ராமசுப்புவும் கோர்ட்டும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 19,599 
 
 

“மை லார்ட் என் கட்சிக்காரர் தவறுதலாகத்தான் அந்த மனிதரை அடித்துவிட்டார் என்று பல்வேறு சாட்சிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது, அதனால் அவருக்கு தண்டனை வழங்கக்கூடாது என்ற வாதத்தை தங்கள் முன்பு வைக்கிறேன்.’பட பட வென வக்கீல்கள் கை தட்டி தூள் கிளப்பிட்டீங்க சுப்பு என்று கை கொடுத்தனர்.ஒருவர் முதுகில் ஓங்கி தட்டியது வலித்தது, தடவி விடுவதற்காக கையை முதுகின் பின்புறம் கொண்டு போனவர்,மீண்டும் ஒரு கை முதுகில் தட்டுவதை பார்த்து திடுக்கிட்டார், எந்திருங்க, என்று மனைவியின் கைதான் தட்டியது என்பது உணரவே ராமசுப்புவுக்கு பத்து நிமிடம் ஆனது.”இவ்வளவு நேரமா தூங்கறது? கேட்ட கேள்வியிலியே அரக்க பரக்க எழுந்து முகம் கழுவப்போனான் ராம சுப்பு, இவ்வளவு நேரம் நாம் கோர்ட்டில் வாதாடியது கனவா?

ராம சுப்புவின் அலுவலகத்தில் அவனையும், மற்றும் சிலரையும் ஒரு பிரச்சனையின் காரணமாக கோர்ட்டில் சாட்சி சொல்வதற்காக அழைத்துள்ளார்கள், இதை அவனிடம் தெரிவித்தது முதல் அவனுக்கு கோர்ட் ஞாபாகமேதான், அதிலும் அவன் அந்த கருப்பு கோட்டு போட்டுக்கொண்டு நீதிபதியை பார்த்து “கனம் நீதிபதி அவர்களே” என்று அடிக்கடி கனவில் கூப்பிட்டு அவரை இம்சைபடுத்திக் கொண்டிருக்கிறான். நல்ல கோர்ட் சீன் உள்ள திரைப்படங்களை தேடிப்பிடித்து பார்த்துக்கொண்டிருக்கிறான்.சில சட்ட பாயிண்ட்களையும் நூலகத்தில் தேடிப்பிடித்து படித்துக்கொண்டிருக்கிறான்.

வீட்டில் கூட அவன் மனைவி சொல்லும் வேலைகளை தட்டாமல்(மனதுக்குள் திட்டிக்கொண்டு),பய பக்தியாய் செய்பவன் இப்பொழுது அவளை கூண்டில் நிற்க வைத்து (கவனிக்க) இவன் கருப்பு கோட்டு போட்டுக்கொண்டு அவளை கேள்விக்கணைகளால் துழைத்து கதறி அழ வைப்பது போல அடிக்கடி கனவு கண்டு கொள்கிறான்.

இவன் அலுவலகத்தில் மற்றவர்கள் எல்லாம் கோர்ட் என்றவுடன் நடு நடுங்கிக்கொண்டிருக்க ,இவன் மட்டும் தலையை நிமிர்த்தி இவனே அவர்களை வழி நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

முதல் நாள் மாலையே அவனிடம் சொல்லிவிட்டார்கள், நாளைக்காலையில் நேரத்திற்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். (வழக்கம்போல இவன் தாமதமாகத்தான் வருவான் என்பது அவர்களுக்கு தெரியும்)அதனால் கண்டிப்புடன் அவனிடம் சொல்லி விட்டார்கள், அலுவலகம் வருவதற்கு தாமதமானால் கோர்ட்டிற்கு கூட்டி செல்லமாட்டார்கள், அழைத்து செல்ல காவலர்கள் வந்துவிடுவார்கள் என்று இவனிடம் மட்டும் பயமுறுத்தி அனுப்பி வைத்தார்கள்.

காவலர்கள் வந்து அழைத்து செல்வார்கள் என்று சொன்னதை இவன் தப்பர்த்தம் செய்து கொண்டு, தான் அந்தளவுக்கு செல்வாக்கானவனா? கோர்ட்டே நம் மீது இவ்வளவு
நம்பிக்கை வைத்துள்ளதா, என்று கர்வப்பட்டுக்கொண்டான்.

அதிசயமாய் ஒன்பது மணியளவிலே அலுவலகம் வந்தவனை முதலில் அலுவலக முன்னறையில் உட்கார சொன்னார்கள். இவனால் உட்கார முடியாது என்று சொல்லிவிட்டான்,
காரணம் வக்கீல்கள் யாரும் உட்கார்ந்து வாதிடுவதாக எந்த திரைப்படத்திலும் காண்பித்ததில்லை என்ற காரணத்தால் நடந்து கொண்டே கோர்ட்டில் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று மனதில் அசைபோட்டுக்கொண்டே நடந்தான்.

அன்று கோர்ட்டுக்கு செல்பவர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். சரியாக ஒன்பதரை அளவிலே அனைவரையும் காரில் ஏற்றி, இவனை காரில் பின்னால் உட்கார சொன்னதற்கு மிகவும் வருத்தப்பட்டான், தான் எவ்வளவு பெரிய ஆள், என்னைப்போய் பின்னால் உட்கார சொல்கிறார்களே என்ற வருத்தம்தான்.

அனைவரும் வக்கீலின் அறையில் உட்கார வைக்கப்பட்டார்கள், வக்கீல் வந்து விடுவார், அதுவரை உட்கார்ந்திருங்கள் என்று சொல்ல, இவன் வக்கீல் தன்னிடம் என்ன கேட்கப்போகிறாரோ என்று படபடப்புடன் காத்திருக்க ஆரம்பித்தான்.(தன்னையே இந்த கேசில் வாதாட சொல்வார்களோ என்று கூட நினைக்க ஆரம்பித்துவிட்டான்.)

வக்கீல் வந்தவுடன் அனைவருக்கும் வணக்கம் சொன்னார், பின் கோர்ட்டில் எப்படி எப்படி கேள்வி கேட்பார்கள், அதற்கு நீங்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என சொல்லித்தந்தார்.உதாரணமாக உன் பெயர் என்ன? என ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்க, நம் ராம சுப்புவிடம் இந்த கேள்வி வரும்போது ராம சுப்பு கம்பீரமாக எழுந்து என் பெயர் ராமசுப்பு, நான்..என்று ஆரம்பிக்க வக்கீல் சிரித்துக்கொண்டே முதல்ல உட்காருங்க என்றவர் இங்க பாருங்க, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க அது போதும் என்று முடிக்க, சுப்பு மனம் நொந்துவிட்டான். இந்த வக்கீலுக்கு பொறாமை, நம் மீது எங்கே நான் நன்றாக பேசி இந்த கேசில் நல்ல பேர் வாங்கிவிடுவேனோ, என பயப்படுவதாக நினைக்க ஆரம்பித்துவிட்டான்.

கோர்ட்டுக்கு அனைவரையும் கூட்டிச்சென்றுவிட்டார்கள், அங்கு போனவுடன் வாசலிலேயே நில்லுங்கள் உங்கள் பேர் சொன்னவுடன் உள்ளே செல்லுங்கள், கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள், என்று சொல்லிவிட்டு வக்கீல் அடுத்த கேசை கவனிக்கப்போய்விட்டார்.

ஒவ்வொருவராக பேர் சொல்லி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரையோ அழைக்கிறார்கள், சுப்புவும் அவனுடன் வந்தவர்களும் நின்று நின்று சலித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சுவாரசியமாய் பார்த்தவன்,கோர்ட்டில் வக்கீல்களின் நடவடிக்கைகளை பார்த்தவுடன், சினிமாவில வருவது மாதிரி ஏன் பேச மாட்டேனெங்கிறார்கள் என மிகவும் வருத்தப்பட்டான். அதுவும் வக்கீல்கள் நீதிபதியின் பக்கத்தில் நின்று பேசுவது, மற்றவர்களுக்கு கேட்காமல் இருப்பது, அவனுக்கு அதிசயமாய் இருந்த்து.

சினிமாவில் எல்லாம் வக்கீல் பேச்சை கேட்டு வெளியிலிருப்போர் எப்படி கை தட்டுவார்கள், இங்கு என்னடாவென்றால், மனம் வெறுத்துவிட்டான் சுப்பு, அவனுக்கு கோர்ட்டின் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது.

வெளியிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து சலித்து பாத்ரூம் போக, அங்கு வந்த வக்கீலிடம் சார்..என்று ஒற்றை விரலை நீட்ட அவர் மூச்… இப்ப கூப்பிட்டிருவாங்க என்று பயமுறுத்திவிட்டு சென்றார். பாவம் சுப்பு அவனுடைய வக்கீல் கனவை விட இப்பொழுது பாத்ரூம் போவது மிக மிக முக்கியமாகப்பட்டது அவனுக்கு.மதியம் ‘மூன்று மணிக்கு மேல இவனுடைய அணியினரை ஒவ்வொருவராக கூப்பிட அனைவரிடமும் ஐந்து நிமிடங்கள் விசாரணை நடை பெற இவன் உள்ளே போனவுடன் அவனை பார்த்து எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று சொல்லி அவனை வெளியே போகச்சொல்லிவிட்டார்கள்.

சுப்பு மனம் வெறுத்துவிட்டான். இதுவரை அவன் செய்து வைத்த மனப்பாடங்கள் எத்தனை, கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் இந்த கோர்ட் இவனை ஏமாற்றிவிட்டது. பேரை கூட முழுவதுமாக சொல்ல விடாமல் அனுப்பிவிட்டார்களே !

வெளியே வந்து அனைவரையும் அலுலகத்துக்கு கூட்டிச்சென்றவுடன், அலுவலகத்தில் சுப்பு அன் கம்பெனிக்கு ராஜ மரியாதைதான். ஒரு சிலர் அப்புறம் கோர்ட்டில் என்ன நடந்தது என்று கேட்க இவன் நான் உள்ளே போனேனா… என்று இவன் சொல்ல ஆரம்பித்த கதையில் சினிமா கதை தோற்றுவிட்டது போங்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “ராமசுப்புவும் கோர்ட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *