இயற்பெயர் குமரேசன். அறையில் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தால், ‘அபராஜித் செல்வா’ என பக்கம் பக்கமாக எழுதியிருக்கும். போன வாரம் பெயர் மாற்றியிருக் கிறான். தினமும் முந்நூறு தடவையாவது புதுப்பெயரை எழுத வேண்டும். மனதை ஒருமைப்படுத்தி ‘அபராஜித் செல்வா… அபராஜித் செல்வா’ எனச் சொல்லிக்கொண்டே எழுதவேண்டும் அப்போதுதான் பவர் ஏறி பலன் கிடைக்கும்.
14 வருடங்கள் ஓடு ஓடு என ஓடோடிவிட்டன. குமரேசன் என்கிற அபராஜித் செல்வா சென்னைக்கு வந்து… அசிஸ்டென்ட் டைரக்டராக ஒரு பெரிய டைரக்டரிடம்
10 வருடங்கள் இருந்துவிட்டு, நான்கு வருடங்களாக டைரக்ஷன் முயற்சி… எதுவும் செட் ஆகவில்லை. ”கோய்முத்தூர்க்காரு ஒருத்தரு பேரை மாத்துறாப்ல பாஸு. மாத்துன கொஞ்ச நாள்லயே ரிசல்ட்டு கன்ஃபார்மு” என்றான் சோமசுந்தரக் காமாட்சி, இவனைப் போன்ற மற்றோர் எதிர்கால இயக்குநர். ”நிஜமாவா காமாட்சி?” என்று இவன் கேட்டதும். ”நான் போன மாசம் பேரை மாத்திட்டேன் பாஸு. இனிமே ‘காமாட்சி’னு கூப்பிடாதே…” என்றான். ”யார்ரா பேரை மாத்துனது?” எனக் கேட்க, ”அந்த கோய்முத்தூர்க்காருதான். அவரு பேரு திலக் தியாகராஜ திருமூர்த்தி.”
”திலக் தியாகராஜ திருமூர்த்தி… சொல்றதுக்கு கஷ்டமா இருக்காதா?”
”அவரு ஒரிஜினல் பேரு வேற. ஆனா, இந்தப் பேரு வெச்சப்புறம்தான் அவரு மாசாமாசம் லச்சக்கணக்குல துட்டு பாக்கறாரு… ‘தீ… தீ… தீ…’னு உச்சரிப்பு வருதுல்ல? தீ மாதிரி அவர் புகழ் பரவி லச்சக்கணக்குல சம்பாரிக்கிறதா அவரே சொல்றாரு.”
”சரி, நீ என்னா பேர் மாத்தி இருக்கே?”
”சத்யா குரசோவா.”
”என்னாது?”
”ஆமா பாஸு… ‘சினிமா ரிலேட்டடா பேரு வைங்க’னு சொன்னேன். ‘உனக்குப் பிடிச்ச டைரக்டர்ஸ் யாரு?’னு கேட்டாப்ல.
‘சத்யஜித் ரே, அகிரா குரசோவா’னு சொன்னேன். ரெண்டு செகண்டுதான் யோசிச்சாரு… சட்டுனு இந்தப் பேரை பேப்பர்ல எழுதிக் குடுத்தாரு. எனக்கு அப்படியே மேலெல்லாம் ஜிவ்வுனு புல்லரிச்சுருச்சு. நம்மல்லாம் கதைக்கு டைட்டில் புடிக்க எம்புட்டுக் கஷ்டப்படறோம்? செகண்ட்ல பேரை யோசிக்கிறாப்ல!”
”சரி பேரை மாத்துனியே… ரிசல்ட்டு?”
”சொன்னா நம்ப மாட்டே… அதுக்கு அப்புறம் ரெண்டு பேர்கிட்ட கிட்டத்தட்ட ஓ.கே ஆகிற மாதிரி மீட்டிங் போய்ட்டிருக்கு.”
”என்னா பட்ஜெட்?”
”ஒருத்தரு எம்பது ரூவாயில முடிக்கணும்கிறாரு.”
”எம்பதா… எப்படி பாஸு முடியும்?”
”நான் ரெண்டு ரூவாக்கி ஒரு கதை சொன்னேன். யூத் லவ். டீச்சரோட மகளை டீச்சர்கிட்ட படிக்கிற ஸ்டூடன்ட் காதலிக்கிறான். இந்தப் பையனுக்கு ஃபீஸ் எல்லாமே கட்டுறது அந்த டீச்சர்தான். டீச்சர் விடோ… அவ மகளுக்கும் ஹீரோவுக்கும்தான் லவ். அந்த டீச்சரை டாவடிக்கிற பி.டி மாஸ்டர்தான் வில்லன். அவன் என்ன பண்றான், டீச்சர்கிட்ட நல்ல பேர் எடுக்கணும்கிறதுக்காக, ஹீரோவை ஃபுட்பால் கிரவுண்ட்லவெச்சு அடி நொக்குநொக்குனு நொக்கி எடுக்கிறான்.”
இதைச் சொல்லும்போது குரசோவா பல்லைக் கடித்துக்கொண்டு, கைகளை இறுக்கி, காற்றில் குத்தி, காலால் தரையை உதைத்து மானசீகமாக ஹீரோவை நொக்கினான். எப்பவுமே அவன் அப்படி இன்வால்வ் மென்ட்டோடுதான் கதை சொல்வான்.
”சரிதான். அகிரா குரசோவா, சத்யஜித் ரே ரெண்டு பேர் பேரையும் சேர்த்து வெச்சுக்கிட்டு இப்படி ஒரு கதையா சொல்லுவே?”
”லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் இருக்குல? ரெண்டு மூணு படம் ஜெயிச்சிட்டு அப்புறம் நமக்குப் பிடிச்ச படத்தை எடுக்க வேண்டியதுதான். நான் ‘செவன் சாமுராய்’ படத்தை, தமிழ்ல எடுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?”
”பழைய பங்களாவோட கதவு, நிலை எல்லாம் பிரிச்சு விக்கிற மாதிரி சீன் சீனா பிரிச்சு, ஏற்கெனவே அந்தப் படத்தை பல பேரு எடுத்தாச்சு பாஸு.”
”சரி, அதை விடு. இந்த ரெண்டு பார்ட்டியில ஏதாச்சும் ஒண்ணு எனக்கு ஓ.கே ஆகிடும். பேரை மாத்தி ஒரே மாசத்துல இப்படி ஒரு டெவலப்மென்ட். அதனால நீயும் மாத்து, நல்ல ரிசல்ட் தெரியும். காசா… பணமா… மாத்திரு.”
”அவரு ஃப்ரீயா பேர் மாத்தித் தர்றாரா?”
”ரெண்டாயிரம் கேட்டாப்ல. ‘அசிஸ்டென்ட் டைரக்டர் சார். அப்பப்ப டிஸ்கஷன், ஸ்பாட் வொர்க்னு வண்டி ஓடுது. அவ்வளவு முடியாது’னு நிலைமையைச் சொன்னேன். புரிஞ்சுக்கிட்டாப்ல. ஆயிரத்து ஐந்நூறுதான் வாங்கினாரு. ‘ஜெயிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட வாங்க’னு சொல்லியிருக்காரு. சாயங்காலம் நாம அவரைப் போய்ப் பாக்கிறோம்… என்னா?”
அவரைப் போய்ப் பார்த்து ஆயிரம் ரூபாய் கொடுத்து, ‘அபராஜித் செல்வா’ எனப் பெயரை மாற்றியாகிவிட்டது. வெளியே வந்து காமாட்சி சொன்னான்… ”இனிமேல் நீ என்னை ‘காமாட்சி’னு கூப்பிடக் கூடாது. நானும் உன்னை ‘குமரேசன்’னு கூப்பிட மாட்டேன். புரியுதா அபராஜித்?”
”புரியுது குரசோவா.”
ஒரு மாதம் கடந்துவிட்டது. தினமும் நோட்டுப் புத்தகத்தில் மந்திரம்போல் எழுதிக்கொண்டிருக்கிறான்.
அன்றைக்கு குமரேசனின்… மன்னிக்கவும், அபராஜித்தின் மேன்ஷன் அறைக் கதவு உற்சாகமாகத் தட்டப்பட்டது. திறந்தால் குரசோவா நின்றுகொண்டிருந்தான்.
”சொன்னனா இல்லையா? உனக்கு குட் டைம் ஸ்டார்ட் ஆகிருச்சு. ஒரு பார்ட்டி வந்திருக்காப்ல. படம் பண்ணணுமாம். கதை கேக்கிறதுக்காகத் தங்கியிருக்காரு. உடனே கிளம்பு.”
அபராஜித்தின் உடல் எங்கும் ஓர் ஆனந்த அதிர்வு ஜிவ்வென மீட்டப்பட்டது.
”நிஜமாவா… எங்க?”
”தி.நகர்ல ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட்ல தங்கியிருக்காரு. தகவல் வந்துச்சு. உடனே உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்.”
அபராஜித் நெகிழ்ந்தான்… ”நீ கதை சொல்லலையா?”
”நமக்குத்தான் அங்க மீட்டிங் போய்க்கிட்டிருக்கே பாஸு. அதுல ரெண்டுல ஒரு சப்ஜெக்ட் கன்ஃபர்ம் ஆகிடும். நீ கிளம்பு… கதை ஏதும் மைண்ட்ல இருக்குல்ல?”
”ஒரு லைனா இருக்கு. ஃபுல்லா ஃபார்ம் ஆகலை.”
”அதைக் கொஞ்சம் பாலீஷ் பண்ணிச் சொல்லிரு பாஸு. புடிச்சுருச்சினா மேற்கொண்டு டெவலப் பண்ணிக்கிரலாம். லேட் பண்ணாமக் கிளம்பு.”
அபராஜித் அறையில் இருக்கும் அலமாரியைத் திறந்தான். முருகன், லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், சாய்பாபா, பன்னாரி அம்மன், ஆஞ்சநேயர்… ஆகிய கடவுள்கள் உள்ளே ஒட்டப்பட்டிருந்தனர். எல்லோரையும் கும்பிட்டான். குங்குமம் இட்டுக்கொண்டான். புராஜெக்ட் ஓ.கே ஆகிவிட்டால் சாமிகளுக்கு வேண்டியதைச் செய்வதாக வேண்டிக்கொண்டான். சுமாரான சட்டையை எடுத்து உதறினான்.
”பாஸு… என்னாது? கறுப்புச் சட்டையைப் போட்டுக்கிட்டுப் போனா சரிவராது.”
”ஏன்… நம்மளை மாதிரி ஆட்கள் ப்ளூ ஜீன்ஸும் கறுப்புச்சட்டையுமாத்தானே அலையிறோம்?”
”இந்த புரொடியூசர் நிறைய சென்டிமென்ட் பாக்கிறவரு. கறுப்பு வேணாம். மஞ்சள் கலர் சட்டை இருக்கா?”
”இல்லை” என்ற அபராஜித், கொடியில் தேடினான். ப்ளூ கலரில் பொடி கட்டம் போட்ட சட்டை சுமாராக இருந்தது. அதை அணிந்துகொண்டான். குரசோவா, ஒரு செகண்ட்ஹேண்ட் பைக் வைத்திருந்தான். அதில் இருவரும் கிளம்பினார்கள்.
புரொடியூசரின் அறைக்கு முன்னால் இருந்த ஹாலில் இரண்டு பேர் வேட்டி கட்டி அமர்ந்திருந்தார்கள். டி.வி-யில் படம் ஓடிக்கொண்டிருந்தது. இவர்கள் பவ்யமாக விஷ் பண்ணினார்கள்.
”யாரைப் பார்க்கணும்?”
”சாரைப் பார்க்கணும்.”
”தூங்குறாரு.”
”வெயிட் பண்றோம் சார். போன் பண்ணி இருந்தோம் வர்றோம்னு.”
”உட்காருங்க.”
அரை மணி நேரம் ஆயிற்று. டி.வி-யில் போட்டிருந்த மொக்கை படத்தின் கொடுமையான காமெடி சீனுக்கு, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதில் ஒருவன் அபராஜித்தைப் பார்த்து ”கதை சொல்லத்தானே வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.
”ஆமாங்க சார்.”
”இந்த மாதிரி காமெடி நிறைய வெச்சு சொல்லுங்க… சாருக்குப் பிடிக்கும்.”
அபராஜித் மனதில் பெரும் அவநம்பிக்கை தோன்றியது. இருந்தாலும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது. மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு பதற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றான். தான் படித்த மேதைகளின் வாழ்வில் அவர்கள் நெருக்கடியை எப்படிச் சமாளித்தார்கள் என நினைவுபடுத்திப்பார்க்க முயன்றான். எழவு! எதுவும் நினைவுக்கு வரவில்லை.
ஒரு வழியாக புரொடியூசர் எழுந்து காபி எல்லாம் குடித்துவிட்டு உள்ளே கூப்பிட்டார். போய் உட்கார்ந்தார்கள்.
”ரெண்டு பேரும் கதை சொல்லப்போறீங்களா?”
”இல்லை சார்… இவர் மட்டும்தான்.”
”அப்புறம் நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?”
”நான் இவரு ஃப்ரெண்ட் சார்.”
”பரவால்ல” என்று சேரில் நிமிர்ந்து அமர்ந்தார். அபராஜித்தை உற்றுப்பார்த்தார்.
”என்ன ராசி தம்பி நீங்க?”
”கன்னி ராசி சார்.”
முகத்தில் ஏதோ திருப்தியுடன் ”சரி சொல்லுங்க. என்னா மாதிரியான சப்ஜெக்ட் இருக்கு? ஒரு ரூவாயில முடிக்கணும். மேக்ஸிமம் ஒண்ணு இருவதுதான். அதுக்குள்ள ஒரு கதை சொல்லுங்க பார்ப்போம்.”
அபராஜித் இவரை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என யோசித்தான்.
”ஒரு லவ் ஸ்டோரி இருக்கு சார். அப்புறம் ஒரு சஸ்பென்ஸ் கதை. முதல் ஷாட்டிலேயே ஹீரோவைக் கொன்னுர்றாங்க. யார் கொன்னதுனு…”
”நீ என்னப்பா ‘அந்த நாள்’ சினிமா கதையைச் சொல்றே?”
”இது வேற மாதிரி சார். கடைசியில ஹீரோ சாகவே இல்லைனு வரும்.”
அவர் சரிந்து உட்கார்ந்தார்.
”இதோ பாரு தம்பி… இப்ப பேய் படம்தான் ட்ரெண்டு. வேற எந்தக் கதையும் கேக்கிறதா இல்லை. நல்ல பேய்கதையா ஒண்ணு சொல்லு… எடுத்துருவோம்.”
அபராஜித் இதை எதிர்பார்க்கவில்லை.அவனிடம் ஒரு காதல், ஒரு கிரைம் என இரண்டு ஐடியாக்கள்தான் இருந்தன.
”என்ன யோசிக்கிறே?”
‘ரொம்பவும் யோசிக்கக் கூடாது. பேய்கதை இல்லை’ என்றும் சொல்லக் கூடாது. சரசர என தனக்குத் தெரிந்த பேய்களை மனதுக்குள் கொண்டுவந்தான்.
”சார்… ஒரு வில்லேஜ். அங்க ஒரு டீன் ஏஜ் பொண்ணு. ஒருநாள் தனக்குத்தானே பேசிக்கிறா, சிரிக்கிறா. இந்தியில பேசுறா, இங்கிலீஷ்ல பேசுறா. தோட்டத்துக்குப் போயிட்டு வரும்போது ஒரு புளியமரத்தைக் கடந்துவரும்போது…”
அவர் சலிப்புடன் இடைமறித்தார் ”அட,
நீ என்னப்பா வில்லேஜ் ஸ்டோரியைச் சொல்லிக்கிட்டு… கிளாமர் வேணும்.”
அபராஜித் இந்தக் குறுக்கீட்டில் வெலவெலத்து யோசிக்க, குரசோவா சட்டென அவரது பல்ஸைப் பிடித்து, ஆபத்பாந்தவனாக இடையில் களம் புகுந்தான்.
”இவன் இன்னொரு நாட்டும் வெச்சிருக்கான் சார்… ஒரு பங்களாவுக்கு மூணு பசங்க மூணு பொண்ணுங்க டூர் போறாங்க. அந்த பங்களாவுல பேய் வருது… அப்படிங்கற மாதிரி ஒரு ஐடியா சார். ஒரே ஒரு மலை பங்களாதான் லொக்கேஷன். ஏழு எட்டு ஆர்ட்டிஸ்ட்தான். பட்ஜெட்டும் கம்மியா வரும். ஸ்விம்மிங் பூல் இருக்கிற பங்களாவா பிடிச்சுட்டோம்னா, கிளாமர் சீன் நிறைய வெச்சிரலாம்.”
”மலை பங்களாவுல ஸ்விம்மிங் பூல் இருக்குமா?”
”இல்லைனா பாத்ரூம்ல ஷவர் இருக்கும்ல சார். அதை யூஸ் பண்ணிக்கிட்டாப்போச்சு” – அபராஜித், குரசோவாவின் சினிமா ஸ்மார்ட்னெஸை வியந்தான்.
‘என்னா அடி அடிக்கிறான்?’
புரொடியூசர் அபராஜித்தைப் பார்த்தார். ”என்ன தம்பி… பண்ணிரலாமா?”
அபராஜித் தடுமாற்றத்துடன் ”கொஞ்சம் சீன்ஸ் யோசிக்கணும் சார்” என்றான்.
”யோசி, ரெண்டு நாள் டைம் எடுத்துக்கிட்டு சீன் பண்ணிக்கிட்டு வா. மேற்கொண்டு பேசலாம்.”
அவர் கையை அசைக்க, இருவரும் வெளியே வந்தார்கள். உதவி இயக்குநர்களின் தாய்மடியான டீக்கடை ஒன்றில் சென்று அமர்ந்தார்கள்.
”என்ன பாஸு… நீ லூஸா இருக்கே! அந்த ஆளு கேட்டவுடனே என்கிட்ட பத்து பேய்கதை இருக்குனு அடிச்சுவிட வேணாமா? முழிச்சுக்கிட்டு இருக்கே!”
”இல்ல… நம்ம ஊருல எல்லாம் எப்படி பேய் பிடிக்குதோ… அப்படி நேட்டிவிட்டியோட பண்ணலாம்ல?”
”ட்ரெண்டு மாறிருச்சு பாஸு. எல்லாமே இப்ப இம்போர்ட்டட். பேயா இருந்தாலும் இறக்குமதிதான். எல்லாமே ஃபாரின்னு ஆன பிறகு சினிமாவுல மட்டும் என்னத்துக்கு நேட்டிவிட்டி?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நவநீத் உள்ளே நுழைந்தான். இவர்களைவிட
10 வயது சின்னவன். இன்ஜினீயரிங் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவன். இரண்டு குறும்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவன். இவர்களைப் பார்த்து ‘ஹாய்’ சொல்லி எதிரே அமர்ந்தான்.
”என்ன சார்… சீரியஸா டிஸ்கஷன் போகுதுபோல?”
”ஆமா நவநீத். ஒரு கோஸ்ட் ஸ்டோரி பண்ணணும். அதான் பேசிக்கிட்டிருக்கோம்.”
”அதுக்கு எதுக்குப் பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு..? கோ ஃபார் ஸம் டி.வி.டிஸ் பிரதர்.”
அபராஜித் தயங்கினான்.
”டி.வி.டி பார்த்து படம் பண்றதுல எனக்கு இஷ்டம் இல்லை. சொந்தமா யோசிச்சு ஒரு கதை பண்ண முடியாதா? இத்தனை வருஷமா சினிமாவுல இருக்கோம். புக்ஸ் படிக்கிறோம்.”
நவநீத் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டான். ”சார், உங்க முன்னாடி ஒரு சைடுல தட்டுல அன்னாசிப் பழத்தை அறுத்து ஸ்லைஸ் பண்ணி வெச்சிருக்கு. அதுக்குப் பக்கத்துலேயே இன்னோர் அன்னாசிப்பழம் தோலோடு கட் பண்ணாம அப்படியே இருக்கு. நீங்க எதைச் சாப்பிடுவீங்க?”
”கட் பண்ணி வெச்சிருக்கிற ஸ்லைஸைத்தான் சாப்பிடுவேன்.”
”அப்ப டி.வி.டி பாருங்க சார். பத்து டி.வி.டி பார்த்தா, ரெண்டு படம் ரெடி சார். ஏன் சார் எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்?”
அபராஜித், குரசோவாவைப் பார்த்தான். குரசோவா முகத்தில் குதூகலம்.
”ஞானக்குழந்தை மாதிரி பேசுறான் பாரு. இதான் யூத்தோட அட்வான்ஸ்மென்ட். உனக்கு முப்பத்தி மூணு வயசு ஆகுது. லேட் பண்ணக் கூடாது. இவன் சொல்றதுதான் சரி… டி.வி.டி வாங்கக் கிளம்புறோம். நவநீத், டி.வி.டி எங்க வாங்கலாம்?”
”ஷபீர்கிட்ட போவோம். தமிழ் சினிமாவோட போக்கை மாத்தினதே ஷபீர்தான்.”
”ஷபீரா… யாரு அது?”
”பஜார்ல டி.வி.டி விக்கிற ஆளு. ‘இன்டர்நேஷனல் சினிமாவை நம்ம இண்டஸ்ட்ரிக்கு அறிமுகப்படுத்தினது யாரு?’னு என்கிட்ட கேட்டா நான் ‘ஷபீர்’னுதான் சொல்வேன். அவருக்குத் தெரியாத வேர்ல்டு டைரக்டர்ஸே கிடையாது.”
இரவு எல்லாம் அபராஜித்தும் குரசோவாவும் டி.வி.டி பார்த்தனர். கண்கள் சிவந்துவிட்டன. மனம் முழுக்க பேய்களின் நடமாட்டம். காலையில் குரசோவா எழவில்லை. அபராஜித் மட்டும் சிகரெட் வாங்கலாம் எனப் போகும்போது நர்மதாவைப் பார்த்தான். நர்மதா, குரூப் டான்ஸர்களில் ஒருத்தி. இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறார்கள். ‘படம் பண்ணியதும் திருமணம்’ எனப் பேசிவைத்திருக்கிறார்கள். இவனைப் பார்த்ததும் புன்னகையுடன் வந்தாள்.
”இன்னைக்கு எதும் ஷூட்டிங் இல்லையா நர்மதா?”
”நைட் கால்ஷீட்… ராத்திரிதான் போகணும்.”
”எங்க?”
”பனையூர்கிட்ட செட் போட்டு எடுக்குறாங்க… நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே?”
”விடிய விடியத் தூங்காம பேய்படமாப் பார்த்தேன்… அதான்.”
சிரித்தாள்.
”என்ன… வேண்டுதலா?”
”இல்லை… ஒரு புரொடியூசருக்குப் பேய்கதை சொல்லணும். அதான்…”
”செலவுக்கு காசு வெச்சிருக்கியா?”
”இருந்த காசுக்கு டி.வி.டி வாங்கிட்டேன். உன்கிட்ட கேக்கலாம்னுதான் இருந்தேன், நீயே வந்துட்ட.”
அவள் தன் குட்டி பர்ஸை எடுத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாள்.
”நல்லா சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போடு. உன்னையைப் பார்க்க எனக்கே சகிக்கலை” புன்னகையுடன் விடைபெற்று கடைக்குப் போய்ச் சாப்பிட்டான். வந்து தூங்கினான். மறுபடி பேய் படங்கள். ஒருவழியாக நள்ளிரவானபோது வாங்கிய அனைத்துப் படங்களையும் பார்த்து முடித்திருக்க, குரசோவா ‘இனி நீ எழுது பாஸு’ எனக் கிளம்பிச் சென்றுவிட்டான். அபராஜித்தின் மூளை குழம்பியிருந்தது. அடுத்த நாள் காலையில் அமர்ந்து பேப்பரையும் பேனாவையும் வைத்து யோசித்தபோது எதுவுமே ஓடவில்லை. கண்டபடி கிறுக்கினான். சாயங்காலம் ஆனது. வடபழனி முருகன் கோயிலில் போய் சாமி கும்பிட்டான். மறுபடி வந்து எதையோ எழுதிப்பார்த்தான். ம்ஹூம்… திருப்தியாகவே இல்லை.
மறுநாள் குரசோவா வந்தான்.
”என்ன பாஸு… எதும் எழுதுனியா?”
”இல்லை பாஸு… டி.வி.டி பார்த்துட்டு உட்காந்தா, எதுவுமே ஓட மாட்டேங்குது.”
”அது சரி… எதை மாத்தணும், எதை கோக்கணும், எப்படி பட்டி டிங்கரிங் பாக்கணும்கிறது ஒரு கலை. அது உனக்கு செட் ஆக லேட் ஆகும். விட்டுராதே, ட்ரை பண்ணிக்கிட்டே இரு. எதுவுமே பழகப் பழக வந்துரும்.”
நான்கு நாட்கள் ஆனது. ஒருவழியாகப் போராடி என்னத்தையோ எழுதி முடித்தான். குரசோவாவிடம் சொல்லிக்காட்டினான். குரசோவா, ”ம்… ஓ.கேதான் பாஸு. இதைவிட பெட்டரா எதிர்பார்த்தேன். பட் ஓ.கே. இதைச் சொல்லி ஓ.கே பண்ணிருவோம். அப்புறம் ஸ்பாட்ல டெவலப் பண்ணிக்கிரலாம். ரெண்டு நாள்னு சொல்லி, நாலைஞ்சு நாள் ஆக்கிட்டோம். இன்னைக்கே போய்ப் பார்த்துரலாம்.”
இருவரும் கிளம்பி புரொடியூசரைப் பார்க்கப் போனார்கள். சர்வீஸ் அப்பார்ட்மென்ட் காலி செய்யப்பட்டிருந்தது. டென்ஷனாகி விசாரித்ததில், அவர் நேற்று காலி செய்துவிட்டுக் கிளம்பிவிட்டதாக ரிசப்ஷனில் சொன்னார்கள்.அபராஜித் கண் கலங்கி நிற்க குரசோவா தேற்றினான்.
”விடு பாஸு… நமக்கு இது என்ன புதுசா? அடுத்த ஆளைத் தேடுவோம்.”
இவர்கள் தேடல் தொடர்ந்துகொண்டிருக்க ஆறேழு மாதங்களில் பல படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் இவர்கள் சந்தித்த புரொடியூசரின் படமும் ஒன்று. குரசோவாதான் அதிர்ச்சியுடன் அந்தத் தகவலைத் தெரிவித்தான்.
”பாஸு, அந்த புரொடியூசரைக் கவுத்து படம் பண்ணது யாரு தெரியுமில்லை… நம்ம நவநீத்!”
”டைரக்ஷன் ‘ப்ரமோத் கர்ணா’னு போட்டுருக்கு?”
”அவனும் பேரை மாத்தியிருக்கான் பாஸு… அதே கோய்முத்தூர்காருகிட்டே.”
”திலக் தியாகராஜ திருமூர்த்திகிட்டயா?”
”ஆமா… அவர்கிட்ட பேரை மாத்தினா வொர்க்அவுட் ஆகும்னு சொன்னேன்ல… படம் பண்ணிட்டான் பார்த்தியா?”
”நாமளும்தான்டா மாத்தினோம்!”
”பேட் லக்குன்னுதான் சொல்லணும். அந்தப் படத்தைப் பார்த்தியா?”
”இல்லை, நீ பார்த்தியா?”
”பார்த்தேன். கிளாமர் பிச்சிருக்கான். பேயே சீன் காட்டிக்கிட்டுத்தான் வருது.”
”என்ன கதை?”
”அஞ்சு ஜோடிங்க, ஒரு பேய், ஒரு காட்டு பங்களா… ரெண்டு கொரியன், ஒரு சைனா படத்தை மெர்ஜ் பண்ணியிருக்கான். மேக்கிங்கை மட்டும் படு ஸ்டைலா மாத்திட்டான். ஃபுல் மேக்கிங் ஸ்டைலும் வேற ஒரு ஹாலிவுட் படம். என்ன கொடுமைன்னா இந்த எல்லா படமும் நாமளும் பார்த்ததுதான்.”
அபராஜித்தை, தோல்வியின் வேதனை போட்டு அழுத்தியது.
”துரோகம் பண்ணிட்டானே பாஸு… அந்த நவநீத்!”
”நான் அப்படி நினைக்கலை. நீ பார்த்த டி.வி.டி-யைத்தான் அவனும் பார்த்தான்.
நீ சரியாப் பண்ணலை. அவன் கரெக்ட்டா டைமுக்குள்ள பண்ணிட்டான். ஓட்டப்பந்தயத்துல நம்மளை ஒருத்தன் முந்தியிருக்கான்… அவ்வளவுதான். இதுல என்ன துரோகம்?”
அபராஜித் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.
”என்ன மாப்ள, பேசாம இருக்கே?”
”பதினாலு வருஷமாச்சுடா… நேத்து வந்தவன் எல்லாம் ஜெயிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். பயமா இருக்குடா.”
”என்ன பயம்… நம்பிக்கையோடுதானே வந்தோம்… இப்ப எதுக்கு பயம்?”
”பழசாயிருவோமோனு பயம்.”
”தேவை இல்லாத பயம் பாஸு. சிந்தனைக்கு வயசாகாமப் பாத்துக்கணும், அவ்வளவுதான்.”
படிக்கட்டில் யாரோ வரும் சத்தம் கேட்டது. நர்மதா வந்தாள். முகத்தில் புன்னகை.
”எங்கேயாச்சும் போயிருப்பியோனு பயந்துக்கிட்டே வந்தேன். நல்லவேளை ரூம்ல இருக்கே.”
”என்னா மேட்டரு நர்மதா?”
”எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு. படம் பண்றதுக்கு ஒரு புரொடியூசர் வந்திருக்காராம். திருப்பூர்க்காரர். கதை கேக்கணும்னு சொன்னாராம். எனக்கு தகவல் வந்துச்சு. உன்னைக் கையோடு கூட்டிப் போகலாம்னு வந்தேன். கிளம்பு… கிளம்பு…”
அந்த அறையில் திடீர் உற்சாகம் பீறிட, வேக வேகமாக அபராஜித் சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினான்.
குரசோவா கேட்டான்…
”என்ன சப்ஜெக்ட் சொல்லலாம் அபராஜித்?”
அபராஜித் பதில் சொல்லும் முன் நர்மதா சொன்னாள், ”அவருக்கு பேய்கதைதான் வேணுமாம். ரெண்டு ரூவா பட்ஜெட்ல.”
குரசோவாவும் அபராஜித்தும் சிரித்துக்கொண்டார்கள்.
”இந்த டைம் அடிச்சுத் தூக்குறோம் பாஸு.”
கிளம்பினார்கள்!
– நவம்பர் 2015