – மிகவும் நன்றாக நடிக்கிறார்கள்-. 

கி. : இரண்டு மூன்று வருடங்களாயிற்றே குரல் எப்படியிருக்கிறது பார்த்தாயா? 

த. : கேட்டுப் பார்த்தேன் – அம்மா, அந்த கடைசி காட்சியில் வரும் சோகரசப் பாட்டைப் பாடம்மா

கா. : (மிகவும் உருக்கமாக ஒரு பாட்டைப் பாடுகிறாள்)

கி. : மிகவும் நன்றாயிருக்கிறது – சரிதான் – ஆயினும் –

த. : அத்தான் எனக்கொரு ஆட்சேபனையுமில்லை – இவர்களுக்கு அந்த பாகத்தைக் கொடுப்பதில் – இப்பொழுது இவர்கள் மிகவும் கஷ்டஸ்திதியி லிருக்கிறார்கள் – அவர்கள் ஜீவனத்திற்கே – கஷ்டமாயிருக்கிற தாம் – 

கா. (கிருஷ்ணசாமி காலில் விழுந்து) ஆம் – போனதை யெல்லாம் மறந்து என்னைக் கைதூக்கிக் காத்தருள வேண்டும் – தாங்கள் இச்சமயம் – உங்கள் இந்தப் படத்தில் நான் பெயரெடுத்தால் பிறகு பிழைத்துப் போவேன். 

த. : (கிருஷ்ணசாமி காதில் ஏதோ ஓதுகிறாள்) 

கி. : சரி ஆனால் காந்தாமணி, நாளை பகல் பதினோரு மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்து சேர். 

கா. என் உயிரைக் காத்தீர்கள் – நீங்கள் – இதை நான் மறவேன். (போகிறாள்) 

காட்சி முடிகிறது 

மூன்றாம் காட்சி 

இடம் – விக்டோரியா ஸ்டூடியோ செட்டில். 

மேஜையின் மீது சாப்பாட்டிற்காக எல்லாம் வைக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டு டம்ளர்களில் பானம் வைக்கப்பட்டிருக்கிறது. 

ஒருபுறம் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருக்கிறது. காலம் – பகல் – ஸ்டூடியோவில் வெளிச்சம் குறைவாயிருக்கிறது. 

தனியாக காந்தாமணி மேஜையருகில் நின்றுகொண்டு, மேஜையின் மீதிருக்கும் ஒரு டம்ளரை இரண்டு மூன்று முறை எடுத்தெடுத்து வைக்கிறாள். 

கா.: சீ! இது பெரும் பாபமாகும் – ஏதோ முன் ஜன்மத் தில் பாபம்செய்து இந்த ஜன்மத்தில் இவ்வளவு கஷ்ட மெல்லாம் அனுபவிக்கிறேன்! – இனியும் வேண்டாம்! (மற்றொரு கரத்திலிருக்கும் ஒரு சிறு பொட்டலத்தைப் பார்த்து) இதை அடுப்பில் உடனே போட்டு விடுகிறேன். (புறப்படப் போகும் பொழுது கண்ணாடியின் எதிரில் வருகிறாள்)- ஆ! அவரும்! அவளும்- அவளுக்கு முத்தமிடுகிறார்!-நான் கற்பித்த மாதிரி! ஹா! என்னால் பொறுக்க முடியவில்லை! {கையிலிருக்கும் பொட்டலத்தை டம்ளரில் போட்டு கலக்கிவிட்டு விரைவில் வெளியே போகிறாள்) 

தனலட்சுமி மற்றொரு பக்கம வருகிறாள். 

த. : காந்தாமணியா அந்தப் பக்கம் போனது? இங்கு ஏன் வந்தாள் இப்பொழுது மறுபடியும்? இரண்டு மூன்று தினங்களாக ஒரு மாதிரியாக நடக்கிறாள்!- காலை முதல் என் மனம் ஏதோ கலக்கமடைந்திருக் றது. (டம்ளரை எடுத்துப் பார்க்கிறாள்) ஏதாவது இவள் — நான் ஒருவர் மீதும் – வீணாக மனதிலும், பழிசுமத்தக் கூடாது! இதுதானே அவர் குடிக்க வேண்டிய டம்ளர்? இருந்தாலும் – இந்த டம்ளர்களை மாற்றிவிடுகிறேன். (அப்படியே செய்கிறாள்) 

(வெளியில் கிருஷ்ணமூர்த்தியின் குரல் தனம்!தனம்!) 

இதோ வந்தேன் (விரைந்து போகிறாள்) 

மிஸ்டர் பிளாக்மன் வருகிறார். 

பி. : (அங்கிருக்கும் கால்பெல்ஸ் (மணியை) அடிக்கிறார்) நேரமா – பூச்சி! (காமிராமான்,மைக்காரர், எலெக்டி ஷியன் முதலியோர் வருகிறார்கள்) சீக்கிரம் வாங்கல்! இந்த சீனை சீக்கிரம் முடிச்சி, உடலாம் — வெளிச்சம்! வெளிச்சம்! (வெளிச்சம் அதிகப்படுத்தப் படுகிறது- கிருஷ்ணமூர்த்தியும், தனலட்சுமியும் ஒருபுறம் வருகிறார்கள். காந்தாமணி மற்றொருபுறம் வருகிறாள்.) 

பி. : அம்மா, (தனலட்சுமிக்கு) நீங்கள் இந்த சீனில் இல்லைங்கல் ஒரு பக்கம் நில்லுங்கல். மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, நீ உன் நாற்காலியில் உட்கார். கந்தே மணியம்மா – நீங்கல் உங்கல் பக்கம் உட்காருங்கல் (அவர்கள் அப்படியே செய்கின்றனர்) எங்கே கடாசியில் உட்டோம்? (கையிலிருக்கும் காகிதத்தைப் பார்த்து)- ஆமா- 

கா.: நான் பேச வேணும். 

பி. : ஆமா சொல்லுங்கல் – ஒத்திகை. 

கா. : நீங்கள் – நீடூழி காலம் – சுகமாய் வாழும்படி நான் பானம் செய்கிறேன்.’ 

பி. : ஓ சரி இல்லே உங்கள் வாய் நடுக்குது – கை நடுக்குது – சரியாகச் சொல்லுங்கல். 

கா. : நீங்கள் நீடுழி காலம். இனி சுகமாய் வாழும்படி, நான் இதோ பானம் செய்கிறேன். 

பி. : ஒகே! – டேக! கிளாப்ஸ்டிக்! (கிளாப்ஸ்டிக் வந்து அடிக்கிறான்) 

கா. : நீங்கள் நீடூழி காலம் இனி சுகமாய்,வாழும்படி, நான் இதோ பானம் செய்கிறேன். 

(தன் கையிலிருக்கும் டம்ளரைக் குடிக்கிறாள்) 

கி. : நானும் அப்படியே செய்கிறேன் – உங்கள் பொருட்டு!  (குடிக்கிறான்). 

கா.: ஹா!- என்ன இது (எழுந்திருக்கிறாள்) 

பி. : கட்? (Cut) அம்மா நீங்கள் பேசக்கூடாது – செத்து பூடணும்! செத்து பூடணும் அப்படியே! 

கா. : ஆம்! – வாஸ்தவத்தில்!- நான் செத்துப் போகிறேன் (நாற்காலியில் விழுகிறாள்) அத்தான்!- அத்தான்! நான் உங்களைக் கொல்லப் பார்த்தேன் ! என் தீவினை என்னையே கொல்கிறது !- மன்னியும் – மன்னியும்

பி. : (டம்ளரை முகந்து பார்த்து) ஹைட்ரோ சியானிக் ஆசிட் ! (Hydro cyanic acid) 

கா. : தனம்மாள்! தனம்மாள் !- என்னை மன்னி –

த. : (அவளருகில் போய்) மன்னித்தேன்! 

கா.: (அவள் கரத்தைப்பற்றி) அவரையும் – மன்னித்ததாக ஒரு வார்த்தை சொல்லச் சொல்லேன்! என் உயிர் போகிறது. 

த. : (கிருஷ்ணமூர்த்தியின் காதில் ஏதோ ஓதி அவரை அவளருகில் அழைத்துச் செல்கிறாள்) 

கி. : காந்தாமணி! உன்னை –மன்னித்தேன். 

கா. : (தனம்மாள் காதில் ஏதோ மெல்ல சொல்கிறாள்)

த. : (கிருஷ்ணமூர்த்தியின் காதில் ஏதோ சொல்கிறாள்)

கி. : (காந்தாமணிக்கு ஒரு முத்தம் கொடுக்கிறன்)

கா.: நான் சந்தோஷமாய் – (சாகிறாள்)

பி. : என்ன இப்டி முடிஞ்சுது கதே!

த. : தெய்வச் செயலால்!- 

நாடகம் முற்றிற்று. 

– கலையோ – காதலோ? (நாடகம்), முதற் பதிப்பு: 1948, Arutperunjothi Press, M.S. 396, C. 500-13-48 8/99, Amman Koil Street, G.T. Madras.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *